சோவியத் ரஷ்ய சினிமா – 3
ஒரு மாபெரும் சோவியத் ரஷ்ய திரைப்படம். பிரிட்டிஷ் விமர்சகர்கள் TOM MILNE மற்றும் DEREK ADAMS என்பவர்கள் இந்தப் படத்தைப் பற்றி விமர்சிக்கையில், “COMPARED TO THIS 70 M.M. MONSTER, (5 EARS IN THE MAKING, AND RUNNING 507 MINUTES IN ITS ORIGINAL RUSSIAN VERSION), MOST OTHER EPICS HAVE THE VISUAL DIMENSION OF AN EDGAR WALLAGE POTBOILER” என்று குறிப்பிடுகிறார்கள். படம், லியோ தோல்ஸ்தோயின் பிரமாண்ட நாவல் WAR AND PEACE-ஐ வைத்து எடுக்கப்பட்ட காவியக் காட்சிரூபம். ரஷ்யக் மொழியில் எடுக்கப்பட்ட காவியக் காட்சிரூபம். ரஷ்ய மொழியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஆங்கிலம் உட்பட 16 சர்வதேச மொழிகளில் SUBTITLE சேர்க்கப்பட்டு நான்கு பாகங்களாய் தயாரிக்கப்பட்டது. சின்னஞ்சிறு நுணுக்கமான விவரங்களிலிருந்து பிரமாண்ட அளவிலான யுத்தக் காட்சிகள் வரை உண்மைபோன்ற நிஜத் தோற்றத்தையே கொண்டிருக்குமாறு அமைவதை வேண்டி இயக்கித் தயாரித்தார் இயக்குனர் செர்காய் போன்டர்சுக் (SERGEI BONDARCHUK) ரோஸ்டோவ் எனும் கதாபாத்திரத்தின் வீட்டுக்குள் எரியும் மெழுகுவர்த்தியின் பித்தளைத் தாங்கி ஒரு திடசகாத்திர மனித வடிவிலிருப்பதையும், இளவரசன்போல் கோன்ஸ்கி (BOL KONSKY)யின் படிப்பகத்திலுள்ள 19ம் நூற்றாண்டு பூகோள உருண்டையையும் சொல்லலாம். இயக்குனர் தேவையை உத்தேசித்து 58 சோவியத் யூனியன் மியூசியம்கள் தங்களிடமுள்ள அரும்பொருட் சேகரிப்புகளிலிருந்து அவருக்குத் தேவைப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்து குவித்தன.
இப்படம் சோவியத் ரஷ்யாவின் அரசுத் தயாரிப்பாகும். ஆயிரக்கணக்கான சோவியத் ஒன்றியப் பிரஜைகள் தம் சொந்த சேகரிப்பிலிருந்த பழம்பொருட்களை இயக்குனர் போன்டர்சுக் விடுத்த வேண்டுகோளைப் படித்தபிறகு கொண்டுவந்து இரவலாக வைத்து உதவினர். எனவே இம்மாபெரும் திரைப்படம் ‘மக்கள் பங்களிப்பு இணைந்த அரசுப் படைப்பு’, என அழைக்கப்பட்டது.
படத்தின் தலைமை ஒளிப்பதிவாளர் (CHIEF CINEMATOGRAPHER) அனடோலி பெட்ரிட்ஸ்கி (ANATOLI PETRITSKY) மற்றும் ஆர்ட் டைரக்டர் மிஹேய்ல் போக்டொனோவ் (MIKHAIL BOGDANOV) மற்றுமுள்ள அவர்களின் குழு உறுப்பினர்கள் உண்மையான அசல் மாளிகைகளுக்குள்ளும், தோல்ஸ்தோயின் நாவலில் சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கான நிஜமான இடங்களிலேயே தங்கிப் பணிபுரிந்து ஒளிப்பதிவாக்கினர். நாவலில் ரஷ்யத் துருப்புகளுக்கும் நெப்போலியன் படைக்கும் போரோடினோ (BORODINO) எனுமிடத்தில் நடைபெற்ற போரும் ஆஸ்டெர்லிட்ஸ் (AUSTERLITZ) மற்றும் ஸ்கோங்ரபெர்ன் (SCHONGRA BERN) ஆகிய இடங்களில் ஆஸ்திரியப் படைகளோடு இணைந்து பிரெஞ்சு படைகளுக்கு எதிராக ரஷ்யப் படைகள் புரிந்த போர்க் காட்சிகளையும் படத்துக்காக நடக்கவிட்டு படமெடுக்க தனிப்பட்ட கருவிகள் தேவைப்பட்டன. சோவியத் ரஷ்ய அரசு செலவிலான திரைப்படமாதலால் உடனே டைரக்டருக்கு அக்கருவி தருவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இந்த ரஷ்ய 70 M.M. திரைப்படம் WAR AND PEACE (VOINA I MIR) 1967ல் எடுத்து முடிக்கப்பட்டு திரையிடப்பட்டது. அசல் ரஷ்யத் திரைப்படம் 507 நிமிடங்கள். நான்கு பகுதிகளால் ஓடக்கூடியதாய் அமைந்தது. முதல் இரு பகுதிகள் சென்னை சஃபையர் திரையரங்கிலும் அடுத்த இரு பகுதிகள் சோவியத் கலாச்சார மையத்து திரையரங்கிலும் திரையிடப்பட்டன. அமெரிக்க- ஐரோப்பிய சினிமா ரசிகர்களுக்காக 357 நிமிடங்கள் ஓடக்கூடியதாய் குறைக்கப்பட்டு – உரத்துப் பேசிய அமெரிக்க ஆங்கிலக் குரல்களோடு அங்கு திரையிடப்பட்டது. படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்று 16 வயது நடாஷா ரோஸ்டோவா NATASHA ROSTOVA இப்படத்தில் நடித்த 17-18 வயதேயான இளம் பாலே நடனக்கலைஞரான லூட்மிலா சவல்யெவா (LUDMILA SAVELYEVA) எனும் பெண் தோல்ஸ்தோய் தம் நாவலில் வருணித்திருப்பதுபோன்றே இந்தப் பெண் கலைஞர் குதித்து நடிக்கிறார். வளர வளர இவரது நடிப்பும் நாவலுக்குத் தக்கவாறு மாறுகிறது. இயக்குனர் செர்காய் போன்டர்சுர்க் மிகச் சிறந்த நடிகர். இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையிடலைக் காண ஐந்து ஆண்டுகளுக்கு மேலானது. போர்க் காட்சிகள் ஒண்டிக்கு ஒண்டை சண்டை (DUEL), பால்ரூம் நடனங்கள், குதிரைகளால் இழுத்துச் செல்லும் ட்ராய்கா (TROIKA) எனும் சக்கரமில்லாத வண்டிகள், எல்லாமே அதியற்புதமாக கேமரா கோணங்களால் படமாக்கப்பட்டுள்ளன. போரோடினோ யுத்தக் காட்சியில் அடர்ந்த பீரங்கி வெடிப்புகை நடுவே ஏராளமான பீரங்கிகளை இழுத்துக்கொண்டும், நூற்றுக்கணக்கான குதிரைகள் மீதமர்ந்தும், பீரங்கிகளின் வெடிப்பினிடையே 20,000 எக்ஸ்ட்ரா நடிகர்கள் நடித்துள்ளனர். லியோ தோல்ஸ்தோயின் நாவல் போரும் அமைதியும் அப்படியே பூதாகரமான அகன்ற திரையில் நம் முன்னே! இயக்குனரின் அபாரத் திறமை தவிர, அவருக்கு இலக்கியத்தின் பால் கொண்ட நேர்மைமிக்க அக்கறையையும் பாராட்ட வேண்டும்.
முதல் பாகம்: ஆஸ்திரியப் பகுதியிலுள்ள ஆஸ்டெர்லிட்ஸ் (AUSTERLITZE) மீது நெப்போலியனின் பிரெஞ்சுப் படை போர் தொடுக்க, ரஷ்யா ஆஸ்திரியாவைக் காப்பாற்ற பிரான்ஸை எதிர்த்துப் போரில் இறங்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. பிரமாண்டம் என்பதைக் காண வியப்பு ஏற்படுகிறது. பிரமாதம் என்பது கலாரசனை பாற்பட்டது. பிரமாண்டமும் பிரமாதமும் இணைந்ததுதான் தஞ்சை பெரிய கோயில், ஹம்பி, ஆக்ரா கோட்டை என்பதெல்லாம், சினிமாவில் பிரமாண்டமும் பிரமாதமும் எனும்போது சட்டென்று சொல்ல எனக்கு இரண்டு திரைப்படங்களே முன்வருகின்றன. ஒன்று ஸ்டான்லி கூப்ரிக் (STANLEY KUBRIC) படைத்தளித்த ‘2001- A SPACE ODYSSEY’ மற்றொன்று செர்காய் போன்டர்சுக் உருவாக்கியளித்த ‘WAR AND PEACE’ படமும்.
முதல் பாகத்தின் தொடக்கத்தில் அசரீரியாய் ஒலிக்கும் முதற் சொற்றொடரில், ‘நல்ல மனிதர்களின் ஒன்றுபட்ட மனத் திட்பத்தால் அநீதியையும் கொடுமையையும் வெல்ல முடியும்’ எனும் வார்த்தைகளின் அர்த்தமே இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கம் எனப் பேசப்படுகிறது. இறுதியில் அமைதியே யுத்தத்தை வெற்றிகொள்ளும் எனும் உரை படத்தின் தொடக்கத்தில் ஒரு குறியீடாக நமக்குக் காட்டப்படுகிறது. திரை முழுக்க ஒரு கணத்துக்கு கருமையான வெளி பூமியின் அகலத் திறந்த இருள் மயக் கருமை. உடனே ஒரு பச்சைப் புள்ளி தோன்றி பச்சை நிற வட்டமாய் பெரிதாகி திரை நிறைந்து பயிர் பச்சைகளாய் – இலை கொடி மரங்களாய், வயல்வெளி, பள்ளத்தாக்கு, மா மலைத் தொடர்களாய், நீல நிற ஆற்றோட்டம் சேர, ஒரு பசுமை நம்பிக்கையை உலகுக்கு அளிக்கும் விதமாய் ரஷ்ய WAR AND PEACE- ன் விந்தை ஒளிப்பதிவாளர் அனடோலி பெட்ரிட்ஸ்கியின் (ANATOLI PETRITSKY) காமிரா கோணங்கள்.
செர்காய் போண்டர்சுக் ஒரு சிறந்த நடிகரும் திரைக்கதையாசிரியரும் நல்ல இயக்குனருமாவார். 1920ல் பையெலோஜியான்கா (BYELOZYONKA) எனும் இடத்தில் பிறந்தவர். 1937- 38 காலத்தில் ஐஸ்க் (EISK) நாடக தியேட்டரில் நடிகராயிருந்தவர். 1938-42 காலத்தில் ரோஸ்டோவ் (ROSTOV) நாடகப் பள்ளியில் நடிப்புப் பயிற்சி முடித்தபின் 1942- 46 கால கட்டத்தில் இராணுவத்தில் சேவை செய்தார். விஜிஐகே (VGIK) கலாகேந்திராவின் நடிப்புக்கான இலாகாவில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தப் பட்டப்படிப்புக்கு ‘டிப்ளமா பணி’யாக ‘இளம்காப்பாளன்’ (YOUNG GUARD) எனும் திரைப்படத்தில் வால்கோ (VALKO) எனும் பாத்திரத்தில் நடித்தார். இதில் நடித்ததற்கு ‘லெனின் பரிசு’-ம் பெற்றார். 1960ல் யு.எஸ்.எஸ்.ஆர். தேசிய பரிசும் பெற்றார். 1952, 77, 84 மூன்றாண்டுகளிலும் HERO of SOCIALIST LABOUR விருதையும் WAR AND PEACE சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற ஆஸ்கர் விருதையும் 1968ல் பெற்றார். போன்டர்சுக் ஏராளமான ரஷ்யத் திரைப்படங்களில் நடித்தும், படங்களை இயக்கியுமிருக்கிறார்.
WAR AND PEACE ரஷ்ய ‘படத்தின் முதல் பகுதியில் நடாஷாவை சில கணங்களுக்கே நாம் சந்திக்க முடிகிறது. உடனே அடுத்து யுத்தக் காட்சியிலிருக்கிறோம். மான்குட்டிபோல துள்ளியோடிக்கொண்டே தன் வயது (16 வயது) தனக்கும் சிறிய வயதுக் குழந்தைகளோடான அவளது துள்ளல் வாழ்க்கை. ஹாலிவுட் WAR AND PEACE படத்தில் நடாஷாவை ஆரம்பம் முதல் இறுதிவரை படம் முழுக்க காட்டுவதோடு, அறிமுகம் முதலாகவே அவள் தனக்கான ஆண் துணையைத் தேடும் மனம் முதிர்ந்த பெண்ணாகவே காட்டுகிறார். அதன் அமெரிக்க இயக்குனர் கிங்விடோர், ரஷ்யப் படத்தில் அவளைக் குழந்தைப் பருவத்திலிருந்து யவ்வனத்தை எட்டும் பருவப் பெண்ணாகக் காட்டுகிறார் போன்டர்சுக். கோல்ஸ்தோயும் அவ்விதமாகத்தான் நாவலில் எழுதியிருப்பார். ரஷ்யப் படத்தின் கதைச் சுருக்கம் போன்றது என்றுகூட ஹாலிவுட் படத்தைச் சொல்ல முடியாது. ஏராளமான கதாபாத்திரங்களில் முக்கியமானவற்றை விவரப்படுத்துவது நாவலை வாசிப்பவர்களுக்கும் படத்தைக் காண்பவர்களுக்கும் உதவியாக இருக்கக்கூடும்.
பியர் (PIERRE) தகாத வழியில் பிறந்தவன். (AN ILLEGITIMATE SON) மிகவும் மரியாதைக் குரியவன். பியருக்கு திடீரென நடந்த திருமணம் இரண்டு WAR AND PEACE படங்களிலுமே காட்டப்படவில்லை. மூல நாவலிலும் மிகச் சுருக்கமாகவே இருக்கும். இந்த சமயம் ஆஸ்திரியாவின் ஆஸ்டெர்லிட்ஸ் (ASTERLITZE) எனுமிடத்தில் நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவமும் ரஷ்ய ஆஸ்திரியப் படைகளும் கடும் போரிலீடுபடுகின்றன. பியரின் உறவுக்காரப் பிரபு ஒருவரின் மரணக் காட்சி கலங்க வைக்கிறது. அவர் தமது உயிலில் தம் எல்லா ஆஸ்திகளையும் பியருக்கு எழுதிவைத்துவிட்டு இறக்கிறார். பியர்- பிரபு அந்தஸ்தையடைகிறார். ஹாலிவுட் தயாரிப்பில் இதெல்லாம் இல்லை. பியரின் மனைவிக்கும் டோலோகோவ் என்பவனுக்கும் கள்ள உறவு இருந்துவருவதை பொதுவிடம் பேசிக்கொள்கிறது. ஒரு விருந்தின்போது இந்த விவகாரம் பியரின் மானப் பிரச்சினையாகும் நிலையில் பியரும் டோலோகோவும் ஒண்டிக்கொண்டி (DUEL) சண்டைக்குத் தயாராகின்றனர். துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தெரியாத பியர் டோலோகோவை பனி நிறைந்த வெளியில் எதிர்கொண்டு சுட்டுவிட டோலோகோவும் (DOLOKTTOR) விழுகிறான். “மண்ணைக் கவ்வினான்” என்பது ஐரோப்பாவிலுமுண்டுபோலும். டோலோகோவ் பனித்திரளைக் கவ்வுகிறான். ஆனால் இறப்பதில்லை.
இளவரசன் ஆண்ட்றீ (AUNDRIE) பிரெஞ்சு இராணுவத்தால் கைதாகி, பிறகு தப்பித்து ஓரிரவில் மாளிகை திரும்பும் நேரத்தில் அவனது நிறைமாதக் கர்ப்பிணியான மனைவி லிஸா (LIZA) பிரசவிக்கையில் இறந்துவிடுகிறாள். ஆண்ட்றீயின் சகோதரி இளவரசி மரியா பிரசவத்தின்போது துணையிருந்தவன், ஆண்ட்றீயிடம் கூறும் காட்சியும், மரியாவின் இறந்த உடலையும் குழந்தையின் அழுகுரலையும் கேட்டு துக்கமும் அழுகையும் திடுக்கிட்ட ஆனந்தமுமான ஆண்ட்றீயின் நடிப்பு அருமை. இந்த நிகழ்வு ஹாலிவுட் திரைப்படத்தில் இல்லவேயில்லை. ரஷ்யப் படத்தில் ஆண்ட்றீயின் மனைவி பிரசவத்தின்போது இறப்பதையும் குழந்தை கதறுவதையும் காட்டுகிறார் போன்டர்சுக். ஆனால் ஹாலிவுட் படத்தில் இளவரசர் ஆண்ட்றீ மனைவியிழந்தவன் என்று பேச்சுவாக்கில் சொல்லுவதோடு ஆறுவயதுப் பையனாக அவனது குழந்தையை வளர்த்துக் காட்டுகிறார் கிங் விடோர்.
ஒரு மாபெரும் ஓநாய் வேட்டைக் காட்சி இடம் பெறுகிறது. இப்படத்தில் மறக்க முடியாத காட்சி. அகிரா குரோசாவாவின் ‘RAN’ திரைப்படத்தில் வரும் காட்டுப்பன்றி வேட்டைக்குச் சமமானது இந்த ‘HERMIT WOLF’ எனப்படும் உயர்ந்த வகை ஓநாய் வேட்டை இந்த வேட்டையில் நடாஷாவும் அவளது சினேகிதியும் குதிரை மீதமர்ந்து கலந்துகொள்ளுகிறார்கள். இரண்டு ஓநாய்கள் பாய்ந்தோட… அவற்றைப் பிடிக்க ஐம்பது வேட்டை நாய்களும் குதிரை மீதமர்ந்த வேட்டைப் பிரியர்களும் துரத்துகின்றனர். வேட்டை நாய்களைத் தொடர்ந்து குதிரை மீது ஏறிய வேட்டைக்காரர்கள் தறிகெட்டு குதிரைகளைச் செலுத்துகையில் ஒரு முதிய வேட்டைக்காரர் கூறும் வார்த்தைகள்:
‘ஜாக்கிரதை, ஜாக்கிரதை, உங்கள் குதிரைகள் வேட்டை நாய்களை மிதித்துக் கொன்றுவிடக்கூடும்!’
“இரு ஓநாய்களில் ஒன்று தப்பித்து மறைய, ஓர் ஓநாயை ஏழெட்டு வேட்டை நாய்கள் சூழ்ந்து பாய்ந்து கவ்விக்குதா, வேட்டைக்காரர்கள் ஓநாயின் வாயை தோல் பூட்டால் கட்டிப் பூட்டி, கால்களையும் கட்டிவிடுகின்றனர். அந்த வேட்டைக்காரர் மாட்டிக்கொண்டு வாயைத் திறக்க முடியாமல் பூட்டப்பட்டு கால்கள் கட்டப்பட்ட ஓநாயின் கண்களையே உற்றுப் பார்க்கிறார். ஓநாயும் அவரது கண் தீட்சண்யத்தை தன் கண்களால் எதிர்கொண்டு பார்க்கும் அரிய காட்சி. மனிதக் கண்களோடு மிருகக் கண்கள் முறைக்கும் மிக அருகாமை கேமரா கோணம். 70.M.M. திரை முழுக்க ஓநாயின் இரண்டு கண்கள் – நம்மையே கண்டு அச்சுறுத்தும் வண்ணத்தில் மிக அரிய அற்புத கேமரா கோணம்-ஒளிப்பதிவாளர் அனடோலி பெட்ரிட்ஸ்கியின் கேமரா. இதுவும் ஒருவித குறியீட்டுத் தனமான ‘போரும்
அமைதியும்’தான்.
அன்றிரவு தங்கலாக நடாஷாவையும் அவளது சினேகிதி சோனியாவையும் மாமன் உறவிலுள்ள ஒருவரின் காட்டு வீட்டில் தங்கச் செய்கின்றனர். அவரது அழகிய மனைவி தர்க்மெனிஸ்தானைச் சேர்ந்தவள்.
அவள் நாட்டுக் கலாச்சாரத்தைப் பேணுபவளாய் அந்த வகை அழகான உடையையணிந்தவள். தன்னாட்டு உணவு வகையறாக்களை வைக்கிறாள். அப்போது ரஷ்யாவின் ஆத்மார்த்தமான இசைக்கருவி பாலலேய்காவை (BALALAIKA) யாரோ மனதை உருக்குமாறு இசைக்கிறார்கள். யார் வாசிப்பது என்று நடாஷா கேட்கவும், “கோச்சு வண்டிக்காரர்தான் வாசிக்கிறார். அவர் நல்ல பாலலேயகா வாத்திய இசைக்காரர். அவருக்கு நான் வாங்கித் தந்த புது பாலலேய்காவை வைத்து வாசிக்கிறார்”, என்கிறார் மாமா. மாமாவையும் இசைக்க கேட்கிறார்கள். மாமா உடனே கிடாரை எடுத்து அற்புதமாக சுண்டி வாசிக்கிறார். வெளியிலிருந்து கோச்சு வண்டிக்காரர் பாலலேய்காவை வாசிக்கும் மனமுருக்கும் இசையும் உள்ளே மாமா வாசிக்கும் கிடார் இசையும் நம்மோடு நடாஷாவையும் நர்த்தனமாட வைக்கிறது. சட்டென்று எழுந்து நடாஷா பாலே நடனம் ஆடுகிறாள். இந்தக் காட்சி மிக அற்புதமானது.
மறுநாள் நடாஷா இளவரசர் ஆன்ட்றீயின் வீட்டை அடைகிறாள். அவளையும் அவளது சகா சோனியாவையும் வயதில் ஒத்த இளம்பெண்கள் அங்கு ஒரு மாபெரும் பால்ரூம் நடனத்தில் கலந்துகொள்ள ஒன்றுகூடும் காட்சி மற்றொரு வியத்தகு ஏற்பாடு. ஜார் மன்னர், அரசி மற்றும் பரிவாரங்களோடு வருகை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அந்த பால்ரூம் நடனத்தை பிரமாண்டமாக்குவதில் இருந்தனர். அந்நடனத்தில் நடாஷா கலந்து கொள்ளுகிறாள். அவளுக்கு அதுவே முதல் முறை. இளம் பெண்களும் நடுத்தரங்களும் முதிய பெண்களும் உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் அலங்கரித்துக்கொள்ளுவதிலும் ஏற்படுத்தும் கால தாமதமும் பெண்களின் சர்வதேசமயமான விஷயமாய் தெரிகிறது. தாதிமார்கள் துரிதப்படுத்த எல்லாரும் பிரமாண்டமான மாளிகையின் நடன அரங்கை அடைகின்றனர். ஐரோப்பிய நாடுகளிலும் இன்று காணாமற்போன மாபெரும் பால்ரூம் நடனக் கலாச்சாரம் இத்திரைப்படத்தில் அசத்துகிறது. அனேகமாய் எல்லோருமே ஆணும், பெண்ணுமாய் கைகோர்த்து மிடுக்காக வருகையில் நடாஷாவும் சோனியாவும் மட்டும் தனித்து ஒற்றையாய் நின்றபடி ஜோடிகளைப் பார்த்து நிற்கின்றனர். கடை விரித்தோம், கொள்வாரில்லை கணக்காக, ‘என்னை யாருமே கண்டுக்கல்லையே’, என மனம் முணுமுணுக்க நடாஷா கண் ஈரமாகிறாள்.
அச்சமயம் அங்கு தனியனாக வரும் இளவரசன் ஆன்ட்றீ நடாஷாவை நடனத்துக்கு இணைத்துக்கொண்டு நடனமாடுகையில் இருவர் மனமும் இணைகிறது. அவர்களுக்குத் திருமண ஏற்பாடு நிச்சயிக்கப்படுகையில் நெப்போலியன் யுத்தத்தால் ஓராண்டுக்குத் தள்ளிப் போட்டுவிட்டு போருக்குத் திரும்புகிறான் ஆன்ட்றீ. இந்த ஓரண்டு கால இடைவெளியில் இளமை தடுமாறுகிறது. ஒரு பாலே கலை நிகழ்ச்சிக்கு நடாஷா தன் தந்தையோடு போன சமயம், பியரின் மனைவியும் அவளது தம்பி குராகின் (KURAGHIN) என்பவனும் அங்கு வருகையில் நடாஷாவைப் பார்க்கின்றனர். குராகின் ஏற்கெனவே திருமணமானவன், பெண் பித்தன், நடாஷாவை தன் வசப்படுத்துகிறான். அவனை, தான் மணக்கப்போவதை நடாஷா வெளியிடுகையில், சோனியாவும் மரியாவும் எச்சரிப்பதோடு ஆன்ட்றீக்கு இழைக்கும் துரோகம் என்றும் கூறுகின்றனர். நடாஷா அடம் பிடிக்கிறாள். குராகினுக்கு நண்பனான டோலோகோவும் எச்சரிக்கிறான். எல்லாரையும் அலட்சியப்படுத்திவிட்டு நடாஷாவோடு வெளிநாட்டுக்கு ஓடிவிட முயற்சிக்கிறான் குராகின். அவர்களைத் துரத்தி அவனது திட்டத்தை வீழ்த்துகிறான் பியர்.
நெப்போலியன் போரைத் தீவிரமாக்குகிறான். இச்சமயம் ரஷ்யாவின் தேசிய விடுதலை இயக்கம் என்று ஒன்று அமைக்கப்படுகிறது. டாருண்சியோ காலம் (TARUNTISIO PERIOD) எனப்படும் காலகட்டத்து ரஷ்யாவின் தேசாபிமான யுத்தம் உச்சத்தை அடைகிறது. உக்ரேய்ன், லிதுவேனியா, பைலோரஷியா ஆகிய பகுதிகளை பிரெஞ்சு இராணுவம் ஆக்கிரமிக்கிறது. நெப்போலியன் படையை எதிர்த்து போரிலிறங்குவது ரஷ்யாவிற்கு கட்டாயமாகிறது. ரஷ்ய இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் குடுஸோவ் (GENERAL KUTUZOV) சில தந்திரங்களை வகுக்கிறார். அதாவது குடுஸோவ் திட்டமானது ‘சிறு சிறு போர்கள்’ என போரைப் பிரித்து நடத்துவது. எதிரிகளுக்குப் பின்பக்கமிருந்து 10,000 துருப்புகளை வைத்து அடிப்பது. எதிரியைத் தாக்குவதில் கிராம மக்களையும் விவசையிகளையும் போர்ப் பயிற்சியளித்து ஈடுபடுத்தினார் குடுஸோவ். அவர்களின் குடும்பங்கள் காட்டுக்குள் சென்று மறைந்திருக்க, விவசாயிகள் கிராமங்களைப் பாதுகாக்கின்றனர்.
இப்படத்தின் இது வரைக்குமான முக்கிய காட்சிகளையும் போடப்பட்ட திரைப்பட செட்டுகளையும் வரைபடங்களாகவும் கோட்டோவியங்களாகவும் நீர்வண்ண ஓவியங்களாகவும் ஆர்ட் டைரக்டர் மிகேய்ல் போக்டனோவ் தீட்டியவற்றை திரையில் ஒரு முறை காட்டுகிறார்கள். அற்புதம்!
ஜெனரல் குடுசோவுக்கு வலது கண்ணில் பழுது. எனவே பார்வை சரியில்லை. அவருக்குக் கீழுள்ள அவருக்கு அடுத்த நிலை இராணுவ அதிகாரிகளுக்கு குடுசோவின் பார்வைக் கோளாறும், வயதும், அவர் தங்களை மிரட்டும்போதெல்லாம் தொக்கான விஷயம். படத்தின் இறுதிப் பகுதிக்கு நெருங்கிவிட்டோம். இயக்குனர் போன்டர்சுக்குக்கு இறுதிப் பகுதியில் பொறுப்பும் நெருக்கடியும் அதிகம். அவர் ஏற்று நடித்துக்கொண்டிருக்கும் முக்கியப் பாத்திரமான கெளண்ட் பியர் இனிமேல்தான் இறுக்கமான நடிப்பிலிறங்கும் தருணங்கள்.
இறுதிப் பகுதியான 4-ம் பாகத்தின் தொடக்கம் ஓர் அற்புத பால்ரூம் நடன ஏற்பாட்டோடு அமைகிறது. பால்ரூம் நடனங்களின்போது ஆணும், பெண்ணுமாய் ஓர் இராணுவ ஒழுங்கு வரிசையில் நடந்து வலம் வந்து பிரதான நடனக்கூடத்துக்குள் நுழைந்து ஒரு முனையை அடைந்ததும் ஆண் வேறு, பெண் வேறாகப் பிரிந்து கூடத்தை ஒரு முறை முழுவதுமாய் சுற்றிவந்து பழையபடி தத்தம் பெண்ணோடு ஆண் இணைந்து சற்று அமைதியாக நிற்பார்கள். ஆண்கள் தமது இடதுஅல்லது வலது காலை கொஞ்சமாய் முன்னால் கொண்டுவந்து நின்ற நிலையில் அசையாதிருப்பார்கள். அப்போதைய முக்கியஸ்தர் அந்தஸ்து பெற்ற ஒரு ஜோடி தம் முதல் காலடியை நகர்த்தியதும் ‘பால்’ ஆரம்பமாகிவிடும். என்னமாய் ஓர் இசை- என்னமாய் ஓர் உடல் சுழற்சி. ஆனால் ஆட்டத்தை ரசிக்க விடாமல் ஒருவர் விரைந்து வந்து ஆட்ட நாயகரிடம் குசுகுசுக்கவும் அவர் தம் நடனத்தை நிறுத்திக்கொண்டு விரைந்து எங்கோ போகிறார்.
நெப்போலியன் மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பிடித்தானதும் இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பக்கம் தன் படைகளோடு வந்துவிட்டான், போலந்தில் முகாமிட்டிருக்கிறான். அவனது மாபெரும் ஆசை- மாஸ்கோ மாநகரைப் பிடிக்க வேண்டும்- ரஷ்யாவை கைவசப்படுத்தியாக வேண்டும் என்பதுதான்.
மாஸ்கோவை நெப்போலியன் வந்து பிடித்துக்கொள்ளப்போகிறான் என்ற எதிர்பார்ப்பு ரஷ்ய சமூகத்தின் பல்வேறு மட்டத்திலுள்ள ஏழை- பணக்காரன், அறிவீலி- அறிஞன் இராணுவத்தின் சிப்பாய் முதல் தளபதி வரை, மன்னரின் நெருங்கிய வட்டமான பிரபுக்கள் என ஆண், பெண்களிடையே சோகம், கிலி, ஆத்திரம், தோல்வி மனப்பான்மை வரக்கூடிய இழப்புகள் குறித்த பதைபதைப்பு என பல்வேறு உணர்வுப் பின்னல்களால் பேசிக்கொள்ளும் உரையாடல்களும் முகபாவங்களும் இப்படத்தில் மிக அற்புதமாக இயக்குனர் போன்டர்சுக்கால் கொண்டுவரப்பட்டுள்ளன.
போர்- போர்ககளம், ப்பா, நாம் இதுகாறும் பார்த்துவைத்துள்ள பல்வேறு திரைப்படப் போர்க்காட்சிகளின் பிரமாண்ட பிரமிப்புகளையெல்லாம் தூக்கி மூட்டைகட்டி மூலையில் வைக்கும் பிரமாண்டமும் பிரமிப்பும் கொண்ட போர்க்காட்சி கொண்டது இந்த ரஷ்ய WAR AND PEACE. நூற்றுக்கணக்கில் குதிரைகளும் அவற்றின் மீது அக்காலச் சீருடையில் ஆயுதமேந்திய வீரர்கள். நூற்றுக்கணக்கில் அந்தக் காலத்து (1812) பீரங்கிகள், ஆயிரக்கணக்கில் போர்வீரர்கள். இன்றைக்கு இருக்கும் கம்ப்யூட்டர் தொழில் நுணுக்கம் எதுவுமில்லாத காலத்தில் (1963-68) தயாரிக்கப்பட்ட திரைப்படம், பீரங்கி குண்டுவெடிப்புகளுக்கும் புகைமண்டலத்துக்குமிடையே இவையெல்லாம் ஒரு கட்டத்தில் தம் சவாரிகளை (வீரர்களை) இழந்த வெறும் குதிரைகள் நூற்றுக்கணக்கில் தறிகெட்டு யுத்தக் களத்தில் நெருப்புக்கும் புகைக்கும் குண்டு சத்தத்துக்கும் அலறி ஓடுவது பயங்கரக் காட்சி. கணவனையிழந்த நூற்றுக்கணக்கான விதவைகள் தலைவிரிகோலமாய் ஓடித் திரிவது போன்ற கற்பனையைத் தோற்றுவிக்கிறது.
இந்த சமயம் சீமான் பியர் யுத்த நிகழ்வை நேரில் சென்று பார்த்துணர ஆவல் மேலிட்டுப் போகிறான். அவனது பிரபுத்துவ உடையும் தொப்பியுமாய் யுத்த பூமியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறான். ரஷ்ய சிப்பாய்களுக்கு அவனைத் தெரியாது. ஒரு கனவான் போர்க்களத்தில் நின்று போர் பயங்கரத்தை வேடிக்கை பார்ப்பதே அவர்களுக்கு பெரிய வேடிக்கையாய்ப் போகிறது.
“யாரிது? டாக்டரா?”, என்று ஒரு சிப்பாய் இன்னொருவனிடம் கேட்டுவிட்டு நக்கலாய்ச் சிரிக்கிறான்.
“இது திருவிழா கொண்டாட்டமில்லே, தலை பத்திரம்”, என்று கூறிவிட்டு ஒருவன் பலமாகச் சிரிக்கிறான். அங்கு வரும் ஓர் அதிகாரி பியரைப் பார்த்து, “உயிருக்கு ஆபத்தானது. யுத்தத்தைப் பார்க்க அந்த உயரமான மேட்டின்மேல் போய் நின்று பாருங்கள்” என்று சொல்லியனுப்புகிறார். பியர் நகரும்போது மிக அருகில் ஒரு குண்டு விழுந்து வெடிக்காமல் போகிறது. ஆனால் சற்று தள்ளி வெடித்த குண்டால் சேறும் சகதியும் அவனது அழகிய உயர்ந்த உடை, தொப்பி, முகமெங்கும் சிதறி அபிஷேகமாகிறது.
ரஷ்யப் படைகள் பாதிக்கும் அழிந்துபோனதாய் செய்தி வருகிறது. நெப்போலியன் மாஸ்கோ நகரைப் பிடிக்க வருவது உறுதியானதும் அரச குடும்பத்தினர் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கிற்கும் வேறு இடங்களுக்கும் முக்கிய ஆவணங்கள், அசையும் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு இடம் பெயர்கின்றனர். பெரும்பான்மையான நடுத்தர மற்றும் ஏழை பிரஜைகள் முடிந்தளவு உடைமைகளை எடுத்துக்கொண்டு காடுகளுக்கும் மலைகளுக்கும் போய்விடுகிறார்கள். மாஸ்கோ மாட மாளிகைகளும் வீடுகளும் துடைத்துவிட்டாற்போல் காலியாகிக் காட்சியளிக்கின்றன. எடுத்துச் செல்ல முடியாத பொருட்கள் தாறுமாறாய்க் கிடக்கின்றன. நகரிலுள்ள மது புட்டிகள், பீப்பாய்கள், உணவுப் பண்டங்கள் மொத்தமும் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அப்படியும் சிலர் ஓரிரு கட்டிடங்களில் பதுங்கியிருக்கின்றனர். வரப்போகும் பிரெஞ்சுப் படையை ஒளிந்திருந்து தாக்கவிருக்கும் தேசாபிமானங்கொண்ட ரஷ்யர்கள் அவர்கள். அவர்களோடு ஒருவனாக ஆனால் வன்முறையின்றி என்ன நடக்கிறதென்பதைப் பார்க்க சீமான் பியர் தன் வீட்டிலிருக்கிறான்.
நெப்போலியன் மாஸ்கோவுக்குள் பெரும்படையுடன் நுழைந்து ஒவ்வொரு வீட்டையும் மாளிகையையும், பண்டகசாலைகளையும் தேடச் சொல்ல எதுவுமேயில்லை, நகரம் காலி என்பது அறிய வருகையில் மிகுந்த ஏமாற்றமடைந்து நகரைத் தீக்கிரையாக்கி, எஞ்சியுள்ள பொருட்களை கொள்ளையடிக்கச் சொல்லுகிறான்.
தேவாலயங்களும் தீயிடப்பட்டு அழியும் காட்சிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. இந்த அழிவை பல்வேறு கோணங்களில் கேமரா நமக்குக் காட்டுகிறது. இந்தத் தீயிடலின்போது பியர் வெளியில் வருகிறான். எரியும் நகரத் தெரு ஒன்றில் ஒரு தாய் ஓடிப் போகாத குடும்பத்தைச் சேர்ந்தவள் தன் பெண் குழந்தை எரியும் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறி கதறியழுகையில் வீடு எது என்று கேட்டறிந்து எரியும் வீட்டுக்குள் நுழைந்து தேடுகிறான் பியர். ஓரிடத்தில் பாதிப்பின்றி பயந்து கதறியபடியிருக்கும் ஐந்து வயதுப் பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேறி கதறும் தாயிடம் சேர்ப்பிக்கிறான் பியர். அவன் தன் மாளிகையினுள் சென்றபோது நெப்போலியனின் பிரெஞ்சு வீரன் ஒருவன் துப்பாக்கியோடு வருகிறான், இருவருக்கும் பேச முடியாத மொழிச்சிக்கல். அதே சமயம் திடீரெனத் தோன்றும் ரஷ்ய வீரன் ஒருவன் பிரெஞ்சு சிப்பாயைச் சுடுவதற்கு தன் கைத் துப்பாக்கியை குறிவைக்கிறாள். ஆனால் பியர் ஓடிச் சென்று அவனது துப்பாக்கியைத் தட்டி திசை திருப்பிவிட்டு அறிவுரை கூறி போகச் செய்கிறான். தன் உயிரைக் காப்பாற்றியதற்காக பிரெஞ்சு வீரன் பியருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, தான் 13-வது பிரெஞ்சுப் படைப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் என்று தெரிவித்துக்கொண்டு தன் பெயர் கேப்டன் ராம்பால் (CAPTAIN RAMBALL) என்று கூறுகிறான். பியர், நாள் முழுக்க பட்டினியாயிருந்த கேப்டன் ராம்பாலைத் தன்னுடன் உணவருந்த வைத்து அனுப்புகையில் கேப்டன் ராம்பால் நன்றியுடன் கூறுகிறாள், “உங்களுக்கு எதாவது ஆபத்தோ, நெருக்கடியோ எங்கள் பிரெஞ்சு ராணுவரீதியாக ஏற்பட்டால் என் பெயரை உபயோகித்துக் கொள்ளுங்கள்” என்கிறான்.
பிரெஞ்சு இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்த்து கொஞ்சம் ரஷ்ய இளைஞர்கள் அங்கங்கே பதுங்கியிருந்து போராடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவன் சலிப்போடு சொல்லுவான்,
“ஒரு பெண்கூட இல்லை, எல்லா பெண்களும் நகரைவிட்டு ஓடிவிட்டிருக்கிறார்கள்” -என்று எதிர்ப்பு காட்டிய ரஷ்யர்களைப் பிடித்து சுட்டுத் தள்ளுகிறது பிரெஞ்சு இராணுவம். அந்த வகையில் பியரையும் பிடித்து சுட்டுத்தள்ள உத்தரவாகிறது. “உனக்கு பிரெஞ்சுப் படையில் அதிகாரி யாரையாவது தெரிந்தால் சொல்லலாம். மரணத்திலிருந்து தப்ப அதுதான் வழி”, என்கிறார்கள் பியரிடம். அவன் தயக்கத்தோடு, தான் காப்பாற்றிய பிரெஞ்சு கேப்டன் ராம்பாலின் பெயரைக் கூறவும், பியர் விடுவிக்கப்படுகிறான். பிரெஞ்சு இராணுவத்திற்கு உணவுப் பிரச்சினை எழுகிறது. மாஸ்கோவில் உணவுப்பொருள் எதுவுமேயில்லை. நகரைக் காலி செய்துவிட்டுப் போகிற கையோடு எல்லாவித உணவுப்பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
அத்தோடு குளிரும் பனி பெய்தலும் வலுத்துவிட்டது. ரஷ்யக் குளிரும் பனியும் பிற நாட்டவரால் தாங்க முடியாது. உணவுப் பொருளில்லாததாலும் குளிரையும் பனியையும் தாங்கமுடியாததாலும் பிரெஞ்சுப் படை மாட்டிக்கொண்டு அவதியுறுகிறது. முடிவாக தோல்வியுணர்வோடு நெப்போலியன் ரஷ்யாவை விட்டுவிட்டு பிரான்சுக்குத் திரும்பிச் செல்லத் தீர்மானித்து தம் படையைத் திரும்பிச் செல்ல வைக்கிறான். காட்டுக்கும் மேட்டுக்கும் போனவர்கள் திரும்பி வருகிறார்கள். பியர் நடாஷாவை சந்திப்பதோடு படத்தை முடிக்கிறார் செர்காய் போன்டர்சுக். திரும்பிச் செல்லும் பிரெஞ்சுப் படையை ரஷ்யப்படை ஒரு பாலத்தைத் தகர்த்து அழிப்பதான நிகழ்வு இந்த ரஷ்ய WAR AND PEACEல் இல்லை. பியர் பாத்திரம் நாவலில் சாந்தம், சமாதானம், வன்முறைக்கு எதிரான செயல் பரோபகாரம் எல்லாம் கூடிய ஒன்றாக தோல்ஸ்தோய் படைத்திருப்பது தனது மாற்று வடிவமாகவே (ALTEREGO) உருவாக்கியிருக்கிறார். பியர் பாத்திரத்தில் படத்தின் இயக்குனரும் அனுபவமிக்க நடிகருமான செர்காய் போன்டர்சுக் அற்புதமாய் நடித்திருக்கிறார்.
செர்காய் போன்டர்சுக் 1970ல் (WAR AND PEACE) படத்தின் தொடர்ச்சியாக ‘WATERLOO’ என்ற மறறொரு பிரமாண்ட திரைப்படத்தைச் செய்தார். WATERLOO -சோவியத் ரஷ்ய- இத்தாலி கூட்டுத் தயாரிப்பாய் போன்டர்சுக் இயக்கத்தில் உருவான திரைப்படம். இப்படம் தேவி திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் இத்தாலியிலுள்ள திரைப்பட ஸ்டூடியோ DINO DE LAURENTIO -வில் படமாக்கப்பட்டது. மேற்கத்திய நடிகர்கள் ராட்ஸ்டீகர் (RODSTEIGER) நெப்போலியனாகவும், கிறிஸ்டோஃபர் ப்ளம்மர் CHRISTOPHER PLUMMER வெலிங்டனின் ட்யூக்காகவும் ஆர்சன் வெல்ஸ் (ORSON WELLES) பிரான்ஸ் மன்னர் XVIIIம் லூயியாகவும் நடித்தனர்.
இதற்கான திரைக்கதை, வசனத்தை ஜி.ஏ.கிரேய்க் (G.A.CRAIG) என்பவரும் இசைப் பொறுப்பை நினோ ரோடா (NINO ROTA)வும் பார்த்துக் கொண்டனர். இப்படத்தின் கேமரா ஒளிப்பதிவை இத்தாலிய கேமரா கலைஞர் ஆர்மாண்டோ நன்னுஜ்ஜி என்பவர் (ARMANDO NANNUZZI) செய்திருக்கிறார். வாட்டர் லூ போரில் வெலிங்டன் நெப்போலியனை தோற்கடித்தார். இப்போர் உக்ரேய்ன் பகுதியிலுள்ள கார்பேதியன் (CARPATHIAN) என்ற பகுதியில் நடந்தது. உஜ்கோரோட் (UZHGOROD) என்ற வெட்டவெளியான இடத்துக்கும் முகாசேவ் (MUKACHEV) என்ற வயல்வெளிக்குமிடையில் நடந்த நெப்போலியன்-வெலிங்டன் போர்க்காட்சிக்கென செர்காய் போன்டர்சுக் 30,000 எக்ஸ்ட்ரா நடிகர்களை வரவழைத்து தயார் செய்தார். இந்தப் போர் 1815ல் நடந்தது. ELBA தீவில் சுய நாடுகடத்தல் செய்து பதுங்கியிருந்த நெப்போலியன் மீண்டும் வெளியேறி பெரும்படையோடு அதிகார வெறியில் வெலிங்டனோடு வாட்டர் லூவில் மோதி தோற்றுப்போவது படம். WAR AND PEACE போல குறிப்பிடத்தக்க அரிய காட்சியாடல்களை WATERLOO-வில் புகுத்த முடியவில்லை என்றாலும் போர்க் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கின்றன.
(வளரும்.)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.