மோடி தலைமையின் கீழ் தீவிர வலதுசாரி அமைப்பாக பாஜக மாறியிருக்கிறது: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனர் ப்ரோடியுத் போரா – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா.சந்திரகுரு)

இப்போது மோசமாகப் பெயரெடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் நிறுவனரான புரோடியுத் போரா, பத்தாண்டுகள் பணி புரிந்த பிறகு 2015 பிப்ரவரியில் கட்சியிலிருந்து விலகினார். கட்சியின் நிறுவனக் கட்டமைப்பில் போரா பல மூத்த பதவிகளை வகித்திருந்தார். எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் போன்ற மூத்த பாஜக தலைவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். பாஜகவின் ஒட்டுமொத்த வரலாற்றில் மிகச் சிலரே மூத்த கட்சி பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளதால், அவர் வெளியேறியது பெரும்பாலானவர்களின் புருவத்தை உயரச் செய்தது. 2014 பொதுத்தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்கு தகவல் தொழில்நுட்ப அணி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. அந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷாவும் அதிகாரத்தை அதிக அளவில் மையப்படுத்தியதும், அவர்களிடம் இருந்த ஜனநாயக விரோத அரசியல் முறையும் தான், தான் பாஜகவிலிருந்து வெளியேறியதற்கான காரணங்களாக இருந்தன என்று போரா கூறினார். அதே ஆண்டில், அசாமில் மாநில அரசியல் அமைப்பாக இருக்கின்ற லிபரல் டெமாக்ரடிக் கட்சியை (எல்.டி.பி) போரா தொடங்கினார்.

இந்திய அரசியல் கருத்தியல்ரீதியாக வலதுபுறம் தன்னை உறுதியாக நிறுத்திக் கொண்டிருப்பதால், வலதுசாரி அமைப்புகளில் முன்னர் உறுப்பினர்களாக இருந்த சிலர் இடதுபுறமாக நகர்ந்துள்ளனர் – அல்லது குறைந்தபட்சம் வலப்பக்கத்திலிருந்து விலகி நிற்கிறார்கள். இன்னும் சிலர், குறிப்பாக வலதுசாரி சூழலில் இருந்து வந்தவர்கள், அதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதோடு, அரசியல் வலதுசாரிகளின் மீது கடுமையான விமர்சனங்கள் கொண்டவர்களாகவும் மாறி விட்டனர். அத்தகையவர்களை இந்த நீரோட்டத்திற்கு எதிராக எது செல்ல வைக்கிறது? அவர்களுடைய முடிவுகளை எந்த மாதிரியான நிகழ்வுகள், சூழ்நிலைகள் மற்றும் பரிசீலனைகள் வடிவமைக்கின்றன? இந்த மாற்றங்கள் குறித்து தி கேரவன் வெளியிட்டு வருகின்ற கன்வெர்ஸ் லென்ஸ் என்ற தலைப்பில் தொடர்ச்சியான நேர்காணல்களை நடத்துவதன் மூலமாக, சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அபிமன்யு சந்திரா ஆராய முற்படுகிறார். போராவின் தனிப்பட்ட, தொழில்முறையிலான பாதை, பாஜகவிலிருந்து அவர் வெளியேறியது, எல்.டி.பி மீதான அவரது பார்வை, பாஜகவின் வாஜ்பாய் சகாப்தம், இந்தியாவிற்குத் தேவைப்படுகின்ற அரசியல் என்று சந்திரா இந்த நேர்காணலின் போது போராவுடன் பேசினார்.

திருத்தி சுருக்கப்பட்ட நேர்காணல்

அபிமன்யு சந்திரா: அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்த கடைசி கட்டத்திலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஆரம்ப நாட்களிலும் தொழில் வல்லுநர்கள் பலரும் பாஜகவில் இணைந்ததாக நீங்கள் முன்பு கூறியிருந்தீர்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தீர்கள். உங்களைப் போலவே, மோடி-ஷா தலைமையின் கீழ் உள்ள பாஜக மீது அவர்களில் பலரும் ஏமாற்றமடைந்திருக்கிறார்களா, அல்லது அவர்கள் பெரும்பாலும் கட்சியுடனே இன்னும் இணைந்திருக்கிறார்களா?

ப்ரோடியுத் போரா: என்னிடம் அதுகுறித்து எந்த எண்களும் இல்லை. ஆனால் முந்தைய சான்றுகளிலிருந்து பழைய காலத் தோழர்களில் பலரும் விலகிச் சென்றுவிட்டார்கள் என்றே நான் சொல்வேன். அவ்வாறானவர்களில் ஒருவர் நௌக்ரி.காம் நடத்தி வந்த சஞ்சீவ் பிக்சந்தானி ஆவார். மோடியை இன்று கடுமையாக விமர்சிப்பவராக அவர் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆதரவாளராக இருந்த அவர், இந்தியாவின் மிக வெற்றிகரமான டாட்-காம் தொழில்முனைவோர் ஆவார்.

C:\Users\Chandraguru\Pictures\George-Fernandes vajpayee.jpeg

எங்களில் ஏராளமானோர், வாஜ்பாயின் பதவிக்காலத்தின் போது மிகவும் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தோம். இந்திய குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்முறை நிபுணராக இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். இது இப்போது மீண்டும் எழுந்திருக்கும் இந்தியா, இது இப்போது ஒரு புதிய இந்தியா, இங்கே இளைஞர்களுக்கென்று இடம் உண்டு. இது அரவணைத்துக் கொள்ளும் இந்தியா என்ற உணர்வு அப்போது எங்களிடையே இருந்தது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் [கிறிஸ்தவராகப் பிறந்த சோசலிசத் தலைவர், முக்கிய தொழிற்சங்கவாதியாக இருந்தவர்] பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். மம்தா பானர்ஜியும் அப்போது அமைச்சரவையில் இருந்தார். அரசியல் ரீதியாக அது 23 கட்சிகள் கொண்ட கூட்டணியாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில், மீண்டும் ஆட்சிக்கு வரத் தகுதியான அரசாங்கம் அது என்ற உணர்வு எங்களிடையே இருந்தது. அவர்கள் அதிகாரத்தை இழந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2004 செப்டம்பரில் நான் பாஜகவில் சேர்ந்தேன். திரும்பி வரத் தகுதி கொண்ட அரசாங்கம் என்பதால், அதற்கான எனது பணியைச் செய்யலாம் என்ற கருத்துடன் நான் அங்கு வந்தேன். இவ்வாறான  மனநிலையுடனே ஏரளமானோர் அங்கே வந்ததாக நான் நினைக்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர் இப்போது விலகிவிட்டார்கள் என்பதே என் அனுபவமாக உள்ளது.

என்னைப் பொறுத்தவரை, நான் பதிவு செய்யப்பட்ட பாஜக உறுப்பினராக இருந்தேன். எனக்கென்று கட்சியில் அதிகாரப்பூர்வ பதவி இருந்தது. இன்னும் சொல்வதென்றால், சஞ்சீவிக்கு அவ்வாறு அதிகாரப்பூர்வமான பொறுப்புகள் எதுவும் இல்லையென்றாலும்கூட, கட்சியுடன் அவர் மிகவும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தார். மற்றொருவர் நெட்கோர் என்ற நிறுவனத்தை [செயற்கை நுண்ணறிவால் உந்தப்படும் சந்தைப்படுத்தல் நிறுவனம்] நிறுவிய ராஜேஷ் ஜெயின் ஆவார். இந்தியா வேர்ல்ட் என்ற வலைத்தளத்தை அவர் ரூ.500 கோடிக்கு விற்றார். இந்தியாவில் டாட்-காம் சகாப்தத்திற்கான விளம்பரமாக அவர் இருந்தார். [பாஜகவுடன்] தொடர்பிலிருந்த அவர், இப்போது விலகி விட்டார்.

அபிமன்யு சந்திரா: பாஜகவில் இன்னும் இருக்கின்ற சில முக்கியமனவர்கள், தொழில்முறை பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தற்போதைய தலைவர் அமித் மாளவியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா போன்றவர்கள். இவ்வாறு கொண்டிருக்கின்ற தொழில்முறை பின்னணியைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அமித் மாளவியாவை எடுத்துக் கொள்ளுங்கள், பாஜக ஆதரவாளராக இருந்த ஒருவர் விமர்சகராக எப்படி மாறுகிறார்? மற்றொருவர் ஏன் அவ்வாறு செய்யாமல் இருக்கிறார்?

ப்ரோடியுத் போரா: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். என்னிடமிருந்த காரணம் மிகவும் தெளிவாக இருந்தது. மையவாதக் கட்சியைக் கட்டியெழுப்புவது அல்லது மைய -வலதுசாரி கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான வாக்குறுதியே, வாஜ்பாய் சகாப்தத்தின் மீதான எங்களுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அதுதான் இந்தியாவிற்குத் தேவை என்பதாக நானும், எங்களில் பலரும் உணர்ந்திருந்தோம். என்னைப் பொறுத்தவரை, கருத்தியல் களத்தில் நடுவில் இருக்கும் மனிதராக வாஜ்பாய் இருந்ததே, அவர் மீது ஈர்ப்பு வருவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. ஜார்ஜ் பெர்னாண்டஸைப் போன்ற ஒருவரையும், ஏபிஜே அப்துல் கலாம் போன்ற ஒருவரையும் ஈர்க்கக்கூடிய மனிதராக வாஜ்பாயி இருந்தார். அதுவே இந்தியாவிற்குத் தேவையான அரசியல் – மையவாத அரசியல், அல்லது மைய-வலது அரசியல்.

எனது எதிர்பார்ப்பிற்கு மாறாக, மோடிக்குப் பிறகு பாஜக தீவிர வலதுசாரி அமைப்பாக ஆனது. எனவே, எனக்கான காரணம் முற்றிலும் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இருந்தது. 2015 பிப்ரவரியில் மோடி ஆட்சியின் ஆரம்பகட்டத்திலேயே நான் அங்கிருந்து வெளியேறினேன். அதன் பிறகு, ஏராளமானோர் வெளியேறினர். அருண்ஷோரி வெளியேறினார். யஷ்வந்த் சின்ஹா வெளியேறினார். அதைப் போன்று ஏராளமானோர் வெளியேறினர்.

C:\Users\Chandraguru\Pictures\Shouriw and Sinha.jpg

அபிமன்யு சந்திரா: ஷோரி, சின்ஹா போன்றவர்கள் பொது வாழ்க்கையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள். ஆனாலும் நன்கு அறியப்பட்டாத வேறு சிலரும் ஏன் வெளியேறினார்கள்?

ப்ரோடியுத் போரா: அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கூட்டு முடிவு எடுப்பது பாஜகவில் இருந்து காணாமல் போய் விட்டது என்று ஒருசிலர் கூறுவார்கள். அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. மையத்திலிருந்து விலகி கட்சி வலதுபுறமாகத் திரும்பியதும் அவ்வாறான காரணமாகும். எதேச்சதிகாரத்துடன், அதிகமாக மையப்படுத்தப்பட்ட முடிவுகளை எடுப்பது இரண்டாவது காரணமாக இருக்கும். அதிகப்படியான வாக்குறுதிகள், அரசியலை கண்காட்சியாக மாற்றுவது போன்றவை மக்கள் சொல்கின்ற மூன்றாவது காரணமாக இருக்கின்றன. மக்கள் இதனால் வெறுப்படைந்து சோர்வடைந்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய யோசனையுடன், ஒரு புதிய தமாஷாவுடன் அவர்கள் வருகிறார்கள்.

அபிமன்யு சந்திரா: நீங்கள் வெளியேற முடிவு செய்ததாக பகிரங்கமாகச் சொன்ன போது பாஜகவில் உள்ளவர்களோ அல்லது தாராளவாதிகளோ உங்களுக்கு ஆதரவாக இருந்தார்களா?

ப்ரோடியுத் போரா: மக்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர், ஏனென்றால் அங்கே இருந்த ஐந்து மிக இளைய தேசிய நிர்வாக உறுப்பினர்களில் ஒருவனாக நான் இருந்தேன். பாஜகவில் நான் நன்றாகவே செயல்பட்டு வந்தேன். எனக்கு மிகச் சிறிய வயதிலேயே, பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. பொதுவாக ஒருவருக்கு ஏதாவது கிடைக்காதபோது, அவருக்கு டிக்கெட் கிடைக்காத போது, ​​குறிப்பிட்ட பொறுப்பு வழங்கப்படாத போது ராஜினாமா செய்வார். ஆனால் எல்லாம் கிடைத்திருக்கும் போது, ஏன் ஒருவர் அங்கிருந்து வெளியேற வேண்டும்? 2015 பிப்ரவரியில் நான் வெளியேறிய நேரத்தில், மோடி அவரது பிரபலத்தின் உச்சத்தில் இருந்தார்.

இரண்டு விஷயங்கள் வெளியேறுவதை எனக்கு மிகவும் எளிதாக்கித் தந்தன. முதலாவதாக, என்னுடைய வாழ்க்கையில் மிகவும் செல்வாக்கு செலுத்திய புத்தகம். அது ஜான் எஃப். கென்னடியின் ‘ப்ரொபைல்ஸ் இன் கரேஜ்’ என்ற புத்தகமாகும், அதை என்னுடைய 11ஆவது வயதில் நான் படித்தேன். தங்கள் வாழ்நாளில், பொதுமக்கள் ஆதரித்த கொள்கைகளை எதிர்த்த, ஆனால் தனிப்பட்ட முறையில் அவற்றை நாட்டிற்கு மோசமானவை என்று கருதிய பன்னிரண்டு அமெரிக்க செனட்டர்களின் சுயவிவரம் குறித்ததாக அந்த புத்தகம் இருந்தது. அவ்வாறு செய்ததன் மூலம், மிகப்பெரிய அரசியல் ஆபத்தை எதிர்கொண்ட அவர்கள், அரசியல் ரீதியாகத் தோற்றுப் போனார்கள். பொதுவாக அரசியல் ரீதியாகத் தோற்றுப் போகும் வகையில் எதையாவது செய்வதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பதில்லை. எந்தவொரு அரசியல்வாதியும் அரசியல் ரீதியாக இழப்பு ஏற்படுத்துகின்ற எதையும் செய்வதில்லை. ஆனாலும் நீங்கள் சரியானது என்று நினைக்கின்ற ஒன்றைப் பின்தொடர்வதற்காக, அரசியல் ரீதியாக இழப்பை எதிர்கொள்வதே உண்மையான தைரியம் ஆகும்.

வெளியேற வேண்டும் என்று விரும்பும் போது, நீங்கள் வெளியேறிச் சென்று விட வேண்டும் என்று எப்படியோ அந்த புத்தகம் எப்போதும் என் மனதில் தங்கி இருந்தது. என் வாழ்க்கையில் மிகவும் இளமையான, வடிவமைக்கும் தாக்கத்தை அது கொண்டிருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\SP Mukherjee Nehru.jpg

இரண்டாவதாக, பாஜகவில் நான் சேர்ந்தபோது, ​​பாஜகவின் வரலாற்றின் ஒரு பகுதியாக நான் படித்திருந்த கதைகளில் ஒன்றாக, [அப்போதைய பிரதமர் ஜவஹர்லால்] நேரு அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி பற்றியது இருந்தது. 1951ஆம் ஆண்டில், நேருவின் காஷ்மீர் கொள்கை தொடர்பாக நேரு அமைச்சரவையில் இருந்து அவர் வெளியேறினார். நேருவிற்கு இருந்த பிரபலத்தின் உச்சத்தில், காங்கிரஸின் செல்வாக்கின் உச்சத்தில். அவர் பாரதிய ஜனசங்கத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் அந்த நேரத்தில், மிகப்பெரிய, மேலாதிக்க அரசியல் சக்தியாக இருந்து வந்தது. அவ்வாறான நேரத்தில், காங்கிரஸிலிருந்து வெளியேறவும், மாற்று அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கனவு காணவும் உண்மையிலேயே துணிச்சல் இருக்க வேண்டும்.

எனவே, இன்று திரும்பிப் பார்க்கின்ற போது, அந்த இரண்டு விஷயங்களும் எனக்கு தைரியத்தை அளித்தன என்றே நான் கூறுவேன். இழக்க வேண்டியது என்று ஒன்றுமில்லை என்றே நான் அப்போது உணர்ந்தேன்.

C:\Users\Chandraguru\Pictures\bora resignation S Swamy.jpg

அபிமன்யு சந்திரா: கட்சியில் இருந்து ராஜினாமா செய்தபோது, ​​தொடர்ந்து தாராளவாதியாக இருக்கத் தவறிவிட்டீர்கள் அதாவது ஒரு தாராளவாதியாக இருக்கப் போதுமான தூய்மை கொண்டிருப்பதில் நீங்கள் தோல்வியுற்றிருக்கிறீர்கள் என்று இடதுசாரிகள் யாராலாவது நீங்கள் கேலி செய்யப்பட்டீர்களா?

ப்ரோடியுத் போரா: அரசியல்வாதி என்பவர் நடைமுறையில், யாருடைய அக்னி பரீட்சையையாவது, விசாரணையையாவது நெருப்பால் கடந்து செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வேண்டுமென்றால் வாக்காளர்கள் நடத்துகின்ற அக்னி பரீட்சை இருக்கலாம். எந்தவொரு தாராளவாத அறிவுஜீவி தருகின்ற சான்றிதழ் குறித்தும் சற்றும் கவலைப்பட்டவனாக நான் இருக்கவில்லை.

அரசியல் என்பது அதன் வடிவமைப்பால், பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கான நிலையான செயல்முறையாக இருப்பதால், நீங்கள் நெகிழ்வானவராகவும், யதார்த்தவாதியாகவும் இருக்க வேண்டும். ஒருபோதும் உங்களால் தூய்மையானவராக இருக்க முடியாது. ஒருபோதும் தூய்மையான இடதுசாரியாகவோ அல்லது தூய்மையான வலதுசாரியாகவோ உங்களால் இருக்க முடியாது. பல்வேறு நலன்களுக்காக உங்களை நீங்கள் சமப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, எவராலும் ஏட்டுச் சுரைக்காய் தாராளவாதியாக, அல்லது மார்க்சியவாதியாக, அல்லது முதலாளித்துவவாதியாக இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

எனவே, இதுபோன்ற எந்தவொரு சோதனைக்கும் அரசியல்வாதியாக இருக்கின்ற எவரொருவரும், தங்களைத் தாங்களே ஒப்புக் கொள்பவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மிகப்பரந்த பார்வையை அவர் தன்னுடைய மனதில் கொண்டவராக இருக்க வேண்டும். தனக்கு உண்மையானவராக இருக்க வேண்டும். நாள் முடிவில், என் மனசாட்சிக்கு பதிலளிப்பவனாக மட்டுமே நான் இருக்கிறேன், வேறு யாருக்கும் இல்லை.

அபிமன்யு சந்திரா: உங்களால் மோடியின் கீழ் வசதியாக இருக்க முடியாத அளவிற்கு, பாஜக மிகவும் வலது பக்கமாகச் சென்றது என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். உங்களை இறுதியாக அவ்வாறு முடிவெடுக்க வைத்தது எது என்பதை உங்களால் விவரிக்க முடியுமா? குறிப்பாக 2015 பிப்ரவரியில் ஏன் நீங்கள் வெளியேறினீர்கள்?

ப்ரோடியுத் போரா: 2013இன் பிற்பகுதியில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலேயே நான் ராஜினாமா செய்ய விரும்பினேன். எனக்கான சந்தேகங்கள் என்னிடம் இருந்தன. அந்த நேரத்தில், அவரது நியமனத்தை சுஷ்மா ஸ்வராஜ், எல்.கே.அத்வானி என்று ஏராளமானோர் எதிர்த்தனர். [2002 குஜராத்] கலவரத்தில் அவருடைய பங்கு, மிகவும் மையப்படுத்தப்பட்டதாக் இருந்த அவருடைய நிர்வாகம். குஜராத்தில் பாஜகவில் இருந்த தனது சக தோழர்கள் அனைவரையும் அவர் முடித்து வைத்த விதம் ஆகியவற்றால், மோடியின் அந்த உயர்வுக்கு பாஜகவிற்கு இருந்தே நிறைய எதிர்ப்பு வந்தது.

C:\Users\Chandraguru\Pictures\07-bjp-meet-advani-nitish-sushma-600.jpg

பாஜகவில் அதிக அளவில் கூட்டுத் தலைமை இருந்தது. ‘தலைவர் தலைமை தாங்குகிறார், குழு தீர்மானிக்கிறது’ என்பது கட்சிக்குள் இருந்து வந்த முழக்கமாக இருந்தது. அந்த பாணியையே வாஜ்பாய் கடைப்பிடித்தார். அவர் தனது சகாக்களின் கருத்துக்களுக்கு இடமளித்தார். கட்சியில் இருந்து வந்த கலாச்சாரம் அதுதான். குஜராத்தைச் சேர்ந்த இந்த மனிதரின் கீழ், அவ்வாறான தலைமைத்துவத்தின் கூட்டு பாணி முற்றிலும் ஒழிக்கப்பட்டதை நான் உணர்ந்தேன்.

சலுகைசார் முதலாளித்துவத்தின் மோசமான நிலை அங்கே இருந்தது. அதன் வேர்கள் குஜராத்தில் விதைக்கப்பட்டன. அவரது உயர்வு பாஜகவிற்கு நல்லதல்ல என்பதை உணர்ந்த நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன். ஆனாலும் இது குறித்து நான் பேசிய எந்தவொரு நபரும், எனது நண்பர்கள், எனது குடும்பத்தினர் என்று எல்லோரும், கடைசி மனிதர் வரைக்கும், அதற்கு எதிராகவே எனக்கு அறிவுரை கூறினர்.

C:\Users\Chandraguru\Pictures\vajpayee Modi.jpg

‘உண்மையில் அவர் தவறு செய்தவர்தான், ஆனால் மற்றொரு வாய்ப்பிற்கு அவர் தகுதியானவர்’ என்பதாக மக்கள் மாறியிருக்கிறார்கள்; இரண்டாவதாக ‘டெல்லி என்பது காந்திநகர் அல்ல. டெல்லியில் உச்சநீதிமன்றம் இருக்கிறது, அங்கே தேசிய ஊடகங்கள் இருக்கின்றன. நிச்சயம் அவர் ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்’; மூன்றாவதாக, ‘உயர் பதவிகளுக்கு உயர்த்தப்படும்போது, ஒருவரின் நடத்தை மாறுகிறது. எனவே, முதல்வராக இருந்த மோடியிலிருந்து, பிரதமராக மோடி நிச்சயம் வேறுபட்டிருப்பார்’ என்பதே அவர்களுடைய வாதமாக இருந்தது. நான் நம்பியிருந்த மக்கள், இதுபோன்று எல்லா வகையான காரணங்களையும் எனக்கு கொடுத்தார்கள்.

C:\Users\Chandraguru\Pictures\vote bjp elect congres.jpg

அவர் பதவியேற்று சில மாதங்களுக்குள்ளாகவே, என் அச்சங்கள் நனவாகப் போவதை நான் உணர்ந்தேன். அதற்குப் பின்னர், காங்கிரசில் இருந்து பலர், ஊழல் குற்றச்சாட்டில் பாஜகவால் முன்பு விமர்சிக்கப்பட்டவர்கள், வழக்குத் தொடரப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பாஜகவில் சேரத் தொடங்கினர். அது ஒருவகையில் இறுதியான காரணமாக மாறியது. இதுபோதும் என்றாகி விட்டது. காங்கிரஸ் இல்லாத – காங்கிரஸ் முக்த் பாரதத்தை பாஜக விரும்பியது. காங்கிரஸில் இருந்து வருகின்ற அனைவரையும் பாஜகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், காங்கிரஸ்காரர்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு காங்கிரஸை இல்லாமல் செய்வதன் மூலம், அவர்களால் காங்கிரஸ் முக்த் பாரதத்தை உருவாக்க முடியாது.

அபிமன்யு சந்திரா: மோடிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் வற்புறுத்தியவர்கள், தொடர்ந்து அவரது ஆதரவாளர்களாகவே இருந்தார்களா?

ப்ரோடியுத் போரா: இப்போது, ​​அவர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் அந்த நேரத்தில், 2015 பிப்ரவரியில், அவர்கள் உறுதியாக இருக்கவில்லை. ஆனாலும் இப்போது அவர்கள் அனைவரும் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.

C:\Users\Chandraguru\Pictures\Bora.jpg

அபிமன்யு சந்திரா: பெரும்பாலும் குழந்தைப் பருவ அனுபவங்களே, ஒருவரின் பிற்கால வாழ்க்கை மற்றும் அரசியல் வடிவத்தை வடிவமைக்கின்றன. எனவே, தனிப்பட்ட வகையில், நீங்கள் வளர்ந்த சூழலில் இருந்த கருத்தியல் தன்மை குறித்து கூற முடியுமா?

ப்ரோடியுத் போரா: என் பெற்றோர் வழக்கமான அசாமிய நடுத்தர வர்க்க அரசு ஊழியர்கள். எனது தந்தை அரசு அதிகாரியாக இருந்தார். என் அம்மா அரசு பள்ளி ஆசிரியராக இருந்தார். அவர்கள் அசாம் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பதால், அசாமிய தேசியவாதத்தின் வலுவான உணர்வு என்னிடம் இருந்தது.

ஆனாலும் சீக்கிரமே நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். 1985ஆம் ஆண்டில் டேராடூனில் [ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில்] உயர்நிலைப் பள்ளியில் சேருவதற்காக என்னுடைய 11 வயதில் நான் அசாமிலிருந்து வெளியேறினேன். அதன் பிறகு, எனது கல்லூரிக்கல்வி டெல்லி பல்கலைக்கழகத்திலும் [செயின்ட். ஸ்டீபன் கல்லூரி], எம்பிஏ படிப்பு அகமதாபாத்திலும் இருந்தது [இந்திய மேலாண்மை நிறுவனம், அகமதாபாத்]. எனது தொழில்முறை வாழ்க்கையை நான் தில்லியில் தொடங்கினேன். எனவே, வளரும் பருவத்தில் பல்வேறு தாக்கங்களை கொண்டவனாகவே நான் இருந்தேன்.

அபிமன்யு சந்திரா: அசாமில் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் கருத்தியல் தாக்கம் எவ்வாறு இருக்கிறது?

ப்ரோடியுத் போரா: அசாம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அசாமியராக இருந்தவர்களை ஹிந்து என்று  முழுமையான அடையாள மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் நடந்துள்ளன.

அசாமி துணை தேசியவாதத்தின் மிக வலுவான உணர்வு அசாமில் இருக்கிறது. அது தமிழ் துணை தேசியவாதம் போன்றது. எங்களுக்கென்று தனித்த அடையாளங்கள் உள்ளன. பெரும்பாலும் புவியியல், கலாச்சார அடிப்படையில் இருக்கின்ற அந்த அடையாளத்தின் தன்மையை, மத அடிப்படையிலானதாக் மாற்றுவதற்கான நிறுவனரீதியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து துறைகள் மீதும் நிறுவனரீதியான தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆக இது வெறுமனே அரசியல் சண்டை என்பதாக மட்டுமல்லாது, நாங்கள் போராடுகின்ற மிகப்பெரிய போராக இருக்கின்றது.

C:\Users\Chandraguru\Pictures\LDP Bora.jpg

அபிமன்யு சந்திரா: உங்கள் சொந்த கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியைப் பொறுத்தவரை, அதன் சித்தாந்தம் குறித்து சுருக்கமாக கூற முடியுமா?

ப்ரோடியுத் போரா: பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாங்கள் தாராளவாதிகள். இடதுசாரித் தன்மை பொருளாதார ரீதியாக பழமைவாதம் கொண்டதாகவும், சமூகரீதியாக தாராளவாதம் கொண்டதாகவும் இருக்கின்றது. பாஜக பொருளாதார ரீதியாக தாராளவாதம் கொண்டும், சமூகரீதியாக பழமைவாதம் கொண்டும் இருக்கிறது. ஆனால் நாங்கள் அந்த இரு வழிகளிலும் தாராளவாதிகளாக இருக்கிறோம்.

எல்.டி.பி.யில் ‘டி’ என்பது சமூக ஜனநாயகத்தை குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், அரசியல் ஜனநாயகத்திற்காக போராடுவதற்கான  தேவையில்லை.  அனைவருக்கும் வாக்கு, வயதுவந்தோர் அனைவருக்குமான உரிமை உள்ளது என்றாலும், சமூக ஜனநாயகத்திற்காக, இன்னும் சமமான சமுதாயத்திற்காக நாங்கள் போராட வேண்டியுள்ளது.

தாராளவாதத்தை சமூக ஜனநாயகத்துடன் இணைப்பதே எங்களுடைய பார்வையாக உள்ளது. ஸ்காண்டிநேவிய மாதிரி மீது எங்களுக்கு மிகநெருக்கமான பார்வை இருக்கிறது. ஸ்காண்டிநேவிய நாடுகள் மிகவும் வசதியான சமூகங்களாக இருக்கின்றன. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவை விட மிகப் பெரிய சமத்துவத்துடன். தொட்டிலில் இருந்து கல்லறை வரை ஸ்காண்டிநேவிய சமூகங்களில் உள்ள அனைவரும் கவனிக்கப்படுகிறார்கள். எனவே, அதிக வரி செலுத்துவதைப் பற்றி அந்த மக்கள் பொருட்படுத்துவதில்லை.

எச்.எஸ்.பி.சிக்கென்று (HSBC) ‘உலகின் உள்ளூர் வங்கி’ என்றொரு முழக்கம்  உள்ளது. ‘நாங்கள் பலதேசிய நிறுவனம் என்றாலும் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் உள்ளூர் வங்கியாகவே செயல்பட்டு வருகிறோம்’ என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். எல்.டி.பியைப் பொறுத்தவரை, எங்கள் பார்வை இந்திய உள்ளூர் கட்சியை உருவாக்குவதாகவே இருக்கிறது. பாதையின் நடுவே பயணிக்கின்ற மையவாதம் கொண்டதாக அது உள்ளது. அசாமில் அசாமிகளுக்கான கட்சியாகவும், வங்காளத்தில் வங்காளிகளுக்கான கட்சியாகவும், மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான கட்சியாகவும், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான கட்சியாகவும் அது இருக்கும். ஒரு நாள், மிக விரைவில், அசாமிலிருந்து வெளியேறுவதே எங்கள் திட்டமாக இருக்கிறது. ஒருநாள், கடவுளின் விருப்பத்தால், இன்ஷா அல்லா, நாங்கள் நிச்சயம் ஒரு தேசிய கட்சியாக இருப்போம்.

C:\Users\Chandraguru\Pictures\east-guwahati-lac-liberal-democratic-party-ldp-406637.jpg

அபிமன்யு சந்திரா: சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

ப்ரோடியுத் போரா: சிறுபான்மையினர் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அது குறித்து நிச்சயமாக எந்தவொரு கேள்வியும் எழவில்லை. சிறுபான்மையினரை, எதிர்ப்பவர்களை, கருத்து வேறுபாட்டை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதே ஜனநாயகத்திற்கான உண்மையான சோதனையாக உள்ளது. சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்கான இடம் கொடுக்கப்பட வேண்டும்.

ஹிந்துத்துவாவை, குறிப்பாக இன்று நடைமுறையில் உள்ள ஹிந்துத்துவாவை, ஹிந்துத்துவா என்ற பெயரில் நடந்து கொண்டிருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். வாஜ்பாயின் அழியாத வார்த்தைகளில் கூறுவதானால், அரசதர்மத்தை நாம் மறந்து விடக் கூடாது.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya Supreme court.jpg

அபிமன்யு சந்திரா: இடிக்கப்பட்ட பாபர் மசூதி மீது ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நீங்களும் உங்கள் கட்சியும் ஆதரவளிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?

ப்ரோடியுத் போரா: ராமஜன்மபூமி பிரச்சனை இப்போது உச்சநீதிமன்றத்தால் சிக்கலாகி விட்டது. உச்சநீதிமன்றம் அதை இப்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இப்போது, ​​உச்சநீதிமன்றத்திற்கு எதிராகச் செல்கிறோம் என்று கூறுவதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்? சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், இதுதான் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது. எனவே, நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதுதான் எங்கள் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.

அபிமன்யு சந்திரா: கோட்பாட்டளவில், உச்சநீதிமன்ற தீர்ப்பு என்று எதுவுமில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்போது ராமஜன்மபூமி பிரச்சனை சட்டப்பூர்வ விஷயமாக இல்லாமல், கருத்தியல்ரீதியான கேள்வியாக இருக்கும். ராமஜன்மபூமி இயக்கத்தின் கூற்றுக்களை எல்.டி.பி ஆதரிக்கிறதா?

ப்ரோடியுத் போரா: உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பு என்னிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருந்தால், உண்மையிலேயே நாங்கள் நம்பியதை உங்களிடம் நான் சொல்லியிருப்பேன். நாங்கள் நடுநிலை கருத்தியல் இடத்தில் இல்லை. நாங்கள் நிஜத்தில் வாழ்ந்து வருகிறோம். விதிமுறைக்குட்பட்டு நாங்கள் செயல்படுகிறோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செல்வதே எங்கள் நிலைப்பாடு. உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பு என்றால், நான் மிகவும் வித்தியாசமான பதிலை உங்களுக்கு அளித்திருப்பேன். தீர்ப்பின்கீழ் ஒளிந்து கொள்ள நான் முயற்சிக்கவில்லை என்பதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே, அது பிளவுபடுத்துகின்ற பிரச்சனை என்று நாங்கள் கூறி வந்தோம். அதுவே எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடாக இருந்தது.

முடிவில், நாம் தீர்வை அடைய வேண்டும். தீர்வை அடைவதற்கு பல வழிகள் இருந்தன. அவற்றில் சிறந்த வழி உச்சநீதிமன்றத் தீர்ப்பாகும். ஏனென்றால் நீங்கள் வேறு எதையும் செய்தால், அது குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும். எனவே, தீர்வை அடைவதற்கான சிறந்த வழியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்பதால், எங்கள் கட்சி அதனை ஏற்றுக் கொள்ளும் என்று நாங்கள் கூறினோம். தீர்ப்பிற்கு முன்பே அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்த பிறகு, தீர்ப்பு வெளியான பின்னர் என்னால் வேறொரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

https://caravanmagazine.in/interview/prodyut-bora-bjp-it-cell-rss-narendra-modi-amit-shah-vajpayee-right-wing

நன்றி: தி கேரவான் இதழ், 2020 ஆகஸ்ட் 25 

தமிழில்: தா.சந்திரகுரு