Bharathi Krishnakumar's Kavisakkaravarthiyin Panivu Book Review By Ushadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam. நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – உஷாதீபன்



நூல்: கவிச்சக்கரவர்த்தியின் பணிவு
ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார்
வெளியீடு: The Roots
பக்கம்: 144
விலை:ரூ.200/-

இந்தப் புத்தகத்தை எழுதியபோது கம்பன் என்னோடு இருந்தான். தன்னை உணர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்தான். என்று ஆத்மபூர்வமாய்த் தெரிவிக்கிறார் ஆசிரியர் திரு.பாரதி கிருஷ்ணகுமார்.

கம்பனின் சிறப்புகள்பற்றி இன்னும் மேன்மையாக, விரிவாக, பரந்து விரிந்து ஊர்கள் தோறும் பேசப்படாமல் இருக்கிறதோ என்கிற ஆதங்கம் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கம்பன் விழாக்கள் நடைபெறுகின்றன. காரைக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், புதுச்சேரி என்று இன்னும் பல இடங்களில் கம்பனின் பெருமைகள் சிறப்பாக அரங்கேறி புகழ்ந்துரைக்கப்பட்டு மக்களிடம் இடைவிடாது கொண்டு செல்லப்படுகின்றனதான்.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், தமிழருவி மணியன், சுகி.சிவம், ஜெயமோகன், சுதா சேஷய்யன், நெல்லை கண்ணன், இந்நூலின் ஆசிரியர் என்று இன்னும் பல்வேறு தமிழ்ப் பெருமக்கள் கம்பனின் புகழை இடைவிடாது மேலெடுத்துச் செல்கின்றனர்.

சிறியன சிந்தியான், கம்பனில் பிரமாணங்கள், கம்பனும் வான்மீகியும், தடந்தோள் வீரன், கம்பருக்குள் ஒரு கம்பர், கம்பனிடம் சில கேள்விகள் என்று பல்வேறு தலைப்புகளில் கம்பனின் பெருமைகள் பேசப்பட்டும், அலசப்பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றன. சொல்லரங்கம், வழக்காடு மன்றம் என்று நாம் ரசிப்பதற்குப் பல மேடைகள் காணக் கிடைக்கின்றன.

ஆனால் கம்பன் வாழ்ந்த காலத்தில் இந்தப் பெருமைகளுக்கெல்லாம் அவர் ஆட்பட்டாரா என்று ஆய்விடும்போது கடுமையான விமர்சனங்களுக்கும், கேலிக்கும், அலட்சியத்துக்கும், துரத்தலுக்கும் ஆட்பட்டிருக்கிறார் என்பதையும், அம்மாதிரி சமயங்களில் கவிச்சக்கரவர்த்தியின் பணிவும், பவ்யமும், தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்விக் கணைகளை அவர் எதிர்கொண்ட விதமும் ஆசிரியரால் பகிர்ந்தளிக்கப்படும்போது நமக்கு கம்பன் படைத்த ராமகாவியத்தின் மீது பன் மடங்கு மதிப்பு கூடுகிறது..



வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி ராமாயணத்தைப் பின்பற்றி எழுதப்பட்டதுதானே இது என்று சுலபமாக ஒதுக்கப்பட்டதும், அதிலுள்ளவைகள்தானே இதிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், மிகைப்பாடல்கள் அனைத்தும் செருகுகவிகள்தானே எனவும் அவைகள் கம்பனால் எழுதப்பட்டதல்லவே என்றும், எல்லாம் அமைந்திருந்தபோதிலும், வான்மீகி எழுதியதை ஒட்டியே கம்பரின் உரை அமைந்துள்ளதால் மாற்றங்கள் பொருந்தாமல்தான் உள்ளன என்றும் பேசப்பட்டிருக்கிறது.

அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் தனது ராமகாவியம் அரங்கேற்றப்பட வேண்டும் என்று கம்பர் முயன்றபோது அவருக்கு கோயில் வைணவர்களால் கிடைத்த கேலியும், அவமானமும், அலட்சியமும் எந்தவொரு தமிழ்ப் புலவனுக்கும் நிகழ்ந்திருக்காது என்றே தோன்றுகிறது.. எல்லாச் சூழ்நிலையிலும், பணிவோடும், மிகுந்த பொறுப்புணர்வோடும் தன் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார் கம்பநாட்டாழ்வார் என்பதை அறிந்து நம் மனம் அவருக்கு சார்பான ஆதரவை நல்குகிறது.

ஆறு காண்டங்களுடன், பத்தாயிரத்து ஐநூறு பாடல்களுடன், தொண்ணூற்று ஆறு வகையான விருத்தங்களுடன் தனது காப்பியத்தைப் படைத்து அளித்த கம்பன் அதனை சிறப்பான முறையில் அரங்கேற்றுவதற்கு என்னென்ன வகையிலான சோதனைகளுக்கெல்லாம் ஆட்பட்டிருக்கிறார் என்பதை ஆசிரியர் விரித்தளிக்கும்போது, ஒருவனின் கவித்துவமும், ஞானமும் இந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படும் மனநிலை கொண்ட கீழான மனிதர்களா அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள்? என்று எண்ணி அவர்கள்மேல் தாங்க முடியாத வெறுப்பும், விலகலும், ஆதங்கமும் நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஸ்ரீரங்கத்தில் கற்றறிந்த புலமையும், தெய்வ பக்தியும் உடைய சான்றோர்களிடம் படித்துக் காட்டுகிறார். ஆனால் அவர்களோ ஆழ்வார்களைத் தம் நூலில் போற்றாது இருந்ததைக் கண்டு, குற்றம் குறை சொன்னவண்ணமே இருக்கின்றனர். அதனால் கம்பர் நினைத்தபடி காவியம் அரங்கேறாமல் போய்விடுகிறது. தொடர்ந்து தன் பணிவான வார்த்தைகளால் கம்பர் வேண்டி நிற்கும்போது, பற்பல சோதனைகளுக்கு ஆளாக்குகிறார்கள்..அவ்வூர் அரங்கநாதனிடம் போய் இறைஞ்சி நிற்கிறார். இறைவனே தம் அடியார்க்கு ஆட்படுத்த எண்ணி, நம் சடகோபனைப் பாடு என்று விளித்து பிறகே அங்கீகரிப்போம் என்று அருள்கிறார். அதன் பின்னர்தான் சடகோபரந்தாதி என்னும் நூலைக் கம்பர் பாடி அருளினார் என்று தெரிகிறது.

கம்பராமாயணம் வைணவ சமயக் கதை என்ற ஒரு சாரார் கருத்தும் உலாவந்த காலம் அது. திருவரங்கத்தில் வைணவ ஆச்சார்யர்களை சந்தித்து வேண்டி நின்றபோது அவர்கள் நரஸ்துதி பாடும் காவியமாய் உள்ளது என்றும், நீச பாஷையான தென் மொழியில் உள்ளது என்றும் கூறி ஒதுக்கியிருக்கிறார்கள். சிதம்பரம் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர் ஒப்புதல் வேண்டும் என்று கூற அதற்கும் போராடிப் பெறுகிறார். இறந்த குழந்தை ஒன்றை உயிர்ப்பித்த கதை ஒன்று அங்கே நிகழ, அதன் மூலம் அவரது காவியத்திற்கு ஒப்புதல் கிடைக்கிறது. ஆனால் அரங்க வைணவர்கள் சமாதானம் ஆகாமல் மேலும் அவரை அலைக்கழிக்கின்றனர். திருநறுங்குன்றம் சென்று அங்குள்ள தமிழறிந்த சமணப் புலவர்களிடம் போய்ப் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறுகிறார். மாமண்டூரில் மெத்தப் படித்த ஒரு கொல்லனிடம் போய் படித்து ஒப்புதல் பெறுகிறார். அஞ்சனாட்சி என்னும் ஒரு தாசியிடம் சென்று தம் காவியத்துக்கான ஒப்புதலைப் பெறுகிறார். எல்லா நிபந்தனைகளையும் நிறைவேற்றித் திரும்பிய பின்பும் இன்னும் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு அங்கும் ஒப்புதல் பெற வேணும் என்று தயங்காது திருப்பி அனுப்புகிறார்கள். இதில் வியப்பென்னவெனறால் அம்பிகாபதி என்னும் அறிவிற் சிறந்த புலவரது ஒப்புதலையும் தாங்கள் பெற வேண்டும் என்ற நிபந்தனை வைத்ததுதான். தன் மகனிடமே சென்று அந்த ஒப்புதலுக்கும் நிற்கிறார் கம்பநாட்டாழ்வார். சிரமேற்கொண்டு அம்பிகாபதி தன் ஒப்புதலை மனமுவந்து வழங்க, இனியேதும் தடையிருக்காது என்று போய் நிற்க, கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்டித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். அதையும் செய்து முடித்தபின்னர்தான் அரங்கேற்றம் நடைபெற்று முடிந்தது என்று அறிய முடிகிறது. அரங்கேற்றம் திருவரங்கத்தில் நடைபெறவேயில்லை என்று இன்றும் சொல்லும் தகவல்களும் உள்ளன என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.



ஒரு ஆய்வு நூலாக இந்தப் புத்தகத்தை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. கதம்ப மாலையாய்த் தகவல்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. எத்தனை எத்தனையோ புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து அத்தனையையும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தி, கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அறிவும் செறிவும், பணிவும் பண்பும் நிறைந்த நடவடிக்கைகளை ஆசிரியர் எடுத்துரைக்கும்போது நம் மெய் சிலிர்த்துப் போவதுடன், இந்த நேரத்திலிருந்தாவது அவர் சொல்லியிருக்கும் தமிழறிஞர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து, கம்பனின் ராமகாவியத்தை வாழ்வின் சில முறைகளாவது வாசித்து அனுபவித்து இந்தப் பிறவி எடுத்ததன் பலனை நாம் பெற்றே ஆக வேண்டும் என்கிற எழுச்சி நமக்கு ஏற்படுகிறது.

இராமாவதாரம் என்று கம்பர் பெயர் சூட்டிய கம்பராமாயணம் கி.பி.869 ம் ஆண்டு திருவரங்கத்தில் அரங்கேறியிருக்கிறது. ஆனாலும் நமக்குக் கிடைக்கும் வாய் மொழி வரலாறு, கர்ண பரம்பரைக் கதைகள் இவைகளை ஒப்பு நோக்கும்போது கீழ்க்கண்ட உண்மைகள் புலப்படுகின்றன என்று ஆய்ந்துணர்ந்து தெரிவிக்கிறார் ஆசிரியர்.

கம்பர் காலத்துக்கு முன்பிருந்தே நிலவிய சைவ, வைணவப் பகைமை வான்மீகி தெய்வப் புலவன், கம்பன் அப்படியல்ல வடமொழி தேவபாஷை, தமிழ் நீச பாஷை என்ற கருத்தியல் இறைவனைப் பாடிய காப்பியத்துள், நன்றிப் பெருக்கில் மனிதனான சடையப்ப வள்ளலையும் கம்பர் புகழ்ந்துரைத்தது ஆழ்வார்களைப் புகழ்ந்து காப்பியத்துள் பாடாமை மனிதனாக வந்த பரம்பொருள் இறுதிவரை காப்பியத்துள் மனிதனாகவே நடமாடுவது சோழ மன்னர்களோடு ஏற்பட்ட பகைமை, அவர்களை எதிர்த்து நின்ற ஞானச்செருக்கு வான்மீகி ராமாயணத்தின் பலபகுதிகளை நீக்கியது, தொகுத்தது, விரித்தது, சுருக்கியது வடமொழிப் பெயர்கள் அனைத்தையும் தமிழ்ப் பெயர்களாக்கியது. எதிர் மறைக் கதாபாத்திரங்களான இராவணனையும், வாலியையும், கைகேயியையும், புகழ்வதும் அவர்களது சிறப்புகளைப் பாடியதும் ராமனை விடவும் துணைக்கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடித்துப் பாடியது எளிய தமிழ் நடையில் காப்பியத்தை எழுதி முடித்தது…..
இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது பாரதி கிருஷ்ணகுமாரோடு கம்பர் உடனிருந்து தன்னை உணர்ந்து ஆழமாய் அழகுற எழுதப் பணித்து, ஆதார சுருதியாய் நின்று அவரை வெற்றியடையச் செய்திருக்கிறார் என்பதை நாம் மனப்பூர்வமாய் உணர முடிகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *