‘புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்’ என்ற உயரிய நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் புத்தகக் காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பாரதி புத்தகாலயம் கடந்த 15  ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான புத்தக்காட்சி பாரதி புத்தகாலயத்தில் (எண். 7, இளங்கோசாலை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் அருகில்) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை சனிக்கிழமையன்று (டிச.26) மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘குடியுரிமையும் குடியுரிமைச் சட்டமும்’ எனும் நூலை கே.பாலகிருஷ்ணன் வெளியிட திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் பெற்றுக் கொண்டார்.
இதன்பின்னர் விற்பனையை தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
வாசிப்பு இயக்கத்தை தமிழகத்தில் சக்திமிக்க இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிற பாரதி புத்தகாலயம், இந்தாண்டும் ‘புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம்’ என்ற நிகழ்வை நடத்துகிறது. கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் உழைப்புதான் இதர உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுகிறது. இந்த உழைப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை வலுப்படுத்தும் ஆயுதமாக புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களே உலகை புரிந்து கொள்ளவும், புதிய உலகை படைக்கவும் திறவுகோலாக புத்தகங்கள் உள்ளன.
மனிதரின் சொல் மணக்க வாசிப்பு அவசியம். தமிழச் சமூகத்தின் சொல்லாற்றல், சிந்தனையாற்றல், செயலாற்றலை வளப்படுத்த அரிய புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. தமிழ்ச்சமூகத்தின் குரலாக பாரதி புத்தகாலயம் விளங்குகிறது. அனைத்து துறைகளிலும் தடம் பதித்து சாதனை படைத்து வருகிறது.

Image

மதவெறி சக்திகளும், உலகமயக் கொள்கையும் நாட்டை ஆட்டிபடைக்கும் சூழலில் அதனை அம்பலப்படுத்தும் வகையில் புத்தக இயக்கமாக பாரதி புத்தகாலயம் செய்து வருகிறது. 2ஆயிரம் தலைப்புகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிப்பித்து, கருத்து ரீதியான பிரச்சாரத்தை செய்து வருகிறது. வலைதள எழுத்துருக்களை வடிவமைத்து தமிழுக்கு பாரதி புத்தகாலயம் சேவை செய்து வருகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் வளரும் சமூகத்திற்கு அறிவியல் தோற்றுவாயாக இருக்கும். புத்தகங்களோடு வாழ பழக வேண்டும். பல நண்பர்கள் வந்தாலும், புத்தகம் என்ற நண்பன்தான் கடைசி மூச்சுவரை நம்மோடு பயணிக்கும். உற்றதோழர்களை விட சிந்தனை வளத்தை அளிக்கக்கூடியவை புத்தகங்கள். புத்தகங்கள் சிறந்த எதிர்காலத்திற்கு வழிசெய்யக் கூடியவை. அனைத்து தமிழ் மக்களும் புத்தகத்தோடு புத்தாண்டை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Image

எம்.எஸ்.சுவாமிநாதன் ஒப்புக் கொள்வாரா?
இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், “மக்கள் இயக்கங்கள் அனைத்திற்கும் அதிமுக தடை விதித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது, எதிர்க்கருத்துகள் வரக்கூடாது என்பதற்காக தடை விதிக்கிறார்கள். வழக்கு போடுகிறார்கள். அதேபோன்று திமுகவின் கிராமசபை கூட்டத்திற்கும் தடை விதித்துள்ளார்கள். தடையெல்லாம் மக்கள் மத்தியில் நிற்காது. தடைகளையெல்லாம் மீறி அதிமுகவுக்கு எதிராக மக்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
“விவசாயத்தையும் விவசாயிகளையும் வஞ்சிக்கும் வகையில் சட்டத்தை போட்டுவிட்டு, எந்த திட்டம் கொண்டு வந்தாலும் பயனளிக்காது. எனவே, 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாயத்தை வளர்க்க கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். விளைபொருட்களுக்கு அடிமாட்டு விலை கிடைக்கும்போது, வாய்க்கரிசி போடுவதுபோல் திட்டங்களை அறிவிப்பதால் பயனில்லை.
எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை அரசு அமல்படுத்தவில்லை. அடக்கவிலையை கணக்கிடும்போது அடிப்படையான அம்சங்களை அரசு கைவிட்டுவிடுகிறார்கள். தனது பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்துகிறது என்று எம்.எஸ்.சாமிநாதன் ஒப்புக் கொள்வரா?” என்று கேள்வி எழுப்பினார்.
“யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று, நல்ல உடல் நிலையோடு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்ப வேண்டும்” என்றார்.
50சதவீத விலையில் புத்தகங்கள்
பாரதி புத்தகாலயத்தின் இயக்குநர் க.நாகராஜன் கூறுகையில், டிச.26 முதல் ஜனவரி 3 வரை கண்காட்சி செயல்படும். பாரதி புத்தகாலயத்தின் ரூ.25க்கு மேற்பட்ட அனைத்து வெளியீடுகளுக்கு 50 சதவீத சிறப்புக் கழிவு வழங்கப்படும் என்றார். இந்நிகழ்வின்போது பாரதி புத்தகாலய மேலாளர் சிராஜூதின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *