Soviet - Russian cinema films | சோவியத் - ரஷ்ய சினிமா திரைப்படங்கள்

தொடர் 43 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் – ரஷ்ய சினிமா
ரஷ்ய திரைப்படங்கள் -2

தோல்ஸ்தோயும், தாஸ்தாவெஸ்கியும் ஷேக்ஸ்பியரும் உலகத் திரைப்படங்களாக – அவற்றின் அசல் மொழியிலிருந்து பிற மொழிகளில் திரைப்படங்களாகியுள்ளன. உலக மயமாக்கப்பட்ட இந்த கலைச் செயல்பாட்டில் சுத்த கலை நோக்கும் உண்டு. சுத்த வணிக நோக்கும் உண்டு. கலை நோக்கும் வணிக நோக்கும் சேர்ந்தவாறு இருப்பதும் உண்டு என்று வைத்துக்கொண்டு பார்த்தோமானால் ரஷ்ய நாவல்கள் வேற்றுமொழிகளில், நாடுகளில் எந்தளவுக்கு சிறப்பாக திரைப்படமாக்கப்பட்டன என்ற புள்ளிக்கு வரலாம். அசல் இலக்கியம் திரைப்படமாகும்போது கலாரூபக் காட்சி சலனத்தை முன்னிட்டு தன்னை எவ்வளவுக்கு விட்டுக்கொடுக்கிறதென்ற பொதுக்கருத்தையும் அனுமானிக்க முடியும். இதேவிதமாக ஷேக்ஸ்பியரையும் வைத்துப் பார்க்கலாம். அதேசமயம் இந்த நாவல்கள் அவ்வந்த தாய்மொழியில் திரைப்படமாகையில் எந்தளவுக்கு சிறப்புற்றன என்பதையும் பார்க்கலாம். முதலில் ஹாலிவுட் திரைப்படக்காரர்களால் ஆங்கிலம் பேசிய ரஷ்ய நாவல்களை திரைப்படமாக்கிய சில முக்கிய எடுத்துக்காட்டுகளில் கவனிக்கலாம்.

அன்னா கரேனினாவைப்போல (ANNA KARENINA) அமெரிக்க ஹாலிவுட் சினிமாக்காரர்களை கவர்ந்த ரஷ்யக் கதை வேறொன்றில்லை என்றே சொல்லலாம், ஒரே காரணம், அதன் பெண் சோரம்தான் (ADULTERY). மற்றபடி தோல்ஸ்தோயோ, ரஷ்யாவின் ஆன்மா தெறிக்கும் அன்னா கரேனினா நாவலின் பாத்திர வார்ப்புகளோ இரண்டாம் படம்சம்தான். பெண் சோரம் போவதிலுள்ள ரசாபாச அம்சத்தை தூக்கலாகக்கொண்ட ஃபிரெஞ்சு நாவல் ‘‘மேடம் பொவாரி’’ போன்றவையும் ஹாலிவுட்டால் திரையாக்கம் கொண்டதற்கும் அதே காரணந்தான். அந்த விதமாக 1927-ல் ‘LOVE’ என்ற மெளனப் படம் அன்னா கரேனினாவின் கதையையே கொண்டிருந்தது. அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் உலகப் புகழ்பெற்ற நடிகை கிரேட்டா கார்போ (GRETA GARBO). இந்த மெளனப் படத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டாவது முறையாக அன்னா கரேனினா 1935-ல் அதே பெயரில் படமாக்கப்பட்டது. இந்தப் பேசும் படத்தில் மீண்டும் அன்னாவாகப் பேசி அற்புதமாக நடித்தவரும் அதே கிரேட்டா கார்போதான். இந்தப் படத்தை தூர்தர்ஷன் 90-களில் நள்ளிரவுக் காட்சியாக ஒளிபரப்பியது. இந்த அமெரிக்க அன்னா கரேனினாவை இயக்கியவர் க்ளாரென்ஸ் ப்ரெளன் (CLARENCE BROWN) என்பவர். அன்னாவின் காதலனாக அமெரிக்க நடிகர் ஃபிரெட்ரிக் மார்ச் (FREDERIC MARCH) நடித்திருக்கிறார். அன்னாவின் வயதான கணவனாக பாசில் ராத்போன் (BASH RATHBONE), அன்னாவின் குழந்தைப் பையனாக ஃப்ரட்டி – பார்த்லோமியோ (FREDDIE BARTHLOMEO) ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மிகச் சிறந்த கருப்பு – வெள்ளை ஒளிப்பதிவை கேமரா கலைஞர் வில்லியம் டானியல் (WILLIAM DANIEL) செய்திருக்கிறார். தன்னைவிட வயதில் மிகவும் மூத்த ஒருவனை திருமணம் செய்துகொண்டு ஒரு பையனை பெற்றெடுத்த அன்னா கரேனினா ஜார்காலத்து ரஷ்ய பணக்காரச் சீமாட்டி. கணவன் கரேனின் ஒரு பணக்கார பிரபு திருமணத்துக்குப் பின் ரஷ்ய உறவுமுறைப்படி கணவன் கரேனின் பெயர் மனைவி அன்னாவுடன் சேருகையில் ‘கரேனினா’ என்றாகிவிடும். குதிரை வீரன் அலெக்ஸி வ்ரோன்ஸ்கி (ALEKSEI VRONSKY) யுடன் அன்னா கள்ளக்காதலுறவு வைத்துக்கொள்ளுகிறாள். தன் குழந்தையையும் கிடாசிவிட்டு காதலனோடு ஓடிவிடுகிறாள். ஊர் காரித்துப்புகிறது. குழந்தை நினைவு மனசாட்சியில் மேலோங்க… திரு்ம்பி வந்தவள் குழந்தையை ஆசை தீரப் பார்த்துக் கொஞ்சிவிட்டு விபரீத முடிவொன்றை ஏற்கிறாள். ரயில் வண்டி முன் விழுந்து நசுங்கி உயிர் விடுகிறாள் அன்னா கரேனினா.

Anna Karenina by Leo Tolstoy - Hardcover - 1946 - from ChapterNook (SKU: 1140)

‘லவ்’ மற்றும் அன்னா கரேனினா இருபடங்களிலும் தன் உடல் கவர்ச்சி முக- வசீகரம், அற்புத நடிப்பாற்றல்களைக்கொண்டு கிரேட்டா கார்போ ஒரு பொது சினிமா ரசிகனைக் கவர முடிந்தது. இந்த அமெரிக்கப் படங்கள் இரண்டிலும். காதலனைவிட கணவனுக்கே ஆழ்ந்த நடிப்புக்கு வாய்ப்பதிகம் இந்தப் படத்தில், அன்னாவின் கணவன் கரேனினாக நடித்த பாசில் ரத்போன் (BASIL RATHBONE) மனைவியை மனதில் சித்திரவதைக்குள்ளாக்கி தற்கொலை வரை கொண்டுபோகும் கணவனாக அற்புதமாய் செய்திருக்கிறார். அன்னா கரேனினாவாக நடித்த கிரேட்டா கார்போவின் நடிப்பு அற்புதம் என்றானாலும் அது தோல்ஸ்தோயின் நடிப்பு அற்புதம் என்றானாலும் அது தோல்ஸ்தோயின் ரஷ்ய அன்னா கரேனினா அல்லவே அல்ல. தோல்ஸ்தோயி தன் அன்னாவை பல பரிமாணங்களில் கொண்டு வந்திருப்பவர். ரஷ்யாவையோ, அதன் சூழலையோ, அதன் மாந்தரின் உளவியல் தன்மைகளையோ அறிந்திருக்காத கிரேட்டா கார்போவின் சிறந்த நடிப்பு ரஷ்ய அன்னாவின் ரஷ்ய ஆன்மாவை எங்குமே கொண்டிருக்கவில்லை. ரஷ்ய நாவலில் விவரித்துள்ள ரஷ்ய உபகாட்சிகள் எதுவும் ஹாலிவுட் படத்தில் கோடிகாட்டப்படக்கூட இல்லை. இதையே பின்னாட்களில் ‘டாக்டர் ஷிவாகோ’ போன்ற பெரும் நாவல்கள் படமானபோது டேவிட் லீன் முதலான இயக்குனர்கள் ரஷ்யாவின் ஆன்மாவை தவறாமல் அங்கங்கே கோடிகாட்டியிருக்கிறார்கள், இயக்குனர் ரஷ்யாவையும் தோல்ஸ்தோயியையும் சரிவர உள்வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. கார்போவும் காதல்–அதன் காரணமாய் மனமொடிந்து அல்லலுறும் ஒரு பெண்ணாக மட்டுமே- ஒரு பொதுவான பெண் பாத்திரமாக நடிக்க முடிந்ததே தவிர தோல்ஸ்தோயின் பாத்திரம் அன்னாவாக மாறி நடிக்கவில்லை.

அன்னா கரேனினா மீதான காதல் மேற்கத்திய திரைப்படக் கர்த்தாக்களுக்கு அத்தோடு தீர்ந்தபாடில்லை அல்லது தாங்கள் அதுவரை செய்த இரு படங்களிலும் தங்களுக்கே திருப்தி ஏற்படவில்லையென்ற உண்மை உணர்ந்ததாலோ என்னவோ இன்னொரு முயற்சியாக அன்றைய பிரபல பிரிட்டிஷ் நடிகை விவியன் லீ (VIVIEN LEIGH)யை அன்னாவாக நடிக்கச் செய்து மற்றொரு அன்னா கரேனினாவை பிரிட்டிஷ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் 1947-ல் கருப்பு வெள்ளையில் தயாரித்தனர். விவியன் லீ இந்தியாவில் வடகிழக்குப் பகுதியில் பிறந்தவர். இந்தத் தயாரிப்பு மேலும் தோல்ஸ்தோய்ரீதியான எவ்வித உயிர்ப்பையும் கொண்டிருக்கவில்லை. ஜுலியன் துவிவியர் (JULIEN DUVIVIER) இயக்கிய இப்படத்தில் அன்னாவின் கணவன் கரேனின் பாத்திரத்தை ஏற்று நடித்த ரால்ஃப் ரிச்சார்ட்ஸ் (RALPH RICHARDS) ஆத்திரத்தில் கன்னா பின்னாவென்று குதித்து நடித்து நாவல் பாத்திரத்தையே நாசமாக்கிவிட்டார்.

Literature and film in Anna Karenina | Time goes by in...Osaka

இதுவரை தோல்ஸ்தோயின் அன்னா கரேனினா பதினாறு, பதினேழு முறை உலகின் பல மொழிகளில், பல நாடுகளில் திரைப்படமாக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. 2012-லும் இந்த 1877-ம் ஆண்டு கதை திரைப்படமாக அமெரிக்கரால் செய்யப்பட்டு அதிகம் பேசப்படவில்லை. ரஷ்யாவில் இந்த ரஷ்யக் கதை அசல் ரஷ்யத் தயாரிப்பாக 1967-ல் புகழ்பெற்ற ரஷ்ய இயக்குனர், அலெக்சாண்டர் ஜார்கியால் (ALEKSANDR ZARKHI) திரைப்படமாக்கப்பட்டது. பெருத்த எதிர்பார்ப்புக்கு உள்ளன. இப்படம்கூட ரஷ்ய ரசிகர்களுக்கே சிறிது ஏமாற்றத்தையளித்ததென்று கூறப்பட்டது. இந்த அசல் ரஷ்ய அன்னா கரேனினா சென்னை சோவியத் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டது. மீண்டும் அகன்ற திரை வடிவில் சஃபையர் திரையரங்கிலும் காட்சிபப்டுத்தப்பட்டது. இந்த ரஷ்ய மொழிப் படத்தில் ரஷ்யாவின் அன்றைக்கு முன்னணி நடிகையாய் விளங்கிய தாதியானா சமோய் லோவா என்பவர் (TATYANA SAMOIOVA) அன்னாவாக நடித்தார். வாசிலி லனோவோய் (VASSILI LANOVOi) வ்ரோன்ஸ்கியாகவும், நிகோலே கிரிட் சென்கோ (NIKOLAI GRITSENKO) அன்னாவின் கணவன் கரேனின் பாத்திரங்களிலும் அதி சிறப்பாக செய்திருக்கின்றனர். தாதியானாவின் அன்னா தோல்ஸ்தோய் கதாபாத்திரத்தை சர்வ லாவகமாய் உள்வாங்கிக்கொண்டு விளங்குகிறது, குதிரைப் பந்தயக் காட்சி, ரயில்வே நிலையம், பால்ரூம் நடனம் கோச்சுவண்டிப் பயணம், பளிச்சென்ற மாளிகைத் தோற்றம் யாவும் ஓர் 19ம் நூற்றாண்டு பிரபுத்துவ ரஷ்யாவை தோல்ஸ்தோயின் வர்ணிப்புக்கு முன்னே பின்னே போகாமல் அமையப் பெற்று பிரமிக்க வைக்கின்றன. பிரிட்டிஷ் நடிகை விவியன் லீ கிட்டதட்ட தோல்ஸ்தோய் விவரிக்கும் அன்னாவின் வெளித் தோற்றத்தைக் கொண்டிருந்தும் ரஷ்யப் பாத்திரத்தின் உள்ளொளியை நடிப்பில் கொண்டுவர தவறிவிட்டார். இதுவரை ரஷ்யாவின் மேடை நாடக அளவில் நடந்து வந்த இந்தக் கதை 1967-ல் ரஷ்ய மொழியில் முழுத் திரைப்படமாய் 70.M.M. திரைக்கென வண்ணப்படமாக்கப்பட்டது.

தாதியானாகூட அன்னா பாத்திரத்துக்கு எதர்பார்க்காத ஒரு தேர்வு என்றே அன்றைய ரஷ்ய மாத இதழ் ‘ஸ்புட்னிக்’ (SPUTNIK) அவரைப் பற்றிய நேர்காணலில் குறிப்பிடுகிறது. தாதியானா சமாய்லோவா கிரேட்டா கார்போவையும் விவியன் லீயையும் அன்னா பாத்திரமேற்று நடித்த படங்களைப் பார்த்த அனுபவம் குறித்து ஸ்புட்னிக் பேட்டியில், கேள்வி கேட்டதற்கு, ‘‘விவியன் லீ நடித்த படத்தை மட்டும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடைய நடிப்பை நான் அறிவதில் ஈடுபடவில்லை. ஏனெனில் அவரது நடிப்பின் பாதிப்பு எனது முயற்சியில் நுழைந்து விடக்கூடாது’’ என்றார் தாதியானா.

முழுக்கவும் பாலே இசை- நடன வடிவில் அமையப் பெற்றதாய் தயாரிக்கப்பட்ட ரஷ்ய அன்னா கரேனினா வண்ணப்படம் ஒன்றையும் சென்னை சஃபயர் திரையரங்கில் 1974-ல் நானும் என் மனைவியும் பார்த்திருக்கிறோம். போல்ஷாய் தியேட்டர் கலைஞர்களால் உருவானது. ஆனால் அதன் விவரம் எதுவும் என்னிடமில்லை.

ரஷ்யாவில் 19-ம் நூற்றாண்டு எழுத்தாளர் நிகோலேய் வாசிலிவிச் கோகோல் (NIKOLAI VASILIVICH GOGOL) நகைச்சுவை, நையாண்டிமிக்க நாடகங்களையும் கதைகளையும் எழுதியவர். இவரது ‘இன்ஸ்பெக்டர் ஜெனரல்’ (INSPECTOR GENERAL) மிகவும் புகழ் பெற்ற அங்கதக் கதை. ஜார் மன்னர் ஆட்சியில் நாடெங்கும் நிலவிய பஞ்சம், வறுமை, புகழ் வெறி, ஊழல் என்பனவற்றை எடுத்துச் சொல்லும் அங்கதப் படைப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல். இது நாடக வடிவிலானது. இதை ஹாலிவுட் ஸ்தாபனம் வார்னர் பிரதர்ஸ் 1949-ல் சிறந்த வண்ண நகைச்சுவைப் படமாய்த் தயாரித்தது, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் டானி கே (DANNY KAYE) கோமாளியாய் நடிக்கக் ஹென்றி காஸ்டர் (HENRY KOSTAR) படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு கேளிக்கை காட்சிக் கூட்டத்தில் கோமாளி ஒருவன். தகராறு காரணமாய் அந்த கம்பெனியிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் நழுவியோடி ஊர் ஊராகச் சுற்றுகிறான். கோமாளியைத் தேடிக்கொண்டு காட்சியக முதலாளி இன்னொரு புறம் சுற்றுகிறான்.

அதே சமயம் மற்றொரு சிறு நகரின் மக்கள் நகர நிர்வாகத்தின் முக்கிய நபரான இன்ஸ்பெக்டர் ஜெனரல் இறந்துவிட… புதிய ஜெனரலை எதிர்நோக்குகின்றனர். வேறொரு ஊரிலிருந்து இந்த ஊருக்கு வந்து பொறுப்பேற்கவுள்ள இளம் இன்ஸ்பெக்டர் ஜெனரலை எதிர்பார்த்து ஊரே பதட்டத்திலிருக்கிறது. புதியவரைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன. இளைஞன் – கவர்ச்சியான சற்று தமாஷான பேர்வழி. அவ்வப்போது மரை கழலும் தலை. எளிமையை விரும்பும் அவன் சாதாரண ஏழைபோல ஆடம்பரம் எதுவுமின்றி தோன்றி ஆச்சரியத்திலாழ்த்துவான்.

நமது கோமாளி ஊருக்குள் நுழையவும் அவன்தான் புதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் என பலமாக நம்பி ராஜ உபச்சாரம் நடக்கிறது. மேயரின் இளம் பெண் தயார் நிலையிலிருந்த தன் காதலையும் கோமாளிக்கென கதவு திறக்கிறாள். ஒரு நகைச்சுவைக் காட்சி:

ஏதோ ஒரு தவறு நடக்க, மேயர் உதவி மேயரின் கன்னத்தில் அறைய, அறை வாங்கின உதவி மேயர் அதை வேறொருவன் மீது திருப்ப, அடுத்த அதிகாரியின் கன்னத்தில் அறைய, உடனே அவன் தனக்குக் கீழுள்ள அதிகாரியை அறைய, அவன் தனக்குக் கீழுள்ள குமாஸ்தாவை அறைய, குமாஸ்தா பியூனை அறைய, பியூன் வெளி, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை அறைய, பிச்சைக்காரன் அருகில் நிற்கும் கழுதையை அடிக்கக் கழுதை உடனே தாமதிக்காது தன், பின்னங்கால்களை உயர்த்தி அருகில் நின்ற தாடியுள்ள ஆட்டை உதைக்கிறது. ஆடு கத்திக் கொண்டே ஓடுகிறது. அரசு நிர்வாகத் தவறுகளை கிண்டலடிக்கும் இந்த நகைச்சுவைக் காட்சி விவரிப்பு ரஷ்ய எழுத்தாளர் கோகோலின் இன்ஸ்பெக்டர் ஜெனரலில் இடம் பெறும் அசல் ரஷ்ய நகைச்சுவை. இதை தமிழ் சினிமாவரை எடுத்தாண்டாகிவிட்டது. பிறகு நிஜமான இன்ஸ்பெக்டர் ஜெனரல் வந்து சேர்வது கதை. டானி கே மிக அருமையாக நடித்திருப்பார் கோமாளியாக.
தாஸ்தாயெவ்ஸ்கியும் (DOSTOYEVSKY) அமெரிக்க ஹாலிவுட்டாலும் ஜப்பானிய அகிரா குரோசாவாவாலும் இத்தாலிய லூசினோ விஸ்கோண்டியாலும் திரைப்படமாக்கியுள்ளன. கூடவே அசல் ரஷ்ய மொழியிலும் ரஷ்யக் கலைஞர்களால் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

தாஸ்தாயெவ்ஸ்கி ஜார் மன்னன் தர்பாரில் மரண தண்டனையளிக்கப்பட்டு சுட்டுத்தள்ள நிறுத்தப்பட்ட கணம், ஜாருக்கு ஆண் குழந்தை பிறக்கவும் மரண தண்டனையிலிருந்து மன்னிக்கப்பட்டு விடுதலை பெற்றவர். தாஸ்தாயெவ்ஸ்கி அந்த மரண தண்டனையிலிருந்து தப்பித்து மறுபிறவி எடுத்தாலும், தமது அமர நாவலான ‘‘காரமஸோவ் சகோதரர்கள்’’ (THE BROTGHER KARAMAZOV ஹாலிவுட்டில் திரைப்படமாக்கப்பட்டரீதியில் மீண்டும் மரண தண்டனைக்குட்பட்டவராகியிருக்கிறார் என்று அமெரிக்கத் திரைப்பட விமர்சகக் குரல்கள் ஒலித்த படம் ‘THE BROTHERS KARAMAZOV’ 1958-ல் வெளியான இப்படம் ஹாலிவுட் தயாரிப்பு என்பதால் நிறையவே ‘ரஷ்ய இசையதிர்வுகள் மிக்க நாவல் விவரிப்புகள்’ விடுபட்டு- விடப்பட்ட நிலையிலமைந்த சக்கையான படமாயிருந்தது. ஹாலிவுட் தர வரிசையில் பார்க்கையில் அன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் சுமார் ரக திரைப்பட இயக்குனர்தான் ரிச்சர்டு புரூக்ஸ் (RICHARD BROOKS). நிறைய பிரமாண்ட படங்களை முழுக்கவே ஜனரஞ்சக சுவையறிந்து அதற்கேற்றவாறு இயக்கியவர் ரிச்சர்டு புரூக்ஸ். நாவலின் பல பகுதிகள் மிக மிக முக்கியமானவை. அந்த முக்கியப் பகுதிகளை மிகவும் முக்கி முனகியபடிதான் படத்தில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் புரூக்ஸ். நான்கு சகோதரர்களுக்கும்தான் நாவலின் முக்கியப் புள்ளியான ‘கடவுளை’த் தேடும் முயற்சிக்கான வாதங்களும் செயல்பாடுகளும் விவரிக்கப்படுகின்றன. அந்தக் கடவுளைத்தான் தாஸ்தாயெவ்ஸ்கி நாவலின் பல இடங்களில் என்னமாய் சலித்தெடுப்பார். ஓரிடத்தில் தாஸ்தாயெவ்ஸ்கி (IF THERE IS NO GOD, MAN WOULD HAVE INVENTED IT) என்பார். இதைச் சொல்லவும் ஒரு கரமஸோவ் சகோதரன் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால் இந்த ஹாலிவுட் தயாரிப்பில் ஒரே ஒரு காரமஸோவ் சகோதரனே மற்ற சகோதரர்களின் சார்பிலும் ஆஜராகிவிடுகிறான். அந்த ஏற்பாட்டில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் யூல் பிரின்னர் (YUL BRYNNER) ஒருவரே எல்லா நடிகர்கள் பட்டியலிலும் முன்னுக்குத் துருத்திக்கொண்டு நிற்கும் பெயராக உள்ளது. அவர் தலையில் எல்லா பொறுப்பும் ஏற்றி வைத்துவிட்டார்கள். அன்றைக்கு இந்தப் படத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல, ரசிகர்கள் பாவம், தமக்கு மிக அருகில் கைக்கு எட்டக்கூடிய தொலைவில் நினைவிலிருந்த நடிகர் யூல் பிரின்னரின் பெயரைச் சொல்லித்தான் படத்தை நினைவு கொள்ளுவார்கள்.

மேலும் சற்று நன்கு நடிக்கக்கூடிய பிறரும் நல்ல பாத்திரங்களைத் தாங்கியும், அவர்களது பங்களிப்புகள் பிரகாசிக்க முடியாதளவுக்கு அவர்கள் பற்றிய பகுதிகள் கன்னாபின்னாவென்று சுருக்கப்பட்டு அமுக்கி வைக்கப்பட்டுள்ளன. க்ளேர் ப்ளூம் (CLAIRE BLOOM) மற்றும் லீ ஜே காப் (LEE J COBB) ஆகியோரின் பாத்திரங்களும், சூழலும் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவலில் மிக முக்கியமானவையும், அழுத்தமிக்கவையுமானவை. இவை ஹாலிவுட் தர நிர்ணயத்தில் முக்கியத்துவம் தரப்படாது சப்பையாக விடப்பட்டன. ஜனரஞ்சகம் கருதி, படம் நீண்டுபோகும் என்ற எச்சரிக்கையில் கதையின் சிறப்பான, உயர்வான அம்சங்கள் புறந்தள்ளப்பட்டன. இந்தப் படத்தை தூர்தர்ஷன் இருமுறை ஒளிபரப்பியது.

Antti Alanen: Film Diary: Voskreseniye / Resurrection (1960–1962)

சோவியத் ரஷ்யா தோல்ஸ்தோயின் ‘புத்துயிர்ப்பு’ (RESURRECTION) கதையை கருப்பு வெள்ளையில் 70களில் தயாரித்து திரையிட்டது. மிகேய்ல் ஷிவீட்ஸர் (MIKHAIL SHVEITSER) என்பவர் இயக்கியிருந்த இப்படம் சோவியத் ரஷ்யா சிறப்புத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அலெக்சாண்டர் ஜார்கின் இயக்கிய வண்ணப்படம் அன்னா கரேனினாவும் இவ்விழாவில் காட்டப்பட்டது. தோல்ஸ்தோய் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தப் படங்கள் திரையிடப்பட்டன என்றாலும் இவான் பைரீவ் (IVAN PYRIEV) இயக்கிய தாஸ்தாயெவ்ஸ்கியின் (THE BROTHERS KARAMAZOV) வும் நான்கு பாகங்களாய் தயாரிக்கப்பட்ட நிலையில் முதலிரண்டு பகுதிகள் திரையிடப்பட்டன. ரஷியப் பதிப்பு கருப்பு வெள்ளையிலானது. மற்ற இரு பகுதிகள் எங்கும் திரையிடப்படவில்லை என்பதால் ரஷ்யத் தயாரிப்பான கரமஸோவ் சகோதரர்கள் திரைப்படத்தைப் பற்றி எழுதுவது சரியாகாது. செகாவின் புகழ் பெற்ற சிறுகதை ‘நாய்க்காரச் சீமாட்டி’ (A Lady with a dog). இதை வண்ணப்படமாய் எடுத்திருந்த சோவியத் ரஷ்யா சிறப்புத் திரைப்பட விழாவில் திரையிட்டது. ஒரு குறும்பட வரிசையில் கொள்ளத்தக்க இப்படத்தில் இயா சவ்வினா (IY SAVVINA)வும் அலெக்ஸீ படலோவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

‘CRIME AND PUNISHMENT’ நாவலை 1935ல் கருப்பு வெள்ளைத் திரைப்படமாக்கியது அமெரிக்க ஹாலிவுட் நிறுவனமொன்று. அமெரிக்காவின் தாஸ்தாயென்ஸ்கி வாசகர்களுக்கு இப்படம் அவ்வளவாய் நிறைவைத் தரவில்லை. ‘JOSEF VON STENBEREG இயக்கிய இப்படத்தில் கதாநாயகன் ராஸ்கோல்னிகோவ் (RASKOLVIKOV) பாத்திரத்தில் பீட்டர் லோரியும் PETER LORRE இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் எட்வார்டு ஆர்னால்டும் (EDWARD ARNOLD) மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஸ்டென்பெர்க் மிகச் சிறந்த இயக்குனர். ஆனாலும் இந்த ரஷ்ய கதையைப் பொறுத்தளவு, மிகப் பெரியதொரு நாவலை காலத்தையும் நீளத்தையும் மனதில் கொண்டு அளவுக்கு மீறியே சுருக்கியிருக்கிறார்கள். இதே பிரச்சினைதான் அமெரிக்க ஹாலிவுட் தயாரிப்பான கரமஸோவ் சகோதரர்கள் திரைப்படத்திலும் நேர்ந்தது. அதுவே அசல் ரஷ்ய தயாரிப்பாக முற்றிலும் ரஷ்யக் கலைஞர்களைக்கொண்டே ரஷ்யாவிலேயே தயாரிக்கப்பட்ட மாபெரும் திரைப்படங்களை நீளத்தையும் காலத்தையும் பொருட்படுத்தாமல் நான்கு பாகங்களாய் தயாரிக்கின்றனர். இவை அமெரிக்க- ஹாலிவுட் மற்றும் பிற ஐரோப்பிய திரைப்படங்களையே பார்த்துப் பார்த்து பழகிவிட்ட அப்பகுதி ரசிகர்களுக்கு அலுப்பூட்டுகின்றன. ‘குற்றமும் தண்டனையும்’ ஹாலிவுட் படத்தில் தாஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவை படத்தின் காட்சி ரூப சலனத்தினூடே இயக்குனர் தடுமாறி தவற விட்டிருப்பது புரிகிறது. அமெரிக்க கரமஸோவ் சகோதரர்களுக்கு இந்தப் படம் சற்று தேவலாம்போல. பீட்டர் லோரி ராஸ்கோல்னிகோவாக அற்புதமாய்ச் செய்திருக்கிறார்.

Crime and Punishment (1935) - IMDb

குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியைக் கொலை செய்யும் கதாநாயகன் ராஸ்கோல்னிகோவ்- அந்தக் கொலையை, தான் புரிவதற்கான உண்மைக் காரணம் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும். சிக்மண்ட் ஃபிராய்டு தம் உளவியல் ஆய்வு நூலில் தாஸ்தாயெவ்ஸ்கியையும் அவரது இந்த நூலின் கதாபாத்திரத்தின் நடத்தையையும் எடுத்துக்காட்டாக உபயோகித்திருப்பார். நாவல் நெடுகவும் ராஸ்கோல்னிகோவ் இருவித தண்டனைகளுக்கு உட்பட்டு உழலுவதை அறிவோம். தான் செய்த குற்றத்தை எண்ணி மனதுக்குள்ளாக தனக்குத்தானே சித்திரவதைப்பட்டு ஒரு தண்டனைக்குள்ளான அவன் வெளியுலகில் இன்ஸ்பெக்டரின் விசாரணை- தேடுதல்களால் அவதியுற்று உழலும் மற்றொரு தண்டனை. இவ்வித இரட்டை தண்டனைகளின்போது தன் பாத்திரத்தின் அகம்-புற வார்ப்பை நன்கு உள்வாங்கிக்கொண்டு அருமையாக தன் ராஸ்கோல்னிகோவ் பாத்திரத்தைக் கொண்டுவந்திருக்கிறார் பீட்டர் லோரி. போலீஸ் இன்ஸ்பெக்டராய் நடிக்கும் எட்வார்டு ஆர்னால்டும் அப்பாத்திரத்தின் தாஸ்தாயெவ்ஸ்கிய வார்ப்பை நன்கு அறிந்தவராய் நடிக்கிறார். படத்தின் சிறப்புக்கு அதன் ரஷ்யச் சூழலை நன்கு பிரதிபலிக்குமாறு கேமரா கோணங்களால் அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் லூசியன் பல்லார்டு (LUCIEN BALLARD). ஸ்டென்பெர்கின் வேறு படங்களை நினைவு கொள்ளாது இந்தப் படத்தை மட்டும் வைத்துப் பார்க்க, இது அவரது நல்ல படமென்றே கூறலாம்.

1965- மற்றொரு புகழ் பெற்ற ரஷ்ய நாவல் பிரிட்டிஷ் இயக்குனர் டேவிட் லீன் (DAVID LEAN) இயக்கத்தில் ஹாலிவுட் திரைப்பட நிறுவனம் மெட்ரோ கோல்டுவின் மேயர் சார்பில் பிரமாண்ட அளவில் திரைக்காவியமாக்கப்பட்டது. படம்: ‘டாக்டர் ஷிவாகோ’ (DOCTOR ZHIVAGO). இந்நாவல் ரஷ்ய நாவலாசிரியர் போரிஸ் பாஸ்டர்நாக் (BORIS PASTERNAK) எழுதிய ஒரே நாவல். இந்நாவல் ரஷ்ய எழுத்தாளர் சங்கத்தால் நிராகரிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. பிறகு கள்ளக் கடத்தல் செய்யப்பட்டு ஃபிரான்சில் அச்சிடப்பட்டு பின் ஆங்கிலமாக்கப்பட்ட சமயம் நாவல் 1958-ல் சிறந்த இலக்கியத்துக்கான (DOCTOR ZHIVAGO) நோபல் பரிசு பெற்றது. பாஸ்டர்நாக் நாடு கடத்தப்பட்டார். டாக்டர் ஷிவாகோ படமும் சோவியத் யூனியனிலும் இந்தியாவிலும் திரையிட தடை விதிக்கப்பட்டது. பிறகு இந்தியாவில் ஏராளமான கத்தரிக்கோல் வெட்டுகளுக்குப் பின் திரையிடப்பட்டது. ஆறு ஆஸ்கர் விருதுகள் பெற்ற இப்படத்தின் ‘லாரா இசை’ எனும் இசைக் கோர்வை ரஷ்யாவின் ஆன்ம இசை ராகமாய் அந்நாட்டு புகழ்பெற்ற பாப்லார் மரங்களின் அசைவில், தன் அம்மாவின் சவப்பெட்டி அடக்கமானதும் பனிபடர்ந்த கண்ணாடி ஜன்னல் வழியே சிறுவன் ஷிவாகோ வெளியுலகைப் பார்ப்பதில் – வயல்வெளியில் குதிரைக்குட்டி முன்னால் ஓட… அதன் தாய் குதிரை பூட்டிய வண்டி துரத்தி வருகையில் லாராவும் ஷிவாகோவும் சந்திக்கையில் என பல்வேறு சூழலில் உணர்வுகளைப் பிரதிபலிக்க சுண்டியிழுக்கும் இந்த இசைக் கோர்வை படம் ஆரம்பம் முதல் இறுதிவரை இழையுமாறு அமைத்தவர் இசை இயக்குனர் மாரிஸ் ஜே (MURICE JARRE). இவர் இசைக்காக ஆஸ்கார் விருதை இப்படத்துக்கெனப் பெற்றார்.

Doctor Zhivago (1965) - Filmaffinity

போல்ஷெவிக் புரட்சி செம்படையினருக்கு எதிரான வெள்ளைப் படையினர்–முதல் உலக யுத்தமும் அடிபட்ட ராணுவ வீரர்களின் மருத்துவ முகாமில் சேவை செய்யும் டாக்டர் ஷிவாகோ- நர்ஸ் லாரா சந்திப்பு. லாரா தையற்காரக் குடும்பத்து ஏழைப் பெண். ஷிவாகோ- லாரா காதல். லாராவை போலிசிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் அவளைக் கெடுக்கும் பணக்காரன் விக்டர் கோமராஸ்கி. லாராவின் கணவனும் போல்ஷெவிக் புரட்சியாளனுமான பாஷா. கொல்லப்பட்டதாய் நம்பப்பட்ட பாஷா, ரஷ்ய செம்படைத் தலைவனாக சிறப்பு ரயிலில் பயணிக்கையில் கைதான டாக்டர் ஷிவாகோவைக் காப்பாற்றும் உணர்ச்சிகரமான கட்டம். டாக்டர் ஷிவாகோ எனும் அரிய கவிஞன். மாஸ்கோவில் லெனின் வருகையையறியும் மக்கள் அடையும் குதூகலம். இந்தப் படம் பேர்பாதிக்கும் அதிகமாகவே ஓர் அசல் ரஷ்யப் படமாக இருக்கும்படி இயக்குனர் டேவிட் லீனும் ஒளிப்பதிவாளர் ஃபிரெட்டி யங் (FREDDIE YOUNG)கும் அவரது உதவி கேமராமேன் நிகோலஸ் ரோயெக்கும் (NICOLAS ROEG) பார்த்துக்கொண்டனர். புரட்சியின்போது கிராமத்துக்குப் போய்விடுகிறான் ஷிவாகோ. ஒரு நாள் நகரில் ட்ராமில் பயணிக்கும் ஷிவாகோ சாலையோரமாய் நடந்து செல்லும் லாராவைப் பார்த்து ஓடுகிறான். கூட்டத்தில் அவள் மறைந்துவிடுகிறாள். இதய நோயாளியான டாக்டர் ஷிவாகோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நடைப்பாதையிலேயே செத்துப் போகிறான். லாராவுக்கும் ஷிவாகோவுக்கும் பிறந்த பெண் அனாதையாக உருக்காலை ஒன்றில் தொழிலாளியாக இருக்கிறாள். லாராவும் இறந்து போகிறாள்.

ஷிவாகோவின் ஒன்றுவிட்ட சகோதரன் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியமானவனாகி உயர் அதிகாரியாகிறான். அவன் ஒரு நாள் வேலைக்குப் போகும் லாரா-ஷிவாகோ தம்பதியின் அனாதைப் பெண்ணை அழைத்து அவள் தனக்கும் உறவினேன், அனாதையல்ல, என டாக்டர் ஷிவாகோவின் முழுக்கதையையும் சொல்லுவதுதான் திரைப்படமாய் விரிகிறது. பாஷா (PASHA) வாக (TOM COURTENY) டாம் கர்டினேவும் VICTOR KOMARASKY- யாக ராட் ஸ்டீகரும் (ROD STEIGER) அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஷிவாகோவாக OMAR SHARIF)-ம் லாராவாக (JULIE CHRISTIE) ஜூலி கிறிஸ்டியும் நடிப்பில் திணறியிருக்கிறார்கள். கோர்பசேவ் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினவர்கள் தாய்நாட்டுக்கே வரும்படி திரும்ப அழைக்கப்பட்டபோது போரிஸ் பாஸ்டர்நாக் உயிருடனில்லை. அவரது கவிதைகள் டாக்டர் ஷிவாகோ நாவல் பணிகளை கெளரவிக்கும் பொருட்டு SOVIET LITERATURE 1990ல் அவரது முழு உருவப்படத்தை முகப்பாய்க் கொண்ட சிறப்பு இதழை வெளியிட்டது.

இனி, நமது பயாஸ்கோப்காரன் தோல்ஸ்தோயின் மாபெரும் நாவலான ‘போரும் அமைதியும்’ குறித்து (WAR AND PEACE) பேசுவதற்காக ரஷ்ய யுத்த பூமியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள இருக்கிறான். இரண்டு பிரமாண்ட திரைப்படங்கள் இந்த நாவலைக்கொண்டு உருவாகின. ஒரு பிரம்மாண்டம் ஹாலிவுட் தயாரிப்பில் 208 நிமிடங்கள் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டது. மற்றொரு பிரம்மாண்டம் சோவியத் ரஷ்ய அரசு நிறுவனத்தால் ரஷ்ய மொழியில் 507 நிமிடங்கள் ஓடக்கூடிய நான்கு பாகங்களில் அமைந்த திரைப்பட உலகே கண்டு பிரமித்த படமாய் தயாரிக்கப்பட்டது. பிறகு ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு அமெரிக்க மேற்கு ஐரோப்பிய ரசிகர்களுக்கென 357 நிமிடங்கள் ஓடக்கூடியதாய் குறைக்கப்பட்ட பதிப்பாகவும் வெளியிடப்பட்டன. நாம் இங்கு இரு பிரமாண்டங்களையும் அறியும் வண்ணம் நமது பயாஸ்கோப்காரன் முதலில் ஹாலிவுட் தயாரிப்பிலான WAR AND PEACE பற்றி பேச இருக்கிறான்.

War and Peace (1956) - IMDb

ஹாலிவுட் தயாரிப்பிலான (WAR AND PEACE), கிங் விடோர் (KING VIDOR) இயக்கத்தில் 1956ல் வெளிவந்தது. கிங் விடோர் மிகவும் பிரமாண்ட வகைத் திரைப்படங்களின் இயக்குனர் என்று அறியப்பட்டவர். இப்படத்தில் ஏராளமான பாத்திரங்கள் வந்து போனாலும் மகாபாரதம் போன்ற பரந்து விரிந்த நாவலை 208 நிமிடங்களில் ஓடக்கூடிய திரைப்படமாய் அமைப்பதில் ஒரு வரைபடம் தேவைப்பட்டிருக்கும். முக்கியமாய் நான்கைந்து கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களைச் சுற்றி ஒரு காதல் கதையை மாபெரும் போர் ஒன்றின் சூழலில் அமையுமாறு தோல்ஸ்தோய் நாவல் வடிக்கப்பட்டதுபோல கிங் விடோரும் படமாக்கியுள்ளார். ரஷ்ய பிரபுத்துவ குடியைச் சேர்ந்த அழகிய இளம் பெண் நடாஷா (NATASHA) என்பவளை மையப்படுத்தியே படம் நகர்கிறது. இளவரசன் ஆண்ட்ரீ (ANDRIE) பிரபு அந்தஸ்து கொண்ட இளைஞன் பியர் என்ற முக்கியப் பாத்திரங்களோடு படம் தொடங்குகையில் நடாஷாவுக்கு வயது பதினாறு. நெப்போலியன் போனபர்ட் 1812-ல் மாஸ்கோ மீது படையெடுத்து வருகிறான். ரஷ்ய இளைஞர்கள் எல்லாம் ‘போருக்குப் போரேண்டி பாதர் வெள்ளை’ கணக்காய் கவசமணிந்து செல்லும் காட்சி பிரமிப்பானது. ஆனால், பிரிட்டிஷ் விமர்சனப் பார்வையில் இந்தப் படத்தில் ரஷ்ய கதாபாத்திரங்களாய் ஒப்பனை செய்து நடிக்கவிடப்பட்டவர்களில் ஒன்றுகூட தோல்ஸ்தோயின் கதாபாத்திரங்களுடன் பொருந்தவில்லை. ஆனாலும் அலுப்பினறி ரசிக்கும்படியாய் ஒரு வெகுஜன திருப்தியை நிறைவு செய்யக்கூடிய படம் என்பதாக அந்த விமர்சகர்கள் எழுதினார்கள். ஆறு திரைக்கதை வசனகர்த்தாக்கள்- அவர்களில் ஒருவராய் இயக்குனர் கிங் விடோரும் இருக்க. தோல்ஸ்தோயின் நீண்ட நாவலை எடுத்துக்கொண்டு திரைக்கதை, வசனம் எழுதி வடிவமைத்திருக்கிறார்கள் என்று பெருமைப்படுகிறது நிறுவனம். நான்கு குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதைதான். இந்த ஆறு பேர் கூட்டு திரைக்கதை வடிவமைப்பில், மாளிகைகள், உள் புறத்தோற்றம், கோச்சு வண்டிகள், பனியில் சக்கரமில்லாத குதிரைகளால் இழுத்தோடும் TRAIKA வண்டிகள், பால்ரூம் நடனம், போர்க்காட்சி என்று வாரியிறைக்கப்பட்ட பிரமாண்டம், திரைக்கதை கர்த்தாக்கள் மீது ஒரு மரியாதை உண்டுபண்ணும் தன்மை. எல்லாவற்றுக்கும் மேலே பெருத்த நாவலை மூன்று சொச்ச மணிநேரப் படமாய் ஓட்டுவதில் முழுக் கவனமும் செலுத்தி கதையை அதற்கேற்றபடி குறைத்து வைத்திருப்பதில் ஒரு வெற்றிடமும் தலைதூக்குகிறது.

ஒரு புறம் போர். மறுபுறம் காதல். நடாஷா மீது இளவரசன் ஆண்ட்றீக்கு காதல். ஆண்ட்றீக்கு மனைவியில்லை. ஒரே ஒரு பையன் உண்டு. அனடோலி என்னும் திருமணமான – பெண் பித்தனான ஒருவனுக்கும் நடாஷா மீது மோகம். கண்ணியமான இளம் கனவான் பியருக்கும் நடாஷா மீது காதல். இவ்வளவு காதல்களும் ஒரு பெரிய பால்ரூம் நடனத்தின்போது வெளியாகும் தருணம் அற்புதமானது. அனடோலி தன் சகோதரியின் மூலமாக நடாஷாவுக்கு தன் காதலை தெரிவிக்க முயலும் காட்சியும் அனடோலியின் வலையிலிருந்து அவளைக் காப்பாற்றும் பியரின் முயற்சியும் அற்புதம்.

நெப்போலியனுக்கு ஒரே மோகம்- மாஸ்கோ மீதுதான். அதைப் பிடித்துக்கொள்ள போர் மூள்கிறது. இளவரசன் ஆண்ட்றீயே கர்னல் பதவியில் உயர்ந்து மாஸ்கோ தூதனாக நெப்போலியனிடம் எடுத்து வரும் சமாதானம் ஏற்கப்படாமல் யுத்தம் தொடருகிறது. போரோடினோ (BORODINO) எனுமிடத்தில் நடைபெறும் போர் ஒன்றே WAR AND PEACE நாவலின் உச்சகட்டம். பாஸ்டர் நாக் எழுதிய டாக்டர் ஷிவாகோ நாவலை வாசித்தவர்கள் படத்தைப் பார்த்தபோது அறிந்திருப்பார்கள். நாவலில் முதல் 200 பக்கங்கள் ஷிவாகோவின் குழந்தை- சிறு வயது நிகழ்வுகளாய் தாயன்பு, அரவணைப்பு என்று போகும். அந்த 200 பக்க நிகழ்வுகள் இல்லாமலும் ஷிவாகோ திரைப்படம் அருமையாக அமைய முடியும் என்ற ஸ்கெட்சில்தான் டேவிட் லீன் தன் பணியை அதி சிறப்பாக செய்து முடித்தார். WAR AND PEACE-லும் திரும்பத் திரும்ப வந்து போகும் காதல் உறவாடல்கள், பால் ரூம் நடனங்கள், மது அருந்தும் காட்சிகள், என்று ஒரு 250 பக்கங்களைக் கொண்டவை. கிங் விடோரும் அவற்றையெல்லாம் வடிகட்டி தம் முழு கவனத்தையும் போரோடினோ போர்க் காட்சி நிகழ்வுகளில் குவித்திருக்கிறார். இந்தப் போர்க் காட்சிக்குப் பின் திரைப்படம் புதிய திருப்பத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது. நாமும் நிமிர்ந்து உட்காருகிறோம். போரோடினோ போரில் ரஷ்யப் படைகள் வெகுவாக நாசமடைகின்றன. ஆனால் பிரெஞ்சு படைகளும் அவஸ்தைப்படுகின்றன. உணவுப் பற்றாக்குறையால் நெப்போலியன் பெரிய பிரச்சினைக்குள்ளாகிறான். அவர்களிடமுள்ள உணவுக் கையிருப்பு காலியாகிறது.

War and Peace (1956) | Christina Wehner

நெப்போலியன் மாஸ்கோவுக்குள் நுழையப்போகும் விஷயம் மாஸ்கோ-ரஷ்யக் குடும்பங்களை நகரையே காலி செய்துவிட்டு சகலத்தையும் உருட்டிச் சுருட்டிக்கொண்டு காடு மேடு என்று எங்கெங்கோ ஓடி ஒளியச் செய்து விடுகிறது. போகும்போது ரஷ்யர்கள் உணவுப் பொருட்களையும் தங்களோடு எடுத்துச் சென்று விடுகின்றனர். போகும்போது ரஷ்யர்கள் உணவுப் பொருட்களையும் தங்களோடு எடுத்துச் சென்று விடுகின்றனர். ரஷ்ய விவசாயிகள் பயிர்களை தீயிட்டுக் கொளுத்தி அழித்துவிட்டே ஓடிவிடுகின்றனர். ரஷ்யப் படைகளும் காட்டுக்குள் பிரெஞ்சுப் படைகளும் மாஸ்கோவுக்குள் நுழைந்து உணவுப்பொருட்கள் இல்லாததால் வீடுகளை தீயிட்டு அழிக்கிற செயலை நெப்போலியன் நிறுத்த கட்டளையிடுகிறான் உணவில்லாத நெப்போலியன் நிறுத்த கட்டளையிடுகிறான். உணவில்லாத நெப்போலியன் சடுதியாக தன் நாட்டுக்கே திரும்பிப்போக முடிவு செய்தவன் படைகளை திரும்பிச் செல்லச் செய்கிறான். குளிர்காலமும் பனியும் கூடவே மழையும் ஆரம்பமாகிவிடுகிறது. ரஷ்ய குளிர் நெப்போலியனுக்கும் பிரெஞ்சுப் படைக்கும் மரண அடியாகிறது. பணியிலும் சேறு சகதியிலும் உணவின்றி குதிரைகளும் சிப்பாய்களும் சுருண்டு விழுந்து இறக்கும் காட்சி பயங்கரமாய் படமாக்கப்பட்டுள்ளது. போர் நடப்பதை பார்க்கச் சென்று போர்க்களத்தில் எதிரிகளிடம் கைதாகி நடந்துபோகிறான் பியர். போரில் அடிபட்டு இளவரசர் ஆண்ட்றி இறந்து போகிறான். அவனது உயிரற்ற உடலருகில் அமர்ந்து கண்ணீர்விடும் நடாஷாவின் காதலும் கரைகிறது.

பழிவாங்கத் துடிக்கும் ரஷ்யப் படைகள் திரும்பிச் செல்லும் பிரெஞ்சுப் படைகளைத் துரத்திச் சென்று மாஸ்கோ எல்லையிலுள்ள ரஷ்ய நதியான பெரெசினா (BERESINA) மீதுள்ள நீண்ட பாலத்தை பிரெஞ்சுப் படைகள் நெருக்கியடித்துக்கொண்டு கடக்கையில் ரஷ்யப் படையினரின் பீரங்கிகளால் பாலம் தகர்க்கப்பட்டு பெரும்பகுதி பிரெஞ்சுப் படை அழிகிறது. நெப்போலியன் தப்பித்து ஓடிவிடுகிறான்.

பியர் உயிரோடு திரும்பி வருகிறான். ஓடிப்போன மாஸ்கோ மக்கள் திரும்பி வருகின்றனர். பியரும் நடாஷாவும் இணைகின்றனர். பெரெசினா பாலம் தகர்ப்புக் காட்சியும், போரோடினோ போர்க்காட்சியும் மெய்சிலிர்க்க வைப்பவை.

‘‘எனக்குப் பிடித்தமான விஷயம், உண்மையைச் தேடுவதுதான்,’’ என்கிறார் இப்படத்தின் இயக்குனர் கிங் விடோர். இதுதான் தோல்ஸ்தோயின் மாபெரும் நூலான WAR AND PEACE-ன் மிக முக்கியக் கருத்தும், படத்தின் இறுதியில் பியர் அடையாளம் தெரியாத முகத்தோற்றத்தோடு இடிபாடுகளிடையே நடாஷாவைத் தேடிவரும் இறுதிக் காட்சி. அவனுக்குப் பின்னால் தோல்ஸ்தோயின் புத்தக வரிகளை அசரீரியாக ஒரு குரல் ஒலிக்கச் செய்கிறது. ‘‘மனிதனின் இதயத்தில் என்ன இருக்கிறதென்பதை கண்டுணரும்படி வற்புறுத்தப்பட்ட மனிதன்தான் பியர்.’’

War and Peace (1956) | film freedonia

அனுபவம் மிக்க நடிகர் ஹென்றி ஃபோண்டா (HENRY FONDA) பியர் பாத்திரத்திலும், மெல் ஃபெர்ரர் (MEL FERRAR) இளவரசர் ஆண்ட்றீயாகவும் நடாஷாவாக ஆட்ரி ஹெப்பர்னும் (AUDREY HEPBURN) நடித்திருக்கிறார்கள். இவர்கள் மூவருமே தோல்ஸ்தோயின் ரஷ்யப் பாத்திரங்களாய் நமக்குத் தோன்றவேயில்லை. வழக்கமான அமெரிக்க ஹாலிவுட் நட்சத்திரங்களாகவே முகமொழி, உடல் மொழிகளில் தெரிகிறார்கள். மேலும் ஜான் மில்ஸ் (JOHN MILLS), ஹெர்பர்ட்லாம் (HERBERT LOM) விட்டோரியா காஸ்மன் (VITTORIO GASMAN) ஆகிய அனுபவமிக்க நடிகர்களும் ஏதோ கெளரவக் கலைஞர்கள் போலவே வந்துபோகிறார்கள். ஒளிப்பதிவுக் காரியத்தை கேமரா கலைஞர் ஜாக் கார்டிஃப் (JAK CARDIF) செய்துள்ளார். தோல்ஸ்தோய் வாசகர்களும் WAR AND PEACE சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்த அசல் ரஷ்யக் கலைஞர்களைக்கொண்டு அசல் ரஷ்ய இயக்குனரால் உருவாக்கப்பட்ட சோவியத் ரஷ்ய அரசின் தயாரிப்பிலான பிரமாண்ட திரைப்படம் WAR AND PEACE பற்றி அடுத்து வரும் பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

போரிஸ் பாஸ்டர்நாக்போல மற்றொரு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் அலெக்சாண்டர் சால்செனிட்ஷின் (ALEXANDER SOLZHENITSYN). இவரது இரு நாவல்கள் கான்சர் வார்டு (CANCER WARD) மற்றும் ‘ONE DAY IN THE LIFE OF IVAN DENISOVICH’ என்பவை முக்கியமானவை. இவரது படைப்புகளும் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டு நெருக்கடிக்கிடையே இவர் சுவிட்சர்லாந்து வழியே நாடு கடந்து அமெரிக்காவுக்கு ஓடியவர். ஆனால் தம் வேர்கள் ரஷ்ய மண்ணில்தான் உள்ளனவென்றும் அந்நிய மண்ணில் தன்னால் ரஷ்யப் படைப்பு ஏதும் செய்ய இயலவில்லையென்று கூறி வந்தவர். இறுதிக் காலத்தில் ரஷ்யாவுக்குத் திரும்பி வந்து அங்கே காலமானார். இவரது ‘இவான் தெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்’ நாவல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றதோடு, அந்நாவலை சிறந்த முறையில் பிரிட்டிஷ் திரைப்படத் தயாரிப்பாளர் திரைப்படமாக்கினார். அலெக்சாண்டர் சால்செனிட்ஜின் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதால் 1945ல் கைது செய்யப்பட்டு காரகண்டா (KARAGANDA) சிறை முகாமில் எட்டாண்டுகள் சிறைத் தண்டனையனுபவித்தார். அந்தக் கைதி முகாம் வாழ்க்கையனுபவந்தான் ‘இவான் தெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்’ எனும் நாவல். இதை வைத்துச் செய்யப்பட்ட திரைப்படம் 1971ல் வெளிவந்தது. பிரிட்டன்- நார்வே கூட்டுத் தயாரிப்பான இம்மாபெரும் வண்ணத் திரைப்படம் காஸ்பர் வ்ரிட் (CASPER WREDE) எனும் பிரிட்டிஷ் இயக்குனரால் சிறப்பாக இயக்கப்பட்டது. அரசியல் குற்றத்துக்காக சைபீரிய சிறை முகாமில்- கடுங்குளிரில் – உறை – பனியில் பத்தாண்டு சிறைத் தண்டனை பெற்ற இவான் தெனிசோவிச் தன் தண்டனைக் காலம் முடியும்வரை படும் மனம்- உடல் நரக வேதனைகளின் ஒரு நாள் சித்திரம்தான் படம்.

One Day In The Life Of Ivan Denisovich (#255) And The, 60% OFF

படத்தின் தொடக்கம்- அதிகாலை வேளையில் கைதிகள் முதல் நாளிரவு வரை வழிய வழிய நிரம்பியுள்ள கக்கூஸ் டிரம் வண்டிகளை இழுத்துச் சென்று வெகுதூரத்தில் அதற்கெனவுள்ள பள்ளங்களில் கவிழ்த்துக் கொட்டி மூடிய பின் டிரம்களைச் சுத்தம் செய்து எடுத்துவரும் அருவருப்பாயும் – ரஷ்யக் கைதிகளுக்கு விதிப்பயனாகவுமிருந்த காட்சி திடுக்கிட வைக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் கைதி வாழ்க்கையை நாமும் இவானோடு சேர்ந்து அனுபவிக்கிறோம். மிக மிக தத்ரூபமாயிருக்க வேண்டுமென்ற கருத்தான கவனத்தில், கைதிகளின் உள் மனப் போராட்டங்களை உடல் மொழியில் கொண்டுவரும் முக்கியக் காரியத்தில் கண்ணயர்ந்து விட்டார் வ்ரீட். ஆனால் அதை இட்டு நிரப்பும் விதமாய் தம் அதியற்புத கேமரா கோணங்கள் வழியே படத்தைச் சிகரத்துக்கு இட்டுச் செல்லுகிறார் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட். ஸ்வென் நிக்விஸ்ட் (SVENNYKVIST) உலகின் தலை சிறந்த திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும், ஸ்வீடிஷ் திரைப்பட மேதை இங்மர் பெர்க்மனின் (INGMAR BERGMAN) கேமராமேனுமாவார். இவான் தெனிசோவிச் பாத்திரமேற்று மிகச் சிறப்பாக நடித்திருப்பவர் டாம் கர்டினே (TOM COURTENAY).

இத்தோடு ரஷ்ய நாவல்கள் அமெரிக்க – ஐரோப்பிய இயக்குனர்களால் அந்நாட்டுக் கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்த படலம் முடிவுறுகிறது. இணையாக அவற்றில் சில ரஷ்ய இயக்குனர்களால், அசல் ரஷ்யத் திரைப்படங்களால் உருவாக்கம் கொண்டவையும் பார்த்தோம். மேற்கொண்டு அடுத்துவரும் பகுதிகளில் ரஷ்யக் கதைகள் அசல் ரஷ்ய மொழித் திரைப்படங்களாய் ரஷ்யத் திரைப்பட இயக்குனர்களால் உருவாக்கப்பட்டதைப் பார்ப்போம்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *