மொழிகளின் பிறப்பு
அறிவியலாற்றுப்படை
பாகம் 14
– முனைவர் என்.மாதவன்
தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்திருப்போம். முதலில் 30 விநாடிகள் ஓடக்கூடிய விளம்பரத்தைக் காண்பிப்பார்கள். தொடர்ந்து அதனை மக்கள் பார்த்த பிறகு 10 விநாடிகளுக்கானதாக அதனை மாற்றியிருப்பார்கள். இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கப்பட்ட மக்கள் அந்த 30 விநாடி விளம்பரத்தையும் பார்த்த உணர்வைப் பெறுவர். எதுவும் தொடர்ச்சியாக பார்க்கும்போது அடுத்து அடுத்து அதனைப் பார்க்காமலே கேட்டால் கூட போதும், பார்த்த உணர்வை பெறவைத்துவிடும். பொதுவாகவே புரிதல் மேம்பாடுடன் உள்ள இடத்தில் அதிக வார்த்தைகளுக்கான தேவையிருப்பதில்லை. பல நேரம் பேசி ஏன் பிரச்சனை என்று மெளனத்தைக் கை கொள்வோரும் உள்ளனர். சந்தர்ப்பம், சூழல் இதனை அடிப்படையாகவே வைத்தே மொழியின் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்படுகின்றன.
அதுபோலவே பேசும் தொனியும்தான். உடம்பு எப்படியிருக்கிறது? என்ற வாக்கியத்தை பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் சொல்லிப்பார்த்தால் புரியும்
அதுபோலவே மொழி பேசப்படும் சூழலால் குறைவான வார்த்தைகள் அல்லது வார்த்தைகளே இல்லாமல் நோக்கத்தை நிறைவேற்றும் வழக்கமும் உண்டுதானே. உதாரணமாக மழை பெய்துகொண்டிருக்கும் நேரத்தில் வீட்டில் ஒருவர் புறப்படுகிறார். வீட்டிலுள்ளோரிடம் திரும்பி கையை மடக்கி உயர்த்திக் காட்டுகிறார் என்றால் அவரது தேவை குடை என்பது சொல்லாமலே விளங்கிவிடும் அல்லவா. மொழியியல் அறிஞர் ஜிஃப் அவர்கள் இதனைப் பற்றி ஒரு விதியே வகுத்துள்ளார். மொழியியலில் சிக்கனக் கோட்பாடு என்று பெயர்.
அறிவியலாற்றுப்படையில் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் என்கிறீர்களா? இன்றைக்கு நாம் ஆதாரபூர்வமாகப் பேசும் அனைத்திற்கும் மொழியும் எழுத்தும்தானே அடிப்படை. அறிவியல் வளர்ச்சியில் மொழியின் பங்கை எவ்வாறு குறைத்து மதிப்பிட்டுவிட முடியும். அந்த வகையில் இந்த பாகத்தில் மொழியின் பிறப்பைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
எழுத்து முதலில் வந்ததா? அல்லது பேச்சு முதலில் வந்ததா? கண்டிப்பாக பேச்சுதான். இன்றைக்கு இருப்பது போல் இலக்கண சுத்தமான பேச்சு, பேச்சு வழக்கிலான பேச்சு என்பதெல்லாம் அந்த நாளில் கிடையாது. அவ்வளவு ஏன் எல்லாம் கூக்குரல்தான். மகிழ்ச்சி வந்தாலும் கத்தல்தான் கஷ்டம் வந்தாலும் கத்தல்தான். மொத்தத்தில் இருட்டான திரையரங்கில் நம்மவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு இவைகள்தான் அடித்தளமிட்டிருக்குமோ. குழந்தைகள் அவர்களாகவே பல்வேறு பொருட்களுக்கு பெயர் வைத்து அழைப்பர். அண்மையில் எனது நண்பர் கார்த்திக் ஹேமபிரபா இணையர் மகன் அதிரதன் பாகற்காய்க்கு பாபு எனவும் தூங்குவதற்கு ஜோஜூ எனவும் பெயரிட்டு அழைத்ததைக் கவனித்தேன். அந்த குழந்தை வயதாகும்போது பெரியவர்கள் அதற்கிடும் பெயரைப் பொறுத்தக் கற்றுக்கொள்வார். ஆனால் மொழி உருவாக்கத்தில் அந்தந்த மொழி சூழலில் வாழ்ந்தோர் அதற்கிட்ட பெயர்களே பலவும் நிலைத்துவிட்டன. பின்னால் வந்த காரணப்பெயர்கள் தவிர பலவும் அவரவர்களுக்குத் தோன்றிய பெயர்களே. எழுத்துக்களின் உருவாக்கம் பற்றி அடுத்து பார்ப்போம்.
முதல் மொழி எந்த மொழி என்றெல்லாம் பேசத்துவங்கினால் அதுவே ஒரு பெரிய நூலுக்கான தேவையைக் கொடுத்துவிடும். மொழி எப்படித் துவங்கியிருக்கும் என்பதற்கு மொழியியலாளர்கள் கொடுத்திருக்கும் அனுமானங்கள் சிலவற்றைப் பார்ப்போம். மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கற்பனைக் கதைகளைச் சொல்கின்றன. ஏற்கனவே பாபெல் கோபுரம் கதையைப் பார்த்தோமே.
குழந்தைகள் மொழிக்கற்றலைக் கூர்ந்து கவனித்தால் இது எந்த அளவுக்கு பொருத்தமானது என்பது புரியும். முதலாவது கோட்பாடு “பவ் பவ்” ( Bow bow theory) கோட்பாடு. நாய்,பூனை போன்ற விலங்கினங்கள் எவ்வாறு ஒலியெழுப்புகிறதோ அதைப் போலவே கத்தி தனது பேசும் ஆற்றலை வளப்படுத்தத் தொடங்கினர். குழந்தைகளின் பசு எப்படிக் கத்தும் என்று கேட்பதற்கு ”அம்பா எப்படி கத்தும்மா?” என்று கேட்டால் ”ம்மா” என்று சொல்வதைக் கவனித்திருப்போம். இப்படியாகத்தான் ஆதிமனிதர்கள் மொழியைக் கற்று வார்த்தைகளை உருவாக்கியிருப்பர் என்கின்றனர் மொழியியலாளர்கள். இனிமேல் எதிர்ப்படும் விலங்கினங்களைப் பார்த்தால் அவர்கள்தான் நமது மொழியாசிரியர்கள் என்று நன்றியோடு நினைவு கூர்வோமாக.அடுத்ததாக யோ ஹி ஹோ (Yo He Ho theory) மனிதர்கள் உழைப்பை வெளிப்படுத்தும்போது வெளிப்படும் ஒலிகளை வைத்து வார்த்தைகளை உருவானதை வெளிப்படுத்துகிறது. அதாவது கடினமான மரங்களை அறுத்த போது அல்லது இடம்பெயர்த்தபோது ஆஹா, ஓஹோ என்று கத்தியிருப்பார்களல்லாவா? அதுபோலவே கடலில் கட்டுமரத்தை செலுத்தியபோது ஐலேசா ஐலேசா என்று கத்தியதெல்லாம் இந்த வகைப்பாடுதானதுதான். உழைப்பு மொழியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யாமல் எப்படி இருக்கும். நமது குரல்வலையின் உழைப்புதான் இன்றைக்கும் உரையாடல்களின் பிறப்பிடம்.
அடுத்தது பூ..பூ கோட்பாடு ( Pooh-Pooh theory) அதாவது மகிழ்ச்சி, துக்கம், உவகை, கோபம் போன்ற உணர்ச்சிகள் மூலமாக உருவான வார்த்தைகள். ஆங்கிலத்தில் ஹுரே, அலாஸ், தமிழ் மொழியில் ஐயையோ ஐயோ, அடடா போன்ற வார்த்தைகளைக் கூற இயலும். மனதில் உருவாகும் உணர்ச்சிகளை அடுத்தவர்களுக்கு வெளிப்படுத்த முனைந்ததும் மொழியியலில் வார்த்தைகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம்.
டிங் டிங் கோட்பாடு ( Ding Dong theory) அதாவது இயற்கையில் அதுவாகவே எழும்பிய சத்தங்களை வைத்தும் சில வார்த்தைகள் உருவாகியிருக்கலாம் என்கின்றனர். ஏதாவது கட்டையை அடுத்த கட்டையோடு அடித்தல், கிடைத்த கற்களை மற்றொரு கல்லோடு உரசுதல் இவ்வாறு உண்டான ஒலிகள் மூலமும் சில வார்த்தைகள் உருவாகியிருக்கலாம்.
இவ்வாறாக உலகில் சுமார் 6000 மொழிகள் புழங்கினாலும் அந்தந்த பகுதியில் பேசியோர் அவர்களுக்குள் பரிமாற்றங்களை நிகழ்த்தியதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தியுள்ளனர். பின்னர் மொழி செழுமையடைய முற்பட்டபோது இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கியிருக்கும். மனிதர்கள் பேசத் துவங்கியது ஒருவகை முன்னேற்றம் என்றால், அந்த பேச்சுகளுக்கான ஒலிகளுக்கான குறியீடுகளை உண்டாக்கியதும் அடுத்த கட்ட வளர்ச்சி. பின்னர் அந்த குறியீடுகளை வைத்து தாங்கள் பேசிய வார்த்தைகளை எழுதிவைக்கத் தொடங்கினர்.
எது எப்படியோ இன்றைக்கு பல்வேறு மொழிகளும் அந்தந்த மொழிகளுக்கான இலக்கண வகைகளுடன் பரிணமித்துள்ளன. பலமொழிகள் இன்று பேசப்படாமல் முற்றாக வழக்கொழியும் நிலையும் உள்ளது. அனைத்து மொழிகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதே உலகிற்கு அழகு. அதுவும் அவரவர் தாய்மொழியை தாய்மொழிக்காரர்கள் காக்காமல் அவுட் சோர்சிங்கா செய்ய இயலும். எனது தாய் எனக்குப் பிரியமானவள். அதற்காக அடுத்த தாய்மார்களைப் பழிப்பது சரியா. வாய்ப்புக்கும் விருப்பத்திற்குமேற்ப உலகெங்கிலும் உள்ள மொழிகளை வாசிப்போம்.நமது சொந்த மொழியை கூடுதலாக நேசிப்போம். அறிவியலை பதிவு செய்ததில் மொழியின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் இங்கே மொழி பற்றிய தகவல்கள் அவசியாமாகிறது.
படை எடுப்போம்.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 13: பானை பிடித்த பாக்கியசாலிகள் – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: அறிவியலாற்றுப்படை 15 : எழுத்தின் பிறப்பு