தொடர் 34: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ் Series 34: Bioscopekaran – Vittal Rao

தொடர் 34: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஸ்காண்டிநேவிய சினிமா
ஸ்விடிஷ் திரைப்படங்கள்

ஸ்வீடிஷ் சினிமா என்றாலும் உலக சினிமா வென்றாலும் தலை சிறந்த திரைப்பட மேசைகளில் ஒருவராய் திகழ்பவர் இங்க்மர் பெர்க்மன் பெர்க்மன் என்று சொல்லும்போதே அவரது பல திரைப்படங்களுக்கு அழியாப் புகழ் தரும் வகையில் ஒளிப்பதிவு செய்து வந்த உலகின் தலைசிறந்த திரைப்பட காமிரா கலைஞர்களில் ஒருவரான ஸ்வென் நிக்விஸ்டும் Sven Nykvist  இணைந்தே நினைவு கூறப்படுகிறார்.

   ஸ்வீடனில் உப்பாசாலா எனும் ஊரில் 1918ல் பிறந்த ஏர்ன்ஸ் இங்க்மர் பெர்க்மன் (EARNST INGMAR BERGMAN) ஒரு லூதெரான் தேவாலய புரோகிதரின் மகனாவார். எனவே மிகவும் கண்டிப்புமிக்க ஆசார கிறிஸ்தவக் குடும்பச் சூழலில் இறுக்கமாக வளர்ந்தவர். எனவேதானோ என்னவோ இவரது நாடகங்களும் திரைப்படங்களும் கடவுளை, மரணத்தை கடோபனிசத்தின் ‘நசிகேத்தனிஸம்’ மாதிரி அமைந்தன. மானிட இருத்தலின் இருப்பின் மையத்தைச் சுற்றி மோதிக் கொள்ளும் விஷயமாக பித்த நிலையும் தெளிந்த புத்தியும், மரணமும் உயிர்த்தலும், சூன்ய நிலையும் கடவுளுமானதாக அவை இடம் பெற்றவை. இந்த விதமாய் ஆன்மீகம், மற்றும் ஆன்மீக எதிர்ப்பு மோதல்களில் பெர்க்மனின் மனித உத்வேகமானது யதேச்சையாகவே வெற்றி கொள்ளுவதாயிருக்கும். எனவே எவ்விதத்திலும் ஒரு மெலோடிராமா வகைமையை நாம் எதிர்கொள்ளத் தேவையுமிருக்காது. 1957ல் தொடங்கி அவரது ஆழமும் தீவிரமானதுமான திரைப்படங்கள் உருவாகி திரையிடல் கண்டன.

  இலக்கியவாதிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள். கலைஞர்களில் சார்லி சாப்ளின் எழுதிய சுயசரிதை அற்புதமானது.  இந்த சிறப்பான வரிசையில் இங்க்மர் பெர்க்மனின் தன் வரலாறான ‘‘மாய விளக்கு’’ (MAGIC LANTERN) நூலை வாசிக்கையில் அவரது முக்கியமானதும் அதியற்புதமானதுமான திரைப்படங்கள் எவ்வளவுக்கு அவரது வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து உருவானவை என்பது தெரிய வருகிறது.

 ‘‘சினிமாவைப் போல மனதின் எல்லைகளுக்கு சவால்  விடுகிற மற்றொரு கலை வடிவம் இல்லை.  சினிமா  நேரடியாகப் பார்வையாளர்களின் உணர்வுகளுடன் விவாதம் புரிகிறது. மங்கிய ஒளியில் மின்னுகிற ஆத்மாவின் உள்ளறைக்குள் கடந்து செல்கிறது.’’ என்கிறார் பெர்க்மன். விசேசம் என்னவென்றால் பெர்க்மன் தன் சுய சரிதையில் தமது திரைப்படங்களைக் காட்டிலும் தமது நாடகங்களைப் பற்றியே அதிகமாய் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடூட்டிலிருந்து (BRITISH FILM INSTITUTE) வெளிவரும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இதழ்  SIGHT AND SOUND-ன் ஆசிரியரான நிக் ஜேம்ஸ்  NICK JAMES  குறிப்பிடுகிறார்.

 ‘‘பெர்க்மன் திரையுலகின் மாபெரும் மேதைகளில் ஒருவரும் திரையுலகின் மனிதாபியுமாவார். அவருடைய அத்தகைய உயர்ந்த வகைமையை உடையவர்கள் இன்று வெகு சிலரே, சினிமா என்பது ஒரு கலை வடிவம் என்று நிரூபித்தவர் அவர்,’’ என்று குறிப்பிடுகிறார்.

‘‘ஏழாவது முத்திரை’’ (SEVENTH SEAL) திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகு, ‘‘நான் சாவை நினைத்து பயங்கரமாய் பயந்துபோனேன்’’ என்றார் பெர்க்மன்.

 எர்னஸ்ட் இங்மர் பெர்க்மன் 60 திரைப்படங்கள் செய்து வெளியிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்று 2003ல் திரைப்பட செயல்பாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ‘‘இசையைக் கேட்டு லயித்து ரசிப்பது மாதிரி அசையும் பிம்பங்களைப் பார்த்து லயித்து அனுபவிக்க வேண்டும். இசையும் பிம்பங்களின் நகர்வும் புத்தி ஜீவித்தனத்தைக் கடந்து செல்லுபவை, பார்வையால் கண்டுணர்வது வேரு, புரிந்து கொள்ளும் வெற்று காரியம் வேறு’’ என்கிறார் பெர்க்மன். தமது  89வது வயதில் அமைதியாக 2007ல் தம் மரணத்தை ஏற்றுக் கொண்டார் இங்க்மர் பெர்க்மன்.

 மரணம் பல திரைப்பட மேதைகளுக்கு பல்வேறு திரைப்படங்களின் முக்கிய கருத்தாக செருகப்பட்ட விசயம். ஓவியம், கவிதை, கதைகள், நாடகங்களிலும்  கையாளப்பட்ட முக்கிய மைய பொருள். ஓவியங்களில்  15-16ம் நூற்றாண்டின் ஜெர்மன் கலைஞர் ஆல்பிரெக்ட் ட்யூரர் (ALBRECHT DURER). இவர் தூரிகைகளில் தீட்டிய ஓவியர் என்பதைவிட பதிப்போவியர் என்பது (PRINT MAKER AND GRAPHIC ARTIST)  சரியாகும். இவ்வகை பதிப்போவியங்களில் மர அச்சு பதிப்போவியம் என்பது தமிழ்நாட்டுக்கும் புதியதல்ல. நமது கிராமச் சந்தைகளில் இவ்வித மர அச்சுப் பதிப்போவியங்கள் கொண்ட பெரிய எழுத்து விவிக்கிரமாதித்தன் கதை, புரூரவ சக்கரவர்த்தி கதை, அரிச்சந்திரன் கதை, நல்லதங்காள் கதை, ஆரவல்லி சூரவல்லி அலங்கார வல்லிகதை என்பவை கூடாரமடித்த கடைகளில் பரப்பி வைத்து விற்கப்பட்ட காலம் எனது இளமைப் பருவம்.

ட்யூரர் பதிப்போவியங்களில் மரணத்தை மரணத்தை மையப்படுத்தி நிறைய செய்திருப்பவர். சுமார் 50 வருடங்களுக்கு முன் அவரது முக்கியமான மர அச்சுப் பதிப்போவியங்களைக் கொண்ட அரிய ஓவியக் காட்சியொன்றை சென்னை ஜெர்மன் கலை கலாச்சார மையமான மாக்ஸ்முல்லர் பவன் ஏற்பாடு செய்தது. அவற்றில் ட்யூரர் செய்திருக்கும் மரணம் பற்றிய மூன்று முக்கிய பதிப்போவியங்கள் இடம் பெற்றிருந்தன. தலையிலிருந்து பாதம் வரை போர்த்திய சாமியார் அங்கிக்குள் தெரியும் மனித மண்டையோட்டு கபால முகமும் எலும்புக் கை விரல்களுமாய் மரண தேவன் மரண சாசனத்தை மேஜை மீது இறகுப் பேனாவால் எழுதும் காட்சி. இன்னொன்றில் நிர்வாணப் பெண்ணையும் ஆணையும் தன்னோடு இருத்திக் கொள்ள அந்த மரண உரு முயற்சிக்க, அவர்கள் போக மறுத்து முரண்டு பிடிக்கும் காட்சி. இன்னொன்றில், சிறு வயதில் ஆங்கிலப் பாடமொன்றில் எலிகளை தன் மாயக் குழலால் ஊதி இழுத்துச் சென்று குளத்தில் மூழ்க வைத்த PIED PIPER  அதற்கு பணம் கிடைக்காததால் மீண்டும் மாயக் குழல் வாசிக்க ஊரிலுள்ள குழந்தைகள் எல்லாம் நடனமாடியவாறு அவன் பின்னால் போனது மாதிரி- இந்த ஓவியத்தில் மரண தேவன் குழலூத, மரித்தவர்கள் நடனமாடியவாறு பின் தொடரும் காட்சி இருந்தது. ட்யூரரின் இந்த மரணதேவன் பதிப்போவியங்கள் இங்க்மர் பெர்க்  மனை பெரிதும் பாதித்து சிந்திக்க வைத்திருப்பதாய் அவர் கூறுகிறார். அந்த சிந்தனை முழுமையாக  அவரது அமர காவியம் போன்ற ‘‘ஏழாவது முத்திரை’’ SEVENTH SEAL  திரைப்படத்தில் வெளிப்படுகிறது.

ஏழாவது முத்திரை. 1957ல் வெளிவந்தது. படத்தில் முதல் காட்சியிலேயே ட்யூரரின் இந்த மரணதேவன் குறித்த பதிப்போவிய கருத்து இங்க்மர் பெர்க்மனின் உரையாடலில் வந்து போகிறது.

மத்திய காலத்தில் தன் கடவுள் நம்பிக்கைக்காக பத்து ஆண்டுகள் சிலுவைப் போரில் ஈடுபட்டு போரிட்டு வெற்றி பெற்று திரும்பும் தளபதி KNIGHT ERRANT அண்டோனியஸ் ப்ளாக் ANTONIUS BLOCK  தனது மத நம்பிக்கைபாற்பட்ட சிக்கலை உணர்கிறார். ஆண்டவன் தன்னை அவனுக்கு காட்சி தர மறுக்கும் அதே சமயம் மரண தேவன் உறுதியானவனாய் தோன்றி தன்னோடு அழைத்துச் செல்ல காட்சியளிக்கிறான். ட்யூரர் தன் மர அச்சுப் பதிப்போவியத்தில் உருவாக்கியிருக்கும் விதமாகவே தலையிலிருந்து பாதம்வரை கருப்பு அங்கிக்குள் ஒளிந்த  மரண தேவனின் வெள்ளை முகம் மாத்திரம் தெரிகிறது மரணம் தளபதியை அழைக்கையில், தளபதி மரண தேவனை சதுரங்கம் விளையாட அழைக்கிறான்.

 ‘‘உன்னோடு வருமுன், என்னோடு சதுரங்கம் ஆடு. நீ நன்றாக சதுரங்கம் ஆடுவாய்தானே?’’ என்கிறான்.

 அதற்கு மரணம் கேட்கிறது,

 ‘‘அது உனக்கெப்படித் தெரியும்?’’

 ‘‘நான் ஓவியத்தில் பார்த்திருக்கிறேன். உன் வெற்றியை நான் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்வரை என்னை நீ கொண்டுபோக முடியாது. நான் தோற்றுவிட்டால் உன்னோடு வந்துவிடுவேன். நீ தோற்றுவிட்டாயானால்…’’ என்று தன் மரண தேவனிடம் தன் மரணத்துக்கு பேரம் பேசுகிறான் அண்டோனியஸ் ப்ளாக். மரணம் ஒப்புக் கொள்ள சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகிறது. மரணதேவண் சதுரங்கமாடும் பதிப்போவியம் ஒன்றையும் ட்யூரர் செய்திருக்கிறார்.

அண்டோனியஸ் போர் முடிந்து வருகையில் ஸ்வீடனில் கடுமையான ப்ளேக் நோய் பரவி கொத்தாக மக்கள் இறந்தபடியிருக்கிறார்கள். ஓரிடத்தில் பிளேக்கில் இறந்து உட்கார்ந்த நிலையிலுள்ள பிணமொன்றைப் பார்க்கும் காட்சி கதிகலங்க வைக்கும். அன்டோனியஸ், மூடுவண்டியில் பயணித்தபடி நாடகம் போடும் நாடோடி ஜோடி யொன்றையும் அவர்களின் குழந்தையையும் சந்திக்கிறேன். அவர்களும் நண்பர்களாகி அவனோடு பயணிக்கின்றனர். தளபதி அன்டோனியஸ் எவ்வளவு முயன்றும் கடவுளை அவன் முன் காட்சியளிப்பதில்லை. ஆனால், அவன் விரும்பாமலே மரணதேவன் தோன்றி பேசுகிறான். படம் முழுக்க சதுரங்க ஆட்டம் நம் பார்வைக்கு எட்டாமலே நடந்து வந்து கொண்டிருக்கிறது. ஒருவன் சாவுக்கு பயந்து மரத்திலேறி உட்கார மரண தேவன் அந்த மரத்தின் அடிப்பகுதியை அறுத்து மரத்தைச் சாய்த்துத் தள்ள அதிலிருந்தவனும் விழுந்து மடிகிறான். சாவைப் பற்றிய எவ்வித பயமுமற்ற சிறு அணில் ஒன்று  எஞ்சி நிற்கும் அடிமரத்தின் மீது துள்ளியமர்ந்து வால் அடிக்கும் காட்சி இயக்குனரையும் காமிராகாரரையும் பாராட்ட வைக்கும் ஒன்று. ஓர் இளம்பெண் பிசாசுடன் படுத்திருந்ததாகவும் அவளால்தான் பிளேக் நோயே ஏற்பட்டதென்றும் கருதி சிப்பாய்கள் அவளை தீயிட்டு எரிக்க ஏற்பாடு செய்கிறார்கள். அன்டோனியஸ் அவளிடம் ‘‘நீ பிசாசுடனிருந்தாயா?’’  அவனை எனக்குக் காட்டு. அவனுக்கு கடவுளைத் தெரியும். அவன் மூலமாக நான் கடவுளை அணுகி  மரணம் உள்ளிட்ட சிலவற்றைக் கேட்க வேண்டும். என அந்தப் பெண்ணிடம் கேட்டுவிட்டு, தீயில் எரிக்கப்படுகையில் வலியுணர்வு ஏற்படாதிருக்க ஒரு மருந்தை அவளது வாயில் திணித்துவிட்டுப் போகிறான் தளபதி.

பிறகு எல்லோரையும் தன் கோட்டைக்கு அழைத்துச் சென்ற தளபதி அன்டோனியல் தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறான். அப்போது இடியும் மின்னலும் காற்றும் கிளம்பியடிக்கின்றன. நாடோடி நடிக ஜோடி அந்த இடி மின்னலிலும் அமர்ந்து சதுரங்கமாடும் மரண தேவனையும் தளபதியையும் பார்க்கிறார்கள். பிறகு தம் வண்டியை நைசாக கிளப்பி தப்பியோடி விடுகிறார்கள். மற்றவர்களோடு தளபதி தம்பதியும் சேர்கிறார்கள். இறுதியாட்டத்தில் மரணம் வெற்றி பெற தோற்ற தளபதி அன்டோனியஸ் இறைவனை நினைத்துப் பிரார்த்திவிட்டு  மரண தேவனை மற்றவருடன் சேர்ந்து பின் தொடர்கிறான். கடற்கரையிலிருந்து நடிகன் இந்த அபூர்வ காட்சியைப் பார்த்துவிட்டு மனைவியிடமும் விவரிக்கிறான்.

‘‘மரணத்தைத் தொடர்ந்து அவர்களெல்லாம் கை கோர்த்து நடனமாடிக் கொண்டு போகிறார்கள் என்கிறான். அதற்கு அவன் மனைவி கூறும் வரிகளே படத்தின் இறுதி வசனம்,’’

‘‘ஐயெ, ீயும் உன் கனவுகளும், காட்சியும்’’

 SEVENTH SEAL ஏழாவது முத்திரை என்று பொருள் கொள்ள பெர்க்மன் பைபிள் நிகழ்வுகளிலிருந்து எடுக்கிறார். மூடிக்கிடந்த ஏழாவது மூடியென்று கொண்டால், 7-வது மூடியை உடைத்தால் என்னென்ன வெளிவருமோ என்பதுபோன்றதோர் விளக்க உரையும் படத்தில் சொல்லப்படுகிறது. மேலும், படம் முழுவதும் நமக்கு காட்டப்படும், காட்டப்படாமலும் வரும்மரண தேவன்- தளபதிக்குமிடையிலான சதுரங்கப் போட்டி என்பது வெறும் போட்டியாட்டம் மட்டுமல்ல. அவனது கடவுளைப் பற்றிய உணர்வுகள், மதம், மனித வர்க்கம் பற்றிய உணர்வுகளுமாகும்.

 முதலிரண்டு படங்களுக்கு பெர்க்மன் காமிரா கலைஞர் குன்னர் ஃபிரிஸ்சரின் (GUNNER FISCHER) ஒளிப்பதிவை அமைத்தார். இப்படத்தில் அவரது ஒளிப்பதிவு பிரம்மாண்டமானது. தளபதி அன்டோனியஸ்ஸாக மாக்ஸ் வான் சைடோ (MAx VON SYDOW) மரண தேவனாக பெங்கீடு எகெராட்டும் நன்கு நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மற்றொரு சிறப்பு, அதற்கான பொருள் பொதிந்த சுவரொட்டியொன்றை பெர்க்மன் வடிவமைத்திருப்பது, அதில் கருப்பு – வெள்ளை சதுரங்கக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் முக்கிய கதாபாத்திரங்களின் முகங்கள், ஒரு பாதிக்கு படத்தின் தலைப்பு ஸ்வீடிஸ் மொழியில், ‘‘DET SJUNDE INSEGLET’’  என்றும்  அதற்கு கீழே மரணதேவனின் பெரிய பக்கவாட்டுத் தோற்றமும் இருக்கும். மரணத்தை மனிதன் வெல்ல முடியாது. ஆனால் மருந்து மாயங்களால் தள்ளிப் போடலாம். அவ்வளவே எனும் உண்மையையும் பெர்க்மன் இப்படத்தில் சொல்லுவதே 7வது முத்திரை.

ஸ்காண்டினேவியப் பகுதிகளில், நம்மூர் சிறுகாடுகளில் கிடைக்கும் சூரப்பழம், காரப்பழம், சிறுகளாப்பழதினுசுகள்போல ‘‘காட்டு ஸ்ட்ரா பெர்ரி’’ பழங்கள் விளைவதுண்டு. அம்மக்களுக்கு மிகவும் பெருமை மிக்க பழங்களாகும். சென்ற கட்டுரையில் (PELE THE CONQUEROR) திரைப்பட்தைப் பற்றி எழுதியதிலும் இந்த ஸ்ட்ராபெர்ரிகள் பற்றிய விஷயம் வந்திருக்கும்.

 1957ல் இங்க்மர் பெர்க்மன் WILD STRAWBERRIES  எனும் மிகச் சிறந்த திரைப்படத்தைச் செய்தார். ஆஸ்கர் பரிசுக்கு இங்க்மர் பெர்க்மன் சிறந்த திரைக்கதைக்கான விருதுக்கு இப்படத்துக்காக பரிந்துரைக்கப்பட்டார். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தில் பேராசிரியராக நடித்த விக்டர் ஸ்ஜோஸ்ட்ரோம் நடிப்புக்கும், இங்க்மர் பெர்க்மன் இயக்கத்துக்கும் தங்கக் கரடி பரிசும் பெற்றனர். வெனிஸ் திரைப்பட விழாவில் இங்க்மர் பெர்க்மனுக்கு இத்தாலிய திரைப்பட விமர்சகர் பரிசு வழங்கப்பட்டது.

 பேராசிரியர்  75 வயதான ஐசக் போர்க் (ISAK BORG) தனக்கு வழங்கப்படவிருக்கும் கெளரவ டாக்டர் பட்ட விருதை வாங்கிக் கொள்ள ஸ்டாக் ஹோமிலிருந்து லூண்ட் LUND பல்கலைக் கழகத்துக்கு பயணப்படவிருக்கிறார்.

ஐசக் போர்க் என்பதற்கு சுவீடிஷ் மொழியில் ‘‘பனிக் கட்டியாலான கோட்டை’’  என்று பொருள்படுகிறது. போர்கோடு 40 வருட காலம் உடனிருந்து சகல வழியிலும் வீட்டைப் பார்த்துக் கொள்ளுவதோடு, சமையல் முதலியவற்றையும் பொறுப்போடு கவனித்துவரும் கல்யாணமாகாத ஒழுக்க சீலியான 70 வயது ஆக்தா AGDA கண்டிப்பு மிக்கவள். ஒரு சமயம் பேராசிரியர் போர்க் கேட்பார், ‘‘நீயும் நானும் வாழலாமே, ஆக்தா ஐசக் என்றே சொல்லிக் கொள்ளலாமே’’  என்று, உடனே அவள் ஓட்ட வெட்டி மறுத்தொதுக்குவதோடு கோபித்து போய்விடுவாள். விருது பெறுவதற்கு அவர் விமானத்தில் பயணிப்பார், தானும் சேர்ந்துகூட போய் பெருமைமிக்க அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாமென்று ஆவலோடு எதிர்பார்த்த ஆக்தாவின் ஆசையை பேராசிரியர் நிராசையாக்கிவிட்டு காரிலேயே போகிறார். அவரோடு அவரது மருமகள் மரியன் (MARIANNE கூட வருகிறாள். மரியனும் அவள் கணவன்- பேராசிரியர் போர்கின் மகன் இவால்டும் EVALD சரியான உறவிலில்லை. ‘‘குழந்தைக் குட்டி’’ என்பது இவால்டுக்கு ஒத்துவராத விசயம். மரியன் ஐந்து மாத கற்பிணி என்பதையறிந்து கோபமும் வெறுப்புமடைந்து அதை கருக்கலைக்கச் சொல்லுகிறான். இதனால் கணவன் மனைவி உறவு விரிசல்பட்டு அவள் பிரிந்து தனியே இருக்கிறாள். விவாகரத்து பெறும் அளவுக்கு அவள் தயாராகி விடுகிறாள்.

போர்க் அடிக்கடி தூங்குவார். ஒவ்வொரு தூக்கத்திலும் விசித்திரமான கனவுகளைக் காண்பாய். படத்தின் தொடக்கமே அவரது வயதின் காரணமாய் மறதிமேலிட்டு வழியை தவறவிட்டு அலைகையில் ஒரு பகல் கனவுக்கு ஆளாகும் காட்சிதான். அவர் பின்னோக்கிய நினைவுகளில் வாழ்கிற பொழுதுகள் மிக அற்புதமாய் படமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஃபிளாஷ்பாக் காட்சியிலும் பேராசிரியர் தாம் அன்று நிகழ்ச்சிக்காக காரில் செல்லுகையில்  அணிந்த உடையில் வயதானவராகவே இருக்க அதே சமயம் தம் மனைவி, குழந்தைகள் அன்றைய நாள் தோற்றத்திலேயே இருக்குமாறு பெர்க்மன் காட்டுகிறார். மேலும், போர்க் சில மாயக் காட்சிகள், விபரீத கனவுகள், கெட்ட சொப்பனங்கள் வாயிலாகவும் தம் மரணம் குறித்த எதிர்பார்ப்பை வெளியிடுகிறார். காலை நடைப் பயிற்சியின்போது வயது- ஞாபகமறதி காரணமாய் வழியைத் தவறவிட்டு தடுமாறும் தருணத்தில் ஒரு பகல் தூக்கக் கனவில் அவரடையும் அனுபவமாய் இங்க்மர் பெர்க்மன் அற்புதமான காட்சியாக்குகிறார். மணிக்கூண்டு கடிகாரம் ஓடுகிறது ஆனால் கண்ணுக்கு ஓடவில்லை. மணி- நிமிடக் காட்டும் முட்களிலில்லை. திடீரென்று ஒரு மனிதன் நடைப்பாதை முதுகைக் காட்டியபடி நிற்கிறான். தொட்டால் சவமாகி விழுகிறான், அலங்காரமான GOTHIC  கலை வடிவ  சாரட்டு வண்டியில் வரும் சவப் பெட்டி. சாரட் வண்டியின் சக்கரம் ஒன்று கழண்டு உருண்டு ஓடுகிறது. மூன்று சக்கரத்தோடுள்ள சவப் பெட்டியுள்ள சாரட் வண்டியை குதிரைகள் தாறுமாறாய் இழுத்துச் செல்ல, சவப் பெட்டி நழுவி விழ, நடைப் பாதைச் சவம் மூடி திறந்து கொண்ட சவப் பெட்டியில் விழுகிறது. பேராசிரியர் ஐசக் போர்க் அது யாரென்றறிய முகத்தைத் திருப்ப, அது பேராசிரியர் போர்குதான்…

சுய நினைவுக்கு வர மேலும் ஓரிரு நிமிடங்களாகின்றன. காரில்தன் மருமகள் மரியன்னிடம் தான் கண்ட பகல் கனவு பற்றி கூறுகிறார். எதிரில் வரும் ஒரு காரில் நாலைந்து பேர். வயதான கணவன் மனைவி இணை அதில் வாக்குவாதம் செய்தபடி வருகிறது. ஒரு கண தடுமாற்றம் பேராசிரியரின் கார் எதிரில் வரும் காரோடு நாசுக்காக உராய்கிறது. அந்தக் கார் சட்டென ஜகா வாங்கி கவிழ்ந்து புரண்டு கரப்பான் பூச்சி மாதிரி தலைக் குப்புற கிடக்கிறது. போர்க் அதிர்ச்சியிலிருந்து சமாளித்து இறங்கி அவர்களிடம் மன்னிப்பு கேட்க் போகையில், அவர்கள் இவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து காரை நிமிர்த்தி நிறுத்த அந்தக் கார் ஓட மறுக்கிறது. அவர்களையும் தம் காரில் ஏற்றி, காரை மரியன் ஓட்டுகிறாள். அந்த வயதான தம்பதிகள் மறுபடியும் சண்டையை ஆரம்பிக்கவே, பேராசிரியர் அவர்களை இறக்கிவிட்டு விடுகிறார். போர்க் தன் 96வது தாயை சந்திக்க விரும்பி ஓரிடத்தில் நிறுத்துகிறார். தாயோடு கொஞ்ச நேர சந்திப்பு.

 பேராசிரியர் போர்கின் விருதளிப்பு விழா சிறப்பாக நடக்கிறது. ஆக்தாவும் வந்து சேர்ந்து தன் எஜமான் விருது பெறும் மகத்தான விழாவைக் கண்டுகளிக்கிறாள். பேராசிரியர் தம் மகனோடு உரையாடுவது முக்கிய கட்டம். அவனது வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாக விவாதித்து மகன்- மருமகள் முறிந்த வாழ்க்கையை  ஒன்று  சேர்த்து காப்பாற்றுகிறார். அதிகாரத்தோடு ஆக்தா தந்த தூக்கமாத்திரையை விழுங்கி நீர் குடித்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். அவரது கனவுகள், நினைவலைகள், வழியே நாம் ஒரு சுவீடிஷ் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அறியும்படி செய்கிறார் பெர்க்மன்.

 படத்தின் ஒளிப்பதிவு மிக பிரமாதம். குன்னர் ஃபிஷரின் காமிரா கருப்பு வெள்ளையில் துல்லியமாய் ஸ்வரம் வாசிக்கிறது. இங்க்மர் பெர்க்மன், பேராசிரியர் ஐசக் போர்க் பாத்திரத்தில் அவருக்கு முந்தைய மூத்த தலைமுறை சுவிடீஷ் திரைப்பட இயக்குனர் விக்டர் ஜோஸ்ட்ரோமை VICTOR SJOSTROM நடிக்க வைத்திருக்கிறார். ப்பா, சரியான நடிப்பு அந்த பாத்திரத்தை வெகு அனாயாசமாய்ச் செய்திருக்கிறார் விக்டர். இவர் சுவிடிஷ் மெளனத் திரைப்படக் காலத்து கலைஞர், ஹாலிவுட்டுக்கும் ‘‘THE WIND’’ என்ற அரிய மெளனப் படத்தை 1928ல் விக்டர் செய்திருக்கிறார். மெளனப் படங்களில் மிகச் சிறப்பான படங்களில் ஒன்றாக இதுவும் சொல்லப்படுகிறது. மருமகள் மரியன்னாக பெர்க்மனின் அனேக படங்களில் நடித்திருக்கும் இன்கிரிட்  தூலின் INGRID THULIN வெகு இயல்பாக நடித்திருக்கிறார்.

 FACE  அல்லது MAGICIAN AMSIKTET எனும் திரைப் படத்தை குன்னர் ஃபிஷர் காமிராவின் வியத்தகு ஒளிப்பதிவில் செய்தார், 1958ம் ஆண்டில், இங்க்மர் பெர்க்மன். ‘‘காமிக்ஸ்’’ என்ற வகையிலான படங்கள் மூலம் சொல்லும் ஆங்கிலம் மற்றும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்போருக்கு புகழ் பெற்ற ஐரோப்பிய 19ம் நூற்றாண்டு மந்திரவாதி- ஹிப்னாடிஸ்டு  ‘‘மாண்ட்ரேக்’’- ஐ தெரிந்திருக்கும். (MONTRAKE) மாண்ட்ரேக் அழகிய மனைவியும், விதூஷகனோடும்  வந்து போகிறவன். நான் மேட்டூர் அணையை அடுத்த மேச்சேரியில் மூன்றாம் வகுப்பு படிக்கையில் தினமணி தினசரியில் ‘‘மாண்ட்ரேக் என்னும் மந்திரவாதி’’ என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்து அசல் ஆங்கில படக்கதை வண்ணப்படங்களோடு தொடராக வெளிவந்தது. படத்தில் மந்திரவாதி மாண்ட்ரேக் இன்றைய இளைஞர்களின் தாடிக் கலாச்சாரத்தை ஒட்டி ஒருவித தாடியும் , ஆங்கிலேய ‘‘தவளைக் கோட்டும்’’ (FROG COAT)  அணிந்திருப்பார். சற்று உயரமான தொப்பி. கை விரல்களாலும் உற்று நோக்கும் பார்வையாலும் ஒருவரை மயக்கித் தன் வசப்படுத்தி தனது சொல், செயல்கள்படி இயங்க வைப்பார். இந்த தோற்றம், குணம், திறமை, செயல்பாடுகளோடு அழகிய மனைவி, விதூஷகன் ஒருவனோடு மந்திரவாதி வோக்ளர் என்பவனை படைத்திருக்கிறார் இங்க்மர் பெர்க்மன். 1958ல் வெளியான முகம் அல்லது மந்திரவாதிANSIKTET அவ்வளவாக வெற்றியடையாத படம் – என்றாலும்…

வோக்ளர் VOGER ஏராளமாகக் கடன் வாங்கி திருப்பித் தராமல் தகில் பாஜித்தனம் புரிந்து வருபவன். ஏமாற்று வித்தைக்காரன் எனும் குற்றச்சாட்டுகள் வேறு. போதெதென்று மத துவேசம் செய்த குற்றத்துக்கும் ஆளான வோக்ளர் தனது வித்தைக்கார வண்டியில் கிழட்டு தாய், மனைவி விதூஷகர்கள் சேர ஊர் ஊராக தப்பி ஓடிக் கொண்டிருக்கிறான். 19ம் நூற்றாண்டு மந்திரவாதியும் மெஸ் மெரிஸ கலைஞனுமான வோக்ளர் தன் வண்டியை அடர்ந்த காட்டின் வழியே செலுத்துகையில் ஒரு மனித மரண ஓலம் கேட்டு இறங்கி நடந்துபோய் பார்க்கிறான். ‘‘எதாவது  குடிக்கக் கொடுங்கள், நான் ஒரு நாடக நடிகன்,’’ என்கிறான். வோக்ளர் தண்ணீர் தந்து அவுனைத் தன்னோடு அழைத்து வருகிறான்.

அவன் வோக்ளரைக் கேட்கிறான்,

‘‘நீயும் நடிகனா?’’

‘‘இல்லை’’

‘‘பின் எதற்கு முகத்துக்கு ஒப்பனை செய்து கொண்டிருக்கிறாய்?’’

‘‘இல்லையே’’

‘‘ஆம் உன் தலைமுடி, மீசை, தாடியெல்லாம் ஒப்பனை கருதி ஒட்டப்பட்டதுதான், உன் முகம் வேறு, அசல் முகம் வேறு’’

வோக்ளர் மேற்கொண்டு பதிலளிக்காமல் அவனை வண்டிக்குள் தள்ளுகிறான்.

இந்தப் படத்தை இங்க்மர் பெர்க்மன் நகைச்சுவை கூடியதும், திகில் கலந்ததுமானதாய் பண்ண முயற்சித்திருப்பது தெரிந்தாலும் நமக்கு வரும் சிரிப்பு நகைச் சுவையால் அல்ல. என்ன செய்வது, யானைக்கு அடி சறுக்கியிருக்க வேண்டாம்.

 இறுதியில் டாக்டர் வெர்ஜெரஸ் DR> VERGERUS என்ற பகுத்தறிவுவாதியும் நாத்திகருமான மனிதரிடம் மாட்டிக் கொள்ளுகிறான்  வோக்ளர். எதையும் நம்ப மறுக்கும் நாத்திகன் டாக்டர் வெர்ஜெரஸ் வோக்ளரை பரிசோதிக்கிறார். பிறகு வோக்ளர் ஜாலவித்தைக் காட்சி செய்து காட்ட வைக்கப்படுகிறார். பிறகு அவர் தன் மந்திரவாதி முகத்தைக் களைகிறார். டோப்பா, தாடி, மீசைகளை உரித்தெடுத்தபின் நிஜமுகத்தைக் காட்டுகிறார். அந்த ஊரிலேயே வோக்ளர் மரணமடைகிறார். வோக்ளராக மாக்ஸ் வான் சைடோவும் அவர் மனைவியாக இங்ரிட் தூலினும் நடித்திருக்கிறார்கள்.

 1959-60ல் இங்க் மர்பெர்க்மனின் ‘‘வர்ஜின் ஸ்பிரிங்’’ வெளிவந்தது. VIRGIN SPRING (JUNGFRUKALLAN) (கன்னிநீருற்று) உல்லா ஐசக்சன் எழுதிய பதிமூன்றாம் நூற்றாண்டுகால கதையொன்றின் இசை நாட்டிய நாடகமாகும் ULLA ISAKSSONS BALLAD மத நம்பிக்கை, கற்பழிப்புச் செயல், பழிக்குப் பழி வாங்கல், மிருகத்தனம் என்பன கலந்த மத்திய கால பயங்கர புனைவைக் கொண்ட இப்படம் 1960ன் சிறந்த வேற்று மொழித்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. இப்படத்தின் அதியற்புத ஒளிப்பதிவை காமிரா கலைஞர் ஸ்வென் நிக்விஸ்ட் SVEN NYKVIST  புரிந்திருக்கிறார். காட்டுப் பகுதியில் ஆடு, மாடு கோழி வளர்த்துக் கொண்டு வாழும் சிறிய நிலாக்கிழார். அவர் மனைவி, ஒரே இளம்  மகள், சமையலுக்கு மற்றும் பட்டி தொட்டியைக் கவனித்துக் கொள்ள ஆட்கள் என்று ஒரு  பண்ணை வீடு. அவர்களின் மதரீதியான வழக்கப்படி ஒரு விசேச நாளையன்று பெண்கள் மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதியைத் தாண்டி தேவாலயத்தில் வைத்து ஏற்றி, பிரார்த்தித்திவிட்டு  வரவேண்டும்.

ஒருநாள் வீட்டு எஜமானி தனக்கு பதிலாக வேலைக்காரப் பெண் இங்கெரி INGERI என்பவளைப் போகச் சொல்லுகிறாள். அந்தப் பெண் முரட்டு அடங்காப் பிடாரி. கெட்டசாகவாசத்தால் கருவுற்று இருப்பவள். பண்ணையாரின் ஒரே கன்னிப் பெண் காரின் (KARIN) மெழுகுவர்த்திகளோடு தேவாலயத்துக்கு தானே போய்  வருவதாக முன் வருகிறாள். அவளோடு துணைக்கு இங்கெரியும் இன்னொரு குதிரையில் புறப்படுகிறாள். காரின் தன்னிடமுள்ள அதி உயர்ந்த விலையுயர்ந்த அங்கியையணிந்து போகிறாள். வழியிலுள்ள காட்டுப் பாதையில் இரு ஆடு மேய்க்கும் சகோதரர்களும், இன்னொரு சிறுவனும் ஆட்டிடையர்கள் காரின் தனியாக ஓய்வெடுக்கையில்  நெருங்குகிறார்கள். தண்ணீருக்காக சற்று தூரம் போய்விட்டிருந்த இங்கெரி திரும்புவதற்குள் காரியம் மிஞ்சி விடுகிறது. அந்த இரு இடைச் சகோதரர்களும் கன்னிப் பெண் காரினை வல்லுடலுறவு கொண்டு நாசப்படுத்துவதை வெறுமனே ஒளிந்து பார்க்கிறாள் இங்கெரின். அவளுக்கு நீண்ட நாளாகவே காரின் மீது எரிச்சலும் வன்மமும் இருந்தது.

கன்னிப் பெண்ணை யாராவது கற்பழித்து அவள் தன்போல அவதிப்பட வேண்டுமென்று எனவே அதைத் தடுக்க எவ்வித முயற்சியும் செய்வதில்லை. இடையர்கள் காரினை தலையிலடித்துக் கொன்று விட்டு அவளது விலையுயர்ந்த அங்கியை உருவிக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். இங்கெரின் வீட்டுக்குப் போய் அழுதுகொண்டே நடந்ததைக் கூறுகிறாள். பண்ணையார் தன் ஒரே மகளைக் கெடுத்துக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார்.

 இரவு இடையர்கள் மூவரும் பண்ணை வீட்டில் ஒதுங்குகிறார்கள். இங்கெரின் அப்போது இல்லை. இடையர்களுக்கு தாங்கள் அனுபவித்துக் கொன்ற பெண்ணின் வீடுதான் அது என்பதோ, தெரியாது. பண்ணையார் பாவமென்று உணவும் உடையும் தந்து  உதவுகிறார். இரவில் சிறுவன் பயந்து உளருகிறான். இடையர்கள் அவனைத் தாக்கிக் கொன்றுவிட்டு, தங்களிடம் ஒரு  உயர்ந்த அங்கியிருப்பதாய்க் கூறி காட்டி அதை வைத்துக்  கொண்டு பணம் தரக் கேட்கிறார்கள். காட்டில் அது கிடைத்ததாகக் கூறுகிறார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு இரவே கம்பி நீட்டுகிறார்கள். இறந்து கிடக்கும் சிறுவனைக் கண்டு சந்தேகம் வருகிறது. மகளைக் கொன்றவர்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு பண்ணையார் தன் பெரிய வாளோடு அவர்களைத் தொடர்ந்து சென்று போரிட்டு கொன்றுவிட்டு, மகள் இறந்த இடத்தில் அவள் நினைவாக ஒரு சிறு தேவாலயம் கட்டுகிறார். அப்போது  அந்தப் பக்கத்தில் புதிய நீரூற்று ஒன்று தோன்றி ஓடுகிறது. அதை அவர் கன்னி நீரூற்று  VIRGIN SPRING  என்றழைக்கிறார். பண்ணையாராக மாக்ஸ் வான் சைடோவும்  MAX VON SYDOW  அவரது கன்னி  மகளாக  பிரிஜிட்டா பேட்டர்சன்னும்  BIRGITTA PETTERSSON  மனம் நெகிழும்படி நடித்திருக்கிறார்கள்.

 இங்க்மர் பெர்க்மனின் மற்றொரு சிறந்த திரைப்படமான ‘‘அழுகைகளும் முணுமுணுப்புகளும்’’ CRIES AND WHISPERS 1972ல் வெளியானது. நான்கு பெண் பாத்திரங்களை முக்கியப் படுத்திய கதை. கதை வடிவம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படம் என மூன்று ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் கான் திரைப்பட விழாவில்  மிக உயர்ந்த கலை நுணுக்க பரிசை பெர்க் மனுக்குப் பெற்றுத் தந்தது. பெரிய எஸ்டேட் வீட்டில் முற்றிய புற்றுநோயால் செத்துக் கொண்டிருக்கிறாள் ஆக்னஸ், அவளுக்கு உதவியாக இருக்க  அவளது இரு தங்கைகள் மரியாவும் காரினும் வந்திருக்கிறார்கள். சமீபத்தில் தன் குழந்தையை இழந்த இளம் பெண் ஆன்னா, ஆக்னஸ் படுத்ததற்கு முன்பிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

 வண்ண ஒளிப்பதிவு, படம் தொடங்கும்போதே ஓவிய சட்டகங்களாய் ஸ்வென் நிக்விஸிடின் காமிரா நம் கண்களைக் குவிய வைக்கிறது. பெண்களின் மிக அருகாமை க்ளோஸப் காட்சிகளில் நிக்விஸ்ட் நம்மை அசத்திவிடுகிறார். எஸ்டேட்டின் புல்வெளி மரங்களின் காலை கோலத்தை என்னமாய் கோணப்படுத்தியுள்ளார். இந்த காமிரா வித்தகர், மரக்கிளைகள், இலைகள், காலைப் பனிப்படலம் ஆகியவற்றினூடே சூரிய ஒளியை  சும்மா வண்ண ஜாலமாக்கும்படி காமிராவில் விளையாடியிருக்கிறார்.

பிறகு காமிரா அந்த வீட்டுக்குள் நம்மை அழைத்து போகையில் புராதனகடிகாரங்கள் திரை முழுக்க தோன்றுகின்றன. கான்சர் வலியை எதிர்கொள்ள உறக்கம் கலைகிறாள் ஆக்னஸ் இந்த இடத்தில், ஓர் ஓவியன் நாவலாசிரியன் என்ற கோணத்திலிருந்து மீண்டும் ஸ்வென் நிக்விஸ்டின் காமிராவுக்கே திரும்புகிறேன். வண்ணம் முதன்மையும் முக்கியமுமாய் கவன ஈர்ப்பை கொள்ளுகிறது. அந்த பிரம்மாண்டமான வீட்டின் பெரும்பான்மை சுவர்களையும், திரைகளையும் செயற்கை மிக்க செந்நிறம் ஆக்கிரமித்துள்ளது, அலைக்கழிக்க வில்லை. அங்கு   நாம் எதிர்கொள்ளும் நான்கு பெண்களும் அறைகள், கூடங்களின் சிவப்பு வண்ணமடிக்கப் பட்ட அடர்த்திக்கு முற்றிலும் எதிரான தூய வெள்ளை நிற ஆடைகளில் தோன்றுகிறார்கள். இரு வேறு வண்ணங்களும் ஒன்றையொன்று பாராட்டிக் கொள்ளுகின்றன. மனித ஆன்மாவைத் தான் இந்த விதமான செந்நிறத்திலிருக்குமாறு கற்பித்ததாய் கூறும் இங்க்மர் பெர்க்மன், அந்த நிறத்தின் இருப்பும் ஈர்ப்புமே தன்னை மரணத்தையும் உயிர்ப்பையும் பற்றின ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தியவை என்றும் கூறுகிறார்.

ஆக்னஸ் தன் இறுதி நாளை நெருங்குகிறாள். பெர்க்மன் மற்ற மூன்று பெண்களின் வாழ்க்கையை கூறுகிறார் காட்சிகள் வாயிலாக, காரின் வாழ்க்கை கசப்பானது. கணவனால் அலட்சியப்படுத்தப்பட்ட அவளது பெண்மை பாலுணர்வுகள் புறந்தள்ளப்பட்ட நிலையில் மருத்துவம்  பார்க்க வரும் டாக்டர் டேவிட்டுடன் DR> DAVID  காரின்  KARIN உடலுறவு வைத்துக் கொண்டவள்.  டாக்டர் டேவிட் ஆக்னஸுக்கு AGNUS கான்சர் வைத்தியம் பார்க்க வருகிறார். தனது உணர்வுகளுக்கு சரியான வடிகாலின்றி மனம் கொந்தளிக்கும் காரின், தன் கணவன் உடைக்கும் கண்ணாடிக் கோப்பையின் துண்டு ஒன்றால் தன் பிறப்புறுப்பைக் கீறிக் கிழித்து அந்த இரத்தத்தை வாய் முழுக்கத் தேய்த்து கணவனுக்குக் காட்சி தரும் கட்டம் கொடுமையானதும் திகில் மிக்கதுமானது. ஆன்னா வெகு சமீபத்தில்தான் தன் குழந்தையை இழந்தவளாதலால் தாய்மை வளையத்துக்குள்ளேயே இருப்பவள். கான்சர் நோயாளி ஆக்னஸுக்கு தாய்போல சேவை புரியும் ஆன்னா தேவைப்படும்போது ஆக்னஸைத் தன் மடி மீது கிடத்தி மார்பைத் திறந்து முலையூட்டவும் செய்கிறாள். குழந்தைபோலாகி விட்ட ஆக்னஸுக்கும்

ஒரு தாயின் அரவணைப்பும் உடல் கதகதப்பும் தேவைப்படுகிறது.

ஆக்னஸ் இறந்துபோகிறாள். அந்த மிகப் பெரிய எஸ்டேட்டை விற்று எல்லோரும் பாகப் பிரிவினை செய்து  கொள்ளலாமென்ற பேச்சி அடுத்து எழுகிறது. ஆன்னாவை என்ன செய்வது, நீண்ட காலமாய் அக்கா ஆக்னஸூீடனிருந்து சகல சேவைகளையும் புரிந்தவளாயிற்றே என்ற பேச்சு வருகிறது. ஏதாவது கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவிடலாமென்கிறார் காரினின் கணவர். அது அவளது அன்பையும், சேவையையும் தியாகத்தையும் அனுமதிப்பதாகும் என்று கூறி சகோதரிகள், இறுதிவரை ஆக்னஸ் எழுதிக் கொண்டு வந்த நாட்குறிப்பு டைரியை  நினைவுச் சின்னமாக ஆன்னாவுக்கு அளிக்கிறார்கள். அவள் தனிமையில் அதை வாசிக்கத் தொடங்குகிறாள்.

ஓர் அற்புத காட்சியாடலோடு பெர்க்மன்-நிக்விஸ்ட் இணை படத்தை முடிப்பார்கள்.  காலைச் சூரிய ஒளியில் பச்சை பசேலென்ற ஸ்காண்டினேவிய பசுவை வெளியில் மரங்களுக்கிடையில் ஓர் ஊஞ்சல், மூன்று சகோதரிகளும் அன்னாவும் தூய வெள்ளை அங்கியில் வருவார்கள். சகோதரிகளை ஊஞ்சலில் அமர்த்தி ஆன்னா தள்ளி விடுவாள். ‘‘எங்குமே ஆனந்தம்’’ என்ற இனிமையான பழைய நாள் கண்டசாலாவின் மென்மையான பாடல் நினைவுக்கு வருகிறது.

 ஆக்னஸாக ஹாரியட் ஆண்டர்சன் HARRIET ANDERSON  ஆன்னாவாக காரி சில்வன் KARI SYLWAN  காரினாக  இன்கிரிட் தூலின் (INGRD THULIN மரியாவாக  லிவ் உல்மன் LIV ULMAN மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *