கிழக்கு ஐரோப்பிய சினிமா
ஹங்கேரிய திரைப்படங்கள்
கிழக்கு ஐரோப்பிய சினிமா எனும்போது முக்கியமாக ஹங்கேரி, செக் குடியரசு (பழைய செக்கோஸ்லோ வாகியா), போலந்து மற்றும் சோவியத் ரஸ்யா (யு.எஸ்.எஸ்.ஆர்.) இந்தப் பகுதி பயாஸ்கோப்காரன் தொடரின் இறுதிப் பகுதி. பயாஸ்கோப்காரனின் சினிமா பயணம் ரஷ்யாவில் சென்று இரண்டாம் உலகப் போர் கிழக்கு ஐரோப்பாவை மிக கொடூரமாக நாசப்படுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து இவையும் இந்த பாதிப்புகளைத் தொடர்ந்து அரசியல் மாற்றங்கள், அரசியல் ரீதியான புரட்சிகள், விளைவுகள் அவற்றின் விமர்சனங்கள் எல்லாம் கிழக்கு ஐரோப்பிய இலக்கியத்தில் மிக ஆழமாகவும் செறிவாயும் அசலாகவும் தெறிக்கச் செய்தன. அவற்றில் கொஞ்சம் தடை செய்யப்பட்டன. இதெல்லாம் அவர்களின் திரைப்படங்களிலும் இருக்கவே செய்கிறது. சோஷலிஸ எதிர்ப்பு செயல்பாடுகள் மேற்கைரோப்பிய நாட்டு சக்திகளால் கிழக்கைரோப்பிய நாடுகளில் ஊடுருவி உடைத்திருக்கின்றன.
பயாஸ்கோப்காரனின் இறுதி சினிமா பயணமான கிழக்கு ஐரோப்பிய சினிமா பகுதியில் அந்த மகத்தான கலைஞர்களின் மகத்தான திரைப்படங்களை முடிந்தளவுக்கு பார்க்கப்போகிறோம். இந்தப் பகுதிக்குத் தலைமை தாங்கும் ஹங்கேரியின் கரோலி மாக் (Karoly makk), மார்த்தா மெஸாரஸ் (Marta meszaros), ஜோல்தான் ஃபாப்ரி (Zoltan Fabri), இஸ்த்வான் ஐாபோ (Istvan szabo) மற்றும் பேலா தார் (Bela tarr) என்ற திரைப்பட படைப்பாளிகளின் சில படங்கள் பற்றி சொல்ல இருக்கிறேன். ஒன்று முக்கியம், இவர்களின் திரைப்படங்களும் சோஷலிஸ அரசியல் அமைப்பை விமர்சிக்கத் தவறவில்லை.
ஹங்கேரிய சினிமாவின் பின்புலமாக அதன் வரலாறு முக்கியமாகவும் தவிர்க்க முடியாததாகவும் வலுவாகவும் அமைந்துள்ளது. அதன் வரலாறை ஓரளவுக்கு வாங்கிக் கொள்ளாமல் அதன் திரைப்படங்களைத் தொடரமுடியாது. எனவே ஹங்கேரியின் வரலாறை கொஞ்சம் திருப்பிப் பார்த்துக் கொள்ளலாம். ஹங்கேரி கிட்டதட்ட 900 ஆண்டுகளுக்கு மன்னராட்சிக்கு உட்பட்டிருந்திருக்கிறது. மகா யுத்தம் என்று அழைக்கப்படும் முதல் உலகப் போரில் தம் மக்களையும் பொருளாதாரத்தையும் இழந்த ஐரோப்பிய நாடுகளில் ஹங்கேரியும் முக்கியமானது.
இந்நாட்டு மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். அரசியல் சூழ்நிலையில் பெருங்குழப்பம் மேலிட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு வலது சாரி ஃபாஸிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர். கிட்டதட்ட ரஷ்யாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் பரிபாலனத்தை ஒத்ததொரு கொடூர தர்பாரை ஹங்கேரிய மக்கள் அனுபவித்தனர். ஹங்கேரிய வரலாற்றில் மறக்க முடியாத கொடுமை மிக்க காலக்கட்டம் அது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஹங்கேரி உட்பட எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் ஜெர்மனி சூழ்ந்து ஆக்கிரமித்தது. ஜெர்மன் நாஜிகளின் ஆக்கிரமிப்பின்போது ஹங்கேரியர்கள் குறிப்பாக ஹங்கேரிய யூதர்கள் சொல்லொண்ணா சீரழிவுகளுக்கு ஆளாகி நரகம் அனுபவித்த சமயம் சோவியத் நாட்டுப் படைகள் ஜெர்மன் படையை அதன் தலைநகருக்கு விரட்டிச் சென்று வழியெங்கும் ஜெர்மன் ஆக்கிரமிப்புக்குள்ளிருந்த கிழக்கைரோப்பிய நாடுகளை விடுவித்தது. ‘‘நாங்கள் உங்கள் நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. பொது எதிரியின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்திருக்கிறோம் உங்களை’’ என்று பிரகடனப்படுத்தியது சோவியத் யூனியன். பாதுகாப்பு, இழந்ததை மீட்டெடுப்பது, அழிவுகளிலிருந்து மீண்டெழுவது என்ற குறிக்கோள்களோடு ஹங்கேரியும் 1947ல் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையை ஏற்று ஆட்சியமைக்கவும் 1986-வரை ஹங்கேரி கம்யூனிஸ்டு நாடாகவும் இருந்து வந்தது.
அதன் பிறகு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதற்கு பின்னால் துறைமுகப் புரட்சி முதலானவை காரணமாகின. இதற்குப் பின்னால் மேற்கு வலதுசாரி நாடுகளின் அரசியலுமிருக்கிறது. இந்த நீண்ட போர், ஆக்கிரமிப்பு மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் முக்கால கட்டத்து அனுபவங்களின் பின்னணியில் இலக்கியமும் நாடகமும் சினிமாவும் ஹங்கேரியில் தனித்துவமிக்கதாயிருந்து வந்தது. மிகச் சிறந்த திரைப்படங்கள் நமக்குக் காணக்கிடைத்தன.
Szerelem என்ற ஹங்கேரிய வார்த்தையின் ஆங்கில பதம் Love இந்த லவ் எனும் சொல்லுக்கு சட்டென்று மனம் எடுத்துக் கொள்ளுவது காதல் என்று அதையே அன்பு, நேசம், பாசம் என்றும் சொல்லி பன்முக அரவணைப்புக்கு ஆட்படுத்துவது. இதை Szerelem என்ற ஹங்கேரிய திரைப்படத்தின் சாரமென்று கொள்ளலாம் என்று கருதும் சமயம், சிட்னி பாய்ஷியர் நடித்த A PATCH OF BLUE என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் சாரமும் நினைவுக்கு வருகிறது. குருட்டு வெள்ளைக்காரப் பெண் தான் பரிதவிக்கும் சமயம் தனக்கு வலிய முன் வந்து சகல ஒத்தாசைகளையும் செய்யும் இளைஞனின் குரலை மட்டுமே மனக் கண்ணில் பார்த்து அவன் காட்டும் பச்சாதாபம், பரிவு, இரக்கம், அன்பு கருணை ஆகியவற்றுக்கு வெளியுலகமே அறியாத அந்த பெண் ‘‘லவ்’’ என்ற சொல்லின் ஒரேயொரு அர்த்தமாக ‘‘காதல்’’ என்றே கருதி வருகிறாள். இறுதியில் பாய்சியர் கூறுவார், ‘‘லவ் என்பதற்கு பல சங்கதிகள் பொருளாக அமைகிறது. அதில் உயர்ந்த ஒன்றைத்தான் உன்னிடம் நான் காட்டினேன்.’’ என்று, இந்த ஹங்கேரிய ‘‘Love’’ படத்தில் அத்தகைய நிகழ்வோ, கட்டமோ, ஏற்பட எவ்வித இடமும் அளிக்கப்படாத வகையிலான கதையமைப்பு.
‘‘லவ்’’ 1971ல் கரோலி மாக் Karoly makk எனும் இயக்குனரால் அற்புதமாகச் செய்யப்பட்டுள்ள திரைப்படம். இப்படத்தின் கதையமைப்பு இருவேறு நெடுங்கதைகளைக் கொண்டது. டைபர் டெரி Tibor dery எனும் ஹங்கேரிய எழுத்தாளர் 1956ல் எழுதிய ‘‘லவ்’’ என்ற கதையையும், 1962ல் எழுதிய ‘‘லவ்’’ என்ற கதையையும், 1962ல் எழுதிய ‘‘இரு பெண்கள்’’ Two women என்ற கதையையும் ஒன்றாக சேர்த்து கச்சிதமாய் படமாக்கினார் கரோலி மாக், படம் 1950களின் தொடக்கக் காலக் கட்டத்து ஹங்கேரியில் நடப்பதாக போகிறது. அரசியல் ரீதியாக ஹங்கேரி, தன்னை ஆண்டு வந்த சோவியத் யூனியனுக்கு எதிராக 1956ல் ஒரு கிளர்ச்சியை மேற்கொண்டபோது அதை சோவியத் அரசு ஒடுக்கிவிட்டது. அதன் பின் மீண்டும் எதிர்ப்பு வலுத்து ஹங்கேரி ஜனநாயக நாடாகிறது.
நம்மை சோவியத் யூனியன் ஆக்ரமிக்கவில்லை. ஜெர்மன் நாஜிகளிடமிருந்து விடுவித்து நமக்கு ஆதரவாகவும் ஒத்தாசையுடனும் கூட இருக்கிறது. என்ற வசனத்தை வேறொரு ஹங்கேரிய திரைப்படத்தில் Diary for my Children ஒரு முக்கிய பாத்திரம் பேசுவதாக இருக்கும். 1956 கிளர்ச்சியின்போது ஏராளமான ஹங்கேரியர்கள் கைது செய்யப்பட்டனர். நீண்ட காலம் சிறை தண்டனை பெற்றிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் கைதாகலாம் கைதும் ஆனார்கள் என்பது இந்தத் திரைப்படங்கள் வழியாக காட்டப்படுகிறது.
படம் தொடக்கத்தில் நோயாளியும் முதியவருமான பெண்மணி எழுந்து சாத்தப்பட்டுள்ள கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்கிறாள். அவளுடைய மருமகள் லூகா Luca வந்து கொண்டிருக்கிறாள். லூகா பள்ளியாசிரியையாக வேலையிலிருக்கிறாள். கதவைத் தட்டவும் சமையல் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் இரின் Iren கதவைத் திறக்கிறாள். முதியவள் படுத்திருக்கும் அறை சிறியதோடு அடைப்பாச்சாரங்கள் குறுக்கும் நெடுக்கும் நிறைந்து கிடக்கிறது. லூகா தன் நோயாளி மாமியாருடன் பேசுவதை இரின் ஒட்டுக் கேட்பாள். அதையறிந்து நாசுக்காக கண்டிப்பு காட்டிய லூகாவிடம் இரின் அதை மறுத்து வாயாடுகிறாள். முதியவள் சதா தன் மகன் ஜனோஸ் Janos குறித்தே பிதற்றுவாள். கேட்க யாருமில்லாவிட்டால் தனக்குத்தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொள்ளுவாள். அப்போது இரின் அன்று தபாலில் வந்த கடித உறையைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கதவு சந்தில் ஒளிந்து நின்று கவனிக்கிறாள். ஜனோஸ் அமெரிக்காவிலிருந்து எழுதியிருக்கும் கடிதம் என்று சொல்லிக் கொண்டே உறையைக் கிழித்துப் படிக்கிறாள் லூகா.
‘‘எப்போ வர்ரதா எழுதியிருக்கான்?’’ என்று கேட்கிறாள் மாமியார்.
‘‘சொல்ல முடியாதாம். படம் முடியற சமயமாம். ரொம்ப பிஸியாம்,’’ என்கிறாள் மருமகள்.
‘‘இந்த படத்துக்கு நிச்சயம் ஐனோசுக்கு அகாடெமி விருது கிடைக்கும்’’ என்கிறாள் மாமியார்.
அந்தக் கடிதம் அமெரிக்காவிலிருக்கும் அவளது மகன் ஐனோஸ் எழுதியது. அவன் மனைவியும் கிழவியின் மருமகளுமான லூகா கூறுவது அத்தனையும் பொய். ஐனோஸ் அமெரிக்காவிலும் இல்லை, திரைப்படமும் இயக்கவில்லை. 1956-ஹெங்கேரிய புரட்சியில் கைதாகி பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐனோஸ் ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்ட் சிறையிலிருக்கிறான். அவனது தண்டனை மேலும் மரண தண்டனையாகவும் மாற்றப்படலாம். இதெல்லாம் லூகாவுக்குமட்டுமே தெரியும். இதையறிய நேரிட்டால் ஐனோஸின் அம்மா இறந்து விடக்கூடும் என்பதால், அவன் அமெரிக்காவிலிருப்பதாயும் சினிமா இயக்குவதாயும் பொய் சொல்லி வைத்திருக்கிறாள் லூகா.
தன் மாமியாரை மிகவும் நேசிக்கும் அவள், அந்த அன்பின் நிமித்தம் அவள் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதென்று அவ்வாறு பொய் சொல்லியிருக்கிறாள். அத்தோடு, ஐனோஸ் எழுதுவதாக தானே கிழவிக்கு கடிதமெழுதி தபாலில் சேர்த்து வருகிறாள். ஐனோஸிடமிருந்து கடிதம் வரும்போதெல்லாம், ‘‘எப்போ வர்ரேனு எழுதியிருக்கான்?’’ என்ற கேள்வியைத் தவறாமல் கேட்பாள் கிழவி. ‘‘படம் முடிஞ்சி சர்வதேச விழாவுக்கு அனுப்பறவரை அங்கே இருக்கணுமாம்,’’ என்பாள் லூகா. ஐனோஸ் சிறைக்குப் போய் ஒரு வருடம்தான் முடிந்திருக்கிறது. உடனே முதியவள், ‘‘அதுக்குள்ளே நான் செத்துப் போய் விடுவேன்’’ என புலம்புவாள். ‘‘யார் சொன்னது, நீ நூறு வருசம் இருப்பே. டாக்டரே சொல்லிட்டாரு நீ நூறு வருசம் இருக்கப் போறேன்னு’’ என்பாள் லூகா.
அதற்கு முதல்நாள் டாக்டர் வந்து கிழவியை சோதித்து மருந்து எழுதிக் கொடுத்துவிட்டு போகையில், டாக்டரிடம் லூகா நிலவரம் எப்படியென்று கேட்டதற்கு, ‘‘சொல்ல முடியாது. இந்த அமாவாசை தாண்டினாத்தான் எதையும் சொல்ல முடியும், கஷ்டந்தான்’’ என்று நம்மூர் டாக்டர்கள் சொல்லுவதுபோல கூறிவிட்டுப் போய்விட்டார். கிழவிக்கு சதா மகன் பற்றிய நினைவுதான். இரின் சமைப்பதுகூட அவளுக்கு சலித்துப் போய் வாய் செத்துக்கிடந்தது.
இந்தப் படத்தில் முதியவள் பின்னோக்கி தன் நினைவுகளைக் கொண்டு செல்லும் தருணங்கள் நிறைய உண்டு. இயக்குனர் கரோலிமாக் வழக்கமான ஃப்ளாஸ்பாக் உத்திக்கு மாறாக அவளுடைய அரிதான இளமைக்கால புகைப்படங்களையே நிலையாக நிற்க வைத்துக் காட்டுகிறார். தன் மருமகளோடு அவள் அவ்வப்போது உரையாடும் தருணங்களில் அவள் தன் இளமையை, கணவனோடு உல்லாசமாகப் படகில் – ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுதே… விளையாடிடுதே என்ற பாட்டோடு மார்கஸ் பார்ட்லேயின் அரிய ஒளிப்பதிவில் சலனப்படுத்தப்பட்ட நம்மூர் மாயா பஜார் படத்தின் பாணியிலேயே சென்றதையெல்லாம் நினைவு கூர்வாள். இந்தப் படகுக் காட்சியும் இன்னொரு காட்சியையும் தவிர மற்ற நினைவலைகளின் காட்சிகள் ஸ்டில் புகைப்படங்களாகவே அதே சமயம் உயிரோட்டமிக்க மெளன சலனமுமாகக் காட்டிவிடுகிறார் கரோலிமாக் சலனமுள்ள மற்றொரு பின்னோக்கிய நினைவோட்டக் காட்சியில் மருமகளிடம் மாமியார் கூறும் விதம் காண்க.
லூகாவின் கணவன் ஜனோஸ் முதியவளுக்கு மூத்த பிள்ளை அடுத்த மகன் அறுந்த வால். லூகா மாமியாரிடம் கேட்கிறாள்.
‘‘நீ துணி மாத்திகிறப்ப பசங்க பாத்ததுண்டா?’’
அதற்கு மாமியார் கூறுகிறாள்,
‘‘டேய், பசங்க எல்லாம் திரும்பி செவுத்தப் பாருங்கடானு சொல்லுவேன், ஓம் புருஷன் ஜனோஸ் ஓடனே திரும்பி நின்னு செவுத்தையே பாப்பான். நா டிரஸ் சேஞ்சு பண்ணிகிறப்ப திரும்பி பார்க்கவேமாட்டான் ஆனா, சின்னவன் கொறவன். சட்டுனு என்னப் பார்ப்பான். அப்ப, ஒரு பெட் ஷீட்ட எடுத்து அவன அப்பிடியே மூடி வச்சிட்டு துணிமாத்திக்குவேன்’’ என்பாள் முதியவள் சற்று இடைவெளிவிட்டு லூகாவிடம் கேட்பாள்,
‘‘நிஜமாவா டாக்டர் சொன்னாரு, நா நூறு வருசம் இருப்பேனு?’’
‘‘ஆமா நீ நூறு வருஷமிருப்பேனு சொன்னாரு, டாக்டர் மேலே ஒனக்கு காதலா?’’ இந்த இடத்தில் லவ் என்பதை ஆண், பெண் உடலிச்சை ரீதியாக உபயோகப்படுத்தப்படுகிறது. கிழவி பதில் சொல்லமாட்டாள்.
மேற்கண்ட ஃப்ளாஷ் பாக் காட்சி சலனப்படுத்தப்பட்டிருக்கிறது. மாமியாரும் மருமகளும் உரையாடலில் ஈடுபட்டிருக்கையில் இடையிடையே டாக்டர் வந்து முதியவனைப் பரிசோதித்துவிட்டுப் போவார். தன் மாமியார் எந்த தொந்தரவுமில்லாமல் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருக்க வேண்டி லூகா தன் கணவன் ஐனோஸ் புரட்சியில் கைதாகி சிறையிலிருப்பதை மறைத்து வைத்து, அவன் அமெரிக்காவில் சினிமா எடுத்துக் கொண்டிருப்பதாயும், அந்தப் படத்துக்கும் அவனுக்கும் சர்வதேச விருது கிடைக்குமென்றும் பொய் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். அவனுக்கு விருது கிடைக்கப் போகிறதென்று கிழவியும் சேர்ந்து சொல்லுவாள்.
இதனிடையே, அரசாங்கத்தை எதிர்த்து புரட்சி செய்த குழப்பவாதியொருவனின் மனைவி என்பதால் லூகாவும்தான் செய்துவந்த பள்ளியாசிரியர் வேலையை இழக்க நேரிடுகிறது. அதேசமயம் 56 – 1945 காலகட்டத்தில் சோஷலிஸ நாடுகளில் கடுமையான குடியிருப்புக்கான வீட்டுப் பிரச்சினை இரண்டாம் உலகப் போருக்குப் பின் உண்டானது. மக்கள் வசிக்க வீடுகள் போதவில்லை. ஹங்கேரிய அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவந்தது. MANDATORY CO TENANCY என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட அந்த சட்டம் முதலில் சோவியத் ரஷ்யாவில் அமுலிலிருந்தது. நகரங்களிலும் பெரிய ஊர்களிலும் வசிக்கும் வீடுகள் இல்லாமல் அவதிப்படும் ஏழை ஜனங்கள் அதிகம்.
மாளிகை போன்ற பங்களா, நாலுகட்டு வீடு போன்றவை இரண்டு மூன்று குடும்பத்துக்கான வீடுகள் என்றிருக்கும் அதில் இன்னும் மூன்று சிறு குடும்பங்கள் சேர்ந்து வசிக்குமளவுக்கு அறைகளிருக்கும். சில மாபெரும் மாளிகை வீடுகளில் ஒரே ஒரு குடும்பம் வசிக்கும். புதிய சட்டத்தின் பிரகாரம், இம்மாதிரி வீடுகளில் சிறிய குடும்பம் இருந்தால், அவர்களுக்கு எவ்வளவு இடம் போதுமோ அவ்வளவை அவர்களுக்கு விட்டு விட்டு, மிகுதி அறைகளை வீடற்றவர்களுக்கு பகிர்ந்து அவர்களை தம்மோடு குடியமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது சட்டம். சோஸலிஸ நாடுகளில் அமுலுக்குவந்த இந்தச் சட்டப்படி எட்டு அறைகள், பத்து அறைகளைக் கொண்ட வீட்டுரிமையாளன்தான், தன் மனைவி, தாய், மகன் என்று சிறு குடும்பமாய் அந்தப் பெரிய வீட்டிலிருப்பான் மற்ற அறைகள் காலியாகயிருக்கும். அப்படியான பெரிய வீட்டில் வீடற்ற இரண்டு மூன்று குடும்பங்களை அரசு குடியமர்த்தும்.
Mandatory co Tenancy என்றழைக்கப்பட்ட இச் சட்டம் எல்லா சோஷலிஸ நாடுகளிலும் நடைமுறைக்கு வந்தபோது பொதுவுடைமைக் கொள்கையை ஒவ்வாமையாக நினைத்து வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் இலக்கியத்துக்கு நோபல்பரிசு வரை பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் நாவல்களில் இவ்விஷயம் இடம் பெற்றிருக்கிறது. அவர்களில் ஒருவரான போரிஸ் பாஸ்டர்நாக்கின் Boris Pasternak தடை செய்யப்பட்ட நாவலும் திரைப்படமும் டாக்டர் ஷிவாகோ (Doctor Zhivago) அதைத் திரைப்படமாக்கிய டேவிட் லீனின் Dava Leen சித்தரிப்பிலும் இந்த ஒண்டுக் குடித்தன சட்டமும் நிகழ்வும் இடம் பெற்றுள்ளன வசிக்க இடமற்றவர்களை கட்டாய ஒண்டுக் குடித்தனச் சட்டப்படி தம் வீடுகளில் இடம் ஒதுக்கி குடியமர்த்துவது இந்த ஹங்கேரியப் படமான Love லும் வருகிறது.
‘‘வர்ரவங்க நல்லவங்களா?’’, என்று மட்டும் லூகாவைக் கேட்கிறாள் அவள் மாமியார்.
ஒரு கட்டத்தில் லூகா வெறுப்பின் உச்சத்தில் மாமியாரிடம் இப்படி கூறுவாள்
‘‘எவ்வளவு நாளைக்கு தனியா வாழறது? நாவேறே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்’’
ஜனோலின் அம்மா- லூகாவின் மாமியார் இறந்து விடுகிறாள். இயக்குனர் அவளது மரணம், அதன் காரியம் என்று எதையும் காட்டுவதில்லை. அவள் உயிரோடிருந்த காட்சிகளிலேயே கிட்டதட்ட அவள் சவமாய் தோன்றியது போலவே காட்டப்படுகிறாள். அவள் மரணத்துக்குப் பின் ஜனோஸ் டோத் Janos Toth ன் ஒளிப்பதிவு மிக மிக அற்புதமானது. முதியவளாக நடிக்கும் ஹங்கேரிய நடிகை தார்வாஸ் லிலியின் (லிலிதார்வாஸ் lili Darvas நடிப்பு பிரமாதம். மருமகள் லூகாவாக மரி டோரோக்சிக் (mari Torocsik நன்கு மாமியாருக்கு ஈடு கொடுத்து நடிக்கிறார். இவான் தவார் Ivan Dawar ஐனோஸாக வருகிறார்.
1925ல் புடாபெஸ்டில் பிறந்த இயக்குனர் கரோலிமாக் 2018ல் காலமானார்.
மற்றொரு சிறந்த ஹங்கேரிய திரைப்பட கர்த்தா மார்தா மெஜாரோஸ் எனும் பெண் இயக்குனர். மார்தா மெஜாரோஸ் ஹங்கேரியின் புகழ் பெற்ற சிற்பியான லஜியோ மெஜாரோஸின் புதல்வியாவார் Laszio Meszaros மார்தா 1931ல் ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் பிறந்தவர். மார்தா மெஜாரோஸின் திரைப்படங்களில் Diary for my Children எனும் படம் மிகவும் சிறப்பானது. 1984ல் வெளியான இந்த சிறந்த ஹங்கேரிய திரைப்படத்தின் கதைக்களம் 1947கும் 1953ம் இடைபட்ட காலத்தில் நிகழ்வது.
ஒரு சில காட்சி ஓட்டங்களுக்குப் பின் 1947 முதல் 1953ன் இறுதிவரையிலான வருடங்களைத் திரையில் காட்டுகிறார் இயக்குனர். மார்தாவின் சுயவரலாற்றுக் கதையாகும் இது. இதையடுத்து மற்றும் இரண்டு படங்களையும் இதன் தொடர்ச்சியாகவே செய்து முடித்து முதல் சுற்றிலேயே ஒரே பாத்திரங்களை கொண்டு தன் வாழ்க்கையை ஒட்டிய கதையாகவே மூன்று திரைப்படங்களை உருவாக்கினார் மார்தா. மார்தாவின் தந்தை லாஸ்ஜியோ மெஸாரோஸ் Laszio Meszaros ஹங்கேரியின் புகழ்பெற்ற நவீன சிற்பியாவார். தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றவர் திரும்பவேயில்லை. இந்தத் திரைப்படத்திலும் கதை சொல்லியாகவும் முக்கிய கதாபாத்திரமாகவும் வரும் ஜுலி என்ற இளம் பெண் புகழ் பெற்றதொரு சிற்பியின் மகளாகவும் அவரும் அரசியல் குற்றத்துக்காளாகி திடீரென கைது செய்யப்பட்டு சிறைக்குச்சென்றவர் திரும்பி வருவதேயில்லை. இதை ஜூலியே தன் நினைவலைகளில் ஒன்றாகச் சொல்லுவதாக படம். இதிலிருந்து இந்தத் திரைப்படத்தைத் தொடங்குகிறார் மார்தா. அவரது சுயசரிதையைச் சொல்லுகிறது படம்.
40 களில் ரஷ்யாவில் அதனதிபர் ஜோசஃப் ஸ்டாலினை எதிர்த்து ஏற்பட்ட கிளர்ச்சி ஒடுக்கப்பட்டபோது நிறைய பேர் கைதாகினர். அதில் கைதான புகழ்பெற்ற சிற்பியான மார்தாவின் தந்தை லஜியோ மெர்ஸரோஸ் திரும்பி வரவேயில்லை. 1947ல் மார்தா தன் தாய் நாடான ஹங்கேரிக்கு ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்தார். Diary for my Children என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து மேலும் இரு திரைப்படங்களை அதே கதா பாத்திரங்களைக் கொண்டு செய்தார் மார்தா. 2021ல் மார்தா மெஜாரோஸுக்கு ஐரோப்பிய திரைப்படத்துக்கான வாழ்நாள் விருது அளிக்கப்பட்டது.
ஒரு குடும்பம் 1947ல் ரஷ்யாவிலிருந்து சிறு விமானம் மூலமாக ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கு வருகிறது. அந்தக் குடும்பத்தில் ஜூலி என்ற இளம் ஹங்கேரிய பெண்ணும் அவளது பாட்டியும் தாத்தாவும் இருக்கின்றனர். தாத்தா ஒரு நோயாளி. அவர்கள் புடாபெஸ்டிலிருக்கும் ஜூலியின் அத்தை மக்தாவின் வீட்டுக்கு வருகிறார்கள். மக்தா ஹங்கேரியின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் பிரபல பத்திரிகையொன்றில் செய்தாயாளராகப் பணிபுரிகிறவள், மிகவும் கண்டிப்பும் கெடுபிடியுமானவள், அவளது கண்டிப்பு மிக்க சூழலுக்குத் தக்கவாறு தங்களை சுதாரித்துக் கொண்டு பாட்டனும், பாட்டியும் இருக்க முயற்சிக்கிற அதே நேரம் இளம் பெண் ஜூலி அத்தையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் படிவதில்லை. ஜுலியை மக்தா உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்புகிறாள். ஆனால் ஜுலி பள்ளியில் படிக்காமல் ஏமாற்றிவிட்டு சினிமாவுக்குப் போகிறாள். மக்தா விசாரிக்கையில் உண்மையைச் சொல்லுகிறாள். மக்தாவிடம் பத்திரிக்கையாளர் என்பதால் சினிமா பார்க்க இலவச அனுமதி பாஸ் இருக்கிறது. அதை அவளைக் கேட்காமலேயே எடுத்துச் சென்று சினிமா பார்க்கிறாள் ஜுலி, மக்தா தன்னிடம் எவ்வளவுக்கு கண்டிப்பு காட்டுகிறாளோ அந்தளவுக்கு ஜுலி அவளை வெறுக்கிறாள். வகுப்பில் உடன்படிக்கும் டோமி என்ற பையனும் ஜுலியும் காதலிக்கின்றனர். இருவரும் வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமாவுக்கு போய்விடுவார்கள்.
மக்தா திருமணமாகி கணவன் இறந்தபின் ஒண்டிக்கட்டையாகவே இருப்பவள். கம்யூனிஸ்டு இயக்கத்தில் தீவிரமாக இயங்குபவள். ஜூலி தன் தந்தையை ஸ்டாலினின் ஆட்கள்தான் சிறையிலடைத்து கொன்றதாக உறுதியாக நம்புவதோடு தன் அத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் மக்தாவிடம் அவ்வப்போது, என் பெற்றோர்கள் எங்கே? என்று கேட்கிறாள். அத்தையின் பதில் அவளை சந்தேகிக்கவே செய்கிறது. அத்தையிடும் எந்த கட்டளையையும் மதித்து நடப்பதில்லை. ஒரு நாள் மக்தா அத்தையிடம் ஜுலி கேட்கிறாள்.
‘‘நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவில்லை. உனக்கு குழந்தை வேண்டாமா?’’, என்று மக்தா ஒரு விருந்து தருகிறாள். ஆலையில் பணிபுரியும் ஜனோஸ் என்பவரை அழைக்கிறாள் மக்தா. ஐனோஸ் மனித நேயம் மிக்கவர். விருந்து முடிந்த பின் ஜுலியுடன் சிறிது பேச வேண்டி வெளியே அழைத்துபோக மக்தாவிடம் அனுமதி பெற்று தோட்டத்தில் உலவிக் கொண்டே அவர் மக்தாவின் தியாக வாழ்வைக் கூறுகிறார். கூடவே அவன் மீது ஜுலிக்கு ஏன் வெறுப்பேற்பட்டது என்றும், அவளோடு ஒத்துப்போகும் படியும் கூறுகிறார். ஜுலிக்கு ஒன்று புரிகிறது, அத்தை மக்தா தனக்கும் ஜுலிக்குமுள்ள உறவுச் சிக்கலை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லுவதோடு அவர்களைக் கொண்டும் தனக்கு அறிவுரை வழங்கச் செய்கிறாள் என்று ஜுலி விளங்கிக் கொள்ளுகிறாள். தன்பக்கமே எதுவும் சரியில்லையென்பது போன்று உண்டாக்கிதான் தனிமைபடுத்தப்படுவதாக நினைக்கிறாள். மக்தாவிடம் அன்பு காட்டவும், பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக போகும்படியும் ஐனோஸ் ஜுலியிடம் கூறுகிறார். ஜுலிக்கு இது எதுவும் ஏறுவதில்லை.
அன்றைய உலாவலின் போதான உரையாடலில் ஐனோஸ் தனது சொந்தக் கதையையும் ஜுலிக்கு சொல்லுகிறார். தானும் ஸ்டாலின் கொள்கைகளை எதிர்த்து சில காரியங்களை செய்ததாகவும், இரண்டாவது உலகப் போரின் குண்டு வீச்சில் தன் மனைவியும் மகளும் இறந்துபோக, இரு கால்களில் சுவாதீனமற்ற மகனோடு வாழ்வதையும் தெரிவிக்கிறார். இதை இன்னொரு சந்தர்ப்பத்திலும் கூறும் ஐனோஸ் இறந்து போனவர்களின் இரு பாஸ்போர்ட்களையும் காட்டுகிறார்.
மக்தா கண்டிப்பு மிக்கவள் என்றாலும் நல்லவள் என்கிறார் ஜனோஸ் சிறுவயது முதலே நெருங்கிப் பழகிய ஜனோசும் மக்தாவும் அவருடைய மனைவியும் ஆவார்கள். ஆனால் மக்தாவை விலக்கி, மற்றவளையே மனைவியாகக் கொள்ளுகிறார் ஜனோஸ் என்பதையும் ஜுலி அவர் கூற அறிகிறாள். மக்தாவும் அவரது மனைவியும் நெருங்கின சினேகிதிகள்.
மேஜர் மக்தா கட்சிக்குக் கட்டுப்பட்டு, தான் பார்த்து வந்த பத்திரிகைப் பணியை விட்டு விட்டு உள்ளூர் படைப் பிரிவில் மேஜர் பதவியேற்று சேவை புரிகிறாள். ஜுலியை அவள் தாத்தா பாட்டியர் சமாதானப்படுத்தி ஒழுங்காக இருக்கும்படி கூறுகின்றனர். அவள் தனக்கு சுதந்திரம் வேண்டும் என்கிறாள். தான் கோரும் சுதந்திரம் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் சினிமா பார்ப்பதுபோன்ற வேலைக்காகாத விசயமாக அவள் கருதுவதில்லை. தன் பெற்றோர்களுக்கு நேர்ந்த உண்மையான கதியைப் பற்றிய விவரம் அறிவதில் அவள் மனம் கதா அலைபாய்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக ஜுலியின் தாய் இருக்கும்போது அவள் தந்தை சிற்பியை ரகசிய போலீஸ் கைது செய்து கொண்டு போகிறது. அவர் திரும்பியே வராத நிலையில் அவர் என்னவானார் என்பது எதையும் தெரிவிக்கப்படாத நிலையில் ஜுலியின் நிறை மாதக் கர்ப்பிணித் தாய் சிறுமி ஜுலியுடன் பிரசவ விடுதிக்க நடந்தே போவது, வழியில் வலியேற்பட்டுவிழ, தாதிகள் ஓடி வந்து எடுத்துச் செல்லுவதெல்லாம் ஃப்ளாஸ்பாக்காக காட்டப்படுகிறது. இவையாவும் ஜுலியின் நினைவலைகளாய் நிகழ்பவை. தாய் பிரசவத்தின்போது இறந்துபோகையில் தான் சின்னப் பெண்ணாக செய்வதறியாது அறைக்கு வெளியில் நின்றதையும், பிறகு ஒண்டியாக திரும்புவதையும் ஜுலி நினைவுபடுத்திக் கொள்ளும் காட்சி மனதை நெகிழச் செய்கிறது.
மேஜர் மக்தா காவல்துறையில் சேர்ந்தது ஜனோசுக்கு பிடிக்கவில்லை. ஒரு நல்ல பத்திரிகையாளன் கெட்டுப் போனதாக சொல்லுகிறார். இவர்களுக்கு நண்பரும் ஜனோசின் தொழிற்கூடத்தில் தொழிலாளியாகவுமுள்ள இஸ்துவான் என்பவருக்கு ஒரு நாட்டு தூதராக பதவியுயர்வேற்பட்டு அதைக் கொண்டாட மக்தா தரும் விருந்தின்போது மக்தாவின் கட்டளையை அலட்சியப்படுத்தியதால் ஜுலியை கடுமையாக் கண்டிக்கும் முகமாய் அவளை இஸ்துவான் செம்மையாக அடிக்கிறார். ஜனோஸ் தலையிட்டு கடிந்துகொண்டு, அந்த சின்னப் பெண்ணை அன்பால் வழிநடத்துவதை விட்டு உடலையும் உள்ளத்தையும் புண்படுத்தலாமா? என்கிறார்.
அதன் பிறகு ஒரு நாள் ஜுலி வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள், பெட்டியுடன் ரயிலில் பயணிக்கும் அவளை மக்தாவின் புகாரின் பேரில் போலீஸ் தேடி வந்து அவளை பலவந்தமாய் தூக்கிக் கொண்டு போய் அவளது அத்தையிடம் சேர்க்கிறது. ஜுலி ஜனோஸ் வீட்டிலிருக்கையில் அவர்மீதுள்ள துரோகக் குற்றத்துக்காக போலீஸ் அவரை கைது செய்து கொண்டுபோய் சிறையிலடைக்கிறது. கால்கள் சுவாதீனமற்று சக்கர நாற்காலியிலிருக்கும் தன் மகனைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவர் விடை பெறுகிறார். அவர் பணிபுரிந்த தொழிற்சாலையிலேயே ஒரு வேலை கிடைத்து ஜுலி அங்கு வேலை செய்கிறாள். அவளும் டோமியும் இணைந்து வாழ்கிறார்கள். இருவரும் ஒரு நாள் சிறைக்குச் சென்று ஜனோஸைப் பார்க்கிறார்கள். இப்போது தாடி மீசை எடுத்துவிட்ட ஜனோஸ் கிட்டத்தட்ட ஜுலியின் சிற்பித் தந்தையின் முகச் சாயலிலே காணப்படுகிறார்.
இறுதிக் காட்சியில் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை ஹங்கேரியின் கம்யூனிஸ்ட் அரசு விமர்சையாகக் கொண்டாடுகிறது. Life is Beautiful while we sing என்ற பாடலை ஆண்-பெண், பள்ளிக்கூட பிள்ளைகள், சகல தொழிலாளர்களும் ஹங்கேரிய மொழியின் சொற்கள் உச்சரிப்புக்குத் தக்கபடி வாயை அகலத் திறந்தும் வளைத்தும், குறுக்கி- நீட்டியும், கோணித்துமாக பாடுகின்றனர். சின்ன வயசில், அரையணாக்கு ஒரு வண்ண அட்டை விற்பார்கள். அட்டையை ஜெயில்கதவு போல சந்து சந்தாக வெட்டி அதற்குள் இன்னொரு வண்ண படத்தைச் செருகியிருப்பார்கள். படத்தை இப்படியிழுத்தால் புலியும் அப்படியிழுத்தால் மானும் சந்துக்குள் தெரியும். அதுபோல விளக்குகளால் அலங்கரித்த பெரிய திரையில் ஒரு படம். முதலில் அந்நாட்டு அதிபரின் படமும், பிறகு சந்துக்குள் அதுபோய் ஸ்டாலின் படமும் வருமாறும் வரும் விதமாய் பிரஜைகள் கண்டுகளிக்க ஓர் ஏற்பாடு. எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்ய அதிபரின் 70வது பிறந்த நாளை நினைவு கொள்ளும்படிக்கு புடாபெஸ்ட் நகரின் 70-வது வழித் தடத்துக்கான பஸ்களாக விடப்படுகின்றன.
இந்தத் திரைப்படமும் மார்தாவின் வேறு சில திரைப்படங்களும் நமக்கு ஒன்றை உறுதியாக உணர்த்துகின்றன. பெண்களை பெண்களாகவே அவ்வந்த பாத்திரங்களில் கொண்டு வரும் சக்தி பெண் இயக்குனர்களுக்கு கை வருவதில் வியப்பில்லை. பெண்களை அவர்களின் சூழ்நிலை, அரசியல் நிர்ப்பந்தம் அதிகார எல்லை, குடும்பமென்ற அகன்று ஆழ்ந்த நோக்கில் அவர்களின் புள காரியங்களை ஆண் இயக்குனர்கள் எளிதாக திரையில் கொண்டுவந்துவிடலாம். ஆனால் ஒரு பெண்ணின் அக நிகழ்வுகளை அதன் விளைவாய் தெரியக்கூடிய புற நிகழ்வுகளை அந்த பெண் பாத்திரத்தின் உடல்மொழி வாயிலாக சரியாகக் கொண்டுவர தேர்ந்த பெண் இயக்குனர்களே ஏற்றவர்கள். பொதுவாக பெண் பாத்திரப் படைப்புகளும் சரி, அவற்றை சினிமாவில் கையாள்வதும் சரி, ஆண் பார்வையிலும் கோணத்திலுமே அமைந்ததாக தெரிவது பெரும்பான்மை, மார்தாவின் திரைப்படங்களில் அவர் பெண் பாத்திரங்களைக் கொண்டு வந்திருப்பதில் தேர்ந்த அரசியல் அதிகார நிர்ப்பந்த அழுத்தம் போன்ற அனுபவமும் பிற சமூக பிரக்ஞையும் கொண்ட பெண் இயக்குனர் கையாண்டிருக்கும் யதார்த்த வார்ப்பு தெரியக்கூடியது.
இப்படத்தின் ஒளிப்பதிவு திகைக்க வைக்கிறது. யதார்த்தத்திலிருந்து சர்ரியலிஸத்துக்கு மாறுகிறது காமிரா கோணம். பார்த்தவரை, கிழக்கு ஐரோப்பிய சினிமாவின் ஒளிப்பதிவு மேற்கு ஐரோப்பிய சினிமாவின் ஒளிப்பதிவிலிருந்து வேறுபடுகிறது. இப்படத்தின் காமிரா கலைஞர் ஹீஸ்லோர் எர்னோய் HAESELORERNOY மிகவும் பாராட்டுக்குரியவர்.
ஜூலியாக நடிக்கும் இளம் நடிகை சுஜ்சா ஜிங்கோ க்ஜி (ZSUZ SA CZINOCZI) மிக எளிதாக அந்தப் பாத்திரத்தை கையாண்டிருக்கிறார். மக்தாவாக அன்னா போலோனி Anna polony அற்புதமாக செய்துள்ளார் மிக எளிதாக அந்தப் பாத்திரத்தில் பால் ஜோல்னே Pal zolnay) ஒரு வித மரியாதையும் கூடவே இரக்கத்தையும் சம்பாதிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சினிமாவில் நகைச்சுவை நடிப்பு கலைஞர்களுக்கு மரணமே கிடையாது. ஒரு காலக்கட்டத்தில் உலகளாவிய அளவில் சிறந்து விளங்கிய நகைச்சுவையோடு அறிவார்த்தமான விசயங்களையும் நகைச்சுவை நடிப்பு மூலம் வழங்கிவந்த அமர கலைஞர்களுக்கு காலம் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. படக்காலத்திலும் பிறகு பேசும்பட காலத்திலும் விளங்கியவர்கள் லாரல் ஹார்டி இணையின் நகைச்சுவைத் திரைப்படங்களையும் அவர்களையும் நினைவு கூறும் விதமாயும் அவர்களுக்கு நினைவஞ்சலி செய்யும் விதமாயும் 1965ல் ஹாலிவுட் The Great race எனும் பிரம்மாண்டமான நகைச்சுவைத் திரைப்படத்தை 70 mmல் தயாரித்தது. ஜாக் லெம்மான் இருவேடங்களிலும், உடன் டோனி கர்டிஸும், நடாலிவுட்டும் நடித்தனர்.
சென்னை சஃபையர் திரையரங்கில் 25 வாரங்களுக்கு ஓடிய படம். மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்துக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து பாரிஸ் வரை ஒரு சர்வதேச மோட்டார் கார் பந்தயம் நடக்கிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து அவ்வந்த நாட்டு கார்களும், அவற்றின் சொந்தக்கார ஓட்டுனர்களும் போட்டியில் பங்கேற்கிறார்கள். 30-1920 களின் கார்கள். எல்லாமே ரிக்சா டாப் மோட்டார் சைகிள் சக்கரம் கொண்ட (ஜலாபி) JALOPY வகை கார்கள். இறுதிப் போட்டி மந்திர சக்தியறிந்த அரைக்கிறுக்கு விஞ்ஞானி ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்குமாக போகிறது. முற்றிலும் நகைச்சுவைப்படம். இப்படம் லாரல் ஹார்டி இருவருக்கும் அஞ்சலி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டது.
தொடக்கத்தில் இது லாரல் மற்றும் ஹார்டிகளுக்கு நினைவஞ்சலியாக படம் எதுவும் எடுக்கப்படும் முன், நமது ராஜ்கபூர் சாப்ளின் நடிப்பையே சில படங்களில் தனது நடிப்பாக செய்ய முயற்சித்தவர், ‘‘ 420’’ என்ற படத்தில் நடை, உடையணியும் விதம், சதா தலையில் தொப்பி அதை அவ்வப்போது யாரைக் கண்டாலும் இலேசாக எடுத்துவிட்டு அணியும் மரியாதையும் கால்களை ஒரு மாதிரி அகட்டியகட்டி நடப்பதுமான சாப்ளின்மானரிஸத்தையே ராஜ்கபூர் செய்தார். அது மட்டுமின்றி சாப்ளின் தன் இறுதிப் படத்தில் முழுக்க பேசி நடித்து இயக்கிய ‘‘THE LIME LIGHT’’ படத்தை பின்பற்றி ராஜ்கபூரும் ‘‘மேரா நாம் ஜோக்கர்’’ என்ற படத்தையும் செய்து காட்டினார். இவையாவும் உலகில் பெரிதாக நிலைத்து நிற்க முடிந்திருக்கவில்லை. ஆனால் ஹங்கேரிய திரைப்பட இயக்குனர் பால்சாண்டோர் PALSANDOR 1973ல் FOOd BALL OF THE GOOD OLDDAYS (REGI IDOK FOCIJA என்றொரு மகத்தான நகைச் சுவைப் படத்தை செய்தளித்தார். இந்த கால்பந்து விளையாட்டுக்கதைத் திரைப்படம் ஹங்கேரிய சினிமாவிலும் சர்வதேச சினிமாவிலும் முக்கியமான படங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது.
இப்படத்தை யாருக்கும் நினைவஞ்சலியாக செய்ததாக பால்சாண்டோர் அறிவிக்கவில்லையென்றாலும் படம் தொடக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பிலும் நமக்கு சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற பார்த்து சிரித்து பழக்கப்பட்ட நினைவில் நிற்கும் காட்சிகளையும் நடிப்பையும் மீண்டும், நினைவுக்குக் கொண்டு வருபவை. ஓரிடத்தில் ஒரு மின்வெட்டு காட்சியில் இயக்குனர் இத்தாலியின் சிறந்த அங்கத சினிமாக்காரர் FEDERICO FELLINI யையும் நினைவூட்டி விடுகிறார்.
மூலக்கதையை ஜவான் மாண்டி IVAN MANDY என்பவர் சுஜ்சா டோத் ZSUZSA TOTH என்பவருடன் இணைந்து எழுதியவர். பால் சாண்டோர் 1964 முதல் திரைப்படங்கள் தயாரித்து இயக்கி வரும் ஹங்கேரிய இயக்குனர். இதுவரை 28 திரைப்படங்கள் செய்திருக்கிறார். இவர் புடாபெஸ்டில் 1939ல் பிறந்தவர். 27வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவி்ல் பால்சாண்டோர் இயக்கிய A STRABGE ROLE எனும் படம் வெள்ளிக் கரடி பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கதை 1924ல் நடைபெறுகிறது. பொதுவாகவே லத்தீன் அமெரிக்க நாடுகள்போல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கால்பந்தாட்டத்தில் உயிரையே வைத்திருப்பவை. ரஷ்யா, ஹங்கேரி, போலந்து, செக்கோஸ்லோவேகியா, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகள் குறிப்பிடத் தக்க கால்பந்தாட்டப் பைத்தியங்கள். குறிப்பாக கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய ஹங்கேரி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை.
எடி மினாரிக் EDE MINARIK புடாபெஸ்ட் நகரையொட்டிய புறநகர் பகுதியில் ஒரு சலவைக் கடை வைத்து துணிகள் வெளுப்பது, இஸ்திரி போடுவது என்று ஜீவனம். அவன் மனைவிக்கு அவனது சம்பாதனை மீது மட்டமே அக்கறை. மினாரிக் ஒரு சராசரி ஹங்கேரியன் போலவே கால்பந்து ரசிகனாகவும் அவ்வாட்டத்தின் சகல லட்சண, சூட்சும, நாள் நட்சத்திர கோத்திராதிகள் யாவும் அறிந்த மாஜி ஆட்டக்காரன். அவனுக்கு அடங்காத ஆசையாக கால்பந்தாட்டம் உச்சத்தை எட்டுகையில் சொந்தமாக ஒரு கால்பந்துக் குழுவை ஏற்படுத்தி அதை ஆட்டத்தின் சகல துறைகளிலும் வலுவேற்றி வல்லமை கொண்டதாக்கி அதை பிரிமியர் லீகில் PREMIER LEAGUE நுழைந்து ஆடவைத்துவிட வேண்டும் என்ற பேராவல். ஆட்டக்காரர்களுக்கு அவன் அவஸ்தைப்பட வேண்டியிருக்கவில்லை. விசிலடித்தால் போதும். அவனடிக்கும் விசில் ஒலி கேட்ட மாத்திரத்தில் அவனது ஆட்டக்கார நண்பர்கள் தாங்கள் எத்தகைய முக்கிய வேலையிலீடுபட்டிருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து அவனோடு இணைந்து நெஞ்சு நிமிர்த்தி நடப்பார்கள்.
மினாரிக் குழுவுக்கு ஆள் திரட்டப்புறப்படுகிறான். தன் ஜேபியைத் தடவிவி்ட்டு மனைவியிடம் கத்துகிறான், என் காசைத் திருடினியா? என்று படத்தின் தொடக்கக் காட்சியில் இஸ்திரி மேஜை மீது பெரிய ரொட்டியை வெட்டுகிறான். வெளிக்கதவு மணியடிக்கிறது. யாரோ வாடிக்கையாளரென்று ஓடிப்போய்க் கதவைத் திறக்க யாருமில்லை. மூடிவிட்டு வந்து, ரொட்டிக்கு வெண்ணெய்த் தடவி வாயில் வைக்கையில் மீண்டும் மணியோசை. பதறியோடி திறந்து பார்க்க, யாருமில்லை. இன்னொரு முறையும் மணியடிக்கவும் போய் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறான். இந்த சில நிமிட காட்சி சாப்ளின் சினிமாவில் வந்து போயிருக்கும் ஒன்று.
சாப்ளின் கால மெளனப்படமாகவே செய்திருக்கிறார் பால்சாண்டோர். சட்டகங்களின் வேக நகர்வோடு வெறும் ஒற்றை பியானோ இசைச் சத்தமும் நமக்கு அப்படியே ஒரு சார்லி சாப்ளின் படங்களில் இவ்விதமாகத்தான் பியான இசை (மெளனப் படத்துக்கேயானது போன்றது) பின்னணியில் வரும்.
மினாரிக் தன் கால்பந்தாட்டக் குழுவுக்கு CSABAGYONGYE என்று பெயரிட்டழைக்கிறான். ஆட்டக்காரர்கள் மைதானத்தில் எங்கெங்கு நிறுத்தப்பட்டு நிற்பரோ அது அவர்களின் தனித் திறமை மிக்க ஆட்ட விதியின்பாற்பட்ட தொழில்முறை சிறைப்பைக் கொண்டது. ஒரு ஃபுல்பாக் ஆட்டக்காரன் பெரும்பான்மையாட்டங்களில் ஃபுல்பாக் ஆகவே நிறுத்தப்பட்டு ஆடுவார். இவருக்கும், செண்டர் ஃபார்வாடுக்கும் ஆட்டவிதிப்படி மைதானத்தில் எல்லை வரையறையுண்டு.
கோல்கீப்பர் என்றுமே கோல்கீப்பர்தான். ‘‘ரிசர்வ்’’ ஒருவர் மாறிக் கொண்டேயிருப்பார். ஒரு குழுவுக்குத் தேவையான இம்மாதிரி ஆட்டக்காரர்களை மினாரிக் ஒரு நாள் விசிலடித்து அழைத்துச் செல்லும் காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆட்டக்காரனும் மினாரிக் தேடிவரும் நேரத்தில் எந்தெந்த சூழ்நிலையிலேயோ தன் குடும்பத்தாருடன், காதலியுடன் எனறெல்லாம் இருப்பான். மினாரிக்கின் விசில் ஒலி கேட்டவுடனே செய்து கொண்டிருக்கும் காரியத்தை அப்படியே போட்டுவிட்டு, அல்லது விட்டுவிட்டு ஓடிவந்து அவனோடு சேர்ந்து கொண்டு கிளம்புவான். இந்த தொடக்கக் காட்சியே நம்மை அசத்தி படத்தில் ஆழ்ந்த கவனம் கொள்ள வைத்துவிடுகிறது. தன் விசிலுக்கு மசியாதவனை்ப் பெயரிட்டு அழைப்பான் மினாரிக்.
எல்லாம் வறுமைக் கோட்டுக்கு கீழேயுமில்லாது மேலேயுமில்லாது நடுவில் வாழும் எளிய மனிதர்களே அவனது குழுவில் சேர்க்கப்படுபவர்கள். எல்லாருமே ஹங்கேரிய புறநகர்ப் பகுதிகளின் தெருக்களிலும் சாலைகளிலும் கால்பந்தாடிப் பழகி ஆட்டக்காரர்களானவர்கள். மினாரிக்கும் அப்படியான ஆட்டக்காரனே. ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் பெரிய குடும்பம். ஏதோ சண்டை. விசில் ஒலி கேட்கிறது. உடனே சண்டையிலிருந்து பிய்த்துக் கொண்டு ஓடோடி வந்து மினரிக்குடன் சேர்ந்து வீர நடைபோட்டு நடக்கிறான். ஒருவன் அவனது மனைவி பால்கனியில் நின்றபடி சாபமிடுகிறாள். மிகவும் பருமனான ஆட்டக்காரன் ஒருவன் தெருவில் வித்தைக் காட்டும் ஹடயோகி போன்ற கிராக்கி. மார்பை, முதுகைச் சுற்றி இரும்புச் சங்கிலியால் இறுகப் பிணைத்துக் கட்டிக் கொண்டு சவால் விடுகிறான். கண் இமைகளை வினோதமாகப் பிடுங்கி ஒழுங்கிக் கொண்டு கான்வெண்ட் பள்ளிச் சிறுமி தோற்றத்தில் சிறுத்த தன் மனைவிக்கு தன் சாகசத்தைக் காட்ட சங்கிலியை மேலும் இறுகி உடைக்க முயற்சிக்கையில் விசில் ஒலிகேட்கிறது. உடனே சங்கிலியைக் குறுக்கு வழியில் களைந்தெறிந்துவிட்டு ஓடிவந்து மினாரிக்குடன் சேர்ந்து நடக்கிறான். இந்தக் காட்சி மூலமாய்த்தான் பால் சாண்டோர் நமக்கு ஃபெடரிகோ ஃபெல்லினியை நினைவூட்டுகிறார்.
ஃபெல்லினியின் மிகவும் பேசப்பட்ட படமான La Strada நினைவுக்கு வருகிறதா? அதன் கழைக்கூத்தாடி ZAMPANO வும் அவனது உடல் சிறுத்த இமைகளைத் திருத்திய வினோத மனைவியும் நினைவுக்கு வருகிறார்களா? அவர்களையும் லாஸ்டிராடா திரைப் படத்தையும் அவற்றின் இயக்குனர் ஃபெல்லினியையும் சும்மா ஒரு கணநேர காட்சி நகர்வில் காட்டி நினைவூட்டிவிடுகிறார் பால்சாண்டோர். அருமையான ஐடியா.
அடுத்தடுத்து ஆட்டக்காரர்களை அழைத்து சேகரித்துக் கொண்டே மினாரிக் ஒரு பெரிய விபச்சார விடுதிக்குள் நுழைகிறான். இரண்டு மூன்று அடுக்குமாடிக் கட்டிட விபச்சார விடுதிஅது. ஒவ்வொரு அறையிலிருந்தும் பெண்கள் வெளிலிய்ல் வந்து நின்று வாடிக்கையாளர்களை எதிர்நோக்கி நிற்கிறார்கள். இரு அறைகளிலுள்ள இரு ஆட்டர்ராபப்ரழ் சாதாரண விசில் ஒலிக்கு அசையமாட்டார்கள். பெண்களும் விடமாட்டார்கள். மினாரிக்கிடம் வேறொரு விசிலுமுண்டு. சுவரைப் பார்த்து திரும்பிநின்று ஜேபியிலுள்ள போலீஸ்காரர் விசிலை எடுத்து ஊதுகிறான். நீண்ட போலீஸ் விசில் ஒலி வரவும், விபச்சார பெண்கள் பயந்து பாய்ந்தோடி தம் அறைக்குள் பதுங்குவதோடு அறைகளிலுள்ள வாடிக்கையாளர்களையும் விரட்டுகிறார்கள். இரு ஆட்டக்காரர்கள் விபச்சார அறைகளிலிருந்து மின்னலென வெளியில் பாய்ந்து வந்து மினாரிக்கோடு இணைந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறார்கள். கடைசியாக கோல்கீப்பர், அவன் தன் காதலிக்கு அழுத்தமும் ஆழமுமாய் முத்தமிட்டபடி நெருங்கி மரத்தடியிலிருந்தான். விசில் ஒலி வரவும் அவன் பார்த்துவிட்டு அலட்சியமாய் மீண்டும் முத்தமிடுவதில் மூழ்குகிறான்.
மினாரிக் பெயரிட்டு அவனை அழைக்கவும் ஓடி வருகிறான். அவனைத் தொடர்ந்து அவனது காதலியும் ஓடிவர, குழுவை மைதானத்துக்கு அழைத்துப் போகிறான் மினாரிக். முதலில் வலைப் பயிற்சி NET PRACTICE ஆரம்பமாகிறது. கால்பந்துப் போட்டியில் ட்ராவில் முடிந்தால் வெற்றி தோல்வியை பெனால்டி பந்தடி மூலம் தீர்மானிப்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். குழுவிலிருந்து ஒவ்வொருவராக வந்து கோல் நோக்கி பந்தையடிக்கிறார்கள். கீப்பர் இரு முறையும் பந்தைத் தடுத்துப் பிடித்து அணைத்து Save செய்துவிட்டான். மூன்றாவது இப்போது மினாரிக் ஒரு கைத்துப்பாக்கியை (அதில் குண்டு இல்லை) கோல் கம்பத்திலுள்ள ஆணியில் தொங்கவிடுகிறான். இங்கிலாந்து குழுவிலிருந்த ராபின்சன் என்ற சிறந்த கோலி இவ்வாறாகத்தான் தன் கைத்துப்பாக்கியை … காக்கும் கோல் கம்பத்தில் செருகித் தொங்கவிட்டானாம். பெனால்டி உதையின்போது இரண்டு பந்துகளை பிடித்து தன் அணியைக் காப்பாற்ற மூன்றாவது பந்தையும் பிடிக்க வேண்டும். ராபின்சன் அந்தப் பந்தை தவறவிட்டதன் மூலம் அவனது அணியின் வெற்றி வாய்ப்பை கெடுத்துவிட்ட தன்னை கம்பத்தில் தொங்கவிட்ட துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் வைத்துச் சுட்டுக் கொண்டு இறந்தானாம். ஆனால் வலைப் பயிற்சிக்கு குண்டில்லாத துப்பாக்கியைத்தான் வைத்தான்.
அடுத்து மேற்கொண்டு சீருடை வாங்க பிற செலவுகளுக்கு பணம்? மினாரிக் கேட்ட இடங்களில் ஒருவனும் பணம் கடன் தருவதில்லை. ஒரே வழி, தன் குழுவிலுள்ள உபரி ஆட்டக்காரர்களை பிற பணக்கார குழுக்களுக்கு விற்கிறான். இதனிடையே நடு நடுவில் சார்லி சாப்ளின் படங்களில் இடம் பெற்ற நிறைய நகைச் சுவைக் காட்சிகளை மினாரிக்கை கொண்டு படத்தில் நிகழ வைக்கிறார் பால்சாண்டோர். மதிப்புள்ள தன் கோலியையே விற்று விடுகிறான் மினாரிக். லீக் போட்டி இடம் பெறுகையில்தானே கோல்கீப்பராக உடையணிந்து கோல்போஸ்டை காக்க நிற்கையில் பெனால்டி உதைகள் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை வரும்போது அவன் தன் கைத்துப்பாக்கியை எடுத்து கோல் கம்பத்தில் மாட்டித் தொங்கவிடுகிறான். ஆயிற்று ஒன்று, பிறகு இரண்டாவது பந்தையும் பிடித்து அணியைக் காப்பாற்றிவிட்டான். மூன்றாவது பந்தை எதிர்நோக்கும் மினாரிக் யதேச்சையாக கம்பத்தில் தொங்கும் துப்பாக்கியையும் ஒரு முறை பார்க்கும் சமயம் படமும் முடிவுறுகிறது. எடிமினாரிக்காக ஹங்கேரிய நடிகர் டெஸ்ஸோகாரஸ் (Dezso Garas) அற்புதமாக படம் முழுக்க வந்து நடித்திருக்கிறார். அதி உயரிய வண்ண ஒளிப்பதிவை எலிமெர் ராகலை (Elemer Ragalyi) யின் காமிரா செய்திருக்கிறது.