உயிரிப் பன்மயப் பாதுகாப்புச் சட்டம்-2002: உயிரிப் பன்மயச் சட்டம் 2002ல் இந்தியாவில் இயற்றப்பட்டது. 1994 சர்வதேச உடன்படிக்கையின் படி (Convention on Biological Diversity) இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி உயிரினங்களின் பன்மயத் தன்மையைப் பாதுகாக்க தேசிய அள்வில் உயிரிப் பன்மய ஆணையம் (National Bio diversity Authority) , மாநில அளவில் உயிரிப் பன்மய ஆணையம் (State Bio Divesity Authority), ஊராட்சி அளவில் உயிரிப் பன்மய பாதுகாப்பு கவுன்சில் (Bio diversity Council) உட்பட கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
இந்தச் சட்டம் உயிரினங்களின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பது, சூழல் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளுவது, ஒவ்வொரு உயிரினத்தின் மரபுகளைப் பாதுகாத்து, நீடித்த வகையில் பலன்களை உள்ளூர் சமூகம் பயன்பெறுவது, பகிர்ந்து கொள்வது எனக் கூறப்படுகிறது. இந்தச் சட்டப்படி 2021 ஏப்ரல் நிலவரப்படி 2.64 லட்சம் உள்ளூர் ஆளவில் பாதுகாப்புக் கவுன்சில்களும் 2.48 லட்சம் உயிரிப் பன்மயப் பாதுகாப்பு தகவல் ரெஜிஸ்டர்களும் உருவாக்கப்படுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மாநில ஆணையங்கள் உருவாக்கப்பட்டு உயிரி வளங்கள் உள்ளூர் மக்கள் வசம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில ஆணையங்கள் மக்கள் குழுக்களின் அதிகாரம் பெறாமல் அனுமதி வழங்க முடியாது.
இப்பாதுகாக்கும் முறைகள் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய ஆணையம் உயிரி வளங்களைப் பாதுகாக்கும் வகையில் பயன்படுத்தும் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கி வருகிறது. ஒட்டு மொத்தமாக உயிரி வளங்கள் உள்ளூர் சமூகத்தின் ஒப்புதல் பெறாமல் பயன்படுத்த முடியாது. மேலும் நயோகா சர்வதேச ஒப்பந்தப்படி பலா பலன்களை உள்ளூர் சமூகம் பயன்பெறுவது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
நயோகா சர்வதேச ஒப்பந்தம் என்பது 2014ல் இருந்து அமலாகி வருகிறது. இது உயிரி பன்முகத் தன்மையைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டது. உள்ளூர் உயிரி வளங்களை பிறர் வணிக ரீதியாகவோ ஆய்வு ரீதியாகவோ பயன்படுத்தும்பொழுது அதை அந்த சமூகத்தின் ஒப்புதலின் பேரில் பெற்று பயன்படுத்தவேண்டும் எனக்கூறுகிறது. உயிரினங்களின் மீதான மரபு உரிமை உட்பட அனைத்தும் அந்தந்த சமூக மக்களுக்கு உரிமையானது. எனவே அவர்களின் ஒப்புதல் பெறாமல் உயிரின வளத்தை பயன்படுத்தக்கூடாது எனக் கூறுகிறது. அதன் பலாபலன்கள் தொடர்ந்து உயிரி வளத்தைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடியதாகவும் உரிய வகையில் சமூகம் பங்கிட்டுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. இருப்பினும் உயிரி வளப் பலா பலன்கள் பெறுவதில் உள்ளுர் சமூகங்கள், வியாபார நிறுவனங்களிடம் இது வரை தோல்வி அடைந்துள்ளன என்றே கூற வேண்டும்.
உயிரிப் பன்மயச் சட்டத் திருத்தம் 2021: இச் சட்டத் திருத்தங்களை டிசம் 2021ல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பூபேந்திர யாதவ் முன் வைத்தார். இதன்படி வெளிநாட்டு மூலதனங்களைக் கவரும் வண்ணம் இந்தச் சட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. மிக விரைவான முறையில் தாராளமயமான வகையில் ஆராய்ச்சிக்கும் காப்புரிமை பெறுவதற்கும் வழி வகை செய்கிறது. மேலும் வெளிநாட்டில் பதிவு செய்துள்ள கம்பெனிகள் தேசீய ஆணையத்திடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் உள்ளூரில் பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளுடன் இயங்கும் கம்பெனிகளுக்கு இந்த வழிமுறை கூறப்படவில்லை.
சில முக்கிய திருத்தங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்:
- பிரிவு 3(2)(c)(ii) திருத்தப்படி வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்திய உயிரினப் பன்மை கணக்கெடுப்பு, ஆராய்ச்சிகளுக்கான அனுமதி பெறத்தேவையில்லை தற்போதுவரை அந்த உரிமையை உள்ளூர் குழுவிற்கு அந்த அதிகாரம் இருந்தது. இதனால் உரிமைகளும் பறி போய் இதனால் கிடைக்கும் பலாபலன்களை உள்ளூர் சமூகத்திற்கு கொடுக்கும் வாய்ப்பும் பறிபோகிறது.
- பிரிவு 6 (1A) & (1B) ன்படி இந்தியாவில் இருந்து பயன்படுத்தப்பட்ட உயிரி வள ஆராய்ச்சிகள், அதன் பாரம்பரிய அறிவு முறைகளைச் சேகரித்து வெளிநாட்டில் வைத்திருந்தாலும் அதனை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான காப்புரிமை பெற மட்டும் அரசிடம் அனுமதி பெற்றால் போதும் என்கிறது. இதன் மூலம் தேசிய, மாநில ஆணையங்களின் அதிகாரம் பறிபோகிறது.
- பிரிவு 6 (3) கீழ் கொண்டு வரப்பட்ட திருத்தம் என்பது பார்லிமெண்ட் மூலம் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு விலக்கு அளித்து தாவர வகைகளுக்கான உரிமையைக் கோரலாம் என்கிறது. இது தாவர வகைகளை யாரும் உரிமை கொண்டாட முடியும்.
- செக்சன் 58ன் படி விதிமுறை மீறுபவர்கள் உயிரித் திருட்டு என்ற வகையில் பிணை பெறமுடியாத குற்றம் என்பது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
- சட்ட விதி 15ல் செய்யும் திருத்தமானது தேசிய, சர்வதேச அளவில் விஞ்ஞானியாக இருப்பவர் நமது தேசிய ஆணயத்தின் தலைவராக உள்ள சூழ்நிலையில் அவருக்குரிய அதிகாரத்தை உறுப்பினர் செயலர் என்ற அதிகாரிக்கு அளிப்பது இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது.
- செக்சன் 40வது திருத்தம் என்பது ஒரு கம்பெனியோ விவசாயியோ விதைக்கான உரிமையை தாவர வகைகள் & விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001படி பெற்றிருந்தால் உயிரிப் பன்மையச் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டியதில்லை என்கிறது. இது கம்பெனிகளின் உயிரித் திருட்டுக்கு வழிவகுக்கும்.
ஏன் இந்தச் சட்டத் திருத்தங்கள்?
இந்திய உயிரிப் பன்மயச் சட்டம் என்பது உலகிற்கே முன்னுதாராணமானதாகும். ஆனால் கார்ப்பரேடுகளின் நிர்பந்தமும், அந்நிய மூலதன எதிர்பார்ப்பும், உயிரிப் பன்மயத்தையும் வியாபாரமாக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளே இன்று சட்டத்திருத்தங்களை கொண்டு வந்துள்ளன. 2018ல் பாபா ராம்தேவின் திவ்யா பார்மசி உத்தர்காண்ட் மாநில உயிரி பன்மய ஆணையத்தின் மீது வழக்குத் தொடர்ந்து மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களுக்கான பயன்களை உள்ளூர் மக்களுக்குப் பகிர்ந்து கொள்வதில் உள்ளூர் கம்பெனிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் கோரி இருந்தது. மாநில உயர்நீதி மன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால் தற்போதைய சட்டத் திருத்தம் பதஞ்சலி போன்ற கார்ப்பரேட்களுக்கு எளிதாக வழி வகை செய்கிறது.
பயன்பெறப் போவது யார்? பறிகொடுக்கப் போவது யார்?
மிக முக்கியமான உயிரினங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல வார்த்தைகள் நீக்கப்பட்டு உள்ளது. இது எளிதாக உயிரி பன்மய பாதுகாப்பின் பல பாதுகாப்பு முறைகளை விலக்கி எளிதாக வளங்களைச் சூரையாட வழி வகுக்கிறது. தற்போதையச் சட்டப்படி ஆய்வு, பயன்பாட்டு முறைகளை தேசிய ஆணைய அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது. ஆனால் தற்போதைய சட்டத்திருத்தம் அனுமதி எதுவும் பெறத்தேவை இல்லை என்கிறது. இந்தச் சட்டத் திருத்ததிற்கான முக்கிய அழுத்தம் கொடுத்தவர்கள் ஆயுஷ் மருந்துக் கம்பெனிகள், விதை உற்பத்தியாளர்கள், தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆகியோர் தான். இவர்கள் காப்புரிமை வழிமுறைகளை எளிதாகக்க வேண்டும் விற்பனையின் லாபத்தில் ஒரு பங்கினை உள்ளூர் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாகக் கூறுகினறனர். மருந்துக் கம்பெனிகளும் விதைக் கம்பெனிகளும் இச் சட்டத் திருத்தத்தால் பெரும் கொள்ளை அடிக்க வாய்ப்பும் காலங்காலமாக உயிரி வளத்தை பாதுகாத்து பராமரித்து வரும் உள்ளூர் மக்கள் ஆதி வாசி மக்கள் ஆகியோர்களுக்கான உயிரி வளஉரிமை என்பது பறிபோக உள்ளது.
ஆயுஷ் மருத்துவர்கள் இத்திருத்தப்படி சுதந்திரமாக தாவர உயிரி வகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உயிரிப் பன்மயத்தைப் பாதுகாக்கும் எந்த வழிமுறைகளையும் இச்சட்டத் திருத்தம் கூறவில்லை. மொத்தத்தில் தற்போதைய திருத்தங்கள் இந்தியாவின் உயிரிப் பன்மயத்தை அழிக்கும் வகையில் எளிதாக உயிரி வளங்களைச் சூறையாடுவதற்கு வழிவகுக்கிறது. பதஞ்சலி போன்ற உள்ளூர் கார்ப்பொரேட்டுகளுக்கும் அந்நியக் கம்பெனிகளுக்கும் நமது பல்வகை உயிரின வகைகள் பலியாக உள்ளன.
சூழல் மண்டலப் பாதிப்பும் வெப்பமயமாதலும்: இது மட்டுமல்லாமல் உயிரிப் பன்மயம் அழிவுக்குள்ளாகும் போது உள்ளூர் சூழல் மண்டலம் பாதிக்கப்பட்டு புவி வெப்பமயமாதலை அதிகமாக்கி பருவ கால மாற்றத்தை விரைவுபடுத்தும் என்பதும் இதில் மறைந்துள்ள உண்மையாகும். மேலும் தற்போதைய நிலவரப்படி உயிரினப் பன்மைய 12 நாடுகளில் இந்தியா பத்தாவது நாடாக உள்ளது. ஆசியாவில் நான்காவது நாடாக உள்ளது. ஏற்கனவே இத்தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் நமது நாடு இச் சட்டத்திருத்தம் மூலம் விரைவில் இழந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஜனநாயகமற்ற அணுகுமுறை: வழக்கம் போல ஒன்றிய அரசு ஜனநாய விதிமுறைகளை மீறி நேரடியாகவே நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த்ததை அறிவித்தது. இது தவறான அணுகு முறையாகும். மக்களுக்கு உரிய கால அவகாசம் கொடுத்து கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் சட்டத்திருத்தம் உருவாக்கபப்ட வேண்டும். மேலும் நாடாளுமன்ற குழு அமைத்து அதன் மூலம் சாதக பாதங்களை ஆராய்ந்து வர வேண்டும். ஆனால் தற்போது கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக நிலைக்குழுவுக்கு அனுப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக மக்கள் அறிவியல் இயக்கங்கள், சூழல் இயக்கங்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இவர்கள் பின்னால் மக்களை அணி திரட்டுவது அனைவரின் பொறுப்பாகும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.