துஷார் தாரா ப்ளூம்பெர்க் நியூஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபர்ஸ்ட் போஸ்ட் ஆகிய செய்தி நிறுவனங்களில் பணியாற்றியவர். தொழிலாளியாக ராஜஸ்தானில் உள்ள மஜ்தூர் கிசான் சக்தி சங்கத்துடன் பணியாற்றியுள்ளார்.
அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை மூன்று கட்டங்களாக பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று செப்டம்பர் 25 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான பரந்த வழிகாட்டுதல்களையும், பெரிyஅ அளவிலான நேரடிக் களப் பிரச்சாரத்தை தடை செய்து குறிப்பாக பீகாருக்கான சில பரிந்துரைகளையும் தேர்தல் ஆணையம் முன்னர் வெளியிட்டிருந்தது. விளைவாக, பீகாரில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கான அரசியல் செய்திகளை வடிவமைத்து வாக்காளர்களுடன் இணைந்து கொள்வதற்கு டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் சமூக ஊடகங்களையே அதிகளவில் நம்பியுள்ளன.
இந்தியா டுடே குழுமத்திற்குச் சொந்தமான ஹிந்தி இணையவழிச் செய்தி தளமான லல்லன்டாப், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் பீகார் துணை முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான சுஷில் மோடியிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அந்த உரையாடலில், கோவிட்-19, ஜிஎஸ்டி மற்றும் வளர்ச்சி குறித்த தனது அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு இணக்கமான வகையில் மோடி பதிலளித்தார். பீகாரின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஷ்வி யாதவ் பற்றியும் மோடி அந்த உரையாடலின் போது பேசியிருந்தார். அதே நாளில், தனது சமூக ஊடகக் கணக்கில் அந்த நேர்காணலை சுஷில் மோடி ட்வீட் செய்தார். அதே நாளில் அவர் மேலும் இரண்டு பத்திரிகை செய்திக் குறிப்புகளையும் ட்வீட் செய்திருந்தார். அந்த இரண்டு குறிப்புகளும் தினசரி செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தன. பத்திரிக்கைகள் சொல்கின்றன என்று குறிப்பிட்டு சுஷில் மோடி அவற்றை மீண்டும் மறு ட்வீட் செய்திருந்தார்.
சுஷில் மோடி இவ்வாறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், அதன் மூலம் பிரதான ஊடகங்களுக்குச் செய்திகளைத் தருவதற்கும் இடையிலான ஒத்துழைப்பு பீகாரில் நிலவுகின்ற போக்கைக் குறிப்பதாக இருக்கிறது. அந்தப் போக்கு தேர்தல் குறித்து ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளில் பாஜகவிற்கு முக்கிய பங்கைக் கொடுக்க அனுமதிக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அங்கீகாரம், மக்களிடம் சென்றடைவது மற்றும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் மிகப்பெரிய, வல்லமைமிக்க சமூக ஊடக உள்கட்டமைப்பை பாஜக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த உள்கட்டமைப்பிற்குள் சரிபார்க்கப்பட்டு சமூக ஊடக தளங்களில் இருக்கின்ற அதிக எண்ணிக்கையிலான தலைவர்கள், வாட்ஸ்ஆப்பில் இருக்கின்ற மிகப்பெரிய வலைப்பின்னல் ஆகியவை அடங்கும். அரசாங்க விளம்பரங்களின் மூலம் அளிக்கப்படுகின்ற நிதியாதாரத்தைப் பயன்படுத்தி பிரதான ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் தங்களுக்குச் சாதகமாக இருப்பதை பாஜகவும், அதன் கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளமும் (ஜே.டி.யூ) உறுதி செய்து கொண்டிருக்கின்றன. மற்ற அரசியல் கட்சிகளை விட பாஜக கூடுதலாக சமூக ஊடக விளம்பரங்களுக்கென்று செலவழிக்கவில்லை என்றாலும், தன்னுடைய கூற்றுக்களைப் பிரபலப்படுத்தி வருகின்ற மூன்றாம் தரப்பினர் மூலமாக அந்தக் கட்சி பயனடைந்து வருகிறது. அவர்களின் இந்த டிஜிட்டல் பிரச்சாரம் இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி குறித்த சட்டங்களில் உள்ள பல முக்கிய ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கின்றது.
பீகார் மாநிலத்தில் குறைந்தது 23 பாஜக தலைவர்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளை வைத்திருப்பதில் இருந்தே சமூக ஊடகங்களில் பாஜகவின் ஆதிக்கத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்தப் பட்டியலில் சுஷில் மோடியோடு, பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் கிரிராஜ் சிங், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்களும் அடங்குவர். சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் பெரிய அளவில் பின்தொடர்பைக் கொண்டவையாக இருக்கின்றன. அந்த கணக்குகளின் நம்பகத்தன்மை காரணமாக, அரசியல் செய்திகளை வடிவமைப்பதில் அவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இந்த 23 பாஜக தலைவர்களை ஒருங்கிணைந்து பின்தொடர்பவர்கள் பல லட்சக்கணக்கில் உள்ளனர்.
பிரதான ஊடகங்களால் பாஜக தலைவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளிலிருக்கின்ற பதிவுகள் எடுத்துக் கொள்ளப்படுவதை சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களுக்கிடையே இருக்கின்ற பின்னூட்ட வளையம் உறுதி செய்து தருகிறது. இந்த கணக்குகளில் வெளியிடப்படும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின்ற செய்திகளாக மீண்டும் வெளியிடப்படுகின்றன. இது போன்ற செயல்பாடுகள் பிரதான பத்திரிக்கைகளின் தேர்தல் செய்திகளில் விவாதிக்கப்படுகின்ற விஷயங்களைத் தீர்மானிப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையை பாஜகவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
அதற்கு மாறாக, பீகாரின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) ஐந்து மூத்த தலைவர்கள் மட்டுமே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளை வைத்துள்ளனர். அந்த ஐந்து பேரும் லாலுபிரசாத் யாதவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சஞ்சய் யாதவ், தன்வீர் ஹசன், ஷைலேஷ்குமார் மற்றும் நவல் கிஷோர் போன்ற ஒரு சில ஆர்ஜேடி தலைவர்களும் ட்விட்டரில் தங்களுடைய கணக்குகளை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் ஃபேஸ்புக்கில் அவ்வாறு செய்து கொள்ளவில்லை. இரு தளங்களிலும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கைக் கொண்டிருக்கும் ஒரே ஜே.டி.யூ அரசியல்வாதியாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இருக்கிறார். ஜே.டி.யூ தலைவரான பஷிஸ்தா நரேன் சிங் போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட இரு தளங்களிலும் தங்களுடைய கணக்குகளை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. பீகாரில் உள்ள எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் என்ற மகாகூட்டணியில் அங்கம் வகிக்கின்ற காங்கிரஸின் நிலைமையும் அவ்வாறே இருக்கிறது. பீகார் காங்கிரஸின் தலைவர் மதன் மோகன் ஜா, தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், காங்கிரஸின் தேசிய ஊடகக்குழு உறுப்பினரான சந்தன் யாதவ் ஆகியோர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளை வைத்துக் கொண்டிருக்கும் மூத்த தலைவர்களாக இருப்பது தெரிகிறது.
பீகாரின் அரசியல் களத்தில் உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடக கணக்குகளின் இத்தகைய சமத்துவமற்ற விநியோகம் அத்தகைய தளங்களால் வேண்டுமென்றே செய்யப்பட்டதா, அல்லது அரசியல் செய்திகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான பாஜகவின் முன்னெடுப்பான ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக நடந்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ட்விட்டர் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் இவ்வாறு அசமத்துவமாக இருப்பது குறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, ‘எங்களுடைய தயாரிப்புகளோ அல்லது கொள்கைகளோ ஒருபோதும் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதில்லை அல்லது செயல்படுத்தப்படுவதில்லை… வேட்பாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பொது உரையாடலுக்காக தங்களுடைய கணக்குகளைச் செயலில் வைத்திருக்கும் தொடர்புடைய கட்சிகளைச் சார்ந்தவர்கள் போன்றோரைச் சரிபார்ப்பதற்காக இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துடனும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்…’ என்றார். அதே கேள்விக்கு, ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளரால் தெளிவான பதிலைக் கொடுக்க முடியவில்லை. அவரால் கணக்குகளைச் சரிபார்க்க தங்களிடம் இருக்கின்ற பொது வழிகாட்டுதல்களை மட்டுமே சுட்டிக் காட்ட முடிந்தது.
‘செய்திகளை சமூக ஊடகங்களில் இருந்து பிரதான ஊடகங்களுக்கு ட்விட்டரில் மாற்றுவது பாஜகவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பீகாரில் வேறு எந்த முக்கிய தலைவரும் இதைத் திறம்பட செய்யவில்லை’ என்று பாஜகவில் முன்பு பணியாற்றிய, இப்போது மகா கூட்டணிக்கு வேலை செய்து வருகின்ற தரவு ஆய்வாளர் சிவம் சங்கர் சிங் கூறுகிறார். ‘சுஷில் மோடி ஒரு பத்திரிக்கைச் செய்திக்குறிப்பை வெளியிடுகிறார் என்றால், பத்திரிக்கை ஊடகங்கள் அதில் இருந்து ஒரு செய்தியை உருவாக்குகின்றன. ஆனால் மற்றவர்களோ தங்களுடைய செய்தியை பத்திரிக்கை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும், பின்னர் அவரை அழைத்து, ‘தயவுசெய்து அதை வெளியிடுங்கள், முக்கியமான செய்தியாக நன்றாக நிலைநிறுத்துங்கள், நல்ல புகைப்படத்துடன் வெளியிடுங்கள்’ என்று கூற வேண்டும். இத்தனைக்கும் பிறகும் அவர்கள் அதை மூன்றாம் பக்கத்தில்தான் வெளியிடுவார்கள்’ என்கிறார்.
ஒப்பீட்டளவில் சமூக ஊடகங்களில் தாங்கள் இல்லாததை உணர்கின்ற பீகார் காங்கிரஸ் தலைவர்கள், பிரதான ஊடகங்களில் தங்களைப் பற்றி மிகக் குறைவான செய்திகளே வருவதாகவும் உணர்கின்றனர். ‘ஊடகங்களே நாங்கள் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை என்றால், பிரச்சனைகளில் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும் என்று நாங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?’ என்று பீகார் இளைஞர் காங்கிரஸின் தலைவர் குஞ்சன் படேல் கேட்கிறார். ‘எங்களுடைய பார்வை குறித்து பத்திரிகை செய்திக்குறிப்புகளை நாங்கள் முக்கிய பத்திரிக்கை ஊடகங்களின் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கிறோம், ஆனால் அவற்றில் நான்கு வரிகள் வெளியாவதற்குகூட நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. பெரும்பாலான செய்தித்தாள்கள் பாஜக மற்றும் அரசாங்கத்தை நோக்கியே சாய்ந்திருக்கின்றன’ என்கிறார் படேல். பீகாரில் ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு உள்ள ஒரே இளைஞர் காங்கிரஸ் தலைவர் அவர். ஆனாலும் அவரும்கூட ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு இல்லாமல்தான் இருக்கிறார்.
‘சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான செய்தி ஊடகங்களில் – அச்சு மற்றும் தொலைக்காட்சி – உங்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய பணத்தின் அளவிற்கு நேர்விகிதத்தில் உள்ளது’ என்று அடல் பிஹாரி வாஜ்பாயின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பணியாற்றிய முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகிறார். 2018இல் கட்சியை விட்டு சின்ஹா விலகினார், அதற்குப் பின்னர் அந்தக் கட்சியின் மீதான பெரிய விமர்சகராக அவர் மாறி விட்டார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளிலிருந்து விலகி நின்று, தனித்து பீகார் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள 17 சிறிய கட்சிகள் கொண்ட ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக அவர் உள்ளார். ‘பிரதான ஊடகங்கள் கூட தேர்தல் நேரத்தை தங்களுக்கான வருமான நேரமாகப் பார்ப்பதே இப்போதைய சோகமாக இருக்கிறது’ என்று அவர் கூறுகிறார். ‘அரசு அதிகாரத்தை தங்களுடைய கைகளில் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை வெளியிடலாம். இரண்டாவதாக, சமூக ஊடகங்கள் உட்பட்டு மொத்தமாகச் செலவழிக்கப்படுகின்ற பணத்தின் அளவைப் பொறுத்தவரை, மற்ற எல்லா கட்சிகளையும் விட பாஜக போன்ற பணக்கார கட்சிகளே முன்னணியில் உள்ளன. தேர்தலைப் பொறுத்தவரை, இவ்வாறான நிலை அனைவருக்கும் இருக்க வேண்டிய சமமான தளத்தை முற்றிலுமாக அழித்தே விட்டது’.
‘ஒரு தேர்தல் ஆண்டில், தொலைக்காட்சி சேனல்களின் கவனம் விளம்பர வருவாயை அதிகரிப்பதாகவே இருக்கும்’ என்று ஃபர்ஸ்ட் பீகார் என்ற செய்தி இணையதளத்தின் தலைமை நிருபரான சஷி பூஷண் கூறுகிறார். ‘அரசாங்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகப் பேச முடியுமா? அத்தகைய தைரியம் மிகச் சில சேனல்களிடம் மட்டுமே உள்ளது’ என்கிறார். அவருடைய ஃபர்ஸ்ட் பீகார், அரசியல்வாதிகள் விடுக்கின்ற அறிவிப்புகளுக்காக சமூக ஊடகங்களை குறிப்பாக ட்விட்டரைக் கண்காணித்து வருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டால், அதை ஒரு செய்தியாகவும் வெளியிட்டு வருகிறது.
பீகாரின் ஆளும் கூட்டணியால், தங்களைக் குறித்த அதிக நேர்மறையான செய்திகளைப் பெறுவதற்கு பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்த முடிந்திருக்கிறது. ‘நிதிஷ் அரசாங்கத்தின் விளம்பர வருவாய்க் கொள்கையின் காரணமாக எந்தவொரு செய்தித்தாளும் அரசாங்கத்திற்கு எதிராக எழுதுவதற்குத் தயாராக இருப்பதில்லை’ என்று கூறுகின்ற பூஷண், ‘அரசாங்கத்திற்கு எதிராக எழுதினால் பீகாரில் உங்களுக்குத் தரப்படுகின்ற விளம்பரங்களை நிறுத்தி விடுவார்கள் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்திருக்கிறது. மீதமுள்ளவை பிராந்திய தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே. அவற்றில் மூன்று முக்கியமானவையாக உள்ளன. காஷிஷ் செய்திகள் சேனலுக்கு பரவலான விநியோகம் இல்லை. நியூஸ் 18 பீகார்-ஜார்க்கண்ட், ஜீ பீகார்-ஜார்க்கண்ட் ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டிலும் நான் வேலை செய்திருக்கிறேன்’ என்கிறார். பீகாரில் ஸ்மார்ட்போன் பயன்பாடு 30 சதவீத அளவிற்கு மட்டுமே இருப்பதால், தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்கு இன்னும் பிரதான ஊடகங்களே முக்கியமானவையாக இருக்கின்றன.
பிரதான ஊடகங்களின் மீது இருக்கின்ற பிரமாண்டமான செல்வாக்கைத் தவிர, வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் உள்ளூர் குழுக்கள் சம்பந்தப்பட்ட பிரமாண்ட வலையமைப்பை உருவாக்க பாஜகவால் முடிந்திருக்கிறது. ஒரு லட்சம் வாட்ஸ்ஆப் குழுக்களை பீகாரில் பாஜக உருவாக்கியுள்ளதாக நான் முன்பே கேரவான் இதழிடம் தெரிவித்திருக்கிறேன். இது மாநிலத்தில் உள்ள சுமார் 72,000 வாக்குச் சாவடிகளை விட கூடுதலான எண்ணிக்கையாகும். பாஜக பீகாரில் பூத் மற்றும் பஞ்சாயத்து மட்டங்களில் வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி வருகிறது. அந்தக் குழுக்களின் நிர்வாகிகளாக 9,500 பேரை நியமித்தும் இருக்கிறது. தொற்றுநோயால் பாதிக்கப்படாத வகையில் வாக்காளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள கட்சிக்கு இந்த அமைப்பு உதவி வருகிறது.
வாட்ஸ்ஆப்பில் பாஜக எட்டியுள்ள அளவை மாநிலத்தின் பிற அரசியல் கட்சிகளால் எட்ட முடியவில்லை. பாஜகவுடன் ஒப்பிடுகையில், பீகார் காங்கிரஸிற்கென்று 3,800 வாட்ஸ்ஆப் குழுக்கள் மட்டுமே உள்ளன என்று காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவிக்கிறார். ‘தேர்தல்கள் மிக நெருக்கமாக உள்ளதால், இப்போது புதிய வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாதது’ என்று கூறுகின்ற சிவம், ‘கடந்த 5 ஆண்டுகளில் இதைச் செய்திருக்காவிட்டால், நிச்சயமாக அடுத்து வருகின்ற இரண்டு மாதங்களில் அதைச் செய்து முடிக்க முடியாது’ என்கிறார்.
பாஜகவின் கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளம் தனக்கென சமூக ஊடக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குப் போராடி வருகிறது. ’எங்கள் கட்சியின் மனோபாவம் டிஜிட்டல் சார்ந்ததாக இருக்கவில்லை’ என்று நீர்வளத்துறை அமைச்சரும், நிதீஷ்குமாருடன் நெருங்கி நம்பிக்கைக்குரியவராக இருக்கின்ற சஞ்சய் ஜா கூறுகிறார். முதலமைச்சரைப் பற்றிப் பேசுகின்ற போது, ‘எங்களுடையது நிலம் சார்ந்த அரசியல், டிஜிட்டல் பிரச்சாரம் அவருடைய மனோபாவத்திற்கும் அரசியலுக்கும் ஏற்றதல்ல. குறைந்தபட்ச அடிப்படையாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்றவை இருக்கின்றன. இந்த தொற்றுநோய் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. ஐக்கிய ஜனதாதளம் டிஜிட்டல் மீது அதிக அளவில் கவனம் செலுத்துவதில்லை என்பதால், எங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளைக் கொண்ட பலர் இருக்கவில்லை. பத்து லட்சம் பேர் வரை சென்று சேரக் கூடிய உரைகளை ஒளிபரப்புகின்ற வகையில் அண்மையில் வலைத்தளம் ஒன்றை ஐக்கிய ஜனதா தளம் அறிமுகப்படுத்தியுள்ளது’ என்று ஜா கூறினார்.
சமூக ஊடக தளங்களில் விளம்பரம் செய்வதில், பெரிய அளவில் பாஜகவிற்கு நன்மை இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையிலான விளம்பரங்களை மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள் பலர் நடத்தி வருவது, பாஜகவிற்கும், ஆளும் கூட்டணிக்கும் உதவுகின்றதாக இருக்கின்றது. இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐபிஏசி) என்ற அரசியல் ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்குகின்ற குழுவே, பீகாரில் அரசியல் விளம்பரங்களுக்காக ஜூலை 2 முதல் செப்டம்பர் 29 வரை அதிகம் செலவு செய்திருப்பதாக ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்கான தரவுத்தளமாக இருக்கின்ற ஃபேஸ்புக் விளம்பர நூலகம் தெரிவிக்கிறது. ஐபிஏசி தங்களுடைய ‘பாத் பீகார் கி’ என்ற பிரச்சாரத்தை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட 367 விளம்பரங்களுக்கு ரூ.19.96 லட்சம் அளவிற்குச் செலவிட்டிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் 480 விளம்பரங்களுக்கு ரூ.10.82 லட்சத்தையும், காங்கிரஸ் பீகார் பிரிவு 2,388 விளம்பரங்களுக்காக ரூ.8.14 லட்சத்தையும் பாஜக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து 479 விளம்பரங்களுக்கு ரூ.4.08 லட்சத்தையும் செலவிட்டுள்ளன.
பீகாரில் உள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மனன் கிருஷ்ணா, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் வெளியிடப்படும் பாஜகவின் விளம்பரங்கள் ‘முற்றிலும் நேர்மறையானவை’ என்று கூறுகிறார். பாஜக பீகார் என்ற விளம்பர நூலகத்தின் ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது என்றாலும், அது மூன்றாம் தரப்பு விளம்பரங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, ராஷ்ட்ரிய ஜனதாதள் எதிர்ப்பு விளம்பரங்களை வெளிட்டு வருகின்ற விளம்பரதாரர்களில் ஒருவரான ராஷ்டிரிய ஜங்கிள் தள் (லாலு பிரசாத் யாதவின் ஆட்சி சட்டம் ஒழுங்கு குறித்து மிகமோசமான நிலையை ஏற்படுத்தியதால், ‘ஜங்கிள் ராஜ்’ என்று அந்த ஆட்சியை அழைப்பதைக் குறிக்கிறது) என்ற ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அவர்களுடைய பக்கத்தில் வெளியானதொரு விளம்பரம், ஹிந்து மருத்துவர்களை ராஷ்ட்ரிய ஜனதாதள் சட்டமன்ற உறுப்பினர் ஷாபுதீன் கடத்திச் சென்று விட்டதாகக் கூறுகின்ற அந்த விளம்பரம், ‘அந்த நாட்களை நீங்கள் மறந்து விட்டீர்களா? ஹிந்துக்களே, உங்கள் ரத்தம் குளிர்ந்து விட்டதா?’ என்று கேட்கிறது. அந்தப் பக்கத்தில் இருக்கின்ற மற்றொரு விளம்பரம், தேஜஷ்வி யாதவை குற்றவாளிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள அடிமுட்டாள் என்று சித்தரிக்கிறது. ஃபேஸ்புக்கின் வெளிப்படைத்தன்மை அறிக்கையில், 2019 பிப்ரவரி 8 முதல் 2020 செப்டம்பர் 19 வரை அந்த பக்கத்திற்காக ரூ.48,253 செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் நரேந்திர மோடியின் பிம்பத்தை மேம்படுத்துவதற்காக அதிக அளவிலான செலவுகளை, மறைமுகமாக ஃபேஸ்புக்கின் வெளிப்படைத்தன்மை விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பினர் எவ்வாறு செய்கிறார்கள் என்பதை செய்தி வலைத்தளமான ஓஜி.காம் அளித்திருக்கின்ற விசாரணை அறிக்கை விவரிக்கிறது. இதற்கு தேர்தல் பிரச்சாரச் சட்டங்களைப் பலவீனமாக அமல்படுத்துவதும் உதவுகின்றது. ‘ஃபேஸ்புக்கில் இந்தியாவின் மிகப் பெரிய பத்து அரசியல் செலவினர்களில் மூன்று பேர், முதல் 60 பேரில் எட்டு பேர் கண்டறிவதற்கு மிகவும் கடினமான பாஜக சார்பு ஆதரவாளர்களாக இருக்கின்றனர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ‘ஒன்றரை ஆண்டுகளில் பாஜகவை விட (680,000 டாலர்) கூடுதலாக, 800,000 டாலருக்கும் அதிகமான தொகையை இவர்கள் செலவிட்டுள்ளனர்’. மூன்றாம் தரப்பினரையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்கின்ற பணம் படைத்த கட்சிகள், தங்கள் போட்டியாளர்களை விட அதிகப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்திய தேர்தல் பிரச்சார நிதி குறித்த விதிகள் அனுமதிக்கின்றன.
‘பீகாரில் உண்மையான தேர்தல் பிரச்சாரத்தைக் கொண்ட ஒரே கட்சியாக இப்போது பாஜக மட்டுமே இருக்கிறது’ என்று தரவு ஆய்வாளர் சிவம் கூறுகிறார். ‘பத்திரிக்கை செய்திக் குறிப்புகளை அவர்கள் அனுப்வி வைக்கிறார்கள், சமூக ஊடகங்களில் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். மற்ற கட்சிகளோ சில படங்களை மட்டுமே வெளியிடுகின்றன. அவற்றால் மக்களைச் சென்றடைய முடியவில்லை. அவர்கள் யாருக்கும் பாஜகவைப் போல அதிகமான ஃபேஸ்புக் பக்கங்கள் அல்லது வாட்ஸ்ஆப் குழுக்கள் கிடையாது. மேலும் தொற்றுநோய் காரணமாக எதிர்க்கட்சிகள் களத்தில் இறங்கி அதிகம் வேலை செய்யவில்லை என்பதால், செய்திகளை உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களில் பிரபலமாக்குவது அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடினம்’.
‘ஆர்.ஜே.டி ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்’ என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்படுகின்ற செய்திகள் இருப்பதாகக் கூறிய சிவம், ‘சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவுகின்ற செய்திகளை பின்னர் அவர்கள் உருவாக்குகிறார்கள். எடுத்துக்காட்டாக, தில்லி கலவரத்தின் போது, அவர்கள் பரப்புகின்ற செய்தி ‘முஸ்லீம்களும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து குழப்பத்தை உருவாக்குகின்றனர்’ என்பதாக இருக்கிறது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் பாஜக திட்டமிட்டு, திறமையாகச் செயல்படுவதாக மக்கள் தொடர்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். முன்னாள் பத்திரிகையாளரும், 2019 பொதுத் தேர்தலின் போது பாஜக பீகாரின் சமூக ஊடகத் தளத்தை நிர்வகித்த மக்கள் தொடர்பு நிறுவனமான கிரே மேட்டர்ஸின் நிறுவன இயக்குநருமான நவ்னித் ஆனந்த், ‘முக்கியமான செய்திகளைப் பெரிதாக்குவதன் மூலமும், கொள்கை முன்முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதன் மூலமும் தங்களுக்கான திட்டங்களை உருவாக்கிக் கொள்ள சுஷில் மோடி பெரும்பாலும் ட்விட்டரையே பயன்படுத்துகிறார்’ என்று கூறுகிறார். மக்களின் ஒட்டுமொத்த ஊடக-நுகர்வுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆனந்த் கூறுகிறார். ஊடக நுகர்வில் முன்னர் 60 சதவீதம் என்ற அளவில் இருந்த செய்தித்தாள்கள், டிஜிட்டல் தளங்கள் வெகுவாகப் பரவிய பின் இப்போது 20 சதவீதம் என்ற நிலைக்கு குறைந்துவிட்டன. ‘அச்சில் வருவதை விடப் பெரிதாக, பலரையும் சென்றடைவதற்கு எந்தவொரு திறமையான உத்தி வடிவமைப்பாளரும் டிஜிட்டலையே பயன்படுத்துவார்’ என்றும் ஆனந்த் தெரிவிக்கிறார்.
மேலும் ‘சமூக ஊடக தளங்களை மதிப்பிடுவதாக இருந்தால், செய்திகளை உருவாக்கி, அரசியல் உரையாடலுக்கான திட்டத்தை ட்விட்டர் வடிவமைத்து தருகிறது என்றே நான் சொல்வேன். ஏனெனில் [ஊடகங்கள் மற்றும் கொள்கை குறித்து] செல்வாக்கு செலுத்துபவர்கள் ட்விட்டரில் இருக்கின்றனர். ஆனால் வாக்காளர்கள் பெரும்பாலும் ஃபேஸ்புக்கை அணுகுபவர்களாகவே இருக்கின்றனர்’ என்று அவர் தொடர்ந்து கூறினார். பீகாரில் உள்ள மற்ற தலைவர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அவர் விளக்கினார். ‘நிதீஷ் குமார் தனது ட்விட்டர் கணக்கில் பெரும்பாலும் முதலமைச்சராக மட்டுமே செயல்படுகிறார்’ என்று கூறும் ஆனந்த் ‘அவரது உரைகளில் அரசியல் தாக்குதல்கள் இருக்கின்றன என்றாலும், முதலமைச்சர் மற்றும் ஜே.டி.யு மீது தேஜஷ்வி தொடுக்கின்ற தாக்குதல்கள் கூர்மையாக இருக்கின்றன. கிராமத்துடன் தொடர்புடைய செய்தியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், பெரும்பாலும் கிராமப்புற நோக்குநிலையுடைய தனது பார்வையாளர்களுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளவே அவர் முயற்சிக்கிறார்’ என்கிறார்.
பீகார் டிஜிட்டல் பிரச்சாரத்தை அவர் இப்போது எவ்வாறு வடிவமைப்பார் என்று சிவமிடம் கேட்ட போது, ‘பீகாரில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் 1.5 கோடிப் பேர் இருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். ஃபேஸ்புக்கில் நல்ல பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு ஒரு பயனருக்கு ரூ.5 செலவாகும்’ என்று கூறினார். ‘அவர்கள் அனைவரிடமும் ஆப் உள்ளதாக என்று வைத்துக் கொண்டால், அதற்கே ரூ.7.5 கோடி தேவைப்படும். அது உங்கள் செய்தியை பயனர் பெறுவதற்கான செலவு மட்டுமே ஆகும். செய்தியை உருவாக்குவது என்பது தனிக் கதை. ஃபேஸ்புக்கில் வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு விதமான விளம்பரங்களை உருவாக்கித் தர வேண்டும். நிதீஷ்குமாரை விரும்பாதவர்களுக்கு, பீகாருக்கு நிதீஷ் நல்லவரல்ல என்பது போன்ற விளம்பரத்தை நீங்கள் வடிவமைக்க வேண்டும்’ என்று சிவம் கூறுகிறார்..
‘டிஜிட்டல் தகவல்தொடர்பு மற்றும் பிரச்சாரத்தில் பாஜக தன்னுடைய வலிமையைக் காட்டியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. தற்போதுள்ள யதார்த்தங்கள் காரணமாக, அந்தக் கட்சி முழுமையாகப் பயனடையப் போகின்றது’ என்று வழக்கறிஞரும், டிஜிட்டல் உரிமைகள் குறித்து லாப நோக்கற்று இயங்குகின்ற அமைப்பான இணைய சுதந்திர அறக்கட்டளையின் இயக்குநருமான அபர் குப்தா கூறுகிறார். ‘இது வேட்பாளரின் சார்பாக, வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரால் செய்யப்படுகின்ற செலவுகளை வெளிப்படுத்துவது தொடர்பாக இருக்கின்ற ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை மற்றும் அமலாக்கத்தின் குறைபாடுகள் குறித்தும் பேசுகிறது. டிஜிட்டல் விளம்பரச் செலவுகளை நிர்ணயிக்கும் வகையில் இருக்கின்ற தேர்தல் பிரச்சார நிதியின் வரம்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன’ என்கிறார்.
ஜூலை 17 அன்று, மகாகூட்டணியில் இணைந்திருக்கின்ற ஆர்.ஜே.டி, விகாஷீல் இன்சான் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிச-விடுதலை) மற்றும் லோகாந்த்ரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதத்தில் டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து தங்களுக்கிருக்கும் அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தன. ‘அதிகாரத்தில் உள்ள கட்சிகள் தங்களுடைய மெய்நிகர் போரைத் தொடங்கியுள்ள நிலையில், மெய்நிகர் அரசியல் பிரச்சாரத்திற்கான வரம்பை தேர்தல் ஆணையம் இன்னும் நிர்ணயிக்கவில்லை. அனைத்து போட்டியாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சமமான தளத்தை உத்தரவாதம் செய்து தந்து, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்ற மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவுகள் குறித்து உத்தேச வரம்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் தற்போது செய்யப்பட்டு வருகின்ற சமூக ஊடகச் செலவுகளும் அந்த தொகைக்குள்ளேயே இணைத்துக் கொள்ளப்படுவதாகக் கருதப்படுகிறது. ‘அந்த வரம்புகள் கடைபிடிக்கப்படுவதில்லை. விதிகள் தெளிவற்று இருப்பதால், இணையவழிப் பிரச்சாரங்களைப் பார்க்கின்றபோது, அது நம்பமுடியாத அளவிற்கு கவலை அளிப்பதாகவே இருக்கிறது’ என்று குப்தா கூறினார். இது தொடர்பான பல தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் கேள்விகளுக்கு பீகார் தலைமை தேர்தல் அதிகாரியான எச்.ஆர்.சீனிவாசா பதிலளிக்கவில்லை.
வாக்காளர்களைச் சென்றடையவும், தேர்தலின் தொனியை உருவமைக்கவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் பாஜக தற்போது முன்னோடியான தொடக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், தேர்தல் முடிவை எவ்வாறு அது பாதிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி: கேரவான் இதழ்
தமிழில்: தா. சந்திரகுரு
Leave a Reply
View Comments