பிரெஞ்சு சினிமா – 2
விட்டல்ராவ்

ஐரோப்பிய சினிமாவின் கதை சங்கதியை கிரேக்க புராணக் கதைகளும் ரோமானிய அரசியல் விசயங்களும் மற்றும் பைபிள், ஷேக்ஸ்பியர்களும் அவ்வப்போது நேரடியாகவும், நிழலாகவும் பாதித்து வருபவை ஃபிரெஞ்சு திரைப்படக் கலைஞர் ழான் காக்டோ JEAN CACTEAJJ வின் படங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமானவை. ஆர்.ஃபியஸ் மற்றும் எ டெஸ்டமெண்ட் ஆஃப் ஆர்ஃபியஸ் (Orphee, A Testament of Orpheus) என்பவை. அதே சமயம் ஒரு தேவதைக் கதையையும் திரைப்படமாக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த பார்வையில் காக்டோவின் படங்கள் அவ்வளவும் தேவதைக் கதைக் காட்சி சித்தரிப்புக்களாகவே தோன்றுகின்றன. ழான் காக்டோ தன்னை ஒரு போதும், ஒரு திரைப்படக்காரன் என்று சொல்லிக் கொண்டதேயில்லை. மாறாக, ஒரு கவிஞன் என்றுதான் அவர் கருதி வந்தவர். தன் வாழ்நாள் கலைக்காரியங்களில் திரைப்படமெடுப்பதையும் பல கலை வடிவங்களில் ஒன்றாக அவர் வைத்திருந்தார். இருப்பினும் அவர் திரைப்படங்கள் ஃபண்டஸி Fantacy தேவதைக் கதைகள் என்பனவற்றையே புதிய வடிவில் புதிய மொழியில் காட்சிப் படுத்தியிருந்தது புதுமையும் மலர்ச்சியும் வியப்புமிக்கதுமானவை. அவரது திரைப்படங்கள் எண்ணிக்கையில் குறைந்தவை என்றாலும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதத்தில் கனவுமயமாய்த் தோன்றுபவை. 1946-ல் காக்டோ இயக்கிய, LABELLE ET LA $ ETE (Beauty and the Beast) மிகச் சிறந்த படமாய்ப் பேசப்படுவது அழகியும் மிருகமும் படம் வயது வந்த சிந்தனை முதிர்ச்சி பெற்றவர்களுக்கான தேவதைக்கதையைக் கொண்டது தேவதைக் கதைகள் இங்கிலாந்திலும் ரஸ்யாவிலும் மிகச் சிறந்த குழந்தைப் படங்களாய் எடுக்கப்பட்டு 90களில் தூர்தர்ஷனில் தொடர்ந்து ஒளிப்பரப்பியது நினைவிலிருக்கலாம். அந்த வகையில் இதே கதையை இருமுறை படமாய்ப் பார்த்தேன். Beauty and the Beast திரைப்படம் காக்டோவின் இரண்டாவது ஆக்கம், 2-வது உலகப் போரின்போது ஜெர்மன் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு திரைப்பட ஆக்கம் மீண்டும் அதன் பெருமைக்குரிய இடத்தையடைவதில் காக்டோவை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர் சினிமா ரசிகர்கள். பிரான்சின் கலாபிமானிகளால் அழகியும் மிருகமும் அதை முன்னெடுக்கக்கூடுமென கருதப்பட்டது.

அதே சமயம், மறுபுறம், பொதுமக்களின் ரசனையிலிருந்து காக்டோ தூரம் விலகி மேல் தட்டு ரசிகர்களுக்கான சினிமாக்காரன் என்ற விமர்சனத்துக்கும் ஆளானார். இதைக் கருத்தில் கொண்டு மேல்தட்டு கீழ்தட்டு கலாரசிகர்களும் கண்டு ரசித்திடும்படி காக்டோ பல நூற்றாண்டுப் பழங்கதையான அழகியும் மிருகமும் எனும் (Fair Tale) தேவதைக் கதையைப் படமாக்கினார். அழகி ஒருத்தியின் தந்தையை உடலெங்கும் உரோமம் முளைத்து சூழ்ந்த மிருகம் ஒன்று காட்டிலுள்ள தன் கோட்டையில் சிறை வைக்க, அழகி தன் தந்தைக்குப் பதிலாக தன்னை பணயம் வைத்து, அவருக்குப் பதிலாக தன்னை சிறையில் வைக்குமாறு கேட்க, மிருகமோ அவள் முதலில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. மிருகத்தின் அன்பு மனம் அழகிக்குப் புரிகிறது.

எனவே ஒப்புக் கொள்ளுகிறாள். காக்டோ இந்த பழங்கதையை தனது கலைபூர்வ மனத்துடிப்புக்கு வடிகாலாக பார்க்கிறார். நேரான இக்கதையை அவர் வெட்டி ஓட்டுகிறார். ஒரு வியத்தகு மாய மாளிகையுள் இருவரையும் நடமாட விடுகிறார் காக்டோ. மாயக் காட்சி காட்சிகளால் நாம் நாஜி ஆக்கிரமிப்பால் பிரெஞ்சு கலை கலாச்சாரத்துக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை நாம் உணருகிறோம். இமைக்கவும் தவறுகிறோம். இந்த காட்சியாடல்கள் ஒவ்வொரு சட்டத்தையும் ஒளிப்பதிவாளர் ஹென்றி அலிகானின் Henri Alikan காமிரா மாய வித்தைப் புரிந்திருக்கிறது.

இந்தக் காட்சிகளில் அழகி சும்மா நடந்துபோகவில்லை. மிதந்து செல்லுவதாய் நாம் பார்க்கும் வகையில் காமிரா விந்தையூட்டுகிறது. மெழுகு வர்த்திகள் வழக்கமாய் அவற்றுக்கான தாங்கியில் இல்லாமல் சுவர்களில் பதிந்த மனிதக் கைகளில் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. முகம் பார்க்கும் நிலைக் கண்ணாடிகள் நீர்த்தடாகமாய் மாறும் விந்தை. விளக்கொளிகள் தம் போக்கில் எரிவதும் அணைவதுமாய் இருக்கின்றன. சிலைகள் உயிர் பெறுகின்றன. கனவு எனும் ஃபிராய்டின் தத்துவத்தை, காக்டோ இந்தக் காட்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார். மிருகம் கடைசியில் சாபம் நீங்கி அழகிய இளவரசனாக உருமாற இருவரும் மனமகிழ்ச்சியோடு வாழ்வதாக கதையும் திரைப்படமும் முடிகிறது.

மிருக ரூபத்தில் நடிக்கும் அன்றைய பிரெஞ்சு நடிகர் ழான் மரியா JEAN MARAIS அற்புதமாகச் செய்திருக்கிறார். இப்படத்தைப் பார்த்த அன்றைய புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கிரேடா கார்போ, என் மிருகத்தையே எனக்குத் திரும்பக் கொடுங்கள் என்று கூறியது படத்துக்கும் நடிகரின் நடிப்புக்குமான புகழாரமாய் கொள்ளப்பட்டது.

ழான் காக்டோ கிரேக்கப் பழங்கதை, ஆர்ஃபியஸ் Orpheus என்பதைக் கொண்டு 1950ல் Orphee என்ற திரைப்படத்தை எடுத்து இயக்கினார். இப்படங்களை 70களின் தொடக்கத்தில் சென்னை பிரெஞ்சு கலாச்சார மைய திரையரங்கில் பார்த்தேன். காக்டோ நன்கறியப்பட்ட கவிஞர். இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான ஆர்ஃபியஸ் 40களிலிருந்த ஒரு கவிஞனாக காக்டோவின் திரைக்கதை அமைகிறது. இவன் மீது பொறாமைக் கொண்ட ஒருவன். இவன் அடையாளம் தெரியாத இரு மோட்டார் சைக்கிள்காரர்களாக சாலையில் இடித்துத் தள்ளப்பட்டு மரணிக்கிறான். அப்போது அங்கு தோன்றும் மரண தேவதை இளவரசிபோல தோன்றவும், கவிஞன் ஆர்ஃபியஸ் மயங்குகிறான். ஆனால் ஆர்ஃபியஸால் கைவிடப்பட்ட அவனது மனைவி யூரிடைஸ் Eurydice திடிரென இறக்கவும், அவன் பாதாள லோகத்தை அடைந்து தன் மனைவியை மீிட்டுக் கொண்டுவரப் போகிறான். இந்தப் படத்தின் நகர்வுகள் உயர்ந்த கவித்துவ கற்பனை வடிவங்களாய்த் தோன்றுமாறு நிக்கோலஸ் ஹேயர் Nicolas Hayer என்ற ஒளிப்பதிவாளரின் காமிரா விந்தை புரிந்திருக்கிறது. ஆனாலும் குழப்பம் சூழ்ந்த அனுபவமாகிறது.

ஆர்ஃபி படத்தின் தொடர்போல ழான் காக்டோ 1959ல் The Testament of Orpheus என்றதொரு ஃபண்டஸி படத்தை, ரோலண்டு போண்டாய்ஜோ என்ற Roland Pontoizeau திறமையான ஒளிப்பதிவாளரின் அற்புத, காமிரா கோணங்கள் மற்றும் தந்திரக் காட்சிகளைக் கொண்டு தயாரித்து வெளியிட்டார். மேற்கூறிய திரைப்படங்களில் இயக்குனர் ழான் காக்டோவே முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஃபண்டஸி- மாய உலகு என்பதால் நிஜமான காலத்துக்கும் யதார்த்த நிலைக்கும் வெளியிலிருந்து நிகழ்வதால் ஒரு கவிஞனின் அனுபவங்களாலான காட்சிக் கூறலுமான படம் இது. ஆர்.பி.யைவிட டெஸ்டமெண்டு ஆஃப் ஆர்ஃபியஸ் பல படிகளில் சிறப்பாக வந்திருக்கிறது. கவிஞன் பழைய கிரேக்க நீதி தேவதையான ஹியூடபைஸ் Heutebise என்ற நடுத்தர வயது பெண்ணுக்கு முன்பாக பல்லாஸ் அதீனாவின் மாளிகையில் நிறுத்தப்படுகிறான். நீதிபதிகளில் ஒரு ஆணும் நீதிதேவதையும் கவிஞன் ஆர்ஃபியஸை மாறி மாறி கேள்விகள் கேட்கின்றனர். கேள்விகளும் பதில்களும் அற்புதமானவை. அவை யாவும் நவீன கவிதைகளுக்கும் சமகால கவிஞர்களுக்கும் (குறிப்பாக எஸ்ரா பெளண்ட் நெரூடா, யெவ்குஷெங்கோ, பிரமிள் தர்மு சிவராம் சரிபோகும்படியாய் தோன்றுபவை. சர்வதேச இலக்கிய சூழலிலும் மலையாள கலையிலக்கிய வெளியிலும் கம்பீர ஆக்ருதியுடன் வெளிவந்த விமர்சகர் எம்.கோவிந்தன், இவர் நோக்குக் குத்தி (Scare Crow) என்ற நீண்ட கவிதையை எழுதினார். அதையே கவிதை நடை மாறாது தம் மகன் மணவேந்திரநாத் நடிக்க திரைப்படமாக்கினார். கவிதைத் திரைப்படம் அது. காக்டோவின் படம் கவிதையைக் காட்சி நகர்வுகளாய் பிம்பங்களைக் கொண்டு பார்த்த அனுபவபூர்வமானது. ஆர்.பியின் வளர்ப்பு மகன் செகஸ்ட் GeGeste செகஸ்ட் தன் தந்தைக்கு கொடுத்த செம்பருத்தி மலரைக் குறித்த கேள்வி கேட்கப்படுகிறது. கவிஞனின் பதில்கள் விரிவடைகையில் திரைப்பட ஆக்கமும் கவிதைப் புனைவும் கேள்விக்குள்ளாகின்றன. அப்பாவித்தனமும் குற்றமாக சுமத்தப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பின் ஆர்ஃபியஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதீனா எனும் கிரேக்க தேவதையிடம் அனுப்பப்படுகிறான். அவள் வீசும் ஈட்டி கவிஞனின் நெஞ்சில் பாய்ந்து இறக்கிறான். இடையில் கவிஞன் ஜிப்ஸிகளை, ஒரு மகத்தான திரைச்சீலையை பார்க்கிறான். இறுதியில் கிரேக்க நாடகமேதை சோஃபக்ளீஸ் எழுதிய ஈடிபஸ் நாடக பாத்திரமான ஈடிபஸ் தன் தாயை உடலுறவு கொண்ட பின் குற்றத்தை உணர்ந்து கண்களைக் குத்திக் கொண்டு குருடனாய் நடந்து போவதோடு படம் முடிகிறது. ழான் காக்டோவின் குரல் ஆரம்பத்தில் கேட்கும்போது அவர் நம்மிடம் கூறுகிறார்.

தான் காணும் கனவையும், படம் பார்க்கும் ஜனங்கள் காணும் கனவையும் இணைந்தே பார்க்கும்படி திரைப்பட இயக்குனரால் செய்ய முடியும். அதே சமயம் பொய்யான மாயக் காட்சிகளை உண்மையும் யதார்த்தமானதாயும் செய்து காட்ட இயலும். எனது திரைப்படம் வெறும் ஒரு ஆடை அவிழ்க்கும் காட்சியே இங்கு என் உடலை களைந்துவிட்டு எனது ஆத்மாவை நான் காட்டுகிறேன். என்கிறார் காக்டோ. அவரே ஆர்ஃபியஸாக நடித்திருக்கிறார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்பட மேதை லூயி புனுவெலை (Luis Bunuel) அறிந்தவரை, உயர்ந்த சர்ரியலிஸ திரைப்படங்களையும் அவற்றினூடாக சமூக நடப்பியல் அங்கதங்கள் மற்றும் மத ரீதியான பைத்தியக்காரத்தனத்துக்கான எள்ளல்களை வெளியிட்டவர் என அறியப்படுபவர்.

சரீ ரியலிஸம் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை கவனிக்கிறது. காதலையும் காமத்தையும் புகழ்ந்து போற்றுகிறது. 1919ல் தன் அறையில் ஆந்த்ரே பிரதான் Andre Breton ஒரு ஜன்னல் புறமாய் உட்கார்நதிருந்தவ், ஜன்னலால் ஒரு மனிதன் இரண்டு பாகங்களாய்த் துண்டாகி நிற்பது போன்று தோற்ற உணர்வையடைந்தார். இந்த புதிய பார்வை உணர்வு விளைவாக கலையிலக்கியத்தில் ஒரு புதிய பாணி சர்ரியலிஸம் என்று அழைக்கப்பட்டது. ஆந்த்ரெ பிரதான் நரம்பியல் மருத்துவர் ஒருவரின் கீழ் மாணவராய் கொஞ்சகாலம் இருந்த சமயம் உளவியல் அறிஞர் சிக்மண்டு ப்ராய்டின் தானியங்கிக் கோட்பாட்டால் Automatism ஈர்க்கப்பட்டார். பிரதோன், ஃப்ராய்டு வழியில், நோயாளிகள் தங்களைப் பற்றி தாங்களே விளக்கிக் கூறுமாறு செய்து அதன்படி சிகிச்சை மேற்கொண்டார். பிரதோன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளராயிருந்தவர். காலப் போக்கில் அக்கட்சியின் இறுக்கமான கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதை சக சர்ரியலிஸ்டுகள் விரும்பவில்லை என்பதால் அவர்களை இயக்கத்திலிருந்து வெளியேற சொன்னார். தொடர்ந்து, நாவல் என்ற உருவக் கூற்றை கடுமையாக எதிர்த்த சரீரிய லிஸ்டான பிரதோன் தானே “நாடியா Nadja என்ற நாவலை எழுதி வெளியிட்டது நகைப்பான ஒரு முரணாக ஆனது. இதைத் தொடர்ந்து லூயி புனுவெல் செய்த திரைப்படங்கள் சிகரத்தைத் தொட்டன.

மார்க்ஸின் பிரக்ஞையை அரசியல் கட்சியாக கட்டும் கம்யூனிஸ்டு அரசியல்வாதிகளின் பிரக்ஞைகளுடைய விட மேன்மை மிக்கதும் முற்றிலும் வேறானது என்றும் மூல தத்துவமான மார்க்ஸிசத்தை கொண்டாடி விமர்சனம் வைத்தனர் சரீரியலிஸ்டுகள். விரைவிலேயே இரு இயக்கங்களுக்கும் ஒட்டாத தன்மை நிலவியபோது சர்வதேச கலாச்சாரப் பாதுகாப்பு காங்கிரஸில் பேசப்பட்டது. இதையடுத்து சரீரியலிஸ்டுகளுக்கும் அரசியல் ரீதியான ஆசார கம்யூனிஸ்டுகளுக்குமாயிருந்த மெல்லிய உறவு இழை முற்றிலுமாக அறுந்து போனது.

ரியலிஸம் எனும் யதார்த்தத்துக்கு, Sur என்ற பிரெஞ்சு சொல் மேலே, அப்பால் சேர்கையில் யதார்த்தத்துக்கு அப்பால் Surreallism என்றாகிறது. மிகச் சிறந்த சரீரியலிஸ ஓவியர் சால்வெடார்டாலி. ரஷ்யாவிலிருந்து வெளியேறி பிரான்சில் குடியேறிய ரஷ்ய யூத ஓவியரான மார்க் சகல் மற்றொரு உலகப் புகழ் பெற்ற சரீரியலிச ஓவியர், என்னை பிரெஞ்சு சினிமாவைப் பார்க்க ஊக்கப்படுத்தி பிரெஞ்சு கலாச்சார மையத்தின் திரைப்படச் சங்கத்தில் உறுப்பினராக்கிய பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் வெ.ராமின் அண்ணன் காலஞ்சென்ற வெ. ஜெயராமன் எனது சக ஓவியர் என்பதோடு மிகச் சிறந்த சர்ரியலிஸ ஓவியருமாவார். லூயிபுனுவெல், சால்வெடார் டாலி, பாப்லோ பிக்காசோ போலவே ஸ்பெயின் தேசத்தவர். அத்தேசத்தின் தென்பகுதியின் பெயர் அந்தாலு. (Andalu), 1928–ல் அந்தாலுசியன் நாய் (Un Chien Andalou= An Andalusian Dog) என்ற மெளனப் படத்தை சர்ரியலிஸ ஓவியர் சால் வெடார் டாலியுடன் சேர்ந்து இருவருமாய் எழுதிய கதையை இருவரும் நடித்து தயாரித்து இயக்கினார். இப்படமே புனுவெலுக்கு முதல் முயற்சி. இது காரிமிருந்து வந்த நமது திரைப்பட வரலாற்று பிரக்ஞைக்குள் தூக்கி வாரிப்போட்ட காட்சி ஒன்று. குளோஸ் அப் காட்சியில் மனித முகம் அதன் இடது கண் விழியை பிளேடால் வெட்டுகிறது என்ன இது.

மத நிறுவனங்கள், சமூகத்தின் பிற இறுக்கமான ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவை மனிதனின் இயல்பாக எழும் அசைகள், விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த பெரும் தடையாக இருந்து அதன் விளைவாக வக்கிரங்கள் எழுகின்றன என்று இப்படம் சொல்லுகிறது. இதையே இவருக்கு முன்பாகவும் பலர் சொல்லியிருக்கிறார்கள், என்றாலும் திரைப்படமென்ற காட்சி ரூப சாதனத்தின் மூலம் அதை வெளிப்படுத்த புனுவெல் கையாண்ட உத்திதான் அதை முதன்மையாக்குகிறது. இது ஒரு குறும்பட விரிசையில் வைக்கப்பட்டாலும் திரைப்பட வரலாற்றில் முதல் சர்ரியலிஸ சினிமா என்று கருதப்படுகிறது. கண் விழியை பிளேடு ஒன்று குறுக்காக வெட்டுவதான காட்சி எதன் குறியீடு? விளக்கங்கள் நிறைய வைக்கப்பட்டன. முழு நில வொன்றை நாம் பார்க்கும்போது, கரிய மேகம் ஒன்று அதை மறைக்கும் கொடுமையை இது குறிப்பதாக ஒரு விளக்கம்.

ஒரு சமயம், பால்கனி ஒன்றில் இரவு நேரத்தில் ஒருவன் பிளேடு ஒன்றை கூர்மையாக்கும் காட்சி. அந்த மனிதன் ஜன்னல் வழியாக முழு நிலவைக் கண்டு ஆனந்திக்கையில் ஒரு கரிய மேகம் நிலவை நோக்கி மெல்ல நகர்கிறது. ஒரு பெண்ணின் அகல விரிந்த கண்களோடான முகம். பிளேடின் கூறிய நுனி கண்ணருகே வருகிறது. ஒரு சிறிய மேகம் நிலவின் முன் நகர்ந்து அதை மறுக்கிறது. கண் முன் பிளேடு நகர்ந்து கண்ணைக் கீறிப் பிளக்கிறது. ஆசைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு- அதன் சாத்தியக் கூறுகள் பிளக்கப்படும் கொடுமையாக இது கொள்ளப்படுகிறது. சினிமாவில் லூயி புனுவெல் என்ற வித்தியாசமான படைப்பாளி உதித்து விட்டதை அறிவித்து விட்டது இத்திரைப்படம்.

புனுவெல், Fever Rises in Elpao எனும் படத்தை மெக்சிகோ சூழலில் 1959-ல் செய்தார். இப்படம் அவரது முத்திரையாக சர்ரியலிஸ கூறுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. என்றாலும் கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டதொரு அரசியல் படம். எல்பவோ ஒரு சிறு தீவு. அதன் அதிபரான மெக்சிகோவின் உபஜனாதிபதி சற்று உளநிலை சமன்பாடற்ற கோபக்காரர். மனைவி மீது சதா சந்தேகம் கொண்டலைபவர். பாலுணர்வு மிக்க அழகிய நடுத்தர வயதுக்காரியான அவர் மனைவிக்கும், அவரது அந்தரங்க செயலாளருக்கும் கள்ள உறவு இருந்து வருவதை உப ஜனாதிபதி தீவிரமாக சந்தேகிக்கிறார்.

செயலாளருக்கு எப்படியும்தானே உபஜனாதிபதியாக வேண்டும் எனும் அதிகார ஆசை வரவும் உபஜனாதிபதியின் மனைவியும் தன் கள்ளக் காதலியுமானவனைத் தூண்டுகிறான். தன் சுதந்திரமான காதல் காமக் களியாட்டத்துக்கு தடையாக நிற்கும் கணவனை அவர் அரசாங்க நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் ஆளை வைத்து சுட்டுக் கொன்றுவிட அந்தப் பழி தீவிரவாதிகள் மீது விழச் செய்கிறாள். மெக்சிகோ தலை நகரிலிருந்து எல்பவோ உப தலைவரின் செயலாளரை உப ஜனாதிபதியாக்கிவிட்டுப் போகிறார். தீவிரவாதிகளின் பலம் அதிகாரிகையில் கள்ளக் காதலி உப ஜனாதிபதியுடன் மெக்சிகோவுக்கு தப்பியோடிவிட துரிதப்படுத்துகிறாள். விமான நிலையம் கண்காணிப்புக்கும் பாதுகாப்புக்கும் கொண்டுவரப்படுகிறது. அவளை முன்னால் காரில் விமான நிலையத்துக்கு ஓடி விடும்படியும், தான் பின்னால் வருவதாயும் உபஜனாதிபதி ஏற்பாடு செய்கிறான். அந்த ஏற்பாட்டில் அவளையும் ஒழித்துவிட திட்டமிடுகிறான். கார் ஏர்போட்டே நெருங்கவும், கேட் சாத்தப்பட்டு அனுமதி மறுக்கப்படுகிறது. தடையை மீறி காரை செலுத்த முற்படுகையில் கார் காவலர்களால் சுடப்பட்டு, சுவரில் மோதி தீப்பிடித்து எரிய அவளும் மாண்டுபோகிறாள். இது புனுவெலைவிட மேலும் சிறப்பாக எடுக்கக்கூடிய இயக்குனர்கள் உண்டுதான் என்றாலும்அவரது முத்திரை என்று சிலவற்றை இப்படத்தில் அரிதாக சில காட்சிகளில் காணமுடிகிறது.

1958-ல் புனுவெல் மெக்சிகோவில் இயக்கிய நாஸரின் குறிப்பிடத்தக்க படம். கிறிஸ்து பிறந்த இடம் நாஸரெத். அதனால் அவரை நஸரேயன் என்று அழைப்பதுண்டு. நாஸரின் படத்தில் நஸரியோ எனும் கிறிஸ்தவ பாதிரியாரின் மையப் பாத்திரத்தினூடே கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை மையமாய்க் கொண்டது கதை. அவரைச் சுற்றி மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அண்டாரா எனும் விலை மாது, அவள் மேல் தீரா ஆசை கொண்ட குள்ள மனிதன் உஜோ. காதலனால் கைவிடப்பட்ட அழகிய இளம் பெண் பீட்ரைஸ். அவள் காதலன் பிண்டோ, நாஸரின் விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் செயல்பாடுகள் வழியே அவரைப் போலவே வாழ முயற்சிக்கிறார். ஒரு நாள் அவரது வேலைக்காரியே அவரது பணம், உடை இதர பொருள்கள் யாவற்றையும் திருடிக் கொண்டு ஓடிவிடுகிறாள். ஏழைகள், திருடர்கள், விபச்சாரிகள் என்று மோசமான சூழலிலிருக்கிறார் பாதிரியார் அவரது ஏழ்மை, அப்பாவித்தனம் கண்டு காசு தர்மம் செய்து விட்டுப் போகிறார்கள். அந்தக் காசையும் ஏழைகளுக்கு அவர் கொடுத்துவிட்டு உணவுக்கும் பிறரை எதிர்பார்க்கிறார். அண்டாரா எனும் விபச்சாரி சக விபச்சாரியோடான சண்டையில் பலமாக காயப்பட்டதுடன் எதிரியைக் கொன்று விடுகிறாள். போலீசிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் தேவாலயத்துள் நுழைந்து நாஸரிடனிடம் அடைக்கலம் கேட்கிறான். அவரும் மனமிரங்கி அவளுக்குப் புகலிடம் அளிப்பதோடு மருத்துவமும் பார்த்து குணப்படுத்துகிறார்.தேவாலயத்துக்குள் போலிசு நுழைய முடியாது. பீட்ரைஸின் காதலன் பிண்ட்டோ அவளை கிடாசிவிட்டுப் போய்விடவும் திக்கற்ற அவள் பாதிரியாரிடம் சேர்கிறாள். பாதிரியார் நாஸரினுக்கும் பெண்களுக்கும் தகாத உறவு இருப்பதாக ஊரெல்லாம் கசமுசா குசுகுசு. இது மதமேலிடத்துக்கு தெரியவரவும் நாஸரின் பாதிரியார் பதவியை இழக்க நேரிடுகிறது. நாஸரின் தேவாலயத்தை விட்டு சாதாரண பிஜையின் உடையில் வெளியேறுகையில் அண்டாராவும் பீரஜையின் உடையில் வெளியேறுகையில் அண்டாராவும் பீட்ரைஸும் கூட வருகின்றனர். அவர் எவ்வளவு தடுத்தும் வருகின்றனர். பெண்கள் இருவரும் ஒரு கட்டத்தில் நாஸரின் காட்டும் பரிவைக் காதலாகவும் நம்பி இருவருக்குள்ளும் பொறாமையும் ஏற்படுகிறது. நாஸரின் குறைந்த கூலிக்கும் ஒப்புக் கொண்டு கூலி வேலையில் சேருகையில், மற்ற கூலிகள், அதை எதிர்க்கவும் வேலையுமிழந்து திரிகிறார்.

அவ்வூரிலுள்ள அனாதைக்குள்ளன் உஜோ அண்டோரா பேரில் அபரிதமான பிரேமை கொள்ளுகிறான். ஊரில் பிளேக் நோய் பரவி மக்கள் மரணமுறுகையில், ஒரு நோயாளிப் பெண்ணை இறைவனிடம் பிரார்த்து பிழைக்கச் செய்கிறார் நாஸரின். அவரை தெய்வாம்ஸமாய் எண்ணி அற்புதங்கள் நிகழ்த்த வேண்டுகின்றனர். அவர்களைத் தேடி வரும் போலீசு பாதிரியாரை விட்டு விட்டு பெண்களைக் கைது செய்கிறது. அந்த சமயம் அங்கு வரும் பிண்ட்டோ தன் காதலி பீட்ரைஸை விடுவித்து அழைத்துப் போக, கொலைக் குற்றத்துக்காக அண்டாராவை மட்டும் கொண்டு ஓடுகிறான். கத்தோலிக்கப் புரோகிதர் ஒருவரின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மைமிக்க வாழ்க்கையைச் சொல்லும் இப்படம் கான் திரைப்பட விழா விருதும் கத்தோலிக்கத் திருச்சபை விருதும் பெற்றது.

லூயி புனுவெல் ஸ்பெயினில் காலந்தா (GALANDA) எனும் ஊரில் 1900ல் பிறந்தவர். சர் ரியலிஸ ஓரியர் சால் வெடார் டாலியையும் நாடகாசிரியர் ஃபெடரிகோ கார்ஷியா லோர்கா (Federico Garcialorca) வையும் சந்திக்கும் வரை கிறிஸ்தவ மதப் பிரிவான ஜெசூட் மத காரியத்துக்கான படிப்பை படித்தவர். பிற இம்மூவரும் இணைந்து செய்த முதல் சர் ரியலிஸ திரைப்படம் அண்டோலேசியன் நாய், ஓராண்டு கழித்து, ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின்போது புனுவெல் அமெரிக்காவுக்கும் அங்கிருந்து மெக்ஸிகோவுக்கும் இறுதியாக 1955ல் பிரான்சுக்கும் மாறிக் கொண்டார். இவரது படங்கள் கான் திரைப்பட விழாக்களிலும், வெனிஸ் பட விழாக்களிலும் வெவ்வேறு விருதுகள் பெற்றவை. லூயி புனுவெல் 1983-ல் காலமானார்.

ஜோசப் கெஸ்ஸெல் Joseph Kessel) என்பவரின் புகழ் பெற்ற நாவலைக் கொண்டு 1967ல் புனுவெல் இயக்கிய ஜனரஞ்சகமான திரைப்படம் பெல்டி ஜோர் Belle De Jour நல்ல வசதி மிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அதே சூழலிலுள்ள அழகியொருத்தி தன் டாக்டர் கணவனுக்குத் தெரியாமல் பணம் – உடல் இச்சை நிமித்தம் விபச்சாரத்தில் ஈடுபடும் செவரின் Severine என்பவளைப் பற்றிய படம் பெல்டி ஜோர். புனுவெல் தம் படத்தை சிறிதும் தயங்காது இது ‘‘ப்ளூ ஃபிலிம்’’ என்று சொன்னதோடு, இப்படம் கற்புத்தன மான பாலுறவு விசயத்தை கண்டறியும் Chaste Eroticism) வகைமையது என்றார். செவரினின் கணவன் அழகிய இளம் டாக்டர் பீர் Pierre டாக்டர் மருத்துவமனைக்குப் போய்விட்டு மாலையில் வீடு திரும்புமுன் செவரின் திரும்பிவிடுவாள். செவரின் திடச் சித்தமுள்ள குடும்பப் பெண். கணவனின் பணக்கார நண்பன் அவளுக்குப் பண ஆசைகாட்டி பாரிஸிலுள்ள அதி உயர்ந்த விபச்சார விடுதியில் இணைந்து பகல் நேர விபச்சாரியாக தொழில் செய்ய வைக்கிறான் அங்கே ஒரு நாள் மோசமான திருடன். கொலைகார இளைஞனிடம் சிக்கி மனமும் பறிகொடுக்கிறாள். அவனோ இரவுக்கும் அவளை அழைக்க, செவரின் மறுக்கிறாள். செவரின் விபச்சாரத் தொழிலுக்கென தன் பெயரை ‘‘பெல் டி ஜோர்’’ என்று எல்லோருக்கும் சொல்லி வருவாள். விடுதி சொந்தக்காரி உட்பட யாருக்குமே தன் பெயரை தொலைப்பேசி எண்ணை, இருப்பிடத்தை தருவதேயில்லை. இரவு மட்டுமே வர மறுக்கும் அவள் இறுதியில் மனசாட்சி வாட்ட தொழிலுக்கு கும்பிடு போட்டுவிட்டு விடுதிக்காரியிடம் விடை பெற்று வருகிறாள். அதே சமயம் அவளைப் பின் தொடர்ந்து காரில் வந்த ரெளடி அவளது இருப்பிடம், பெயர், கணவன் எல்லா விவரமும் அறிந்து வீட்டுக்குள்ளும் வந்து அவளை வற்புறுத்துகிறான். கணவனின் புகைப்படத்தைப் பார்க்கிறான். தன் சுதந்திரமான சுகவாழ்வுக்கு குறுக்கே இருக்கும் டாக்டர் பீரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடுகையில் போலீசாரால் சுடப்பட்டு இறந்துபோகிறான்.

இந்தப் படத்தில் ‘‘செக்ஸ்’’ காட்சி எதையுமே வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பல காட்சிகள் கனவுகளாகவும் கவித்துவத்தோடும் வந்து போகின்றன. புனுவெல் நம்மை கனவு நிலைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் போய் போய் வர இழுத்தடிக்கிறார். கச்சா வீர்னியின் (Sach vierny) காமிரா அப்பழுக்கற்ற காட்சி சட்டகங்களை நகர்த்துகிறது. வெனிஸ் திரைப்பட விழா 1968ல் சிறந்த படமென்ற விருது பெல் டி ஜோருக்கு கிடைத்தது.

1972ல் லூயி புனுவெல், ‘‘பூர்ஸ்வாவின் நளினமான கவர்ச்சி The Discreet charm of the Bourgeoisie)’’ என்ற நகைச்சுவை இழையோடும் அற்புதமான சர்ரியலிஸ திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். நல்ல சமூக அங்கதம் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஏராளமாக பகல் உணவு, இரவு உணவு விருந்துகள் வீடுகளிலும் விடுதிகளிலுமாய் இடம் பெறுவதும் துரித கதியில் அது முழுமை பெறாமல் பாதியிலோ கடைசியிலோ தோல்வியில் முடிவது எதிர்பாராத நிகழ்வுகள். மிகவும் ரசிக்கத் தக்க காட்சியாடல்கள். சிந்தனை மேலிட்ட பகற்கனவுகளும், சிறு உறக்கம் மேலிட்ட கனவுகளுமாய் விபரீதமான நிஜம்போன்ற சித்தரிப்புகள் சர்ரியலிஸ வழியில் படமாக்கப்பட்ட நிகழ்வு ஓட்டங்கள்.

இராச்சாப்பாடு (Dinner) என்பது ஐரோப்பிய நாடுகளில் சமூகத்தின் உயர்மட்ட குடிகள் தங்கள் உண்ணும் கலையை ருசியை, அதன் போது கடைபிடிக்கும் உயர்ந்த பண்பாட்டை, தங்கள் பணம் பகட்டு கையிருப்பு செல்வாக்கையெல்லாம் காட்டிக் கொள்ள ஒன்று கூடும் சமய சந்தர்ப்பமாய் நிலவி வருகிறது. இம்மக்களின் வாழ்வில் டின்னர் எனும் விசயம் மற்றெல்லாவற்றையும் விடவும் உற்சாகமிக்க கெளரவமிக்க கனவான் தனத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்களில் ஒன்று தேவாலய பிஷப். சிறு வயதில் தன் வீட்டுத் தோட்டக்காரன் வேலை செய்வதைக் கவனித்து தோட்ட வேலை யாவும் கற்று கைவரப்பட்ட பிசப், யார் வீட்டில் தோட்டத்தைக் கண்டுவிட்டாலும் தன் பிஷப் அங்கியை கழட்டி விட்டு தோட்ட வேலையில் இறங்கிவிடுவார்.

அந்த மூன்று ஜோடிகளும் டின்னருக்குத் தயாராகையில், நுழையும் தோட்டக்கார உடையிலுள்ள பிஷப்பை வெளியேற்றுகிறார்கள். அவர் போய் உடைமாற்றிக் கொண்டு பிஷப்பாக வரவும் அவரை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். படத்திற்கான பல்வேறு சுவரொட்டிகளில் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஓவியர் ரெனிமாக்ரிட் (Rene Magritte) என்பவர் தீட்டித் தந்த ஓவிய சுவரொட்டி விஷேசமானது. நீண்ட கருப்புநிற காலுரையில் பெண்ணின் கால்கள், அதற்கு மேலே லிப்ஸ்டிக் பூசிய தடித்த பெண் உதடுகள் உணவைக் கண்டதும் எடுத்து லபக் அதற்கு மேலே பெளலர் ரக தொப்பி. ஆறு பேரில் 3 ஜோடிகள் ஒருவர் தென்னமெரிக்க நாட்டின் மிராண்டா குடியரசின் (கற்பனை) பிரான்சுக்கான அம்பாசிடர். அவருக்கு ரகசியமான போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு. போதைப் பொருள் கடத்தலிலும் கில்லாடி. அதனால் ராணுவம், போலீசு, என்ற பயமும் எந்நேரமுமுண்டு. கூடவே தன்னைத் தீர்த்துக்கட்ட தீவிரவாதிகள் பின் தொடர்வதை நம்பி நடுங்குபவர். இவ்வாறாக எதிர்பார்த்து பயமுறும் நிகழ்வுகள் உண்மையிலேயே நடப்பதாய் காட்சிபடுத்தப்பட்டு உடனடியாக அவ்வாறில்லாத யதார்த்த நிலைக்கு காட்சி மாறிக் கொள்ளும். அம்பாசிடர் சுடப்பட்டு இறப்பதும் பிறகு கனவாக அது மாறி, கலைந்து எழுவதுமாய்…

ஆறுபேரும் ஒரு பெரிய எஸ்டேட்டுக்கு காரில் இரவு வந்து மாளிகையுள் நுழைகிறார்கள். அன்றிரவு அங்கு டின்னருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே படத்தின் தொடக்கக் காட்சி. அவர்களை வியப்போடு எதிர்கொள்ளும் வீட்டு எஜமானி, ‘‘இந்த நேரத்தில் என்ன இப்படி?’’ என கேட்கிறாள். வீட்டினர்க்கையில் அணியும் சாதாரண நைட்டிஸில் அவள் இருக்கிறாள் வந்திருப்பவர்கள் அம்பாசிடர் தலைமையில் டின்னருக்கான டிப்டாப் உடையில்!

‘‘இன்றைக்கு எங்களை டின்னருக்கு வரச் சொல்லியிருக்கீங்களே?’’

‘‘அது நாளைக்குத்தானே?’’

‘‘இல்லையில்லை, உறுதியாகத் தெரியும், இன்றுதான். உங்கள் கணவர் எங்கே? அவர்தான் என்னிடம் கூறியது’’

“அவர், அவரது கம்பெனி உயர்மட்ட அதிகாரிகளுக்கான டின்னருக்கு போயிருக்கிறார்.

“சரி நாங்கள் புறப்படுகிறோம். ஒன்று செய்யலாம், இந்தப் பகுதியில் ஒரு உணவு விடுதியுண்டு. சாப்பிட்டிருக்கிறேன், பரவாயில்லை. அங்கே டின்னருக்கு நீங்களும் வரலாம்.

“உடை மாற்றிக் கொள்ளவில்லை

“பரவாயில்லை, உள்ளூர்தானே

எல்லோரும் அந்த ஓட்டலுக்குப் போனால், குடிக்க தண்ணீர் தவிர எதுவுமே அங்கில்லை. உள்ளே எ்ட்டிப் பார்த்தால் சவப் பெட்டியில் ஓட்டல் உரிமையாளரின் உடல். சுற்றி ஓட்டல் சிப்பந்திகளும் உறவினர்களும், ஆக, இந்தப் படத்தில் போதை மருந்து கடத்தும் ஒரு நாட்டின் உயர் அதிகாரி, அதை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் ராணுவம், போதை மருந்தை அபரிதமாய் உட்கொண்டதாலேயே அமெரிக்க ராணுவத்தினரில் 3500 பேர் வியட்நாம் போரில் மாண்டதாய் ஒருவசனம் விருந்தின்போது இப்படத்தில் வருமாறு புனுவெல் வைத்திருக்கிறார் இது போன்றும், ஓட்டல் உரிமையாளர் மரணம் போன்ற நிஜமும் கனவுமான காட்சிமாறுதல்களின் நகர்வுகள் வாயிலாக ஓர் அறுவர் கொண்ட அதி பணக்கார ஆண் பெண்கள் தங்கள் டின்னர் வைபவத்தை கொண்டாடி அனுபவிக்க முடியாவண்ணம் அற்புதமாந நெருக்கடிகளைச் செய்கிறார் லூயி புனுவெல், இந்திப் படத்துக்காக அவ்வாண்டின் சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது புனுவெலுக்குக் கிடைத்தது.

ஒரு முறை சென்னை சஃபையர் தியேட்டர் வளாகத்தில் ப்ளூடயமண்டு தியேட்டரில் ஒரு பிரெஞ்சு திரைப்படம் ஆங்கில உபதலைப்புகளோடு திரையிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியூட்டும்படியான அதி விரு விருப்பான பிரெஞ்சு அரசியல் படம் அது Z Z என்பது கிரேக்க மொழியின் உயிரெழுத்துக்களில் கடைசி உயிரெழுத்து. இதை “ழ்ஜீ என்று தோராயமாக உச்சரிக்கிறார்கள். 1963-ல் கிரேக்க நாட்டில் இடதுசாரி சார்பான கிரேக்க ஜனநாயக ஆட்சி, நடந்த சமயம். உலக அமைதியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தலைமை உரையாற்றிக் கொண்டிருந்த இடது சாரி பேராசிரியரும், சட்டசபை உறுப்பினருமான கிரிகோரியஸ் லாம்பராகிஸ் (Gregoreos lambrakis என்பவர் சலோனிகாவில் Salonika 1963ல் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து கிரேக்க ஜனநாயக ஆட்சி கவிழ்கிறது. இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு லம்பராகிவிசயத்தை Z என்ர நாவலாக எழுதினார் வாசிலி வாசிலி கோஸ் Vasily Vasily cos) எனும் கிரேக்க நாவலாசிரியர். அந்நாவலை அடிப்படையாகக் கொண்டு Z திரைப்படம் கோஸ்டா. காவ்ராஸ் இயக்கத்தில் 1969ல் மிகச் சிறந்த பிரெஞ்சு அரசியல் சினிமாவாகியது. ‘‘ஜ்ழீ’’ பிரெஞ்சில் எடுக்கப்பட்டாலும் அதில் நடித்தவர்களும் பெரும்பாலும் பிரெஞ்சு நடிகர்களே என்றாலும் அதை இயக்கியவர் கிரேக்கரான கோஸ்டா காவ்ரா. கிரேக்க கோஸ்டா காவ்ரா பிரான்சுக்கு புலம் பெயர்ந்து பிரெஞ்சு படங்களை இயக்கியவர் நாவலிலும் படத்திலும் லிபரல் அரசியல்வாதி யுவஸ் மோன்டாண்டு Yves Montand என்பவர் உலக அமைதி குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையின்போது நாட்டின் இராணுவ அமைப்பு முழுவதையும் கவிழ்க்கும் முயற்சியில் அதிகார மையத்தில் ஊழல் பேர் வழிகள் பெருகிப் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வருகிறது. அற்புதமானதும் துரிதகதியிலுமான காட்சி சட்டகங்கள் மாறுவதும் மிகக் கூர்மையான ஒளிப்பதிவுக்கான காமிரா கையாளலும் இயக்குனரின் கூரிய அரசியல் பிரக்ஞையும் படத்தைப் பார்க்கையில் சில்லிட வைக்கிறது.

“Z பொறுக்க முடியாதளவு உணர்ச்சி வயப்படுத்துகிறது. மிகுந்த பதட்ட நிலையை ரசிகர்களின் ரசனை தளத்தில் பரவி டச் செய்யவல்ல அரசியல் சித்திரம் என்று விமர்சனம் செய்தார் பிரபல சினிமா விமர்சகர் பாலின் கேயெல், (Pauline Kael) இத்திரைப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ள ழான். லூயி ட்ரிண்டிக்னண்ட் (Jean Louis TrintGnant) விசாரணை மாஜிஸ்டிரேட்டாகவும், கொலையுண்ட மோண்டாண்டின் மனைவியாக நடிக்கும் கிரேக்க நடிகை இரின் பாபாசும் (Irene Papas) மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார்கள். இரின் பாப்பாசின் அற்புத நடிப்பை கிரேக்க திரைப்படம், (Zorba the Greek- லும் பார்க்கலாம். படத்தின் சிறந்த ஒளிப்பதிவை காமிரா கலைஞர் ராவுல் கெளடார்ட் செய்திருக்கிறார்.

கோஸ்டா காவ்ரா பம்பாயில் நடந்த 15-வது மும்பை திரைப்பட விழாவில் வருகை தந்து சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர்.

கோஸ்டா காவ்ரா 1981ல் தனது முதல் ஆங்கிலம் பேசும் அமெரிக்க திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். 1973ல் உலகம் மறக்க முடியாத அரசியல் கலவரமும் சதியும் கொலையும் உள்ளிட்ட ஆண்டு. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் இடது சாரி அதிபராயிருந்த அழண்டே அமெரிக்க சதியாக சிஐஏயின் கை வண்ணத்திலான படுகொலையில் மரணமுறுகிறார். குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதென்பதுபோல் அமெரிக்க வலது சாரி வார இதழ் ‘‘டைம்’’ தனது அவ்வார அட்டைப் படத்தை அழண்டேயின் பெரிய படத்தைப் போட்டு அது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் தலையிலிருந்து ரத்தம் வடியும் கோலத்தில் கொல்லாஜ் ஓவிய புகைப்பட கலப்பாக போட்டு, அவ்வாரத்திய தலையங்கமாய் அழண்டேயின் படுகொலையை சிலியின் ஆட்சி கவிழ்ப்பையெல்லாம் எழுதியிருந்ததை உலக வாசக அன்பர்கள் அறியக்கூடும்.

அழண்டேயின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கலவரம் பரவுகையில் இருள் கவியும் சமயம் ஓர் அமெரிக்க நகரில் மக்கள் குழப்பத்தில சிக்கி அலைபாய்கின்றனர். தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள், மற்ற பொது ஜனம் என்று சகலவித பயணிகளையும் ஏற்றிச் செல்ல பஸ்களும் டாக்சிகளும் மறுத்துவிட்டு நிற்கின்றன அல்லது காலியாக பயணிகளை ஏற்றாமல் போகின்றன. குழப்பத்திலும் கலாட்டாவிலும் மாட்டிக் கொண்ட பாதசாரிகள் பயத்தில் பதுங்கிக் கொள்ள புகலிடம் கேட்டு கெஞ்சுகின்றனர். மாலைப் பதிப்பான செய்தித்தாள்களுக்கு பஞ்சமாகிறது. ஒரு நில நடுக்கம்கூட இந்தளவு மக்களை பதறியோட வைக்காது, எனும் படிக்கு தெரிந்தும் தெரியாத புரிந்தும் புரியாதபடியான கலவரம் குழப்பம். உலகம் ஏதோ ஒரு பயங்கர முடிவுக்கு வந்தாற்போன்று புனையப்பட்ட அறிவியல் நாடகம்போல தோன்றக் கூடும். இது உலகின் சிறந்த அரசியல் சினிமாக்காரர்களில் ஒருவரும் பிரெஞ்சு அரசியல் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனருமான கோஸ்டா காவ்ராவின் Missing எனும் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள். மேற்கத்திய நாடுகளின் பக்கபலத்தோடு ஏற்பட்ட சிலி நாட்டு ராணுவ புரட்சியும் கம்யூனிஸ்டு அதிபர் அழண்டேயின் படுகொலையும் சோவியத் யூனியன் ஹங்கரி- செக்கோஸ்லாவியா- கொலம்பியா கூட்டுத் தயாரிப்பான ‘‘சென்டார்ஸ்’’ Centaurs எனும் திரைப்படமும் மிக முக்கிய அரசியல் படமாகும். மிஸ்ஸிங்கில் காணாமற்போவது- ஓர் இளம் அமெரிக்க இடதுசாரி ஆதரவு எழுத்தாளன், அவனது தந்தையும் இளம் மனைவியும் மனம் பதறி போலீசில் தரும் புகார் ஏற்கப்படுவதில்லை. அவர்களது பரிதவிப்பும் நிராதரவும் அலைபாய்ந்த அலைச்சலும் படத்தின் பதட்ட நிலையை மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்லுபவை. காணாமற்போனவன் திரும்பி வருவதேயில்லை. அவனுடைய தந்தையாக புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ஜாக் லெம்மானும் Jack Lemmon இளம் மனைவியாக சிஸ்ஸி ஸ்பேசெக்கும் (Sissi Spacek) மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *