கவிதை: *அவர்கள் வருகிறார்கள்* – பாரதி கவிதாஞ்சன் அவர்கள் வருகிறார்கள் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~
மலைகளை சமவெளியாக்கிவர்கள்
சமவெளிகளை நிலங்களாக்கியவர்கள்
மாடுகளோடு மாடாய் மல்லுக்கட்டி
உழுத சேற்றில் விதைகளாய் புதைந்து
உங்கள் சாப்பாட்டுத் தட்டுகளில் தானியங்களென முகங்காட்டியவர்கள்
வீதிகளில் நிற்கிறார்கள்

விளையாத வயல்களும்
பசித்த வயிறுகளும் வேறு வேறல்ல
சோற்றுக்கு போராடுகிறவனின் வயிற்று சுருக்கங்கள்
வாய் பிளந்திருக்கும் நிலத்தின் வெடிப்புகளன்றி வேறென்ன?
மழையாய் விழுந்து கதிராய் எழுந்து
நூற்றிமுப்பதுக் கோடி வயிறுகளுக்கு சோறுபோட்டவர்கள்
வீதிகளில் நிற்கிறார்கள்

சூரியனை சுமந்த தோள்கள்
கடுங்குளிரிலும் வியர்க்கும் உடல்கள்
கற்களை கனிகளாக்கி தந்த கைகள் குறுக்கு புத்திக்கார்கள் தோண்டிய
அகழிகளும் தடுப்புகளும்
மண்ணுக்குள் ஈரம் தேடி நழுவும் உழுகுடி வேர்களை என்ன செய்துவிட முடியும்?

கோடிக்கோடிகளாய் சுருட்டிய
கார்பரேட் கனவான்களின் கடன்களை
தள்ளுபடி செய்தவர்கள் தான்
இங்கே
கஞ்சிக்கு உழைப்பவனின் அடிமடியில் களவாடுகிற  சௌகிதார்களாய் இருக்கிறார்கள்

உழுதவனின் முதுகெலும்பை முறிக்கும் சட்டங்களுக்கெதிராய்
பெரு நகரத்தின் வீதிகளிலிருந்து எழும் அவர்களின் குரல்கள் செவிடாகிப்போன தேசத்தின் மனசாட்சியை  கிழித்தெறியட்டும்
அவர்கள் வந்துக்கொண்டிருக்கிறார்க்ள
கொஞ்சம் வழிவிடுங்கள்

ஏக வல்லமை பொருந்திய அதிகாரத்தின் திறவாதிருக்கும் கதவுகளை நுகத்தடிகளால் உடைத்தெறிய
அவர்கள் முன்னேறி வருகிறார்கள்
கொஞ்சம் வழிவிடுங்கள்

கதிரறுத்து காய்ப்பேறிய சேற்றுக் கால்கள்
வெறும் கைகளோடு திரும்ப முடியாது
சனநாயகம் செத்துக்கிடக்கும்
சவக்கிடங்காகிப் போன நாடாளுமன்றத்தையாவது
கலப்பைகளில் அறைந்து சிலுவைகளாக்கி ஏந்தி செல்லட்டும்

உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கும் மிஞ்சாத காலத்தில்
இனி எப்படிதான் வாழ்வது
எழவெடுத்த தேசத்தில்

– பாரதி கவிதாஞ்சன்