கிழக்குமுகமாய்
கீழை நாடுகளில் ஜப்பானின் கலாச்சாரம் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது அவர்களின் கிமோனாயில் மண்டியிட்டு உட்காருவது, தேநீர் உபசரிப்பு, அழகிய குடை மற்றும் விசிறி, இவையனைத்தும் சடங்குகளாகவே மேற்கொண்டு வந்தவை. பண்டைய ஜப்பான் (16-17ம் நூற்றாண்டு) எனும்போது அதன் புகழ்பெற்ற சாமுராய் போர் வீரர்கள், சண்டை காலத்திலும் அமைதி காலத்திலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள், அவர்கள் உயிருக்கும் மேலாக மதித்த சுயகவுரவம், இதன் காரணமாய் அவர்கள் மேற்கொண்ட தற்கொலைச் சடங்கு என்பவை முக்கிய ஜப்பானிய கலாச்சார பண்பாடுகள். இவற்றை வைத்து ஹாலிவுட்டிலும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, SAYANORA ATEA HOUSE AT AUGUSTMOON என்பவை. ஜப்பானின் அசல் இயக்குனர்களால் உருவான மகத்தான திரைப்படங்களைப் பார்க்குமுன் ஜப்பானின் மகத்தான கலைஞன் ஒருவனைப் பற்றியும் பேசலாம்.

யூகியோ மிசிமா- சாமுராய் – ஹராகிரி
யூகியோ மிஷிமா (YUKIO MISHIMA) தன் 45- வது வயதின் போதே 20 நாவல்கள், 39 நாடகங்கள், ஒரு பயண நூல், எண்பது சொச்சம் சிறுகதைகள், மற்றும் கணக்கற்ற கட்டுரைகள் எழுதியிருந்த ஜப்பானின் எழுத்தாளர் 1968-ன் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு முக்கிய தகுதியாளராய் சொல்லப்பட்டிருந்தவர். ஆனால், ஜப்பானின் மற்றொரு நாவலாசிரியர் யாசுநாரி காவ பாட்டா (YASUNARI KAWABATA) என்பவருக்கு அவ்வாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிஷிமா திரைப்படங்கள் தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். கராத்தே மற்றும் பண்டைய ஜப்பானிய கெண்டோ என்ற வாட்போர் பயிற்சியும் பெற்றவர். இதனால் ஜப்பானின் ஹெமிங்வே என்று அழைக்கப்பட்டவர்.
மிஷிமா நான்கு பகுதிகளாக ஒரு மாபெரும் நாவலை எழுதி முடித்தார். அதன் இறுதி பகுதியை எழுதி முடித்து (THE SEA OF FERTILITY) என்று அதற்கு பெயரிட்டு பதிப்பகத்துக்குச் சேர்த்தார். நிலவில் தண்ணீரற்ற சில்லிட்ட காலியான கடல்கள் என விஞ்ஞானம் கருதும் நிலவுப் பகுதியை SEA OF FERTILITY என அழைப்பார்கள். நாவலின் இவ்விருதி பகுதி ஜப்பானின் பாரம்பரிய கனவான் தன்மைகளையும், 1912 முதல் 1970 வரையிலான புதிய சீமான் செழிப்பையும் அவரது சமகால ஜப்பானிய வாழ்க்கையில் அவர் கண்டுணர்ந்த அதீத வெறுமையையும் பற்றி விவரிக்கப்படுகிறது.
1960ன் தொடக்கத்தில் மிஷிமா SHIELD SOCIETY என்ற தேசியத்தைப் பாதுகாக்கும் படையொன்றைத் தொடங்கினார். அவரது சிந்தனையை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் கொஞ்சம்பேர் படையில் சேர்ந்தனர்.
மேற்கத்திய நாகரீகத்தையும் மேற்கத்திய அரசியல் சட்ட அமைப்பையும் தழுவிக் கொண்ட ஜப்பானில்தான் கண்ட பொருளியல் சீரழிவைப் பற்றிய தம் வெளிப்படையான மனக்குறையை மிஷிமா தமது ஆரம்ப எழுத்துக்களிலும் வாழ்க்கையிலும் கையாண்டு வெளிப்படுத்தியவர். ‘‘ஒரு தேசத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முக்கியமான யுத்தத்தை முற்றிலுமாய் துறக்க வேண்டும்’’ என்று 2-ம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா விதித்த அரசியல் சாசனத்தை மிஷிமா ஏற்கவில்லை. உலகப் போருக்கு முன்பிருந்த அசல் ஜப்பானிய அரசியல் சாசனம் புதுப்பிக்கப்பட்டு ஜப்பானிய அரசர் மீண்டும் புனிதமானவராய் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் யுத்தத்தில் ஜப்பான் இழந்த கெளரவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினார் மிஷிமா.
சுமார் 100 இளைஞர்கள் சேர்ந்தார்கள். ஜப்பான் ராணுவத்தினரை தம் படையில் சேர்க்கும் முயற்சியில் தோல்வியுற்ற மிஷிமா, ராணுவ தளபதியை பேட்டி எடுப்பதுபோல தம் வீரர்களோடு சென்று அவரைக் கட்டி போட்டுவிட்டார். தளபதியின் ராணுவ வீரர்கள் ஓடி வரவும் அவர்களில் எட்டுப் பேரை மிஷிமாவின் வீரர்கள் வாளால் வெட்டிக் கொன்றனர். போலீசும் விரைந்து வந்தது. 1200 ராணுவ வீரர்கள் சுற்றி நின்றனர். தளபதியுடன் கதவைச் சுத்திக் கொண்ட மிஷிமா பால்கனியில் போய் நின்று கொண்டு சாமுராய் பாணியில் உடுத்து பத்து நிமிடங்கள் பேசினார். நடப்பு அரசியல் சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழ ராணுவத்தை அழைத்தார்.

மேற்கத்திய பாணி அரசியல் சாசனத்தை ஒழித்து, உலகப் போருக்கு முன்னிருந்த பழைய மன்னரின் அரசியல் சட்டங்களையே பின்பற்றுவதன் மூலம் ஜப்பானியரின் பண்டைய பெருமைகளையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்க தம் படையில் இணையுமாறும் புரட்சி செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். அவரது முயற்சி ஏற்கப்படவில்லை. மிஷிமா ஜப்பானிய சாமுராய்களின் பாரம்பரிய தற்கொலை வடிவான ‘‘செப்புகு’’ (SEPPUKU)வின் நியதிபடி தன் வாளையெடுத்து தம் வயிற்றில் ஆழமாய் இறக்கினார். செப்புகு என்பதை ஹராகிரி என்றும் அழைப்பார்கள். உடனே தாமதிக்காது அவரது படையைச் சேர்ந்த மகாகட்சு மோரிடா என்பவன் தன் வாளை உயர்த்தி ஒரே வீச்சில் மிசிமாவின் தலையை வெட்டி உருண்டோடச் செய்தான். இது புனித காரியமாக கெளரவ மரணமாய் சாமுராய்கள் கருதுவர். மிசிமாவின் இயற்பெயர், கிமிடேக் ஹிராவோகா (KIMITAKE HIRAOKA) என்பது சாமுராய் பரம்பரையில் வந்த செல்வந்தரின் மைந்தர். ஹராகிரியை வைத்து ஜப்பானில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் மிகச் சிறப்பான படம், ‘‘ஹராகிரி,’’
ஜப்பானிய திரைப்பட கலைஞர்களில் தனித்துவமிக்க, ஆனால் சரியாக கவனிக்கப்படாத படைப்பாளி மசாகி கோபயாஜி. தீவிரமாய் போரை எதிர்த்தவர் என்ற ரீதியில் மிசிமாவின் கொள்கைக்கு நேர்மாறானவர். இவர் இயக்கிய HUMAN CONDITION என்ற மகத்தான திரைப்படம் மூன்று தொகுப்புகளாய் ஒன்பது மணிநேரம் ஓடக்கூடிய காவியத் திரைப்படம். 1962ல் கோபயாஷியின் மிகச் சிறந்த படமென கருதப்படும் ஹராகிரி வெளிவந்தது. ஜப்பானிய திரைப்படங்களில் மிக முக்கியமானது ஹராகிரி. 1630களின் கதை நிலவரப்படி, ‘‘இயி’’ எனும் வம்சாவளியின் மாளிகைக்கு ஹன்சிரோ ட்சுகுமோ எனும் சாமுராய் ஒருவர் வருகிறார். சாமுராய் எனப்படும் ஜப்பானிய பாரம்பரிய பயிற்சி பெற்ற வாட்போர் வீரர்கள் பிரபுக்களின் பாதுகாப்பாளர் குழுவிலிருப்பார்கள். அன்றைய ஜப்பானில் உள்நாட்டுப் போர்களில் சாமுராய்கள் போரிட்டவர்கள்.
இச்சமயம், அந்தப் போர்கள்ஓய்ந்து, அமைதி நிலவியதால், அங்கிருந்த சாமுராய் குழுக்கள் கலைக்கப்பட்டன. வேறு வேலையில் ஈடுபட முடியாது வறுமையில் உழன்ற ட்சுகுமோ இயிகுல மாளிகைக்கு வந்து அங்கு தான் ஹராகிரி செய்து கொள்ள அனுமதி கேட்கிறார். பணமின்றி, உணவின்றி வறுமையில் கஸ்டப்படுவதைவிட ஹராகிரி மூலம் தன்னை முடித்துக் கொள்ள வந்திருப்பதாய் கூறுகிறார். அன்றைய ஜப்பானில் ஹராகிரி முறையில் உயிர் விடுவது புனித காரியமாய் கருதப்பட்டது. அதைச் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிமுறைகளை ஏற்கவேண்டும். அவசரமின்றி நிதானமாய் செய்யவேண்டும்.
ஹராகிரி ஒரு சடங்கான தற்கொலை குறுவாளாக அடிவயிற்றை இடமிருந்து வலமாய் ஆழமாய்க் கிழித்துக் கொண்டவுடன் இதற்கு உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தம் வாளால் தலையை வெட்டி ஹராகிரி சாவை முடிப்பார். சிலர் பணம் பெறுவதற்காக தான் ஹராகரி செய்வதாய்க் கூறினால் ஐயோ பாவம் என்று பணத்தைத் தந்து அனுப்புவார்கள். சுகுமோவையும் அவ்விதமாய் நினைத்த மாளிகைத் தலைவர் ஓமாகாதா, மோத்தோம் என்ற சாமுராய் பணத்துக்காக வந்ததையும் கட்டாய ஹராகிரியில் மடிந்ததையும் சுகுமோவுக்கு கூறுகிறார். சுகுமோ, தான் பணத்துக்கன்றி உயிரை மாய்த்துக் கொள்ளவே வந்திருப்பதாகக் கூறி ஹராகிரிக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கிருக்கும் எல்லா சாமுராய்களும் ஹராகிரி நிகழ்விடத்தைச் சுற்றி தலைவரோடு அமர்நதிருக்கின்றனர்.
சுகுமோ தன் தலையை இறுதியில் வெட்டக்கூடிய வரை தான் தேர்ந்தெடுப்பதாக கோரி தேர்ந்தெடுத்த சாமுராய் வீரன் உடல் நலம் சரியில்லையென கூறி வருவதில்லை வேறொரு நபரை சுகுமோ ஏற்காத நிலையில் தலைவரின் அனுமதியுடன் அவன் தன் கதையைச் சொல்லுகிறான்.
வேலையையும் மனைவியையும் இழந்த சுகுமோவின் அழகிய மகனை மோத்தோமேக்கு திருமணம் செய்து தருகிறார். ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது வறுமை அதிகரித்த நிலையில் சுகுமோவின் மகள் காசநோய் கண்டு அவதியுறுகிறாள். குழந்தைக்கு கடுமையான ஜூரம். எங்காவது பணம் கேட்டு வருவதாய்ப் போன மருமகன் வீடு திரும்பவேயில்லை. வறுமையில் உழன்ற சில சாமுராய்கள் ஹராகிரி செய்துகொள்ள முன் வரும்போது இரக்கப்பட்டு சில பிரபுக்கள் தற்கொலையைத் தவிர்க்க பணம் தந்து அனுப்புவர் அல்லது தங்களிடமே வேலைக்கு சேர்த்துக் கொள்ளுவர் என்ற நினைப்பில் மோத்தோமே இயிமாளிகைக்கு வந்து ஹராகிரி புரிந்து கொள்ள அனுமதி கேட்கிறான். மருத்துவச் செலவுக்கு ஏற்கெனவே அவன் தன் வாளின் அலகை விற்றிருந்ததால் மூங்கில் பிளாச்சலான அலகை கைப்பிடியில் பொருத்தி வைத்திருந்தான். மோத்தோமே பணத்துக்கே ஹராகிரி செய்ய நாடகமாடுகிறான் என நினைத்த மாளிகைப் பிரபு ஹராகிரி செய்ய அனுமதிக்கிறார். மருமகன் இறக்கிறான். தொடர்ந்து குழந்தையும் மகளும் இறக்கவே சுகுமோ அனாதையாகிறார்.
எல்லாவற்றுக்கும் பழிவாங்க சுகுமோ இயி மாளிகைக்கு வந்திருக்கிறார் என்பது அங்குள்ளவர்களுக்குப் புரிகிறது. சுகுமோ ஹராகிரிக்கு உதவிட விரும்பிக் கேட்ட மூன்று பேரும் மூங்கில் வாளைக் கொண்டு மோத்தோமேவை ஹராகிரி புரிய வற்புறுத்தியவர்கள். கதையை முடித்த சுகுமோ அந்த மூவரின் குடுமிகளை அனைவரின் முன் வீசி எறிகிறார். இங்கு வருமுன் மோத்தோமோவைஅவமானப்படுத்திய அந்த மூவரையும் தனித்த வாட்போரில் எதிர்கொண்டு கொல்லாது குடுமிகளை மட்டும் அறுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எதிரியிடம் குடுமியை இழப்பதென்பது அவமான காரியமாய் சாமுராய்கள் கருதுவார்கள்.

காலாவதியாகி அர்த்தமிழந்த சாமுராய் கட்டுபாட்டின் அதிகாரத்தை சுகுமோ கேலி செய்கிறார் மிக்க அவமானமடையும் பிரபு சுகுமோவைக் கொல்லும்படி உத்திரவிட பயங்கர வாட் போர் நடக்கிறது. சுகுமோ நான்கு பேரைக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் சாமுராய் குலத்தின் குறியீடாக இயி இனத்தார் வணங்கப்பட்ட குல தெய்வ உருவத்தை இழுத்து எறிந்து சிதைத்து அவர்கள் என்றென்றும் மறக்க முடியாதபடி அவமானமுறச் செய்த பின் வாளைத் தம் உடலில் பாய்ச்சி தன்னை மாய்த்துக் கொள்ளுகிறார். நடந்தேறிய சகல உண்மை நிகழ்வுகளையும் நேரெதிராக திரித்து பொய்யாகப் பதிவேட்டில் எழுதிவைக்க பிரபு ஆணையிடுகிறார்.
ஜப்பானிய சமூகத்தின் அடக்குமுறை கூடிய அதிகார அமைப்பு கோபயாஷியின் திரைப்படங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகிறது. சுகுமோவாக நகதாய் அற்புதமாய் நடிக்கிறார். மூலக்கதையை எழுதியவர் ஜப்பானின் சிறந்த எழுத்தாளர் YASUHIKO TAKIGUCHI. படத்தின் அற்புதமான ஒளிப்பதிவை செய்திருப்பவர். YOSHIO MIYAJIMA. ஜப்பானிய மொழியில் ஹரா என்றால் வயிறு. கிரி என்றால் இரண்டாக பிளப்பது என்று பொருள்.
சீனாவைப் போலவும் இந்தியாவைப் போலவும் ஜப்பானும் காலங்காலமாய் பாரம்பரிய கலாச்சார சங்கரிகளையும், விசித்திரமான பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் நாடு. ஜப்பானின் பண்டைய பாரம்பரிய செவி வழிக்கதைகளில் ஒன்று ஒபசூடெ OBASUTE இந்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு ஜப்பானின் புகழ் பெற்ற நாவலாசிரியர் ஷிசிரோ ஃபுகாஸாவா SHICHIRO FUKAZAWA எழுதிய நாவல் BALLAD OF NARAYAMA (நாராயாமாவின் கவிதை இசை நாடகம்) ஆச்சரியம் என்பதைவிட மனதை உருக்கும் இசை நாடகம் எனலாம்.
இந்நாவலை ஜப்பானிய திரைப்பட மேதைகளில் ஒருவரான கீய்சுகே கினோசிடா KEISUKE KINOSHITA என் பவர் மகத்தான திரைக் காவியமாய் இயக்கியளித்திருக்கிறார். கினோஷிடா, ஜப்பானின் சமகால திரைப்பட மேதைகளில் நன்கு அறியப்பட்ட அகிரா குரோசாலா கோபயாசி மற்றும் யசுஜிரோ ஓசு ஆகியோரின் வரிசையிலிருப்பவர். இவரது நாராயாமா கதைச் சித்தரிப்பின் வகை மிகவும் வேறுபட்டது. அதீத அழகியல் சார்ந்தது. நேராக ஒரு சினிமாவாகச் செய்யாமல், ஜப்பானின் பாரம்பரிய நாடகப் பாணியான தாபுச்சி தியேட்டர் TABUCHI THEATRE கலை வடிவையும், நவீன திரைப்பட கலைமுறையையும் இணைத்து செய்துள்ளார் கினோசிடா ஜப்பானின் கலாச்சார மதிப்பீடுகளை இப்படத்தின் வழியாக அவர் ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்.
19-ம் நூற்றாண்டு ஜப்பானின் பணிமூடிய மலைகளிடையே உள்ள சிறிய கிராமத்தில் வாழ்க்கை என்பது சவால்கள் மிக்கது. பஞ்சம், தானியத்தைக் கவர்ந்து செல்லும் கள்வர்கள் ஒரு புறம். அந்த கிராமத்தில் ஒரு வினோத சடங்கு ரீதியான பழக்கம். எழுபது வயதை அடைந்த முதியவர்களை அக்குடும்பத்தின் மூத்த ஆண் மகன் முதுகில் சுமந்துச் சென்று தூரத்திலுள்ள மலையுச்சிலமைந்த இடுகாட்டில் உயிரோடு விட்டு விட்டு வந்துவிட வேண்டும். 70 வயதான முதியவர்கள் அங்கிருந்தவாறே இறப்பார்கள். அவர்கள் அங்கிருக்கும் கடவுளோடு சேர்வார்கள் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையால்தான் உயிரோடு அங்கு பயணித்து விடப்பட்டு இறக்க முதியவர்கள் முன் வருகிறார்கள். எப்போது தங்களுக்கு எழுபது வயதாகும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஒரு சிலர் அவ்வாறு சாவதற்கு விரும்பாது வாழவே விரும்புகிறார்கள். அந்த இடுகாடு இருக்குமிடம் ஒரு மலையுச்சிப் பகுதி. அம்மலைதான் நாராயாமா. அக்கிராமத்தில் எழுபதை எட்டுபவள் கிழவி ஓரின் (ORIN) இவளைச் சுற்றித்தான் கதை. இவளுக்கு நிறைய பிள்ளைகள், மூத்தவன் தட்சுஹை (TATSUHEI) தாரமிழந்தவன். அவனையு்ம் அவனது குழந்தையையும் கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிட்டு நாராயாமாவுக்கு நிம்மதியாகப் போய் விடலாமென சொல்லுகிறாள் ஓரின்.
உப்பு வியாபாரி ஒருவன் முயற்சியில் அடுத்த ஊரிலுள்ள விதவைப் பெண் ஓரினுக்கு புது மருமகளாகி தட்சுஹையை மணக்கிறாள். கடமை முடிகிறது, ஓரின் கிழவிக்கும் 70-வது பிறந்த நாள் வருகிறது. 70 வயதிலும் அவளுக்கு 33 பற்களிருக்கின்றன. அவை பிசாசுப் பற்கள் என்று சொல்லி ஊரார் கேலி செய்கிறார்கள். அவ்வளவு பற்களோடு நாராயாமாவுக்கு பயணிப்பது சரியல்ல என வேதனையுறும் ஓரின் தானே முன் பற்களை அடித்து நீக்கிவிடுகிறாள்.
பனிகாலம் தொடங்கவும் ஓரின் தன் மூத்த மகனை தன்னை நாராயமாவுக்குக் கொண்டு விடச் சொல்லுகிறாள். அதற்கான சடங்கும் அதன்போது ஓதப்படும் கட்டளைகளும் முக்கியமானது. ஒரு சிறு நாற்காலியை மகன் முதுகில் கட்டி, அதில் தன் தாயையோ தந்தையையோ உட்காரச் செய்து, தன்னை இறுகப் பிடித்துக் கொள்ள செய்து ஓடை, பள்ளத்தாக்குகள், கரடு முரடான மலைப் பாதைகளில் ஏறியிறங்கி நாராயாமாவை அடைய வேண்டும். போவது யார் கண்ணிலும் படக் கூடாது. இந்த இறுதிப் பயணத்தை யாரும் பார்த்து விடாதபடி இரவோடிரவாகச் செய்ய வேண்டும். ஒரு நீர் நிலையையடுத்து ஏழு வளைவுகள் எனப்படும் ஏழு பள்ளத்தாக்குகளைக் கடந்தால் நாராயாமாவுக்குள் நுழையலாம். சுமப்பவன் திரும்பிப் பார்க்கவே கூடாது அம்மாவை விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வேகமாய் திரும்பி வரவேண்டும்.
ஒரே ஒரு சலுகை என்னவென்றால், ஏழு வளைவுகளைக் கடந்தும் விரும்பினால் ஒரே ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம். இவை கட்டளைகள். இக்கட்டளைகள் ஆறுபேர் கொண்ட குருமார்களால் (அதில் ஒருவர் பெண்) நிபந்தனையாக பயணத்தின்போது முதல் நாளிரவில் நடக்கும் சடங்கின் போது ஓதப்படுகின்றன. மறுநாள் நள்ளிரவில் தாயை சுமந்துகொண்டு மலை, காடுகளில் கடுமையான நடைப்பயணம் மேற்கொண்டு விடியும்போது நாராயாமாவை அடைந்து ஓரினை இறக்கிவிட்டு திரும்புகிறான் மகன். வழியில் தன் எழுவது வயது அப்பனை அவனது சம்மதமின்றி வற்புறுத்தி கயிற்றால் கட்டித் தூக்கி வருகிறான் இன்னொரு ஊர்க்காரன். அப்பன் முடியாதென்று சண்டையிடவே, அவரை அப்படியே மலையிலிருந்து உருட்டிவிடுகிறான். ஓரின் மகனுக்கும் அவனுக்கும் இதனால் சண்டை மூண்டு அவனும் தன் வழியிலேயே உருண்டு மாள்கிறான். தட்சுஹை திரும்பி ஓடிப் போய் அம்மாவைப் பார்த்து குதூகலத்தோடு கூறுகிறான்.

‘‘அம்மா, பனி விழத் தொடங்கிவிட்டது. இனி மேல் உனக்கு வலியோ அசெளகரியமோ இருக்காது’ இந்தப் படத்தை கீய்ஷீகே கினோஷிடா ஒரு இசைநாடக வடிவில் தாபுச்சி தியேட்டர் எனும் ஜப்பானிய பாரம்பரிய வடிவில் இயக்கியுள்ளார். படம் முடிவில் பயணிகளையும் சரக்கையும் கொண்ட புகைவண்டித் தொடர் ஒன்று வேகமாய் ஓடுகிறது. ஆளரவமற்ற ரயில்வே ஸ்டேஷனின் பெயர்ப் பலகையில் ஓபாசுடே (OBASUTE) என்ற பெயர் இருக்க அடியில் ‘‘கைவிடப்படும் இடம்’’ என்ற ஜப்பானிய சொற்களிருக்கின்றன. ஓரினாக நாடக நடிகை கினுயோ தனகாவும் (KINUYO TANAKA) மகனாக தெய்ஜி தகாஹாஷியும் (TEIJI TAKAHASHI) சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜப்பானுக்குள்ளேயே அதிகம் திரையிடப்பட்ட இப்படத்திற்கு ஜப்பானின் 3 கினெமோ ஜூன்போ (KINEMO JUNPO) பரிசுகள் சிறந்த டைரக் ஷனுக்கும் சிறந்த நடிகைக்கும் சிறந்த படத்துக்குமென வழங்கப்பட்டது.
அதே சமயம் இக்கதையை முழுக்கவும் முற்றிலுமாய் ஓர் அரிய நவீன சினிமாவாக ஷோஹை இமாமுரா இயக்கி வெளியிட்டார். (SHOHEI IMAMURA) பிரம்மாண்டமும் பிரமிப்புமிக்க இப்படம் உலகெங்கும் திரையிடப்படுகையில் சென்னை கெயிட்டி தியேட்டரில் திரையிடப்பட்டது. இமாமுரா பாலே ஆஃப் நாராயாமாவை 1983-ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். முதல் வகையில் இடம் பெறாத சில காட்சிகள் இந்த புதிய படத்தில் இடம் பெற்று சினிமா என்பதை காட்டியது. காட்டில் ஓர் இளம் ஜோடி உடலுறவு கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உடற்பசி கொண்ட ஒருவன் அந்த நேரத்துக்கு பெண் துணை கிடைக்காததால், அடுத்த வீட்டுக்காரன் பெண் நாயைப் புணருகிற காட்சி.
மகன் தாய் ஓரினை முதுகில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பாதை, மலைப்பாதை, மரப்பாலம், பள்ளத் தாக்குகளில் இரவில் கடுமையான நடைப் பயணம் செய்யும் படத்தின் கடைசிக் காட்சி தூக்கி வாரிப் போடுகிறது. நாராயாமா மலையை நெருங்குகையில் கிடக்கும் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் முழுசும், சிதறியுமாய் சமீபத்தில் வைக்கப்பட்டு இறந்து போய், பறவைகளால் குதறப்பட்ட ஒரு கிழவியின் எலும்புக்கூட்டோடு தலைமுடியும், மிச்சம் மீதி அழுகிய சதையும் இப்படத்தின் ஒளிப் பதிவை பிரமிக்கும் வகையில் காமிரா கலைஞர் மசாவோ தோச்சிசாவா (MASAO TOCHIZAWA) அமைத்திருக்கிறார். கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இமாமுராவுக்கு இப்படத்துக்கு தங்க இலச்சினைப் பரிசு அளிக்கப்பட்டது. ஓரின் பாத்திரத்தில் சுமிகோ சகாமோடோ (SUMIKO SAKAMOTO)வும் மகன் தட்சுஹை பாத்திரத்தில் கென் ஓகாடாவும் (KEN OGATA) அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற திரைப்பட மேதைகளுள் முக்கியமான ஒருவர் ஜப்பானின் அகிரா குரோசாவா (AKIRA KUROSAWA) இவர் படங்கள் பல முறை அமைப்புகளால் பரிசு பெற்றவை. அவ்வப்போது பிற மொழியிலுள்ள நாடகங்கள், நாவல்களையும் ஜப்பானிய மண்ணின் பாரம்பரியத்துக் கேற்றவாறு படமெடுத்து, அவை எவற்றின் தழுவல் என்பதை நேர்மையோடு பதிவிடுவார். ஷேக்ஸ்பியரின் சில நாடகங்களையும் (RAN, THRONE OF BLOOD) தாஸ்தாவெஸ்கியின் நாவலையும் (IDIOT) குரோ சாவா ஜப்பானிய படங்களாகத் தழுவி எடுத்திருக்கிறார். போலவே இவரது அசல் ஜப்பானிய கதைத் திரைப் படங்களை (RASHOMAN, SEVEN SAMURAI ஹாலிவுட்டிலும் தமிழிலும் கண்ணியமாக வெளிப்படையாக தழுவி படமெடுத்திருக்கிறார்கள். (OUTRAGE, அந்த நாள், THE MAGMFICENT SEVEN)
குரோவாவின் அமரத்துவமான திரைப்படங்களான ரஷோமன், செவன் சாமுராய், ரெட் பியர்டு, இகிரு, யோஜிம்போ, ரான், ட்ரீம்ஸ் என்பவை சும்மா பட்டியலுக்காகச் சொல்லவில்லை. அவரை ஓர் உலகத் திரைப்பட மேதையென கருதச் செய்தவை. ரஷோமன் படத்தின் கதையை தி.சு. சதாசிவத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் ஸ்நேகா பதிப்பகம் சிறப்புற வெளியிட்டார்கள். படத்தின் அசல் திரைக்கதை வசனமாகும் இது. குரோசாவா பற்றிய அரிய நூலை திரைப் பட ஆய்வு எழுத்தாளர் எஸ். ஆனந்த் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வெகு சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், அகிரா குரோசாவா ஜப்பானின் சத்யஜித்ரே என்றால், கோபயாஷி ஜப்பானின் ரித்விக்கடக் எனலாம். குரோசாவா ஜப்பானில் கொஞ்சம் வேலை குறைந்திருந்த நேரத்தில் 1974ல் 1974ல் ரஷ்யாவில் அவ்வரசாங்க அழைப்பின் பேரில் போயிருந்து ஓர் அரிய திரைப்படத்தைச் செய்தார். அதுதான் டெர்சு உஜாலா.
டெர்சு உஜாலா (DERSU UZALA) ரஷ்யமொழியில் குரோசாவா இயக்கி சென்னை தேவி திரையரங்கில் 1975-ல் திரையிடப்பட்டது. விளதிமிர் ஆர்செனியீவ் என்பவர் (VLADIMIR ARSENIEV) ஜார் கால ரஸ்யாவில் பயணம், பத்திரிகை, நிலம் நீர் மலைகளின் ஆய்வுக்கட்டுரைகள் ஏராளமாய் எழுதியவர். அவரது கதை டெர்சு உஜாலா 1902-ல் இடம் பெறுகிறது. ஓர் அதிகாரி சில வருடங்களுக்கு முன் தான் தன் நண்பர் ஒருவரை அடக்கம் செய்த இடத்தைக் காண வருகிறார். அடையாளம் தெரியவில்லை புதைக்கும் சமயம் இருந்த இரு பெரிய மரங்களையும் எடுத்துவிட்டு இடம் பெரிய அரசு கட்டுமான மொன்றுக்காக சீராக்கப்படுகிறது. ஒரு தீர்மானத்தோடு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டவராய் அவர் சென்று போனதை நினைவுகூர்கிறார். படமும் இவ்வாறே ஃபிளாஸ் பாக்கில் தொடங்குகிறது.
டெர்சு உஜாலா சோவியத் யூனியன் தயாரித்த மகத்தான 70 MM படம். இது அகிரா குரோசாவா இயக்கிய ரஷ்ய மொழிப்படம். 1902ல் ராணுவத்திலிருந்து வந்த சிலரை ஓர் அதிகாரியின் கீழ் சைபீரிய பகுதி ஒன்றை அதன் பள்ளத் தாக்கு, மலைகள், நீர்நிலை போன்றவற்றை மறு ஆய்வு செய்து காடுகள் அருவிகளையும் உள்ளிட்ட பகுதிகளை சர்வே செய்து புதிய வரை படம் (MAP) ஒன்றைத் தயாரிக்க அனுப்புகிறது. அவர்கள் ஒரு புதிய மனிதனைச் சந்திக்கின்றனர். குள்ளமான வயதான கால்கள் வளைந்த ஒரு வேட்டைக்காரனான அவன் பெயர் டெர்சு உஜாலா சைபீரிய பனிப் பிரதேசம், காடுகள் வனவிலங்குகள், நீர் நிலை எல்லாவற்றையும் அறிந்த டெர்சு ஒரு மங்கோலிய இன காட்டு ஜீவி. மனைவியும் மக்களையும் அம்மை நோய்க்கு பலி தந்த டெர்சு தனியாள் விலங்குகளைக் கொன்று விற்று வாழ்பவன். ஒரு புலியைச் சுட்டுக் கொன்றிருக்கும் அவன் புலியின் கூட்டத்தை எதிர்பார்ப்பவன். ஒரு பெரும் சைபீரிய பனிப் புயல் மிகப் பிரமாதமான காமிரா ஒளிப்பதிவால் படமாக்கப்பட்டுள்ளது.
பனிப் புயல் வருவதை தன் கூர்ந்த மதிநூட்பம், அனுபவ ரீதியாக முன்னதாக டெர்சு சர்வே குழுவை க் காப்பாற்றும் காட்சி படத்தின் சிறப்புகளில் ஒன்று. குழு நகருக்குப் போய்விட்டு சில ஆண்டுகள் கழித்து வரும்போது டெர்சுவின் கண் பார்வை கூர்மை குறைந்திருப்பதை அவன் வேட்டையின்போது குறிதவறுவதிலிருந்து தெரிய வருகிறது. கண்களைச் சோதிக்க அழைத்தால் அவன் காட்டைவிட்டு நகருக்கு வர மறுக்கிறான். கஸ்டப்பட்டு அதிகாரி அவனைத் தம்மோடு நகரத்துக்கு அழைத்து வருகிறார். நகரின் வாழ்க்கை, நாகரிகம் எதுவும் டெர்சுவுக்கு ஒத்துப்போகவில்லை. தன்னை தன் காட்டிலேயே கொண்டு விடும்படி நச்சரிக்கிறான். அதிகாரி அன்றைக்கு அதிநவீனமான வேட்டைத் துப்பாக்கி ஒன்றை பரிசளிக்கிறார். பார்வை குறைவால் சற்று தவறாகக் குறி வைத்தாலும் குறி பிசகாது சுடும் துப்பாக்கி அது என்று சொல்லித் தருகிறார். சில நாட்கள் கழித்து போலீஸ்காரர் ஒருவர் அதிகாரியைத் தேடி வந்து விசாரிக்கிறார்.
”இது உங்கள் பெயர் பொறித்த வேட்டைத் துப்பாக்கி. திருடர்கள் சிலரால் விற்க முற்படுகையில் பிடிபட்டது.”
”ஆனால் இது திருடுபோகவில்லை. டெர்சு உஜாலாவென்ற வேட்டைக்காரருக்கு நான் பரிசாக தந்தாயிற்றே?” என்கிறார் அதிகாரி.
”அவரைக் கொன்று போட்டுவிட்டு இத் துப்பாக்கியை பிடுங்கிச் சென்றிருக்கிறார்கள். அந்த முதியவரின் உடலை வந்து பாருங்கள்.”

அதிகாரி போய் பார்த்துவிட்டு சவ அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். எல்லாம் முடிந்தவுடன் ஒரு போலீசு பவ்யமாய் சல்யூட் அடிக்கிறார். அதிகாரி அதை ஏற்று திரும்புகையில் இன்னொரு முறையும் போலீசு சல்யூட் செய்கிறார். அதிகாரி புரிந்து கொண்டு முக இறுக்கத்தோடு நகருகிறார். ஜார்மன்னன் காலத்து ரஷ்யாவில் போலீசுகாரர் இனாம் எதிர்பார்த்ததை இக்காட்சி சொல்லுகிறது.
அகிரா குரோசாவாவின் சிறந்த இயக்கத்துக்கு இப்படம் மற்றொரு எடுத்துக்காட்டு. படத்தின் வியத்தகு ஒளிப்பதிவை புரிந்திருப்பவர் காமிரா கலைஞர் ஃபியோடோர் டோப் ரோன் ரவோவ் (FYODOR DOBRONRAVOK) என்ற ரஷ்ய ஒளிப்பதிவாளர். ஐசக் ஷ்வார்ட்ஸ்-ன் (ISAAK SHVARTS) இசைக் கோர்வை நுட்பமானது. அதிகாரியாக ரஸ்ய நடிகர் யூரி சோலோமின் (YURI SOLOMIN) என்பவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 1975ம் ஆண்டுக்கான சிறந்த அயல்மொழி பட விருது ஆஸ்கார் அகாதமி விருது விழாவில் பெற்ற படம். மாஸ்கோ சர்வதேச பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பதக்கம் பெற்ற படம்.
அகிரா குரோசாவாவுக்கும் சத்யஜித் ரேக்கும் ஒரு வகையில் ஒற்றுமையுண்டு என கூறும் வகையில் இருவரது கடைசி படங்களும் தோன்றுகின்றன. ரேயின் ”அகாந்துக்”, அவரது கடைசி படம். குரோசாவின் ”மததாயோ” அவரது கடைசி படம். இரு படங்களும் ஒரு வருக் கொருவர் நன்கு புரிந்து கொண்டு அன்பு காட்டுவதை அடிப்படையாகக் கொண்ட படங்கள், இரு படங்களும் ஆழமான உணர்வுகளைக் கொண்டு, அதிகம் வெளிப்புற காட்சிப் பிடிப்புகள் கொண்டதாயில்லாதவை.
குரோசாவின் ”மத தாயோ”, 1993-ல் வெளிவந்தது. அவரது முப்பதாவதும் கடைசியுமான படம். 60-வயதை எட்டும் ஆசிரியர், புரொபசர் ஹியாகன் உச்சிடா (HYAKKEN UCHIDA) இரண்டாம் உலகப் போர் நடக்கையில் தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு எழுத்துப் பணியில் ஈடுபடத் தொடங்குகிறார். சதா நகைச்சுவை ததும்ப பேசி மாணவர்களின் நிறைந்த அன்பைப் பெற்ற ஆசிரியருக்கும் மாணவர்களில் கொஞ்சம் பேருக்கும் நெருக்கமான பிணைப்பு நிலைக்கிறது. அவர் குடியிருக்கும் வீடு விமானத் தாக்குதலில் நாசமாகி குடிசையொண்றில் கணவனும், மனைவியும் சேர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், தம் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆசிரிய தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அவரது மாணவர்களே அவருக்கு குழந்தைகள். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஜப்பானிய வழக்கப்படி புரெபசரை மாணவர்கள் ஒரு கேள்வியைக் கேட்பார்கள்.
”மஹ்தா-கேய்? (MMAHDA-KAI?) என்றால் நீ தயாரா? அதாவது மறு உலகுக்குபோக தயாரா என்பது.
அதற்கு உச்சிடா, மததாயே! (MADADAYO) என்று பதிலளிப்பார். என்றால் ”இன்னும் இல்லை என்று பொருள். மாணவர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி அழகான வீடொன்றைத் தங்கள் அன்பான பேராசிரியருக்குக் கட்டி அதில் குடியமர்த்துகிறார்கள். யுத்தமும் முடிவுக்கு வருகிறது. குழந்தையற்ற உச்சிடா தம்பதிகள், தம் புது வீட்டுக்குள் வந்து சேர்ந்த பூனையொன்றை உயிருக்குயிராய் அன்பு செலுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தப் பூனை ஒரு நாள் ஓடிப் போய் விடுகிறது. திரும்பி வருவதேயில்லை. உச்சிடா சாப்பிடாமல் குழந்தைபோல் பார்த்துக் கொண்ட பூனையின் நினைவாகவே ஒரு நாள் முழுக்க இருப்பார்.
வேறொரு பூனை வந்துசேருகிறது. பேராசிரியர் தன் 77-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நாளில் அவரது மாணவர்களின் பேரக் குழந்தைகளும் கொண்டுவரப்படுகின்றன. அன்றும் அவர் உரக்கச் சொல்லுவார் ”மததாயோ” இன்னும் நேரம் வரவில்லை என்று மனித உறவை, மனிதன்- செல்லப் பிராணி உறவையெல்லாம் மிக நளினமாக துளியும் மிகையின்றி அற்புதமான வெகு இயல்பான மிகையற்ற நடிப்பால் மததாயோ மிகச் சிறந்த படங்களில் ஒன்று. பல விமர்சகர்கள் மததாயோவை குரோசாவா தன் இறுதி படமாக தீர்மானித்தே செய்திருப்பதாக ஹேஷ்யம்கூட கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் அளித்த – பதில், ”கிடையாது, எனக்கு இன்னும் முடிக்க வேண்டிய படங்கள் கையிலிருக்கின்றன” என்பதுதான்.
தாத்சுவோ மட்சுமுரா (TATSUO MATSUMURA) ஆசிரியர் உச்சிடாவாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார். குரோசாவின் சிறந்த இயக்கமும் தகாவோ செயிடோ (TAKAO SAITO)வின் காமிரா கலையும் மிகச் சிறப்பான விஷயங்கள்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்
தொடர் 14: பயாஸ்கோப்காரன் (தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்)– விட்டல்ராவ்
தொடர் 15: பயாஸ்கோப்காரன் (ஜான் ஃபோர்டு (John Ford) – விட்டல்ராவ்
தொடர் 16: பயாஸ்கோப்காரன்(கருப்பும் வெளுப்பும்) – விட்டல்ராவ்
தொடர் 17: பயாஸ்கோப்காரன்(சினிமாவான சில நவீன நாடகங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 18: பயாஸ்கோப்காரன்(கிழக்கு முகமாய்) – விட்டல்ராவ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.