கரும் பிளவு (Black Crack)
– ஏற்காடு இளங்கோ
அமெரிக்காவின் தென்கிழக்கு உட்டாவின் மோவாப் நகரில் கனியன்லேண்ட்ஸ் தேசியப் பூங்கா (Canyonlands National Park) அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் கரும் பிளவு (Black Crack) ஒன்று காணப்படுகிறது. இது ஒரு புவியியல் அற்புதமாகும். இது நம் கண்களாலேயே நம்ப முடியாத அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான பிளவாக உள்ளது.
இந்தப் பிளவு சுமார் 100 கிலோ மீட்டர் நீளம் வரை நீண்டுள்ளது. இது சுமார் 500 மீட்டர் (1,640 அடி) ஆழமும், 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இது கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் ஆழம் கொண்டதாக இருப்பதால் சூரிய ஒளி உள்ளே செல்வது கிடையாது. ஆகவே இந்தப் பிளவு இருண்டு போய், கருப்பாக காணப்படுகிறது. ஆகவே தான் இது கரும் பிளவு என அழைக்கப்படுகிறது.
இந்த கரும் பிளவைச் சுற்றிள்ள பகுதி படிவுப் பாறை அடுக்குகளால் ஆனது. இது மணற்கல், சுண்ணாம்பு, களிமண் துண்டுகள், குவார்ட்ஸ், கேல்சைட்டு போன்ற பிற கனிமங்களின் தூண்டுகளும் சேர்ந்து இறுதியாக ஒரு வகையான படிவுப் பாறையாக மாறியுள்ளது. இதில் காற்று மற்றும் நீரின் அரிப்பு சக்திகளால் ஒரு வகை விரிசல் அல்லது பிளவு ஏற்பட்டது.
காலப்போக்கில் நீர், காற்று மற்றும் பனி ஆகியவை இணைந்து விரிசலைச் சுற்றியுள்ள மென்மையான பாறை அடுக்குகளை அரித்தது. விரிசலில் சேர்ந்த நீர் உறைந்து, விரிவடைந்தது. இந்த ஆற்றல் விரிசலை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும், நீளமாக்கவும் செய்தது. இதன் இடையில் உள்ள தூசுகளைக் காற்று அடித்துச் சென்றது. இந்த செயல்பாடு மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது.
இதன் விளைவாக இன்று காணப்படும் கரும் பிளவு ஏற்பட்டது. இயற்கை சக்திகள் ஒன்று சேர்ந்து ஒரு நிலப்பரப்பை புதியதாக வடிவமைக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது. விரிசலில் நடைபெறும் உறைதல், கரைதல் மற்றும் காற்று சுழற்சி மூலம் ஒரு குறுகிய விரிசலை பெரிதாகவும், ஆழமானதாகவும் மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். இது இயற்கை உருவாக்கிய தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இந்த இடத்திற்குச் சென்று வருவது ஒரு சாகசப் பயணமாகவே கருதப்படுகிறது.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.