பாரதி கவிதாஞ்சன் கவிதைகள்

தனித்திருத்தலின் பெருவலி :

July 2017 – Site Title

தனித்திருக்கும் மனமென்பது

வெளியேறிவிட்டப் பறவையொன்றின் கூடு

தனித்திருக்கும் இவ்வாழ்வென்பது

துயரங்களின் வாசிக்கப்படாத புத்தகங்களால்

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புராதனமொன்றின்

நேற்றைய அலமாரி

தனித்திருக்கும் இந்நாளென்பது

உடைந்து சிதறிய கண்ணாடியொன்றின் சில்லினைப்போல

ரசம்மழிந்த இன்றின் சிதைந்த முகம்

தனித்திருக்கும் இப்பாழ்வெளியில்

நாற்புறமெங்கும் சூழ்ந்திருக்கும் இருளில்

நம்மை தொலைத்துவிட்டு நம்மையே தேடியலைவது

தோள்பற்றக் கைகளின்றி

தனித்திருத்தலென்பது மெல்ல மரித்துக்கொண்டிருக்கும்

கனவுகளின் ஒரு கைப்பிடி சாம்பல்

சொற்களின்றி சில்லிட்டுப்போன தன்பிணத்தை

சுமந்து திரியும் துர்வாழ்வு.

*******

 

தாய்மை போற்றுதும் :

சமுத்ரா பக்கங்கள் - Google Groups

கூகையும்

நடுங்குமொரு கடுங்குளிரின் இரவொன்றில்

கண்திறவா தன் குட்டிகளுக்கு

கால்தூக்கி மடிகொடுக்கும் நாயொன்றின்

அடிவயிற்று கதகதப்பினை நினைத்தபடி கடந்து செல்கிறேன்

எனக்காக சுரந்த அம்மாவின் மார்பு நதியின்று

மேகங்களால் புறக்கணிக்கப்பட்ட

வற்றிய நிலமானது

ஈன்ற பொழுதில்

வாழ்வில் காணா வலிபொறுத்தவளின்

சிந்திய குருதித் துளிகளுக்கும்

காலத்தின்

துயரங்களைச் சுமக்கும் தாயொருத்தியின்

அடிவயிற்றுச் சுருக்கங்களுக்கும்

எழுதிக்கொண்டிருக்கும்

இந்த கவிதையொன்றும் ஈடாகாது.

******