கிராமத்து பச்சை மனசுக்காரர் பாரதிபாலன். “என் கிராமம் ஒரு பச்சைக் குழந்தையைப் போல என் மனசை விட்டு இறங்க மறுக்கிறது. அதை எப்போதும் நான் சுமந்தபடியே இருக்கிறேன்’’ என்கிறார். தனது கிராமத்து மண்ணையும் மக்களையும் மட்டுமல்ல மரங்களையும்கூட கதைகளின் வழியே ஆவணப்படுத்தி வருகிறார். எழுத்தில் தனக்கென்று ஒரு தனி அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார். அந்த அணுகுமுறையானது அவரது அனுபவங்களின் வெளிப்பாடுகளாக உள்ளன. ஒத்தையடி பாதையிலே , உயிர்ச்ச்சுழி எனும் சிறுகதைத் தொகுதிகளும், ‘செவ்வந்தி’ நாவலும் இவரை சிறந்த எழுத்தாளராக அடையாளப்படுத்துகின்றன.

கிராமியச் சூழலை மையப்படுத்தியே பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறீர்கள். ஆனால், எந்த ஊரைப் பற்றிய கதை என்பதை எந்தக் கதையிலும் அறிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் பிறந்த கிராமம் எது?

என் கிராமம் தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள சீலையம்பட்டி. அங்கே, வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும் முல்லைப் பெரியாறு. எப்போதும் பச்சைப் பசேல் என்று இருக்கும் வயல்வெளி. நடுவில் சிறு அணைக்கட்டு. ஆற்றைக் கடக்கச் சிறு பாலம் (அது இப்போது உடைந்துவிட்டது). பாலம் கடந்தால் குச்சனூர். இடது பக்கம் மார்க்கயன்கோட்டை. வலது பக்கம் கூளையனூர். என் கிராமத்தின் இடது கையாக பூலானந்தபுரம் மேலப்பூலானந்தபுரம்; வலது கையாக குச்சனூர். இக்கிராமங்களின் முகம் எல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்கும். என் பால்யத்தில் என்னுள் நிறைந்த அந்தக் கிராமத்தின் முகம் இன்றும் என் மனசை விட்டு இறங்க மறுக்கிறது. ஒரு கைக்குழந்தையைப் போல் இன்னும் நான் அதைச் சுமந்து கொண்டேதான் இருக்கிறேன். ஒரு கிராமத்து வாழ்க்கை எவ்வளவு அழுத்தம் நிறைந்தது என்பதை வாழ்ந்துதான் அனுபவிக்க முடியும். எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம்; எல்லா இடத்திலும் வாழ முடியாது.

கிராமிய வாழ்க்கையில் கதை கேட்பதற்கான வாய்ப்பு நிறைய இருக்கும். உங்களுக்கு எப்படி?

ஊரில் காணாமல் போனவர்கள் ஒரு வருடமோ இரண்டு வருடமோ கழித்து திரும்புவார்கள். அவர்கள் இரவு நேரங்களில் வெளிச்சம் உள்ள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடிய விடிய தங்கள் அனுபவங்களைச் சொல்வார்கள்.

செத்துப் பிழைத்த கிழவிகள் மேலோக அனுபவங்களை பெண்கள் கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்து சொல்வதைக் கேட்டு வியந்திருக்கிறேன். வெளியூர் வயல் வரப்புகளுக்குப் போய்த் திரும்பியவர்களும், வெளியூர் சென்று திரும்பியவர்களும் தங்கள் அனுபவங்களைக் கடைகளில் உட்கார்ந்துகொண்டு சொல்வதையும், நண்பர்கள் சொல்லும் ஊர்க்கதைகளையும் கேட்டிருக்கிறேன். அவர்கள், ஒரு தேர்ந்த கதைக் கலைஞனைவிட அற்புதமாக கதைச் சொல்வார்கள். அந்த நுட்பம் அலாதியானது. இவையெல்லாம்தான் எனக்கு உரம். கிராமத்துப் படிப்பை முடித்துவிட்டு, மதுரை நகரத்தில் தியாகராசர் கல்லூரிக்கு பட்டப் படிப்பிற்காக சென்றேன். நகரத்தின் தோற்றம் வியப்பாகவும், இயக்கம் அந்நியமாகவும் காட்சி தந்தன. படிப்பில் நான் கெட்டி இல்லை. விளையாட்டு, நாடகம், பேச்சாற்றல், ஓவியம் என்று நான் எதிலும் ஈடுபடவில்லை. ஆனால், மனசை ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டே இருக்கும். வகுப்பறையில் அமர்ந்துகொண்டு பாடத்தைக் கவனிக்காமல், தெப்பக் குளத்தின் மைய மண்டபத்தினையே கவனித்துக் கொண்டிருப்பேன். மாலை வேளைகளில் அங்கு போய்விடுவேன். நாகலிங்கப் பூ பூத்துச் சிதறிக் கிடக்கும். அந்த வாசனையும், சிறு காற்றில் கிளையசைவும் மனதைக் கிளறிக்கொண்டே இருக்கும். அப்போது மனசில் இருந்து ஏதோ வெடித்துச் சிதறும். அதைக் கவிதையாக எழுதத் தொடங்கினேன்.

தாமரை, செம்மலர், கணையாழி, உண்மை போன்ற இதழ்களில் அந்தக் கவிதைகள் பிரசுரமாயின. அப்போதைய சூழலுக்கு அந்தக் கவிதை வடிவம் வசதியாக இருந்தாலும் பின்னாளில் அந்த வடிவம் போதவில்லை. அதனால் உரைநடைக்குத்தாவ வேண்டியதாயிற்று. அதற்கு தி.ஜானகிராமனும் ஒரு காரணம். ஓர் உண்மையைச் சொல்வதென்றால், நான் கல்லூரிக்குள் நுழைகின்ற வரையிலும் ஒரு சிறுகதையைக்கூட முழுமையாகப் படித்ததாக நினைவில்லை.

மதுரை தியாகராசர் கல்லூரியில் படிக்க நுழைந்தபோது ஒரு தனிமையை உணர்ந்தேன். அந்தச் சூழல் அப்படி இருந்தது. அப்போதுதான் விடுதியை ஒட்டியிருந்த ஒரு கடையில் தி.ஜானகி ராமனின் ‘மரப்பசு’ படிக்கக் கிடைத்தது. பிற்பாடு அவரின் மோகமுள், அம்மா வந்தாள். பின்னர் முழுமையும் படிக்கக் கிடைத்தது.

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் படித்தேன். அதன் பின்னர் வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன், மாலன், சுப்பிரமண்ய ராஜு என்று விரும்பிப் படித்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் ஓர் ஆண்டு என் கிராமத்தில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் விரிவான வாசிப்பும் வாழ்க்கையை நேசிக்கும் பக்குவமும் எனக்கு வாய்த்தது. 1986 இல் ‘விபத்து’ எனும் முதல் சிறுகதையை எழுதினேன். ‘செம்மலர்’ இதழில் வெளிவந்தது.

உங்களின் எல்லா கதைகளிலும் Positive Approach உள்ளது. அப்படியான சிந்தனை உருவாக்கம் எப்படி பெற்றீர்கள்?

Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover ...

எந்தப் படைப்பினையும் திட்டமிட்டு, அட்டவணைப்படுத்தி உருவாக்கவே முடியாது. ஒரு படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்தயாரிப்போடு செயல்பட்டால் நிச்சயம் படைப்பாகாது. என்ன இருக்கிறதோ அதுதான் வரும்.

உங்கள் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்களே?

உண்மை அதுதான். உள்ளதை உள்ளபடிதானே சொல்ல முடியும்! மனிதர்களை சற்று விபரமாகப் பார்க்கிறவர்களுக்கு இது புரியும். இதைத்தான் ‘உயிர்ச்சூழி’ என்ற சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் கூறியிருக்கிறேன். மனிதர்களை நான் நிறையப் படித்திருக்கிறேன். நிறைய வேடிக்கை பார்த்திருக்கிறேன். சற்று விபரமாகப் பார்த்தால் மனிதர்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் என்பது புரியும்.

ஒருவிதமான சென்டிமென்ட் பல கதைகளில் உயர்ந்து நிற்பது ஏன்?

பாரதிபாலன் சிறுகதைகள் : Dial for Books

எல்லோருக்கும் அடிமனதில் ஒரு வலி இருந்துகொண்டேதான் இருக்கிறது. வயிற்றுப் பிழைப்பிற்காகச் சொந்த மண்ணையும் மனிதர்களையும் பிரிவது என்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா? வாடகை வீட்டைக்கூட வலியில்லாமலா பிரிய முடிகிறது. தினமும் ஒரே தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு நாள் தெரு மாறி நடக்க நேரிட்டால் வெறுமையாகத்தானே இருக்கிறது. தூரம் என்ற தோற்றமும் தருகிறதே! நம்மோடு சேர்ந்த ஒன்றினை இழக்க நேரிடும்போது, இழந்தவற்றைவிட இழந்துவிட்டோமே என்ற மனவலி இருக்கிறதே அதுதான் கொடூரமானது. இதை எப்படி சென்டிமென்ட் என்று சொல்லமுடியும்?

சுயகௌரவம், தன்மானம் என்கிற விசயங்களுக்கு முக்கி யத்துவம் கொடுத்து, அவற்றை உயர்த்திப் பிடிக்கிறீர்களே?

ஒவ்வொருவரும் தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அல்லது பிறர் மதிக்கும்படி வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதுகூட இரண்டாம் பட்சம்தான். சுயகௌரவம், தன்மானம் என்பது மனித அடை யாளங்களாகக் காட்டப்படுகின்றன. மரபு வழியாகவே இது வந்திருக்கிறது. நம்முடைய மரபு சார்ந்த விசயங்களும், சம்பிர தாயங்களும் இதனையே அடிப்படையாகக் கொண்டிருக் கின்றன.

பல கதைகளில் மரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறீர்கள். ‘மரம்’ என்றொரு கதையையும் எழுதியிருக்கிறீர்கள். சாதாரணமாக, மரம் என்று வருகிற இடங்களிலெல்லாம் சற்று நின்று இளைப்பாறி, அந்த சுகத்தை அனுபவித்து செல்வது மாதிரியே இருக்கிறது. இது உங்களின் இயல்பான ஆவலா?

உயிர்ச்சுழி

மழைக்கும் வெயிலுக்கும் மட்டுமல்ல; மனசு கோணும்போதும் ஒதுங்குவதற்கு உகந்த இடம் மரம்தான்! மரத்திற்கும் மனிதர்களுக் கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது. ஒருவன் வாழ்நாளில் மரத்தோடு சம்பந்தப்படாமல் இருக்கவே முடியாது. சிறு வயது முதல் முதுமை வரை மரத்திற்கும் மனிதனுக்குமான உறவு வலுவானது. ஓர் எழுத்தாளன்தான் இதனை உணரமுடியும் என்றில்லை. எல்லோரும் உணர்ந்த சங்கதிதான். லேசாக கிளறிப் பாருங்கள். அல்லது கிளறி விடுங்கள். ஆயிரம் விசயங்கள் வரும். மரம் என்பது கற்பனை கதையல்ல, நிஜம்.

 ‘நான்+நீ’ கதையில் இளைய தலைமுறையின் சேர்ந்து வாழ்தல் எனும் திருமண வாழ்வை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறீர்கள். அதுபோன்று சமூகத்தில் உடைப்பை ஏற்படுத்திய வேறு பல நிகழ்வுகளை பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறதா?

நாம் இன்று சில விசயங்களை உடைக்கிறதாக நினைக்கிறோம். ஆனால் இதேபோன்று பல விசயங்கள் ஏற்கனவே உடைக்கப்பட்டுவிட்டன. ஆனால், அவை பொதுமைப்படுத்தப்படவோ, பரவ லாக்கப்படவோ இல்லை. காலத்தின் சூழல், தேவைக்கேற்ப சில விசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆண் – பெண் திருமண உறவில் திருமண பந்தங்கள் எல்லாம் முற்காலத்தில் எப்படி இருந்ததோ அதே நிலையை நோக்கித்தான் நாம் போகிறோம். இதில் நமக்கு வசதி இருக்கலாம். அதில் புதுமையோ உடைப்போ நிகழவில்லை. இப்படி சில விசயங்கள் இருக்கின்றன. இது குறித்தும் எழுதச் சூழல் அமையும்போது எழுதுவேன்.

‘மாறுதடம்’ கதையில் இடஒதுக்கீடு பற்றி தொடுகிறீர்கள். பல கதைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே வருகிறபோது அவர்களின் அவல நிலைகளையும் எண் ணங்களையும் பதிவு செய்கிறீர்கள். பெண்களை, முதிய வர்களை கரிசணையோடு அணுகுகிறீர்கள். சிவப்புச் சட்டைக்காரர்களை நியாயப்படுத்தி, பிறகு அவர்கள் மீதும் விமர்சனம் வைக்கிறீர்கள்… உங்கள் சமூக அரசியல் பார்வை எத்தகையது?

உடைந்த நிழல் | Buy Tamil & English Books Online ...

இடஒதுக்கீடு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மேன்மைப் படுத்திவிடுமா என்ன? கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வயல்களிலும் வரப்புகளிலும் கிடக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு என்ன செய்யப் போகிறது? சில பிரிவினர்களுக்கு ஆதரவாக இருக்கலாம். சாதாரண நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள் என்பதுதான் என் அபிப்ராயம். இது குறித்து விரிவாகப் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.

‘ஒத்தையடி பாதையிலே’, ‘உயிர்ச்சுழி’ ஆகிய இரண்டு கதைத் தொகுதிகளிலும் முப்பது கதைகள் உள்ளன. எல்லா கதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமானவையே. பத்திரிகைச் சூழல் உங்கள் எழுத்தைப் பாதிக்கவில் லையா? குமுதத்தில் வெளிவந்த கதைகள் சற்று அடர்த்தி குறைவாக இருப்பதுபோல் தெரிகின்றனவே?

பத்திரிகைகளை மனசில் வைத்து எழுதுவதில்லை. எழுதிய பின்னர் அதைப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பது வழக்கம். ‘குமுதம்’ கதையும் அப்படித்தான். ஒரு கதை வேண்டும் என்று கேட்டார்கள். என்னிடம் இருந்த கதையை அனுப்பி வைத்தேன். கேட்டு வாங்கும் கதைகளில் கை வைப்பதில்லை என்றொரு மரபை வைத்திருக் கிறார்கள். அதில் அடர்த்தி குறைவு என்று நீங்கள் நினைத்தால் அக்கதையின் தன்மையே அப்படித்தான்.

‘செவ்வந்தி’ நாவல் எழுதிய சூழல்?

Magazines in PDF Format: செவ்வந்தி - பாரதி ...

செவ்வந்தி நாவலில் என் கிராமத்தின் ஒரு தெருவில் உள்ள கடைசி வீட்டில் நிகழ்ந்தவற்றையே எழுதியுள்ளேன். ஒரு தெருவின் சுபாவம் எப்படியெல்லாம் மாறிக்கொண்டே போகிறது என்பதை காட்சிப்படுத்தி எழுதினேன். குறிப்பாக கிராமத்து இளைஞர்களின் நிலையையும் மன உணர்வுகளையும் அந்த நாவல் விவரிப்பதாக உள்ளது. ஒரு சாதாரண விவசாயியின் குடும்பம் அந்த நாவலில் பதிவு செய்யப்பட்டதாகக் கருதுகிறேன். கிராமத்தில் படித்த மகனுக்கும் படிக்காத அப்பாவுக்குமான உறவு நிலை எவ்வளவு அபாரமானது என்பதைப் பார்த்து அனுபவித்தவன் நான். படித்து வேலை தேடும் மகனைப் பற்றிய கனவும், அது கைகூடாமல் போகின்றபோது ஏற்படுகின்ற ஏமாற்றமும் அந்த ஏமாற்றத்தைச் சமாளிக்கப்படுகிற பாடும் அந்த நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த நாவலுக்கு கிடைத்த வரவேற்பு சந்தோசம் தருகிறது.

உங்கள் வாசகர்கள் பற்றி?

உண்மையைச் சொல்வதென்றால் ஒரு மேக மூட்டம் போல் தான் எனக்குத் தெரிகிறது. தெளிவாக என் வாசகர்கள் என்று யாரும் இருக்கிறார்களா? எனக்குத் தெளிவில்லை. ஆனால் என் படைப்புகளைப் படித்துவிட்டு என்னோடு பலரும் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

உங்கள் ‘மாஸ்டர் பீஸ்’ எது?

நான் எழுதிய கதைகளிலே எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்த கதை ‘பச்சை மனசு’. சுபமங்களாவில் வந்தது; இலக்கியச் சிந்தனை பரிசையும் பெற்றது. ‘ஈரம்’ என்ற இன்னொரு கதை. இது தினமணிச் சுடரில் வெளிவந்தது.

சந்திப்பு : சூரியசந்திரன்

இன்தாம் இணையம் 2002

One thought on “என் கிராமத்தை ஒரு கைக்குழந்தையைப் போல சுமந்து கொண்டிருக்கிறேன் : பாரதிபாலன்”
  1. மழைக்கும் வெயிலுக்கும் மட்டுமல்ல; மனசு கோணும்போதும் ஒதுங்குவதற்கு உகந்த இடம் மரம்தான்! #

    பாரதிபாலன் அவர்களின் படைப்புகள் குறித்து ஒரு பெரிய புரிதலை உருவாக்கிய நேர்காணல். நகரத்திற்கு வந்த பின்னும் நினைவுகளின் ஓர்மை அடுக்குகளில் வியாபித்திருக்கும் கிராமத்தை அவரின் பதில்களில் உணரமுடிகிறது .சிறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *