பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்
வர்க்கப் போரின் வரலாற்றுப் பதிவு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில நிர்வாகி இரா. ஜோதியின் “பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்” எனும் நூல் இந்திய விவசாயிகளின் மகத்தான தில்லிப் போராட்டத்தை ஆவணப் படுத்தியுள்ள வரலாற்றுப் பெட்டகமாக வந்துள்ளது சிறப்பு. இந்நூலை விவசாயிகளின் வீரம் மிக்க போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு சமர்ப்பித்துள்ளது கூடுதல் சிறப்பு.
இந்நூலில் 21 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான அத்தியாயங்களில் பொருத்தமான கவிதைகளையும் தலைவர்களின் மேற்கோள்களையும் அழுத்தத்துடன் குறிப்பிட்டிருப்பது நூலை செழுமைப்படுத்தியுள்ளது.
துவக்கத்திலேயே பாலபாரதியின் கவிதை மூலம் மாண்புமிகு விவசாயிகளை அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்நூலை வீரா பதிப்பகம் சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. சிரீ ராசாவின் கைவண்ணத்தில் நூலின் முன், பின் அட்டைகள் பளிச்சிடுகின்றன.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் துவங்கி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி விவசாயிகள் போராட்ட அனுபவங்கள் குறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் 12 பேர் பகிர்ந்துகொண்ட ஒளிவிளக்கு என்னும் நூல் வெளியானது. அதற்குப் பிறகு வெளியாகியுள்ள “பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்” என்னும் இரா.ஜோதி அவர்களின் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அகில இந்திய விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் பெ. சண்முகம் “ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை- தலைமுறைகளைத் தாண்டி மனித சமூகத்திற்குள் தொடர்ந்து கடத்திச் செல்லும் அதிசயம்” என விவசாயிகள் போராட்டத்தை வர்ணித்தார். அந்த வர்ணிப்பு உண்மைதான் என்பதை இந்நூலில் காட்சிப்படுத்தியுள்ளார் இரா. ஜோதி. அதற்கேற்ப அற்புதமான அணிந்துரையையும் இந்நூலுக்கு பெ. சண்முகம் அவர்கள் வழங்கியுள்ளது பொருத்தமானதே.
அகில இந்திய விவசாயிகள் சங்க தேசிய நிதிச் செயலாளர் கிருஷ்ணபிரசாத், “எதேச்சாதிகாரத்துக்கு ஏற்பட்ட மரண அடி” என ஒளிவிளக்கு நூலில் குறிப்பிட்டுள்ளது சாலப் பொருத்தமானதே. போராட்டத் துவக்க காலத்தில் ஒன்றிய அரசு, வேளாண் திருத்தச் சட்டங்களில் ஒரு திருத்தத்தைக் கூட செய்ய மாட்டோம் என அடம் பிடித்தது. ஆனால் அதே அரசுதான் இறுதியில் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது என்பதை இந்நூலில் விவரித்து நிரூபித்துள்ளார் நூலாசிரியர்.
மகத்தான விவசாயிகள் போராட்டம் துவங்கி வளர்ந்து வீச்சாக நடைபெற்று வெற்றி கண்ட வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை இந்நூலில் விவரித்துள்ளார். சம்யுக்த கிசான் மோர்ச்சா உருவான வரலாறையும் அதே நேரத்தில் அவ்வமைப்பின் பலமே அகில இந்திய விவசாயிகள் சங்கம் என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். 13 மாத காலப்போராட்டத்தில் வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறுதல்,. விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை, மின்சார சட்டம் ரத்து, விவசாயிகளின் விவசாய எச்சங்களை எரிக்க சுற்றுச்சூழல் விலக்கு என கோரிக்கைகளை இறுதிப்படுத்தி நடைபெற்ற போராட்டங்களினூடே ஒன்றிய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதை விளக்குகிறது இந்நூல்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் இனி அரசுடன் பேசுவதில்லை என எஸ்.கே.எம். எடுத்த முடிவு சரியானதே என்பதும் தலைவர்களின் மௌனம் அரசின் மீதான அழுத்தம் ஏற்படுத்தியதும் அதன் விளைவாக ஒன்றிய அரசு அடி பணிந்ததும் வரலாறானது எனின் மிகையன்று.
அரசு எந்திரத்தின் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீச்சியடிப்பு, பொய் வழக்குகள், தடியடி, அவதூறுகள், கடும் குளிர், வெயில், கொட்டும் மழை, கோவிட் பெருந்தொற்று, எல்லாவற்றுக்கும் மேலாக அம்பானி அதானிக்களிடம் விவசாயத்தை வெள்ளித்தட்டில் கொடுப்பது என இவற்றையெல்லாம் எதிர்த்துத் தான் விவசாயிகள் போராடினர். இத்தகைய பதிவுகள் அனைத்தும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி.
இத்தகைய மகத்தான விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாய இயக்கங்கள் குறித்தும் தொழிற்சங்கங்களின் ஆதரவு இயக்கங்கள் குறித்தும் தனி அத்தியாயத்தின் மூலம் இந்நூலில் காட்சிப்படுத்தியூள்ளது நன்று.
இந்தியா சந்தித்திராத விவசாயிகள் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்த இந்திய ஊடகங்களின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிடுகிறார் நூலாசிரியர். ஊடகங்கள் அரசின் அடி வருடிகளாகி பொய்ச் செய்திகளைப் பரப்பியதையும் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர்.
இந்தப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே ‘லங்கார் கலாச்சாரத்தை நம்மால் உணர முடிந்துள்ளது. போராட்டக்காலத்தில் எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை தங்கு தடையின்றி வழங்கிய அற்புதமான அனுபவமே ‘லங்கார் கலாச்சாரம்’ இதுவரை பார்த்திராத பிரம்மாண்டமான விவசாயிகள் பேரணியை 27.09.2021 பாரத் பந்த் அன்று இந்தியா கண்டதைப் பதிவு செய்கிறார் நூலாசிரியர்.
மகத்தான விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஏராளமான விருதாளர்கள் அரசின் விருதுகளைப் புறக்கணித்துத் திருப்பித் தந்தது அரசுக்கு ஏற்பட்ட அவமானம். இதையெல்லாம் இந்நூலில் பட்டியலிட்டுள்ளார் இரா. ஜோதி.
தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் அவற்றைக் காலில் போட்டு மிதித்து விவசாயிகளை வஞ்சித்து கொடுமைகள் புரிந்தது. விவசாயிகளை பயங்கரவாதிகள், தேச துரோகிகள், காலிஸ்தான்கள், பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள், சீன ஏஜெண்டுகள், குண்டர்கள், நகர்ப்புற நக்சல்கள் என ஆளும் வர்க்கம் முத்திரை குத்தியதைப் பட்டியலிட்டு இவற்றுக்கு மத்தியில் விவசாயிகள் இயக்கம் அனைத்துத் தடைகளையும், அனைத்து அவதூறுகளையும் தகர்த்து யுத்தங்களை வென்றதை நிறுவுகிறார் இரா. ஜோதி.
இதுவரை கண்டிராத சர்வதேச ஒற்றுமை உலக தொழிற்சங்க அமைப்பு, சர்வதேச தொழிற்சங்க அமைப்பு, பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம், அம்பேத்கர் ஸ்டடி சர்க்கிள், முற்போக்கு சர்வதேச அமைப்பு, வர்ஜீனியா முற்போக்கு அமைப்பு மற்றும் சீக்கியர்களின் பல்வேறு அமைப்புகள் என பரந்துபட்ட ஆதரவு பெருகியதையும், பல்வேறு நாடுகளின் இந்தியத் தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையும், டிராக்டர் பேரணி நடைபெற்றதையும், பிரிட்டன் பாராளுமன்றத்தில் இப்போராட்டம் குறித்து விவாதித்தையம், கனடா நாடு போராட்ட ஆதரவு அறிக்கை வெளியிட்டதையும் குறிப்பிட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.
5000 தலித் பெண்கள் குழுவும் 25 மாவட்டங்களிலிருந்து மண்ணைச் சேகரித்துக் கொண்டு உணர்வுப் பூர்வமாக திரண்டதைக் குறிப்பிட்டு மெய்சிலிர்க்க வைக்கிறார்.
களத்தில் போராடும் விவசாயிகளுள் பெண் விவசாயியைப் பார்த்து ஊடகவியலாளர் ” ஏனிந்தப் போராட்டம்? விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதில் தோல்வி கண்ட நிலையில் தனியார் கொள்முதல் நல்லதுதானே? எனக் கேட்கிறார். அதற்குப் பெண் விவசாயி,
” மகனே, எங்களுக்குத் தனியார்மய அனுபவம் உள்ளது. அம்பானி ஜியோவுடன் சந்தையில் நுழைந்தபோது அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் அனைவரும் ஜியோவிற்கு மாறினர். ஓர் ஆண்டுக்குப் பின் பெரும்பாலான கைபேசி நிறுவனங்களைச் சந்தையிலிருந்து துடைத்தெறிந்தபின் ஜியோ பெருந்தொகையை வாடிக்கையாளர்களிடம் இன்றளவும் வசூலித்து வருகிறது. விவசாயமும் அப்படித்தான் ஆகும். கைபேசி இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; உணவு இல்லாமல் வாழவே முடியாது.” என்றதும் வாயடைத்துப் போனார் ஊடகவியலாளர். இந்நூலைப் படிக்கும்போது இது நினைவுக்கு வருகிறது.
2021ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்தியக் குடியரசை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொண்டாடினார்கள். தேசியக் கொடியுடன் செங்கோட்டையை நோக்கி நடைபெற்ற டிராக்டர் பேரணியைச் சீர்குலைவு செய்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தது. அக்களத்தில் சில தவறுகளை ஆளும் வர்க்கமே தமது ஆட்கள் மூலம் செய்து அவற்றை விவசாயிகள் மீது போட்டது. அதில் ஒன்றுதான் தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு சீக்கிய மத சம்பந்தமான கொடியை ஏற்றியது. அனைத்து நடவடிக்கைகளையும் எஸ்.கே.எம். முறியடித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகள் மட்டுமில்லாமல் தொழிலாளர்களும் அங்கு முழக்கமிட்டு வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றியதைக் காட்சிப்படுத்தியது பாராட்டத்தக்கது.
பெண்கள் பங்குபெறாத போராட்டம் எதுவும் வெற்றி பெற்றதாக வரலாறில்லை. இப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை இந்நூலில் அழகாக விவரிக்கிறார் இரா. ஜோதி. சிறந்த தொழிற்சங்கத் தலைவருக்கு இது கைவந்த கலை தானே.
“மோர்ச்சா எங்கு நிற்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் இருப்போம். தங்குவதை நீட்டிப்போம்” என்று கூறியது விவசாயிகளின் ஒருமைப்பாட்டையும் உறுதியையும் உணர்த்துகிறது. இந்த வீரம்மிக்க வீரியம் மிக்க போராட்டத்தால் தான் வெற்றி கிட்டியது. போராட்டத்துக்குப்பின் விளைவுகளான நலிவான பொருளாதார நிலை, போராட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் செலவானது, மிகப்பெரிய அளவில் டீசல் செலவானது, பல டிராக்டர்கள் பழுதுபார்க்க முடியாத அளவிற்கு உபயோகமற்றுப் போனது என கசப்பான அனுபவங்கள் இருந்தபோதும் மோடி அரசை உழைக்கம் வர்க்கத்துக்கு எதிரான அரசென மதிப்பீடு செய்ததில் விவசாயிகள் வெற்றி கண்டு தெளிவு பெற்றனர்.
போராட்டக் காலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் இசைக்குழுவினர் தங்களது நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு உத்வேகமூட்டியதைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். போராட்டக் காலத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனைகள், பள்ளிகள், நூலகங்கள் ஆகியவை முன்மாதிரியான கிராமங்களின் தோற்றத்தை அளித்தன. மேலும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த நிதியுதவி, அனைவரையும் உள்ளடக்கிய போராட்டம், தன்னார்வலர்களின் நேர்மை மற்றும் முயற்சிகள், இளைஞர்களின் சுய உந்துதல், வணிகம் உள்ளிட்ட சொந்தப் பணிகளை விட்டுவிட்டு போராட்டங்களில் பங்கேற்றது, விவசாயிகளுக்கு அத்தியாவசியப் பண்டங்களை வழங்கியது போன்ற சிறப்பம்சங்களை இந்நூலில் காணலாம். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளின் கால்களை மசாஜ் செய்வது, காலணிகளை சரிசெய்து தருவது உள்ளிட்ட உணர்வுமயமான பணிகளையும் சேவையாக ஏற்றுக் கொண்டு செய்ததைக் குறிப்பிட்டு நெகிழச் செய்கிறார் நூலாசிரியர்.
மனிதகுலம் அழியாமல் பாதுகாக்கப்பட உணவு இன்றியமையாதது. அத்தகைய உணவைப் படைக்கும் விவசாயிகளின் மகத்தான போராட்டங்கள் மூலமும் அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் விரோத பா.ஜ.க. அரசை வீழ்த்த 2024ல் நடைபெற்ற 18 வது மக்களவைத் தேர்தலில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆற்றிய மகத்தான பணி பாராட்டத்தக்கது. அவ்வாறு பணியாற்றிய நாடாளுமன்றத் தொகுதிகளில் அப்பணிகள் மூலம் பா.ஜ.க அணி வீழ்த்தப்பட்டதையும் இந்நூலில் நூலாசிரியர் விவரித்துள்ளது சிறப்பு.
ஒட்டுமொத்த நூலையும் வாசித்து முடிக்கும்போது மிகப்பெரிய நம்பிக்கை நிழலாடுகிறது. எண்ணிப்பார்த்திராத விவசாயிகள் தொழிலாளிகள் வர்க்க ஒற்றுமை, ஒன்றுபட்ட நெடிய போராட்டம், ஈட்டிய வெற்றி போன்றவை இந்தியாவிலும் சமூக மாற்றம் சாத்தியமே என்னும் நம்பிக்கை நங்கூரமிடுகிறது. அதன் முக்கியமான மைல்கல்லாக தில்லி விவசாயிகள் போராட்டம் வீரவரலாறு படைத்துள்ளது எனின் மிகையன்று. எனவேதான் நூலாசிரியர் இந்நூலுக்கு “பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்” எனும் தலைப்பை வைத்துள்ளார். அது எவ்வளவு அர்த்த அடர்த்தி மிக்கது என்பது இந்நூலை முழுமையாகப் படித்தாலே புரியும். 208 பக்கங்கள் கொண்ட இந்நூலை உருவாக்க நூலாசிரியர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நூலாசிரியர் குளிர்பதன அறையில் அமர்ந்து தரவுகளைச் சேகரித்து எழுதுபவர் அல்ல. மாறாக களத்தில் கண்டு தொழிற்சங்க அனுபவங்களோடு நிகழ்கால அரசியலுடன் பயணிப்பவருமாக இருக்கும் நிலையில் இந்நூலைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார் எனின் மிகையன்று.
இந்நூல் விவசாயிகளை மதிக்கும் மாந்தர் ஒவ்வொருவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் இருக்க வேண்டிய நூல்.
நூலின் விவரம்:
நூல்: பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம்
ஆசிரியர்: இரா.ஜோதி
பக்கங்கள்: 208
விலை: ₹.240
வீரா பதிப்பகம்
சிலப்பதிகார வீதி
முத்தமிழ் நகர்
மருத்துவக் கல்லூரி சாலை
தஞ்சாவூர் 613 007.
8903631454
பூமிப்பந்து சந்தித்திராத போராட்டம் நூல் அறிமுகம் எழுதியவர்:
..பெரணமல்லூர் சேகரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.