கிழக்கு ஐரோப்பிய சினிமா
போலந்து திரைப்படங்கள்-2
போலந்தின் மற்றொரு முக்கிய திரைப்படக் கலைஞர் கிறிஸ்டோஃப் கீஸ்லோவ்ஸ்கி (KRZYSZTOF KIESLOWSKI) கீஸ்லோல்ஸ்கி வார்சாவில் 1941ல் பிறந்தார். காசநோயால் அவதிப்பட்ட தந்தையை குணப்படுத்தும் பொருட்டு காசநோய் மருத்துவமனைகளைத் தேடி ஊர் ஊராக நாடோடித்தனமாய் இவரது குடும்பம் போனதில் அலய நேரிட்டிருக்கிறது. தனது 16வது வயதின்போது இவர் தீயணைக்கும் படையில் சேர்ந்து தீயணைக்கும் சேவையை முயற்சி செய்தார். சரிப்பட்டு வரவில்லையென்று நாடகத் துறையில் சில பணிகளை மேற்கொண்டு முயற்சித்துவிட்டு இறுதியாக, அன்றைக்கு போலந்தில் சிறந்த சிறந்த திரைப்படக் கல்வி ஸ்தாபனமாய் விளங்கிய லோட்ஸ் (LODZ FILM SCHOOL) திரைப்படப் பள்ளியில் சேர்ந்தார். 1960களில் தணிக்கை அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்தபடியே ஆட்சேபத்துக்குரிய ஆவணப்படங்களை செய்தவர் கீஸ்லோவ்ஸ்கி. இவரது வெற்றிகரமான முதல் படைப்பு ‘‘லெரோனிக்கின் இரட்டை வாழ்க்கை’’ (THE DOUBLE LIFE OF VERONIQUE) கீஸ்லோவ்ஸ்கி திடீரென, தான் திரைப்பட ஆக்கப்பணியிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தார். அறிவித்த குறுகிய நாட்களிலேயே தம் 54-வது வயதில் 1996ல் காலமானார்.
சென்னையில் ஃபிலிம் சொசைட்டி மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களின்போது கண்டுகளிக்க நேரிட்ட கீஸ்லோவ்ஸ்கியின் திரைப்படங்களை அவ்வளவு கறாராக காலவரிசையில் பார்க்காது சொல்லிக்கொண்டு போகலாமென நமது பயாஸ்கோப்காரன் விரும்புகிறான், அவ்விதமாகவே…
‘’கொலை செய்வது பற்றிய ஒரு குறும்படம்’’ என்ற தலைப்பில் கீஸ்லோவ்ஸ்கி 1988ல் ஒரு திரைப்படம் செய்தார். முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் இந்தப் பையன் திருடக்கூடியவன் அல்லது கொலை செய்யத் தயங்காதவன் என எண்ணக்கூடிய ஒரு கொடூர முகம் அந்த 21- வயதுப் பையன் ஜேசெக் லஜார் (JACEK LAZAR) என்பவனுக்கு. ஒரு நாள் உணவு விடுதியில் அவன் உறுதியான கயிற்றை இரு கைகளாலும் முறுக்கி ஒரு கையை மற்றொரு கையால் அந்தக் கயிற்றை இறுக்கிக் கட்டுகிறான். இச்செயலை கவனித்தபடியிருக்கும் இளம் வழக்கறிஞர் பாலிசிகி (BALICIKI) என்பவருக்கு அந்த செயல் விபரீதமும், கொடூரமுமான வன்முறைக்கான குறியீடாய்ப் படுகிறது. படத்தின் தொடக்கத்தில் இறந்த பூனையொன்று அதன் கழுத்தில் இறுகக்கட்டிய கயிற்றால் தொங்கவிடப்பட்டிருக்கும். வக்கீல் அந்த இளைஞனின் செயலை கேள்விக்குறியோடு பார்க்கிறார். பாலிசிகியின் சீனியர் வக்கீல் அறிவுறுத்தலோடு அடுத்து தமக்கு வரும் பெரிய வழக்கை அவனிடமே விட்டுவிடுவதாகவும் கூறுகிறார்.
ஜேசெக் பொதுவிடங்களில் எதைக் கேட்டாலும் சட்டென கிடைக்காதது அவனுக்குள் வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு டாக்சியை வர கூப்பிட்டால்கூட அதன் டிரைவர் அலட்சியமாக, ‘’வராது’’ என்று பதிலளிப்பது அவனுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உச்சிக்கு இட்டுச் செல்லுகிறது. ‘‘A SHORT FILM ABOUT KILLING (KROTKI FILM OZABIJANIO) (1987) கொலைக் குற்றத்தையும் அதற்கான விரைந்தளிக்கப்பட்டு உடனே நிறைவேற்றப்படும் மரண தண்டனையையும் கீஸ்லோவ்ஸ்கி ரொம்பவும் சரியாகவே படத்துக்கு தலைப்பாக ‘’கொல்லுவதைப் பற்றிய ஒரு குறும்படம்’’ என்று தலைப்பிட்டிருக்கிறார். ஒரு மிக மோசமான முறையில் அப்பாவி டாக்சியோட்டி ஒருவன் கொலை செய்யப்படுவதையடுத்து விரைவில் பிடிபடும் கொலையாளி மரணதண்டனையளிக்கப்பட்டு மற்றொரு வழியில் மோசமாக கொல்லப்படுவது திரைப்படம்.
டாக்சியோட்டி நடுத்தர வயதிலான வால்டெமன் ரெகோஸ்கி (WALDEMAN REKOWSKY) தனது பணியை முடித்தவனாக வீட்டுக்குப் போகும் வேளையில் ஜேசெக் சவாரி ஏறுகிறான். இவன்தான் அன்று வர மறுத்த டாக்சியோட்டி. ஓரிடத்தைக் குறிப்பிட்டு விடச் சொல்லும் அவன் வேறொரு வழியில் திருப்பியோட்டச் சொல்லுகிறான். ஆளரவமற்ற சேரும் சகதியுமிக்க ஏரிக் கரையில் வண்டி போய்க்கொண்டிருக்கையில் ஜெசெக், தான் வைத்திருக்கும் கயிற்றால் வால்டெமன் கழுத்தை இறுக்கி 95 சதம் கொன்று, உடலையிழுத்து ஏரிக்கு ஒதுக்கி, மீதம் ஐந்து சதம் உயிர்த் துடிப்பில் இறுதியாக தன்னைவிட்டு விடும்படி வால்டெமன் கெஞ்சுகிறான். அவன் முகத்தை கம்பளித் துண்டால் மூடி பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு அடித்துக் கொன்று தன் கொலையை முழுமையாக்குகிறான் இளைஞன். ரத்தம் தோய்ந்த முழு பல்செட் சேற்றில் மழைத் தூறலில் கிடப்பதை ஸ்லாவோமிர் இட்ஸியாக்கின் (SLAWOMIR IDZIAK) கேமரா நம்மை கலங்க வைக்கிறது.
அடுத்த காட்சியில் அவன் பிடிபட்டு விசாரணையின்போது அவன் தரப்பில் பாலிசிகி ஆஜராகி, கொலையாளியின் இளம் வயதை குறிப்பிட்டு, கொலைக்கு கொலை தண்டனை என்பதை எதிர்த்து வாதாடுகிறான், எனினும் அவனது வாதம் ஜுரர்களிடம் எடுபடாமல், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவனை இறுதியாக பாலிசிகி சிறையில் சந்தித்து அவனது இறுதி வார்த்தைகளைக் கேட்கிறான்.
தன் பன்னிரண்டு வயது தங்கை மேரிசியா மீது MARYCIA தான் மிகவும் பாசம் கொண்டிருந்ததாகவும், தன் நண்பனும் டிராக்டர் ஓட்டியுமான ஒருவன்- அவள் மேல் டிராக்டரை ஏற்றி நசுக்கிக் கொன்றதையும் கூறி, தன் மனம் மிகவும் நாசமாகிவிட்டதாக சொல்லும் ஜேசெக் கடைசியாக வக்கீலிடம் ஒரு வேண்டுகோளை உருக்கமாய் வைக்கிறான். தான் இறந்ததும் தன் உடலை தன் சகோதரியின் சவக்குழிக்கு பக்கத்தில் வைத்துப் புதைத்துவிட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறான் பத்து நிமிடங்களில் அவன் கதையை முடித்துவிடுகிறது தூக்குக் கயிறு.
ஜேசெக்காக நடிக்கும் மிரோஸ்லா பகா (MIROSLAW BAKA) நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார். கிறிஸ்டோவ் குளோபிஸ் (KRZYSZTOF GLOBISZ) டாக்சியோட்டியாகவும் ஜான் டெஸார்ஸ் (JAN TESARZ) இளம் வழக்கறிஞராகவும் கச்சிதமாய் செய்திருக்கிறார்கள்.
கீஸ்லோவ்ஸ்கி 1988ல் ‘‘THE DECALOGUE’’ என்று (DEKALOG, JEDEN) பத்து சிறுகதைகளை பத்து குறும்படங்கள் கொண்ட ஓர் அரிய தொகுப்புப் படத்தை செய்தார். கீஸ்லோவ்ஸ்கி அரசியல், நகைச்சுவை, மதம், சோகம், தத்துவம் என்று கலந்ததாகத் திரைப்படங்கள் செய்தவர். இவரது மொத்த படைப்புகளில் மிகச் சிறப்பு மிக்கதாய் “தி டெகலோக்” கருதப்படுகிறது. DECALOGUE என்றால் கிறித்தவத்தின் பழைய ஏற்பாட்டில் வருகின்ற மோசஸ் இறைவனிடம் பெற்ற பத்து கட்டளைகள் என்று கொள்ளப்படுகிறது. போலிஷ் தொலைக்காட்சிக்காக முதலில் தயாரிக்கப்பட்ட பத்து மணி நேரம் ஓடும் பத்து குறும்படங்களாகும் பத்து கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் மோசஸின் பத்து கட்டளைகளில் ஒவ்வொன்றையும் தழுவியதாய் அமையப் பெற்ற திரைப்படங்கள். பத்து திரைப்படங்களும் போலந்தின் தலைநகர் வார்சாவில் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே இடம் பெறுவதாய் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு திரைப்படமும் தொடங்குகையில் பின்னணியில் பனிமூட்டத்தினூடே தெரிவதுபோல இந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள் தெரியும். ஒவ்வொரு கதையும் திரைப்படமும் அங்குள்ள ஒரு குடியிருப்பில் நடப்பதாயிருக்கும். கீஸ்லோவ்ஸ்கியின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் அந்நாளின் போலந்தின் அரசியல் சூழலை நக்கல். நகைச்சுவை கலந்ததாய் எடுக்கப்பட்டவை. ஆனால் டெகலோக் திரைப்படங்கள் விரிவான களத்துடனும் மிக்க சர்வதேசத் தன்மை கொண்டதாயிருக்கும். இந்த தொகுப்பிலுள்ள திரைப்படங்கள் விதி, சந்தர்ப்பவசம் மற்றும் நம்பிக்கை போன்றவற்றின் கருத்தியலை எதிர்கொண்டு விடையளிக்கும் விதமாய் அமைந்தவை. அதைச் சொல்ல கீஸ்லோவ்ஸ்கி குழந்தைகள், பெற்றோர்கள், வாரிசுகள், அந்நிய உறவினர் போன்ற வெவ்வேறு வாழ்க்கை வழியே பார்க்கிறார். நம்மைப் பிணைக்கும் கண்ணுக்குப் புலப்படாத பாசக்கயிறு மூலமாய் இணைக்கிறார். மனிதனின் மேலான சக்தியின்பால் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தப் படங்கள் மூலம் தொடுகிறார்.
பத்து படங்களுக்கும் ஓர் இரண்டு படங்களையே பதமாக எடுத்துக்கொண்டு இங்கே விவரிக்கலாம். ஒவ்வொரு கதைக்கும் தலைப்பு என்று தராமல், ஒன்று, இரண்டு என்றே தந்திருக்கிறார் இயக்குனரும் திரைக்கதையாசிரியருமான கீஸ்லோவ்ஸ்கி. முதல் திரைப்படத்தில் ஒரு சிறுவனையும் அவன் தந்தையையும் நாம் சந்திக்கிறோம். சிறுவன் பேவஸ் (PAVEL) சந்தேகஙகளை வைத்துக் கொண்டு அவ்வப்போது அப்பாவை கேள்விகள் கேட்டுக் கொண்டே விளையாட ஓடிவிடுபவன்.
ஒரு முறை கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியையும் மரணம் என்றால் என்ன என்ற கேள்விகளை பேவல் (PAVEL) சந்தேகங்களை வைத்துக் கொண்டு அவ்வப்போது அப்பாவை கேள்விகள் கேட்டுக்கொண்டே விளையாட ஓடிவிடுபவன். ஒரு முறை கடவுள் என்றால் என்ன என்ற கேள்விகளை பேவல் கேட்பது அவனுடைய அப்பனோடு நம்மையும் சேர்த்தே தடுமாற விடுகிறது. ஆனால் கீஸ்லோவ்ஸ்கியின் சாமர்த்தியம், அந்தச் சிறுவனின் கேள்வி கேட்கும் நடிப்பு அணுவளவும் நடிப்பாகத் தோன்றாது மிக்க இயல்பாகவே இருக்கிறது. ஒரு வெட்டுக்கிளியைப் பார்த்து, இது என்ன என்று கேட்குமளவுக்கே இருக்கிறது, கடவுள்னா என்னப்பா எனும் கேள்வி. பையன் அறிவியல் யுகத்து கம்ப்யூட்டர், அதில் பதிவு செய்வது, நீக்குவது, அதிலுள்ள தகவல் தரவுகளை பிசகின்றி இறக்குவது போன்ற விஷயங்களைக் கையாள்வதில் தகப்பனுக்கு ஆசானாக இருக்கிறான். பேவலை அடிக்கடி கூப்பிட்டு கம்ப்யூட்டரில் பதிவிட, சில தரவுகளை இறக்கித் தர தகப்பன் உதவி நாடும் காட்சிகள் அடுத்தடுத்து வருகையில், தந்தை தன் சின்ன வயது மகனை எவ்வளவுக்கு அண்டி வாழவேண்டிய தருணங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது மனைவி பையனுக்கு அம்மா வெளியூரில் வேலையிலிருப்பவள். தொலைபேசியழைப்புகள் வாயிலாகவே அவளுக்கு இருக்கும் குடும்ப பிணைப்பை இயக்குனர் நமக்கு உணர்த்தி விடுகிறார். பேவெல் மிகவும் ஆசைப்படும் பனிச்சறுக்கு விளையாட்டுக்கான பாதங்களில் அணியும் சாதனத்தை தந்தை வாங்கித் தருகிறார். அப்போதுகூட இந்தக் குறும்படத்தின் முடிவு இதனாலும் ஏற்படப்போகிறது என்ற எவ்வித அனுமானமும் கொள்ளாத வகையில் அவ்வளவு இயல்பாக இருக்கிறது இந்த நிகழ்வு. எனவே நமக்கு முடிவைப் பற்றிய எவ்வித எதிர்பார்ப்புக்கும் கீஸ்லோவ்ஸ்கி இடமே தருவதில்லை. பையன் தன் புதிய பனிச்சறுக்காட்டலுக்கான காலணியை அணிந்து தன் சினேகிதனோடு பனியாக உறைந்து கிடக்கும் நீர்நிலை மீது சறுக்கியோடி விளையாட போய்விடுகிறான். காலையிலிருந்தே தொலைக்காட்சியில் தொடர்ந்து அறிவிக்கப்படும் எச்சரிக்கை செய்தியை யாரும் தீவிரமாய் எடுத்துக் கொள்வதில்லை.
மேற் பகுதி பனிக்கட்டியாய் உறைந்த பரந்த நீர் நிலையில் திடீரென பனிப்பாளத்தில் உடைசல் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் உறைந்த ஏரிமேல் போக வேண்டாமென எச்சரிக்கை அறிவிப்பு வந்து வந்து போகிறது. ஓரிடத்தில் ஏற்பட்ட பனிப்பாள உடைப்பில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் உள்ளே விழுந்து இழுக்கப்பட்டு விடுகின்றன. அவர்களில் பேவலும் ஒருவன். போலீஸ் வெகுநேரம், இரவு முழுக்கவும்கூட தண்ணீருக்குள் தேடிப்பார்க்கிறது. ஓரிரு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்படுகின்றன. பேவலின் உடல் கடைசிவரை கிடைப்பதேயில்லை. அவனோடு விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து குடியிருப்புச் சிறுமி தப்பித்துவிட்டாலும் அதிர்ச்சியால் எதையும் வெளியிட முடியாது பேதலித்து காணப்படுகிறது. மிகவும் வற்புறுத்தி கேட்கவும் பயந்துகொண்டே பேவல் பணியுடைப்பில் உள்ளே மூழ்கியதைக் கண்டதாய் கூறுகிறது. இந்தத் திரைப்படம் டெகலோக் குறும்படங்களிலேயே சிகரமான ஒன்று.
இரண்டாவது குறும்படம் மேலும் சிக்கலான கதையம்சத்தைக் கொண்டது. ஒரு சிறுகதை தன்னளவில் ஒரு நாவலாக விரிவு கொள்ளக்கூடிய உள்ளடக்கத்தை கொண்டிருப்பது போன்ற சாத்தியக்கூறை, இந்த இரண்டாவது குறும்படம் ஒரு பெரரிய கதைத் திரைப்படமாக மிக எளிதில் கொண்டுபோகக்கூடிய வகையைத் தன் கதையாடலில் கொண்டது.
அதே பலமாடிக் குடியிருப்பு கட்டிடப் பின்னணியில் காலை நேரத்தைச் சொல்ல, தினசரி குப்பை சேகரிக்கும் வண்டியின் வருகை. மேல்மாடிகளில் ஒன்றிலிருந்து கீழே வீசியெறியப்பட்ட முயல் ஒன்றை எடுத்துக்கொண்டு குப்பை சேகரிப்பவன் அந்த குடியிருப்பிலுள்ள முதிய டாக்டர் ஒருவரிடம் காட்டி அது அவருடையதாவென கேட்க… அவர் இல்லை என்கிறார். தொடர்ந்து நமது கவனம் டாக்டர் மீது குவிகிறது. அவரது சமையற்காரம்மாள் பார்பாரா, அவருக்கு சிற்றுண்டி வைத்துவிட்டு அதே மேஜையிலமர்ந்து தானும் சாப்பிடுகிறாள். டாக்டர் தம் வேலைக்காரிக்கு சம அந்தஸ்து வழங்கியுள்ள பரந்த மனப்பான்மையை நாம் உணர்கிறோம். டாக்டர் சொந்தமாய் ஒரு மருத்துவமனையை வைத்திருப்பவர். அதே குடியிருப்புகளில் ஒன்றிலிருக்கும் டோரட்டாகெல்லர் (DORATTA GELLER) என்பவள் அவர் வீட்டுக்கு வந்து அவரைச் சந்திக்கிறாள். யாரையும் உள்ளே அனுமதிக்க விரும்பாத டாக்டர் அவளது சந்திப்பை வாசலோடு நிறுத்துகிறார். அவரிடம் ஒரு ‘அப்பாய்ண்ட்மெண்ட்’ வாங்க முயற்சிக்கிறாள். தனக்கு அவகாசமில்லை என்று கூறியதோடு, உன்னை ஞாபகமிருக்கு என்று கடுப்பாக சொல்கிறார் டாக்டர். அவர் கதவை மூடுமுன் அவள் கூறுகிறாள்.
‘என் கணவன் ஆண்ட்ரெஸ் உங்களிடம் சிகிச்சை பெறுகிறான், நான் உங்களோடு பேச வேணடும்.
‘’எனக்கு சொல்ல முடியாது’’
‘‘நாயிக்கு பதில் உன் மீது காரையேற்றியிருக்க வேண்டும்’’ என கூறிவிட்டு டோரட்டா திரும்புகிறாள்.
டாக்டர் தம் வீட்டிலிருந்து நடந்தே சென்று தன் மருத்துவமனையை அடைவார், நடப்பது அவருக்குப் பிடித்தமானது, அவர் நடக்கையில் டோரட்டா காரை ஓட்டியபடி அவரைப் பின்தொடருகிறாள். காரை நிறுத்தி ஏறிக்கொள்ளச் சொல்லுகிறாள். நடப்பதையே, தான் விரும்புவதாகக் கூறிவிட்டு போகிறார் டாக்டர். விடாமல் டோரட்டா காரில் பின்தொடரவும் அவளைத் தவிர்க்க, அவர் கூட்டத்தில் கலந்து, பாதையைக் கடந்து தன் மருத்துவமனையை அடைகிறார். அவளது கணவன் ஆண்ட்ரெஜ் (ANDREZ) மோசமான விபத்தில் அடிபட்டு அவரது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவன் ‘‘LIFE SUPPORT’’ல் இணைக்கப்பட்டு ஆபத்தான நிலையிலிருக்கிறான். ‘‘வரவேற்பு’’ பெண்ணும் மற்றவர்களும் விதித்த தடைகளையும் மீறி டோரட்டா டாக்டரின் அறைக்குள் பிரவேசிக்கிறாள். அவள் வருகையை விரும்பாதவராக டாக்டர் பார்க்கிறார்.
‘‘ஆண்ட்ரெஜின் நிலைமை எப்படியிருக்கு?’’
‘‘எதுவும் சொல்ல முடியாது?’’
‘‘உங்களால் சொல்ல முடியும். உண்மையைச் சொல்லுங்கள், டாக்டர்’’
‘‘எப்படி வேணுமானாலும் முடியலாம்!’’
‘‘ரொம்ப ரொம்ப கம்மிதான். முடிஞ்சவரை முயற்சிபண்ணி பாக்கறோம்.’’
‘‘அவன் செத்துப் போறதை நான் விரும்பறேன். என்னைப் பற்றி உங்ககிட்டே சொல்லியாகணும். எனக்கொரு காதலன் உண்டு. ஆண்ட்ரெஜ்ஜால எனக்கு குழந்தைய தரவே முடியாதுனு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கு. எனக்கு இப்போ மூணு மாசம் கர்ப்பம். எனக்கு இந்தக் குழந்தை வேணும்.’’ என்கிறான் டோரட்டா.
டாக்டர் புரிந்துகொண்டவராய் அவளை உற்றுப் பார்க்கிறார்.
ஆனால் விதியென்பதை இந்தப் படத்தில் வைக்கிறார் கீஸ்லோவ்ஸ்கி. விதி வேறுவிதமாய் திசை திருப்புவதாய் படத்தை முடிக்கிறார், ஆண்ட்ரெஜ் பிழைத்து விடுகிறான். படத்தின் அதியற்புத ஒளிப் பதிவை கேமரா கலைஞர் எட்வர்டு கிளாசின்ஸ்கி (EDVARD KLASINSKY)புரிந்திருக்கிறார்.
ஒரு குறும்படம் இரு சகோதரர்களைப் பற்றியது. இருவரும் காலஞ்சென்ற தங்கள் தந்தையின் நினைவைக் கொண்டாட முடிவு செய்கின்றனர். அவர்களின் தந்தை புகழ்பெற்ற தபால் தலை சேகரிப்பாளர். ஏராளமான மிக மிக அரிய சர்வதேச தபால்தலைகளை சேகரித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவற்றையெல்லாம் சீர்படுத்தி பட்டியலிட்டு தக்கமுறையில் பாதுகாத்து பொதுப் பார்வைக்கு காட்சிப்படுத்துவதன் மூலம் தந்தையின் ஆசையை நிறைவு செய்வதாக எண்ணி காரியத்தில் இறங்குகிறார்கள். அரிய படம் இது.
ஒவ்வொரு குறும்படமும் ஏதாவதொரு புள்ளியில் மோசஸ் பெற்ற பத்து கட்டளைகளின் மையத்தில் குவிந்ததுபோல சொல்லப்பட்டாலும் பத்து கட்டளைகளை அறிந்தவர்களுக்கே சரிவர விளங்கிக் கொள்ளுவது கடினமாகவே இருக்கிறது. கீஸ்லோவ்ஸ்கியின் முக்கிய கவனமே பண்டைய பத்து கட்டளைகள் நவீன காலத்தில் எந்தளவுக்கு வாழ்க்கை நிகழ்வுகளில் இடம் அமர்கிறது என்பதுதான். இந்த பத்து குறும்படங்களிலும் ஒரே நடிக, நடிகையர்களும் வெவ்வேறு கேமரா ஒளிப்பதிவாளர்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
1984-ல் கீஸ்லோவ்ஸ்கி ‘‘முடிவேயில்லை’’ (NO END) (BEZ KONCA) என்ற திரைப்படத்தை செய்து அதிர்ச்சியளித்தார் என்றே சொல்லலாம். கீஸ்லோவ்ஸ்கியின் திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் எல்லாவற்றிலும் மிகவும் அரசியல் ரீதியான படம் என்று இந்தப் படம் குறித்து சிகாகோ ரீடரில் (CHICAGO READER) விமர்சகர் ஜொனாதன் ரோசென்பாம் (JONATHAN ROSENBAUM) குறிப்பிடுகிறார். அவர் பின்னர் 93களில் செய்த BLUE, WHITE, RED என்ற முப்படங்களில் ஒன்றான BLUE படத்துக்கு ஒரு முன்னோடியாகவும் NO END கருதப்படுகிறது.
தனது கணவனின் எதிர்பாராத திடீர் மரணம் ஒரு பெண்ணை அவனது பாதியில் நின்ற பணியை -கடமையைத் தொடரவும் செய்கிறது படம். BLUE – ஒரு பெண்ணின் உளவியல் ரீதியான நிலைப்பாட்டைக்கொண்டு நீள்கிறது என்றால், NO END தனிமனித உளவியலுக்கும் அரசியல் ரீதியான ஒட்டுமொத்த நிறுவனங்களுக்கான நிலைபாட்டுக்குமுள்ள தொடர்பை கீஸ்லோவ்ஸ்கியின் NO END முழுமையாக விவரிக்கிறது. 1980-களில் ஏற்பட்ட போலந்தின் துறைமுகப்புரட்சியான SOLIDARITY முதலாக தொழிலாளர் பிரச்சினைகளினூடே ஒரு பெண்ணின் பெரிய இழப்பானது தொடர்ந்த உரையாடலாக அமைகிறது.
ஆன்டென் (ANTEK) போலந்தில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்ட இறுக்கமான சூழலில், அரசியல் ரீதியான வழக்குகளை தைரியமாக ஏற்றுக்கொண்டு வழக்காட முன்வந்த வழக்கறிஞர்களில் ஒருவன் எதிர்பாராத விதமாய் காரில் செல்லுகையில் ஆன்டெக் மாரடைப்பால் மரணமடைகிறான். ஆண்டெக்கின் மரணத்திலிருந்துதான் படம் தொடங்குகிறது. அவனது வாக்கு மூலமாய் விவரிக்கப்படுகிறது.
‘‘நான் செத்துப்போய் விட்டேன்’’ – என்ற வரிகளை அவனது அடங்கிய மெல்லிய குரலை நாம் கேட்கிறோம். அவனது உருவம் அவனது மனைவி உல்லா (ULLA), பையன் ஜேசெக் (JACEK) ஆகியோருக்கு நெருக்கமாக அவர்கள் அறியாத நிலையில் நகருகிறது. ஆண்டெக் மிகவும் அனுபவமுள்ள- வயதான – மூத்த வழக்கறிஞர் லாப்ரடோர் (LABRADOR) என்பவரிடம் ஜூனியராக இருந்தவன், தொழிலாளர்களின் தலைவன் ஸைரோ (ZYRO) என்பவன் தொடங்கிய பிரமாண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இளம் தலைவன் டேரெக் (DAREK) என்பவன் கைதாகி சிறையிலிருக்கிறான், அவனுக்காக ஆண்டெக் ஆஜராகி வழக்கை வாதாடி வந்த சமயம்தான் எதிர்பாராவிதமாய் இறந்துவிடுகிறான். தன் கணவனின் கடமையை நிறைவேற்றும் வேகத்தோடு உல்லா அரசியல் கைதி டேரெக்கின் மனைவியை சந்திக்கிறாள். வேறொரு வக்கீலை நியமித்து டே ரெக்கின் சார்பில் ஆஜராகி வழக்கை தொடர்ந்து நடத்த முயற்சிக்கிறாள். லாப்ரடோரையே அணுகி வழக்காட கேட்கிறாள். இந்தப் படத்தில் விளங்காத புதிரை படம் முழுக்க இழையவிடுகிறார் கீஸ்லோவ்ஸ்கி. இறந்தவன் தன் மனைவியையே தொடர்ந்து வருகிறான். அவனால் பேசமுடியாது. உல்லாவோ, ஜேசெக்கோ ஆண்டெக்கைப் பார்க்க முடியாது. ஆண்டெக்கால் எல்லாரையும் பார்க்க முடிந்தாலும் பேசமுடியாது.
தான் விட்டுவிட்டுப் போன டேரெக்கின் வழக்கை லாப்ரடோரிடம் கொடுத்து தொடரச் செய்வதை ஆன்டெக் விரும்புவதில்லை. இது விஷயமாய் உல்லா வக்கீல்கள் பட்டியலை பார்க்கையில் அது இடம் மாறியிருப்பதோடு அதிலுள்ள நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களின் பெயர்களில் லாப்ரடோரின் பெயருமிருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு பக்கத்தில் சிவப்பு மையால் ‘‘வேண்டாம்’’ என்பதற்கான குறியீடு இடப்பட்டுள்ளது. உல்லா தன் மகன் ஜேசெக்கை கேட்கிறாள். ‘‘இந்த லிஸ்ட்டை எடுத்துப் படிச்சி, ரெட் கலர்ல மார்க் பண்ணினியா?’’ என்று, பையன். தான் செய்யவில்லை என்று சொல்லுகிறான். பின் யார் செய்திருப்பார்கள் என்ற யோசனையோடு குழம்பினாலும் லாப்ரடோரையே வழக்கைத் தொடரும்படி கேட்டுக்கொள்ளுகிறாள். சிறையிலுள்ள டோரெக்கின் இளம் மனைவி உல்லாவை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுகிறாள்.
ஆண்டெக்கின் ஆவி என்பதா, எப்படியென்று எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் மெளனமாய் தன் குடும்பத்துக்கு கவசம் போன்ற நிழல்போல் உடனிருந்து அசைகிறான். சில கட்டளைகளை தன் மனைவி உல்லாவுக்கு எழுத்து மூலமும் தெரியப்படுத்துகிறான். இறந்த தன் கணவனின் மேலாதிக்க மேலாண்மை தன்பால் கூடுதலாக கவிந்திருப்பதால் தன் உணர்வுகள் பாதிக்கப்பட்டு செயல்பாடுகளிலும் குறுக்கிடுவதிலிருந்து விடுபட விரும்பும் உல்லா, மனநிலை நிபுணரை நாடுகிறாள். அவரளிக்கும் மனப்பயிற்சியும் ஹிப்னாடிஸ பிரயோகமும் அவளுக்கு உதவுவதில்லை பாலியல் ரீதியாக தன் ஆண் கவனக்குவிப்பை திசை திருப்பும் முயற்சியாக வேறொரு ஆண் தொடர்பின் மூலம் உடலுறவு கொண்டு பார்க்கிறாள். அந்த தருணத்திலும் கணவனின் ஆவி தூர இருந்து கவனிக்கிறது – அவ்வாறு எடுத்துக்கொள்ளும் உல்லா அவஸ்தைப்படுகிறாள். அவளால் உடலுறவு சுகத்தை மாற்்றானிடம் பரிபூரணமாய் அடைய முடியவில்லை. ஒரு முறை சுய இன்பம் துய்ப்பதிலும் ஈடுபடுகையில் மகன் வந்து விடுகிறான்.
வக்கீல் வாதத்தில் வென்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன் நின்று கைதான தொழிலாளர் தலைவன் விடுதலையாவதோடு, தன் கணவனின் முற்றுப்பெறாது நின்ற வழக்கை வெற்றிகரமாய் முடித்து வைத்த திருப்தியுடன் உல்லா ஒரு தீர்மானத்திற்கு வருகிறாள். மகன் ஜேசெக்கை அவன் அதிக அன்பும் நெருக்கமும் கொண்டுள்ள அவனது பாட்டியிடம் கொண்டுபோய் விட்டுவிட்டு, வீடு திரும்புகிறாள். ஜன்னல்களை மூடுகிறாள். இடுக்குகளை அடைக்கிறாள். தொலைபேசி கருவியின் இணைப்பு ஒயரை துண்டிக்கிறாள். அகன்ற பிளாஸ்டரை கத்தரித்து தன் வாயை மூடி திறக்கமுடியாதபடிக்கு செய்துகொண்டு சமையல் எரிவாயுவை திறந்து அடுப்பின் நாலு பர்னர்களி்ன் திறப்பான்களையும் திறந்த நிலையில் வைக்கிறாள். எரிவாயு வெளியேறும்படி செய்துவிட்டு ஓரிடத்தில் உட்காருகிறாள் உல்லா. எரிவாயு அறையெங்கும் பரவுகிறது. அடுத்த காட்சியில் உல்லாவும் அவள் கணவன் ஆண்டெக்கும் தங்கள் முதுகை நமக்குக் காட்டியவடி ஆளற்ற மரங்களடர்ந்த ரம்மயமான பகுதியில் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த சோக மயமான படத்தில் படம் முழுக்க வரும் உல்லா பாத்திரம் அற்புதம். அதை ஏற்று நடித்திருக்கும் போலந்தின் அனுபவமிக்க நடிகை கிரேஸினா ஸபலோவ்ஸ்கா (GRAZYNA SZAPOLOWSKA) அருமையாகச் செய்திருக்கிறார். படத்தின் அற்புத ஒளிப்பதிவை ஜேசெக் பெட்ரிகியின் (JACEK PETRYCKI) கேமரா புரிந்துள்ளது.
கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று திரைப்படங்கள் ஒரே வரிசையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து மிகவும் பரவலாகப் பேசப்பட்டன. அவை நீலம், வெண்மை மற்றும் சிவப்பு என்ற தலைப்பிலானவை. இவை ‘‘மூவண்ணங்கள்’’ (THREE COLOURS, TRO IS COULEURS) என்று மூன்று வெவ்வேறு முழு திரைப்படங்கள்.
இவைகீஸ்லோவ்ஸ்கியின் இறுதியான திரைப்படங்கள், இப்படங்கள் மூன்றும் ஃபிரெஞ்சு தேசிய கொடியின் (ஃபிரான்ஸின் கொடி) மூவண்ணங்களான நீலம், வெள்ளை, சிவப்பு நிறங்களின் குறியீட்டுப் பொருளை மூன்று கதைகளிலும் ஊடாட்டமாய்க் கொண்டவை. ஃபிெரஞ்சு கொடியின் வண்ண அமைப்பு, ஃபிரெஞ்சு புரட்சியின் மூன்று கொள்கைகளான சுதந்திரம் (LIBERTY – BLUE), சமத்துவம் EQUALITY -WHITE) மற்றும் சகோதரத்துவம் (FRATERNITY- RED) என்பதலானது. இதையே இம்மூன்று படங்களின் கதைகளிலும் ஊடோட்டமாய் பார்க்க முடிகிறது.
இம்மூன்றில் நீலம் (BLUE/BLEU – 1913) பிரான்ஸின் கொடியிலுள்ள மேல் பக்கத்து முதல் வண்ணம். மத்தியிலுள்ளது வெள்ளை (White / Blank-1994.) கீழேயுள்ளது சிவப்பு (RED/ ROUGE- 1994). கீஸ்லோவ்ஸ்கியின் மூவண்ணங்கள் – பட வரிசையில் முதல் திரைப்படம் BLUE 1993ல் வெளிவந்தது. ஜூலி (JULIE) ஒரு விதவை. கணவனோடு ஒரே மகள் அன்னாவையும் (ANNA) ஒரு பயங்கர கார் விபத்தில் பறிகொடுத்த ஜூலி மாத்திரம் உயிர் தப்பிவிடுகிறாள். இந்த விபத்து படத்தின் ஆரம்பக் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கணவன் பாட்ரிஸ் (PATRIECE), மனைவி ஜூலி, மகள் அன்னாவுடன் காரை வேகமாய் ஓட்டிக்கொண்டிருக்கிறான். சிறுமி அன்னா லாலிபாப் ஒன்றைப் பிரித்து சாப்பிட்டுவிட்டு ஒரு புறம் நீலமும் மறுபுறம் வெளளியாயுமுள்ள லாலிபாப்பைச் சுற்றிய காகிதத்தை கார் ஜன்னல் வழியே வீசுவதும் இந்தக் காட்சியில் ஏதோ முக்கியமானதொன்றாக இடம் பெறுகிறது. தன் காரியத்தில் கவனமாயிருந்த இளைஞன் ஒருவன் கார் மோதிய பெருத்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, மரத்தில் மோதி புகை சூழ்ந்த காரைக்கண்டு ஓடுகிறான். பாட்ரிஸ்ஸும் அன்னாவும் அதே இடத்தில் மரணமடைந்திருக்கிறார்கள். ஜூலி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மீண்டெழுகிறாள்.
பாட்ரிஸ் புகழ்பெற்ற இசைக் கலைஞன். ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கும் விதத்தில் தயாரிப்பிலிருந்த ஒரு மகத்தான இசைக் கோர்வை கச்சேரிக்கான இசைக் கோர்வையை பாட்ரிஸ் உருவாக்கி வந்த சமயம்தான் விபத்தில் காலமாகிறான். அவனுடைய இசைக்கோர்வைகளின் சங்கேத குறியீட்டு குறிப்பு வரிகளை ஜுலிதான் எழுதி வந்தவள். ஆனால் இது வெளியில் தெரியாது. ஒரு நாள் குடும்ப நண்பனும் பாட்ரிஸ்ஸின் இசைக்கோர்வையில் உதவியாளனுமான ஒலிவியர் (OLIVIER) ஜூலியை கேட்கிறான்.
‘‘உன் கணவனின் இசைக்கோர்வைகளை நீதான் எழுதிவந்தாய் என்பது உண்மையா?’’
‘‘ஆம்,’’ என்கிறாள் ஜூலி. அவளிடமிருந்து அவற்றை ஒலிவியர் வாங்கிச் சொல்லுகிறான். ஜூலிக்கும் ஒலிவியருக்கும் உடல் ரீதியான உறவும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் ஜூலி, பாட்ரிஸ்- அன்னா மரணத்துக்குப்பின் புதிய வார்ப்பாக மாறித் தோன்றுகிறாள். அந்த அதிர்ச்சிமிக்க மரணத்தோடான ஜூலியின் எதிர்வினை மிகவும் வித்தியாசமானதாகிறது. உலகியில் லெளகீக காரியங்கள், நடப்புகளிலிருந்து அவள் ஒதுங்கி, எல்லாவற்றிலிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுகிறாள். தனது கணவனின் பணம் அனைத்தையும் தனது கணக்கிலிருந்து தனியாக்கி அவன் கணக்கை ஒரு டிரஸ்ட் மாதிரி செய்ய குடும்ப வக்கீலிடம் எழுதித் தருகிறாள். அந்த வீட்டையும் விற்று அந்தத் தொகையையும் அதோடு சேர்க்க உயில் தயாரிக்கிறாள். வக்கீல் அவசரப்பட்டு எதையும் செய்யாமல் பொறுமை காக்கிறார். அவள் சொந்தக் கணக்கிலுள்ள பணமே்
அவளுக்கு போதும்.
தனக்கான பெட்டியொன்றையும் பெரிய பையையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு கேட்கிறாள். ஒண்டிப்பெண்ணுக்கு வீடு தருவதில் வீட்டு உரிமையாளரான பெண்மணி தயக்கம் காட்டுகிறாள். அவள் குடிபோன குடியிருப்பில் நீச்சற் குளமுண்டு. இரவு நேரத்தில் தவறாமல் ஜூலி நீச்சலடிப்பாள். ஒரு நாள் வீட்டுக்காரி கடிதமொன்றை எழுதி எல்லா குடித்தனக்காரர்களிடமிருந்தும் கையெழுத்து வாங்குகிறாள்.
‘‘எதுக்கு?’’, என்று கேட்கிறாள் ஜூலி.
‘‘தெரியாத்தனமா ஒண்டிப்பொண்ணு ஒருத்திய கீழ் வீட்ல குடி வச்சிட்டேன். பிரச்சினைக்காரி. அவ தேவ்டியா. அவள வெளியேத்தணும்னா, மத்த எல்லா வீட்டுக்காரங்களும் கையெழுத்து போடணும். ஒருத்தர் போடல்லேனாலும் கோர்ட்ல செல்லாது’’ என்கிறாள் வீட்டுக்காரி.
‘‘எனக்கு அது பிரச்சினையில்லே. எனக்கு அவளோட பொழப்புக்கும் சம்பந்தமேயில்லே. நா போடமாட்டேன்’’ என்று கூறி மறுத்துவிடுகிறாள். அந்த இளம் பெண் நீச்சல் குளத்தில் சந்திக்கிறாள்.
‘‘என் பெயர் லூயில். நீ கையெழுத்துப் போடாததாலே நா வெளியேற வேண்டியதில்லே.’’உனக்கு ரொம்ப நன்றி. என்றாள் அந்த லூஸில் (LUCILLE) ஜூலியிடம்.
ஜூலி தன் கணவனின் சிறப்புக் கச்சேரிக்கென தயாரிக்கப்பட்டு பாதியில் நிற்கும் இசை கோர்வையை ஒலிவியரைக்கொண்டு முடித்துவிடுவதில் பேரார்வம் காட்டுகிறாள். ‘‘ஜூலி டி கூர்ஸி’’ (JULIE de COURCY) என்றிருக்கும் தன் பெயரை, கணவன் இறந்த பிறகு இப்போது ‘‘ஜூலி விக்னன்’’ (JULIE VIGNON) என்று திருமணத்துக்கு முன்னிருந்த பெயராக மாற்றிக்கொள்ளுகிறாள். இந்த சமயத்தில் ஜூலி ஓர் இளம் பெண் வழக்கறிஞரை சந்திக்க நேர்கிறது. அவளுக்கும் தன் கணவன் பாட்ரிஸுக்கும் நட்பு இருந்ததாk அறிந்தவளாதலால் அவளை நீதிமன்ற வளாகத்தில்போய் சந்திக்கிறாள். அவள் இப்போது மற்றொரு உண்மையையும் வெளியிடுகிறாள். ஜூலியின் கணவன் பாட்ரிஸுக்கும், இந்தப் பெண் வக்கீலுக்கும் உடலுறவு இருந்து வந்திருக்கிறது. இவள் அவனது குழந்தையை மூன்றுமாதமாக தன் வயிற்றில் வளரவிட்டிருக்கிறாள். இந்த உண்மை கசபபான உணர்வை தராவிட்டாலும் தன் கணவன் மீதிருந்த இறுக்கமான பிடி நழுவுகிறது. உடனே குடும்ப வக்கீலையழைத்து கணவன் சொத்துக்கள் யாவற்றையும் வீடு உட்பட தன் பெயருக்கு மாற்றச் சொல்லுகிறாள். இதை எதிர்ார்த்திருந்த வக்கீலும் எதையும் மாற்றாது வைத்திருந்ததால் இப்போது எல்லாவற்றையும் இவள் பெயருக்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.
இசைக்கோர்வை மீது இது நாள் வரை இருந்து வந்த பிடிமானமும் இற்று கிழிந்து தொங்குகிறது. வீட்டுக்கு வந்ததும் அறையில் சத்தம் கேட்டு பழைய காலி அட்டைப்பெட்டியை தலைகீழாக்கி பார்க்க… ஏழெட்டு சிவப்பான அன்று பிறந்த எலிக்குட்டிகள் துள்ளுகின்றன. அட்டைப்பெட்டியின் ஒரு பகுதி எலியால் கன்னக்கோல் சாத்தப்பட்டாற்போல கடித்துத் துளைக்கப்பட்டிருக்கிறது. தாய் எலிசற்று தூரத்தில் நின்றுகொண்டு இவளையும் தன் குட்டிகளையும் பார்க்கிறது. ஜூலி அறையை சாத்திக்கொண்டு படுக்கையில் படுத்தபடி யோசிக்கிறாள். எழுந்து வெளியில் வந்து எதிர்வீட்டுக் கதவைத் தட்ட, அங்குள்ள இளைஞன் வெளியில் வருகிறான்.
‘‘உன்னுடைய பூனையை ரெண்டு நாளைக்கு இரவல் தர்றியா?’’ என்று கேட்கிறாள் ஜூலி.
‘‘ஆனா. அது உங்கிட்டே பழகுமானு தெரியாதே, அது ஒரு மாதிரி’’ என்கிறான் இளைஞன்.
‘‘பார்க்கலாம் குடு,’’ என்று சொல்லிவிட்டு அந்தப் பூனையை வாங்கி வந்து எலிகள் குடியிருக்கும் அறைக்குள்விட்டு கதவைச் சாத்திவிட்டு நீச்சல் குளத்துக்குப் போகிறாள். அப்போது அங்கே அந்த லூஸில் வருகிறாள்.
‘‘எனக்கொரு உதவி செய்’’ என்கிறாள் ஜூலி. ‘‘என் வீட்டு ரூம்ல எலி, குட்டிங்க போட்டிருக்கு. பால் குடிக்கிற குட்டிங்க. அவசரப்பட்டு பூனையை அந்த ரூம்ல போட்டு கதவைச் சாத்திட்டேன். பூனை எலிய தின்னிருக்கும். இந்தா என் வீட்டு சாவி, ஓடிப்போய் ரூமை திறந்து பூனைய விரட்டு,’’ என்றுகூறி துரிதப்படுத்துகிறாள்.
மறுநாள் ஒலிவியரின் உதவியாளரிடமிருந்து தன் கணவனின் எல்லா இசைக்கோர்வை குறிப்புகளையும் கேட்டு வாங்கிக்கொண்டாள். அந்தப் பெண் உதவியாளர் கூறினாள், ‘‘அங்கொன்றும் இங்கொன்றுமாய் தப்பு இருந்திச்சு. நானே திருத்தி வச்சிருக்கேன்’’ என்று ஜூலி வீட்டுக்கு வந்ததும் கைப்பையைத் திறந்து சோதிக்க, அங்கே நீல நிற காகிதம் மூடிய பழைய வாலிபால் ஒன்று இருக்கிறது. அன்னாவுக்கு அன்று இரண்டு வாங்கியதில் ஒன்று இது. பிரித்து அதை வாயில் வைத்து சுவைக்கிறாள். பிறகு மொத்த இசைக்கோர்வை குறிப்புகளையும் கிழித்து சாலையில் வந்து நின்ற குப்பை லாரியில் போடுகிறாள். அதிலுள்ள இயந்திரம் அதை மேலும் அழுத்திக் கூழாக்குகிறது.
ஜூலியட் பினோச் (JULIETTE BINOCHE) மிக அற்புதமாக ஜூலி பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஹாலிவுட் படங்கள், ENGLISH PATIENT மற்றும் CHOCOLAT ஆகிய படங்களில் நடித்து நடிப்புக்கு ஆஸ்கர் விருது பெற்றவர். மிகச் சிறந்த ஒளிப்பதிவை ஸ்லோவோமிர் இட்ஸியாக் (SLOVOMIR IDZIAK) கின் காமிரா பார்த்துக் கொண்டுள்ளது. வெனிஸ் திரைப்பட விழாவில் இப்படத்துக்கான சிறந்த இயக்குனர் விருது கீஸ்லோவ்ஸ்கிக்கு தங்கச்சிங்கம் பரிசும், ஜூலியட் பினோச்சுக்கு நடிப்புக்கான ‘‘VOLPI’’ கோப்பையும், சிறந்த ஒளிப்பதிவுக்கென இட்ஸியாக்கு ‘‘GOLDEN OSELLE’’ விருதும் அளிக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் தொங்கின முகத்தோடு கணவன் கரோல் கரோல் (KAROL KAROL) உட்கார்ந்திருக்கிறான். சற்று தள்ளி மனைவி டோமினிக் (DOMINIQUE) இறுகின தீர்மானமான முகத்தோடு உட்கார்ந்திருக்கிறாள். நீதிபதி கேட்கிறார்.
‘‘நீ உன் கணவரை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறாயா?’’
‘‘ஆமாம். இவனோடு வாழ முடியாது’’, என்கிறாள் டோமினிக். கணவன் கரோல் உரக்க சொல்லுகிறான், ‘‘எனக்கு விவாகரத்து வேண்டாம். என் மனைவி டோமினுக்குடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன்’’ என்று அவர்களுக்குத் திருமணம் நடந்து ஆறுமாதங்களே ஆகியிருக்கும் நிலையில். ஆனால் டோமினிக் உரக்க சொல்லுகிறாள், ‘‘எனக்கு இவன் வேண்டாம்’’ என்று நீதிபதி கூறுவார், ‘‘கொஞ்ச காலம் அவகாசம் தருகிறேன், மீண்டும் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்’’
‘‘நான் எங்கள் திருமணத்தைக் காப்பாற்றவே விரும்புகிறேன்,’’ என்றும் மீண்டும் கூறுகிறான் கரோல். வீட்டுக்குப் போனதும் அவனது பிரமாண்ட அளவிலான சூட்கேஸை வெளியில் தள்ளி அவனையும் வெளியேற்றி கதவைச் சாத்திக்கொள்ளுகிறாள் டோமினிக்.
இப்படியாக தொடங்குகிறது கீஸ்லோவ்ஸ்கியின் அடுத்த திரைப்படம், ‘‘வெள்ளை’’
(WHITE/BLANK-1994)
அந்த சூட்கேஸ் படத்தில் ஒரு கதாபாத்திரம்… என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. என்னிடமும் பழைய மட்றாஸ்-குரோம்பேட்டையிலிருந்த புகழ்பெற்ற ‘‘குரோம் லெதர் ஃபாக்டரி’’யின் தயாரிப்புகளான ‘‘FLEX’’ ஐட்டங்களின் உயரிய தோல் காலணிகள் இருந்திருக்கின்றன. ஒரு சமயம் அவர்கள் தயாரிப்பான உயர் ரக தோல் சூட்கேஸ் வாங்க மனைவியுடன் ஃபிளெக்ஸ் காட்சிக்கூடத்துள் நுழைந்து இருப்பதிலேயே மிகப் பெரிய அளவிலிருந்த தோல் பெட்டியை வாங்கினேன். இன்றும் பரணியில் இருக்கிறது. ஒருமுறை என் மகள் அதனுள் படுத்துப் பார்த்தாள். இந்த திரைப்படத்தில் வரும் கரோலின் தோல் சூட்கேஸ் என்னுடையதைவிட இரு மடங்கு நீளமும் அகலமுமான சிவப்புநிறப் பெட்டி. படத்தின் தொடக்கத்தில் விமான நிலையத்திலிருந்து பெட்டிகள் நகர்ந்து போகும் கன்வேயர் பெல்டில் இந்த பூதாகார தோல் பெட்டி நகருகிறது. காதலும் வெறுப்புமான தொடக்கம். நகைச்சுவைமிக்க உரையாடல்களும் நிகழ்வுகளும் ஏராளம். போலந்திலும் ஃபிரான்சிலும் மிகவும் பாராட்டப்பட்ட கீஸ்லோவ்ஸ்கியின் திரைப்படம். அவ்வாண்டுக்கான சிறந்த இயக்குனர் விருதை பெர்லின் திரைப்பட விழாவில் கீஸ்லோவ்ஸ்கிக்கு வாங்கித் தந்த போலிஷ் திரைப்படம்.
கரோல் ஒரு சிகையலங்கார கலைஞன் (முடி திருத்துபவன்) தொழிலில் வித்தகன். பாரிஸில் அவனும் டோமினிக்கும் இருந்தனர். கரோலின் அண்ணன் ஜுரெக் JUREK வார்சாவில் பெண்களுக்கான பெரிய முடித்திருத்தகம் வைத்து நடத்தி வந்தான். பெண்களின் சிகையலங்கார கலையில் கரோல் வித்தகன். பாரிஸ் நகரில் வீட்டைவிட்டு மனைவியால் விரட்டப்பட்ட கரோல் பஜாரில் தன் சூட்கேஸ் மீது அமர்ந்து காகிதத்தை மடித்து உதடுகளுக்கிடையில் வைத்து ஒரு விதமான இசையை காற்றை ஊதி ஏற்படுத்துகிறான். பிச்சைக்காரன் என எண்ணி காசு போடுகின்றனர். தன்னிடமுள்ள ஏடிஎம் கார்டை ஏடிஎம் மெஷினில் நுழைத்து இயக்கினால், ‘‘இந்த கார்டு தடை செய்யப்பட்டிருக்கிறது,’’ என்ற செய்தி வருகிறது. அவனிடம் பணமேயில்லை. குறிப்பிட்ட வங்கியில் முறையிடுகிறான். கார்டில் சிக்கல், கார்டையும் பறித்துக் கொள்ளுகிறார்கள். ஒரு புதிய மனிதன் கை கொடுக்கிறான். அவன் பெயர் மிகோலாஜ் (MIKOLAJ). இருவரும் நெருக்கமாகிறார்கள். இருவரும் வார்ஸா போய்விட நினைக்கிறார்கள். போதிய பணமில்லாததால் கரோலின் தோல் சூட்கேஸில் காற்று வருமளவு துவாரமிட்டு அதற்குள் கரோலை முடங்கிக்கொள்ள வைத்து விமானத்தில் ஏறுகிறான் மிகோலாஜ்.
‘‘இவ்வளவு பெரிய சூட்கேஸ். 165 பவுண்ட் எடையிருக்கு. அப்படி என்ன இருக்கு உள்ளே?’’ என்று கேட்கிறாள் பெட்டியை உள்ளே தள்ளுபவள். தன் உடைமைகள் என்கிறான் மிகோலாஜ்.
வார்ஸா வந்ததும் பெட்டிக்காக மிகோலாஜ் காத்திருக்கிறான். பெட்டி வரவில்லை, விமான நிலையத்தில் இம்மாதிரி பெரிய உடைமைகள் நிறைந்த பெட்டிகளைக் கடத்திக்கொண்டு போக பயிற்சி பெற்ற கொள்ளையர்களிருக்கின்றனர். ஒரு பத்து பெட்டிகளோடு காரில் தப்பித்து அவர்கள் பணி நிறைந்த பொட்டலையடைந்ததும் முதலில் ஆசையோடு அந்த மிகப் பெரிய தோல் சூட்கேஸைத் திறக்க… அதனுள் படுத்திருந்த கரோல் வெளிவருகிறான். ஆத்திரமுற்று அவனை நையப்புடைத்து தள்ளிவிடுகிறார்கள். கரோல் பெட்டியுடன் அண்ணன் ஜுரேக்கின் சலூனை அடைந்து இருவரும் ஆரத் தழுவுகின்றனர். கரோலுக்கு பெண் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்த சமயம் பணபரிவர்த்தனை செய்யும் ஒருவனை சந்திக்கும் கரோல் அவர்களோடு ஓர் இடத்துக்குப் போய் ஓட்டுக் கேட்பதில் ஒரு காலிமனை விவரம் அறிந்து அண்ணனிடம் 1000 டாலர் கடன் வாங்கி மனை உரிமையாளரை சந்தித்து அந்த இடத்தை 5000 டாலருக்கு வாங்கி பத்திரமும் தயாராகிவிடுகிறது. 4,000 டாலருக்கு யோசிக்கையில் நண்பனைத் தேடிக்கொண்டு மிகோலாஜ் வரவும் அந்தத் தொகையை அவன் கடனாய்த் தருகிறான். ஆனால் பண வியாபாரம் செய்தவன் கரோவை உதைக்கிறான். அவனுக்கு பத்துமடங்கு உயர்த்தி (50,000 டாலர்) விற்று விடுகிறான் கரோல். இப்போது இவனும் மிகோலாஜும் கூட்டாளிகளாய் நிறுவனம் ஒன்றைத் தொடங்குகின்றனர். டோமினிக்கோடு தொலைபேசியில் பேச முயன்று முடிவதில்லை. இப்போது மிகோலாஜிடம் கரோல் ஒரு திட்டத்தை கூறுகிறான்.
‘‘நான் இறந்து விடுகிறேன், அதை நீ செய்திகளாய் வெளியிடு. எனது சவ அடக்கத்தை நீயே செய். நான் ஏன் சம்பாதனை, சொத்து, பணம் எல்லாவற்றையும் என் பழைய மனைவி டோமினிக் பேருக்கு எழுதிவைத்து வக்கீல் மூலமாய் அவளுக்கு அறிவித்த கையோடு என் மரணத்தை வெளியிடு,’’ என்கிறான் கரோல்.
‘‘உன் மரணம் எப்படி?’’
‘‘ஒரு பிணம் வேண்டும்.’’
மிகோலாஜ் அதற்கும் ஒரு ஏஜெண்டை கொண்டுவருகிறேன். ஏஜெண்ட் கூறுகிறான், ‘‘பணமிருந்தால் பிணத்துக்கு பஞ்சமில்லை. ரஷ்யனாயிருக்கலாமா, பிணம்?’’
‘‘ஓ. எஸ்’’
மின்சார ரயிலில் வாயிற்படியில் நின்று பயணித்த ரஷ்யன் ஒருவன் அதிகமாய்த் தலையை வெளியில் நீட்டி கம்பத்தில் மோதி அடையாளம் தெரியாதளவுக்கு தலை நசுங்கிய பிணம் கிடைக்கிறது. அது கரோல் என்று சவப்பெட்டியில் வைக்கப்பட்டு மிகோலாஜ் ஏற்பாட்டில் டோமினிக் வந்து கரோல் நல்லடக்கம் ஆகிறான். டோமினிக் வீட்டையடைந்து களைத்துப் போய் படுக்கையறை விளக்கைப் போடுகிறாள். தன் படுக்கையில் நிர்வாணமாய் கரோல் இருக்கிறான். இருவர் கைகளும் இறுக இணைகின்றன. கரோலாக ஜிபிக்னூ ஜாம்ஷோவ்ஸ்கி (ZBIGNIEW ZAMCHOWSKI) என்ற போலத்தின் இளைய தலைமுறை நடிகர் அருமையாக நடிக்கிறார்.
டோமினிக்காக ஜுலி டெல்பி (JULIE DELPY) யும் மிகோலாஜாக ஜானுஸ் கஜோஸ் (JANUSZ GAJOS) என்பவரும் இயல்பாக நடிக்க, எட்வர்டு க்ளோசின்ஸ்கி (EDWARD KLOSINSKI) கேமராவை கையாண்டுள்ளார். ‘‘மூவண்ணங்கள்’’ TROIS COULEURS) பட வரிசையில் கீஸ்லோவ்ஸ்கியின் கடைசி படம் ‘‘சிவப்பு’’ (ROUGE- 1994). இந்தத் திரைப்படத்துக்குப் பின் 1996-ல் அவர் காலமானார்.
பிரெஞ்சு கொடியின் மூன்று நிறங்களில் சிவப்பு கடைசி நிறம்- சகோதரத்துவம் (FRATERNITY) என்பதை படத்தின் கதை மிகவும் தொளதொளவென்றுதான் கொண்டிருக்கிறது ‘‘சந்தர்ப்ப வசங்கள்’’ ‘‘தற்செயலான நிகழ்வுகள்’’- என்பவை கீஸ்லோவ்ஸ்கி சினிமாவின் இன்றியமையாத கூறுகள். இக்கூற்றை ‘‘RED’’ மேலும் ஆழமாகக் கொண்டிருக்கிறது.
‘‘ரெட்’’ வெதுவெதுப்பான நிறம்- கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று படங்களிலும் இது மிகவும் ‘‘மனமிறங்கல்’’ எனும் மானுட அருங்குணத்தைக் கொண்டது. வாலெண்டின் (VALENTINE) எனும் மாடல் பெண்ணை முக்கிய பாத்திரமாய்க் கொண்டது. சுவிட்சர்லாந்தில் – ஜெனிவாவில் நிகழும் கதை. ஆழமான பிணைப்பு ஒன்று ஏற்படும் வரை, தனித்தனியான ஆண், பெண் இருவரின் காலியான வாழ்க்கையோடே கதை நகர்கிறது.
வாலெண்டின் தன் காரை ஒரு நாய் மீது ஏற்றிவிடுகிறாள். மிருக வைத்தியரிடம் அந்தப் பெண். நாயைக் கொண்டுபோய் தக்க சிகிச்சையளித்து நாயின் சொந்தக்காரரையும் கண்டுபிடித்து ஒப்படைக்கிறாள். அந்த வயதான மனிதன் ஜோசப் கேர்ன் (JOSEPH KERN) எனும் ஓய்வு பெற்ற நீதிபதி. அந்தப் பெண், நாயின் பெயர் ரீடா (RITA). அது கர்ப்பிணியாக இருக்கிறது. அதன் பிறகு ரீடாவைப் பார்க்க அடிக்கடி ஜட்ஜ் கேர்ன் வீட்டுக்குப் போய் வருகிறாள் வேலெண்டின்.
நீதிபதி ஒண்டிக்கட்டை, அவர் தன் ரேடியோ வழியே அடுத்த வீட்டு தொலைபேசி உரையாடலை இழுத்து ஒட்டுக்கேட்பதும் ஜன்னல் வழியே வெளிக்காட்சிகளைப் பார்ப்பதுமாய் நேரத்தைப் போக்குபவர். நீதிமன்றத்திற்கு போய் வழக்காடலை, தீர்ப்பையெல்லாம் மெளனமாக கவனிப்பது இன்னொரு வேலை. வேலெண்டின் பிரபலமான மாடல் அழகி. லண்டனில் ஒரு காதலனிருக்கிறான். நீதிபதி ஒட்டுக்கேட்பது ஓர் இளம் நீதிபதி ஆகஸ்ட் (AUGUSTE) என்பவன் தொலைபேசி பேச்சை என்பது பின்னால் தெரிகிறது. இந்த ஆகஸ்ட் என்பவன் வேலெண்டின் குடியிருப்பில் அவன் வீட்டுக்கு எதிரில் குடியிருப்பவன். அவனை இவள் இதுவரை சந்தித்ததில்லை. ஒரு நாள் தன்னைப்பற்றி நீதிபதி சொல்லுகிறார். தான் இளமையில் காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவனுடன் போனதிலிருந்து வேறொரு பெண்ணை சேர்க்கவே இல்லை என்கிறார். இளம் நீதிபதி ஆகஸ்டினின் காதலி காரின் (KARIN) என்பவளும் அவனை விட்டு இன்னொருவனோடு போனதை ஒட்டுக்கேட்டதில் தெரிய வருகிறது. வேலெண்டினுக்கும் லண்டனிலுள்ள அவளது காதலனுக்கும் உறவு சரியில்லையென்பதை அறிந்த நீதிபதி அவளை அவனோடு சமாதானமாய் போக அறிவுரை தருகிறார். ஆனால் அவளுக்கும் அவளது அடுத்த வீட்டுக்கார இளம் நீதிபதி ஆகஸ்டுக்கும் உறவு ஏற்பட்டுவிடுகிறது.
நீதிபதியின் நாய் ஏழு குட்டிகளை ஈன்றெடுக்கிறது வேலெண்டின் அவரிடம் தனக்கொரு குட்டியை கேட்டு வாங்கிக் கொள்ளுகிறாள். லண்டனிலுள்ள காதலன் ரகசியமாய் வருபவன் இவளை ஆகஸ்டுடன் அந்தரங்கமாயிருப்பதைக் கண்டதும் விலகிப்போகிறான். அவள் ஒரு கப்பல் பயணத்தை மேற்கொண்டு புயலில் சிக்கி உயிர்தப்புவதோடு படம் முடிகிறது. வேலெண்டினாக சிறப்பாகச் செய்திருக்கிறார் இரின் ஜேக்கப் (IRENE JACOB). ஓய்வு பெற்ற நீதிபதியாக அற்புதமாக நடித்துள்ளார் ழான்- லூயி டிரின்டிக்னன்ட் (JEAN-LOUIS TRINTIGNANT) அபாரமான ஒளிப்பதிவை பியோட்ர் சோபோசின்ஸ்கியின் (PIOTR SOBOCINSKI) கேமரா செய்துள்ளது.
எழுதியவர்
விட்டல்ராவ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.