bioscopekaran cinima article-37 written by vittal rao தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
bioscopekaran cinima article-37 written by vittal rao தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா – ஹங்கேரிய திரைப்படங்கள்-2

சர்ரியலிஸ [மீமெய்யீய] ஓவியக் கலையில் சால்வெடார் டாலி [SALVEDOR DALI], ஹீரோனிமஸ் பாஷ் [HIERONYMUS BOSCH] மற்றும் மார்க் சகல் [MARC CHAGAL] என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர். இவரது மூன்று ஓவியங்கள் இணைக்கப்பட்டு ஒரே ஓவியமாய் விளங்கும் “பூமி சார்ந்த இன்ப சுகத்தின் தோட்டம்” [GARDEN OF EARTHLY DELIGHTS] என்ற அந்த முப்பிரிவிலான [TRIPIYCH] ஓவியம் மிகவும் புகழ்பெற்றது. மூன்று ஓவியங்களும் கண்கவர் வண்ணங்களில் பலகைகள் மீது தீட்டப்பட்ட தைல வண்ண ஓவியங்கள். நடுப்பலகை பெரியது. இடது, வலதுபுற பலகைகள் நடுப்பலகைக்கு பாதி அளவிலானவை. இரண்டும் நடுப்பலகையோடு பித்தளைக் கீல்களால் இணைக்கப்பட்டு மடக்கினால் அதோடு படிந்து பெட்டி மாதிரி மூடிக்கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டவை.

டென் பாஸ் [DEN BOSCHZ] எனும் டச்சு ஊரில் பிறந்ததால் பெயரில் “பாஷ்” சேர்ந்தது. இந்த 16-ம் நூற்றாண்டு ஓவியரின் மிகப்பெரிய – 7 அடி உயரமுள்ள மேற்சொன்ன ஓவியத்தின் அசல்பெயர் “காமம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஓவியம்” [LUST OR STRAWBRY PAINTING].. டாவின்சியின் சமகால ஓவியரானாலும் பாஷ், மற்ற எல்லா இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்களின் பங்களிப்புகளிலிருந்தும் மிகவும் வேறுபட்ட ஓவியங்களையே படைத்தவர். அவர் தம் ஓவியங்களில் மனிதனின் உயர்வையும் அழகையும் காட்டுவதைத் தவிர்த்து. அவனது பலகீனத்தையும் தீய தன்மைகளையுமே வலியுறுத்திக்காட்டியுள்ளார். இத்தாலிய ஓவியர்கள் தம் படைப்புகளில் கொண்டாடித் தீர்த்த மனித சதையின் [HUMAN FLSH] அதீத இன்பங்களை பாஷ் மிகக் கடுமையாகச் சாடியவர். பாஷின் இந்த மூன்று ஓவியங்களில் இடதுபுற பலகை “GARDEN OF EDEN” என்பது நிர்வாண ஆண்பெண்கள் இறைவன் படைத்த கோலத்தில் இன்ப சுகங்களை அனுபவித்தபடி திரியும் காட்சிகளைக் கொண்டது. மத்தியிலுள்ள சட்டகம் பழைய ஏற்பாட்டில் கூறப்படும் மிக பிரம்மாண்டமான வெள்ள நிழ்வுக்கு முந்தைய உலகின் காட்சி. வலதுபுற சட்டகம் பாவத்தின் தோற்றம் – அதாவது நரகலோகம். இதில் பாவிகளாக கருதப்படுபவர்களுக்கு நானாவித உடல்ரீதியான துன்பங்களை தண்டனையாக நரகத்தில் தரும் காட்சி. நரகம் – அவ்வுலகம் என்பது ஏனைய மதங்களிலும் நம்பப்பட்டு வருவதோடு நரக லோகம் என்பதையும் மனிதப் பிறவிகளுக்கு அளிக்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளென்று நம் நாட்டில் கற்பனை செய்திருப்பதையே ஒத்திருக்கின்றன. நமது எழும்பூர் அரும்பொருட்காட்சியில் சொர்கம் நரகம் என பழைய ஓவியங்கள் உள்ளன. அவை ஷிபாஷின் ஓவியங்களைப் போலவே இருக்கும். மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலை ஒட்டியுள்ள காய்கறி கடைத்தெருவில் “பொம்மை சத்திரம்” என்று ஒன்று இருக்கிறது. 63 மூவர் திருவிழாவின்போது மட்டுமே பொதுமக்களுக்குத் திறக்கப்படும் இங்கு சொர்கம் நரகம் பொம்மைகளுண்டு. நரகம் எப்படியிருக்கும் என்பதை இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஃபாசிஸ நாஜிப்படைகள் செய்த கொடுமைகளே உதாரணம்.

ஹங்கேரிய சினிமாவில் மிக முக்கியமான திரைப்படக் கலைஞர் ஜோல்தான் ஃபாப்ரீ [ZOLTAN FABRI] பாஷின் புகழபெற்ற அந்த ஓவியம் ஃபாப்ரியின் புகழ்பெற்ற திரைப்படம் [“ஐந்தாவது முத்திரை”] FIFTH SEAL–ல் ஓர் அங்கம் வகிக்கிறது.

FIFTH SEAL – திரைப்படத்தின் கதை FERENCE SOMTA என்ற எழுத்தாளரின் 1963-ம் ஆண்டு நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்த மிக முக்கிய ஹங்கேரிய திரைப்படத்தின் ஒப்பற்ற ஒளிப்பதிவை காமிரா கலைஞர் GYORGY LLLES செய்திருக்கிறார்.

இரண்டாம் உலகப்போர் சூழலில் ஹங்கேரிய நகரம் புடாபெஸ்ட். விட்டுவிட்டு போர் விமானங்கள் பறக்கும் ஓசையும் அங்கங்கே குண்டு வெடிக்கும் ஓசைமிக்க சூழலில் குறைந்த வெளிச்சத்தோடு ஆளரவமற்ற மதுபானக்கடையொன்றின் உட்புறத்தோற்றம். மெழுகில் வார்த்த மனித முகம் போன்றும் சற்று எடுப்பான மூக்கோடும் கூடிய அதன் உரிமையாளன் பேலா [BELA]. அவனது நெருங்கிய நண்பர்களும் வாடிக்கையாளர்களுமான ஆரிகுலர் [AURICULAR] கோவாக்ஸ் [KOVACS] மற்றும் கிராலே [KIRALY] என்ற மூவரும் மதுவருந்தினபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் கடை உரிமையாளன் பேலாவின் மனைவி வெளியே ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதை நினைவூட்டி விளக்குகளை அணைத்துவிட கட்டளையிட அவனும் உடனே அணைத்துவிடுகிறான். போர் விமானம் போய்விட்டதற்கான அறிவிப்பு வரவும் அவன் விளக்கைப் போடுகிறான். தானியங்கியாக நவீன இசையியத்திரமொன்று இசைப்பதை படம் தொடக்கத்திலிருந்து அவ்வப்போது காட்டப்படுகிறது. விளக்கை அணைப்பதையடுத்து அதுவும் மௌனியாகிறது. வெளிச்சம் வரவும் கோவாக்ஸ் அதை இயக்குகிறான். ஆனால் பேலா நிறுத்திவிட்டு, “வேண்டுமானால் அதை நிறுத்தியதற்கு பணம் தருகிறேன்”, என்று கூறுவதை மேலும் அவமானமாகி எடுத்துக்கொள்ளும் கோவாக்ஸ் பில்லியர்ட்ஸ் விளையாட முயற்சிப்பது ரசிக்கத் தகுந்தது. மது அருந்தினபடியே அவர்கள் அரசியல், தத்துவம், கலை விஷயங்கள் குறித்து பேசுவதும் விவாதிப்பதுமாயிருக்கின்றனர். ஆரிகுலர் கடிகாரங்கள் பழுதுபார்ப்பதும் கடிகாரங்களின் பாகங்களை கொண்டு வந்து முழு கடிகாரங்களாக்கி விற்பதுமான உயர்தர கடிகார தொழில் நுணுக்கக் கலைஞர். கோவாக்ஸ் தச்சுக் கலைஞர் கிராலே தையல் கலைஞர். கோவாக்ஸ் யுத்த நெருக்கடி காலத்தில் கிடைப்பதற்கு மிக அரிதான அத்தியாவசியப் பண்டம் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதாய்க் கூறி மேஜை மீது ஒருபெரிய காகிதப் பொட்டலத்தை வைக்கிறான். அதை பேவா பிரித்து பார்க்க நாவையும் வயிற்றையும் கவரும்படியான இளஞ்சிவப்பில பெரிய இறைச்சித்துண்டு. அதை எல்லோரும் விரும்பிப் பாராட்டி சமைக்கும் நுணுக்கத்தை சொல்லுகின்றனர். அப்போது ஓர் ஓவியம் பற்றிய பேச்சு எழுகிறது.

கோவாக்ஸ் தன்னிடமிருந்த மிக மிக அரிதான அந்த ஓவியப் பிரதியைக் கொடுத்துவிட்டுத்தான் அதற்கு ஈடாக இந்த இறைச்சியைப் பண்டமாற்றிக்கொண்டதாக கூறும்போதே அந்த ஓவியத்தின் அசலை ஃபாப்ரி திரையில் நமக்குக் காட்டுகின்றார். அதுதான் ஆரம்பத்தில் நான் விவரித்த பாஷின் நரகம் முதலான மூன்று காட்சிகளைத் தனித்தனியே கொண்ட முப்பெரு ஓவியங்களில் நரகக் காட்சிப்பகுதியாகும். அதன் பிரதியைத்தான் அவன் இறைச்சிக்கு ஈடாகக் கொடுத்துவிட்டிருந்தான். தானியங்கி இசைக்கருவி ஏதோ ஒரு சிம்ஃபனி இசையை அவர்கள் உரையாடலுக்கு ஒத்துப்போனதாயும் ஒத்திசைவாகவும் ஒலிக்கிறது.

அப்போது கிராலேதான் கண்ட கனவொன்றைச் சொல்லுகிறான். அதில் தன் வீட்டுக்கருகிலுள்ள ஒருவன் மாடியில் காலை உடற்பயிற்சியின்போது முழு நிர்வாணமாயிருந்ததாய்க் கூறுகிறான். கிராலேயை அவ்வப்போது அவர் முழு நிர்வாணத்தை ரசித்ததாகச் சொல்லிச் சொல்லி ஒருவித சுய இன்பம் துய்க்கிறான் கோவாக்ஸ். இந்த பேச்சின் ஊடே பாஷின் முப்பெரு ஓவியங்களில் ஒன்றான “நரகம்” திரையில் மெள்ள நகரும்படி காமிரா கோணப்படுத்துகிறது. நரகம் காட்சியில் கிட்டதட்ட நமது நரகலோகம் குறித்தான கற்பனை விவரணையாகவே பல்வேறு வழியிலான கொடுந் தண்டனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிர்வாணமான ஆண் பெண்கள் தத்தம் பூமி சார்ந்த ககுற்றங்களுக்காக நரகத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு கழுவேற்றல், விலங்குகளுக்கு உணவாக்கப்படல், தீயில் சுடப்படுதல், கொதிக்கும் எண்ணெயில் வேக விடுதல், மர்ம உறுப்புகளில் பயங்கர ஆயுதங்களைச் செலுத்துதல் போன்ற கொடுந்தண்டனைக் காட்சிகள் பலவும் ஒவியமாக காட்டப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான சர்ரியலினி பாணி ஓவியம் அது. மனிதர்கள் அல்லாது நாய், மான், பன்றி சில பறவைகளும் தண்டனைக்குள்ளாவது போன்ற சித்தரிப்பையும் பாஷ் காட்டியுள்ளார். நமது நரகச் சித்தரிப்பில் பிராணிகளுக்கு நரகத்தில் நுழைவோ வேறெந்த மாதிரி வேலையோ இருக்காது. வெறும் மானிடப் பிறவிகள் மட்டுமே இருக்கும்.

“உள்ளத்தில் நிகழும் கலக்கங்கள், பயப்பிராந்தி-சூழல், பேராசைகள், எண்ணங்களின் தறிகெட்ட நிலை, ஆகியவற்றின் குறியீடுகளாய் காட்டப்பட்டிருப்பது நரகம் ஒவியத்தின் பாஷ் கருப்பொருளாகும்.

மதுவோடு சிகரெட் புகைப்பதும் அவர்கள் பழக்கமாயிருக்கையில் பேலா, அன்றைக்கு பிரபலமான ‘DARLING” என்று பெயர் கொண்ட அமெரிக்க சிகரெட் பாக்கெட் ஒன்றை நீட்டுகிறான். யுத்தம் எல்லாவற்றையும் அரிதாக்கி கருப்பு மார்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதை இந்த சிகரெட் மூலம் ஃபாப்ரி உணர்த்துகிறார்.

“இது எப்படி கிடைத்தது?” என்று ஆரிகுலர் கேட்பார்.

“பெரிய பிரபுப்பா பேலா”, என்பான் கோவாக்ஸ்.

ஆரிகுலர் மனைவியை இழந்தவர். மூன்று குழந்தைகள் மூத்தவள் பெண். அவள்தான் குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் வகிப்பவள். வீடு முழுக்க அழகழகான வெவ்வேறு ரக-வடிவங்களில் கடிகாரங்கள் நிறைந்த கூடம். அத்தோடு ஆரிகுலர் மிகவும் ரகசியமாக தியாக உணர்வோடு ஒரு சேவையை செய்து வருபவர். ஹிட்லரின் பாசிஸ ஜெஸ்டபோ [GESTAPO] படைகள் ஹங்கேரியிலுள்ள யூதப் பெற்றோர்களின் குழந்தைகளைப் பிடித்து சென்று சாகடித்து வந்தனர். ஆரிகுலர் தன் வீட்டில் அம்மாதிரியான யூதக் குழந்தைகளைக் காப்பாற்றி பாதுகாத்து ரகசியமாய் வைத்து வளர்த்து வருபவர்.

கோவாக்ஸ் “COLOURFUL” – ஆன மனிதன். அவனுக்கு நகரில் ஒரு “ஜல்சாலைலா” உண்டு. அந்த இறைச்சியை அவளிடம் கொண்டுபோய் கொடுத்து சமைக்க வைத்து குடித்து ஆட்டம் போட நினைக்கிறான். இந்த சமயம் வெளியிலிருந்து ஒரு கால் ஊனமுற்ற ஒருவன் கட்டையை ஊன்றி நடந்து வருகிறான். இவர்கள் மேதைக்கு அழைக்கவும் அவனும் தன் மதுவோடு வந்து அமர்கிறான். தன் பெயர் கரோலி கெஸ்ஜெல் [KAROLY KESZEL] என்றும் தான் ஒரு புகைப்படக் கலைஞன் என்றும் அவன் கூறுகிறான். பேச்சில் அவனும் கலந்து கொள்ளுகிறான். அன்றைய சந்திப்பு முடிந்த தருவாயில் கடிகார நிபுணர் ஆரிகுலர் ஒரு கதையைச் சொல்லுகிறார். ஒரு கொடுங்கோல் அரசனையும் அடிமை ஒருவனையும் பற்றிய கதை. கொடுங்கோலின் ஏராளமான குற்றங்கள் புரிந்து மக்களை வதைக்கிறான். குற்றவுணர்வேயின்றி உல்லாசம் கொண்டாட்டம் கேளிக்கைகள் என்று வாழ்கிறான். அவனால் வன்கொடுமைக்காட்பட்டவர்களுள் முக்கியமானவன் ஓர் அடிமை. அவனது நாக்கை வெட்டி கண்களைப் பிடுங்கியெறிந்து அவனது பிள்ளைகளிடமிருந்தும் பிரித்து விடுகிறான், ஆனால் மனதில்கூட ஒருபோதும் யாருக்கும் எவ்வித தீங்கும் கிடைத்ததில்லை என்ற உறுதியான எண்ணத்தில் அமைதியுடன் வாழ்ந்தவன் அடிமை. இந்தக் கதையைச் சொல்லி முடித்த ஆரிகுலர் நண்பர்களைப் பார்த்து கேள்வியொன்றை கேட்கிறார்.

“நீங்கள் இறக்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் உடனே பிறக்கவும் போகிறீர்கள் என்றும் வைத்துக்கொண்டால், நான் சொன்ன இரண்டுபேரில் யாராகப் பிறக்க உங்களுக்கு விருப்பம்? இதை முடிவு செய்து சொல்ல வேண்டும்”

ஆரிகுலரின் கேள்வியால் நண்பர்கள் உறக்கத்தையிழக்கின்றனர் பேலா தன் மனைவியிடம் இதைப் பகிர்ந்து கொள்வதோடு அவளோடு உடலுறவையும் வைத்துக் கொள்ளுகிறான். ஆனால் விடை கிடைப்பதில்லை.

கோவாக்ஸ் தான் பாஷின் ஓவியத்தைக் கொடுத்து பண்டமாற்றம் செய்து வாங்கி வந்த இறைச்சியுடன் ஏராளமாய்க் குடித்து போதையேறி உளறியபடி தள்ளாடிச் சென்று தன் லைலாவை அடைகிறான். இறைச்சியை அவளுக்குத்தந்துவிட்டு மயக்கத்தில் தூங்குகிறான். ஒரு பயங்கரமான கனவு. கனவே சர்ரியலிஸம்தான். அவனது லைலா நிர்வாணமாய் ஊஞ்சலாட திடீரென நாஜி துப்பாக்கிச்சூடு கேட்கிறது. அவளுடைய இடதுமூலையில் குண்டு ாய்ந்து ரத்தம் வடியச் சிரிக்கிறாள். கோவாக்ளின் மனைவியும் அவனும் சுடப்பட்டு ரத்தம் வழிகிறார்கள். ஹிட்லர் காலத்தில் நாஜி கொடுமைகள் பிற நாட்டு பிரஜைகளுக்கு சர்ரியலிஸ ரூப பயங்கர கனவுகளாய் வருவது ஐரோப்பிய கதைகள், ஓவியங்கள் திரைப்படங்களில் சாதாணரம்.

கிராலே அன்றிரவு தன் மனைவியிடம் ஆரிகுலர் சொன்ன கதையையும் கேள்வியையும் சொல்லுகிறான். அவன் மனைவியும் அதைப்பற்றியே சிந்திக்கிறான்.

ஆரிகுலருக்கு கேள்வி தேவையில்லாததாகிறது. அவனைத்தேடி இரவில் சிலர் வருகின்றனர். அனாதையான யூதக் குழந்தை ஒன்றை ரகசியமாய் அழைத்து வந்து அவரிடம் ஒப்படைத்துவிட்டுப் போகின்றனர். அவர் அதைப் போல்தாம் காப்பாற்றிவரும் பலதோடு ஒன்றாக வைத்துக் கொள்ளுகிறார். மறுநாள் எல்லாமே தலைகீழாகிறது. மறுநாள் நடக்க இருப்பதைத்தான் பாஷின் சர்ரியலிஸ ஓவியம் “நரகம்” மூலம் ஜோல்தான் ஃபாப்ரி முன்கூட்டியே உணர்த்துகிறார். படத்தின் சாரம் பாஷின் மூன்று ஓவியங்களிலும் உணர்த்தப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்டம் திரையில் நகர்த்தப்படும் பாஷின் மூன்று ஓவியங்களிலும் உணர்த்தப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்டம் திரையில் நகர்த்தப்படும் பாஷின் மூன்றாவது ஓவியம் “நரகம்” இன் கருத்தாக அமைகிறது. இராணுவ போல்ஸ் மறுநாள் அந்த நால்வரையும் கைது செய்து கொண்டு போகிறது. ஊனமான புகைப்படக்காரன் கரோலி கெஸ்ஜர் மதுபானக் கடையில் அந்த நால்வரும் அரசாங்கத்தைச் சற்று கடுமையாக விமர்சித்ததை தாங்கிக்கொள்ளாமல் அவர்களைப் பற்றி ராணுவத்திடம் போட்டுக் கொடுத்துவிட்டான். அவன் போட்டுக் கொடுத்ததன் பேரில் ராணுவ போலீஸ் அவர்களை கைது செய்து கொண்டுபோய் சித்தரவதை செய்கிறது. கடைசிவரை கைது செய்து அடித்து உதைப்பதற்கான செய்கிறது. கடைசிவரை கைது செய்து அடித்து உதைப்பதற்கான காரணத்தை போலீஸ் சொல்லுவதே இல்லை. அவர்கள் மரண தண்டனையிலிருந்து உயிர் தப்ப ஒரே ஒரு வழியை போலீஸே சொல்லுகிறது. கம்யூனிஸ்ட்டாக இருந்த அரசியல் கைதி ஒருவனை பிணைத்து நிறுத்தி அடித்து நொறுக்கி குற்றுயிராக்கயிருக்கிறது போலீஸ். அவனை இந்த நால்வரும் ஆளுக்கு இரண்டு அறை அறைய வேண்டும். அவனை இருமுறை அறைந்தால் விடுதலையளிப்பதால் போலீஸ் தலைமையதிகாரி கூறுகிறான். ஆரிகுலரைத் தவிர மற்ற மூவரும் அவனை அறைய முடியாது என்று மறுத்து நின்று விடுகின்றனர். ஆரிகுலரின் கடைசி வாய்ப்பு வருகிறது. ஆரிகுலர் அந்தக் குற்றவாளியின் கன்னத்தில் இரண்டு அறை அறைந்துவிட்டு வடுதலையளிக்கப்பட்டு வெளியேறுமுன்பே மற்ற மூவரும் சுடப்பட்டு இறந்து விடுகிறார்கள். ஆரிகுலர் வெளியேறும்போது பெருத்த ஓசையோடு அந்த முழுக்கட்டிடமே மேலே பறக்கும் ரஷ்ய போர் விமானங்களின் குண்டுவீச்சில் சிதறி தரைமட்டமாகிறது.

ஃபிஃப்த் சீல் 1976-ல் வெளிவந்த திரைப்படம்.

ஜோல்தான் ஃபாப்ரி 1917-ல் ஹங்கேரிய நகர் புடாபெஸ்டில் பிறந்தவர். ஓவியக்கல்லூரியில் பயின்று ஓவியராக இருந்தவர். எழுதுவது, இசை, நாடகம் என பல துறைகளிலும் ஈடுபட்டவர். இரண்டாம் உலகப்போரில் சேவை செய்து ஜெர்மனிய கைதியாக நாட்களைக் கழித்த அனுபவம் அவரை மனிதாபிமான சிந்தனையில் ஆழ்த்தியது. போருக்குப் பின் நாடகத் துறையில் சிறந்து விளங்கும்ஃபாப்ரி திரைப்பட கதைகள் எழுதினார். 1948-ல் ஹங்கேரிய கம்யூனிஸ்ட் அரசு அனைத்து திரைப்பட நிறுவனங்களையும் அரசுடமையாக்கியதோடு, ஃபாப்ரின் திரைப்பட – நாடக அனுபவங்களைக் கருத்தில் கொண்டு அவரை திரைப்பட தயாரிப்பு நிறுவன ஆலோசகராக நியமித்தது. ஃபாப்ரியின் முதல் திரைப்படம், “UNDER GROUND COLONY”, 1952-ன் வெளிவந்தது. ஹங்கேரியின் எண்ணெய் உற்பத்தியை அழிக்க மேற்கு நாடுகள் மேற்கொண்ட சதித் திட்டத்தைப் பற்றிய கதைப்படம். வலதுசாரி ஃபாசிஸ்டுகள் ஹங்கேரியை ஆண்ட கொடுங்கோல் ஆட்சியான 1930-களின் நிகழ்வைக்கொண்ட இவரது திரைப்படம் “PROFESSOR HANNIBAL” என்பது. இப்படம் 1956-ல் வெளிவந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று எனப்படுவது.

இறுதி நாட்களில் அரசு திரைப்பட கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஜோல்தான் ஃபாப்ரி ஓவியக்கலையில் மீண்டும் கவனத்தை செலதுத்தத் தொடங்கினார். அவரது “ ” தன் ஓவியக் காட்சிகள் பிரபலமானவை. ஓவியக்கலை ரீதியான முக்கிய பரிசுகள் அளிக்கப்பட்டவர். ஜோல்தான் ஃபாப்ரி தனது 76-வது வயதில் புடாபெஸ்டில் 1994-ல் காலமானார்.

உக்ரேனும் ஹங்கேரியும் ஜெர்மன் நாஜி ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலம். உக்ரேனின் டாவாஸ்ஜா [TAVASZA] கைதிகள் முகாம். வருடம் 1844. ஹங்கேரிய யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் கைதிகளாய் ்அரை வயிற்றுக் கஞ்சியும் காய்ந்த ரொட்டியும் அளிக்கப்பட்டு ஓய்வின்றி கடின உழைப்பு செய்து எலும்பும் தோலுமாயிருக்கும் கோலம். சாப்பிடக்கூட சக்தியற்று, முதிய கைதி ஒருவன் கடித்து விழுங்கியதுபோக மீதமுள்ள ஒருபிடி ரொட்டியை வேறெவரும் அபகரித்து விடாதபடிக்கு படம் தொடங்குகிறது. படம்:- “TWO HALF TIMES IN HELL,” 1961-ல் வெளியான ஜோல்டான் ஃபாப்ரியின் மிக முக்கிய ஹங்கேரியத் திரைப்படம். கால் பந்தாட்டத்தை வைத்து உலகில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படங்களில் தலை சிறந்தது இப்படம்.

விடிந்ததும் எல்லாரையும் “ரோல்கால்” [ROLLCALL] அணி வகுக்கச் செய்யும் கெடுபிடியில், ஒரு கைதியின் துயரம், அவனது கால் பூட்ஸ் காணவில்லை.

“அங்கே என்ன ரகளை?” சார்ஜெண்டின் மிரட்டல்

“என் பூட்ஸ காணோம்?”

“ஏன், என்னாச்சு?”

“யாரோ திருடிக்கிட்டாங்க?”

“ஏய், யார் எடுத்தது?”

பதிலேயில்லை.

“எல்லாரும் ரெண்டு நிமிஷத்தில அவங்கவங்க பூட்ஸக் கழட்டி இந்த வட்டத்துக்குள்ள போடணும்”

எல்லா கைதிகளும் வேக வேகமாய் தத்தம் காலனிகளைக் கழட்டுகிறார்கள்.

“பூட்ஸ பத்திரமா பாத்துக்க யோக்யதையில்லாத ஒனக்கு தண்டனை, தவளை மாதிரி குதிச்சிட்டிரு,”

காலியைக் களவு கொடுத்த கைதி தவளைபோல மைதானத்தில் தத்தித் தத்தி குதிக்க, சார்ஜெண்ட் வரைந்த வட்டத்துக்குள் பூட்சுகள் குவிகின்றன. திரையில் க்ளோசப் காட்சியாக குன்றாய்க் குவிந்த கைதிகளின் பல்வேறு ரூபங்களிலான பூட்சுகளை காமிரா காட்டுகிறது. ஐயோ என்கிறது மனம்! பூட்ட்ஸா அவை! நுனி கிழந்தும் பின் பகுதியே இல்லாமலும், முன்பக்கம் வாய் பிளந்தும், அடிப்பகுதி – சோல் – பாதிக்கும் பிய்ந்து ஒழிந்தும், லேஸ் அறுந்தும், லேஸே இன்றியும், அழுக்குக்குப் பஞ்சமேயில்லாத தோற்றத்திலுமாய், அந்த காலணிகள் – குஷ்டரோகியணியும் காலணிகளுக்கும் கீழானவையாக…

“முப்பது நிமிஷம் டைம், அவங்கவங்கதை எடுத்து மாட்டிகிட்டு வரிசையில நிக்கணும்?”

உடனே அடிதடி தள்ளுமுள்ளு. உன் பூட்ஸ் என் வசம். என் பூட்ஸ் உன் வசம். அப்போதும் தண்டனை நிறுத்தப்படாது காலணி களவு தந்த கைதி தவளைக் குதியாட்டம் போட்டுக்கொண்டேயிருக்க – கடைசிவரை அவனுக்கு பூட்ஸே கிடைப்பதில்லை.

மஜோரோஸ் [MAJOROS] என்ற கைதி இறந்துபோக பாக்டர் வந்து உறுதி செய்துவிட்டு போகையில் சக கைதி இன்னொருவனிடம் மெதுவாகக் கேட்கிறான், “அவனோடது என்ன இருக்கு?”

“குல்லாய்”

“பூட்ஸில்லையா?”

கைதிகள் மரம் அறுக்கும் வேலைக்கு வரிசையில் அழைத்துப் போகையில் சார்ஜெண்ட் அவர்களைப் பாடினபடியே நடக்கச் சொல்லுகிறான். “சத்தமா பாடுங்கடா”, என்பான். பிறகு “ஏண்டா எளவுக்கு பாடறாப்பலயிருக்கு, நல்லா சந்தோஷமாப் பாடுங்க”, என்பான்

ராக்ஜ் [RACZ] என்ற கம்யூனிஸடை மரத்தில் கட்டிவைத்து சோறு தண்ணியில்லாமல் அடிக்கிறார்கள். அவனது தொங்கிய தலையை ஒருமுறை நிமிர்த்திப் பிடித்தபடி சார்ஜெண்ட் கேட்கிறான், “ராக்ஜ், இன்னும் கூட நீ கம்யூனிஸ்ட்தானா?”

“ஆமா”

“எப்படி முடியிது?”

“கம்யூனிஸ்டாயிருக்கிறதாலேதான் முடியுது”, என்கிறான் ராக்ஜ்.

அப்போது கார்பரல் ஒருவன் மோட்டார் சைக்கிளில் வருவதைக் கண்டு ஏதோ செய்தி என பார்க்கிறார்கள் யாருக்காவது விடுதலைக்கான செய்தியாகவோ, போர் முனைக்கு அனுப்பச் சொல்லும் உத்தரவாகவோ இருக்கக்கூடும் என்பான் ஒருவன். அவர்களில் ஓனோடி [ONODI] என்பவனை ஜெர்மன் படைத்தலைவர் அழைத்து வரச் சொல்லி கார்பரல் வந்திருக்கிறான். உடனே சக கைதிகளுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் ஓனோடி….. ஓனோடி என்று பல்வேறு குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. அவனது செல்லப் பெயர் டியோ [DIO] என்பது.

“டியோ, உனக்கு விடுதலையிருக்கும்… வீட்டுக்கு அனுப்புகிறார்கள். உன்னோட பூட்ஸ் எனக்குத்தான்.”

“டியோ, ஊருக்குப் போனதும் என் பொண்டாட்டியப் போய் பார். நான் வரும்போதே அவளுக்கு உடம்பு ரொம்ப மோசம், கேட்டதா சொல்லு”

“எங்கம்மாவைப் போய்ப் பாரு, டியோ.”

ஓனோடியை கார்பரல் மோட்டார் பைக்கில் அமர்த்தி ஜெர்மன் ராணுவ அதிகாரியிடம் அழைத்துப் போகிறான். அதிகாரி அவனை விசாரித்துவிட்டு, “நீ கால்பந்து ஆட்டக்காரனா?” என கேட்கிறார். ஆமாமென்கிறான் டியோ. ஒரு செய்திப் பத்திரிகையின் முதற்பக்கத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சற்று கூடுதலான நீளமூக்குடன் [அவனுக்கு இயற்கையாகவே மூக்கு சற்று நீண்டது] அவனது கோட்டோவியமும் அவனைப்பற்றிய வரலாறும் வெளியாகியிருக்கிறது. ஓனோடி – ஹங்கேரி கால்பந்தாட்டக் குழுவில் சிறந்த வீரர்களில் ஒருவன்.

ஹிட்லருக்கு பிறந்தநாள் வருவதை ஒட்டி அவரிடம் நற்பெயரைப் பெறும் எண்ணத்தோழுடு ஜெர்மன் ராணுவ கால்பந்தாட்டக் குழுவுக்கும் ஹங்கேரிய கைதிகள் கொண்ட குழுவிற்கும் இடையே ஒரு கால்பந்தாட்டப் போட்டியை நடத்த விரும்பிய அதிகாரி அதற்காக ஓனோடியை கூப்பிட்டிருந்தார்.

“ஒரு ஹங்கேரிய ஆட்டக் குழவை தயார் செய். நீதான் அதற்கு தலைவன்” என்கிறார். டியோ ஒலிம்பிக்கில் ஹங்கேரியா குழுவோடு சிறப்பாக விளையாடியவன்

தன்னாலாகாது என்கிறான் ஓனோடி. கோபமடையும் குட்டியதிகாரியை அடக்கிவிட்டு உயர் அதிகாரி அவனை நெருங்கி வந்து விசாரிக்கிறார்.

“எலும்புக் கூடுகளைக் கொண்டா ஆட வைப்பது?” என்கிறான் டியோ சிரித்தவாறு.

“என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?”

“அவர்களுக்கு முதலில் நல்ல புஷ்டியான உணவு அளிக்கப்பட வேண்டும், நாள் முழுக்க பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சியை நான் அளிக்கிறேன். அதே சமயம் கால் பந்தாட்டப் பயிற்சி தவிர அவர்களிடம் வேறு எந்த வேலையும் வாங்கக்கூடாது. உணவும் பயிற்சியும் ஓய்வும் மட்டுமே அவர்களுக்கு போட்டி முடியும் வரை அவர்களை வழக்கமான கைதிகளுக்கான வேலைகளிலிருந்து விலக்கிவிடவேண்டும்”

“முடியாது” என்று மறுத்தாலும் வேறு வழியின்றி டியோவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கைதிக் குழுவை தேர்ந்தெடுக்கச் சொல்லுகிறார் அதிகாரி. ஒரு தேர்ந்த கால்பந்தாட்டத்துக்கு அதன் ஒவ்வொரு மைதான- பொறுப்புக்குமான ஆட்டக்காரர்களாக பத்துப்பேரை தேர்ந்தெடுத்துக்கொண்ட ஓனோடி வலதுபுற ஆட்டக்காரன் ஒருவனைத் தேடி கார்பரலோடு வேறொரு சிறு முகாமுக்குப் போகிறான். அந்த குமாம் மனநலப் பகுதியொன்றில் வெடி வைத்து ஜல்லி உடைக்கும் பணியிலிருக்கிறது. அவர்களின் ஜெர்மன் சார்ஜெண்ட் மகா கொடியவன். பாறையை வெடி வைத்து தகர்க்கையில் ஸ்டைனர் [STEINER] எனும் மெலிந்த ஹங்கேரிய யூதன் ஒருவனை மட்டும் பள்ளத்தாக்கில் வெடித்துச் சிதறும் கற்கள் மத்தியில் அசையாது நிற்க வைத்துவிட்டு மற்றவர்களை ஓடி ஒளியச் செய்து தானும் பாதுகாப்பான இடம் பார்த்து ஒளிந்து கொள்ளுகிறான் சார்ஜெண்ட். வெடித்துக் கற்கள் சிதறியும் ஸ்டைனர் பாதிப்பின்றி நிற்கிறான். அச்சமயம் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து ஓனோடி வருகிறான். மேலதிகாரியின் உத்தரவு கடிதத்தைக் காட்டுகிறான். உடனே சார்ஜெண்ட் கைதிகளை அழைத்து நிற்க வைக்கிறான். யாரெல்லாம் கால்பந்து ஆடக்கூடியவர்களென்று சார்ஜெண்ட் கேட்க எல்லா கைதிகளும் முன்னால் வந்து நிற்கிறார்கள்.

“சோதிக்கும்போது யாரெல்லாம் போலி ஆட்டக்காரன் என்று தெரிந்தால் அவர்களைச் சுட்டுவிடுவேன்,” என்கிறான் சார்ஜெண்ட். சொன்னவுடன் ஒருவனைத் தவிர மற்றெல்லாரும் பின் வாங்குகின்றனர். அந்த ஒருவன் ஸ்டைனர் எனும் யூதன். ஓனோடி பந்தைத் தந்து உதைக்கச் சொல்லிப் பார்த்து குழுவில் சேர்த்துக்கொள்ளுகிறான்.

நல்ல புஷ்டியான உணவு-கால்பந்து பயிற்சியைத் தவிர வேறு அன்றாட உழைப்பிலிருந்து விலக்கு – இதுதான் மற்றவர்களுக்கு பொறாமையும் ஆத்திரமுமாய் சேர்க்கிறது.

அடர்ந்த காட்டையடுத்த மைதானத்தில் ஓனோடி எல்லோருக்கும் பயிற்சியளிக்கிறான். இவர்களைக் கண்காணிக்கவும் பத்திரமாய் பார்த்துக்கொள்ளவும் ஒரேயொரு ஒற்றை ஜெர்மன் கார்பரல். அவன் சதா கிராமபோன் ரிகார்டுகளின் படங்கள் நிறைந்த புத்தகம் ஒன்றை ரசித்தபடியிருக்கிறான். பயிற்சியின்போது ஓனோடிக்குத் தெரிகிறது. அந்த ஸ்டைனருக்கு ஆடவே தெரியாதென்பது, அப்போதைக்கு எப்படியோ சமாளித்து உதைத்துக் காட்டி விட்டானே ஒழிய உண்மையில் அவனுக்கு ஆடவே தெரியாது. தன்னை ஏமாற்றி குழுவில் இணைந்ததை அறியும் ஓனோடி அவனைத் திட்டி வெளியேறச் சொல்லுகிறான். ஸ்டைனர் ஓனோடியின் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.

“என்னைக் கொன்று விடுவார்கள். நான் இங்கிருந்தால் சுடமாட்டார்கள். நான் உயிர் வாழ விரும்புகிறேன்”

அவனை வெளியேற்றினால் தாங்களும் வெளியேறுவதால் பலரும் முன்வரவே ஓனோடி ஸ்டைனரை இருக்கவிட்டு தீவிர பயிற்சியளிக்கிறான்.. பயிற்சியின்போது எல்லாரும் காட்டு வழியாக தப்பியோட முடிவு செய்கின்றனர். கார்பரலின் வாயை அடைத்து, கைகால்களைக் கட்டிப்போட்டுவிட்டு அவனது எந்திர துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு எல்லோரும் காட்டுக்குள் நுழைந்து ஓடிவிடுகிறார்கள்.

கார்பரல் மூலம் விஷயமறியும் ராணவும் விரைந்து தேடிச் சென்று அனைவரையும் கைது செய்கிறது. கார்பரலை தாக்கிக் கட்டிப்போட்டு, துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு தப்பியோடும் குற்றம் மாபெரும் குற்றமாகும். நாஜி ராணுவத்தில் அதற்கான குறைந்தபட்சமும் ஒரே தண்டனையும் மரண தண்டனையை நிராகரித்திருக்கலாம் அல்லது ஒத்திப் போட்டிருக்கலாம். கைதி விளையாட்டு வீரர்கள் அப்போதைக்கு தண்டனை எதுவுமின்றி பயிற்சியைத் தொடர்ந்தனர். தங்களுக்கு நெருங்கிய பிற கைதிகளில் ஓரிருவருக்கும் ரகசியமாய்த் தந்தனர்.

விளையாட்டுப் போட்டி நாள் வந்தது. மிக உயர்ந்த ராணுவ ஜெர்மன் தலைவரும் அவரது மனைவியும் மிக முக்கிய சிறப்பு விருந்தினராயும் ராணுவ வீரர்களின் குழுவுக்கும் ஹங்கேரிய யுத்தக் கைதிகள் குழுவுக்குமான கால்பந்தாட்டப்போட்டி தொடங்கிற்று. ஜெர்மன் ராணுவத்தினரும் நாஜி அதிகாரிகளும் நிறைந்திருந்த கூட்டம். மற்ற கைதிகளும் ராணுவ பாதுகாப்போடு பார்வையாளர்களாய் நிறுத்தப்பட்டிருந்தனர். சுற்றிலும் எந்திர துப்பாக்கியுடன் நிற்கும் ஜெர்மன் ராணுவ வீரர்கள். ஆட்டம் ஆரம்பமாயிற்று. முதல் அரையாட்டம். ஜெர்மன் ராணுவக் குழு முதல் கோலைப்போட்டு “ஹிட்லர் சுழி” போட்டது!

ஓடோனி தன் காலுக்குக் கிடைத்த பந்தைக்கூட சரியாக உதைக்காமல் விட்டான். நன்றாக ஆடாமல் ஹங்கேரி தோற்றால், ஜெர்மன் குழு வெற்றிபெற்றால்தான் எல்லாருக்கும் தீபாவளி. ஜெர்மன் குழு தோற்றல் ஹங்கேரி குழுவுக்கு நரகாசுரவதம்தான்.

“டியோ… டியோ….”, கைதிகள் கத்துகிறார்கள். திடீரென்று ஓடோனியின் பந்தை ஸ்டைனர் வாங்கி ஜெர்மனிய குழுவுக்குத் தண்ணி காட்டி ஒரு கோல் போடுகிறான். அடுத்தும் இறுதியுமாய் ஒரு கோல்போட்டு ஸ்டைனர் ஹங்கேரிய கைதிகள் குழுவை வெற்றிபெற்றதாக்குகிறான். இராணவுக் குழுவின் தோல்வியைத் தாங்காமல் ஜெர்மன் ராணுவ அதிகாரி கோபத்தின் உச்சத்தை தொடுகிறார். தீன மனைவியின் உற்சாகமும் எரிச்சலூட்ட எழுந்து நிற்கிார். அவரது பாராட்டை எதிர்நோக்கி ஹங்கேரிய யூதக் கைதியாட்டக்காரன் ஸ்டைனர் மேடையை நோக்கி ஓடி வருகையில் ஜெர்மன் அதிகாரி தன் கைத்துப்பாக்கியை எடுத்து அவனைச் சுட்டு வீழ்த்துகிறார். அதையே ஓர் அறிவிப்பென எடுத்துக்கொண்ட ராணுவத்தினர் மற்ற எல்லா ஹங்கேரிய கைதியாட்டக்காரர்களையும் டியோ உட்பட அனைவரையும் எந்திர துப்பதாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள். சற்று முன் எல்லாரையும் மகிழ்ச்சியிலாழ்த்தியும் இருந்த கால்பந்தாட்ட ஆடுதிடல் பிணக்குவியலும் ரத்த ஆறுமாய் மாற, கால்பந்து மட்டும் அனாதையாக மூலையில் கிடக்கிறது.

இந்த மகத்தான் ஹங்கேரிய திரைப்படம் 1961-ல் ஜோல்டான் ஃபாப்ரியின் அற்புத இயக்கத்தில் வெளிவந்தது. ஓனோடி [டியோ] பாத்திரத்தில் இம்ரெ சிங்கோவிட்ஸ் [IMRE SINKOVITS] என்பவரும் ஸ்டைனர் பாத்திரத்தில் டெஜ்ஸோ கராஸ் [DEZSO GARAS] என்பவரும் சிறப்பாக நடித்திருக்கும் “TWO HALF TIMES IN HELL” படத்தின் அரயி காமிரா கோணங்களை அமைத்திருப்பவர் ஃபெரென்ஸ் ஜெக்சென்யி [FERENC SZECSENYI] என்ற ஒளிப்பதிவாளர்..

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *