புத்தக அறிமுகம்: விஸ்தரிக்கும் எல்லைகள் – வேலூர் ஜோஷனா

புத்தக அறிமுகம்: விஸ்தரிக்கும் எல்லைகள் – வேலூர் ஜோஷனாஎந்திர வாழ்வுக்கு பழகிவிட்ட நம் நடைமுறை வாழ்வில் பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு நாம் கற்க அல்லது தெரிந்துக்கொள்ள, ‘அட’ என நிமிர்ந்து உட்கார எத்தனையோ செய்திகள் இருக்கதான் செய்கிறது என்பதை எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களின் ‘இசைநகரம்’ கட்டுரை உணர்த்துகிறது.

தொகுப்பில் பத்தொன்பது கட்டுரைகள் இருக்கின்றன.. பெரும்பாலும் கல்வி சார்ந்த கட்டுரைகள் இருந்தாலும் … அவையும் கலை சார்ந்த இலக்கியம் சார்ந்த அவசியத்தையும், எதிர்காலத்தின் விளைவுகளையும், எதிர்கொள்ளவேண்டிய முன்னெடுப்புகளையும் நமக்கு உரக்க சொல்கிறது. புது புது தகவல்களையும் போற போக்கில் நமக்கு காட்டுகிறது. நம்மை இன்னொரு உலகத்திற்கு இட்டுசெல்கிறது.

ஆளுக்கொரு நூலகம் என்ற கட்டுரையில் 

//மதராஸில் நூலகம் உருவான கதை சுவையானது, 1661இல் மதராஸில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தங்கள் தேவைக்கு ஒரு நூலகம் வேண்டும் என விரும்பினார்கள். தலைமை மதகுரு ஒயிட்ஃபீலட் அப்போதைய மதராஸ் கவர்னரையும், வணிகர்களையும் அணுகி தம்முடைய வேண்டுகோளினை முன் வைத்தார். கவர்னர், வணிகர்களிடமும், பிரமுகர்களிடமும் நிதி திரட்டி  அந்த நிதியில் ‘கேலிகோ’ துணிவாங்கி  கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். அந்தத் துணிக்கு மாற்றாக 28 பவுண்ட், 10 ஷில்லிங்களைக் கொண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் உருவாக்கப்ட்டதுதான் மதராஸ்ஸின் முதல் நூலகம், அது பொதுமக்களுக்கான நூலகம் அல்ல, மத குருமார்களுக்கும், கம்பெனி அலுவலர்களுக்கும் மட்டுமே!//

 என்று தமிழகத்துக்கு நூலகம் வந்த கதையை சொல்கிறார். பிறகு சில வருடங்கள் கழித்து மதகுரு இறந்த பிறகு நூலகம் வாசகர்களும் பயன்படுத்தும்படி வருகிறது.

//புத்தகம் இரவல் வாங்குபவர்கள் ஒரு பகோடா பணம் செலுத்த வேண்டும், இதுவே வாசகர்களுக்க நூல்களை இரவல் கொடுத்து வாங்கும் நடைமுறை அடித்தளம் எனலாம். 1890இல் அப்போதைய மெட்ராஸ் கவர்னர் கன்னிமாரா பிரபு, மெட்ராஸ் மாகாணத்திற்கு ஒரு  பொது நூலகம்  தேவை என உணர்ந்து அதற்கு அடிக்கல் நாட்டினார். 1896ஆம் ஆண்டு அந்த நூலகம் பொதுமக்களுக்காகத் திறக்கின்றபோது கன்னிமாரா பிரபு கவர்னராக இல்லை என்றாலும் அவருடைய பெயரே அந்த நூலகத்திற்கு சூட்டப்பட்டது. தற்போது கன்னிமாரா நூலகம் தேசத்தின் நான்கு களஞ்சிய நூலகங்களுள் ஒன்று.//

அப்படிபட்ட வரலாறு பின்னணியை கொண்ட கன்னிமாரா நூலகத்தின் பிரமிப்பு இன்றும் குறையவில்லை என்றே சொல்லலாம்.

காந்திஜியை தேச தந்தையாக பார்க்கும் நாம், நூலாசிரியர் ஆசிரியராக பார்க்கிறார்… தேசத்தின் ஆசிரியர் அவர்… என்ற கட்ரையில்

“குமாஸ்தாக்களையும் உதவியாளர்களையும் அரசாங்கத் தேவைக்காக உருவாக்கித்தரும் நமது கல்வி முறையால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடமுடியும்?” (யங் இந்தியா 20-3-24 இதழில் காந்தி  கேள்வி எழுப்புகிறார்… அதன் தொடர்ச்சியா இன்றளவும் அந்தக் கேள்வி தொடர்வதுதான் பெயரும் துயரமாகும் என்று ஆசிரியர் சொல்வது நடைமுறை எதார்த்தம். காந்திஜி அந்த கேள்வி எழுப்பி நூறாண்டை நோக்கி நகர்ந்தாலும் இன்னும் நம் மதிப்பெண்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

“ஆசிரியர்கள் செய்யாத எந்த வேலையையும் மாணவர்களைச் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது” என்ற சிந்தனை மிக நுட்பமானது… கற்றுக் கொடுப்பதோடு ஆசிரியப்பணி நிறைவடைந்துவிடுவதில்லை, கல்வித் திட்டங்கள் தீட்டுவதிலும் அவனைச் செயலாக்க்திற்குக் கொண்டு வருவதிலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அவசியம் என உணர்த்திய ஆசிரியர் அவர்.

பணம் கொடுத்தால் பெயருக்கு பின்னால் ஒரு பட்டத்தை போட்டுக்கொள்ளலாம், படிப்பு முடிக்காமலே பிஏ, எம்ஏ என்ற எழுதிக்கொள்ளலாம். மாணவர்கள் நினைக்க பட வேண்டும் என்ற கட்டுரையில் 

கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ இப்போது ஒருவர் பயில்வதற்கு அனுமதி பெற்றுவிட்டாலே அவர் “மாணவர் என்ற தகுதியை அடைந்துவிடுகிறார். ஆனால் நமது பண்டைய மரபில் ஒருவரை “மாணவன்” என்று ஏற்றுக்கொள்வதற்கு அல்லது அந்தத் தகுதியை அவர் அடைவதற்கு முன் அவருடைய அறிவுவேட்கை, அனுபவம் நடத்தை, ஒழுக்கநெறி அளவிடப்பட்டு, மதிப்பிடப் படுகிறது. அதன் பின்னரே அவர் “மாணவன்” என்ற நிலையை அடைகிறார். 

என்று மாணவனுக்கு இலக்கணம் வகுக்கபடுவது சுட்டிக்காட்டகிறார். மணவன் என்ற தகுதி நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியும் நம் முன்னால் எழுகிறது. கூடவே மாணவர் சக்தியின் வலிமை எத்தகையது என்பதை 

“ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினாவில் நடைபெற்ற பண்பாட்டுப் பாதுகாப்புப் போராட்டமும் சர்வதேச மாணவர்களால் நினைக்கப்படுகிறது. வரலாற்றில் நிலைபெறுகிறது. மாணவர்களின் பொதுச் செயல்பாடுகள் நினைக்கப்பட வேண்டுமே தவிர பழிக்கபட்படக் கூடாது என்று சொல்கிறார்.

இன்று சென்னை என்றதும் நம் கண் முன்னால் தெரிவது  மக்கள் கூட்டம், சிக்னலில் காத்திருப்பு, இரண்டு கிலோ போக நான்கு கிலோ மீட்டர் ஒன்வேவில் சுற்ற வேண்டும். அடுக்கு அடுக்காக கட்டிடங்கள் ஆனால் அன்றைய சென்னை எப்படி இருந்தது என்பதை சென்னையின் வளர்ச்சியும் வரலாற்றுத் தடமும் என்ற கட்டுரையில் எழுத்தாளர் பாரதிபாலன் அவர்கள் எழுதும்போது பிரமிப்பா இருக்கிறது. சென்னை பெயர்காரணம் தொடங்கி படிபடியாக இந்த நிலையை ஆவணமாக அடுக்குகிறார். 

பாரதிபாலன்

“எழும்பூர் (ஏழு சிற்றூர்களைக் கொண்ட பகுதி –எழுப்பூர் என்ப்பட்டது) சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், திரு-அல்லி-கேணி, சாந்தோம், மைலாப்பூர், திருவான்மீயூர் போன்றவை 19ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே சிறு சிறு குடியிருப்புகளாக இருந்துள்ளன., அப்போது நெல், வாழை, கரும்பு, காய்கறிக் விளைந்து கொண்டிருந்த வயல் வெளியில் (தேனாம்பேட்டை0 ரிச்சர்ட் எல்டாம் என்னும் வணிகளர், அரை ஏக்கர் நிலம் வாங்கி “லஸ் இல்லம்’ என்று ஒரு வீட்டைக் கட்டினார். மதராஸ் பல சிற்றூர்களை எல்லாம் தன்னோடு இணைத்துக்கொண்டுதான் வளர்ச்சி அடைந்துள்ளது.  என்று சென்னை கடந்து வந்த வரலாற்றையும் குறிப்பிடும் அதே நேரத்தில்  “சென்னை நகர் அபரிமிதமாக வளர்ந்துள்ளது ஆனால் மக்கள் வளமாகவும் நலமாகவும் வாழ்வதற்கு ஏற்ப அது சீராக அமைந்துள்ளதா என்பதுதான் சிந்திக்க வேண்டியது” என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

மாறவேண்டும் மனப்பான்மை என்ற கட்டுரை 2017ல் எழுதப்பட்ட்டுள்ளது. இன்றைய கொரானா காலத்தில் வீட்டிற்கே ஆன்லைன் வகுப்புகள் வந்துவிட்டது. 

“தொழில்நுட்ப வளர்ச்சியில் இருக்கின்றபோது நாம் ஏன் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் வகுப்பறைகளுக்குச் சென்றுதான் கல்வி பெறுமுடியமா? என்று எழுதி இருக்கிறார். “உலகில் வலுவுள்ளது வாழவில்லை, அறிவுள்ளதும் வாழவில்லை, மாறுதலுக்கு ஏற்பத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட இனம்தான் வாழ்கிறது என்பது உலகப் பரிணாம வளர்ச்சியில் நாம் கற்றுணர்நத பாடம்! ” 

என்ற வார்த்தைகளில் தீர்க்கதரிசியாகிறார்.

புத்தகச் சிறகை விரிப்போம் என்ற கட்டுரையில் 

“சீன யாத்திரிகர் யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்து, நாளந்தா பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் போது, ஒரு படகில் ஆற்றைக் கடந்தார், அவர் எடுத்துச் சென்ற நூல்கள் ஆற்றில் படகு பாரம் தாங்காமல் மூழ்கும் நிலை வந்த்து, படகோட்டி, ‘ஐயா இந்த நூல்களை ஆற்றில் தள்ளிவிட்டால் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்’ என்றார். உடனே யுவான் சுவாங்க சொன்னார். “நான் குதித்து விடுகிறேன், இந்த அரிய நூல்களால் இந்த உலகம் வாழட்டும் ” என்றார்”

 புத்தகங்கள் என்பது எப்போது நம் அறிவு தேடலுக்கு விருந்தாக இருக்கிறது. நம்மை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே இருக்கிறது.

உலகில் ஒளிரும் உன்னதங்கள் என்ற கட்டுரையில் உலக அதிசயங்கள் தொடங்கி உள்ளூர் வரை யுனெஸ்கோ அங்கிகரித்த பல பாரம்பரிய அதிசயங்களை பட்டியிலிடுகிறார். ஒவ்வொன்றையும் படிக்கும்போது ஆச்சரியமே மிஞ்சுகிறது. காலபோக்கில் சில பாரம்பரியத்தை இன்றைய தலைமுறை அழித்தெடுக்கிறது என்பதை

“இந்த உலகப் பாரம்பரிய சிறப்புமிக்க களங்களைப் பற்றிய புரிதலும் உரிய விழிப்புணர்வும் தற்போதைய முதல் தேவை” என்ற எச்சரிக்கையும் செய்கிறார்.

ஏறுதழுவுதல் –தமிழரின் வீரவிளையாட்டு என்ற கட்டுரையில்

பண்டைக் காலத்தில் ஆயர்களின் திருமண் தொடர்பானதாக இருந்த ஏறுதழுவுதல் கால மாற்றத்தில் மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டு என் வீரவிளையாட்டாக மாற்றம் கொண்டது.

என்று ஏறுதழுவுதல் கடந்து வந்த பாதையையும், அது சார்ந்த செய்திகளையும் அடுக்குகிறார்.மாட்டிறைச்சி சந்தைக்கு எதிராக சல்லிகட்டு உள்ளது என்றும், நாட்டு மாடுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை மதிப்பு இருக்கிறது. சல்லிக்கட்டுக்கு தடை வந்தால் அதன் விளைவாக நாட்டு மாடுகள் சந்தைக்கு வரும் சூழ்நிலை உருவாக்கப்படும்“ 

என்று சல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இருக்கும் அரசியலை எடுத்துரைக்கிறார்..

ஒவ்வொரு கட்டுரையும் வாசித்த பின் நமக்குள் எழுகிற மனஓட்டம் கேள்வியாக முன் நகர்கிறது. நம் வருங்கால தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டியது… அவர்களை தயார்படுத்த வேண்டியதை புள்ளிவிவரம் பட்டியல்கள் தரவுகள் என தருகிறார்.

“வீடுகளை அழி அவன் அடையாளம் இல்லாமல் போகட்டும், பள்ளிக்கூடங்களை அழி அவன் பண்பாடு இல்லாமல் போகட்டும், நூலகங்களை அழி அவன் வரலாறே இல்லாம் போகட்டும் என்று ஒரு வழக்கு உள்ளது. நம் வராற்றை நாம் காக்கவும் புது வரலாறு படைக்கவும் புத்தகங்களே ஆதாரம், புத்தகங்கள் நமக்கு புதிய சிறகுகளைத் தருகிறது.

என்று ஒரு கட்ரையில் எழுதியிருப்பார். இந்த புத்தகத்தை நம் வாசித்து முடிக்கும்போது இந்த உலகத்தின் பல்வேறு தளங்களில் நமக்கு சிறகு விரிக்கிறது என்றே சொல்லலாம். சுவாரஸ்யம் நிரம்பிய தொகுப்பு

தொகுப்பின் பெயர்

இசை நகரம்

(கட்டுரைகள்)

ஆசிரியர் –பாரதிபாலன்

நற்றிணை பதிப்பகம்


Show 1 Comment

1 Comment

  1. na.kokilan

    சிறப்பான, நூலை வாசிக்க தூண்டும் அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *