`வினேஷ் போகத்தும் உடல் எடையை குறைக்கும் உயிர் வேதியியல் சிக்கல்களும்…!
28-8-24 ஆங்கில இந்து பத்திரிக்கையில்
சயந்தன் தத்தா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை
ஆகஸ்ட்-7 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவரும் ஒலிம்பிக் சாம்பியனுமான யூய் சசாக்கி அவர்களை அரையிறுதியில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். அதற்கு முந்தைய போட்டிகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சாம்பியனான உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒகாஷா லிவாக் கியூபாவை சேர்ந்த குஸ்மான் ஆகியோரையும் வீழ்த்தியிருந்தார். இறுதிப்போட்டிக்கு நுழந்ததால் குறைந்தப்பட்டசம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது என்ற மகிழ்ச்சியில் நாடே கொண்டாடியது. ஆனால் இறுதி போட்டி துவங்கும் முன் உடல் எடையை சோதிக்கும் போது 50கிலோவிற்கு 100கிராம் அதிகமாக இருந்தமையால் இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்ததாக போட்டி நிர்வாகம் அறிவித்தது. இதனால் உறுதியான வெள்ளிப்பதக்கம் பெறும் வாய்ப்பையும் இழந்துவிட்டார். மறுநாளே மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்துவிட்டார், பலரும் ஊடகத்தின் வாயிலாக அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர்.
100 கிராம் உடல் எடை கூடுதல் அவ்வளவு பெரிய குற்றமா என பார்வையாளர்களுக்கு கேள்விகள் வரலாம், உடல் அளவில் 100 கிராம் எடை அதிகரிப்பு என்பது கடினம் இல்லை ஆனால் உயிரியல் அடிப்படையில் அது அதிக எடையாக கருதப்படும், வினேஷ் தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சி எடுத்ததால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ உதவி தேவைப்படும் சூழல் அவருக்கு உருவானது உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் ஏன் கடினமானதாக உள்ளது என்பதை பார்ப்போம்.
எடையின் உடலியல்:
உடல் எடையின் அளவை குறைப்பது மற்றும் அதிகரிப்பது என்பது ஒருவர் எடுத்துக்கொள்ளும் ஆற்றலின் அளவு மற்றும் உடல் உழைப்பின் மூலம் அந்த ஆற்றலை பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும் என்று அரியானாவை சேர்ந்த உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் சஞ்செய் கர்லா அவர்கள் தெரிவிக்கிறார், ஒரு நபர் உடல் எடையின் அளவை குறைக்க விரும்பினால் ஆற்றலை குறைவாக உட்க்கொண்டு உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும், மருத்துவர் கல்ரா அவர்கள் இதை மூன்று வகையாகன் பிரிக்கலாம் என்கிறார்.
(i)மூளை:
மூளையின் சிறிய பகுதியான ஹைப்போதாலமஸ் ஆரக்ஸ்ஜெனிக் ஹார்மோன் மற்றும் ஆனார்க்ஸ்ஜெனிக் ஹார்மோன் ஆகிய இரண்டு வகையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது ஆர்க்ஸ்ஜெனிக் ஹார்மோன் பசியை அதிகரிக்கிறது ஆனராக்ஸ்ஜெனிக் ஹார்மோன் பசியை குறைக்கிறது மேலும் உணவை உட்கொண்ட நிறைவான உணர்வை தருகிறது. ஹார்மோன்ஸ் என்பது உடலின் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் ஆகும் இதன் பாதிப்புகள் உடலின் வெவ்வேறு பகுதிகளில் வெளிப்படுகின்றன. ஆரக்ஸ்ஜெனிக் மற்றும் ஆனார்க்ஸ்ஜெனிக்ஸ் ஹார்மோன்கள் ஹைப்போதாலமஸில் உற்பத்தி செய்யப்பட்டு மூளையின் மற்ற பகுதிகளிலும் குடலிலும் ஒரு குறிப்பிட்ட தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
(ii) குடல் நாளம் – இரைப்பை முதல் பெருங்குடல் வரை:
பசியை கட்டுப்படுத்த மூளையுடன் நேரிடையாக தொடர்புக்கொள்ளக்கூடிய ஹார்மோன்களை குடல் நாளம் உற்பத்தி செய்கிறது குடல் வழியே செல்லும் உணவின் வேகத்தை ஒழுங்குப்படுத்துகிறது, மேலும் இது உடலின் எடையையும் பாதிக்கிறது. 1976 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வுகட்டுரையில் இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு உணவு வேகமாக நகரும்போது, உணவில் இருந்து கலோரிகளை உறிஞ்சுவதற்கு குடலுக்கு அதிக நேரம் கிடைப்பதால், உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என ககூறப்பட்டது. மாறாக, இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் உணவின் வேகம் குறைவாக இருந்தால் உடல் எடை குறைவதற்கு காரணமாக இருக்கும் என அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.
(iii)தசை வலிமை:
தசை வலிமை கட்டுமஸ்தான உடலை தீர்மானிக்கிறது” என்று மருத்துவர் கல்ரா கூறுகிறார். மேலும், தசைவலிமை இரண்டு வகையான ஹார்மோன்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவை ஆற்றல் எரிப்பு (Burners) ஹார்மோன் மற்றும் ஆற்றல் உற்பத்தி (Builders) ஹார்மோன். தைராய்டு சுரப்பியானது மற்ற ஹார்மோன்களுடன் இந்த இரண்டு ஹார்மோன்களையும் சுரந்து, வளர்சிதை மாற்றத்தை வழியாக எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. இன்சுலின் போன்ற ஆற்றலை உற்பத்தி ஹார்மோன்கள், இரத்த ஓட்டத்தில் இருந்து குளுக்கோஸை பிரித்து கல்லீரல் மற்றும் கொழுப்பு செல்கள் மூலம் எலும்புகளை இயக்கும் தசைநார்களிடம் சேர்க்கிறது, இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
ஒரு நபரின் “வளர்சிதை மாற்ற அமைப்பு”. நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. 1982 ஆம் ஆண்டில் அமெரிக்க ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் பென்னட் மற்றும் ஜோயல் குரின் ஆகியோர் எழுதிய ‘ உணவை கட்டுப்படுத்துபவரின் தடுமாற்றம்’ (THE DIETTER”S DILEMMA) என்ற புத்தகத்தில் உடலை பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு நபரின் உள்ளார்ந்த எடை வரம்பைக் குறிக்கிறது. தனிநபர்கள் தங்கள் உணவை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வழிமுறைகளை நமது உடல் தானாகவே மேற்கொள்கிறது “இது எடை இழப்பை நம்பமுடியாத அளவிற்கு மிகப்பெரும் சவாலாக மாற்றுகிறது” என்று டாக்டர் கல்ரா கூறினார்.
விரைவான எடை இழப்பு:
கவுகாத்தியில் உள்ள ஒரு பொது மருத்துவர் கிறிஸ்டினெஸ் ரத்னா கிருபா, ஒவ்வொரு மனிதனின் எடைக்கும் எலும்புகளை இயக்கும் தசைகள், கொழுப்பு மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்து. மூன்று முக்கிய பங்களிப்புகள் உள்ளன என்கிறார் ஒவ்வொன்றின் பங்களிப்பும் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு மாறுபடும், ஆனால் எல்லா உடல்களிலும் மிகமுக்கிய பங்களிப்பானது நீர்தான். எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு உடலில் உள்ள திரவத்தை அடிப்படையாக குறிவைக்கிறது. டாக்டர் கிருபாவின் கூற்றுப்படி, “வினேஷ் போகட் தனது எடையைக் நீரின் அளவை குறைப்பதன் மூலம் முயற்சித்திருக்கலாம்.” ஊடக அறிக்கைகளின்படி, வினேஷ் தனது எடைக்கு முந்தைய நாள் இரவு சௌனா(sauna) என்று சொல்லப்படுகிற சூடான அறைக்கு ஓய்வெடுக்க சென்றிருக்கலாம், ஒரே இடத்தில் இருக்கும் சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் மற்றும் சில உடற்பயிற்சிகளை செய்திருக்கலாம்.
கார்போஹைட்ரேட் காரணமாக, தண்ணீரைப் பெறுவது அல்லது இழப்பது ஒட்டுமொத்த உடல் எடையில் அதிகரிப்பு அல்லது குறைப்புக்கு வழிவகுக்கிறது. உடல் கார்போஹைட்ரேட்டுகளை கிளைகோஜனாக (குளுக்கோஸ் மூலக்கூறுகளின் வேதிக்கலவை) சேமித்து வைக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை எலும்பு தசைகள் மற்றும் கல்லீரலுக்கு செல்கிறது என்று டாக்டர் கல்ரா கூறினார்.
ஆனால் கிளைகோஜன் தசைகளுக்குள் செலுத்தப்படும் போதெல்லாம், அது நீரேற்றப்பட்ட வடிவத்தில் சேமிக்கப்படுகிறது, எனவே தண்ணீரும் உள்ளே செல்கிறது. ஒரு ஆய்வுக்கட்டுரை, ஒவ்வொரு கிராம் கிளைகோஜனும் சுமார் 3 கிராம் தண்ணீரைக் கொண்டு வருகிறது என தெரிவிக்கிறது .
இதனால்தான் விரைவான எடை இழப்பு நெறிமுறைகள் கார்போஹைட்ரேட்டுகளை அவற்றின் உட்கொள்ளல் மற்றும் சேமிப்பைக் குறைப்பதன் மூலம் நடைபெறுகிறது. உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவதால், தண்ணீரின் அளவு குறைகிறது, இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
“இதனால்தான் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் துவக்க நாட்களில் மக்கள் விரைவான எடை இழப்பைக் காண்கிறார்கள்” என்று டாக்டர் கிருபா கூறினார். கார்போஹைட்ரேட்டுகளுடன் கூடுதலாக, உப்பு உட்கொள்ளல் உள்ளிட்ட பிற காரணிகளும் அதில் உட்கொள்ளப்படும் தண்ணீரின் மூலமாகவும் உடல் எடையை பாதிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் குழு எலக்ட்ரோலைட்(மின்பகுளி), புரதம் அல்லது கார்போஹைட்ரேட் நிறைந்த திரவங்களான தேநீர், காபி ஒயின் உள்ளிட்டவற்றில் உள்ள நீரின் அளவையும் வெற்று நீரையும் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்கள். ஒரு திரவத்தை உட்கொண்ட பிறகு உடல் தக்கவைத்துக்கொள்ளும் நீரின் அளவை கணக்கீட இந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது. எலக்ட்ரோலைட் நிறைந்த திரவங்கள் அதிக அளவு நீரைத் தக்கவைக்க வழிவகுப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதிகப்படியான உப்பை உட்கொண்டால் சோடியம் அயனிகளின் திறன் அதிகரிக்கிறது இது ஒரு வகையான எலக்ட்ரோலைட் ஆகும். இதனால் உடலில் சில விளைவுகள் உருவாகும். சோடியம் மற்றும் நீரின் விகிதத்தை சரியான அளவில் உறுதி செய்வதற்காக உபரியாக உள்ளதை சிறுநீர் மூலம் உடல் வெளியேற்றும் இதன் மூலம் தண்ணீரை மட்டும் தக்கவைத்துக்கொள்ளும், இது அதிக உடல் எடைக்கு வழிவகுக்கிறது என்றனர்.
பாலின அடிப்படையில் சில வேறுபாடுகள்
வினேஷின் தகுதி நீக்கத்திற்குப் பிறகு, இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) விளையாட்டு தொடர்பான பிரச்சனைகளில் தீர்ப்பளிக்கும் சர்வதேச அமைப்பான லாசேன் அடிப்படையிலான விளையாட்டு நடுவர் மன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்தது. IOA இன் வாதங்களில் ஒன்று: “ஆண் மற்றும் பெண் மல்யுத்த வீரர்களின் உடலில் உள்ள உயிரியல் வேறுபாடுகளை பற்றியது, குறிப்பாக பெண்களின் மாதவிடாய் காலக்கட்டத்தில், பெண் மல்யுத்த வீரர்களின் தகுதியை நிர்ணயிக்கும் போது மாதவிடாய் நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றனர்” வினேஷ் போகத்திற்கு மாதவிடாய் நெருங்கிவிட்ட சூழலை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ்களையும் IOA வழங்கியது. ஆனால் அத்தகைய வேறுபாடுகளை “ஊகமானவை மற்றும் ஆதாரம் இல்லாதவை” என்று CAS பதிலளித்து நிராகரித்துள்ளது. ஆனால் டாக்டர் கல்ரா மற்றும் டாக்டர் கிருபா இருவரும், சில பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் பிற்பகுதியில், அல்லது மாதவிடாய் வரும் நெருக்கமான நாட்களில் உடல் எடை சற்று அதிகரிக்கக்கூடும் என்று கூறினார். இந்த நேரத்தில், பெண்கள் கரு வளரும் கால கட்டத்தில் உள்ளனர் என்றும், ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன் அளவு உடலில் அதிகமாக இருக்கும் சூழல் என்றும் கூறினார்கள். டாக்டர் கல்ராவின் கூற்றுப்படி, இந்த நேரத்தில் சுமார் 25% பெண்கள் வீக்கம் மற்றும் நீர் தேக்கத்தால் ஏற்படும் வலியை அனுபவிக்கிறார்கள் இதன் மூலம் எடை அதிகரிக்கலாம். உடல் எடையில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தாக்கம் பற்றிய சான்றுகள் சர்ச்சைக்குரியாக உள்ளது.
1967 ஆம் ஆண்டில், புரோஜெஸ்ட்டிரோன் பெண் எலிகளின் உடல் எடையை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், ஆனால் அடுத்தடுத்த சான்றுகள் மனித பெண்களில் உள்ள ஹார்மோன்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படாமல் போவதற்கும் அல்லது அதன் எடை குறைப்புக்கு வழிவகுக்க செய்யவும் வாய்ப்புள்ளது என்றும் பரிந்துரைத்தது. அட்ரீனல் சுரப்பிகள் குறைந்த அளவு புரோஜெஸ்ட்டிரோனை உற்பத்தி செய்யும் மனித ஆண்களில் கூட, ஆராய்ச்சியாளர்கள் உடல் எடை குறைவுடன் ஹார்மோன்களை தொடர்புபடுத்தியுள்ளனர்.
புரோஜெஸ்ட்டிரோனின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகளால் சில முரண்பாடான பார்வைகள் விளக்கப்படுகிறது. இது இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், இது தண்ணீருடன் கல்லீரலில் அதிக கிளைகோஜனை சேமிக்க வழிவகுக்கிறது என்று சொல்லப்படுகிறது மறுபுறம், 1982 ஆம் ஆண்டு ஆய்வின்படி, புரோஜெஸ்ட்டிரோன் கொழுப்பு திசு மற்றும் எலும்பு தசைகளில் “இன்சுலின் விளைவுகளை எதிர்க்கிறது”, பெரிய அளவிலான கொழுப்பு படிவுகளுக்கு வழிவகுக்கிறது மற்றும் புரதத்தின் விகிதத்தை வேகமாக குறைக்கிறது.
எடை VS தடகள போட்டியின் நன்மைகள்
டாக்டர் கல்ரா கூறுகையில், வினேஷின் விஷயத்தில், அவளது எடையை மேலும் குறைக்க இன்னும் கொஞ்சம் கூட முயற்சி செய்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார். அவர் கூறிய ஒரு , கடுமையான எடை கண்காணிப்பு முறையுடன், குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் கட்டத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரது மாதவிடாய் சுழற்சியை மருத்துவ ரீதியாக ஒழுங்குபடுத்தியிருக்கலாம் மாதவிடாய் ஒழுங்குமுறை என்பது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், “பல பெண் விளையாட்டு வீரர்களுக்கு இது வழக்கமான ஒன்றுதான் என டாக்டர் கல்ரா கூறினார். “எடை இழப்பைத் செய்யக்கூடிய மருந்துகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை விளையாட்டு சூழல்களில் ஊக்கமருந்துக்கு சமமாகவே கருதப்படும்,” என்று கூறினார்.
வினேஷுக்கு தேவையான எடையை உருவாக்க முடியாமல் போனதற்கு ‘தவறான’ பிரிவில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்திருக்கலாம். பெரும்பாலான மல்யுத்த வீரர்கள் அதிகபட்ச எடை வரம்பு அவர்களின் வழக்கமான எடையை விட சற்று குறைவாக இருக்கும் வகைகளில் போட்டியிடுகின்றனர். வினேஷின் வழக்கமான எடை சுமார் 55 கிலோவாக இருந்தது, எனவே மிகவும் பொருத்தமான வகை 53 கிலோவாக இருக்கலாம். ஆனால் அந்த பிரிவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த மற்றொரு மல்யுத்த வீரர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டார், எனவே வினேஷ் 50 கிலோ பிரிவில் போட்டியிடும் சூழலுக்கு உள்ளானார்.
டாக்டர் கிருபா கூறுகையில், வினேஷின் வழக்கில் எடையில் ஏற்பட்ட சிக்கல் சில விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது சிறிய எடை அதிகரிப்பு தடகள போட்டிக்கு சாதகமாக ஒத்துப்போகிறதா என்பதைக் கருத்தில் கொள்ள ஒலிம்பிக் விதிகளை பரிசீலிக்க வேண்டுமெனெ வலியுறுத்தியுள்ளது. அவரது கூற்றுப்படி, தடகள போட்டியில் ஒருவருக்கு சாதகமான பகுதி என்பது பெரும்பாலும் எலும்பு தசை நிறையின் அளவிலிருந்து உருவாகின்றன நீர் எடை அதிகரிப்பிலிருந்து அல்ல, ஆனால் ஆகஸ்ட் 7 காலை வினேஷின் அதிக எடைக்கு நீரின் எடை அதிகரிப்பே காரணம் என்று அவர் சந்தேகித்தார். எடை உயர்வால் தடகள வீரர் ஏதேனும் உண்மையான நன்மைகளைப் பெற்றாரா என்பதற்குப் பதிலாக எடை குறித்த சர்ச்சைகளை சரி செய்திருக்க வேண்டும், இந்த மாதிரியான சர்ச்சைகள் விளையாட்டில் ஒரு தனிநபரின் போட்டியிடும் தகுதியை தவறாக மதிப்பிடுவதாக அவர் மேலும் கூறினார்.
28-8-24 ஆங்கில இந்து பத்திரிக்கையில் சயந்தன் தத்தா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை தமிழில்: மோசஸ் பிரபு
|
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அறிவியல் தொழினுட்பம் அடிப்படையில் ஆன
கலைச்சொற்கள் நிரம்பிய ஆங்கில கட்டுரையை மோசஸ் பிரபு சிக்கலின்றி மொழியாக்கம் செய்துள்ளார். பாராட்டுகள். கட்டுரையின் மையப்பொருள் பரந்த அளவிலான விவாதத்துக்கு வழி செய்கிறது.