அறிவியலை புத்தகமாக வாசிப்பது மிக கடினமான ஒன்று தான் ஏனெனில் வாசிப்பில் சிறு தொய்வோ, புரியாத தன்மையோ வந்தால் கூட உடனே சலிப்பு தட்டி விடும். சில ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ் கலைச் சொற்கள் இல்லாத போதாமையும் இருக்கின்றது, அந்த குறையை போக்க அறிவியல் மற்றும் தமிழ் ஆர்வம் மிக்க பேராசிரியர்கள் அவசியம்.
ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள் சின்ன சின்ன வார்த்தைகளுக்கு கூட அகராதியை நாட வேண்டி இருப்பதால் தமிழில் எழுதப்பட்ட அறிவியல் புத்தகங்கள் மீதிருக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது. இத்தனை தடைகளை தாண்டி தான் தமிழில் அறிவியல் புத்தகங்கள் மக்களை சென்றடைகின்றன. பயோட்டர் ஒரே நாளில் ஆர்வமாய் நான் வாசித்து முடித்த புத்தகம், புத்தகம் சிறிதே எனினும் அதன் உள்ளடக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சில நேரம் நாம் நுகர விரும்பும் பொருட்களை பற்றி நம் அருகில் இருந்தவர்களிடம் பேசிவிட்டு கைப்பேசியை திறந்தால் உடனே நாம் எதை வாங்க விரும்புகிறோமோ அந்த பொருட்களின் படங்களே நாம் எந்த ஆப்பை திறந்தாலும் கண்ணுக்கு தெரியும்.
இதன் பின்னணி என்ன, நம் தகவல்கள் அனைத்தும் திருட படுகிறதா ? எனில் திருடி எங்கு அதை சேர்த்து வைக்கிறார்கள் ? இப்படி ஒவ்வொருவரிடமும் தகவல்கள் திருடப்பட்டால் அதை சேர்த்து வைக்க எவ்வளவு பெரிய கிடங்குகள் தேவை படும். ஆனால் கவலையே இல்லாமல் அவற்றை இடம் ஆக்கிரமிக்காத ஒரு புதிய இடத்தில் சேர்த்து வைக்கலாமாம் அது என்ன என்பதை தான் சொல்கிறது பயோட்டர்.
மனித உடம்பிற்குள் இருக்கும் ஒரு அதிசய சாப்ட்வேர் தான் DNA என்கிறார் ஈ கோலை. அந்த DNAவில் தரவுகளை சேகரிக்கும் முறையை எப்படி யார் கண்டுபிடித்தார்கள், அதில் இன்று வரை நிகழ்ந்திருக்கும் முயற்சிகள் என்னென்ன, எப்படி தரவுகளை சேகரிக்கிறார்கள் என்பதை எல்லாம் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்கிறார் ஆசிரியர்.
இப்படி DNAவில் தகவல்கள் சேகரிக்க தற்போது ஆகும் செலவு கணக்கு, அப்படி சேகரித்தவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் என்று அனைத்தையும் அலசி ஆராய்கிறார் ஆசிரியர். DNAவில் தரவுகளை சேகரிக்கலாம் என்பதே எனக்கெல்லாம் புது தகவல், அப்படி இருக்க அவற்றை அக்கு வேறு ஆணி வேறாக அலசிஆராய்ந்து ஒருநிறைவான புத்தகத்தை தந்திருக்கிறார் ஆசிரியர்.
அனைத்து வயதினருக்குமே நான் இந்த புத்தகத்தை பரிந்துரைப்பேன் ஏனெனில் இதில் மொழி சார்ந்த சிக்கல்கள் எதுவும் இல்லை. மேலும் சற்றே சலிப்பு ஏற்படலாம் என்று தோன்றும் இடங்களில் எல்லாம் எளிய நகைச்சுவையான உதாரணங்கள் மூலம் ஆசிரியர் நம்மை ஆச்சர்ய படுத்துகிறார். நாளைய தேவைக்காக நாம் அவசியம் பயன்படுத்த போகும் ஒன்றை இன்றே கண்டறிந்து அனைவரிடமும் கொண்டு சேர்த்ததற்கு ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
BIOTER – உயிருள்ள கணினி
ஆசிரியர் : ஈ கோலை
பதிப்பகம் : வாலறிவன்
பக்கங்கள் : 57
விலை : 80
இந்துமதி கணேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.