Bhakshak Review - பக்ஷக் திரைப்பட விமர்சனம்

பிப்ரவரி 2024இல் நெட்ஃபிளிக்சில் வெளியான இந்தி திரைப்படம் . ஷாருக் கானின் மனைவியும் பல இந்தி திரைப்படங்களை தயாரித்தவருமான கவுரி கானும் கவுரவ் வெர்மாவும் இணைந்து தயாரித்துள்ளனர். புல்கிட் என்பவர் இயக்கியுள்ளார். 2017இல் பீஹாரிலுள்ள முசாபர்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. புமி பெட்னாகர், சஞ்சய் மிஷ்ரா, ஆதித்ய ஸ்ரீவத்ஸ்வா, சாய் தம்ஹனேக்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 முனாஃபர்பூர் (முசாஃபர்பூர் படத்தில் முனாஃபர்பூர் என்று மாற்றப்பட்டுள்ளது)குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும் வன்கொடுமைகள் குறித்த அறிக்கை ஒன்று குழந்தைகள் நல வாரியத்தில் அளிக்கப்பட்டு 2 மாதங்களாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அறிக்கை ‘விடாமுயற்கி’ எனும் சிறிய தொலைக்காட்சியை நடத்தும் வைஷாலியிடம் வருகிறது. அது குறித்து அறிந்து கொள்ள அவளும் அவளுடன் பணியாற்றும் பெரியவர் ஒருவரும் காப்பகத்திற்கு செல்கிறார்கள். அங்கு அவர்களை உள்ளே நுழையவே விடவில்லை. பின் குழந்தைகல் நலவாரியம், காவல்துறை என பல இடங்களுக்கும் அலைகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒரு துறை மற்ற துறையை கை காட்டி தகவல் தராமலும் நடவடிக்கை எடுக்காமலும் அலைக்கழிக்கிறார்கள். அந்த காப்பகத்தை நடத்துபவர் ஒரு அரசியல் பிரமுகர். ஆளும் கட்சியின் மந்திரியுடன் நெருக்கமானவர்.  

 வைஷாலியின் கணவரும், அவளது குடும்பத்தாரும் அவளை இந்த நடவடிக்கையிலிருந்து விலகுமாறு எச்சரிக்கின்றனர். ஆனால் அவள் தன்னால் அப்படி செய்ய முடியாது என்று மறுத்து விடுகிறாள்.  மற்ற காப்பகங்களுக்கு சென்று ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடும்போது முனாஃபர்பூர் காப்பகத்திலிருந்து தப்பித்து வந்த சமையல் செய்யும் சுதா எனும் பெண்ணை சந்திக்கிறார்கள். அவள் அங்கு நடைபெறும் கொடுமையான சம்பவங்களை விவரிக்கிறாள். ஆனால் தன்னால் வெளியில் வந்து அவற்றையெல்லாம் சொல்ல முடியாது என்று மறுத்து விடுகிறாள். இதற்கிடையில் இந்த விசயம் குறித்து ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்படுகிறது. தொடுத்தவர் யார் என்று தெரியவில்லை. வைஷாலியின் மாமா வழக்குரைஞர் என்பதால் அவர்தான் வழக்கு தொடுத்திருப்பார் என்று நினைத்து அவரை தாக்கி படுகாயப்படுத்துகின்றனர். விஷாலி மிகவும் மனமுடைந்து போகிறாள். இருந்தாலும் ஒரு இறுதி முயற்சியாக சுதாவிடம்  அந்த அனாதைக் குழந்தைகளின் பரிதாப நிலமையை உருக்கமாக சொல்லி அவளை பேச வைக்கின்றனர். அந்தக் காணொளி சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகிறது. வேறு வழியின்றி முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்கிறார். படத்தின் முடிவில் வைஷாலி பொதுமக்களை நோக்கி ‘நம் குழந்தைகளுக்கு நடக்காத வரை இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்குள்ளும் ஒரு வேட்டை மிருகம் இருக்கிறது.அதுவரை இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டுதானிருக்கும் ‘ என்று பேசுகிறாள்.  

 அறிக்கையை பணத்திற்காக வைஷாலியிடம் தரும் குப்தா எப்படி துணிந்து பொதுநல வழக்கு தொடுக்கிறார்; எதற்காக தொடுக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரும் இறுதி வரை வைஷாலியுடன் இருக்கும் பெரியவர் பாஸ்கர், புதிதாக வந்த பெண் காவல் கண்காணிப்பாளர், முதலில் வைஷாலியை கண்டித்தாலும் இறுதியில் அவளுக்கு ஆதரவாக நிற்கும் அவளது கணவன் போன்றவர்கள் இப்போதிருக்கும் சமுதாயத்தில் சிறிய வெளிச்சங்கள். ஆனால் இது போன்ற முயற்சிகள் ஒரு இயக்கமாக செய்யப்பட்டால் இன்னும் வலுவுடன் இருக்கும். 

 பாடல்களும் இசையும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘ஓ கங்கையே நீ எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறாய் ‘  போன்ற பாடல வரிகள் கவித்துவமாக மட்டுமில்லாமல் இந்திய மக்கள் கங்கையைப் போல் அமைதியாக இருந்தாலும் சரியான நேரத்தில் பொங்கி எழுவார்கள் என்கிற பொருளிலும் கொள்ளலாம்.

 

எழுதியவர் 

ஆர்.ரமணன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *