“இயற்கை விவசாயம் தற்போது வலுவான சர்வதேச இயக்கமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. தொழில்துறை விவசாய (industrial agriculture) மாதிரியின் விளைவாக ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகெங்கிலும் அதிக கவலை நிலவுகிறது. இவற்றில், பல்லுயிரின இழப்பு, வளர்ந்து வரும் காடழிப்பு மற்றும் கிராமப் புறபகுதிகளில் பெருகி வரும் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள், நகரங்களுக்கு வெகுஜன புலம் பெயர்வு உட்பட, நமது விவசாய மண்ணின் பெரும் பகுதியில் அரிப்பு, உவர்தன்மை மற்றும் மலட்டுத்தன்மை ஆகியவை அடங்கும்.” உலகளாவிய இத்தகையச் சூழலில் கியூபாவில் 1990 இல் சோவியத் யூனியன் சிதைந்தவுடன் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை எதிர் கொள்ள எடுத்த மிக முக்கிய முன்னெடுப்பு இயற்கை விவசாயம் (Organic farming) தான்.
“கியூபா நாட்டின் எந்த ஒரு தகுதியான நிலமும் பயிரிடாமல் போகக் கூடாது” கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிரகடனப்படுத்தினார். இரசாயன உரங்களத் தவிர்த்து உள்ளூர் வளங்களைப் பயன்படுத்த மக்களைத் தயார்படுத்தினர். நிலங்கள் பகிர்ந்தளித்து ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பயிர்கள், விவாசாய விலங்குகளின் உயரிய பயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்த பண்ணை முறை, இயற்கை மற்றும் உயிரியல் உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் பயன்பாடு , சூழலியல் மண் மேலாண்மை, பயிர் சுழற்சி மற்றும் பல்வகை பயிர்கள் முறை நகர்புற குடும்பம் சார்ந்த “நகர் தோட்டக் கலை இயக்கம்”, பிரத்தியேக விவசாயிகள் சந்தை என அதன் செயல்கள் விரிந்தன. கியூபா தானாகவே ஆர்கானிக் நாடாக மாறியது. 1993 இல் பேராசிரியர்கள், ஆராச்சியாளர்கள் உட்பட இணைந்து “கியூபியன் இயற்கை விவசாய சங்கம்’ துவக்கப்பட்டது.
இதன் நோக்கங்கள்:
• பொருளாதார ரீதியாக சாத்தியமான முறையில் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யும் போது, மனிதர்கள் மற்றும் இயற்கை இரண்டிற்கும் இணக்கமான ஒரு விவசாய முறை தேவை. இதற்கு தேசிய அளவில் புரிதலையும் இணக்கத்தையும் உருவாக்குவது.
• உள்ளூர் அளவில் சூழலியல் விவசாய திட்டங்களை உருவாக்கி விவசாயக் கல்வி மற்றும் பயிற்சி அளிப்பது
• சூழலியல் விவசாயிகளை ஆய்வு செய்து பாரம்பரிய உற்பத்தி முறைகளை மீட்டெடுப்பது
• இயற்கை விவசாயப் பொருட்களின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்துவது. இதனை மையமாக வைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கியூபாவின் பல்கலைக்கழகங்கள் நிலைப்புறு விவசாய இயக்கம் வலுப்பெற மிகப்பெரும் பக்க பலமாக இருந்தன. விவசாயக் கல்வி, பயிற்சி, ஆராச்சி, பிரபலப்படுத்துதல் அனைத்திலும் முழுமூச்சுடன் செயல்பட்டன.
விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல முன்னேற்றங்களை கியூபாவிற்கு கொண்டு வந்தன.
32000 ஹெக்டேர் நிலங்களில் பழத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இரசாயன கலப்பில்லா இந்தப் பழங்களுக்கு மிக வரவேற்பு கிடைத்தது. பல பழத்தோட்டத் திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) முன்வந்து உதவி செய்தது.
சர்வதேச சந்தையில் ஆர்கானிக் காபி மற்றும் கொக்கோவிற்கு மிகப்பெறும் சந்தை உருவாகியிருந்தது. அதனை கியூபா தனது பல் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பில் மலைதொடர்களில் முழுமையாக உற்பத்தி செய்து சந்தைப்படுத்திக் கொண்டது.
இயற்கை விவசாயத்தைப் பார்த்து கேட்கப்படும் முதல் கேள்வி: “நாடு முழுமைக்கும் உணவளிக்கும் வல்லமைக் கொண்டதா இயற்கை விவசாயம்” கியூபா இதற்கு உரக்க பதில் அளித்துள்ளது.
உணவு பாதுகாப்பினை உற்பத்தித் திறனை பல்லுயிர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதுடன் அனைத்து மக்களுக்குமான சத்தான உணவினைத் தந்ததுள்ளது. சூழலியல், சமூகப் பொருளாதார பயன்களையும் அளித்துள்ளது. நாட்டின் அடிப்படைச் சமூகம் மற்றும் சூழலை கவனத்தில் கொள்ளாமல் இயற்கை வளங்களை சீரழிப்பது மிகப்பெரிய பேரிடரினை அழைப்பதாகும் என்பதை திட்டமிடலாளர்களையும் ஏற்க வைத்துள்ளது.
இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்திய ஐந்து ஆண்டுகளிலேயே, காய்கறிகள் நான்கு மடங்கு, கிழங்குகள் மற்றும் வாழைகள் மூன்று மடங்கு தானியங்கள் 80% என அதிகமாகியது .
2000 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஒரு நாள் சராசரி, 469 கிராம் காய்கறி கிடைக்க வழி செய்தது.
ஆரோக்கியத்தில் பல சாதனைகளை படைக்க ஆர்கானிக் விவசாய முறை வழிவகுத்தது.
10 ஆண்டுகளில், மக்கள் தொகை கூடியபோதும் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் பாதியாகக் குறைக்கப்பட்டது. (எட்டு இலட்சத்திலிருந்து 4 இலட்சமாக) மக்கள் சத்தான உணவை எடுக்கும் வாழ்க்கை முறையே அரசின் அணுகுமுறையாக மாறியதால் ஆரோக்கியத்தியத்தில் நல்ல முன்னேற்றம் கண்டது. இரசாயன விஷம் கலப்பில்லாத உணவிற்கு இயற்கை விவசாயம் வழிவகுத்ததால், இதய நோய், இரத்த அழுத்த நோய் போன்றவைகள் உலகின் பலபகுதிகளில் அதிகரித்து வருகின்ற போதும், கியூபாவில் குறைந்தன…
விளைச்சல் பெருகியதால் தன்னார்வமாக தங்கள் பகுதி பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு மக்கள் இலவசமக உணவுகளை வழங்குகின்றனர்.
ஆச்சரியமான மாற்றங்களாக , நாட்டின் டாப் 10% வருமானம் பெருபவர்களில் விவசாயிகள் இடம் பிடித்தனர். டாக்டர்களைவிட அதிகம் சம்பாதிக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? விவசாயத்தில் வருமானம் கூடியதால்,. புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் கிரமங்களுக்குத் திரும்பினர். (Reverse migration) கிராமப்புறத்தில் வேலை வாய்ப்புகள் பெருகியதால் நகர்புறத்தவரும் கிராமங்களை நோக்கிச் செல்ல ஊக்கிவிக்கப்பட்டனர்.
1989 வரை வீழ்ந்து கிடந்த கியூபாவின் பொருளாதாரம் 1993 க்குள் மேன்மையடைய மிகப் பெரிய காரணியாக இருந்தது ஆர்கானிக் விவசாயம்.
“ஆவன்னா” போன்ற நகர்புறங்களில் உருவாக்கிய “நகர தோட்டக்கலை இயக்கம்” உலக நகரங்களுக்கு முன்மாதிரியாக மாறியது. நகர மக்களின் பலத் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவியது. நகரங்களில் “ சமூக உணவு பாதுகாப்பு “ , பசுமை மற்றும் அழகு , இயற்கை வளங்கள் மறு சுழற்சி, சூழல் இவைகளை ஆர்கானிக் முறையின் மூலம் உறுதி செய்தது.
பொது நிலங்களை பெறுவதில் எளிய வழி, உள்ளூர் வளங்களைப் பயன்படுத்த ஒருங்கிணைப்பு , தேவையான இடுபொருட்கள் கிடைக்க உத்திரவாதம் இவைகளுடன் அரசியல் உறுதிப்பாடுதான் இதில் சாதனை செய்ய வைத்துள்ளது.
இயற்கை விவசாயம் என்பது உலகளாவியது. பரந்துபட்டது, நிலைபுறு சூழல் காப்பது, அறிவியல் தொழில் நுட்பங்களை உள்வாங்கியது, உள்ளூர் வளங்களையும் விவசாயிகளின் அறிவினையும் புதுமைகளையும் ஏற்பது, தற்சார்புடையது.
இயற்கை விவசாயத்தில், கியூபாவைப் போலவே பல உலக நாடுகளில் நடைபெறும் மாற்றங்களை உற்று நோக்கி உள்ளூரில் அரசியல் உறுதியுடன் களம் இறங்கினால் இந்தியாவில் இயற்கை விவசாய முறை மிகப்பெரும் சாதனைப் படைக்க இயலும் என்பதை இந்தப் புத்தகம் மிகப் பெரும் நம்பிக்கையினைக் கொடுத்துள்ளது.
_________________________
Organic Revolution by Bharath Mansata,
Published by : Earthcare Books, 10, Middleton Street, Kolkata-700071
_________________________
_________________________
கியூபாவில் வேளாண் சூழலியல் மறுஎழுச்சி பற்றிய புத்தகம்- இந்தியாவில் எழுதப்பட்டது
புத்தக அறிமுகம்: கு.செந்தமிழ் செல்வன், 9443032436
_________________________