சாணி மெழுகிய கூடைக்குள்
வெண்டைப் பிஞ்சுகள் எட்டிப் பார்த்தன.
மூக்கு நீண்ட கிளிகளாக சிலவும்
மூக்குடைந்த ஆந்தையாக பலவும்
ஒன்றையொன்று பார்த்தபடி
சாலையின் வெளிக்கு வந்தன.
அவிழ்ந்த முடியை அரக்கிக் கட்டி
பொச பொச மழைக்கு
கணுக்காலில் சேர்ந்து இருந்த
சேற்றுக்குச் செருப்பை தந்திருந்தாள்.
விலை போகாத வெண்டைகளை
விலைக்கு வாங்கி விற்க
விதியத்த வாழ்விற்கு உள்ளே
மதி சமைத்துச் சாப்பிடுகிறாள்.
ஏத்து கூலி இறக்கு கூலியை
அவள் உடல் கேட்டது இல்லை.
விடிந்த காலை என்றுமே
அவளுக்கு விடிந்ததே இல்லை.
வெண்டி! வெண்டி! என்றபடி
குரலில் இருந்த ஒட்டடையை
சற்றே நீக்கியபடி கத்தினாள்.
கூடை இறக்க கை தராத அம்மா
ஒருத்தி அவளை நிறுத்தினாள்.
வெண்டிகள் அம்மா மடி இறங்கா
குழந்தைகள் போல் முழித்தன.
அஞ்சு ரூவாய்க்கு வருமா? என்றதும்
அஞ்சித் தான் போயின வெண்டிகள்.
யம்மா! பார்த்து குடுமானு
தொண்டையி சிக்கி
வார்த்தைகள் கெஞ்சி
குழைந்து வந்தன.
வெண்டியின் குறுக்கை ஒடித்தபடி
பேரம் பேசி முடித்திருந்தாள்.
ஒடித்த விரல்களை சபித்த
வெண்டிகள் வலியால் துடித்தன.
அஞ்சு ரூவாய்க்கு
சல்லிசா கெடச்ச
வெண்டிகள் இடம் மாறின.
அஞ்சு ரூவா நாலு ரூவாயாகி
பாதி விற்காத வெண்டிகள்
ஆத்துக்குள் தள்ளபட்டு
கொலை செய்யபட்டிருந்தன.
காலி கூடை மூச்சுவிட
அடைத்த நெஞ்சு மட்டும்
விம்மி அழுவதற்கு கண்களுக்கு
உத்தரவு போட்டன.
எழுதியவர்
இரா.கலையரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை.கவிதையா !கதையா என்ற முடிவுக்கு வருமுன் படித்து முடித்துவிட்டேன்.வார்த்தை ஜாலங்களில் மயக்கமுற்றது மனம் .பாரமுமாகியது கண்ணெதிரே அபலை.