தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் கிபி 1003ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கிபி1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை முதலாம் ராஜராஜ சோழன் கட்டியுள்ளார். இந்தப் பெரிய கோவிலைப்பற்றி பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதன் கட்டிடக்கலை உலகப் புகழ் பெற்றது. மிக பிரம்மாண்டமான கட்டுமானத்தை கொண்டு சோழர்களின் வரலாற்று பெருமையை உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன இக்கோவில். இக்கோவிலில் சோழர் காலத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவ்வாறு கோவிலில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களின் பணிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், அந்த ஊதியத்திற்காக செலவிடப்பட்ட தொகை, பெறப்பட்ட வருவாய் போன்றவற்றை பற்றி பெரிய கோயில் கல்வெட்டுகளில் இருந்து நாம் அறிய முடிகிறது.
இப்பெருவுடையார் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களும் அந்நிலங்களில் இருந்து வருவாயாக வரவேண்டிய காணிக் கடன் எவ்வளவு, அதிலிருந்து ஒவ்வொரு கோவில் பணியாளருக்கும் எவ்வளவு நெல் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்பதை பற்றிய இக்கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு தொடர்பான பணிகளுக்கும் இசை நடனம் மற்றும் பிற கலை பணிகளுக்காகவும் மொத்தம் 700 பேர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட அவர்களின் பணியின் பெயர் அவர்கள் செய்ய வேண்டிய பணி அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ஊதியம் போன்றவற்றை பற்றி தெளிவான கல்வெட்டு குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன அவர்களுக்கு ஊதியமாக பெரும்பாலும் நெல் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 302 தேவதாசி பெண்கள் பணியாற்றியதாக குறிப்புகள் கிடைக்கின்றது. தேவதாசி பெண்கள் வசிக்கும் பகுதிக்கு தலைச்சேரி என பெயரிடப்பட்டுள்ளது. தேவதாசி பெண்களும் தலைச்சேரி பெண்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். தலைச்சேரி பெண்கள் கோவிலுக்கு அருகிலேயே வசித்து வந்துள்ளனர். வடக்கு தலைச்சேரி தெற்கு தலைச்சேரி என வகைப்படுத்தி அவற்றில் மொத்தம் 302 வீடுகள் கட்டப்பட்டு 302 தேவதாசிகள் குடியமர்த்தப்பட்டு இருந்தனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு தேவதாசிகள் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட சிவன் கோவிலிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக கோவிலுக்கு சொந்தமான தேவதான நிலத்தின் விளைச்சலில் இருந்து பங்குகள் கொடுக்குமாறு ராஜராஜசோழன் கட்டளையிட்டுள்ளார்.
தேவதான ஒரு வேலி நிலத்தின் விளைச்சலில்லிருந்து 100 கலம் நெல் ஒரு பாகமாக கணக்கிடப்பட்டு தேவதாசிகளுக்கு வழங்குமாறு ஆணையிடப்பட்டுது. தேவதாசிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பதற்காக நடன ஆசிரியர்கள், பாடகர்கள், காந்தாரி எனப்படும் தேவதாசிகளின் மேற்பார்வையாளர்கள், நாதஸ்வர வித்வான்கள், பாதுகாவலர்கள் என 16 வகையான பணியாளர்கள் தேவதாசிகளின் ஆடல் பாடல்களுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் நடன ஆசிரியர்களும் பாடலாசிரியர்களும் அதிக ஊதியம் பெற்றனர்.
இக்கலைஞர்களுக்கு சேவை செய்வதற்காக துணி துவைப்பவர்கள், முடி திருத்துபவர்கள், கொல்லர்கள்கள், நடன மேடையை அமைத்து பராமரிப்பதற்காக தச்சர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கும் தேவதான நிலத்தில் இருந்து வந்த காணிக்கடனிலிருந்து ஊதியம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு தேவையான உடைகள் தைத்து _தருவதற்காக_ துணி தைப்பவர் மற்றும் மண் பாண்டங்கள் செய்து தருவதற்காக குயவர்கள் என மொத்தம் 206 பேர் பணியாற்றி வந்திருக்கின்றனர். இவர்கள் கோவில் நிலத்தில் இருந்து வருகின்ற வருவாயான நிவந்தம் பெற்றிருக்கின்றனர். நிவந்தம் பெற்றதால் இவர்கள் நிவந்தகாரர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர்.
இக்கோவிலில் தேவாரத்தில் உள்ள திருப்பதிகம் பாடுவதற்காக 48 பிடாரர்கள், உடுக்கை அடிப்போர் ஒருவரும், கெட்டிமேளம் வாசிப்பவர் ஒருவரும் ஆக மொத்தம் 50 கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மொத்தமாக ஒரு நாளைக்கு 150 குருணை அளவு நெல் ஊதியமாக வழங்கப்பட்டது. தேவதாசிகள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பாதுகாவலர்கள், கணக்கினை நிர்வகிக்கும் பணியாளர்கள் என மொத்தம் 700 பேர் இருந்ததாக ராஜராஜ கோவிலின் சம்பளப்பட்டியல் தெரிவிக்கின்றது.
இதில் தேவதாசிகளுக்கு ஓராண்டிற்கு 30 ஆயிரத்து 200 கலம் நெல்லும், நிவந்து காரர்களுக்கு 18 ஆயிரத்து 925 கலம் நெல்லும், தேவாரம் போது ஊருக்கு ஐந்தாயிரம் கலம் நெல்லும் ஊதியமாக ஓராண்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 700 பேருக்கு 54 ஆயிரத்து 525 கலம் நெல் ஊதியமாக ஓராண்டிற்கு வழங்கப்பட்டது.
இந்த ஊதியத் தொகை மிகப் பெரிய செலவு தொகையாக இருந்தமையால் பெருவுடையார் கோயிலுக்கு அதிக வருமானம் தேவைப்பட்டது. எனவே முதலாவது ராஜராஜ சோழன் வருவாயை ஈட்டுவதற்காக சில ஆணைகளை பிறப்பித்தார். அதன்படி சில வேளான் வகை நிலங்கள் அதன் உரிமையாளரும் இருந்து பறிக்கப்பட்டு, பெரிய கோயிலுக்கு சொந்தமான தேவதான நிலமாக மாற்றப்படுகிறது. நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் செலுத்தப்பட வேண்டிய வரியான காணிக்கடன் எவ்வளவு என அறிவிக்கப்பட்டது. வணிகர்களும் லேவாதேவி காரர்களும் தங்கமாக வரியினை அரசுக்கும் கோவிலுக்கும் செலுத்த வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. எந்தெந்த நிலம் வரி செலுத்தப்படாத இறையிலி நிலம் என தெளிவாக வகைப்படுத்தப்பட்டன. இதனால் பெரிய கோயிலுக்கு வருவாய் பெருகியது அதேசமயம் மக்களுக்கு வரிச்சுமை கூடியது.
அதிக வரிச்சுமையால் துன்புற்ற விவசாயிகள் அரசுக்கு எதிராக சில இடங்களில் வரிகொடாமலும் சில இடங்களில் விவசாயம் செய்யாமலும் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை பக்தி இயக்கத்தின் மூலம் அரசு நீர்த்துப் போகச் செய்தது. சேக்கிழாரின் பெரியபுராணம் போன்றவை அதற்காகவே இயற்றப்பட்டவை. சிவனைப் பற்றிய பக்தி பரவச கருத்துக்கள் மக்களிடையே பரவலாக பரப்பப்பட்டது. சிவனுக்கு சேவை செய்ய இந்த ஜென்மம் கிடைத்துள்ளதாகவும் கோவிலுக்கு வரி செலுத்துவதற்காக நாம் அடையும் துன்பங்கள் இப்பிறவியில் தற்காலிகமானவை என்றும் அவ்வாறு துன்புறுகிறார்கள் கைலாசத்தில் சிவனின் அருளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள் என்றும் வரி செலுத்தாதவர்கள் சிவத்துரோகிகள் என்றும் கருத்துருவாக்கம் பரப்பப்பட்டு மக்கள் பெரிய கோவிலுக்கு வரி செலுத்துவது சிவனுக்கு ஆற்றும் தொண்டாக கருத்துப் பிரச்சாரம் செய்யப்பட்டு அது மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை ஆனது.
~~~~~~~~~~~~~~~~~~
பேரா. மா. சிவக்குமார்
இணைப் பேராசிரியர்.
சிக்கைய நாயக்கர் கல்லூரி, ஈரோடு.
~~~~~~~~~~~~~~~~~~