பிம்பம் ஷாகுலின் "உன்னதபுரத்துக் கதைகள்" புத்தகம் | Bimbam Shahul's Unnathapurathuk Kadhaigal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

பிம்பம் ஷாகுலின் “உன்னதபுரத்துக் கதைகள்” – நூல் அறிமுகம்

“உன்னதபுரத்துக் கதைகள்” – நூல் அறிமுகம்

உன்னத உணர்வுகளின் தொகுப்பு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவித்திலகம் வெற்றிப்பேரொளி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தஞ்சாவூரில் மறைந்த கவிஞர் சுகன் வழி எனக்குக் கிடைத்த நட்புக் கொடை பிம்பம் ஷாகுல் அமீது. சுகன் நடத்திய இலக்கிய விழாக்களில ஒளிப்படக் கலைஞராகத்தான் அவர் அறிமுகம் ஆனார். சுகன் எடுத்த சிற்றிதழ்கள் பற்றிய ஆவணப்பட ஒளிப்பதிவாளராக தொடர்ந்து அவரோடு பயணிக்கும் நல்வாய்ப்பும் கிடைத்தது. அப்போதுதான் அவருக்குள் இருக்கும் இன்னொரு எழுத்துப் படைப்பாளியையும் கண்டுகொள்ள முடிந்தது. வணிகத் தொடர்புக்கு அப்பால் அவர் பேணிவரும் இலக்கியத் தோழமைகளின் வட்டம் மிகப்பெரியது.

தமுஎகசவின் தஞ்சை அடையாளங்களில் ஒன்றான தோழரின் பிம்பம் ஸ்டூடியோ, தொழிலகமாக மட்டுமின்றி முற்போக்குப் படைப்பாளிகளின் சந்திப்பு முகாமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தஞ்சைப் பெரிய கோவில் புல்வெளியில் இலக்கியச் சந்திப்புக் கூட்ட அமைப்பாளராகவும் செயல்பட்டு வரும் தோழர் பிம்பம் ஷாகுலின் கதைசொல்லும் திறன் “உன்னதபுரத்து கதைகள்” நூல் வடிவம் பெற்று நம் கைகளில் இப்போது.

கதைகள் என்று தலைப்பு இருந்தாலும் இவை புனைகதைகள் இல்லை. மாறாக தஞ்சை மாவட்டத்துச் சிற்றூர் மெலட்டூர் என்னும் உன்னதபுரத்தின் அக்கிரகாரங்களுக்கு நடுவில் ஒற்றை இசுலாமியக் குடும்பத்து வாலிபன் ஒருவனின் இளமைப் பருவத்து நினைவுகளின் மீட்டெடுப்புகள் தாம் இந்தப் புத்தகம்.

அந்த நினைவுகளின் மீட்டெடுப்பில் நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சாவூரின் சமூக வரைபடம் விரித்துக் காட்டப்படுகின்றது. இசுலாமியர் என்றாலே பாக்கிஸ்தானுக்கு ஓடு என்று கூச்சல் போடும் இன்றைய சங்கிக் கூட்ட மனநிலைக்கு மாறாக இசுலாமிய இளைஞன் அக்கிரகாரத்து வீடு ஒன்றின் அடுப்பங்கரைவரை சென்று சுடும் அப்பளத்தை பறித்து உண்ணும் , அந்த வீட்டு மருமகளை மண்ணீ என்று உறவு சொல்லி அழைக்கும் உரிமை பெற்றிருந்த ஓர் உன்னதமான காலத்தை நினைவு படுத்தும் மதநல்லிணக்க ஆவணமாக உள்ளது இந்தத் தொகுப்பு.

ஷாகுல் தன் தாத்தா பெட்ரோமாக்ஸ் விளக்குக் கடை உரிமையாளராகவும் , அப்பா மைக் செட்காரராகவும் கூடவே கறிக்கடைக்காரராகவும் தொழில் நடத்தியதையும் பரவலாக பதிவு செய்துள்ளார்.

கறிக்கடை அலி என்று அறியப்படும் ஷாகுலின் தந்தை கிராமத்தில் முதன்முதலில் திமுக கிளையை நிறுவி வளர்த்தெடுத்து கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் வரை அறிமுகம் ஆனவர். அவருடைய மகன் ஷாகுல் இடதுசாரி இயக்கக் களச் செயல்பாட்டாளராக மாறிய பரிணாம வளர்ச்சியை இந்த உன்னதபுரத்துக் கதைகள் நமக்குச் சொல்லுகின்றன.

ஊரில் பலருக்கும் வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தந்த கறிக்கடை அலியான தன் தந்தையிடம் தனக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறு மகன் ஷாகுல் கேட்க, தன் அரசியல் செல்வாக்கைத் தன் குடும்ப நலனுக்குப் பயன்படுத்த முடியாது என்று மறுத்துவிடும் அலியாரின் பொதுவாழ்வுத் தூய்மை அந்தக் கால அரசியலாரின் குணநலத்தை விளக்குகிறது. அதேபோல் தஞ்சாவூர் நகராட்சி துணைத் தலைவரும் , நகர திமுக முன்னோடியுமான சுல்தானிடம் ஷாகுல் வேலைவாய்ப்பு கேட்டுச் செல்லும் போது, மறுத்து விட்டு,”தன் சமூகத்திற்கு செய்கிறான் என்ற பெயர் வந்துவிடும்!” என்று அவர் அதற்குச் சொல்லும் காரணம் சிந்திக்கத் தூண்டுகிறது.‌ இப்படியெல்லாம் அக்காலத்தில் அரசியல்வாதிகள் இருந்தனர் என்பதை நினைவூட்டி நெகிழ வைக்கிறார் ஷாகுல்.

தமிழ்நாட்டில் இன்றைய இந்துவா அரசியலின் உள்குத்து அடிதடி கொலைவெறியை நகைச்சுவை கலந்து “அய்யாதுரைபட்டாச்சார்யா” என்று பந்தி வைத்துள்ளார் ஷாகுல்.

திரையிசைப் பிரியர்களின் வேடந்தாங்கல் என்ற தலைப்பில் தமிழ்த்திரையின் வரலாறே சொல்லப் பட்டுள்ளது. இசையில் இதயம் கரைந்திருப்பவர்களின் கொண்டாட்டமான பதிவு இது. இதன் முடிப்பில் தமிழிசையின் அகராதியான கருணாமிர்த சாகரத்தைத் தந்த ஆபிரகாம் பண்டிதரை நினைவூட்டி தன் அறிவுத் தேடல் பயணத்தை அடையாளப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

“மாமுராயின் காலாண்டித் தூண்டில்” கதை அருமையான அழகான நினைவுச் செதுக்கல். புலவர் பொன்னியின் செல்வன் கவிதைநூல்வழி காலாட்டித் தூண்டில் என்ற சொல் என்னுள் பதிந்திருந்தது. ஆனால் காலாட்டித் தூண்டிலில் எப்படி மீன் பிடிப்பது என்பதைக் கோமுட்டி குளத்துக்கே நம்மை அழைத்துச் சென்று காட்டியுள்ளார் ஷாகுல். அத்தோடு எந்த எந்த மீனுக்கு எந்தத் தூண்டில் முள்ளைப் பயன்படுத்த வேண்டும் , தூண்டிலில் மாட்டும் இரை எதுவாக இருக்க வேண்டும் – இப்படித் தூண்டிலில் மீன் பிடிக்கும் கலையையே கற்றும் தருகிறார்.

Bimbam Shahul's Unnathapurathuk Kadhaigal Tamil Book Reviewed By Vetripperoli

பள்ளியில் பார்ப்பனத் தலைமை ஆசிரியருக்கும் பெரியார் பெருந்தொண்டரான ஆசிரிருக்குமிடையிலான முரண் மோதல்களைச் சொல்லும் அதே நேரம் பள்ளி வளாகத்தில் தன் தலைமை ஆசிரியரை பெற்றோரிடம் விட்டுக் கொடுக்காத அந்த பகுத்தறிவாளரின் ஆசிரியர இனப்பற்றையும் சேர்த்தே விவரித்துள்ளார் ஷாகுல்.

மெலட்டூர் பாகவதமேளாவால் புகழ்பெற்ற ஊர். பாகவத மேளா தொடங்கப்பட்ட வரலாறு , அதில் ஏற்பட்ட பிளவு , இரண்டு குழுக்களாகப் பிரிந்து பாகவதமேளா நடத்தப்பட்டு வரும் சூழல் எல்லாவற்றையும் சுருக்கமாகவும், விளக்கமாகவும் கடத்தும் ஷாகுல் இரண்டு குழுக்களுக்கும் போட்டோகிராபராக அவரே பணிபுரிந்தது என மெலட்டூரின் வரலாற்றுப் பெருவெளி பின்னணிக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்தும் போகிறார்.

டார்க் காமடி என்பார்களே அந்த வகையில் அமைந்துள்ளது “போட்டோகிராபரும் போலிசுகாரரும்” கதை. நகை மூட்டையை படம் எடுக்க வேண்டும் என்று சொல்லி ஏட்டையா ஷாகுலை அழைத்துச் சென்று அழுகித் தூக்கில் தொங்கும் பெண் பிணத்தை படமெடுக்க வைப்பது சோகங்கலந்த நகைச்சுவை. இந்தக் கதையில் ஓரிடத்தில் கதாசிரியர் குறிப்பிடுவது போல நமக்குள்ளும் பிணவாடை வீசுவது ஷாகுல் எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது.

அப்பா கருப்புச்சட்டை அலிபாய், தாத்தா மாமுராய், கொள்ளுப்பாட்டி பல்கீஸ் கிழவியிலிருந்து அக்கிரகாரத்து நண்பன் நாராயணன், அய்யாத்துரைவரை இக்கதைகளில் இடம்பெற்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு புகைப்பட ஆல்பம் போல நம் நெஞ்சில் நிலைத்த இடத்தைப் பெற்று விடுகின்றனர்.

நாசர் என்ற வீட்டுப் பெயர் கொண்ட ஷாகுல் ஊரின் இந்துக் கோவில் கும்பாபிஷேகத்தையும் , பாகவத மேளாவையும் படமெடுக்கும் கற்பனை கலவாத இயல்பான மத ஒற்றுமை இத்தொகுப்பின் பக்கங்களில் எல்லாம் இழையோடிக்கிடப்பதை மகிழ்வோடும் மனநிறைவோடும் உணர்கிறோம். இந்த உணர்வு நாடு முழுவதும் பரவ இந்த உத்தமபுரத்துக் என்று கதைகள் படிக்கத் தெரிந்த அனைவரின் கைகளிலும் தவழ வேண்டும்.

தான் பிறந்த இசுலாமியக் குடும்பம் மற்றும் ஆறு அக்கிரகாரங்கள் சேர்ந்த ஊர்ச் சூழல்களோடு தன்னின் பள்ளிக் கல்லூரிக் காலச் சூழல் களையும் சுவைபட தொகுத்துச சொல்லவும் , அந்தச் சொல்லாடலில் நம்மை ஒரு நீர்சுழல்போல உள்ளிழுத்துக் கொள்ளவுமான ஆற்றல் ஷாகுலுக்கு கைவரப்பெற்றுள்ளது.

நூலின் உள்ளடக்கம் போலவே புத்தகத்தின் கட்டமைப்பும், அச்சமைப்பும் செறிவாக உள்ளன. குறிப்பாக அட்டைப் படம் வடிவமைப்பு உள்ளிருநது கிளர்ந்தெழும் நினைவலைகளை மங்கலாக நினைவுபடுத்தும் வகையில் செம்மையாக உள்ளது.

தொடக்கத்தில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதியின் அணிந்துரை , பிற்பகுதியில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகிய இருவரின் நூல் குறித்த அலசல்கள் புத்தகத்திற்கு வளமும் கனமும் சேர்த்துள்ளன.

உன்னதமான உணர்வுகளின் தொகுப்பான உன்னதபுரத்துக் கதைகள் — “செட்டியாரும் முறுக்கு; சரக்கும் முறுக்கு!” . இனிய நல்வாழ்த்து தோழர் இரவி பிம்பம் ஷாகுல்!

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: உன்னதபுரத்துக் கதைகள் (Unnathapurathuk Kadhaigal)
ஆசிரியர்: பிம்பம் ஷாகுல் (Bimbam Shahul)
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை: ₹.140
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கவித்திலகம் வெற்றிப்பேரொளி

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *