பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலுங்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலுங்கூட அவை நாகரீகம், மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர்…

பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்துக்கள், செயல்பாடுகள் போன்றவை குறித்து சமீபகாலத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரியாரைக் குறித்து அதிகம் எழுதாத வார இதழ்கள் கூட அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை வெளியிட்டுள்ளன. இந்திய அரசியல் சமூக வானில் ‘சமூக நீதி’ என்ற அம்சம் மேலோங்கியிருப்பதன் பின்னணியில் காணும் பொழுது இது இயற்கையானதே.

பெரியாரைக் குறித்த விவாதங்களில் எதிரும் புதிருமான கருத்தோட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆய்வாளர்கள் சிலர், பெரியாருடைய சிந்தனை மற்றும் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கேள்விக்குரியதாக்குகின்றனர். மற்றும் பலர், இதை ஏற்கவில்லை. பெரியாரின் செயல்பாடுகள் நியாயமானதே, காலத்திற்கு ஏற்புடையதே என்று வலியுறுத்துகின்றனர்.

இந்தச் சூழலில் இந்நூல் வெளியாகின்றது. எவறொருவருடைய கருத்தும் அவர் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் காணப்படுதல் இன்றியமையாதது. அவ்வாறு செய்யும்பொழுதுதான் அவருடைய கருத்தின் பரிணாம வளர்ச்சியைக் காணமுடியும். அன்றைய சமூக அரசியல் நிலைமையின் வளர்ச்சிப்போக்கை அவரது கருத்து பிரதிபலிக்கிறதா, அதற்கு உறுதுணையாக உள்ளதா என்பதைக் கொண்டுதான் ஒருவருடைய கருத்து மதிப்பிடப்படுகின்றது.

… சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பதிலும் அவர் விடாப்பிடியாக இருந்தார். சமூக சீர்திருத்தம் என்பதுதான் அவரது பணியின் தொடர் பின்னலாக இருந்தது. தன்னுடைய தத்துவ, அரசியல் கண்ணோட்டங்களை, சமூக சீர்திருத்தம் என்பதற்குத்தான் உட்படுத்தினார். அதுதான், அவரது முதன்மையான லட்சியமாக இருந்தது. (நூலாசிரியரின் அறிமுக உரையிலிருந்து…)

பெரியாரைப் பற்றிக் கூறும் பொழுது ஒரு விசயத்தை எவ்விதத் தயக்கமுமின்றி, ஐயத்திற்கிடமின்றிக் கூறமுடியும். தமிழகத்தில் அவர் காலத்தவரில் இதிகாச புராணங்களை தமிழில் அதிகமாகப் படித்தவர் அவரைவிட வேறு யாரும் இருக்க முடியாதென்பதை உறுதியாகக் கூற முடியும்.

வைஸ்ணவப் பிரச்சாரகர்கள் ராமாயணம், பாகவதம், திவ்யப் பிரபந்தங்களைப் படித்து அவற்றை விளக்கினார்கள் என்றால் சைவர்களோ தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்த புராணம் என்று அவற்றில் திளைத்து பிரச்சாரம் செய்தனர். ‘வீரசைவரான’ கிருபானந்த வாரியார் சைவம், வைணவம் இரண்டின் சிறப்பை மட்டும் விளக்கும் தொழில் முறைப் பிரச்சாரகராக விளங்கினார். அவர் ராமாயணத்தையும் போற்றினார். கந்தபுராணத்தையும் பாராட்டினார்.

ஆனால் பெரியாரோ இவ்விரு பகுதிகளையும் சேர்ந்த நூல்கள் அனைத்தையும் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தார். அவற்றில் சொல்லப்பட்டிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத சம்பவங்களை சுட்டிக் காட்டி, அவற்றை மூடத்தனம் என்று விமர்சித்தார். அவர் கொடுத்த உதாரணங்கள் அனைத்தும் புராணங்களிலும், பக்தி நூல்களிலும் சொல்லப்பட்டவையே. அவராக எதையும் இட்டுக் கட்டிக் கூறியதில்லை .

… பெரியார் ஏன் புராணங்களை எதிர்த்தார்? ஏன் கடவுள் மறுப்புச் செய்தார்? இந்திய சமூகத்தில் நால்வர்ண முறை உயிர்விளைவான சாதீய முறையும் மக்களின் ஒரு பகுதியினருக்கு சமூக மேலாதிக்கம் அளித்து மிகப்பெரும் மக்களை அவர்களுக்கு கீழ்ப்பட்டவர்களாக ஆக்குகிறது. சக மிகப் பெரும் பகுதி மக்களான அடித்தட்டு மக்களுக்கு முறையை மறுத்ததன் மூலம் அரசியல், பொருளாதார மேலாதிக்கம் செலுத்துகிறது. அந்தப் பெருவாரியான மக்களுக்கு சமஉரிமை, சமநீதி சமவாழ்க்கை வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால், பிராமண மேலாதிக்கம் என்றழைக்கப்படும் சமூக மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும், அதைச் செய்ய வேண்டுமானால் இரண்டு காரியங்களைச் செய்யவேண்டும் என்று பெரியார் கருதினார்.

ஒன்று, பிராமண மேலாதிக்கத்திற்குத் துணை நிற்கும் புராணங்கள், பக்திக் கதைகளை அம்பலப்படுத்திக் கடவுள் என்று கூறுவது கட்டுக்கதை என்று விளக்க வேண்டும்.

இரண்டு, கடவுள் பயம், கடவுள் தண்டனை போன்ற பயமுறுத்தல்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்தனைப்பயம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும் பகுதி மக்களிடம் கடவுள், புராணம் போன்றவற்றை அம்பலப்படுத்தி அவர்களை ‘சிந்தனைச் சிறை’யிலிருந்து மீட்க வேண்டும். சமூக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதாகும்.

இந்தக் காரணங்களை முன்னிட்டே பெரியார் இந்த வகைப்பட்ட நூல்களைப் படித்தார். அவற்றிற்கெதிராகப் பிரச்சாரம் செய்தார். அவரது இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவு இருந்தது. அதைவிட பல மடங்கு எதிர்ப்பும் இருந்தது. சில இடங்களில் கல்லடியும் பட வேண்டியிருந்தது, வசைச் சொற்களையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. (நூலிலிருந்து பக்.169-170)

பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலுங்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலுங்கூட அவை நாகரீகம், மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர்… அவருடைய கையிலேயே சில நேரங்களில் திருநீறு கொடுப்பதும் உண்டு. அதை மரியாதையாக வாங்கி மற்றவர்களிடத்திலேயே பெரியார் அவர்கள் கொடுப்பதும் உண்டு. திருநீறா தொட மாட்டேன் என்று அவர் மறுத்தது கிடையாது. (நூலிலிருந்து பக்.185)

பிராமணரல்லாத மக்களுக்கு அரசாங்கப் பணிகளில் உரிய பங்கு கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தொடர்ந்து போராடிய பெருமை பெரியாருக்கு உண்டென்பதை யாரும் மறுக்க இயலாது.

… நீதிக் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவை ஏட்டளவிலேயே நின்றன.

… 1928ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமைச்சர் முத்தையா முதலியார் தனது இலாக்காவில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பின்வரும் விகிதத்தில் இருக்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

… இந்தியா சுதந்திரமடைந்து புதிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டு பின்பு 1950-ம் ஆண்டில் இரண்டு பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் செல்லாது என்று வழக்குத் தொடர்ந்தனர்.

… உச்சநீதி மன்றமும் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது. இதைக் கண்ட பெரியார், ஒரு போராட்டத்தை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து அவ்வாண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று திருச்சியில் ஒரு பெரும் மாநாட்டைக் கூட்டினார். இட ஒதுக்கீட்டு உத்தரவு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு உடனடியாக அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட வேண்டுமென்று இந்த மாநாடு கோரியது. இதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் பிரச்சினை தமிழகத்தில் மிகப் பெரும் பிரச்னையாக உருவாகப் போகிறது என்பதைக் கண்ட மத்திய அரசாங்கம், தனது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலை தமிழகத்திற்கு அனுப்பியது. அவர் வந்து இங்குள்ள நிலைமையைக் கண்டறிந்து திரும்பிச் சென்றபின், இது குறித்து அரசியல் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வருவதென மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. அதன்படி கொண்டு வந்து நிறைவேற்றியது.

இந்த அரசியல் சட்டத் திருத்தமானது, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியிலும் பின் தங்கியுள்ள சமூகங்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் விசேஷ சலுகைகளைக் கொடுக்க மாநில அரசாங்கங்களுக்கு உரிமை கொடுக்கிறது. இந்திய அரசியல் சட்டத்திற்கு முதல் திருத்தம் பெரியாரின் தொடர்ந்த முயற்சி காரணமாக கொண்டு வரப்பட்டது எனவே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் முன்னோடியாக பெரியார் கருதப்படுவதில் வியப்பதற்கேதுமில்லை. (நூலிலிருந்து பக்.204-206)

நூல் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்
ஆசிரியர் : என். ராமகிருஷ்ணன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 -24332424
மின்னஞ்சல் : [email protected]

பக்கங்கள்: 224
விலை: ரூ 140.00

நன்றி – வினவு இணையதளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *