‘கலப்பு கற்பித்தல்’ : பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டம் மிக மோசமானதொரு சிந்தனை – அபூர்வானந்த் | தமிழில்: தா.சந்திரகுரு

இந்த கலப்பு கற்பித்தல் முறை ஆசிரியர்களையும், பல்கலைக்கழகங்களையும் வெறுமனே அறிவைத் தூண்டும் நபர்களாகக் கீழே தள்ளுகிறது. வகுப்பறைகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்குகின்ற முயற்சியாகவும் அது இருக்கிறது.உயர்கல்வி நிறுவனங்களில் கலப்பு கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்மொழிவு மாணவர்களும், ஆசிரியர்களும் நேருக்கு நேரிருந்து கற்பிக்கும் முறையை இணையவழி கற்பித்தலைக் கொண்டு மாற்றுவதாக இருக்கிறது. ஆரம்பத்தில் முப்பது சதவீத படிப்புகள் இணையவழியில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிற இந்த புதிய கற்பித்தல் முறை இறுதியில் எழுபது சதவீதமாக அதை மாற்றும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

இந்த கற்பித்தல் முறை  மாணவர்களை ‘விடுவிக்க’ முயலும் என்று குறிப்பிடுகின்ற ஆவணத்தைப் பற்றி கருத்து தெரிவிக்குமாறு பொதுத்தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ‘தற்போதைய கற்பித்தல் முறை மேலிருந்து கீழாக, ஆசிரியர்களை மையமாகக் கொண்டதாக, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே அளவிலானதாக உள்ளது. மாணவர்களின் பன்முகத்தன்மையை அது புறக்கணிக்கின்றது. ஆனால் இந்த கலப்பு அணுகுமுறை மாணவர்களுக்குத் தன்னாட்சியை வழங்கும். அவர்களிடம் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்கின்ற மனநிலையை, மாணவர்களுக்கான உரிமையை ஊக்குவிக்கும். மேலும் அவரவருக்கான சொந்த வேகத்தில் கற்றுக் கொள்ள உதவும். அறிவை வழங்குநர்களாக மட்டுமே இப்போது இருந்து வருகின்ற ஆசிரியர்கள் இனிமேல் பயிற்சியாளர்களாகவும், வழிகாட்டிகளாகவும் மாறுவார்கள்’ என்று அந்த ஆவணம் கூறுகிறது.

இவையனைத்துமே மிகவும் முற்போக்கானவையாகத் தோன்றலாம். ஆனாலும் எனக்கு அது பல ஆண்டுகளுக்கு முன்பாக தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட சாம் பிட்ரோடா வழங்கிய சொற்பொழிவையே நினைவூட்டியது. அந்த மாநாட்டில் பேசும் போது அவர் ‘எந்தவொரு பாடத்திற்கும் பல ஆசிரியர்கள் தேவையில்லை, உங்களுக்குத் தேவை ஐந்து சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே’ என்று கூறினார். பயிற்றுவிப்பாளர்கள் மூலம் உலகளாவிய மாணவர்கள் அணுகிக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களுக்கான படிப்புகள் வருங்காலத்தில் இணையவழியில் கிடைக்கும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவருடைய அந்தப் பார்வை 2012ஆம் ஆண்டு மிகப் பெரிய திறந்தவெளி இணையவழி படிப்புகளின் (Massive Open Online Courses  – MOOC) வருகைக்குப் பின்னர் இந்திய உயர்கல்விக் கொள்கை வகுப்பாளர்களின் ஆதரவைப் பெற்றது.

நேரடியாக கல்வி கற்கும் வளாகங்களுக்கான மாற்றாகவே இந்த திறந்தவெளி இணையவழிப் படிப்புகள் கருதப்படுகின்றன. ஆனாலும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்களை ஏற்றுக் கொள்ள வைப்பதில் இந்த திறந்தவெளி இணையவழிப் படிப்புகள் தவறியிருக்கின்றன. 2003ஆம் ஆண்டு சான் ஜோஸ் அரசு பல்கலைக்கழகத் தத்துவத் துறைப் பேராசிரியர்கள் மிகவும் பிரபலமான பேராசிரியரான மைக்கேல் சாண்டல் உருவாக்கியிருந்த பாடத்தை எட்எக்ஸ் மூலமாக கற்பிக்க மறுத்து விட்டனர். அவர்கள் ‘பேராசிரியர்களை மாற்றீடு செய்வது, துறைகளை நீக்கி விடுவது, பொது பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு குறைந்த அளவிலே கல்வியை வழங்குவது போன்றவற்றைச் செய்வதற்கு நாங்கள் விரும்பவில்லை’ என்று அறிவித்தனர்.

பொது பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற திறந்தவெளி இணையவழிப் படிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு அவற்றை உருவாக்கித் தருகின்ற பேராசிரியர்களே உடந்தையாக உள்ளனர் என்று கூறி சான் ஜோஸ் அரசு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மைக்கேல் சாண்டலைக் குறை கூறினர். அதற்குப் பதிலளித்த பேராசிரியர் சாண்டல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் இருக்கின்ற நேரடித் தொடர்புகளை இதுபோன்ற இணையவழிப் படிப்புகளைக் கொண்டு மாற்றீடு செய்து விட முடியாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இந்தியாவில் ஸ்வயம் திறந்தவெளி இணையவழி மேடையில் கிடைக்கின்ற படிப்புகளைக் கற்பிக்குமாறு ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகின்றது. ஆனால் அவ்வாறு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் அரசு பல்கலைக்கழகத்தில் உள்ள ஏதாவதொரு துறை ஸ்வயமில் உள்ள பாடத்தை தங்களால் எடுக்க முடியாது என்று மறுத்து விட முடியுமா? தங்கள் வகுப்புகளுக்கான பாடங்களை, கற்பித்தல் முறையை உருவாக்கிக் கொள்வதற்கான ஆசிரியர்களின் உரிமையை மாணவர்களைக் காரணம் காட்டி பறிக்க முடியாது என்றாலும் அவ்வாறான  திசையை நோக்கிய அரசாங்கத்தின் நகர்வை எதிர்க்கின்ற துணிவுடன் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களால் இருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான பதில் நமக்கு நன்றாகவே தெரியும்.

மாணவர்களின் பெயரால் கொண்டு வரப்படும் ஜனரஞ்சகத்தை எதிர்க்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் என்றால் அவை வெறுமனே மாணவர்களை மட்டுமே குறிப்பதாக இருக்கவில்லை. அவை ஆசிரியர்களுக்கான இடமாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஆசிரியர்கள் அவசியம் தேவைப்படுகிறார்கள். அவர்கள் வெறுமனே அறிவை வழங்கி வருபவர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களுக்கென்று மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அறிவு ஆதாரங்களையும் அறிமுகப்படுத்தும் பொறுப்பும் இருக்கிறது. அவர்கள் அறிவை உருவாக்குபவர்களாகவும் இருக்கின்றனர். கல்வி வளாகங்களில் நடக்கின்ற உரையாடல்களின் மூலம் பல தலைமுறை மாணவர்கள், சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஒருவர் சிந்திக்கக் கற்றுக் கொள்கிறார். சிந்தனை என்பது தனிமையில் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதில்லை.

நமது கல்வி வளாகங்களில் ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு வகையான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். தங்களுடன் உலகைப் பார்ப்பதற்கான பல்வேறு வழிகளை அவர்கள் கொண்டு வருகிறார்கள். வேறுபாடுகளுடனும், உடன்பாடின்மையுடனும் இருப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு அங்கே இருக்க வேண்டும். அதுவே தன்னை ஜனநாயகப்படுத்திக் கொள்ள உதவும்.

இந்தியச்சூழலில் சமூகத்தை ஜனநாயகப்படுத்த உதவுவதில் பல்கலைக்கழகங்களுக்கான மற்றொரு முக்கிய பங்கும் இருக்கிறது. கல்வி வளாகங்களே தங்களுடைய சமூகங்களில் இருக்கின்ற தளைகளிலிருந்து விடுபடுவதற்கான சிறிதளவு சுதந்திரத்தை இன்றைய இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றன. இதுபோன்ற வளாகங்கள் இல்லாமல் பிஞ்ச்ரா டோட் (கூண்டுகளை உடைப்போம்) போன்ற பெண்ணிய அமைப்புகளைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதை உறுதிபடச் சொல்ல முடியும்.

ஏற்கனவே சமைத்து வைத்த பாடத்திட்டத்தைச் செயல்படுத்துவது எனும்  அளவிற்கு பல்கலைக்கழகங்களுக்கான பங்கைக் குறைப்பது அனைத்து சமூகங்களிலும் பல்கலைக்கழகங்களுக்கென்று இருக்கின்ற பெரிய, மிக முக்கியமான நோக்கத்தைப் புறக்கணிப்பதாகவே இருக்கும். பல்கலைக்கழகங்கள் அந்தந்த சமூகங்களின் விமர்சகர்களாகவும் பணியாற்றி வருகின்றன. வரலாற்று ரீதியாக அரசியல் குடியுரிமையை வடிவமைக்கும் இடங்களாகவே இந்தியப் பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற சிந்தனைகளை ஓரம்கட்டுவதன் மூலமும், மாணவர்களை வெறுமனே அறிவை நுகர்வோராகப் பார்ப்பதன் மூலமும் புதிய முயற்சிகளில் இறங்குவதற்குத் தயாராக உள்ள உயர்கல்வியின் தாக்கத்தைப் பலவீனப்படுத்திடவே கொள்கை வகுப்பாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே கல்வி வளாகங்களை ஒரு தொல்லை என்று பார்த்து வருகின்ற இந்த அரசாங்கத்தின் இதுபோன்ற புதிய நடவடிக்கைகள் எவரையும்  ஆச்சரியப்படுத்தப் போவதில்லை. தன்னுடைய மாணவர் பிரிவைக் கட்டவிழ்த்து விட்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் அவர்களைத் தண்டிக்கின்ற வகையிலான  நடவடிக்கைகளைப் பயன்படுத்திய அவர்கள் கல்வி வளாகங்களை வெறும் இடங்களாக மாற்றியமைத்திருக்கின்றனர். வகுப்பறைகள் மீதுள்ள தங்களுடைய கட்டுப்பாட்டை இன்னும் கடுமையாக்குவதற்கான மற்றொரு நடவடிக்கையாகவே இப்போதைய அறிவிப்பு இருக்கிறது.

இந்த அறிவிப்பு உயர்கல்வியில் செலவுகளைக் குறைப்பதற்கான தந்திரமாக இருக்கிறது என்று ஆசிரியர்களிடம் இருக்கின்ற அச்சம் உண்மையாகவே இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக உயர்கல்விக்கான பட்ஜெட் படிப்படியாக குறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மாணவர்களை விடுவிக்கிறோம் என்ற பெயரில் வருகின்ற இந்தப் புதிய திட்டம் பெரும்பாலும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வழியாகவே இருக்கிறது. இந்த முன்மொழிவு இந்தியாவில் நிலவி வருகின்ற மிகப்பெரிய டிஜிட்டல் இடைவெளியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நிச்சயமாக இது ஏழை மாணவர்கள், எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை மிகப் பெரிய அளவிலே தண்டிப்பதாகவே இருக்கப் போகிறது.

சுதந்திரம் குறித்த கலாச்சாரம் இந்திய பல்கலைக்கழகத் தலைமைகளிடம் ஒருபோதும் இருப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். சான் ஜோஸ் பல்கலைக்கழகத்தின் எதிர்வினையைப் போல இந்தியாவில் பொது பல்கலைக்கழகம் ஒன்றிடமிருந்தும் எதிர்வினை வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்றை அடைய விரும்புவதாகவே இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவைப் போன்றதொரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு ‘சமம்’ என்ற பெயரில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான படிப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க முயல்கிறது. இதுபோன்ற சமம் என்ற சிந்தனைக்கு இந்திய சமுதாயத்தின் அதிகாரம் மிக்க பிரிவினரிடையே மிகப் பெரிய ஈர்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. மிக அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழு தயாரித்த பாடத்திட்டத்தை ஏற்குமாறு பல்கலைக்கழகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அந்த அறிவிப்பு தங்களுக்கு விருப்பமான இருபது சதவீத உள்ளடக்கத்தை பல்கலைக்கழகங்கள் வைத்துக் கொள்ளலாம் என்ற தாராள மனதுடன் இருந்தது.

நமது பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக மாற்றிட நாம் விரும்புகிறோம். ஆனால் இதுபோறு கலப்பு கற்பித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது நிச்சயமாக சர்வதேச கல்வி சமூகத்தின் பார்வையில் நமக்கான தகைமையைச் சிறுமைப்படுத்தவே செய்யும்.

https://indianexpress.com/article/opinion/columns/ugc-online-classes-blended-teaching-covid-7334748/

நன்றி:  இந்தியன் எக்ஸ்பிரஸ்