Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்இத்தாலி – 3
ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

நையாண்டி என்பது [SATIRE] கவிதை, கதை, நாடகம் என தொடங்கி, சினிமாவின் ஓர் அங்கமாயும் விளங்கலாயிற்று. தமிழில் சிறுகதைகள் சிலவற்றில் நையாண்டியை [SATIRE] மிக அற்புதமாக செய்து காட்டியவர் புதுமைப்பித்தன். இதில் சுயதிருப்தியும் அடங்கும், பழிவாங்கலுமுண்டு… இந்த முக்கிய இலக்கிய வகைப் பிரிவு மராத்திய நாடகம், தமிழ்சினிமா என்றும் தொட்டிருக்கிறது. உலக சினிமாவில் இத்தாலிய பங்களிப்பாக மிக உயர்ந்த நையாண்டி வகைப் படங்களை இயக்கியளித்தவர், ஃபெடரிகோ ஃபெல்லினி [FEDERICO FELLINI], இத்தாலிய சினிமாவின் முதல் அலை நியோ ரியலிஸம் என்றால், இரண்டாவது அலை பெல்லினியின் Satire வகைப் படங்களும், மைகேலாஞ்செலோ அண்டோனியோனியின் [MICHELANGELO ANTONIONI] அங்கத முடிவைத் தீண்டிய பல படங்களும் எனலாம். பெல்லினி ஓரிரு படங்களை நியோ ரியலிஸப் பாணியில் [LA STRADA; I VITELLONI] இயக்கிய பின்னர் தான் தனது சட்டையர் மற்றும் சுயசரிதை வகைப் படங்களை [ROMA; AMARCORD; SATYRICON] இயக்கினார்.

பெல்லினி 1921-ல் ரிமினி [RIMINI] எனும் சிற்றூரில் பிறந்து தனது 19வது வயதில் ரோமுக்கு இடம் பெயர்ந்தார். சட்டம் படிக்க புறப்பட்டவர், சினிமாவுக்குள் மூழ்கிப் போனார். பத்திரிகைகளில் நிருபராயும், கிசு கிசு விஷயங்களை துண்டுத் துக்கடாவாய் எழுதுபவராயுமிருந்திருக்கிறார். 1944-45ல் அவர் புகழ் பெற்ற இத்தாலிய இயக்குனர் ராபர்டோ ரோசெல்லினியிடம் உதவி இயக்குனராயிருந்து “ROME- OPEN CITY” படத்துக்கு திரைக்கதை எழுதினார். 50-களில் அவர் தாமே திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
1953-ல் அவர் “I VITELLONI” எனும் ஜனரஞ்சகமும் நியோரியலிஸமுமாய் ஒரு கருப்பு வெள்ளைப் படத்தை இயக்கினார். இதற்குப் பிறகு பெல்லினி இந்தப் பாதையை விட்டு வெளியேறினார்.

ஐந்து இளைஞர்கள் தங்கள் வீட்டிலிருந்து கிடைத்த பணத்துடன் மனம்போன போக்கில் மது, மாது, சூது என்று செலவழித்துச் சுற்றும் கதைப் படம். இதில் வரும் பல நிகழ்வுகளில் சில பெல்லினியின் சுய வரலாறுபோல என்பாருண்டு. ஓரளவுக்கு நன்கு எடுக்கப்பட்ட படம். 1954-ல் பெல்லினியின் புகழ் பெற்ற கருப்பு, வெள்ளைப் படம். “LA STRADA” (பாதை) வெளிவந்தது. மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் சங்கமித்த பிரபல குணசித்திர நடிகர் ஆந்தனி குவின் [ANTHONY QUINN] ஜம்பனோ [ZAMPANO] எனும் முரட்டு கோபக்கார கழைக்கூத்தாடி பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஜம்பனோ மனைவியை இழந்த நிலையில், மச்சினியை மணக்க ஏழை மாமியாருக்கு நிறைய பணம் தந்து புது மனைவியோடு தன் பயணத்தைத் தொடருகிறான்.

ஜம்பனோவின் இளம் மனைவி ஜெல்ஸோமினாவாக [GELSOMINA] பெல்லினியின் மனைவி மசீனா [MASINA] நடித்திருக்கிறார். மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்த பெரிய கூடாரம் போனற வாகனத்தில் ஜம்பனோ தனக்கான படுக்கை, சமையல் என்ற சகலத்தையும் ஏற்படுத்தி நீண்ட சாலையில் பயணித்து அங்கங்கே நிறுத்தி சின்னச் சின்ன வித்தைகளைக் காட்டி காசு வாங்கிப் பிழைக்கும் முரட்டுக் கழைக் கூத்தாடி. அந்தப் பாத்திரத்தில் பிரமாதமாக நடிக்கும் ஆந்தனி குவினின் உடல் வாகுவில் மூன்றில் ஒரு பங்கே உடல் வாகு கொண்ட மசீனா, நிஜ வாழ்க்கையில் தன் கணவரும், படத்தின் இயக்குனருமான பெடரிகோ பெல்லினியின் உடல் வாகுவில் நான்கில் ஒரு பங்கே உள்ளவர். இவரது பாத்திரமும் நடிப்பும் இரக்கத்தைக் காட்டிலும் சிரிப்பையே அதிகம் வரவைக்கும்படியாயிருக்கிறது.

ஜம்பனோவுடன் ஊர் சுற்றி, உலகம் சுற்றி உபயோகமாய் புதுப் புது வித்தைகளைக் கற்று அம்மாவுக்கும் நிறைய பணம் அனுப்புவதாய் குதியாட்டம் போட்டு புறப்பட்ட ஜெல்சோமினா ஒரு வேளைச் சோற்றுக்கும் ஒரு பிடி அன்புக்கும் ஏங்கி அவஸ்தைப்படுகிறாள். முதல் நாளே, தான் கம்பி வளையத்துக்குள் நுழைந்து அதை அறுக்கும் வித்தையின்போது கூட்டத்தைப் பார்த்துச் சொல்லும் வசனத்தை மாற்றிச் சொன்னதற்காக அவளைக் குச்சியால் விளாசி வெளியில் படுக்க விடுகிறான் ஜம்பனோ. அவள் இருக்கும்போதே வேறொரு வேசியோடு படுத்ததைக் கண்டு மனமும் உடலும் பதறிய ஜெல்சோமினா ஓர் இரவன்று ஓடிப் போய் விடுகிறாள். ஒரு சிறு சர்க்கஸ் ஆட்டக் குழுவைச் சந்திக்கிறாள். அதில் இசைத்து விதூஷகன் புரியும் விகடனும், மிக உயரத்தில் கட்டில் கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரியும் பபூனையும் சந்திக்கிறாள். அந்த பபூன் பாத்திரத்தில் ரிச்சர்டு பேஸ்ஹார்ட் [RICHARD BASE HEART] மிக நன்றாக செய்திருக்கிறார். ஜம்பனோ அங்கு வந்து சர்க்கஸில் புதிய நட்சத்திரமாய் சேர்கிறான். ஆனால் தன் பழைய எதிரியான பபூனுக்கும் அவனுக்கும் கடும் சண்டை ஏற்படுகிறது. பபூனை தாக்கியதற்காக கைதாகி சிறையிலடைக்கப்படுகிறான் முரடன் ஜம்பனோ.

முரடனை விட்டு விட்டு தன்னோடு வந்து விடும்படி ஜெல்சோமினாவை கேட்கிறான் விதூஷகன். அவள் மறுத்து விடுகிறாள். அதே சமயம் விடுதலையடைந்து வந்த ஜம்பனோ விதூஷகனை தாக்கிக் கொன்றுவிட்டு அவனுடைய காரையும் சேதப்படுத்தி விடுகிறான். ஜெல்சோமினா ஓடிப்போய் கான்வென்ட் ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கேயே மாண்டு போகிறாள். இதை பல நாட்கள் கழித்து அறிய வரும் ஜம்பனோ தனது எல்லா குற்றங்களையும் நினைத்து கடற்கரையில் கதறி விடுகிறான். இப்படம் மெலோடிராமாடித் தனத்தைக் கொண்டிருந்தாலும் பெல்லினியை உச்சத்துக்கு இட்டுச் சென்றது. LASTRADA என்றால் பாதை அல்லது பயணம் என்றாகிறது.

பெல்லினியின் சில திரைப்படங்கள் தேவாலய மதரீதியான ஒழுக்கவியல் தர்மத்துக்கு சிக்கலாயிருந்த காரணங்களால் இத்தாலியில் முக்கியமாக கத்தோலிக்கத் தலைமை பீடமான பாப்பல் நகரம் இருப்பதால், அரசு தணிக்கைக் குழுவினரால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாயின. இவரது பல படங்கள், நெறிப் படி ஒழுங்காக ஒருங்கிணைந்த மதக் கோட்பாடுகளைக் குறித்த எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கும். ஆனால், பசோலினியினின்றும் தூரம் தள்ளியிருப்பவை. ஒரு பார்வைக்கு ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டதாயும் தெரியும். அதே சமயம் சில தகவல்கள் அடிப்படையில் பெல்லினிக்கு நிறைய மூட நம்பிக்கையுமுண்டு. தேவைப்படும்போதெல்லாம் அவர் ESP எனும் மீடியம்களையும் ஜோசியர்களையும் கலந்தாலோசித்ததுண்டு என அறியப்படுகிறது. மற்றொரு வேடிக்கையான செய்தி – அவர் தன் எல்லா படங்களின் ஆரூடங்களையும், அன்றைக்கு டெல்லியில் அசோக் ஓட்டலில் போய் தங்கி உலகின் பல்வேறு பிரபலங்களுக்கு ஜோதிடம் கணித்து இதோபதேசம் புரிந்துவந்த இராமகிருஷ்ண சாரதி என்ற ஜோதிட நிபுணரிடம் ஆலோசித்து [தொலைப்பேசி வழியாக] அறிவாராம். பெல்லினி இந்தியாவுக்கு வருகை புரிந்ததில்லை.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

தன் வரலாறுபோல படங்கள் பண்ணுவதில் பெல்லினி சமர்த்தரீ. அவ்வகையான படங்களில் ஒன்று அவர் 1972-ல் இயக்கிய வண்ணப்படமான, “பெல்லினியின் ரோமா” [FELLIN`S ROMA] இப்படம் அவரின் நினைவுகளிலிருந்து முக்கிய நிகழ்வுகளை நையாண்டி ததும்ப காட்சிக் கோர்வையாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் தம் ரோம் நகரை எவ்வளவுக்கு நேசிக்கிறார் என்பது விளங்கும் மிக தாராளமாயும் அள்ளி வாரியிறைத்து வகை வகையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெல்லினியின் சுய வரலாறு.

முதலில், தன்னைப் பள்ளிச் சிறுவனாக பூகோளமும் சரித்திரமும் ரோம் நகரின் வழியாக காண்பவராகக் காண்பிக்கிறார். அதைச் சொல்ல மாணவ, மாணவிகளை ஒரு தாடி வைத்த குரூர ஆசிரியரும் வயதான வசீகரமிக்க ஆசிரியையும் அழைத்துக் கொண்டு சிறு ஆற்றை கடப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. ஆசிரியர் பெருமையோடு மாணவர்களிடம் சொல்லுகிறார்.
இந்த ஆறுதான் ரூபிகான்; [RUBICN] இந்த ஆற்றை ஜுலியஸ் சீசர் கடந்துபோனார். இப்போது அதை நாம் கடக்கிறோம்.”

பிறகு வகுப்பறைக் காட்சி. ஆதியில் காட்டில் கிடந்த இரு ஆண் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்தது. அவை வளர்ந்து ரோமுலாஸ், ரீமஸ் [ROMULOUS, REEMAS] என்று அழைக்கப்படுகின்றனர். அதனால் அவ்விடமும் ரோம் என பெயர் கொண்டது. அன்றைக்கு தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெண் ஓநாயின் உருவம் இன்றும் ரோம் நகர முக்கிய காட்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெல்லினியின் ஆசிரியர் சிறு ஒளி ஒலி காட்சி மூலம் அந்த தங்க ஓநாயைக் காட்டிவிட்டு தொடர்ந்து ரோம் நகரின் புகழ்பெற்ற இடங்களைக் காட்டிக் கொண்டே வருகையில் ஒரு காட்சியில் படம் சிக்கிக் கொண்டு நின்று விடுகிறது. அக் காட்சியைக் கண்ட சிறுவர்கள் எழுந்து குதித்து கூச்சலிட்டு கைதட்டுகின்றனர். அக்காட்சியை நகர்த்த இயலாது. தாடிக் கார ஆசிரியர், விளக்கை போடுங்கள் என்று கத்துகிறார். கூடவே அதைப் பார்க்காதீர்கள், அது பிசாசு, என்று கத்துகிறார். இருட்டில் ஒரு கணம் அவர் முகம் தாடி வைத்த பிசாசாகவே தோன்றுகிறது பிள்ளைகளுக்கு, கூச்சல் அடங்கவில்லை. அந்த காட்சியில், முழு நிர்வாண கோலத்தில் ஒரு பெண் தன் பின் பக்கத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

பிறகு, ஜீலியஸ் சீசர் நாடகம் நடித்துக் காட்டப்படுகிறது. “YOU TOO BRUTE?” என்று கேட்டுக் கொண்டே புரூட்டஸ்ஸின் கடைசி கத்திக் குத்தோடு சீஸர் சாயும் காட்சி.
அதன் பிறகு பெல்லினி ஓர் இளைஞனாக அறிமுகமாகிறார். நிகழ்வுகள் இதிலிருந்து வேகமாக நகர்த்தப்படுகின்றன. ரோமா பெல்லினியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, அவற்றில் முக்கியமானவற்றை ரோம் நகர வரலாறு வழியாக ஓர் அரிய தினப்படி சேதிக்குறிப்புப் பெட்டகமாய் [DIARY] தத்தளித்திருக்கிறார் ஃபெடரிகோ ஃபெல்லினி, படத்தின் இறுதி காட்சிகளில் ஒன்று ஃபாசன் காட்சி [FASION PARADE] ஆண், பெண்கள் புதுப் புதுசாக உடையணிந்து உடையலங்கார காட்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்று நவீன மோஸ்தரில் மத ரீதியான ஆடைகளை [சாமியார்- கன்னியாஸ்திரிகளின் அங்கிகள்] அணிந்து போப் பாண்டவர் வந்து போகும் காட்சி. அதைத் தொடர்ந்து மடாலய கன்னிகளும், பாதிரியார்களும் ஆடைகளணிந்து ஒயிலாக நடந்துபோகும் காட்சிகள் பெல்லினியின் நையாண்டித்தனத்துக்கு ஆபத்தான உதாரணங்கள், ரோமா ஏற்கெனவே 1969-ல் பெல்லினி இயக்கிய வண்ணப்படமான “சட்டைரிகன்” [SATYRICON] என்ற படத்தின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது.

மிகவும் விவாதிக்கப்பட்ட பெல்லினியின் கருப்பு வெள்ளைப் படம் “8½” 1965-ல் வெளிவந்த இப்படம் சர்வதேச அளவில் விவாதங்களையும் உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டது. இதில் மார்செல்லோ மாஸ்டிரியாயினியின் நடிப்பு அபாரம். கருப்பு வெள்ளை ஒளிப்பதிவை அதன் உச்சத்துக்கு இட்டுச் சென்ற உலகத் திரைப்படங்களில் 8½ ஒன்று என கூறலாம். படம், நாம் ஏற்கெனவே த்ரூஃபா, [DAY FOR NIGHT] மிருனாள் சென் செய்த, திரைப்படங்களுக்கெல்லாம் முன்னோடியாய் எடுக்கப்பட்ட, “திரைப்படத்துக்குள் திரைப்படம்” வகையானது. படத்தின் இறுதிக் காட்சி ஆரம்பக் காட்சிக்கே வந்து நிற்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெறும் சாலைப் போக்குவரத்து நெரிசல் காட்சி நிகழ்வுகள் அதியற்புதம். இதில் பெல்லனி ஒரு “FANTACY” காட்சியையும் புகுத்தியுள்ளார்.

ரோமானிய வரலாற்றை ஒட்டின பழங்கதை, அதற்கான பழங்கட்டிடங்கள் சார்ந்த நாவல் ஒன்றை பெட்ரோநியஸ் [PETRONIUS] என்பவர் எழுதினார். அந்நூலை அடிப்படையாய்க் கொண்டு தன் வரலாறு திரைப்படம் ஒன்றை பெல்லினி “சட்டைரிகன்” [SATYRICON] என்று 1969-ல் இயக்கினார். பெல்லினி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்து காட்டியவர் என்பது ரோமா, சட்டைரிகன் ஆகிய இரு படங்களில் தெரிகிறது. இருபடங்களுமே அவரது இளமைக் கால சம்பவங்களை ரோமானிய வரலாறு ஊடாக நையாண்டி வகையில் கொண்டுசெல்லப்பட்டவை. பெட்ரோ நியஸ்ஸின் நாவலை ரோமானி கொடுங்கோல் மன்னன் நீரோவின் காலத்திலிருந்த வாழ்க்கையை மறு வாசிப்பாக காட்சிரூபப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் வந்த மற்றொரு அரிய படம் “அமர்கார்டு” [AMARCORD].

1973-ல் பெல்லினியின் இயக்கத்தில் வெளிவந்த அமர்கார்டு சென்னைத் தியேட்டர் எங்காவது ஒன்றில் திரையிடப்படக்கூடும் என்று அ.ராமதுரை சொல்லிக்கொண்டிருந்தார். ராமதுரை சேப்பாக்கத்திலுள்ள ரெவின்யூ போர்டில் குமாஸ்தா. சர்வதேச திரைப்பட விழாவின்போது தினமணிகதிர் சார்பாக நான் போயிருந்தபோது, ஆனந்தவிகடன் சார்பாக அவர் வந்திருந்தார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து விலாவாரியாகவும் நன்றாகவும் பல வெகுஜன இதழ்களில் எழுதி வந்தவர் அ.ராமதுரை. இப்போது இல்லை. அவர்தான் பெல்லினி பற்றியும் அவரது அமர்கார்டு பற்றியும் எனக்கு அன்றே சொன்னவர். ஆனால் படம் சென்னையில் பொதுத் திரையிடல் பெறவேயில்லை.

“அமர்கார்டு” என்றால், “நான் நினைவு கூறுகிறேன்” என்றாகிறது. காலம்: முசோலினியின் பாசிஸகாலம். பெல்லினி தம் இளமைப் பொழுதுகளை நக்கல் நையாண்டித்தன காட்சிகள் வழியாக அன்றைய இத்தாலியின் உணர்ச்சிமிக்க ரசாபாச நிகழ்வுகள், பருவ வயதின் ஆசாபாசங்கள் மற்றும் அரசியல் அட்டூழியங்களைக் காட்சி நகர்வுகளால் கோர்த்தளித்திருக்கிறார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் நினா ரோட்டாவின் [NINA ROTTA] உயரிய இசைக்கோர்வை மறக்க முடியாதது. அவரது நினைவுச்சரம் ஒவ்வொன்றும் சிறந்த சிறுகதையொன்றின் உருவைக் கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்வுக் கதைகளிலும் தொடர்ந்து அதே பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பதால் நமக்கு முழுமையான படமாய்க் கிடைக்கிறது. திருமணமாகாத 30 வயது அழகி கிராடிஸ்கா [GRADISCA] இளைஞன் டிட்டோ [TITTO] (இவன்தான் பெல்லினியின் ஆல்ட்டர் ஈகோ) இவனது அம்மா அப்பா, தாத்தா, மனநிலை பிறழ்ந்த 42 வயது மாமா டியோ [TEO] மற்றும் வழக்கறிஞர் ஆகியவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்கும் பாத்திரங்கள், வழக்கறிஞர் ஒருவித கதைசொல்லியாக வருபவர். ஆறு முக்கிய நிகழ்வுகளை கதை வடிவில் தம் நினைவுகளாய் காட்சிபடுத்தியிருக்கிறார் பெல்லினி. முரல் நினைவு கூறல் “சொக்கப்பனை எரித்தல்” அல்லது “போகி கொளுத்துதல்” என்று கொள்ளும் வகையில் இத்தாலிய கலாச்சாரத்தில் கிழட்டு சூனியக்காரியை கொளுத்தும் பிரம்மாண்டமானதொரு BONFIRE மிகவும் ரசிக்கத்தக்கது.

இங்கு கார்த்திகையின்போது பணஓலைக் கூடுகளை கோயில் முன்வைத்துக் கொளுத்தும் சொக்கப்பனை தீயிடலும், பொங்கலுக்கு முன் போகி கொளுத்துவதும், இத்தாலியில் வேறுவிதமாய் கொளுத்தப்பட்டு அட்டகாசமாய்க் கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மைப்போலவே குளிர்கால BONFIRE தான் அங்கும் குளிர்காலம் முடிவடைந்து வசந்தகாலம் தொடங்கும் நாளன்று இரவில் “கடுங்குளிர் ஒழிந்தது” என்பதை “பழைய சூனியக்காரி எரித்துக் கொளுத்தும் வழக்கம் இத்தாலியில் இருந்து வருகிறது. அதற்காக எல்லாரும் தம் வீடுகளிலுள்ள உதவாத பழைய மரச்சாமான்கள், காகிதங்கள், துணி தினுசுகளையெல்லாம் மைதானத்தில் கொண்டு வந்து குவிப்பார்கள். கிழச்சூனியக்காரியின் உருவ பொம்மை ஒன்று, துணி, மரம், நாரால் செய்யப்பட்ட வண்டியில் கொண்டு வந்து, மைதானத்தில் குவித்துள்ள குப்பை கூளங்கள் மேல் நிறுத்தப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்படும். அப்பகுதி மக்கள் கண்டு களித்து போவர். இந்நிகழ்ச்சி அற்புதமாய் படமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிப் பருவ வாழ்க்கை நிகழ்வுகள் மிகவும் ரசாபாசமாய் போகிறது. வரலாறு, கணிதம், அறிவியல் வகுப்புகளும், பையன்களின் அட்டகாசமும், சிரிக்கச் செய்வன. கடைசியாக தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவ சங்கீர்த்தனம் பெறும் வயது வந்த பள்ளிப் பையன்களின் காட்சி பிரமாதமானது. பாதிரியார் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வரும் ஒவ்வொரு பையனையும் பார்த்து கேட்கும் ஒரு கேள்வி, “உன்னை நீ அந்தரங்கமாய் தொட்டுக் கொண்டாயா?” என்பது.

உடனே பையன், “இல்லவே இல்லை” என்று சொல்லவும் மன்னிப்பு பெற்றவனாய் போய்விடுவான். ஒருவன் தனக்குத்தானே தன்னை அந்தரங்கமாய்த் தொடுவதென்பது நாகரிகமான வார்த்தையில் “முஷ்டி மைதுனம் செய்து சுயஇன்பம் அடைந்தாயோ?” எனப்படும் கேள்வி. அதே சமயம் பையன்கள் நால்வர் [பெல்லினியும் ஒருவர்] ஒரு காரில் உட்கார்ந்து அவரவர்கள் தங்களுக்கு இஷ்டமான பெண்ணை கற்பித்து சுய இன்பம் அடையும் காட்சி ஆபாசம் என்பதைவிட நகைச்சுவை மிக்கதாகிவிடுகிறது. அதில் ஒருவருக்கொருவர் சண்டை வேறு. “நீ யாரை மனதில் நினைத்து செய்தாய்?” என்று ஒரு பையன் கேட்க, மற்றவன் தான் மனதில் வரித்த பெண்ணைச் சொல்ல, உடனே முன்னவன், “அது என்னோட ஆளே். அதையேண்டா நீ நினைச்சே?” என்று குஸ்திக்கு வரும் காட்சி.

பாசிஸ ஆட்சியை அமர்கார்டு சமூக நிகழ்வுகள் ரீதியாக கேலி செய்கிறது. கல்யாணச் சடங்கு கூட பாசிஸ முறையிலேயே நடத்தப்படுவதாய் பெல்லினி நைய்யாண்டி செய்கிறார்.

“பாசிஸ்ட் மணமகளுக்கும் பாசிஸ்ட் மணமகனுக்கும்” என்று கூறிவிட்டு சடங்கு தொடங்கும்.

“நான் பாசிஸ்ட் ரோசியை பாசிஸ்ட் மனைவியாக ஏற்கிறேன்” என பாசிஸ மணமகனும், “நானும் அவ்விதமே பாசிஸ்ட் ராபர்டோவை பாசிஸ்ட் கணவராய் ஏற்கிறேன்” என்று பாசிஸ மணப்பெண்ணும் பாசிஸ பாதிரியாரிடம் கூறுவார்கள்.

இறுதிக் காட்சிகளில் ஒன்று, பிரம்மாண்ட பனிமூட்டம், அப்போது ஒரு மயில் பறந்து வந்து தோகை விரிக்கும் காட்சி அருமை. ஒரு மனநல காப்பகத்திலிருந்து 42 வயது மனநோயாளி டியோ என்பவளை, அனுமதியுடன் வெளியில் அழைத்துப்போகும் நிகழ்வு சுவாரசியமானது.

கதாநாயகனுக்கு [பெல்லினி] மாமன் முறையாகும் 42 வயது. மிக உயரமான [TEO] மன நலக் குறைவால் காப்பகத்திலிருப்பவன். ஆணும் பெண்ணுமாய் கூட்டம். கிராமத்து பண்ணை வீட்டுக்குப் போகிற வழியில் மனநலக் காப்பகத்திலிருந்து அனுமதியுடன் டியோ மாமாவையும் [சமர்த்து] அழைத்துப் போகிறது. மற்றவர்கள் அங்குமிங்கும் திரிகையில், ஜேபியில் கற்களோடு டியோ ஒரு பெரிய மரத்திலேறி உச்சிக்கு போய் கத்துகிறான். மற்றவர்கள் ஓடிவந்து அவனை கீழே இறங்கி வர கத்துகிறார்கள். அவன் இறங்காமல் உரக்க தொடர்ந்து பரிதாபமான தொனியில் கத்துகிறான்.

“எனக்கு ஒரு பெண் வேண்டும்” திரும்பத் திரும்ப அந்த மனநிலை பிறழ்ந்த டியோ தனக்கு ஒரு பெண் வேண்டும் என்பதையே பரிதாபமான தொனியில் கத்தி கேட்கிறான்.
“பைத்தியம் முத்தி விட்டதா?” என்று ஒருவர் கேட்கிறார்.

“இல்லை இப்போதான் தெளிந்திருக்கிறது” என்கிறார் ஒருவர்.

அப்போது டியோவின் தந்தை புன்சிரிப்போடு கூறுகிறார், “டியோவுக்கு 42 வயது. இயல்பான காம உணர்வுதான் அது”

அவனை இறங்கி வருமாறு கேட்டுவிட்டு ஏணி மூலம் ஒருவர் ஏறுகிறார். டியோ தன்னிடமுள்ள கற்களில் ஒன்றால் அவர் மண்டையை அடிக்கிறான். இன்னொருவர் ஏறுகிறார். அவரும் கல்லடிப்படுகிறார். கடைசியாக சொல்லியனுப்பி, மனநலகாப்பக வேன் வருகிறது. குள்ளமான நர்ஸ் ஒருத்தி ஏணியில் ஏறவும் டியோ மகிழ்ந்து இறங்கி வண்டியில் ஏறுகிறான்.
அமர்கோடு தன் இறுதி நினைவும் நிகழ்வுமாக 30 வயது அழகிய கிராடிஸ்கா [GRADISCA]வுக்கு நிகழும் திருமணத்தோடு முடிவுறுகிறது.

ஃபெடரிகோ ஃபெல்லினியின் நான்கு படங்கள் சிறந்த அயல்நாட்டுப் படங்கள் எனும் வரிசையில் பரிசு பெற்றவை. 1993-ல் அவர் வாழ்நாள் சாதனைக்கான ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருது பெற்றார். பெல்லினி அதே ஆண்டு 1993-ல் ரோமில் காலமானார்.

இத்தாலிய சினிமா என்றதும் கூடவே வருவது அதன் நியோரியலிஸ படங்கள். விட்டோரியா டிசிகாவுக்குப் பிறகு வந்த இத்தாலிய இயக்குனர்கள் நியோரியலிஸத்தில் தொடங்கி, போகப்போக வேறு வகைமைகளைப் பிடித்துக்கொண்டனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் மைகலாஞ்சலோ அண்டோனியோனி [MICHELANGELO ANTONIONI] 1912-ல் வட இத்தாலியிலுள்ள ஃ்பெர்ரரா [FERRARA] எனுமிடத்தில் பிறந்த அண்டோனியோனி இருபது திரைப்படங்கள் செய்தவர். BOLOGNA பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப்பட்டப்படிப்பில் முதன்மை மாணவராக தேர்ச்சி பெற்ற அண்டோனியோனி உள்ளூர் பத்திரிகையொன்றில் திரைப்பட விமர்சனம் செய்து வந்தவர். பிறகு ரோமுக்கு போய் “சோதனை வகை திரைப்பட மையம்”, [EXPERIMENTAL CINEMA CENTRE] என்ற திரைப்படக் கலை பள்ளியில் பயின்றவாறே “CINEMA MAGAZINE” இதழில் பணிபுரிந்தவர். இவை இரண்டுமே பாசிஸத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டவையென தீர்மானிக்கப்பட்டவை. 40களின் தொடக்கத்தில் ராபர்டோ ரோசெல்லினியுடன் திரைக்கதை எழுதுவதில் இணைந்திருக்கிறார். 1943-ல் அண்டோனியோனி தனது முதல் ஆவணப்படமான “THE PEOPLE OF THE PO” என்பதை எடுத்தளித்தார். அவர் இயக்கிய முதல் முழு நீள கதைத் திரைப்படம் “CRONACA DI UN AMORE” [CHRONICAL OF A LOVE] 1950-ல் வெளியானது.

இவரது துயர முடிவைக் கொண்ட“IL GRIDO” [THE OUTCRY] என்ற விறுவிறுப்பான படம் 1957-ல் வெளிவந்தது. ஆல்டோ [ALDO] மனைவியை இழந்த ஆறுவயது சிறுமிக்குத் தந்தை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மெகானிக். ஆல்டோ இர்மா [IRMA] என்ற திருமணமானவளை ஏழு வருடமாய் நேசிக்கிறான். அவள் கணவன் வேறு நாட்டில் மரணமுறுவதையடுத்து இர்மா மனம் மாறி விடுகிறாள். ஆல்டோவின் உறவை நிராகரிக்கிறாள். ஆல்டோ வெறுப்பில் வேலையை உதறிவிட்டு, மகளுடன் வேறொரு ஊருக்குப் போனவன் பெட்ரோல் பங்கு வைத்திருக்கும் விதவையுடன் வாழ்கிறான். விதவைக்கு ஆல்டோவின் பெண் ஒரு தலைவலி. அவன், தன் பெண்ணை, தங்கிப்படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டு, அங்கிருந்து வேறு இடம் போய் ஒரு விலை மாதுவுடன் இருந்து பார்த்துவிட்டு, சதா நினைவை அலைக்கழிக்கும் இர்மாவைப் பார்க்கப் போகிறான். ஒரு குழந்தையோடு அவளிருப்பதைப் பார்த்ததும் மனமுடைந்து உயரமான இடத்திலிருந்து விழுந்து சாகிறான். இப்படம் ஒருபோதும் அலுப்பேற்படாத வண்ணம் இயக்கப்பட்டுள்ளது.

அண்டோனியோனி 1966-ல் இங்கிலாந்தில் “ப்ளோ அப்” [BLOW UP] என்ற வண்ணப்படம் செய்தார். இப்படம் சென்னை சஃபையர் வளாகத்து புளூடயமண்ட் தியேட்டரில் திரையிடப்பட்டது. மிகவும் பேசப்பட்ட படம். ஜுலியோ கோர்டஸரர் [JULIO CORTAZAR] என்பவரின் சிறுகதையைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ப்ளோ அப் மென்மையானதொரு திகில் வகைப்படம். அண்டோனியோனியின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் “L`AVVENURA” [THE ADVENTURE] [1960]வும்

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்ஒரு மர்மத்தைக் கொண்டதாகவேபடும். 1960-ல் லவெஞ்சுரா கேன்ஸ் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டபோது, அங்கு அண்டோனியோனியை வெறுத்துவந்த கும்பலால் கத்தி, விசிலடித்து ஆரவாரத்து எதிர்த்தனர். ஆனால் அங்கு வந்திருந்த சக்திமிக்க திரைப்பட விமர்சகர்களும் திரைப்பட இயக்குனர்களும் எதிர்ப்பாளர்களின் செயலை மறுத்து, லவெஞ்சுரா கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட படங்களிலேயே தலைசிறந்ததும் முக்கியமானதுமென்றும் சான்றிதழ் எழுதி கையெழுத்திட்டு வெளியிட்டனர். இது நடந்து இரு ஆண்டுகளுக்குள் பிரிட்டனின் புகழ்பெற்ற தர நிர்ணயப் பத்திரிகையான “்SIGHT AND COUND”-ன் சர்வதேச திரைப்பட விமர்சகக் குழுவினரால், அண்டோனியோனியின் LAVVENTURA படம் அதுவரை வெளிவந்த எல்லா படங்களிலும் இரண்டாவது மகத்தான படம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

பணவசதி கொண்ட ஒரு சிறிய ரோமானிய குழு ஓர் உல்லாச கப்பலிலேறி சிசிலியிலிருந்து பயணிக்கையில் ஆளரவமற்ற பாறைகள் நிறைந்த தீவில் இறங்கி பகற்பொழுதைக் கழிக்க விரும்பி சுற்றி வருகையில் அன்னா என்பவள் காணாமற் போகிறாள். அந்தப்பெண் கப்பலில் வந்த தன் புத்திசாலி சினேகிதி கிளாடியாவிடம் [CLAUDIA] தனக்கும் தன் கட்டிடக் கலை வல்லுன காதலனுக்கும் சரி வரவில்லையென கூறியிருக்கிறாள். தான் ஒரு சுறாமீன் போனதைக் கண்டதாக குளிக்கையில் பொய் சொல்லி பயமுறுத்தியுமிருக்கிறாள். இதன்பின் இருபத்தைந்து நிமிடங்களில் அன்னா காணாமற் போகிறான். ஒரு நிமிடம்விட்டு உண்மையிலேயே நாம் சுறாமீன் ஒன்றைப் பார்ப்பதோடு, நமது பார்வையில் சில கணங்களுக்கே பட்டு மறைகிறது ஒரு படகு. படகு சில வினாடிகளுக்கு தெரிந்து தீவைத் தாண்டி மறைகிறது.

அன்னா என்ன ஆனாள், அவளுக்கு என்னவாயிற்று என்பது எதையும் அண்டோனியோனி படத்தில் இறுதிவரை வெளியிடவேயில்லை. பீட்டர் வயர் [PETER WEIR] இயக்கிய அரிய படமான “PICNIC AT HANGING ROCK” என்ற படத்தின் மர்மமும் கூடவே நினைவுக்கு வருகிறது. பிக்னிக் போன பெண்கள் பள்ளி மாணவிகளில் ஒரு பெண் மர்மமாய் காணமற்போகிறாள். இறுதி வரை அந்த மர்மம் சொல்லப்படாமல் நம்முடைய யூகத்துக்கே விடப்படுகிறது. அண்டோனியோனி, அன்னா என்ன ஆனாள் என்பதைச் சொல்லாததுதான் ரசிகர்களில் ஒரு பிரிவினர் கலாட்டா செய்தது.

அன்னாவின் சினேகிதி க்ளாடியாவும் அன்னாவின் காதலன் சான்ட்ரோவும் [SANDRO] அன்னாவை தீவில் தேடுகையில், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அந்த உறவு, உடலுறவு வரை செல்லுகையில் கிளாடியா குற்ற உணர்வால் வதைபடுகிறாள். தொலைந்து போன ஒருத்தியின் காதலனுக்கும், தொலைந்து போனவளைத் தேட முற்பட்ட அவளது சினேகிதிக்கும் ஏற்படும் காதல் உறவோடு நாம் சமாதானமடைவதில்லை. அந்த மறைவின் மர்மம் தீர்க்கப்படாததோடு, அண்டோனியோனியை மீண்டும் இங்கிலாந்தில் செய்த “BLOW UP” படத்திலும் அவ்விதமான அவிழ்க்கப்படாத மர்மத்தை நீட்டவும் செய்கிறது.

அதே சமயம் ப்ளோஅப் லவஞ்சுராவின் தீர்க்கப்படாத மர்மத்துக்கும் அப்பால் அதாவது அந்த மர்ம உணர்வுக்கான வெளியையும் தாண்டிச் செல்லுகிறது எனலாம். விரிவான போலீஸ் புலனாய்வு, சோதனைகளையும் கடந்து கதாநாயகனான புகைப்படக் கலைஞனின் மனவெளிக்கும் வெளியே அந்த மர்மம் தன் பூடக இருப்பை உ ணர்த்துகிறதா என்பது நமக்கான பரிதவிப்பு என்றால் அதையே அண்டோனியோனி மிக அழகாக படத்தின் இறுதிக் காட்சியில் மற்றொரு பூடக முடிச்சவிழ்ப்பாக மிக நாசுக்காக காட்டிச் செல்லுகிறார்.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்

மைய பாத்திரமான தாமஸ் [DAVID HEMMINGS என்ற நடிகர்] ஒரு ஃபாஷன் புகைப்படக் கலைஞர். அவன் புகைப்படக் காட்சிகள் கொண்ட காஃபி டேபுள் புத்தகமொன்றைச் செய்ய மேற்கொண்ட நிலையில், ஒருநாள் ஆட்கள் இல்லாத பூங்காவுக்குள் நுழைந்து தன் நூலுக்கான இறுதி வடிவின் சில காட்சிகளை அங்கு படமெடுக்கிறான். தாமஸ், வயதான ஒரு மனிதனும், இளம் பெண் ஒருத்தியும் அங்கு காதலர்களாய் சுற்றுவதைக் கண்டு படமெடுத்து விடுகிறான். அது வேறுவிதமாகிறது. அவனைத் தொடர்ந்து வந்த அந்த இளம் பெண் அவனிடம் சண்டை போட்டு அந்த படத்தைக் கொடுக்கும்படி கேட்கிறாள். தாமஸ் உள்ளே போய் வேறொரு நெகட்டிவ் சுருளைத் தந்துவிட்டு பூங்காவில் எடுத்த படச்சுருளின் நெகட்டிவை மறைத்து விடுகிறான். பிறகு அந்த படச் சுருளை டார்க் ரூமில் கழுவிப் பார்க்கையில் புதர் ஒன்றில் கை ஒன்று யாரையோ குறி பார்த்து துப்பாக்கியொன்றை நீட்டினபடியிருக்கிறது. அடுத்த சட்டகத்தை மேலும் பெரிதாக்கிப் பார்க்கிறான். புகைப்படத்தை அதன் அளவுக்கு மேல் பெரிதாகுவதை “BLOW UP” என்பர். இங்கு படத்தை ப்ளோ அப் செய்வதோடு, ஒரு விஷயமும் ப்ளோ அப் செய்யப்படுகிறது.

அண்டோனியோனி அற்புதமான தலைப்பை அளித்துள்ளார். அடுத்த படம், புதர் அருகே ஒரு மனிதன் கிடப்பது போல. மறுநாள் தாமஸ் அங்கே போய் பார்த்தபோது, ஒரு சடலம் கிடக்கிறது. ரத்தக்கறை. உடனே இதை போலீசிடம் அவன் கூறவும், அவர்கள் அவனோடு அங்கு போய்ப் பார்க்க அங்கே எதுவுமே இல்லை. போலீசார் அவனைத் திட்டி எச்சரித்து அனுப்புகின்றனர். அவனுக்கு குழப்பம் தீரவில்லை. ஒரு வண்டியிலிருந்து கூட்டமாய் ஆணும் பெண்ணும் இறங்கி இரு குழுக்களாக பிரிந்து பந்து விளையாடும் காலி மைதானத்தை அடைகிறார்கள். வாலிபால் விளையாட்டடைத் தொடங்குகின்றனர். வலை கிடையாது, பந்தும் கிடையாது. ஆனால் சகல ஆட்ட நுணுக்கங்களோடும் ஆடுகிறார்கள்.

“லவ் ஆல்”, பந்தை அடிப்பது போல நெட்டுக்கு மேலே போகுமாறு ஒருவன் சர்வீஸ் அடிக்க, மறு அணியில் ஒருவன் திருப்பியடிக்கிறான். இதை தாமஸ் தள்ளி நின்று பார்க்கையில், பந்து கோட்டுக்கு வெளியில் போய் விழுந்ததாய், “அவுட்” என்று கத்துகிறார்கள். ஒருவன் தாமஸைப் பார்த்து, “பால் ப்ளீஸ்”, என்கிறான் புரிந்து கொண்டவனாய் தாமஸும் தரையில் குனிந்து பந்தை எடுப்பது போல் பாவனை செய்து, அதை அவர்களை நோக்கி வீசுவது போல பாவனை செய்ய, படமும் முடிகிறது.

Bioscope Karan 25th WebSeries by Vittal Rao. This Series About Italy movies பயாஸ்கோப்காரன் ஃபெல்லினி மற்றும் அண்டோனியோனி 25 – விட்டல்ராவ்
JACK NICHOLSON

மைகலேஞ்சலோ அண்டோனியோனியின் மற்றொரு அற்புத படம் “பயணி” [PASSENGER] பயணியாக புகழ்பெற்ற நடிகர். ஜாக் நிக்கல் சன் [JACK NICHOLSON] நடிக்கிறார். டேவிட் லோகே [DAVID LOCKE] ஒரு தொலைக்காட்சி நிருபர். வட ஆப்ரிக்காவின் மணல் மேலிட்ட கிராமத்தில் வந்தவன், ஒரு விடுதியில் அறை தேடுகிறான். இன்னொரு பயணியோடு சேர்ந்து தங்க ஒப்புக்கொண்டு அறைக்குப் போனால், அந்த பயணி இறந்து கிடக்கிறான். அவனது டைரியை எடுத்துப் படித்துவிட்டு இறந்தவன் முகத்தை கவனிக்கிறான். ஒரே அச்சில் வார்த்தாற்போல, – தமிழ் சினிமாவின் சகல காலந்தோரும் நடிகர்கள் நடிப்பதற்கேற்றபடி கற்பிக்கப்பட்ட இரட்டை வேடத்துக்கேற்ப – இருக்கவும் நிருபர் இறந்தவனாக மாறிக்கொள்ளுகிறான். T.V நிருபர் இறந்துபோக, இறந்தவன் உயிரோடு நடமாடுகிறான். அதற்குமேல் பிரச்சினைகளை எதிர்கொள்ள திணறுகிறான். இறந்தவனுக்கும் பயங்கரவாத கும்பலுக்குமான தொடர்பு, இறந்தவனின் காதலி என்று ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளுகிறான். வெளியில் வந்தவுடனே அவனைக் குறி வைத்து தாக்க பின் தொடரும் நபர்கள். இறுதியில் இவனும் சோக முடிவை மேற்கொள்ளுவதாக படம் முடிகிறது. மைகலேஞ்சலோ அண்டோனியோனி வாழ்ந்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது உட்பட நிறைய விருதுகளையும் பெற்றவர். அண்டோனியோனி தமது 94ம் வயதில் 2007-ல் காலமானார்.

(இத்தாலிய சினிமா முடிவுற்றது)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *