Biriyani Kadai | பிரியாணி கடை -அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா

சிறுகதை தொகுப்பாகத்தான் இந்த நூல் நம் கையில் வந்தது. ஆனால் மக்களின் இயல்பான வாழ்க்கைச் சூழல் எப்படியெல்லாம் புயல் வேகத்தில் சுழன்று அடிக்கிறது என்பதாக இச்சிறுகதை உருமாறி கையில் வந்ததாக வாசிக்கும்போது அறிந்து கொண்டேன். இந்நூலின் அட்டைப்படமே ஒரு கதையாக வலி நிறைந்து நமக்கு உணர்த்துகிறது. நாம் சாலையோர கடைகள் நிறைய பார்த்திருப்போம். நமக்குத் தேவையானவற்றை மலிவு விலையில், அதே நேரத்தில் தரமான பொருளை பெற்றுச் செல்வோம். அப்படித்தான் சாலையோரம் மிகச் சிறப்பாக இயங்கிய பிரியாணி கடை இறுதியில் என்ன ஆனது கேள்விக்குறி. எவ்வளவு உயர்ந்த வாகனத்தில் வருபவரும் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டு சென்ற கடை சாலையின் விரிவாக்கத்தால் காணாமல் போனது கடை மட்டுமல்ல அந்தக் கடைக்கு குடையாக இருந்த புளிய மரமும். கதை மாந்தர் தன்னுடைய கடை போனதை பற்றி கூட கவலைப்படவில்லை. தான் கட்டிப்பிடித்து வாழ்ந்த புளியமரம் காணாமல் போனதே என்ற ஏக்கம் தான் அவரை வாட்டி வதைத்தது. புளிய மரக் கட்டையோ கூட கடைசியில் மிஞ்ச வில்லை. மிஞ்சியது புளிய விதைகள் தான். ஆம் அதுவும் நாளாகி நாளாகி செரித்துப்போன காட்சியாகத்தான் நம் கண்முன்னே விரியும். ஆம் இப்போதும் சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் சலூனில் மொட்டை அடித்துக் கொள்ளும் பொழுது எப்படி தலை வழுக்கையாக இருக்கிறதோ அதுபோலவே இயற்கையும் வழுக்கையாகி விடுகிறது சாலை விரிவாக்கத்தால். இக்கதையில் பிரியாணி கடை வைத்திருந்த மனிதர் என்ன ஆனார் கதையை வாசியுங்கள் தோழர்களே தெரிந்து கொள்ளலாம்.

இச்சிறுகதை தொகுப்பில் 11 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வலியையும், மன நெகழ்ச்சியையும் தன்னுடைய சுயலாபத்திற்காக, சுயநலத்திற்காக மத வெறியைக் கிளப்பி விடும் வியாபாரிகளாகவும், ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியர் இஸ்லாமிய மாணவர்கள் முன்பு ‘துலுக்கன்’ என்ற வார்த்தையை பயன்படுத்திய போது இருந்த கசப்பு சென்னை பெருவெள்ளத்தில் மக்கள் தவித்தபோது அதே இஸ்லாமிய நண்பர்கள் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் ஓடோடி மக்களுக்கு உதவி காட்சியை அதே ஆசிரியர் மாணவர் முன்பு செய்தித்தாளில் வாசித்து காட்டிய நிகழ்ச்சி ஒருபுறம் வலியை கொடுத்தாலும் மறுபுறம் அதற்கு மருந்தும் இட்டு விடுகிறது.

இப்படி பதினோரு கதைகளும் 11 விதமான குணா அதிசயங்களை நிகழ்த்தி காட்டிச் செல்லும். இதில் என்னை மிகவும் மனம் நோகச் செய்தக் கதை வியாபாரிகள். ஆம் இயல்பிலேயே வியாபாரிகள் என்றால் மக்களுக்கான பொருட்களை வாங்கி விற்பவர்கள் என்போம். அப்படித்தான் கதையும் செல்லும். மாடுகளை வாங்கி விற்கும் தரகர்களை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இக்கதையில் இரண்டு தரகர்கள் இருவரும் வேறு வேறு திசைகள். ஆனால் இறுதியில் ஒரு மையத்தில் குவிகிறது மதவெறி என்னும் பெயரில். ஏமாந்த தரகர் இஸ்லாமியர். பிழைத்த தரகர் இந்து. தரகர் ஏமாந்தது மட்டுமல்ல தன் உயிரையும் விட்டுவிடுகிறார். காரணம் வியாபாரப் போட்டி. அது என்னங்க வியாபாரம் என்றால் போட்டி இருக்க தானே செய்யும். ஆம் போட்டி இருக்கத்தான் செய்யும்.

போட்டியில் நேர்மையாக இருந்து வெற்றி பெற்றால் அது வியாபாரம். இங்கே வியாபாரமாக நடந்தது. மதவெறி வியாபாரம் அல்லவோ இறுதியில் வெற்றி பெற்றது. ஆம் மம்மது என்கிற கேரக்டர் நியாயமான விலையில் மாடுகளை வாங்கி விற்கின்ற தரகராக இருந்துள்ளார். அவருக்கு நேர்மாறாக ரத்தினசாமி. ரத்தினசாமி தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருந்தார் மம்மது விடம். என்ன காரணம் மாடு தரகர் ரத்தினசாமி தான் சென்று கேட்கின்ற இடங்களில் குறைவான விலைக்கு மாட்டை கேட்பார். மாட்டை விற்போர் கொடுக்க மாட்டார்கள். எதார்த்தமாக மம்மதும் அதே மாடிடம் செல்வார் மாட்டுக்கு சொந்தக்காரர் எதிர்பார்த்த விலையை விட சற்று குறைவாகவோ அல்லது அதே விலைக்காகவோ தொகை கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து விடுவார். இதனால் ரத்தினசாமி வியாபாரம் படுத்து விடுகிறது. அங்கே தான் ரத்தினசாமி தன்னுடைய நரி தந்திரப் புத்தியை காண்பித்து விடுகிறார். ஆம் அப்படித்தான் ரத்தினசாமி பேசிய ஒரு மாட்டினுடைய விலையை விடக் கூடுதலாக மம்மது கொடுத்துவிட்டு மாட்டை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வரும் பொழுது ஒரு கூட்டுச்சாலையில் தேநீர் குடிப்போம் என்று மம்மது வாகனத்தை நிறுத்தச் சொன்ன இடத்தில் 10,15 பேர் காவித் துணிகளை தலையில் கட்டிக்கொண்டு ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூவிக்கொண்டு ஆட்டோவை சுற்றி வளைத்தனர். இறுதியில் ஆட்டோ ஓட்டி வந்த இந்துவுக்கும், மம்மதுக்கு துணையாக இருந்த குமார் என்கிற இந்துவுக்கும் சற்று அடி மட்டுமே விழுந்தது அவர்கள் மயங்கி விட்டனர். ஆனால் மம்மதுவை இழுத்து போட்டு அடியோ அடி என்று என்று அடித்து இறுதியில் பெரிய பாறாங்கல்லை தலையில் தூக்கி போட்டு கொன்ற கும்பல் ‘பாரத் மாதா கி ஜே’ என்று கத்திக்கொண்டு சென்றது. ஆட்டோ வாகனத்தில் இருந்த மாட்டை தரகர் ரத்தனசாமி அவிழ்த்து கொண்டு சென்றார் இருட்டில். முதன்முதலாக அங்கே நடந்த இந்தக் கலவரத்தை பார்த்து மிரண்ட மக்கள் சாலையில் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர். இதைச் சிறுகதை என்று மனம் நம்ப மறுக்கிறது. ஆம் நாட்டில் பல இடங்களில் இப்படித்தான் மதவெறியர்கள் மக்களின் வாழ்க்கைச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இந்நூலை வாசிக்கும்போது இந்தக் கதையின் காட்சி மனதில் வந்து போனது.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான பார்வையை நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் நமக்கு வரும்போது யாரும் நமக்கு துணை வரமாட்டார்கள்.

தோழர் ஆமினா முஹம்மது அவர்களின் ‘ஆகாத தீதார்’ நூலை வாசித்த பொழுது இஸ்லாமிய சொந்தங்களில் இருக்கின்ற பெண்களுக்கான நெருக்கடி என்னவென்று வாசித்து மனம் கணத்துப் போனது. இந்நூலை வாசிக்கும் பொழுது ஆண் பெண் வேறுபாடின்றி இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஏற்படும் சின்னஞ்சிறிய மகிழ்ச்சியும், பெரிய பெரிய வேதனைகளும் மனம் கூடுதல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள மறுக்கிறது. ஆம் இந்நூல் சிறுகதை தான். ஆனால் பெருவாழ்வாய் வாழ வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கான நெருக்கடியால் முட்டுச்சந்தில் வாழ்ந்து விட்டுச் சென்றனர் இந்நூலின் கதை மாந்தர்கள். சிற்சில இடங்களில் அவர்கள் மாற்று மதத்தினருக்காக வாழ்ந்த பெருவாழ்வு மிகப்பெரிய வாழ்வாக இருந்துள்ளது.

மொத்தத்தில் கல்வி சமத்துவமாய் கிடைக்காதபோது இந்துக்களில் சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சனை எழுமோ, ஏற்படுமோ அது இஸ்லாமிய நண்பர்களையும் விட்டுவிடவில்லை.

மிகச் சிறப்பான கதைகளை வழங்கிய எழுத்தாளருக்கு மனமார்ந்த நன்றி!
இந்நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கும், பேராசிரியர் முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்நூலை கேட்டதும் அனுப்பி வைத்த தோழர் ஆமினா முஹம்மது அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!! அவசியம் இந்நூலை வாசியுங்கள் தோழர்களே
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!

நூலின் தகவல்கள்:- 

நூல் : பிரியாணி கடை 

நூலாசிரியர் : அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா

வெளியீடு : இக்றா பதிப்பகம்

நூலைப் பெற : 8220658318

முதல் பதிப்பு : பிப்ரவரி 2024

விலை : ரூ.130/-

நூலறிமுகம் எழுதியவர்:- 

இரா. சண்முகசாமி


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *