நூல் அறிமுகம்: பூமியின் வடிவத்தை எவ்வாறு கண்டறிந்தோம்? – தேனி சுந்தர் 

  அறிவியலில், ஆய்வுகளில் வெற்றி, தோல்வி என்பதை விட அதற்கான முயற்சிகளும் தேடல்களும் முக்கியமானவை.. என்பதையும் குழந்தைகள் மனதில் ஆழமாக விதைக்கும் வகையில் இந்த நாடகத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன..  

கடலில் இருவர் மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஒருவர் மாமன், மற்றொருவர் மருமகன். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது சூரியன் மறைவதைப் பார்க்கும் மருமகனுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. காலையில் மலை முகட்டில் உதிக்கும் சூரியன் மாலையில் எங்கே போகிறது? கடலுக்குள் போகிறதா? எப்படி மறுபடி மறுநாள் காலையில் கிழக்கே மலைமுகட்டில் உதிக்கிறது. அதற்கு மாமன் சொல்கிறார்.. சூரியன் மறையும் இடத்தில் ஒரு படகு இருக்கும். அது சூரியனை ஏற்றிக் கொண்டு சென்று மறுநாள் காலைக்குள் மலைமுகடு இருக்கும் பக்கத்தில் இறக்கி விட்டுவிடும். தினமும் இதே போல் தான் நடக்கிறது என்கிறார்.. மருமகன் படகு எப்படி இவ்வளவு பெரிய சூரியனைச் சுமந்து செல்ல முடியும்? சூரியனின் வெப்பத்தில் படகு எரிந்து போகாதா? என்றெல்லாம் கேட்கிறான்.. ஏய், உனக்கு மீன் வேணுமா வேணாமான்னு கேட்கிறார்..

இப்படி ஒரு காட்சியோடு தொடங்குகிறது நாடகம். அடுத்தடுத்து நான்கு காட்சிகளாக பூமி உருண்டை என்கிற சிந்தனை எப்படி உருவானது, விஞ்ஞானிகளும் மற்றவர்களும் எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினர் என்பதை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்கள் மூலமாக குழந்தைகளுக்கு எளிதில் விளங்கச் செய்யும் வகையில் நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது காட்சியில், கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் 2600களில் வலம் வந்த அனாக்சிமாண்டர் என்கிற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பற்றியது. அவர் தான் இந்தப் பூமி உருண்டை வடிவமானது, சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் சுற்றுகின்றன.. குடை ராட்டினத்தில் அனைத்தும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. நடுப்புள்ளிக்கு தூரமாக இருப்பவை பெரியவட்டங்களிலும் நடுப்புள்ளிக்கு அருகில் இருப்பவை சிறிய வட்டங்களிலும் சுற்றுகின்றன. நடுவில் இருக்கும் முனை நகர்வதில்லை. அதுபோல தான் துருவ நட்சத்திரம். மேலும் நிலவும் உருண்டை வடிவமானது. அதற்கென்று சுய ஒளி கிடையாது. அதன் மேல் சூரிய ஒளி படுகின்ற திசை மற்றும் அளவிற்கேற்றவாறு அது நமக்குத் தெரிகிறது.. அதன் விளைவுகள் தான் பிறை, முழுநிலவு மற்றும் அமாவாசை போன்றவை என்கிற கருத்தை முன்வைக்கிறார்.

GEOVIJAY- PROF VIJAY S BLOG FOR YOU: 2011

மூன்றாவது காட்சியில் அதே கிரேக்கத்தைச் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானி எரடோஸ்தனிஸ் வருகிறார். அவர் பூமி உருண்டை என்பதற்கு ஒரு பரிசோதனையை முன்வைக்கிறார். தன் பணியாளர் ஒருவரிடம், அலெக்சாண்டிரியாவிலிருந்து ஐநூறு மைல் தொலைவிலிருக்கும் சியேன் நகரில் ஒரு ஒரு நீண்ட, குச்சியை நட்டுவைக்கச் சொல்கிறார். சரியாக 12 மணிக்கு அலெக்சாண்டியாவிலும் சியேன் நகரிலும் நடப்பட்டுள்ள குச்சிகளின் நிழலை அளவிட்டு, நிழல் வேறுபாட்டின் மூலம் பூமி தட்டையாக இருந்தால் நிழல் வேறுபாடு இருக்காது. உருண்டையாக இருந்தால் நிழல் விழும் அளவில் நிச்சயம் வேறுபாடு இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் போதிய விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே இந்த நிழல் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு பூமியின் விட்டம் 8000 மைல்கள் என்று கணித்திருந்தார். நவீன கண்டுபிடிப்புகள் 7900 மைல்கள் என்று அதை உறுதிப்படுத்தியுள்ளது உரையாடல்கள் மூலம் விளக்கப்படுகிறது.

நான்காவது காட்சியில் ஸ்பெயின் நாட்டின் கிறிஸ்டோபர் கொலம்பஸ் வருகிறார். இந்தியாவுடன் வாணிகத் தொடர்பை வலுப்படுத்த வழிகாண வேண்டிய நிர்பந்தத்தில் அந்த அரசு இருக்கிறது. அது தொடர்பாக கொலம்பஸிடம் பேச அந்நாட்டின் அமைச்சர்  வீட்டிற்கு வருகிறார். அவர் தன் டோப்பாவைக் கழற்றி மேசை மீது வைக்க, அதைத் தனக்கு விளையாட வேண்டும் என்று தூக்கிக் கொண்டு கொலம்பசின் மகன் டீக்கோ ஓடுகிறான். அமைச்சர் அவனை விரட்டுகிறார். சுற்றிச்சுற்றி ஓடிய அமைச்சர், திடீரென ஒரு யோசனை தோன்ற எதிர்த்திசையில் ஓடி அவனைப்பிடித்து தன் டோப்பாவை மீட்கிறார். இதனைக் கண்ட கொலம்பஸும் இந்தியாவிற்கு வழிகண்டுபிடித்து விட்டேன் என்று குதூகலிக்கிறார். அதையே சென்று அரண்மனையிலும் விளக்குகிறார். மேற்கு திசையில் நாம் பயணம் செய்து இந்தியாவை எளிதில் அடையலாம். உலகம் உருண்டை. எனவே தட்டையான நிலப்பரப்பில் தூரமாக இருக்கும்பொருள் கூட உருண்டையான பரப்பில் அருகில், எளிதில் எட்டிவிடும் என விளக்குகிறார். அரண்மனையில் ஒருவரும் அதை ஏற்கவில்லை. மேற்குத் திசையின் கடைசி எல்லைக்குச் சென்றால் அங்கிருக்கும் வெற்றிடத்தில் விழுந்து இறந்துவிடுவோம்.. இது இந்தியாவிற்கான பயணம் அல்ல. இறப்பை நோக்கிய பயணம் என்கிறார்கள்.. ஆனால் கொலம்பஸ் தன் முடிவில் உறுதியாக இருந்து செல்வதற்கு அனுமதி மட்டும் வேண்டுகிறார். பின் அரசவை அனுமதித்து, கப்பல்களை அளித்து உதவியும் செய்கிறது. கி.பி.1492 ஆகஸ்டில் கிளம்பிய கொலம்பஸ் அதே ஆண்டு செப்டம்பரில் புதியதொரு நிலப்பரப்பைக் கண்டறிகிறார். இந்தியா என்று நினைக்கின்றனர். ஆனால் அது மேற்கிந்தியத் தீவுகள்.. அவரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கடற்பயணங்களின் மூலம் அமெரிக்கா கண்டுபிடிக்கப்படுகிறது. உலகம் உருண்டை என்ற நம்பிக்கையோடு கொலம்பசின் துணிச்சலான பயணம் அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தியது என்ற வகையில் குறிப்பிடத்தக்கவராகிறார். ஆனாலும் அவரது நம்பிக்கை நிரூபணமாகவில்லை.

Christopher Columbus Reaches the New World - HISTORY

ஐந்தாவது காட்சியில் அதே ஸ்பெயினில் இருந்து 1519ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐந்து கப்பல்களுடனும் 270 நபர்களுடனும் தன் கடற்பயணத்தைத் தொடங்கிய மெகல்லன் வருகிறார். இவரும் அதே வணிக நோக்கத்திற்காகவே வழிதேடிப் புறப்படுகிறார். பயணத்தில் சில பிரச்சனைகள், நம்பிக்கை இழப்புகள், நம்பிக்கை மோசடிகள் எல்லாம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் உடன்வந்த மாலுமிகள் இந்தியா என்கிற ஒரு நாடே கிடையாது. அது பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளைத் தூங்கவைக்கச் சொல்கிற மாயாஜாலக் கதைகளில் ஒன்று என்று விரக்தியடைகின்றனர். அவர்களுக்கு விளக்கி, சமாதானப்படுத்தி பயணத்தைத் தொடர்கிறார் மெகல்லன்.. இடையிடையே சில நாடுகளில் சில வாரங்கள், சில மாதங்கள் எனத் தங்கித் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு தொடர்ந்த பயணம் கடைசியாக பிலிப்பைன்ஸ் தீவுகளை அடைகிறது. அங்கு பழங்குடியினரிடையே நடந்த மோதலில் மெகல்லன் பலியாகவே, இந்தியாவை நோக்கிய பயணத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்புகின்றனர். மூன்றாண்டுகள் கழித்து நாடு திரும்பியபோது எஞ்சியிருந்தவர்கள் வெறும் 18 பேர் மட்டுமே.. இந்தப் பயணமும் வெற்றியடையவில்லை என்றாலும் உலகம் உருண்டை என்கிற உண்மையை உறுதிப்படுத்தும் நம்பிக்கையை ஏற்படுத்தியது..

பூமியின் வடிவத்தை எவ்வாறு ...

ஆனாலும் அதை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நாம் விண்வெளிக்காலம் வரை காத்திருக்கதான் வேண்டியிருந்தது. நீண்ட மனித குல வரலாற்றில் தொய்வின்றித் தொடர்ந்த பல முயற்சிகளாலும் ஆய்வுகளாலும் தான் இன்றைய வளர்ச்சிகளை நாம் எட்டியிருக்கின்றோம் என்பதையும் அறிவியலில், ஆய்வுகளில் வெற்றி, தோல்வி என்பதை விட அதற்கான முயற்சிகளும் தேடல்களும் முக்கியமானவை என்பதையும் குழந்தைகள் மனதில் ஆழமாக விதைக்கும் வகையில் இந்த நாடகத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன..

தான் வாழ்ந்த காலத்தின் மிகப்பெரிய விஞ்ஞானக் கதை சொல்லியாக இருந்த ஐசக் அஸிமோவ் எழுதிய How we found that the Earth is round என்கிற ஆங்கில நூலைத்தழுவி, அதனை ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கேற்ற வகையில் நாடகமாக உருவாக்கியவர் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் வி.சீனிவாச சக்கரவர்த்தி ஆவார். அதனை கிரனூர் ஜாகிர் ராஜா மற்றும் தீபா ஆகியோர் தமிழாக்கம் செய்துள்ளனர். இந்நூல் யுரேகா புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது..

அனைவருக்கும் அறிமுகப்படுத்துவோம்..

–    தேனி சுந்தர்