கோ. பாரதி மோகன் எழுதிய "கமநிதா" கவிதைகள் தொகுப்பு புத்தகம் | Bharathi Mohan's Kamanitha Poetry Collection Tamil Book Review | தங்கேஸ் | www.bookday.in

கோ. பாரதி மோகன் எழுதிய “கமநிதா” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

“கமநிதா” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

பாரதிக்கு எவ்விதம் ஒரு பராசக்தியோ, அவ்விதமே பாரதி மோகனுக்கு கமநிதா இருக்கிறாள்.

“எங்கெங்கு காணினும் சக்தியடா எழுகடல் அவள் வண்ணமடா ” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல , பாரதி மோகனுக்கு எங்கெங்கு நோக்கினும் கமநிதாவின் உருவமே தெரிகிறது .

பாரதி மோகன் குழைத்து குழைத்து சிருஷ்டித்த பிரபஞ்சத்தில் பிரபஞ்ச நாயகியாகிறார், கமநிதா . அவளுக்காகவே ஓர் அற்புத உலகம் கவிதையில் படைக்கப்பட்டிருக்கிறது.

கவிஞர் அளித்த அந்த உலகத்தை சாதாரண சனங்களிலிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்று நதி, கடல், மரங்கள் என்று விரித்து விரித்து, விண்ணேகி, மேகம் வானம் என்று ஒரு பெரும் பிரபஞ்சத்தை தன் சிருஷ்டியின் பலத்தால் படைத்துக் கொள்கிறாள் கமநிதா. அது அவளுக்கே உரிய பிரத்தியேகமான உலகமாகும்.

பாரதிமோகன், கமநிதா என்ற குழந்தையின் தரிசனத்தை கண்டு கண்டு வியந்து மெய்ச்சிலிர்த்து தன் கவிதைகளில் படைப்பாக்குகிறார்.

உண்மையில் நண்பர் பாரதி மோகன், கவிப்பித்து மனம் கொண்டவர். கவிதைக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதற்காகவே அல்லும் பகலும் உள்ளும் புறமும் பயணம் செய்து வருபவர். அவர் தேர்ந்த கஸல் கவிஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த கஸலின் இன்னொரு பரிமாணம் தான் இந்தக் கமநிதா கவிதைகளாக விரிந்திருக்கின்றன.

இதற்காக அவர் தனியான பிரத்தியேகமான மொழியையும் , உத்தியையும் படைத்துக் கொண்டார் என்ற போதிலும், கஸலின் கூறுகளும் மயக்கம் தரும் மொழியும் இந்த தொகுப்பில் இரண்டறக் கலந்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி கமநிதா என்ற கவிதைத் தொகுதியில் தனக்கென்று சில சிறப்புகளை வைத்திருக்கிறார் கவிஞர். அவர் நினைத்தது போல கமநிதாவை பெரும் பிரபஞ்சத்தின் தனித்த நாயகியாக மாற்ற முடிவு செய்வதிலிருந்து முதல் கவிதை தொடங்குகிறது.

அதிகமான பிரேமையும், அன்பும், மொழி உத்தியும் கலந்த அளவு இதில் வாழ்வியல் தத்துவமும், சமூக பொருளாதார கூறுகளும் அதிகம் இடம் பெறாதது ஒரு சிறிய குறையேயாகும்

நவீன தத்துவ சிந்தனையையும், நவீனத்துவ வடிவத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ளாமல், புதுக்கவிதையின் போக்கிலேயே இந்த கவிதைகளை வடித்ததனால் மிகச்சிறந்த கவிதை தொகுப்பாக வர வேண்டிய ஒன்று மற்றொன்றாய் மாறிப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அற்புதமான சில கவித்துவ அனுபவங்களை முதல் வாசிப்பிலேயே நமக்குள் சில கவிதைகள் கடத்திவிடுகின்றன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு கமநிதாவின் முதல் கவிதையை இப்படி தொடங்குகிறார்:

“கனிவாய் ஊதிய காற்றில்
சிருஷ்டித்துக் கொண்டாள்
அவள் தன் உலகத்தை

அவளின் பிஞ்சு இருதயத்தின்
சுவாசத்தை
உள்வாங்கிய உலகம்
காற்றின் திசை அலைந்து
உயர்கிறது ”

இந்த கமநிதாவின் பிரத்யேக உலகத்திற்குள் யார் யார் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கேட்டால், அதற்கு கவிஞர் இப்படி பதில் சொல்கிறார்.

“சாதி மதம் வர்க்கம்
எவ்வுயிர்களில் இல்லையோ
அவ் உயிர்கள் வசிக்கலாம்” –

வழி நெடுக இப்படியாகத் தென்படும் கவிதைகளை இந்த தொகுப்பில் ரசிக்காமல் நாம் கடந்து போய் விட முடியாது.
அந்த அளவு அவை நமது கண்களையும் இதயத்தையும் கட்டிப் போடுகின்றன.

தத்துவத்தின் ஆழத்தையும் நவீனத்துவத்தின் உச்சத்தையும் வேறு இலக்கிய உத்திகளையும் இன்ன பிற கூறுகளையும் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் கூட, இந்த வரிகள் உங்கள் இதயத்தை தொட்டவுடன் அதை ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. உதாரணமாக,

“ஆதியின் முதல் ஒளியையும்
அந்தத்தின் இறுதி ஒலியையும்
இணைத்து பிஞ்சு விரல்களால்
இசைக்குறிப்பொன்றை எழுதினாள்
கமநிதா ”

“மேலும் ஐயோ… எனும்
அவளின் குரலுக்கு ஏங்கியும்
வருந்தும் தோரணையில் அழகுக்கு
ஏங்கியும்
மீண்டும் மீண்டும் ஆட்டத்தில் பிழை
செய்தது காலம்”

இது போன்ற வரிகளின் மூலம் காலத்தை தன் வசமாக்கிக் கொள்கிறாள் கமநிதா.

அது போலவே அடுத்த கவிதை ஒன்று:

“ஓவியத்திற்கு ஏன் வண்ணம்
அடிக்கவில்லை’
என்று ஆரம்பிக்கிறது. அதில்,

“அவள் தீட்டாது விட்ட
வண்ணங்களோடு
வனமேகிய வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளிலிருந்து அருளப்பட்டன
உலகுக்கான ஆயிரம் வண்ணங்கள்”

என்று பெரிய தொரு வெளியில் கவிதையை ஓவியமாக வரைந்து வைத்திக்கிறார்.

கமநிதாவின் முத்தங்கள் என்ற கவிதையில் கமநிதாவை கவிஞர் எவ்விதம் பிரபஞ்சத்தின் பேரெழிலாக பெரும் சக்தியாக கொண்டாடுகிறார்.
என்பதை சில வரிகளின் மூலமாகவே உணர்த்தி விடுகிறார்.

“அன்பின் தாய்மை கனிந்து படர்ந்த
அவ்வுலகறிந்து
நிராகரிக்கப்பட்டும்
கைவிடப்பட்டவையுமான உயிர்கள்
தன் துயர்ப்புலம் பெயர்ந்து
ஏக்க பூமிக்கு பயணிக்கத்
தொடங்கின”

இதையே அதற்கு முந்தைய கவிதையில்,

”காற்றுக்குக் கொஞ்சம்
கடலுக்குக் கொஞ்சம்
வானுக்குக் கொஞ்சம்
பகிர்ந்த அன்பின் மீதியை
பசித்த பூமிக்கு பதியமிட்டாள்
கமநிதா ”
என்று முடிக்கிறார்.

பாரதி வேடமிட்டிருந்தால் கமநிதா என்ற கவிதையில்

”கட்புலனாகா மாசற்ற
காலத்தில் ஞாபக நீட்சீயாய்
இருத்தலின் மிச்சமாய்
பூமியின் நாவில் இன்னும்
இனித்துக் கொண்டிருக்கிறாள்
கமநிதா ”

என்று சிலாகித்திருக்கிறார்.
இவ்வாறு எங்கெங்கே நோக்கினும் இக்கவிதை தொகுப்பில் கமநிதாவின் துதியாகவே இருக்கிறது.

இந்த நோக்கில் கவிஞர் வெற்றி பெற்றிருந்தாலும், கமநிதாவை பிரபஞ்சத்தோடு இணைத்து அவர் விரும்பியது போல தன்னிகரற்ற ஒரு பெரும் ஆளுமையாக உருவாக்கத் தவறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இது இந்த அளவில் இருந்தாலும் இதில் உள்ள சில கவிதைகளின் உயர்ந்த ரசனையையும் நாம் மனதார பாராட்டாமல் இருக்க முடியாது.

“ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள்
கமநிதா
நேரையும் எதிரையும் இணைத்து
காற்றை தைத்துக் கொண்டிருந்தது
ஆட்டம்

ஆதியில் தொடங்கிய அவ்வாட்டம்
ஒரு நீள் வட்டப் பாதையைச் சுமைத்து
அதில் தாமே ஆடவும் செய்கிறது
ஊஞ்சல்“

ஒரு சிறுமி ஊஞ்சலாடும் அழகை இவ்வளவு அற்புதமாக எந்த கவிதையும் பேசியதாக ஞாபகமில்லை.

இப்படி ஆங்காங்கே கிடைக்கும் கவித்துவ ஆழத்தையும் அழகையும் நாம் ரசித்து கொண்டேயிருக்கலாம் .

“உன் கனிந்த நிழலுதிரும் சருகுகள்
பூக்களாகி விடுகின்றன

‘பிரபஞ்சம் யாவும்
பித்தென உனைச் சுழல
அப்படி என்னதான்
பேரன்பு செய்தாய் கமநிதா”

இதற்கு மேல் உருவகிக்க முடியாது என்று நாம் நினைக்கும் போதே அடுத்த உவமையும் உருவகமும் அருவியாய் வந்து கொட்டுகிறது .

“ஓவியம் முற்றாய்
நிறைவடைந்த போது
இறைமையின் கர்ப்பக் காலம் முடிந்து
பிரபஞ்சப் பேரோசையோடு
அது தன் பனிக்குடம் உடைத்தது”

என்று எழுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
தன் முக ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தாள் கமநிதா என்ற கவிதையில் மேற் கண்ட வரிகளை நான் கண்டு உணர்ந்து ஒரு கணம் சிலிர்த்து நின்றேன்.

பெரியார் வேடமிட்ருந்தாள் கமநிதா என்ற கவிதையில்

“சாதி ஒழிக என்றவள்
குழந்தைமைக்குரல் கனிந்த போது
தொண்ணுற்றி மூன்றின்
நடு நடுங்கியக் குரல் கிளர்ந்து
கிழக்கைக் கிழித்தது”

மேலும்

“விடிகாலை வாசலில்
புத்தாடை கோலமிட்டிருந்தாள்
கமநிதா
தன் மையத்தில்
அவளையே பூத்துக் கொண்ட
நிலத்திற்கு
அப்போதிருந்து தான் வாய்த்தது
தாய்மையின் சாயல் “

என்று அடுக்கடுக்காக அழகியலின் வெளிப்பாடுகள்.

எவ்வளவு அற்புதமான ரசனை இது என்பதை மேலே சொன்ன வரிகளில் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இன்னும் கொஞ்சம் தாண்டிப் போய்

“அழும் மேகங்களை கொஞ்சம்
அமைதிப்படுத்து கமநிதா”
என்கிறார்.

மற்றொரு கவிதையில்,

“பகல் என்பதும் இரவென்பதும்
வேறொன்றுமல்ல
இருளும் ஒளியுமாய்
இட வலமிக்கும்
உன் முந்தானைச் சலனம்”
என்று முடிக்கிறார்.

“காற்றுக்குப் பசிக்கும் போதெல்லாம்
புல்லாங்குழலுக்கு
இதழூட்டுகிறாள் கமநிதா”

மிகையாகச் சொன்னாலும் ரசிக்கக் கூடிய ஒரு தன்மை உள்ளே இருக்கிறது என்பதை ஒவ்வொரு வரியும் நமக்கு ஞாபகமூட்டிக் கொண்டேதானிருக்கிறது.

“உயரத்தில் தலைசாய்த்து
தன் காயங்களை
பூக்களாக்கியிருந்தவனின்
இதழ்களில்
இப்போதும் மலர்ந்து
கொண்டிருந்தன பூக்கள் “

என்று ஒரு கவிதை முடிகிறது. முடிகிற இடங்களிலெல்லாம் சில கவிதைகளை முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் கவிஞர்.

இவ்வாறு இந்த கவிதைத் தொகுதி நெடுக நாம் ஆங்காங்கே கவித்துவ தேவதைகளை தரிசித்துக் கொண்டேயிருக்கிறோம் .

இப்படியே சென்றால் இந்த தொகுப்பில் உள்ள அத்தனை கவிதைகளையும் நாம் இங்கே எடுத்துக் காட்ட வேண்டியதிருக்குமென்று நினைக்கிறேன்.

கமநிதா கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாள் என்ற கவிதையில்,

“பூ ஒன்று சொல்லாகி
அவளின் வாக்கியத்தில் உதிர்ந்த
கணம்
நட்சத்திரம் ஒன்று
பூவாகியிருந்தது“

என்று முடிக்கும் இடத்தில் ஒரு இனிய மாய எதார்த்தம் நடந்து முடிந்ததை நாம் எண்ணி எண்ணி பேருவகை கொள்ளலாம்.

கடைசியாக கவிஞர் தன் மொழி தோற்றுப் போகும் இடத்தில் கமநிதாவை நோக்கி
சரணாகதி அடைவது போல

“கிளை அவிழ்ந்து
நதி தவழ்ந்து
நீர்ச்சுழி மயங்கும்
சிறு இலை நான்.
கமநிதா உன்
கன்னக்குழி மீள்வதேது “

என்று கேட்கிறார். இறுதியாக இன்னும் ஒரு படி மேலே போய்,

”பூமி சிலிர்த்து பூக்கச் செய்த
உன் பொன்னடிகள் நோக்கத்தான்
நிலவிறங்கி வந்ததோடி கமநிதா” என்று முடிக்கிறார்.

நாம் எத்தனை விமர்சனங்ளை வைத்தாலும் இப்படி அபூர்வமாக இதயத்திற்கு நெருக்கத்தில் அன்பின் ஆழத்தில் பூக்கும் கவிதை வரிகளை நாம் புறந்தள்ளி விட்டு போய் விட முடியாது.

நண்பர் பாரதி மோகன் கவிதை வேறு கவிஞர் வேறு என்று வாழ்பவரல்ல. இரண்டும் ஒன்றாக இணைகின்ற புள்ளியாக அவர் எப்போதுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கவித்துவத்தின் உச்சமும் தத்துவத்தின் ஆழமும் சமூக பொருளாதார எதார்த்தத்தின் சாமானிய காட்சிகளும், நவீன வடிவமும் சிந்தனையும் கூடி இந்தக் கவிதை தொகுதியில் வாய்க்கப் பெற்றிருந்தால், இந்த தொகுப்பு இன்னும் பல படிகள் உயரச் சென்று மிகப் பெரிய முழுமை பெற்ற படைப்பாக மலர்ந்திருக்கும்.
ஆங்கிலத்தில் வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் இயற்றிய ’ லூசி கவிதைகள் ’ போல சிறப்புற்றிருக்கும்.

தமிழில் கவிஞர் மீரா இயற்றிய
”கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்” போல போற்றப்பட்டிருக்கும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“கமநிதா” கவிதைகள் தொகுப்பு
ஆசிரியர்:கோ . பாரதி மோகன்
வெளியீடு:
மௌவல் பதிப்பகம், 9787709687
விலை:₹.120
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 தங்கேஸ்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *