உயிரின வேற்றுமை காக்க தேவை, மாற்றுமுறை பார்வை..!
– முனைவர் பா.ராம் மனோகர்
நம் இந்திய நாடு, இயற்கை வளங்களை அதிக அளவில் கொண்டுள்ள நிலையினை எண்ணி உண்மையில், நாம் பெருமை கொள்ள இயலும். குறிப்பாக, வட கிழக்கு
பிராந்திய, வனப்பகுதிகள்,மிகவும் வேறுபட்ட, தாவரங்கள், விலங்குகள் அமைந்துள்ள ஒரு வண்ண மயமான பசுமைப் பகுதியாகும். உலகிலேயே எங்கும் காண இயலாத இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க, சிறப்பாக அருணாசல பிரதேச மாநில அரசு திட்டங்களை செயல்படுத்த துவங்கிய நிலை, உண்மையில் வரவேற்கத்தக்கது.
இத்தகைய மிக வேறுபட்ட, வழக்கமான முறையில் அல்லாத, உள்ளூர் மக்கள் பங்கேற்கும் வகையிலான, மாற்று முறை “உயிரின வேற்றுமை பாதுகாப்பு” திட்டங்கள் அங்கு மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளனர். எனினும் இது செயல் பாட்டுக்கு வராமல்,பழைய ஆவணங்கள் வைக்கும் காப்பகத்தில் ஓய்வு எடுக்க அனுமதித்துவிடக்கூடாது.
அருணாசல பிரதேசம் இயற்கை அழகு கூடிய பனிமலை சிகரம், ஏரிகள், வன விலங்கு புகலிடங்கள் நிறைந்த பகுதி ஆகும். 83743 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இதன் ஆக்கிரமிப்பு பிரச்சனை அண்டை நாடு மூலம் அவ்வப்போது இருப்பதும் நாம் அறிந்ததே. 2000 மீட்டர் உயரத்தில் (கடல் மட்டத்திற்குமேல்) அமைந்துள்ள இந்த மாநிலத்தில், அதிசய 500 ஆர்ச்சிட் மலர் தாவர சிற்றினங்கள் காணப்படுகிறது.

மிஷிரி டாகின் என்ற ஆன்டி லோப், மான் இனம், சிவப்பு பாண்டா கரடி, மேக சிறுத்தை, அருணாச்சல மகாக் குரங்கு, பிளித் ட்ரோகோ பேன் பறவை, Horn bill இருவாட்சி பறவை, அழி நிலை வெண் வயிற்று நாரை (White bellied Heron) ஆகிய சிறப்பினங்கள் உள்ள ன. வழக்கமாக புலி, நரி, சென்னாய், ரீசஸ் மகாக் குரங்கு, ஆகிய 40 வேறுபட்டவகை பாலூட்டிகள், 296 பறவையினங்கள், 500 சிற்றினங்கள் வண்ணத்துபூச்சிகள் வசிக்கும் பகுதி ஆகும்.
பிரமப்புத்திரா ஆறு பகுதியில் உள்ள பசுமை மாறாக் காடுகள், கிழக்கு இமாலய மலை ஒட்டியும் இங்குள்ளது.மேலும், இந்த மாநிலம் பூட்டான் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு இடையில் வன விலங்குகளின் வழிதடம் ஆக, முக்கிய உயிரின வேற்றுமை கொண்ட இயற்கை பகுதியாக விளங்குகிறது. இந்த மாநிலத்தில் உள்ளூர் பழங்குடி இனத்தினை சேர்ந்த நயீஷி, அப்பதானி, மோன்பா ஆகிய மக்கள், காடுகளை நம்பி உணவு, மருந்து, மற்றும் சிறப்பாக பாரம்பரிய கலாசார பழக்க வழக்கங்களை க்கொண்டு நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
அருணாசலபிரதேசத்தில், வனப்பகுதிகளில், உயிரின வேற்றுமையினை, பாதுகாக்க, அரசின் நேரடி நிர்வாக முறையில் இருந்து, சற்று மாறுபட்ட நிலையில் இயற்கை சார்ந்து வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து, மாவட்ட அளவிலும் சமுதாய பங்கேற்பு முறையில், உள்ளூர் பழக்க, வழக்கங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. புனித காடுகள் வளர்க்க உற்சாகமும், ஊக்கமும் அரசு துறையால் தரப்பட்டது. வேட்டை தடை செய்வது ஒழுங்குப்படுத்தப்பட்டது.
பாரம்பரிய அறிவுடன், அறிவியல் ஆய்வு நுணுக்கங்கள் ஒன்றிணைந்து அங்கு உயிரின வேற்றுமை காக்க, முயற்சி துவங்கியது. உள்ளூர் மக்களுக்கு, குழுக்கள், அமைத்து உரிய இயற்கை பாதுகாப்பு பயிற்சி, ஊக்க ஊதியம், தரப்பட்டு சட்ட பாதுகாப்பு அரசு தந்துள்ளது எனவே இத்தகைய நிர்வாக முறை ஓரளவு, பொருள் பொதிந்து சிறப்பாக மேற்கொள்ள முயற்சி எடுத்துள்ளனர்.
குறிப்பாக பாக்கே புலி பாதுகாப்பு காட்டில், இம்முறை சமுதாய பங்கேற்பு அளிக்கப்பட்டு துவங்கியது. அங்குள்ள, வனப் பகுதி நிலங்களின் உரிமை உள்ளூர் மக்கள் பெற வழி உருவாக்கி, அதே சமயம் அங்கு வசிக்கும் அரிய பறவை இருவாட்சி (HORN BILL), கூடுகளை மக்களே தத்து எடுத்து, பாதுகாக்கும் முறை செயல்படுத்த தயார் ஆகிவிட்டனர்.

அவற்றுக்கான பொருளாதார ஊக்க நிதி, சூழல் சுற்றுலா உரிமை, மற்றும் நீண்ட நிலைத்த அறுவடை (SUSTAINABLEHARVESTING) என்ற முறையில் குறிப்பிட்ட கால இடைவெளி கொண்டு, கால்நடைகளின் மேய்ச்சல் அனுமதி திட்டம் செயல்படுத்த முனைந்துள்ளனர். எனினும் இந்த மாற்றம் கொண்ட உயிரின பாதுகாப்பு முறையில் மக்களை விழிப்புணர்வு அடைய செய்து, செயல்பட செய்யலாம்.
இதனால்” பாக்கே முறை “நிச்சயம் பருவ கால பிரச்சினை களிலிருந்து, இயற்கை சூழல் மீட்பு, நீண்ட நிலைப்பு தன்மை கொண்ட மக்கள் வாழ்க்கை மாற்றம், ஏற்பட்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் உயிரின வேற்றுமைக்கான ஐக்கிய நாட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பின் (UNEP) குறிக்கோள்கள் நிச்சயம் நிறைவேற்ற அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது.
ஆனால் டிபாங் பள்ளத்தாக்கு நீர் மின்சார திட்டம், அருணாச்சல நெடுஞ் சாலை திட்டம், நம் சிக் -நம்புக், நிலக்கரி, சுண்ணாம்பு சுரங்க பணி ஆகிய வளர்ச்சி திட்டங்கள் முறையே முக்கிய இயற்கை வாழ்விடங்கள் பாதிப்பு, வன உயிரின சாலை விபத்து இறப்பு, காடழிப்பு, நீர் மாசு போன்ற பிரச்சினைகள் அருணாச்சல பிரதேச மாநில இயற்கை பாதுகாப்பு திட்ட செயல்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் என்பதை மறுக்க இயலாது.
மற்ற மாநிலங்களில், இதே போன்ற சமுதாய பங்கேற்பு முறை நடைமுறை படுத்த முயற்சிகள் பல தொடர்ந்து மேற்கொள்ள ப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த சமுதாய இயற்கை பாதுகாப்பு திட்டம், சுரங்க தொழில், புதிய கட்டிட திட்டங்கள் மூலம் பல பாதிப்புகள் சந்திக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மிக கடுமையாக உயிரின வன பாதுகாப்பு சட்டம் இருந்தாலும் பெங்களூரு மாநகரத்தினைச் சுற்றிலும் விரைவாக நடக்கும் நகரமயமாக்கம் பிரச்சனையாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுசூழல் இயற்கை பகுதியில் சாலை திட்டங்கள், தொழிற் சாலை பெருக்கம், ஆகிய காரணங்களினால், காடுகள் துண்டாடப்படுகின்றன.
அருணாசல பிரதேச மாநில அரசு மேற்கண்ட மாநில நிலைகள் ஆராய்ந்து அவற்றில் உள்ள நேர்மறை தீர்வு, முறைகள் அறிய வேண்டும். பொருளாதார லாபங்கள் காரணங்களுக்கு, இயற்கை பாதுகாப்பு திட்டங்கள் பலி ஆகிவிட அனுமதி தரக்கூடாது. கடுமையான சட்டம், நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
அருணாச்சல மாநில அரசு, இளைஞர்கள் மூலம் விழிப்புணர்வு, கணிணி பயன்படுத்தி, உள்ளூர் குடிமக்கள் அறிவியல் திட்டம் செயல்படுத்த முனைகின்ற நிலையும் சிறப்பு ஆகும். செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE) வழியில் ட்ரோன் முறையில் வனப்பகுதியில் குற்றங்களை கண் காணிப்பு செய்ய முடிவு செய்துள்ள நிலை வரவேற்க வேண்டிய ஒன்று ஆகும்.

பொதுவாக, வளர்ச்சி அடைந்து கொண்டுள்ள நம் இந்திய நாட்டினை ப் போன்ற பல்வேறு நாடுகளுக்கு இயற்கை பாதுகாப்பு திட்டங்களை முறையாக நிறைவேற்ற உரிய நிதி ஒதுக்க இயலாத நிலை வருத்தம் தரக்கூடியது. எனினும், முறையான சட்டங்களை சரியான வழியில் செயல்படுத்தவும், குறைந்த கால பொருளாதார வளர்ச்சி நோக்கத்திற்காக, அடிப்படை சுற்றுசூழல் ஆதாரம் அழிக்க அனுமதி தருவது மறுக்கப்பட வேண்டும்.
மேலும், உயிரின வேற்றுமை பாதுகாப்பு திட்டங்களை முழுமையாக செயல் வடிவம் கொடுக்க வனத்துறை, வனப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு அவற்றின் முக்கியத்துவம் அறிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
மேலும் வனப்பகுதி மக்களை இயற்கை, வன பாதுகாப்பு செயல்பாடுகளில், ஈடுபடுத்தி அதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஓரளவு முன்னேற்றம் வரச் செய்ய அரசு உதவி செய்யும் நிலை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய உயிரின வள வேறுபாடு பாதுகாப்பு மாற்று முறைகள் பற்றிய சிந்தனை, விழிப்புணர்வு, செயல் திட்டங்கள் பின்பற்ற வேண்டும்.
அரசு பல திட்டங்களை உருவாக்கி செயல் படுத்த எண்ணினாலும், ஒரு புறம் அரசே பொருளாதார வருவாய் நோக்கில் வளர்ச்சி திட்டங்களை, எவ்வித தடை இல்லாமல் அனுமதி தருவது பற்றிய விழிப்புணர்வு வனம் சார்ந்த மக்கள் பெறுவது மிகவும் முக்கியம் ஆகும்.
நிச்சயம் எதிர் காலத்தில், இயற்கை பாதுகாப்பு திட்டங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம், மற்றும் விளம்பரமாக முடியாமல், செயல்படும் நிலைக்கு அடையும் என்று நம்புவோம்!!!
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

