குஜராத்தில் பாஜக-வின் விஷப் பிரச்சாரம் கட்டுரை – தமிழில்: ச.வீரமணி

குஜராத்தில் பாஜக-வின் விஷப் பிரச்சாரம் கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




தமிழில்: ச.வீரமணி

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காக நடைபெற்று வரும் பிரச்சாரத்தின்போது பாஜக தாங்கள் எப்படியெல்லாம் குஜராத்தை இந்துத்துவா சக்திகளின் ஆய்வுக்கூடமாக மாற்றினோம் என்றும், எப்படி ‘குஜராத் மாடல்’ என்று அறியப்படும் கார்ப்பரேட்டுகள்-இந்துத்துவாக் கூட்டணியை உருவாக்கினோம் என்றும் கூறி வருகிறார்கள்.

அமித்ஷா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஆற்றிவரும் உரைகளில் சில, குஜராத்திற்கு வெளியேயிருக்கின்ற பலரைத் திடுக்கிட வைத்திருக்கிறது. எதார்த்த நிலையை எப்படியெல்லாம் தலைகீழாக மாற்றி ஆர்எஸ்எஸ்/பாஜக வெற்றி பெற்றது என்பதை அவை பிரதிபலிக்கின்றன. அமித்ஷா, 2002இல் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகள் மூலம் முஸ்லீம்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள் ஆகும் என்றும், அப்போது அங்கே முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியால் அவர்கள் உறுதியாக அடக்கி வைக்கப்பட்டனர் என்றும் அதன்பின்னரே அங்கே ‘நிரந்தர அமைதி’ நிறுவப்பட்டது என்றும் பேசிவருகிறார். அதாவது முஸ்லீம்களைப் பொறுத்தவரை அங்கே இருக்கும் அமைதி என்பது கல்லறையில் காணப்படும் அமைதியேயாகும்.

மதவெறிக் கலவரங்கள் நடைபெறும்போது (1995க்கு முன்பிருந்த) முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடித்ததாகவும் அமித்ஷா குற்றஞ்சாட்டுகிறார். இவ்வாறு, நாட்டில் சுதந்திரத்திற்குப்பின் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இனப்படுகொலைகளை, இவர்கள் இப்போது “மறைமுகமாக முஸ்லீம்களால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள் உறுதியாக நசுக்கப்பட்டதாக” சித்தரிக்கப்படுகிறது.

இத்தகைய விசித்திரமான சிந்தனை இருப்பதன் காரணமாகத்தான், பில்கிஸ் பானோ மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மீது பாலியல் வன்புணர்வுக் குற்றங்களையும் கொலைகளையும் மேற்கொண்ட கயவர்களை அவர்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே தண்டனைக்காலத்தை, இவர்களால் தள்ளுபடி செய்து விடுதலை செய்வதற்கும் இட்டுச் சென்றது. குஜராத் அரசாங்கத்தின் கூற்றுப்படி, அமித்ஷாவினுடைய உள்துறை அமைச்சகம்தான் இவ்வாறு குற்றவாளிகளின் தண்டனைக்காலத்தைத் தள்ளுபடி செய்திட ஒப்புதல் அளித்ததாம்.

இதேபோன்றே மோடி தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் பேசுகையில், எதிர்க்கட்சிகள் தேசத்திற்கு எதிரான சக்திகளுக்கு அல்லது குஜராத்திற்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக இருக்கின்றன என்று கூறிவருகிறார். அதாவது, எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கிகள் அல்லது முகத்துதி மூலமாக பயங்கரவாதத்தைப் பார்ப்பதாக காங்கிரஸ் மட்டும் இதர சிறிய கட்சிகள் மீது மோடி தாக்குதல் தொடுத்திருக்கிறார். இவரது கண்ணோட்டத்தின்படி, எதிர்க்கட்சியினர் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகவும், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான மென்மையான போக்கு ஆகும், எனவே இத்தகைய போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் தேச விரோதிகள் ஆவர்.

இத்தகைய மதவெறிக் கண்ணோட்டத்தின் காரணமாகத்தான், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக நீதி கோரி நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுத்த தீஸ்டா செடால்வத் மற்றும் காவல்துறை முன்னாள் தலைவர் (former DGP), ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்படுவதற்கு இட்டுச் செல்லப்பட்டார்கள்.

இப்போது நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரம், மோடி முதலமைச்சராக இருந்த சமயத்தில் குஜராத் அரசாங்கத்தின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதைப் பிரதிபலிக்கிறது. அதாவது, முஸ்லீம்களுடன் பாகிஸ்தானையும், பயங்கரவாதத்தையும் ஒன்றிணைத்தும், மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லீம் சிறுபான்மையினரை முகத்துதி செய்வதன்மூலம் பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருந்தன என்கிற முறையிலும் அவர்களுடைய பிரச்சாரங்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய இவர்களின் கதையை எவராவது விமர்சனம் செய்தால் அவர்கள் தேசவிரோதிகள் என்றும், குஜராத் விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்படுவார்கள்.

இதேபோன்றே கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளக்கூட்டணி ஆட்சி தலைதூக்கியதிலும் குஜராத்தின் வளர்ச்சிப்பாதை தன்னிகரற்றது. நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கார்ப்பரேட்டுகளும், முதலாளித்துவ வர்க்கமும் மோடி மற்றும் பாஜக-வின் பின்னால் உறுதியுடன் அணிவகுத்திருக்கின்றன. பெரும் வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாட்டின் சொத்துக்கள் மற்றும் வளங்கள் வாரிவழங்கப்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு அற்ப அளவிலேயே ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. குஜராத் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட அளவிற்கும், கீழ்மட்ட அளவிற்கும் இடையேயுள்ள வேறுபாடு அங்கே நிலவும் சமூகத்தின் அவல நிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் பற்றாக்குறை காரணமாக ஏழை மக்கள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் அதிருப்தி நிலவிவருகிறது என்பது தேர்தல் பிரச்சாரத்தின்போது மேலெழுந்து வந்தன. எனினும், இவ்வாறு மக்கள் மத்தியில் காணப்படும் கோபத்தை மழுங்கடிப்பதற்காக, அங்கே மக்கள் மத்தியில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ள மதவெறி சிந்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மதவெறிப் பிரச்சாரத்தின் இலக்கு, தனியே ஒதுக்குப்புறமாக, மிகவும் மோசமான நிலைமைகளுடன் வாழ்ந்துவரும் முஸ்லீம்களேயாகும். நகரங்களில், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் அடிப்படை குடிமை வசதிகள் எதுவுமின்றி மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்து வருவதையும் முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஆழமான முறையில் பிளவு இருப்பதையும் தெளிவாகப் பார்க்க முடியும். பாஜக, தங்களுடைய இந்துத்துவா வெறிப் பிரச்சாரம் மூலமும் மற்றும் பயனாளிகளுக்கு மேலும் பல சலுகைகள் அளிக்கப்படும் என்கிற உறுதிமொழிகள் மூலமும் வாக்காளர்களை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது.

இவர்களின் விஷத்தை உமிழும் மதவெறிப் பிரச்சாரத்தைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது இப்போது இயல்பாகிப் போனது. ஏனெனில் இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களின்போது தேர்தல் நடத்தை விதிகளைத் திரும்பத் திரும்ப மீறிய நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுத்திடத் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது.

குஜராத்தில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக, ஓர் ஓய்வுபெற்ற மூத்த குடிமை அதிகாரி, இ.ஏ.எஸ். ஷர்மா அவர்கள், அமித்ஷாவின் பேச்சுக்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருக்கின்றன என்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, எனவே அமித்ஷாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதி இருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

(நவம்பர் 30, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *