பிம்பம் ஷாகுலின் உன்னதபுரத்துக் கதைகள் நூலின் 3D அட்டை வடிவம் மற்றும் எழுத்தாளரின் ஓவியத்துடன் நூல் அறிமுகப் பதாகை.

பிம்பம் ஷாகுல் எழுதிய “உன்னதபுரத்துக் கதைகள்” – நூல் அறிமுகம்

“உன்னதபுரத்துக் கதைகள்” – நூல் அறிமுகம்

பாகவத மேளாவும் பீர் ராவுத்தர் பரம்பரையும்

மனித உறவுகளின் உன்னதங்களை, உண்மைகளை யார் மனதையும் காயப்படுத்தாமல் இவ்வளவு வாஞ்சையோடு சொல்லிவிட முடியுமா? ம்ம்… ஏன் முடியாது? என்கிற நேசம்தான் இந்த உன்னதபுரத்துக் கதைகள். சிறுகதைக்கும் கதைக்கும் , கட்டுரைக்கும் கதைக்குமான வேறுபாட்டில் நின்றுகொண்டு புதிய வடிவத்தில் தான் பார்த்துப் பழகிய மக்களுடன் நம்மையும் பழகவிட்டிருக்கிறார் எழுத்தாளர் பிம்பம் ஷாகுல். ஷாகுல் நல்ல புகைப்படக் கலைஞர், சமூக, இலக்கியச் செயல்பாட்டாளர் .பாசக்கார மனிதர். ஒரு கலைஞனுக்குள் இவ்வளவு அழகான அனுபவங்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், வாசகர்களின் பால்யகால நினைவுகளையும் ஆல்பமாகத் தொகுத்து கையளித்திருப்பதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏறக்குறைய ஐம்பதாண்டுகால தஞ்சையைச் சுற்றிய மக்களின் அரசியல், கலை,இலக்கியம், மனித உணர்வுகள், கிராமங்கள் மெல்ல மெல்ல நகரமாக மாறிக்கொண்டிருந்த சூழல், சமூக விழுமியங்கள், விடுபடல்கள், புறக்கணிப்புகள் என நாம் சொற்சிக்கலின்றி சுலபமாகப் பயணிக்க முடியும்.

தட்டாரத் தெருவிற்கும், அக்ரஹாரத்திற்குமான பிணைப்பு தொடர் கண்ணியாக வந்துகொண்டே இருக்கிறது. பாகவதமேளாவிற்குப் பெயர்போன இன்றைய மெலட்டூரின் அன்றைய பெயர் உன்னதபுரமாக இருந்திருக்கிறது. மேலத்தூர் மருவி மெலட்டூர் ஆகியது. அதற்கு சாட்சியாக உன்னதபுரீஸ்வரர் இருக்கிறார் என்பதும், 500 ஆண்டுகாலக் கலை குறித்த நாயக்கர் கால வரலாறும், இடையில் தேக்கம் , பிறகு இரண்டு பிரிவாகப் பிரிந்து இன்றும் அடுத்த தலைமுறைகள் முன்னெடுப்பது குறித்த தகவல்கள் சுவாரசியம். 501 தெலுங்கு பிராமணர்களை ராஜகுரு கோவிந்தாச்சார்யா வரவழவைக்க வேண்டும். ஒரு குடும்பம் கிடைக்காதபோது கோமுட்டிச் செட்டியார் குடும்பத்தை அந்த ஊரில் குடியமர்த்தியதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

புகை ஊடாக கடைசிக் கங்குச் சுருட்டை வெற்றிலையில் சுருட்டி ஊதும் பல்கீஸ் கிழவி மனச் சித்திரமாக பதிந்துவிட்டார். தமிழ்ச் சினிமாவிலும் இலக்கியங்களிலும் காட்டும் இஸ்லாமியர்கள் பற்றிய மதிப்பீடு எவ்வளவு வன்மமாக இருக்கிறது. எதார்த்தத்தில் கிராமங்களுக்குள் மதப்பிரிவினை இன்றி எல்லோரும் இணக்கமாக வாழ்ந்த பேரழகு இதில் காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, அலிபாய்க்கும் நாயக்கருக்குமான உரையாடலில்”வாய்யா முட்டாள் நாய்க்கன் மாமா” “யோவ் முட்டாள் துலுக்க மாப்ள” மாத்திச் சொல்லாத. நீதான் மாமா மாத்திச் சொல்ற” “முட்டாள் நாய்க்கனும் முரட்டுத் துலுக்கனும் பட்டாளத்துக்கு லாயக்கில்லைன்னுதான்யா பழமொழி”. வாசிக்கும்போது பகடியாக இருந்தாலும் வழக்காறுகளையும் மாற்றிய, சிந்திக்கத் தூண்டுகிற உரையாடல்கள் உண்டு. ஒற்றை இஸ்லாமியக் குடும்பமாக இருந்து அக்ரஹாரத்தின் ஆதிக்கத்தில் இருந்த பட்டியலின மக்களை ஒன்றிணைத்து தன் பதினெட்டாவது வயதில் ஊரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையைக் கட்டியவர் அலிபாய் என்பது உண்மை.

தன் மகன் நாசரையும் அவ்வாறே உருவாக்கி இருக்கிறார். நாசர் மார்கழி மாதப் பஜனையில் பாசுரங்கள் பாடுவதும், கொலுவில் தவறாது கலந்து கொள்வதும்,புகைப்படக் கலைஞனாக வளர்ந்த பிறகு கோவில் கும்பாபிஷேகங்கள், கிரகப் பிரவேசங்கள், பிரகலாத, அரிச்சந்திர நாடகங்களுக்கான ஆஸ்தான புகைப்படக் கலைஞராக இருந்ததெல்லாம் வாசிக்கும்போது உன்னதபுரம் ஒருவகையில் சமத்துவபுரமாக இருந்திருக்கிறது.

சிறுவயதில் கொலுவில் பொம்மைகள் திருடியது, பிணத்தை புகைப்படம் எடுக்கவும் தெருநாய்கள் துரத்த வீடு மாறி குடிபுகும் விழாவிற்கு சென்ற சாகசமெல்லாம் நமக்கு காட்சியாக விரியும். வாசக்டமி மார்க்கத்திற்கு எதிரானது.ஆனபோதும், சமூக விழிப்புணர்விற்காக அறிஞர் அண்ணாவின் சொல்லுக்காகக் குறிப்பாக தமிழகத்தில் “வாசக்டமி” செய்துகொண்ட முதல்நபர் அலிபாயாகத்தான் இருக்கக்கூடும் என்பது ஆச்சரியம்.

படிக்காத எளிய மனிதர்களுக்கு அரசுத் திட்டங்கள், கடிதப் போக்குவரத்து என உதவுவது, நாசர் திராவிடத்தில் இருந்து இடதுசாரியாக மாற்றமடைந்த பின்னணி, மார்க்க விழாவை கணேஷ் டாக்கீசில் கட்சிக் கூட்டமாக நடத்தியது, சுவர் ஓவியங்கள், சைன் போர்டுகள், தஞ்சை மெக் பீசஸ் கடையின் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம், எண்பதுகளின் ரசிகப் பட்டாளங்கள், வசதிக்கு ஏற்ப மாறிய உடை, ஒப்பனை கலாச்சாரங்கள், கேசட், சி.டி. பென்டிரைவ் மாற்றங்கள், இங்க் பேனாவில் நூல் சுற்றி பட்டையாக எழுதுவது இன்னும் இன்னும் எழுத எவ்வளவோ இருக்கின்றன.

விசுவநாத ஐயரும் பெரியார் தொண்டரும் என்னதான் கொள்கை ரீதியாக இருதுருவமாக இருந்தாலும் பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் ஒற்றுமை எடுத்துக்காட்டாக இருந்தது. ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் முதல்பலி அகரமாங்குடி என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது.

தஞ்சை ஓரியண்டலில் நடந்த உணவுத் திருவிழாவும், நாசர் எழுதிய கீதாச்சாரமும், விவசாய கூலித் தொழிலாளி அய்யாத்துரை அனுமன் பக்தனாக மாறி பட்டாச்சார்யார் ஆன கதையும் உண்மையில் மறக்கக்கூடாத சம்பவங்கள்.

கொலுவில் யானை பொம்மை திருடிய நாசரை அவன் அம்மா அழைத்துச் சென்று மாமியிடம் கொடுக்கும்போது மாமி அவ்வளவு அன்பாகப் பேசி அனுப்புகிறார். அந்தச் சிறுவன் மீண்டும் திண்ணையைப் பார்க்கும்போது அந்த யானைப் பொம்மை அங்கேயே இருந்தது என்று முடித்திருப்பது, இஸ்லாமியர் என்பதால் அவர்களோடு பழகாதே என நண்பனின் பெரியப்பா கண்டிப்பது நம்மை பல்வேறு யோசனைக்குள் தள்ளிவிடுகிறது. நண்பர்களுக்குள் நடக்கும் இடஒதுக்கீடு பற்றிய உரையாடல் 2000 காலத்து புரையோடிய அரசியல்.

திருமணத்திற்குப் பிறகு குடும்பச் சூழல் காரணமாக ஆண்களின் கனவுகளும் சிதைந்து போவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மாமுராயின் காலாட்டித் தூண்டில் எனக்குப் பிடித்த ஒன்று. அழகான வாழ்வியல். கனவில் தொடங்கி கனவில் முடியும் ஒரே பத்தி. இடைப்பட்ட உணர்வும் சம்பவமும் மாமுராய் தாத்தாவையும் அஸ்மா பீவியையும் திருக்குளப் படித்துறையையும் விரித்து எழுதினால் காலப் பருந்தின் அட்டகாசமானப் புனைவு அது.

மாதம் முழுக்க ஏதாவது கடைகளில் ஓய்வின்றி வேலை பார்க்கும் இளைஞர்கள் கிடைக்கும் ஒருநாள் விடுமுறையில் இலக்கியக் கூட்டங்கள், சினிமா, இசை, புத்தக வாசிப்பு, கோவில்கள், புகைப்படக் கலை என்று மெலட்டூரில் இருந்து எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து, ரசித்து கையில் இருபது ரூபாயோடு அன்பு கடையில் லஸ்ஸி குடித்து,சாந்தி கமலா ஏசி தியேட்டரில் காலைக்காட்சிப் பார்த்துவிட்டு மதியம் கார்த்திக் ஹோட்டலில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு, மதியம் மேட்னி மாலையில் அன்பு கடையில் கல்கண்டு பால், மாலையில் அரசியல் பொதுக்கூட்டம் அல்லது கலை இரவு, இரவு சாந்தி ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு ஊருக்குச் செல்லும் களைப்பின் நிறைவை நம்மாலும் உணரமுடிகிறது.

இப்போது கறிக்கடை, மைக் செட், பெட்ரோமாஸ் லைட் எல்லாமும் மாறிவிட்டது. மாற்றம் என்பது மனிதத்தை நோக்கியதுதானே.

நாசர் மற்றும் நாராயணன் நெருங்கிய நண்பர்கள். நாராயணன் கோவில் கட்டி அதில் அர்ச்சகராக இருக்கிறார். நாசர் இடதுசாரி அரசியலோடு பயணிக்கிறார். நாராயணன் மகன் திருமணத்திற்கு நாசர் குடும்பத்தோடு சென்று பிள்ளையாரை பரிசளித்திருக்கிறார். நாசரின் பிள்ளைகளுக்கு திருமணம் என்றால் நிச்சயம் நாராயணன் வருவார். அவர் கையில் மக்கா மதினா படமோ வேறெதுவோ இருக்கலாம். தொடரும் இந்த பந்தம் என்பது நாசர் என்கிற ஷாகுலின் அசைக்க முடியாத நம்பிக்கை . இந்தப் பேரன்புதான் தொகுப்பின் சாரம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:உன்னதபுரத்துக் கதைகள் (Unnathapurathuk Kadhaigal)
ஆசிரியர்:பிம்பம் ஷாகுல் (Bimbam Shahul)
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை:₹.140
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி,
தஞ்சாவூர்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

*****************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *