தன் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யும் கலை மிக நுட்பமானது. புனைவுகளை எழுதும் பொய்யான சரித்திரங்கள் … உண்மை போல
கோலோச்சும் காலமிது.
மானுடத்தின் வாழ்வியல் வலிகளையும் , பாசத்தில் கட்டுண்ட மனங்களையும் தன் எல்லைகளை, மீறாமல் நேர்மையை நிலைநாட்டும் வாழ்வில் வறுமை எல்லை மீறினாலும் கொள்கைகளை கைவிடாத மானுட நவரத்தினங்களை … கதாபாத்திரங்களாக… படைத்த சகோதரருக்கு பாராட்டுக்கள்.
நம்மை கடந்து செல்லும் இதயங்களின் அபிலாசைகள், துக்கம், கடமை வாழ்ந்தேயாக வேண்டிய காலத்தின் நட்சத்திர தொகுதியாக கதைகள் அல்ல…
வாழ்ந்த மனிதர்களை இரத்தமும் சதையுமாக நடமாடும் மாந்தர்கள், இந்த எழுத்தின் சாட்சிகளாக உலாவருகிறார்கள். நம் வயது ஒரு கால நொடி தான். சந்திக்கும்
மனிதர்களோ வயதின் வசீகரமற்று , எல்லா வயதுக்குள் நுழையவும் வெளியேறவும் கற்றுக் கொள்கிறது, மனது.
அதை தன் எழுத்துக்களால் அலங்கரித்துள்ள… மனோலயம், தாஹிர் சகோதரருடையது.
மற்றவர் வலியை புரிதல் என்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் நமது கவிக்கு … சிறுகதையின் மாந்தர்கள் அவரின் சமகால நடமாடும் மாந்தர்கள்.
உண்மையை எந்த பாஷையில் சொன்னாலும் புரிந்து விடும் சக்தி மிக்கது…. இனி கதைகளுக்குள் செல்வோம்.
1.வாழ்ந்து கெட்டவர்கள்
முதல் சிறுகதை மானுட வாழ்வின் ஏற்றம் இறக்கம் நமது கையில் இல்லை. அந்த இறைவனின் எண்ணப்படி நடப்பதாகவே ஏற்பது இயல்பு. அப்படிப்பட்ட ஒரு பாத்திரப் படைப்பு சிட்டுக் குருவி முகம்மதலி அவர்களின் கதாபாத்திரம்..
ஊரார் முன்பு … கொடை தந்த குடும்பம், நொடிந்து விழுந்துவிட்டாலும், எழுந்து விடும். என்ற நம்பிக்கை அவர்களை வாழவைக்கும்.. மனைவியோ கணவனின் நிலையறிந்து சுருங்கும் எல்லைகள். படிப்பை பாதியில் விட வேண்டிய மகனின் நிலை. உதவிகளை இறைவன் யாரும் அறியாத நொடியில் அருளுவான் என்பதற்கான வரிகள். மானம் காக்கும் மனம் எப்போதும் உயரும். என்பதற்கான அச்சாணி இந்த கதையின் மாந்தர்கள்.
2. அப்பு காதரின் நோன்பு
மனிதர்களின் தோற்றம் மாறலாம். உங்கள் கணிப்பில் வட்டத்துள் வராது போகலாம். ஏளனம் உங்கள் வார்த்தையாகலாம். அவர்களுக்கும் வாழ்வில் வரைமுறை உண்டு. வயதில் மூத்தவரையும் பணியின் ஏற்ற இறக்கங்களில் மரியாதை தர மறுக்கும் அற்பர்கள்… எல்லா தளங்களிலும நீக்கமற நிறைந்த காலமிது.
அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் மேனேஜர் கணேசன். இரண்டரை அடி உயரமே உள்ள மனிதன் தன் தோற்றத்தால் படும் பாடு. பசி என்ற ஒன்றும் …
குடும்பத்திற்காக தன்னை கரைத்துக் கொள்ளும் … மனிதன், வாழ்ந்தே யாக வேண்டும். அண்ணாச்சியின் வார்த்தைகள் … பணத்தால் அவமானங்களை சரிகட்ட
நினைக்கும் மனிதருக்கும் ஒரு சவுக்கடி தருகிறார் அப்பு காதர். தொழிலை கற்றுத்தந்தவர் பெயரை மறக்காத அண்ணாச்சி… சொல்லும் வார்த்தைகள் … கதையின் பொக்கிஷம். வாழ்த்துக்கள் தாஹிர் சகோதரருக்கு. கண்முன்னே கதைமாந்தர் உயிரோடு உலாவ … வலியோ கூடுகிறது… மனதில். மெய்ஞானத்தின் வழி.
3. கொமறு காரியம்
இக்கதையில் வாழும் பெரியவர் இறை பணி யன்றி வேறு வழி தெரியாத வாழ்வு வாழ்ந்தவர்.. 40 – வருடம் .. இமாமாக இருந்த ஹனீபா ஹஜ்ரத் அவர்கள் . அவரின் குரல் வசீகரம் என்ன! கதை சொல்லும் பாங்கு என்ன ! வெள்ளை வெளேர் உடையில் அவர் கம்பீரம் என்ன. ஒரு போர்க் களத்தின் தளபதியின் கம்பீரத்தை ஒத்த தோற்றம்…. எங்கே? சொல்லாடல் மிக அழகாக. நேர்மையை தவறவைக்கும் அநீதிகள். அங்கு நேர்மையான மனிதர்களுக்கு சோதனை தான் வாழ்வு. அவரா இவர்?
கன்னம் குழி விழுந்து ஐந்தரை அடி உயரம் எங்கே? அழுக்கு தோய்ந்த வெள்ளையுடை. அவரா ? நம்ப முடியாத காட்சி. வாழ்க்கை புரட்டிப் போடும் போதும்
தன் மாணவன் எனத் தெரிந்ததும் குருவானவன் மாணவனிடம் கையேந்தக் கூடாது என்ற தன்மானம். தந்த உதவியை திருப்பித் தந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல்
நடையை கட்டும் நேர்மை எங்கே! அதுதான் நேர்மையான குருவின் கண்ணியம். அற்புதமான கதை.
4. ரஹீம் வாத்தியாரும் சில மாங்காய்களும்
பாலூர் – அழகிய கிராமம். ஆனால் தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றுவதாக சொன்னது… தவறு. அழகிய பசுமை போர்த்திய வழிகள். எளிமையான மனிதர்கள். சடையன் -டீ கடை – இந்தக் கதையின் முக்கிய இடம். பார்வையும் தோற்றப் பிழைதான்… சூழலும் சந்தர்ப்பமும் சேர்ந்து விட்டால்.
தொடக்கப்பள்ளிக்கு வழிகாட்டும் பெரியவர் … தொடக்கக்கல்வி அதிகாரியின் பார்வையில் கதை நகர்கிறது. அனுமானம் செய்யப்படும் தலைமையாசிரியரின்
செயல்பாடுகள். நல்லபடியாகசென்றது. பை நிறைய மாங்காய் தந்துவிட்டு செல்லும் மனிதர். தலைமையாசிரியர் மறுக்க, அவர் வற்புறுத்த,
முரண்களில் முடிகிறது, கணிப்புகள். எல்லாமே தோற்றப் பிழைதான். கண்ணால் காண்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.
அணிந்துரை வழங்கிய அண்டனூர் சுரா அவர்களின் கூற்றுப்படி, இந்த சிறுகதை ஆசிரியர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் மிக சிறப்பு. கனகச்சிதமான சிறுகதை. வாழ்த்துக்கள் சகோதரரே.
5. மய்யித்துகள்
இக்கதையில் மறக்க முடியாத ஜீவன் பூஜான் கிழவியும் , சமது பாய் அவர்களும் அவரது இளம் வயது மகளும். பெறாத பிள்ளையாய் சமது பாயை வரித்துக் கொள்ளும் பூஜான் கிழவி.
பாசத்தில் ஊடாடும் உறவேயில்லாத பூஜான் கிழவி, பாசத்தின் கோட்டையில் கண்பட்ட தோ மண்பட்ட தோ… பாசஜீவன்களை பிரிக்கும் காதல் கண்ணில்லாதது.
சாபம் – விடும்பூஜான் கிழவி பேத்தியை பறிகொடுத்ததற்காக… தன் மகன் படும் பாட்டை தாளமுடியாத அவளின் முடிவை எண்ணி வியப்பதா? விசும்புவதா?
பாசம் தான் உயிரின் விலை என்பதை தன் எழுத்தில் … அறுதியிட்ட கதையிது. வாசகர்கள் எதிர்பாராதது. இந்த கதையின் முடிவு.
6..சுயநலம்.
ஹைதர் – பொது நலனில் அக்கறை கொண்ட மனிதன். இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். இரவு பகல் பாராது … உதவிகள் கேட்பவருக்கு கூடவே நின்று காப்பாற்றி வீடு சேர்க்கும் ரகம். மனைவி சுபைதா தன் சுயநல பேச்சால் முட்டுக் கட்டை போட்டு… தன் கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கும் மனம்.
அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் சோதனைக்காலம்.. தன் தங்கையிடமிருந்து வரும் அழைப்பு… நடுநிசியில். தன் கணவனை நாடுகிறது. மனம் சென்று வரச் சொல்லலாமா? மனம் பதைபதைக்கிறது. தானாடாவிட்டாலும் தன் சதை யாடும் சுயநலம் – தலைப்பு – அத்தனை பொருத்தம்.
இப்போது ஹைதரிடம் எப்படி உதவி கேட்பாள்? என்பதே கதையின் முடிச்சு அவிழும் நிமிடம் வாசகருக்கு அரிய பரிசு… இந்த தம்பதி ஹைதர் – சுபைதா . கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.
7.பிரியாணி கடை
ஜமீல் அண்ணன் தான் எல்லாம். ஹலீல் தன் வாழ்வில் மறக்க முடியாத நபர் யாரென்றால் அது ஜமீல் அண்ணன் தான். நட்பு என்றாலும் தன் மனைவியின்
உறவுப் பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைத்து, கூடவே வேலையும் தந்து, மாவுமில் தொடங்க சரியாக இரண்டு வருடம் கழித்து 30,000 கைகளில்
முன்பணம் தந்து தனியாக தொழில் தொடங்கச் சொன்ன பாசம் நட்பன்றி வேறில்லை. அந்த மிகுதியான நட்பு… புளிய மரத்தின் கீழ் தங்கள் வியாபாரத்தை தொடங்கிய ஜமீல் உதவிக்கு ஹலீலை வைத்துக் கொண்டதும்… இவர்களின் பிரியாணிசுவைக்கு தனி மவுசு. வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருக்க…. பைபாஸ் சாலை நான்கு வழிச்சாலையாக மாறும் நேரம். வெட்டுப்படும் புளிய மரத்தோடு வாழ்வையும் செல்வத்தையும் தொலைந்து விட்டதாகவே நம்புகிறார் ஜமீல் அண்ணா. புளியமரத்தோடு அவர் கொண்ட நட்பு… ஒப்பந்தக்காரர்கள் மரத்தை வெட்டும் போது அழுத அழுகை கடை வைக்க முடியாது என்பதல்ல. கணவனை இழந்த மனைவி போல கையறு நிலையில் … வெடித்து அழுபவரை தேற்ற முடியாமல் தோற்கும் ஹலீல்.
நான்கு வழிச்சாலையில் வியாபாரம் படுத்து விட, திருப்பூர் சாயபட்டறை ஆலையில் வேலைக்கு செல்ல, நோயோடு படுத்தவர் பாதி உயிரை மரத்தை வெட்டும் போதே விட்டுவிட்டதாக தவிக்கும் தவிப்பு. புளிய மரத்துக்கும் அவருக்குமான உறவு உன்னதம், செல்லரித்த புளியங்கொட்டைகள். அவன் படுக்கையறையில் மரத்தின் நினைவாக. அவன் வாழ்வும் புளியமரத்தோடு பிணைந்த வலி … அவன் கால்களும் சாயப்பட்டறையின் தாக்கம் கறுத்துவிட்டது. இரத்த ஓட்டம் இருந்திருந்தால் மரம் கூட வெட்டும் போது கறுத்து விடும் இல்லையா? என புலம்புபவனை தேற்றமுடியாத வாழ்வின் வலி. வாழ்வை இழந்த ஜமீலின் வலி
ஹலீலைப் போல நமக்கும் … பற்றிக் கொள்கிறது.
8. அனாதை மையத்து
வாழ்க்கைப்பயணம் எங்கிருந்தோ … அங்கேயே முடிகிறது. பிறக்கும் போதே இறப்பும் முடிவு செய்யப்பட்டது தான். நடுவில் கோபம் தாபம் எல்லாம் ஒரு ஒப்பனை போல். காட்சிகள் மாறுகின்றன. யாருமற்ற ஏரிக்கரையில் உயிரை விட்ட நபரை அடையாளம் கண்டது போலீஸ். நாகூரைச்சேர்ந்த அப்துல்லா, என்ற பெரியவர்.
அவரை நாகூர் வரை எடுத்துப்போவது இயலாத காரியம். தூரம் எடுத்து போக வறுமை தடுக்கிறது. அருகிலேயே அடக்கம் பண்ண ஆவன செய்யுங்கள்
என்கிறது பதவி.
உதவியோ… ஒருங்கிணைக்கிறது நட்பு வட்டங்களை. அவரின் மத சடங்கு படியே எல்லாம்நடக்கட்டும்.. காத்திருக்கும் இரண்டு பெண்மணிகள் மகளும் தாயும்
பேத்தியும் . பேரன் சவக்குழிக்கு அருகில். எப்படியோ எல்லாம் ஒருங்கிணைந்த தருணம்… எல்லாம் முடிந்த நேரம் கையெழுத்து வாங்கப்படுகிறது குடும்பத்தாரிடம். பெயரோ…. “தங்கப் பொண்ணு “- என்ற பெயர். ஆச்சர்யம். பெயர் வேறானால் என்ன? அநாதைகளின் வாழ்வில் ஆதரவு தரும் போது… அது மதத்தை பார்ப்பதில்லை.
அடைக்கலம் தருவது இறைவனின் வேலை.. மானுட அன்பில் நிறம் வேறு… இருக்கலாம். குருதியின் நிறம் ஒன்றுதான். இதயம் ஒன்றுதான். இறப்பு தான் மானுடத்தை கூட்டிச் சேர்க்கிறது. தளர்ந்த நடையுடன் பிரிந்து செல்லும் இதயம் அவரிடம் அல்லவா இருந்தது இத்தனை நாள். மானுட நேயம் மதம், இனம், மொழி, எல்லாம் தாண்டிய பூரணம்.
9. மனிதத்தின் மலர்கள்
அப்துல்லா எனும் மாணவனுக்கும் சேஷாத்திரி என்ற வரலாற்று ஆசிரியருக்குமான முரண்களின் கருத்து எப்படி புரிதல் கொள்ளப்படுகிறது.
அடுத்த நாள் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறது செய்திகள். பேரிடர் காலங்கள் மனிதம் தான் ஜெயிக்கும். மதத்தையும் மறந்து விடும் காலத்தினால் செய்த உதவிகள்.
என்பதை … ஒரு சிறுவனின் மன வரைபடம் எப்படி சுமூகமாக வரையப்படுகிறது என்பதே பேரழகான திருப்பம். அருமையான கதை.
10. வியாபாரிகள்
முஹம்மது அலி எவ்வாறு முஹம்மது ஆனார். முஹம்மது எப்படி மம்மது ஆனார்? என்பது 40 வயது நிரம்பிய அனுபவ வாழ்வு, பேச்சு வழக்கு தந்த பரிசு.
கூடவே மாடுபிடிக்க வரும் குமார் ஒரு அழகிய கதாபாத்திரம். ரத்தினம் -மம்மது வியாபார – போட்டி. இதில் இடைப்படும் தரவுக்காரர்கள். மாட்டைப் பற்றிய தகவல்கள் மிக சரளமாக வெளிப்படுத்தப்பட்ட எழுத்து. மாடுகளைப் பற்றிய அழகிய தகவல்களை சரளமாக எழுதியிருக்கிறார் கதையில் . படியாத பேரம்…
ரத்தினத்தின் சூழ்ச்சி முகம்.
ஏழு வருடம் கழித்தும் தன் பெயரை நினைவு வைத்திருக்கும் கவுண்டரும் அவர் மனைவியும். விவசாயிகள் படும் பாடும். மாடுகளை விற்கும் அவலம்.
வாழ்வியல் சுமை.. வழியில் அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, சூதின் அதிகாரம்… ,கருணையற்ற மனிதர்கள் மாடுகளைக்கூட விட்டு வைக்காத
மோசமான அரசியல் சூது. மிரண்ட விழியோடு மாடு. இரத்தினம் எங்கிருந்து வந்தான்…? திருப்பங்கள் சோதனைக்காலமாக.
11. அம்மாவின் அம்மா
ஆரிப் எனும் மாணவனின் வாழ்வில் அவிழும் இரகசியங்கள். தனது தந்தை இறந்த பிறகு சொந்தம் என யாருமில்லை. யார் வந்திருப்பார்கள்? என அதிசயிக்கும் குழந்தையுள்ளம்.. வறுமையிருந்தால் உறவுகளும் இல்லை. ஏழையாக பிறந்து விட்டால் அனாதை அல்ல. இந்த உலகத்தின் ஏளனக்குரலை ஒழிக்க அம்மாவாக
மறுபிறப்பெடுக்கும் பாட்டி. ஓடி ஓடி உழைக்கும் அந்தத்தாய்க்கு ஈடில்லை. கடமையை செய்தாலும்… உறவின் வேறுபாடு அறியாமலா போகும் பிஞ்சு மனம்.
கதையின் கடைசி வரிகள் ஆரிப் பின் வரிகள் அல்ல.
தாய்க்கு ஆதரவு தரும் மகனின் குரல். ஓங்கி ஒலிக்கிறது தாய்மை. தன்னை ஒரு பெண் எவ்வாறு முன்னிறுத்துகிறார். அதை சமூகம் எவ்வாறு எள்ளி நகையாடுகிறது என்ற முரண்களில் ஆரிப் போன்ற மாணவர்கள் பசுமரத்தாணியாக பதிந்து விடுகிறார்கள். எல்லோர் மனதிலும்..
வாழ்க எழுத்து வாழ்த்துக்கள் சகோதரருக்கு.
கதையின் எல்லா வரிகளும் … சமூகத்தின் முரண்களை சல்லி சல்லியாய் உடைத்து வெளிவரும் காட்டாற்று வெள்ளம்.. எந்த புனைவு மற்ற எழுத்துக்களில் ஜொலிக்கிறது வாழ்வு. செல்வம் – கொழிக்கும் வாழ்வுக்கு அப்பாலும் மானுடர் ஆயிரம் உண்டு. கவலைகளோ நூறாயிரம் உண்டு. எழுத்து எல்லா தைரியத்தையும்
தரவல்லது அது சகோதரருக்கு இயல்பாக அமைந்துள்ளது. நிறையவரிகள் இலக்கியசெறிவும் ஆழ்ந்த பொருளும் கொண்டவை.,வாழ்வின் கயிற்றால்,கட்டப்பட்ட
மனித வாழ்வின் பொம்மலாட்டம் . கயிற்றின்.. முனையோ … இறைவனின் கைகளில்
சரளமான எழுத்து நடை. உறவை பதியமிடும் … முரண்களில் வலியிருக்கும். விவரம் அறிந்த மனிதர்கள் விவரமற்ற மனிதர்களையும் தன்னோடு வழிகாட்டி
அழைத்துச்செல்லும் பாங்கு பாராட்டுக்குரியது.
அணிந்துரை வழங்கிய அண்டனூர் சுரா அவர்களுக்கும் பேரா. முனைவர் ஜெ.ஹாஜா கனி அவர்களுக்கும் நன்றி.
நூலின் தகவல்கள்
நூல் : பிரியாணி கடை
நூலாசிரியர் : அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா அவர்கள்
விலை : ரூ.130
பதிப்பகம் : இக்றா
தொடர்புக்கு : 8220658318
எழுதியவர்
தயாநி தாயுமானவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.