Bioscope Karan 18th Web Article Series by Vittal Rao. This Series About கிழக்கு முகமாய் – விட்டல்ராவ்கிழக்கு முகமாய்

பயாஸ்கோப்காரன் சென்னைக்கு வந்து வாழ்க்கையில் நங்கூரமடித்து நின்றதும் திரைப்படங்களை தியேட்டர்களிலும், திரைப்படச் சங்கங்களிலும், மாறி மாறி பார்த்து வைக்கும் வாய்ப்புகளையும் அனுபவங்களையும் பெற முடிந்தது. கீழை நாட்டு திரைப்படக் கலாச்சாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய் ஒருபுறமும், அதேசமயம், ஏதோ ஒரு மெல்லிய சரடால் ஒன்றுக்கொன்று ஒத்திசைத்து நெருக்கமாகி சார்ந்திருப்பதும் கவனிக்கப்படவேண்டியது. சீனப்படம் HONG-FEN [1995]-இல் அரிசி மாவைக் கொண்டு நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நடுத்தர வயதுப் பெண்ணொருத்தியின் வாழ்க்கைச் சித்தரிப்பு. தன் வாழ்வின் குறிக்கோளாக ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடுமையாக உழைத்து பணம் சேர்தது வாங்கி விடுகிறாள்.

இப்போது புதுப் பிரச்சினை ஒன்று. அக்கம் பக்கத்திலிருந்து தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இவள் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்து கூடுகிறார்கள். இவ்வளவு காலமாய் ஒட்டி உறவாடிய சினேகிதிகளை வரவேண்டாமென சொல்ல முடியாது. சிறுசுகள் தொலைக்காட்சிப் பெட்டியைத் தொட்டுப் பார்க்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதை தடுக்கிறார்கள். பிறகு இவளுக்கே தன் பெருமையை மற்றவர்கள் பேச வேண்டுமென்று நினைத்து எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிக்கிறாள். ஒருநாள் டி.வி.பெட்டி வேலை செய்யாமல் மக்கர் செய்கிறது. சொல்லியனுப்பியும் பழுது பார்க்க வல்லுனர் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. சினேகிதிகளின் வருகை நிற்கிறது. இவளைவிட அதிக அக்கறையோடு “சரியாச்சா, சரியாச்சா?” என்று அவர்கள்தான் சதா இவளைக் கேட்டுக் கொண்டேயிருக்க ஒருநாள் பெட்டி சரியாகிறது. ஆனால் முன் போலில்லை. இப்படத்தை வேறுவிதமாக கன்னடத்தில் பார்த்த மாதிரியுமியிருக்கிறது. [குலாபி சினிமா]. உலகத் திரைப்பட விழாவில் காண நேரிட்ட இச் சீனத் திரைப்படத்தை இயக்கியவர் லீ ஷாவோ ஹோங் [LEE SHAO HONG].

Ermo - Alchetron, The Free Social Encyclopedia

“எர்மோ” [ERMO] எனும் சீனப்படம் [1995] குறிப்பிட வேண்டிய ஒன்று. கிராம வாழ்க்கை, பள்ளிக்கூட நாட்கள், என்பனவான அடிப்படை வாழ்வியல் சங்கடங்களை வைத்து பின்னப்பட்ட கதையைக் கொண்ட இப்படத்தை சிறப்பாக இயக்கியவர் மக்கள் சீனாவின் புதிய சினிமாவுக்கான இயக்குநர் ZHOU XIAOWEN.

Red Cherry (1995) - IMDb

1996-ல் திரைப்பட விழாவில் காட்டப்பட்ட செஞ் செர்ரி [RED CHERRY] மிகவும் பேசப்பட்டு பாராட்டப்பட்டு பல்வேறு விருதுகள், பரிசுகள் பெற்ற படம். இப்படம் ஃபாசிஸ எதிர்ப்பு யுத்தத்தில் அடைந்த வெற்றியின் ஐம்பதாம் ஆண்டு நினைவுக்கு அர்ப்பணிக்கப்படுவதான அறிவிப்போடு வெளியானது.
முன்னாள் சோவியத் யூனியனில் பெலோரஷ்யாவுக்கருகில் இயங்கி வந்த இவானோவ் சர்வதேச அனாதைப் பள்ளிக்கூடத்தில் [IVANOV’S INTERNATIONAL SCHOOL] படித்த சில சீன மாணவர்கள், 1940-1945 கால கட்டத்தில் அடைந்த உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் உருவான அரிய சீனத் திரைப்படம் செஞ் செர்ரி [RED CHERRY], 2-ம் உலகப் போரில் பெற்றோர்களை இழந்த சூ சூ [CHU CHU] என்ற சிறுமியையும், லுவோ ஜியாமன் [LUO XIAMAN] என்ற சிறுவனையும் அந்த ரஷ்ய சர்வதேசப் பள்ளியில் சேர்க்கின்றனர். ஜெர்மன் நாஜி படைகள் ரஷ்யாவை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் சண்டை நடந்தவாறு உள்ள 1940-45 கால கட்ட சூழலில் அப்பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெலோரஷ்யாவிலுள்ள கோடை முகாமுக்குச் செல்ல பள்ளி ஏற்பாடு செய்கிறது. கர்னல் கீல் [COL.QIEL] எனும் கிராதக ஜெர்மன் படைத்தலைவன் ரஷ்ய-சீனச் சிறுவர்களைத் தன்னோடு கூடைப்பந்தாட்டமாட கட்டளையிட்டு, முரட்டாட்டம் ஆடி சிறுவர்களை மோதித் தள்ளி காயமுறச் செய்து அதை ரசிக்கிறான். அப்போது பள்ளியின் ரஷ்ய ஆசிரியை மணியடித்து அவர்களை வகுப்புக்கு அழைப்பது நாஜி அதிகாரிக்கு பொறுக்கவில்லை. ஆசிரியை எதிரியின் ஆக்கிரமிப்பையும் கொடுமையையும் குறிப்பால் உணர்த்தி உரையை நிகழ்த்துகிறாள். அவள் பேச்சைக் கேட்கும் ராணுவ அதிகாரி அவளைச் சுட்டு கொன்று விடுகிறான். இதுபோன்ற பல்வேறு துன்பங்களை பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள்.

அடுத்து ஜெர்மனிய ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் ஒருவன் வருகிறான். ஒரு காலை இழந்து பொய்க் காலோடு நடமாடும் ஜெனரல் கொடுமையிலும் கொடுமையானவன். சூ சூவை அவனது இருப்பிடத்தைச் சுத்தம் செய்ய அனுப்புகிறார்கள். நாஜி ஜெனரல் தன்னை ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொள்ளுபவன், அவனுக்கு குரூர எண்ணம் ஒன்று. அழகிய இளம் பெண்களின் உடலில் தனக்கு மிகவும் பிடித்தமான, நாஜிகளின் மூன்றாம் ரீச் [ஹிட்லரின் பரம்பரை]சின் சுவஸ்திகா சின்னத்தை மையமாய் வரைந்து அதற்கு மேலே இரு சிறகுகளையும் விரித்து நிற்கும் கழுகின் உருவை பலவண்ணங்களால் பச்சை குத்தி வைப்பது [TATTOO]. அம்மாதிரி உடலெங்கும் பச்சை குத்தப்பட்ட பெண்ணைக் கொண்டு வந்து மதுவும் விலை மாதுகளோடும் கும்மாளம் போடும் நாஜி, ராணுவ அதிகாரிகளின் கிளப் ஒன்றின் உயரமான மேஜைமீது நிற்க வைத்து நிர்வாணமாக்கி பார்க்கச் செய்து பரவசமடைகிறான்.

அடுத்த ஓவியம் சூ சூ என்பதாகிறது. அவனது லட்சியமே அதுதான். நடமாடும் உயிருள்ள ஓர் ஓவியக்காட்சி, தன் கோர எண்ணத்தையும் செயலையும் கலை என்றே சொல்லிக் கொள்ளுகிறான். அச்சமயம் ருஷ்யர்கள் ஜெர்மன் ராணுவத்தை தாக்கி வருகிறார்கள். ஜெர்மன் ராணுவம் தோற்கும் படலம். “நம்மைச் சுற்றி ரஷ்யர்கள் வந்து விட்டார்கள். நாம் அழியப் போவது உறுதி. அதற்குள் என் மகத்தான இறுதி ஓவியத்தை முடிக்க வேண்டும்.” என வெறியோடு கூவிவிட்டு சூ சூவை நிர்வாணமாக கவிழ்ந்து படுக்க வைத்து மயக்க ஊசி செலுத்தி மயக்கத்திலாழ்த்துகிறான். இரண்டு மூன்று தினங்களில் பல வண்ணங்களிலான இறகு விரித்த கழுகு மற்றும் சுவஸ்திகா சின்னங்களை நாஜி, ஜெர்மனியின் மூன்றாம் ரீச் சின்னத்தை பச்சைக் குத்தி முடித்துவிட்டு, “இது எனது மாஸ்டர் பீஸ்”, என்று கூறிவிட்டு துப்பாக்கியை எடுத்து வாயில் சுட்டுக்கொண்டு சாகிறான். ரஷ்யர்கள் வருகிறார்கள். தப்பியோடும் ஜெர்மன் சிப்பாய்களை ஒளிந்திருந்து சுடும் லுவோ ஜியாமன் தான் ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கி அங்கு தன்னைப் பிடிக்க வரும் ஜெர்மானியரை உள்ளே விட்டு பெட்ரோலை கொட்டி வெடி வைத்து அழிப்பதோடு தானும் மரணமுறுகிறான்.

சூ சூவை கோணிப் பையில் போட்டு பொட்டல் வெளியில் கொண்டு போய் போட்டு விட்டு ஜெர்மானியர்கள் ஓடி விடுகிறார்கள். ருஷ்யர்களால் காப்பாற்றப்பட்ட சூ சூவை சர்வதேச பள்ளியின் பிரின்சிபால் அடையாளம் கண்டு கொள்ளுகிறார். இப்போது முக்கிய பிரச்சினை சூ சூ எனும் உயிருள்ள நடமாடும் ஓவியக் காட்சி. அந்த ஓவியம், ஃபாசிஸ நாஜிகளின் மூன்றாம் ரீச்சின் இலச்சினை போன்ற கழுகும் ஸ்வஸ்திகாவும் பல வண்ண மூலிகை மருந்துகளாலான வண்ணங்களைக் கொண்டு அந்த சீனப் பெண்ணின் முதுகெங்கும் பச்சைக் குத்தப்பட்ட ஒன்று. சாமானியத்தில் அழிக்க முடியாது. ருஷ்ய டாக்டர் ஒருவரும் சர்வதேச டாக்டர்களும் இணைந்து சூ சூவின் பச்சைக் குத்தின முதுகுத் தோலை முற்றிலுமாய் உரித்தெடுத்து விட்டு வேறு தோலை வைத்து SKIN GRAFT ரண சிகிச்சை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தோல்வியுறுகிறது.

போர் ஓய்ந்து சூ சூ சீன தலைநகர் பைஜிங்கிற்கு 1950-ல் திரும்பி வந்தவள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழந்து தன் 63வது வயதில் காலமானார் என்பது செஞ் செர்ரியின் வரலாறு. 1996-ன் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது, ஹவுஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு விருது மற்றும் பல விருதுகளைப் பெற்ற இதில் சூ சூவாக நடித்த GUO-KE-YO என்ற நடிகைக்கு சிறந்த நடிகை விருது கிடைத்த RED CHERRY படத்தை இயக்கியவர் YE YING. படத்தின் சிறப்பான ஒளிப்பதிவை செய்தவர் காமிராமேன் ZHANG LI.

File:Pudong, Shangai.png - Wikipediaஷாங்காய் நகரில் 1958-ல் பிறந்து ஹாங்காங்கில் வளர்ந்து உருவான புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குனர் ஓங்க் கார் வை [WONG KAR WAI]. பதிப்போவிய பயிற்சி பெற்ற ஓங்க் கார்வை எண்பதுகளில் சினிமா தயாரிப்பு துறையில் உதவியாளராயும் திரைக் கதையாசிரியராயும் தொடங்கியவர். இவரது, “AS TEARS GO BY”, [1988] எனும் சீனப் படம் இவரது ஆழ்ந்த காட்சி ரூப தனி நடையை வெளிப்படுத்திற்று. இவரது பெரிதும் பேசப்பட்ட “சங் கிங் எக்ஸ்பிரஸ்” [CHUNG KING EXPRESS]Chungking Express (1994) - IMDb 1994-ல் வெளிவந்தபோது மேற்குலக திரைப்பட ஆர்வலர்களை வசீகரித்து அசத்தியது. அவரது கிராஃபிக் பயிற்சியின் பின்புலத்தில் சங் கிங் எக்ஸ்பிரஸ் அதி நவீன உத்திகள் கொண்ட வண்ணப்படமாய் அமைந்தது. ஹாங்காங் காவல் துறையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனின் தன் வருணனையாகச் சொல்லிப் போகும் இப்படத்தில் அவர் புகுத்தியிருக்கும் வண்ண முறையும் ஒலியமைப்பும் அசாத்தியமானது. அதே சமயம் சீனப் பண்பாடு, பாரம்பரியம், சீனக் கலாச்சாரம் என்பனவற்றின் எச்சமாக எதையும் பார்க்க முடியவில்லை. முழுக்க மேலை நாட்டு கலாச்சாரத்தையும் நாகரிக பூச்சாகவும் விளங்கவல்லதாய் அதன் அடிப்படை கதையமைப்பிலிருந்து சகலத்தையும் அமைத்திருக்கிறார் ஓங்க் கார் வை. மேலைநாட்டு கதை வகை, சூழல், நடிப்பு, ஒப்பனை, இசைக் கோர்வைகளாகவே போய்க் கொண்டிருப்பது. ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றையும், கலை, கலாச்சாரப் பண்பாட்டுக்களையும் கொண்ட சீனத்தின் குறியீடுகளாய்க்கூட இவரது படங்களில் பார்க்க முடியவில்லை. அடுத்து, ஓங்கார் வையின் படமான, “DAYS OF BEING WILD”, ஹாங்காங் நகர சூழலையும் வாழ்வியல் முறையையும் கொண்டிருப்பது. ஹாங்காங் 99 ஆண்டுகளாய் பிரிட்டிஷ் காலனியாக இருந்து வந்திருக்கிறதென்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு ஓங்க் கார்வை போன்றோரின் கம்யூனிஸ ஒவ்வாமை காரணமும் இத்தகைய புதிய கலாச்சார முலாம் பூசப்பட்ட சினிமாவை ஆரத் தழுவிக் கொண்டிருக்கலாம்.

அடுத்து ஓங்கார் வை தயாரித்து இயக்கிய “HAPPY TOGETHER” [1997] எனும் நவீன சீனப்படம். இது ஹாங்காங் நகர நவீன நாகரிக வாழ்க்கையில் இரு இளைஞர்களுக்கிடையேயான ஓரினக் கவர்ச்சி காதல் மற்றும் ஓரினப் பாலுறவு பற்றிய படம். ஒரு சமயம் சோகமும், மறுசமயம் மகிழ்ச்சியோடும் போகும் வாழ்க்கைப் பற்றிய படம். இந்தப் படமும் மேற்கு நாடுகளில் மிக்க வரவேற்பையும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றது. ஓரினப் பாலுறவு எங்கும் இருப்பதொன்று. பூடகமான நடவடிக்கைகள் வெடித்துச் சிதறி அம்பலத்துக்கு வந்து உலக அங்கீகாரத்தை வேண்டும்போது எல்லாவற்றுக்கும் உடனடியாய்க் கிட்டுவதில்லை. அதனால் சிக்கலும் சோகமும் தற்கொலை முயற்சிகளும்கூட இவ்வித உறவில் நிகழ்கின்றன. D.H.லாரன்ஸின் பெண்கள் இருவரிடையேயுள்ள ஓரினப் பாலுறவை பற்றிய கதை ஒன்று “FOX” என்ற பெயரில் 70-களில் வெளியானது. விஷயத்தை பூடகமாய் சொல்லும் படம். 1940-களின் தொடக்கத்தில் புகழ் பெற்ற உருது பெண் எழுத்தாளர் திருமதி இஸ்மத் சுக்தாய் “QUILT” [போர்வை] எனும் பெண்களின் ஓரினப் பாலுறவைச் சொல்லும் அதியற்புத சிறுகதையை எழுதியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் இடையில் தைவானைச் சேர்ந்த மற்றொரு சீன இயக்குனர் ஆங் லீ அமெரிக்க கௌபாய்கள் இருவரிடையேயான ஓரினப் பாலுறவைக் கொண்ட Brokeback Mountain (2005) - IMDb “BROKE BACK MOUNTAIN” என்ற ஆங்கில படத்தை இயக்கி ஆஸ்கர் விருதையும் பெற்றவர். இந்நூற்றாண்டில் எடுக்கப்பட்ட “BLUE IS THE WARMEST COLOUR”, என்ற ஃபிரெஞ்சு திரைப்படம் மிகவும் பேசப்பட்ட பெண்களுக்கிடையேயான ஓரினப் பாலுறவு பற்றிய அரிய படம். இந்தியாவில் ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ், குல்பூஷன் கர்பந்தா ஆகியோர் நடித்த “FIRE”ம் அதே வகை படம். ஓங்க் கார் வையின் “ஹாப்பி டு கெதர்” படத்தில் யூ-ஃபை [YIU-FAI] மற்றும் போ விங்க் [PO WING] எனும் இரு இளைஞர்கள் ஓரினப் பாலுறவு ரீதியாக காதலர்கள். இருவரும் விடுமுறையைக் கழிக்க அர்ஜெண்டினாவுக்கு போயிருக்கையில் விங், யூவை ஒதுக்கி விட்டு தனியேபோய் வேறு பையன்களை ஜோடி சேர்த்துக் கொள்ளுகிறான். யூ, ஹாங்காங்குக்குத் திரும்பிப் போக கடுமையாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறான். ஒருநாள் விங் சிலரால் பலமாய்த் தாக்கப்பட்டு கிடக்கையில், யூ அவனைத்தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வந்து தாய்போல சிகிச்சை உணவெல்லாம் அளித்து உண்மை அன்பு எது என்பதை தெரிவிக்கிறான். இருவரும் பழையபடி நெருக்கமாகி ஊர் திரும்புகிறார்கள். இந்தப் படத்திலும் ஓங்க் கார் வை முழுக்கவும் மேற்கின் மாறிவரும் கலாச்சார மாற்றத்தைத் தாங்கிய ஹாங்காங் சீனர் வாழ்க்கையைத்தான் காட்டுகிறார். படத்தின் சிறப்பம்சம் அதன் உயரிய வண்ண ஒளிப்பதிவு. காமிராமேன் கிறிஸ்டோஃபர் டாயில் [CHRISTOPHER DOYLE] பாரட்டுக்குரிய ஒளிப்பதிவாளர்.

ஓங்க் கார் வையின் வெகுவாகப் பேசப்பட்ட மற்றொரு படம், “2046”. சௌ [CHOW] சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் நகருக்கு வந்த ஒரு எழுத்தாளனும் பத்திரிகையாளனுமாவான். ஹாங்காங் உல்லாச விடுதிகளுக்குப் பெயர் பெற்ற இடம். அவன் புகழ்பெற்ற சூதாட்ட மையம் மற்றும் விலை மாதர்கள் வசிக்கும் பெரிய விடுதியில் பணியிலமர்கிறான். அவனுக்கு மிகவும் இணக்கமும் ஏற்றம் மிக்கதுமான இடம். அவன், தான் எழுதியவை எதிர்காலத்தை முன்வைத்த, நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கால வெளியின் எல்லைக்கப்பாற்பட்ட வெகு தொலைவில் நடந்தேறுவதாய் நினைக்கிறான். ஆனால் அது சரியல்ல. அது அத்தனையும் கடந்த காலத்தவை. அவன் எழுதி வந்த நாவலில் மர்மமான ரயில் வண்டியொன்று அவ்வப்போது வருடம் 2046-ஐ நோக்கி புறப்படும். அங்கு பயணம் மேற்கொண்டு போன ஒவ்வொருவருக்கும் தாங்கள் இழந்துவிட்ட கடந்த கால நினைவுகளை அங்கு போனதும் திரும்பப்பெறும் நோக்கமாகவே இருக்கிறது. 2046-ல் ஒன்றுமே மாற்றமடையவில்லை என்று சொல்லப்படுகிறது. அது உண்மைதானென்பதை யாருமே உறுதியாக அறிந்தவருமில்லை, ஏனெனில் 2046க்கு சென்ற ஒருவரும் திரும்பி வந்ததேயில்லை… ஒருவன் மட்டும் அதை மாற்ற விரும்பி அங்கு நிலையாக நின்றான். இந்த கதைப் போக்கினிடையே “2046” என்பது அந்த சூதாட்ட விலைமாதுள்ள விடுதியில் புகழ்பெற்ற அறை. அறை எண் 2046-ல்தான் சௌவின் காதலியும் இளம் விலைமாதுவான பெண் இருக்கிறாள். இந்த உறவு வாழ்க்கை தொடருகையில் அந்த பெண் வேறொருவனோடு ஜப்பானுக்கு சென்று விடுகிறாள். செள 2046- நாவலின் முடிவுக்கும் மேலே புதியதாக ஒரு பிற்சேர்க்கையை எழுதி முடிக்கிறான் அது 2047. அலுப்பற்ற விறுவிறுப்பான படம். ஓங்க் கார் வையின் சிறந்த இயக்கம், சிறப்பான ஒளிப்பதிவு, எடிடிங்கும் சேர 2046 சிறந்த படமாகிறது.

“BA WANG BIEJI” என்ற சீன சொற்றொடரின் ஆங்கில மொழிபெயர்ப்பு “FAREWELL MY CONGUBINE” என்பது. திருமணம் செய்யாது ஆணோடு சேர்ந்து வாழும் பெண் “காங்குபைன்” ஒரு சீன அரசன் தன் “வைப்பை” இறுதியாக அனுப்பி வைக்கும் கதையாடலைக் கொண்ட புகழ் பெற்ற சீன மிக பழைய பாரம்பரிய இசை நாடகத்தின் பெயர் அது. உலகெங்கும் இந்திய தேவதாசிக் குலம் என்று குறிப்பிடப்பட்ட குடிகள் உட்பட தாசிக்குல குடிமக்களுக்கும் இசை, நடனம், கவிதை, இசை, நாடகம், நாடகம் எனும் கலைத் துறைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு, செயல்பாடு, சேவை என்பவை மறுக்க முடியாத அளவில் இன்றளவு இருந்துவரும் நிரூபணங்கள், அந்த வகையில் பண்டைய சீனமும் அந்த கலைப் பங்களிப்புகளில் அதன் தாசிக்குல மாந்தரின் அர்ப்பணிப்புகளைக் கண்டிருக்கிறது. “காங்குபைன்” படத்திலும் தாசிகளும், பண்டைய சீன கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக விளங்கிய இசை நாடக செயற்பாட்டோடு இணைந்திருப்பதை விரிவாகவே கூறுகிறது.

காங்குபைன் கதை 1924-லின் சீனத்து சூழலிலிருந்து ஆரம்பிக்கிறது. “மலர்ச்சி” என்ற பெயர் கொண்ட பிரபலமான விலைமாதர் இடத்திலுள்ள இளம்பெண் ஒருத்தி தன் ஆறுவிரல்கள் கொண்ட பையனோடு பகலில் வெளியேறி சீனத்தின் புகழ்பெற்ற இசை நாடகக் குழுவின் குருவிடம் ஓடுகிறாள். பகலில் விலை மாதைப் பொதுவிடத்தில் பார்க்கும் ஆண்களின் எதிர்வினை அற்புதமாயும் அளவோடும் படமாக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பைஜிங்கிலிருக்கும் “பைஜிங் திரைப்பட அகாடெமி, கலாச்சாரப் புரட்சியும் நால்வர் குழுவின் [CULTURAL REVOLUTION] செயல்பாடுகளும் ஓய்ந்துபோன நிலையில் 1978-ல் திறந்து விடப்பட்டது. அதில் உருவான சீன திரைப்படக்காரர்களின் ஐந்தாவது தலைமுறையின் முதல் இயக்குனர் வரிசை உலக சினிமா அரங்கில் தோன்றியது. அதில் முக்கியமானவர் கெய்கெ சென் [KAIGE CHEN] சீனாவில் கலாச்சார புரட்சி 1966-ல் உச்சத்திலிருந்த சூழலில், கெய்கெ பெற்று அனுபவித்த மிகக் கசப்பான நினைவுகளை, தைரியமாகவும் தீரத்தோடும் தாம் அற்புதமாய் இயக்கிய “FAREWELL MY CONCUBINE” படத்தில் புகுத்திக் கொண்டு வந்திருக்கிறார்.Farewell My Concubine (1993) - IMDb ஒரு கையில் ஆறு விரல்களிருப்பது இசை நாடக நடிப்புக்கு லாயக்கற்றதென்று கூறி, நாடகப் பள்ளியின் தலைவரும் குருவுமானவர் விலைமாதின் மகனான டௌஜியை [DOUZI]யை நிராகரிக்கிறார். மாணவர்கள் கடுமையாய் தண்டிக்கப்படுமிடம் அது. டௌஜியை விட வயதில் பெரிய லேய்ஜி [LAIZI] காங்குபைனில் அரசனாக நடிப்பவன். டெளஜியின் ஆறாவது விரலை கத்தியில் வெட்டியெறிந்துவிட்டு நாடகப் பள்ளியில் சேர்க்கிறாள் விலை மாதான தாய். அவனை அரசனின்
“வைப்புப் பெண்” [CONCUBINE] பாத்திரத்தில் நடிக்க பயிற்சியளித்து மிகச் சிறந்த நடிகையாகிறான் ஆணாகிய டௌஜி. இதனிடையில் இரண்டாம் உலகப்போர், ஷியாங் கேய் ஷேக்கின் நேஷனாலிஸ்ட் கட்சியினரின் கொடுமை, அட்டகாசம் படத்தில் இடம் பெறுகிறது. ஜப்பானின் ஆக்கிரமிப்பும் ஷியாங்கே ஷேக்கின் கோமிங்டாங் கட்சியெனும் தேசியவாதத்தின் தைவான் தீவுக்கு ஓட, தலைவர் மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் மலர்கிறது.

பின் கலாச்சாரப் புரட்சி, நால்வர் குழுவின் தர்பார் எல்லாம் வந்து போகிறது. இச்சமயம், டௌஜியை அரசு கைது செய்து, அவன் செய்ததாக கலாச்சாரப் புரட்சிக் குழு சுமத்திய குற்றங்களுக்காக விசாரணை நடத்துகிறது. ஷியாங்கே ஷேய்கின் கோமிங்க் டாங் சிப்பாய்களுக்கு பாட்டுப் பாடியதற்காகவும், ஜப்பானிய ராணுவத்துக்கு இசைபாடியதற்குமான குற்றங்களாய் அவை. பிறகு அந்தப் பழி வேறொரு குருவின் மீது திரும்புகிறது. லேய்ஜி ஜுஜியன் [JUXIAN] எனும் அழகிய விலைமாதைத் திருமணம் முடிக்கும் செயலால், நாடகத்தில் அரசனும் அவனது ஆசை நாயகியுமாய் நடித்து, நிஜ வாழ்வில் ஓரினப் பாலுறவிலிருந்த டௌஜியும், லெய்ஜியும் பிரிகிறார்கள். கலவரம் ஒன்றில் ஜுஜியின் கரு கலைந்து போகிறது. இரு இசை நாடகக் கலைஞர்களின் ஐம்பது வருட உறவை இவ்வளவு அரசியல் சமூக நிகழ்வுகளினூடே மிக அற்புதமாக திரைக் காவியமாக்கியிருக்கிறார் இயக்குனர் கெய்கே சென்.

The Piano - Rotten Tomatoes

கேன்ஸ் உலகத்திரைப்பட விழாவில் இப்படத்திற்குக் கிடைத்த GOLDEN PALM விருது சீனப்படம் ஒன்றுக்கு கிடைத்த முதல் கேன்ஸ் விருது. அதே சமயம் இவ்விருது மற்றொரு சிறந்த படமான “THE PIANO” என்ற ஆஸ்திரேலிய படத்துக்கும் காங்குபைனுக்கும் சேர்த்து அளிக்கப்பட்டது. காங்குபைன் பெண்ணாக LESLIE CHEUNG-ம், FENGYI CHANG அரசனாயும் நடித்த இப்படம் 1993-ல் வெளியானது. கெய்கே சென்னின் சமகாலத்து திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், எழுத்தாளரும், நடிகரும், சிறந்த காமிரா ஒளிப்பதிவாளருமான ஜாங் இமெள [ZHANG YIMOU] 1987-ல் வெளியான சிறந்த சீனப்படம்“RED SORGHUM”, என்ற படத்தை இயக்கியவர்.

[தொடரும்]

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்

தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்

தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்

தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *