ஃபிரெஞ்சு சினிமா- 1
விட்டல்ராவ்

உலக சினிமாவுக்கு பெரும் பங்காற்றிய நாடுகளில் ஃபிரான்ஸ் மிக முக்கியமானது. பின்னர் புறப்பட்ட புதிய அலை சினிமாவுக்கும் பிரான்ஸ் முக்கிய பொறுப்பு வகித்த நாடு. அத்தோடு நவீன இந்திய சினிமாவின் தோற்றத்திற்கும் பிரெஞ்சு திரைப்படகர்த்தா ஒருவரின் பங்கேற்பு முக்கியமானது. பிரெஞ்சு சினிமாவின் அறிமுகமும் தொடர்பும் பரிச்சிய அனுபவமும் இந்த பயாஸ்கோப்காரனுக்கு சென்னை பிரெஞ்சு கலையிலக்கிய மையத்தின் (Alliance Franchaise) தொடர்பால் ஏற்பட்டது. அப்போது என்னோடு ஓவியராய் செயலாற்றிக் கொண்டிருந்த காலஞ்சென்ற ஓவியர் வெ.ஜெயராமனின் தம்பியும் பிரெஞ்சிலிருந்து நேரிடையாக குட்டி இளவரசன் நூலை The Little Prince பிரெஞ்சு நூலாசிரியர் Antoine De saint Exupery) தமிழில் மொழி பெயர்த்தவரும், பிரெஞ்சு புதிய அலை திரைப்பட கர்த்தா, ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோவைப் பற்றிய Francois Truffaut நூலைத் தமிழில் எழுதியவருமான வெ.ராம், அலியான்ஸ் ஃப்ரான்சேஸ் மையத்தில் படங்கள் திரையிடல் பணியில் துணை புரிந்து வந்தவர். இவர்களின் வழிகாட்டலில் நானும் காலஞ்சென்ற ஓவியர் அச்சுதன் கூடல்லூரும் இன்னும் சில ஓவியர்களும் அம்மையத்தின் கலைப் பிரிவில் உறுப்பினர்களானோம். பிரெஞ்சு கலாச்சார மையத்தில் நாங்கள் எங்கள் ஓவியங்களைக் காட்சிப்படுத்தினோம். சென்னையிலிருந்தபோது அக்கிரகாரத்தில் கழுதை தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த மலையாள திரைப்பட கர்த்தா காலஞ்சென்ற ஜான் ஆப்ரகாம் அவர்கள் பிரெஞ்சு சினிமா பார்க்க வருவார். ஜான் இயக்கிய அம்மா அறியான் படத்தின் சில காட்சிகளில் பிரெஞ்சு திரைப்பட கலைஞர் Jean Cacteajj-ன் பாதிப்பு தெறிக்கும். அச்சுதன் கூடல்லூர் ஜானுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

இதை எழுதும் சமயம் ஆவணப்படங்கள் (Documentary Filim) குறித்து கொஞ்சம் பேசலாம் என்று வரலாறு, அன்றாட நிகழ்வுகள், இடம் பொருள் ஏவல் என்று பலதையும் மாற்றாமல் கலைத் தன்மையோடும்- அழகியலோடும் எடுப்பவை ஆவணப்படங்கள், ஓவியம் சிற்பம் குறித்த ஆவணப் படங்கள் கூடுதல் அழகை இயல்பாகவே கொண்டு விடுகின்றன. தமிழில் எடுக்கப்பட்ட, இந்தியாவில் எடுக்கப்பட்ட அரிய ஆவணப் படங்களையும், அவற்றின் கர்த்தாக்களையும் பற்றிய, சொல்லப்படாத சினிமா, என்ற அரிய தொகுப்பு நூல் நிழல் திருநாவுக்கரசு அவர்களால் தொகுக்கப்பட்டு நிழல் வெளியீடாக சில காலம் முன்பு வந்திருக்கிறது. சொல்லப்படாத சினிமா நூல் விமர்சகர்களால் சொல்லப்படாத நூலாகவே கிடப்பது தமிழின் துரதிர்ஷ்டம்.

அலியான்ஸ் ஃப்ரான்சேஸ் (Alliance Franchaise) 1978-79 காலக் கட்டத்தில் ழான் ரென்வாரின்
Le carrosse DDor’ (1952) (The Golden Coach) என்ற அரிய படத்தை திரையிட்டது. இச்சமயம் கலாச்சார மையம் சிறப்பு ஏற்பாட்டில் ஓவியர்களுக்காக உலகின் மிகச் சிறந்த ஓவியக் கலை நவீன ஓவியங்கள் மற்றும் நவீன பிரெஞ்சு ஓவியர்களைப் பற்றிய மிகச் சிறந்த பிரெஞ்சு ஆவணப் படங்களை ஒரு வாரம் முழுக்க திரையிட்டது. கலைத் தொடர்பான சிறந்த பிரெஞ்சு ஆவணப் படங்களின் திரையிடல் விழா -1977ல் அதி சிறப்பாய் நிகழ்த்தப்பட்டது. க்ளாட் மோனே, ஹென்றிரூஸோ, டாமியர், பஃப்பே, பற்றியும் சர்ரியலிஸம், க்யூபிஸம், இம்ப்ரெசனிஸம் ஆகிய ஓவிய கோட்பாடுகள் பற்றியதுமான வண்ண ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பிக்காஸோ பற்றி மூன்று படங்களும் திரையிடப்பட்டன. மூன்றாவது படத்தில் பிக்காஸோ ஓவியந் தீட்டவும், புகழ் பெற்ற ரஸ்ய இசை மேதை ஸ்ட்ராவின்ஸ்கி (Stravinsky) இசைக் கோர்வை புரியும் பின்னணியும் காட்டப்படுகிறது. ஸ்ட்ராவின்ஸ்கியின் இசைக் கோர்வை ஒரு சமயம் அமைதிச் சூழலை, ெமளன வெளியை ஏற்படுத்தி மெல்ல மெல்ல உயர்த்தியும், மறு சமயம் இசையதிர்வுகளின் உச்சத்துக்கு சென்று அமைதியை அலைக்கழிக்கவும் செய்வதன் வழியே பிக்காஸோவின் ஓவிய உருவச்சிதைவுகள் Distortions) அவை மீண்டும் ஒன்று சேர்வது போன்று முப்பரிமாண வண்ணத் தீட்டுதல்களை கோர்வைபடுத்துகிறது.

மறுநாள் ஓவியர் ஜியார்ஜ் ப்ராக் (George Braaque)கிற்கு அஞ்சலி என்ற அரிய ஆவணப்படம் காட்டப்பட்டபோதும் மலையாள சினிமா இயக்குனர் ஜான் ஆப்ரகாம் வந்திருந்தார். ஜியார்ஜ் ப்ராக், கியூபிஸ பாணி ஓவியத்தின் ஒரு முன்னோடி. ஆனால் பிக்காஸோவுக்கு கிடைத்த உலகளாவிய பெருங் கைத்தட்டல்கள் ப்ராக்குக்கு கிடைக்கவில்லை. கிடைத்திருக்க வேண்டும். அன்று திரையிடப்பட்ட மற்ற மூன்று படங்களில் மார்க் சகல் குறித்து இரண்டும், ஹென்றி மத்தீஸ் (Henry Mathis) பற்றி ஒன்றுமானது. சகல் ரஸ்யாவில் பிறந்து பிரான்சுக்கு ஓடிப் போன ரஷ்ய யூதர்.
மீ மெய்யீய வகை ஓவியங்களில் திளைத்தவர் சகல். இவரை ஓர் அரிய நேர்காணலோடு ஆவணப்படுத்தியவர் மாரிஸ் ரேவல் Marice Ravel என்ற பிரெஞ்சு கலை விமர்சகரும் பிரெஞ்சு ஆவணத் திரைப்பட கர்த்தாவுமானவர் ஹென்றி மத்தீஸ் உலகப் புகழ்பெற்ற மற்றொரு பிரெஞ்சு ஓவியர். இவர்கள் இருவருமே பின் இம்ப்ரெஷனிஸ ஓவியர்கள். (Post Impressionism).

இந்த பிரெஞ்சு ஓவிய ஆவணத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இரு படங்கள் அதி முக்கியமானவை. ஒன்று, இம்ப்ரெஷனிஸம் மற்றும் நியோ- இம்ப்ரெசனிஸம் பற்றிய சற்று நீண்ட படம் அற்புதமானது. அகஸ்டி ரென்வார் இம்ப்ரெசனிஸ ஓவியக் கோட்பாட்டின் தந்தை எனப்படுவர். இவரது “சூரிய அஸ்தமனம் முதலான ஓவியங்களை முன் வைத்து சொல்லும் படம். இம்ப்ரெஸனிஸ வகைமையை அடுத்தும் அதனை மேற்கொண்டு எடுத்துச் சென்று பரவசப் படுத்திய ஓவியர்கள், அவர்களின் ஓவியங்கள் பற்றிய சிறந்த படம். அகஸ்டி ரொதானுக்கு அஞ்சலி (Homage to Rodin) எனும் கருப்பு வெள்ளை படம். அகஸ்டி ரொதான் செய்வித்த ஒரு சிற்பத்தை அணு அணுவாக பல்வேறு கோணங்களில் காமிரா நமக்குக் காட்ட, பின்னணியில் ஸ்டிராவின்ஸ்கியின் அற்புத இசைக் கோர்வை படத்தை முன்னுக்கு இழுக்கிறது. ரொதான் நமது உலகப் புகழ் பெற்ற வார்ப்புச் சிற்பமான நடராசர் சிற்பம் குறித்து அழகியல் ரசனை ரீதியாகவும் சிற்பக் கலை ரீதியாகவும் சிலாகித்துள்ளார். அதே சமயம், நடராஜர் குறித்து அரிய நூலை Dance of siva எழுதிய டாக்டர் ஆனந்த குமாரசாமியின் தத்துவ வெளிப்பாட்டுக்கு அப்பால் விலகியும் பேசியுள்ளார் ரொதான். ரொதானின் சிற்பக் கலை பாதிப்பில் உருவான புகழ்பெற்ற இரு இந்திய நவீன சிற்பிகள், டி.பி.ராய் சவுத்ரி மற்றும் சர்பரிராய் சவுத்ரி.

ழான் ரென்வார் 1894-ல் பாரிசில் மாண்மார்ட் எனுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை புகழ்பெற்ற பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ ஓவியர் அகஸ்டி ரென்வார் ஆவார். ஓவியர்களோடு வளர்ந்த ழான் ரென்வார் முதலில் செராமிக் சிற்பக் கலைஞராக விளங்கியவர். பிறகு 1920களில் திரைக்கதையாசிரியராயிருந்து திரைப்பட ஆக்கத்திலீடுபட்டு 1930களில் வெற்றிகரமான இயக்குனரானார். (The Grand Illusion (1937) The Human Beast (1938) The Rules of the Game (1939) The River (1947) ஆகியவை ரென்வாரின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். 1939பின் ரென்வார் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார். அவர் 1979ல் கலிபோர்னியாவிலுள்ள பீவர்லிஹில்ஸில் காலமானார்.

La Grand Illusion Grand Illusion 1937) போர் என்று வரும்போது மக்கள் தத்தம் சுயநலம், அந்தஸ்து மேலிட்ட நலன்களைக் காட்டிலும் பொதுவானதாக எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே முன் வைத்து முன் நகர்த்தி சிந்திப்பதும் செயலாற்றுவதுமாயிருப்பர். மனித வாழ்வின் விடம்பனமே ரென்வாரின் இந்த மகத்தான பிரமையாக திரைப்படமாகிறது. முதல் உலகப் போர். ஒரு ஜெர்மன் கைதி முகாமில் கைதிகளாக லெப்டினெணட் மேர்சால் மற்றும் காப்டன் டிபோல்டு என்பவர்கள் தங்கள் இதர பிரெஞ்சு சிப்பாய்களோடு, ஜெர்மன் அதிகாரி, வான் ராவ்ஃபென்ஸ்டீனின் சாந்தமான கண்காணிப்பின் கீழ் இருக்கையில் தப்பிச் செல்ல மகத்தான திட்டமொன்றை வகுக்கின்றனர். இருவரும் மகத்தான கற்பனையில் வாழ்கின்றனர். பிரெஞ்சு பாரம்பரியம், பரஸ்பர மரியாதை பேணும் பழக்கம் கவுரவமும் கனவான்தனமான சமூகம் என்று வெளியுலகை இந்த கைதி முகாமலிருந்தவாறு கற்பித்துக் கொள்ளுகின்றனர். அது ஒரு மாயை- கானல் நீர் என்பது புரிபடுவது படத்தின் இறுதிக் கட்டம். கானல் நீரான தம் லட்சியத்தையுடைய லட்சிய வெளியுலகை அடைய மிகவும் கஸ்டப்பட்டு சுரங்கம் ஒன்று தோண்டுகின்றனர். வெளியுலகை அடைந்த பிறகுதான் துப்பாக்கிக் குண்டுக்கு ரத்த வித்தியாசம் தெரியாதென்பதையும், கைதி முகாமின் வன்கொடுமைகளினூடே ஏற்பட்டிருந்த நெருக்கமான தோழமை என்பதுகூட பிரமை என்பதும், தப்பி வெளியில் போனதுமே பழையபடி திரும்பி வாழ்வின் கடுமையான யதார்த்தத்துக்கு திரும்புகின்றனர். இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ஜெர்மன் அதிகாரி பிரெஞ்சு கைதிகளான அதிகாரிகள் பால் உண்மையிலேயே இரக்கமும் அக்கறையும் கொண்டவனாயிருப்பதை பின்னாளில் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் ஜெர்மனி விரும்பவில்லை. நாஜிகள் பிரான்சை முற்றுகையிட்டு ஆக்கிரமித்திருந்தபோது, ரென்வாரின் இப்படத்தை தடை செய்துவிட்டது. பிரெஞ்சு அதிகாரிகளாக ழான் கேபின் (Jean Cabin), பியர் ஃப்ரெஸ்னே மற்றும் (Pierre Fresnay) ஜெர்மன் அதிகாரியாக எரிச்வான் ஸ்ட்ரோஹைம் (Erich von Stroheim) என்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கிறிஸ்டியன் மட்ராசின் காமிரா கோணங்கள் பிரம்மாதம் முஸ்ஸோலினியின் கோப்பைக்கும், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் வெனிஸ் திரைப்பட
விழாவில் பரிசு பெற்றது.

ழான் ரென்வாரின் மறக்க முடியாத மற்றொரு திரைப்படம் La bete Humaine The Humanbeast- 1938).
“நா நா என்ற 19ம் நூற்றாண்டு மகத்தான பிரெஞ்சு நாவலை வாசித்தவர்களோ, குறைந்தது கேள்விபட்டவர்களோ அல்லது அதைக் கொண்டு எடுக்கப்பட்ட பழைய திரைப்படத்தையாவது, பார்க்க நேரிட்டவர்களோ கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய அந்நாவலாசிரியரின் பெயரையும் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஜோலா (Emile Zola) ஜோலாவின் ‘‘நா நா’’வும், ஃப்ளேபரின் மேடம் பொவாரியும், தோல்ஸ்தோயியின் அன்னா கரீனாவும் தத்தம் குணநலன்களில் ஒன்றுபட்ட அக்காதங்கச்சிகள். ஒரு காலக்கட்டத்து நாவல் வாசகர்களுக்கான முப்பெரு நாவல்கள். எமிலி ஜோலாவின் மற்றொரு மகத்தான நாவலைக் கொண்டு திரைக்கதையானது மனித மிருகம் என்று பொருள் கொள்ளும் “La Bete Humaine Yhe Human Beast. இக்கதை ஒரு ரயில் எஞ்சின், அதன் ஓட்டுனர், ஓர் அழகிய பெண் என மூவரிடையேயான முக்கோண காதல் உறவு பற்றியது. இக்கதையை திரைப்படமாக்கும் திட்டம் வகுக்கப்பட்டதையடுத்து அதை இயக்க வேண்டியவர் ழான் ரென்வாரே என்பதை ஓர் குழு தீர்மானித்தது. அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக அன்றைய நாளில் சிறந்த பிரெஞ்சு சினிமா விமர்சகராயிருந்த ஒருவரும் இருந்திருக்கிறார்.

ஹியூமன் பீஸ்ட் திரைப்படத்தில் கதா நாயகன் ஒரு ரெயில் எஞ்சின் டிரைவர். அந்த காலத்து நீராவி எஞ்சினை ஓட்டிச் செல்ல கடினமான பயிற்சி தேவைப்படும். எஞ்சினில் நின்றவாறே பல மணி நேரத்துக்கு பல மைல் தொலைவுக்கு மிக்க வேகத்தில் உடல் உடையெங்கும் கரி பூசிக் கொண்டு நிலக்கரி எரிந்தபடியே இருக்க அனலில் ஓட்ட வேண்டும் இந்தியாவில் அப்போது ஆங்கிலோ இந்தியர்களே பெரும்பாலும் எஞ்சின் டிரைவர்களாயிருந்தார்கள். ரெயில் எஞ்சின்- ஸ்டேசன் தண்டவாளம், டன்னல்கள் என்று இந்தியாவிலும் கொஞ்சம் திரைப்படங்களுண்டு. ழான் ரென்வாரின் படத்தோடு ஒப்பிடவே முடியாதென்றாலும், ஒரு சில காட்சிகள் சிறப்பாய் எடுக்கப்பட்ட இந்திய படங்களில் அபு சன்சார் (சத்யஜித்ரே), நாயக் ரே மற்றும் 27 டெளன் (அவதார் கிருஷ்ண கெளல்) எனும் படங்களிருக்கின்றன. ரென்வாரின் மனித மிருகம் ஓர் இயந்திர மிருகத்தையும் (லிஸோன் என்ற பெயர் கொண்ட ரயில் எஞ்சின்) ஸ்டேசன் மாஸ்டரின் அழகிய மனைவி செவெரின் என்பவளையும் ஏக காலத்தில் காதலிப்பவன். எஞ்சின் டிரைவர் ஜாக்குவிஸ் லாண்டியர் (Jacques Lantier) மிகுந்த பிரியத்தோடு தான் The Lison என்று பெயரிட்ட தன் ரயில் எஞ்சினை எந்தளவுக்கு நேசிக்கிளானோ, அந்த அளவுக்கு மேலே ரித்விக் கடக்கின் அஜாந்திரிக் படத்து கதாநாயகன் பிமல் எனும் டாக்ஸி டிரைவர்தான். “ஜகட்தல் என்று பிரியமாய் பெயரிட்டு ஓட்டி வந்த அதரப் பழைய டாக்ஸியை நேசித்தவன்… ழான் ரென்வார் தனது நேர்காணலில் Human Beast படம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதை விளக்குகிறார். படம் முழுக்கவும் பெரிய ரயில் நிலையம், ஏராளமான இருப்புப் பாதைகள், எஞ்சின்கள், வண்டித் தொடர்கள், ரயில்வே சிப்பந்திகளால் நிறைந்திருக்கிறது. எஞ்சினின் ஆக்ஸில் உடைந்து விடுகிறது. ஒரு காட்சியில் லாண்டியரின் உதவியான் பயர்மேன் பெக்வே எஞ்சின் முன் பக்க வட்டமான மூடியைக் கழட்டிவிட்டு எஞ்சினுக்குள் சேர்ந்து கிடக்கும் சாம்பலை ஷவலால் வெளியில் கொட்டுவது மிகவும் யதார்த்தமானது.

எஞ்சின் டிரைவர் லாண்டியர் என்ற மனிதனுக்குள் மிருகம் பதுங்கியிருக்கிறது. அபூர்வமாய் சில மிருகங்களுக்குள்ளும் மனிதம் இருந்து ஏதாவது செயல்பாடுகளாய் வெளிவருவதுண்டு. மனிதனுக்குள் மிருகம் மிருகத் தன்மையிருப்பது அதிகம். ரயில் எஞ்சினுக்கு கிட்ட தட்ட சமமான மனித எஞ்சின் அவன். இப்படத்தில் அந்த எஞ்சினை ஒரு கதாபாத்திர அந்தஸ்துக்கு கொண்டு போயிருப்பதாய் ரென்வார் கூறுகிறார். ஆரம்பத்தில் ஒரு பெருங் குடிகாரனாயிருந்த தான் அதை அறவே ஒழித்துக் கட்டியதோடு தனது குடிகார மூதாதையர்களால் குடித்து அழிந்த இழப்புகளை நினைத்து வருந்துகிறான். எமிலி ஜோலாவின் சில நாவல்கள் குடி மது மோகிகளால் அழிந்த குடும்பங்கள் பற்றியதாயிருக்கும். Drunkard மற்றும் Earth நாவல்களைக் குறிப்பிடுகிறேன். Human Beast அதில் சேராதது என்றாலும் குடிப் பழக்கத்தின் கொடுமையையும் அதை விட்டொழித்ததையும் கதாநாயகனைக் கொண்டு பேச விடுகிறார் ஜோலா.

ஜோலாவின் சமகால ஓவியரும், நண்பரும், ழான் ரென்வாரின் தந்தையுமான பியர் அகஸ்தெரென்வாரின் ஒரு ஓவியத்தில் நன்றாக குடித்துவிட்டு முகம் உப்பிய கதியில் சாராய விடுதியில் இருவர் உட்கார்ந்திருப்பார்கள். எமிலி ஜோலா நமது வங்க நாவலாசிரியர் சரத் சந்திரருக்கு இவ்விசயத்தில் சற்று மூத்தவர்..

ஜாக்குவெஸ் லாண்டியரின் எஞ்சின் உதவியாள் அதாவது ஃபயர்மேன் பெக்குவா (Pecqueux இருவரையும் முதல் காட்சியில் ரென்வார், அதிவேகத்தில் ஓடும் எஞ்சினில் அறிமுகப்படுத்தும் காட்சியே அற்புதமானது. கருப்பு வெள்ளை காமிரா ஒளிப்பதிவின் சிகரமென்றே இத்திரைப்படத்தின் பல்வேறு சட்டகங்களையும் சொல்ல வேண்டும். இருப்புப் பாதையின் தண்டவாளங்கள் கண்முன் ஓடி நீண்டு பிரிந்து இணைந்து சுரங்கத்தில் நுழைந்து, மீண்டு அப்பப்பா, ரெயில்வே உலகின் மகத்தான விசயங்களை கேமிரா கோணப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கிளாட் ரென்வார் ஜீனியர் (Glaude Renoir JR) மிகவும் பாராட்டத் தக்கவர். படமாக்கப்பட்ட விதம் குறித்து தம் நேர் காணலில் விவரிக்கும் இயக்குனர் ரென்வார், அந்த எஞ்சின் 60 கிலோ மீட்டர் வேகத்திலிருக்கும்போது நாங்கள் அதற்கு இணையாக மற்றொரு இருப்புப் பாதையில் அதே வேகத்தில் ஓடும் இன்னொரு எஞ்சினிலிருந்தும், கதாபாத்திரங்கள் நின்றிருந்த எஞ்சினிக்குள்ளேயே நிலக்கரி தொட்டியை ஒட்டியும் கேமிராக்கள் பொருத்தி படமெடுத்தோம் என்கிறார். அத்தோடு கேமராமேன் க்ளாட் ரென்வார் எஞ்சினுக்கு அடியில் பெரிய சக்கரங்களை ஒட்டியே ஓர் இருக்கை போன்ற பலகையை இணைத்து அதில் தன்னையும் கேமிராவையும் இருத்தி வைத்து ஓடும் வண்டியிலிருந்து (60 கி.மீ.வேகம்) மற்றொரு கோணத்தில் படமாக்கியுள்ளார். எஞ்சினை இயல்பாகவும் லாவகமாகவும் ஓட்டுவதற்கு ஓட்டுனராக நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்தி நடித்திருக்கும் பிரெஞ்சு நடிகர் ழான் காபின் (Jean Gabin)கு பல மாதங்கள் நிஜமாகவே ரயில் எஞ்சின் ஓட்டுனர் பயிற்சியளிக்கப்பட்டதாக ரென்வார் தம் பேட்டியில் கூறுகிறார். எஞ்சினோடு இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் டிக்கட் வாங்கி உட்கார்ந்து பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் தம் தொடர்வண்டியின் எஞ்சினை இயக்கி ஓட்டுபவர் அசல் டிரைவரல்ல, ஒரு நடிகர் என்பதும், சினிமா ஒன்றுக்கான படப்பிடிப்பு பயணத்தோடு நடக்கிறது என்ற விசயங்கள் எதுவுமே இறுதிவரை தெரியாது
என்றும் ரென்வார் கூறுகிறார்.

ரயிலில் ஒரு கொலையும் நடக்கிறது. அதில் சம்மந்தப்படுபவர் ஸ்டேஷன் மாஸ்டர் ரெள பாண்டு என்பவர். இவரது அழகிய மனைவி செவரின் (Sevarin) என்பவள். இவளை எஞ்சின் டிரைவர் லாண்டியர் காதலிக்கிறா். அவள் அவனோடு ஓடிவந்து விடவும் தயாராக இருக்கிறாள். தன் ஸ்டேசன் மாஸ்டர் கணவனைக் கொன்று விடும்படியும் கேட்கிறாள். எல்லாமே ரெயில்வே எஞ்சின்களும் வண்டித் தடங்களும் நின்றபடியும் ஓடினபடியும் இருக்கும் Railway Yardndle தான் நடக்கிறது. லாண்டியருக்குள் கொலை பாதகம் செய்ய முயலும் மிருகம் இருப்பதும் சமயத்தில் அது தயாராகி வந்து உடனே அடங்கி விடுவதுமாயிருக்கிறது. தொடக்கக் காட்சிகள் ஒன்றில் இளம் பெண்ணொருத்தியின் கழுத்தைப் பிடித்து கிட்டதட்ட நெரித்துக் கொன்றுவிடுமளவுக்கு அவன் முயன்றவனே. அப்போதுதான் தனது மூதாதையர்கள் குடிப்பழக்கத்தால் அழித்து அழிந்ததை நினைவு கொண்டு, தான் அதை விட்டு நீ்கியதைப் பற்றியும் யோசிக்கிறான். ரெயில்வே யார்டில் இரவில் நடந்துவரும் ஸ்டேசன் மாஸ்டரை இரும்புக் கடப்பாறையால் கிட்டதட்ட அடித்துக் கொல்லும் முயற்சியில் இறங்கியவன் உடனே அதிலிருந்து பின்வாங்குகிறான். அவனுக்குள்ளிருந்த மிருகத்தை அவனுக்குள்ளிருக்கும் மனிதம் அடக்கியமுக்கிறது. இது செவெரினை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கி லாண்டியரை வெறுக்கிறான். காதலும் வேண்டாம் புண்ணாக்கும் வேண்டாம். இனி சிறு வயதிலிருந்தது போல வெறும் சினேகிதர்களாகவே பழகுவோம் என்கிறாள். செவெரின். பிறகு ஒரு நாள் அவளைச் சந்திக்கும் லாண்டியர் அவளை நிஜமாகவே கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தனது காதல் எஞ்சினை லிஸோனிலிருந்து ஓடிக் கொண்டிருக்கையில் குதித்து உயிரை விடுகிறான்.

இந்தப் படமும் ரென்வாரும் உலகின் பல சிறந்த திரைப்படங்களையும் பல இயக்குனர்களையும் பாதித்திருக்க வேண்டும். ரென்வாரின் நண்பரும் இந்தியாவில் வங்கத்தில் அவர் தயாரித்த The River என்ற வண்ணப்படத்துக்கு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து இட்டுச் சென்றவருமானவர் சத்யஜித்ரே. ரென்வாரின் மனித மிருகம் படத்தால் அங்கிங்கே பாதிப்படைந்து, அபுசன்சார் மற்றும் நாயக் என்ற தம் படங்களில் ரென்வாரைப் பின்பற்றியிருக்கிறார். பெரிய கரிய நீராவி ரெயில் எஞ்சின் தனியாக தண்டவாளத்தில் இலேசாக மூச்சு விட்டுக் கொண்டு புகைக்கசிய நிற்பது யானை நிற்பதுபோலாகும். இந்தக் காட்சிகள் ரென்வாரின் ஹியூமன் பீஸ்ட் படத்தில் நிறையவும் பிரமாதமாயும் வருகின்றன. ரெயின் அபு சன்சார் படத்தில், அப்பு தன் வீட்டையடைய பெரிய ரெயில்வே லைனைத் தாண்டிப் போவான். அப்போது ஒரு பெரிய கரிய நீராவி ரெயில் எஞ்சின் ஒண்டியாக நிற்பதை ரே அற்புதமாய்க் காட்சிப் படுத்தியிருப்பார் (காமிரா: சுப்ரதோ மித்ரா). தண்டவாளங்கள் ஒளியில் மின்னிக் கொண்டு நம் முன்னே ஓடுவதும் பிரிவதும் கூடுவதுமான காட்சிகள் நாயக் படத்தில் காமிரா சுப்ரதோ மித்ரா) நிறைய வருகின்றன. ஹியூமன் பீஸ்ட் படத்தில் எஞ்சின் டிரைவராய் நடித்த ழான் காபின் ஒரு டிரைவராகவே முற்றிலும் மாறிவிட்டார். ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி செவெரினாக சிமோன் சைமன் (Simone Simon) மிக எளிதாக அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். எஞ்சின் உதவியாள் ஃபயர்மேனாக ஜீலியன் காவெட் (Julien Cavette) இயல்பாக செய்திருக்கிறார். படத்தின்
காமிராவை கையாண்டிருப்பவர் ழான் ரென் வாரின் ஒன்றுவிட்ட சகோதரர் க்ளாட் ரெண்வார் – ஜூனியர்.
(Claude Renoir- JR).

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *