புத்தகங்களைப் பரிசாகத் தரலாம் என்பது எப்போது ட்ரெண்டிங் ஆனது? இதைப் படிக்கும் நண்பர்கள் புத்தகங்களைப் பரிசாகத் தரலாம் என்பதை தங்களது எத்தனாவது வயதில் அறிந்து கொண்டீர்கள்? நான் எனது 15வது வயதில், 1980ல் அறிந்து கொண்டேன். ஏதோ அறிந்து கொண்டு நான் யாருக்கோ பரிசாகத் தந்தேன் என்று நினைக்க வேண்டாம். என் உயிர் நண்பன் கண்ணன் என் பிறந்த நாளுக்கு மு.மேத்தாவின் “கண்ணீர் பூக்கள்” தொகுப்பைப் ப்ரிசாகத் தந்ததன் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

அதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்புதான் விகடனின் பொன்விழா. அதில் நாவல் போட்டியில் மேத்தா சோழநிலாவிற்காகப் பரிசு வாங்கியிருந்தார். நானும் அந்தத் தொடர்கதையைப் படித்திருக்கிறேன். ஆனால் கவிஞர். மேத்தாவை கண்ணன்தான் அறிமுகம் செய்தான். அன்றிலிருந்து இன்றுவரை, (நாற்பது ஆண்டுகள் ஆகப்போகிறது) வருடாவருடம் கண்ணன் பரிசாக புத்தகம் தருகிறான். என் நூலகத்தின் முதல் புத்தகம் கண்ணன் தந்த கண்ணீர் பூக்கள். இன்று நூலகத்தை தூசி தட்டி அடுக்கும் போது கண்ணன் தந்த பரிசுப் புத்தகங்களை எண்ணினேன். சரியாக நாற்பது இருக்கும் என்று நீங்கள் எண்ணினால் தவறு ! எண்பது இருக்கிறது !

நண்பருடன் எழுத்தாளர்.சுப்பாராவ்

கண்ணனுக்கு வேலை கிடைக்கும் வரை பிறந்த நாளுக்கு மட்டும் தந்து கொண்டிருந்தான். பிறகு ஏதேனும் ஒரு காரணம் சொல்லிக் கொண்டு வாங்கித் தர ஆரம்பித்தான். அந்தக் காரணத்தை அப்படியே முதல் பக்கத்தில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தருவான். என் பூணூலுக்கு புத்தகம் தந்தான். சரி… பின்னர் என் அண்ணன் பையனின் பூணூலுக்கு வந்த போது, சந்துவின் பூணூலுக்கு வந்ததன் நினைவாக என்று சுஜாதாவின் பாரதி இருந்த வீடு புத்தகத்தைத் தந்தான். என் கல்யாணத்திற்கு சொல்லவே வேண்டாம். ஒரு அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்கள் ! வார் அண்ட் பீஸ், மெர்க்குரிப்பூக்கள், அடிமைகள், சின்ஸ் ஆஃப் பிலிப் ஃபிளெமிங் என்ற இர்விங் வாலஸின் முதல் நாவல் – இதன் பிரதி இர்விங் வாலஸ் வீட்டிலேயே இருக்குமோ, இருக்காதோ – இரட்டையர்கள் என்று ஒரு சோவியத் நாவல் என்று ஒரு பெரிய கதம்பமாக…  அதில் பழைய புத்தக்க்கடையில் வாங்கிய புத்தகங்களும் உண்டு.

டிசம்பரில் வரும் என் பிறந்த நாளுக்கு ஆகஸ்ட் செப்டம்பரிலிருந்து தேர்வு செய்ய ஆரம்பித்து விடுவான். நோபல் பரிசுக்குக் கூட இத்தனை மெனக்கெட மாட்டார்கள். ஐந்தாறு புத்தகங்களை தேர்வு செய்து அதில் இரண்டை ஷார்ட் லிஸ்ட் செய்து பின் அதில் ஒன்று தேர்வாகும். அதற்கு பல கண்டிஷன்கள் வைத்திருப்பான். நான் படிக்காததாக இருக்க வேண்டும் என்பது முதலாவது. மற்றபடி, எனக்கு ஒரு புதிய படைப்பாளியை அறிமுகம் செய்ய வேண்டும்… நான் கேள்விப்படாத ஒரு அபூர்வ புத்தகத்தைத் தர வேண்டும் என்று பல துணை கண்டிஷன்கள். அப்படித்தான் நானும் பல புதியவர்களை, புதிய புத்தகங்களைத் தெரிந்து கொண்டேன். அவன் தந்த புத்தகங்களை இப்போது புரட்டிப் பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது ! என்னவொரு அற்புதமான கலவை !

ஒரு முறை சிட்னி ஷெல்டனின் டெல் மீ யுவர் ட்ரீம்ஸ் என்றால் மறுமுறை க.சீ.சிவகுமாரின் கன்னிவாடி ! கன்னிவாடி தரப்பட்ட ஆண்டு என்னை திகைக்க வைக்கிறது – 2001 பிறந்த நாளுக்கு! எக்பர்ட் சச்சிதானந்தத்தின் நுகம், அழகிய பெரியவனின் தீட்டு, கண்மணி குணசேகரனின் கோரை, லட்சுமணப் பெருமாளின் பாலகாண்டம், சயந்தனின் ஆறாவடு, ரொமீலா தாப்பரின் Past and prejudice, ஹெர்மன் ஹெஸ்ஸேயின் Siddhartha, பி.ஏ.கிருஷ்ணனின் அக்கிரஹாரத்தில் பெரியார், இரா.முருகனின் மூன்று விரல், பொன்னீலனின் ஜீவா என்றொரு மானுடன், சு.தமிழ்ச்செல்வியின் கீதாரி என்று விதம் விதமாய் விதம் விதமாய்…

அவன் தந்த நுண்வெளிக் கிரணங்கள், பூமிக்குள் ஓடுகிறது நதி மூலமாகத் தான் சு.வேணுகோபால் அறிமுகமானார். அன்னா கரீனினா அறிமுகமானாள். டி.கே.சண்முகம் தனது நாடக வாழ்க்கையை எனக்குச் சொன்னார். சுஜாதா மிஸ்.தமிழ்த்தாயே நமஸ்காரம் என்றார். இரண்டாம் ஜாமங்களின் கதை வழியே சல்மாவை அறிந்து கொண்டேன். அஸ்ஸாமில் அவன் பணியாற்றிய காலங்களில் அவன் அறிமுகப் படுத்திய பாபேந்திரநாத் சைக்கியா, துருபா ஹஸாரிகாவிலிருந்து எண்ணற்ற வடகிழக்குப் படைப்பாளிகள் மூலம்தான் நான் லைபாக்லை ஆண்ட்டி என்ற வடகிழக்கு இந்தியச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்றை போடமுடிந்தது. திடீரென்று சங்கீதப் பெருங்கடல் பாலமுரளி கிருஷ்ணா என்ற புத்தகம் ஒரு வருட பிறந்த நாளுக்கு வரும். அடுத்த ஆண்டு புராதன இந்தியா எனும் பழைய 56 தேசங்கள் என்று பி.வி.ஜகதீச ஐயரின் புத்தகம் வரும். அடுத்த வருடம் டான் பிரவுனின் இன்ஃபர்னோ வரும். பிறகு ஒரு வருடம் வீணையின் குரல் – எஸ்.பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு வந்து நிற்கும்!

காரணமே இல்லாமல் புத்தகங்கள் வாங்கித் தருவான் என்று சொல்ல வந்தவன் அதிலிருந்து எங்கோ போய்விட்டேன். வங்கி அதிகாரியாக அவன் சில ஆண்டுகள் டெல்லியிலும், பின் அஸ்ஸாமிலும் பணியாற்றினான். அப்போது பெரிய இடைவெளி விட்டு மதுரை வரும் போது, மதுரைக்கு நீண்ட நாள் கழித்து வருவதன் நினைவாக என்று புத்தகங்கள் தருவான். முத்துலிங்கத்தின் வியத்தலும் இலமேயும், ஜான் சுந்தரின் நகலிசைக் கலைஞனும் அவன் நீண்ட இடைவெளி விட்டு மதுரை வந்ததற்காக எனக்குக் கிடைத்தவை. அவன் கல்யாணத்திற்குப் போனபோது, டிரெஸ் பட்சணம், எல்லாம் வைத்துக் கொடுக்கும் போது, என் கல்யாணத்தின் நினைவாக என்று அலெக்சாந்தர் கிரீன் எழுதிய செந்நிறக் கடற்பாய்கள் என்ற சோவியத் நாவலைத் தந்தான்.

1990களில் நான் பதவி உயர்வில் பழனியில் வேலை பார்க்க நேர்ந்தபோது, என் பழனி அலுவலகத்தை வந்து பார்த்துவிட்டு அதன் நினைவாக என்று ஒரு புத்தகம் தந்தான். அது இப்போது தேடினால் கிடைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவகோட்டை அருகே பேராமங்கலம் என்ற கிராமத்தில் அவர்களுக்கு பூர்விக நிலம் இருந்தது. சமீபத்தில் அதை விற்றார்கள். அதற்காக தொண்டி பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு நானும் அவனுடன் போயிருந்தேன். பெரும் மன வருத்தத்துடன் பத்திர ஆபீசில் கையெழுத்துப் போட்டு நிலத்தைத தந்துவிட்டு வந்தான். வெளியே வந்து டீ சாப்பிடும் போது, ஜோல்னா பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து பேராமங்கலம் நிலத்தை விற்றதன் நினைவாக என்று தேதியிட்டு கையெழுத்திட்டுக் கொடுத்ததை என்னவென்று சொல்வது? முன்னரே குறிப்பிட்ட சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை என்னிடம் அப்படித்தான் வந்தது.

கண்ணனைப் போல் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் தராவிட்டாலும், புத்தகங்கள் மீது உள்ள என் பிரியத்திற்காக எனக்கு புத்தகங்கள் வாங்கித் தந்த நண்பர்கள் ஏராளமானோர் உண்டு. தன் மகளை பிலானியில் சேர்க்கப் போன எனது சக ஊழியை விஜயலட்சுமி என்ற ஆன்ட்டி டெல்லி ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்டால்ல பாத்தேன். ஒனக்கு இர்விங் வாலஸ்னா ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன் என்று செவன்த் சீக்ரட் ஐ நீட்டினார். இது நடந்தது 1995 வாக்கில்!

இராமலிங்கம் என்றொரு தோழர். நான்காம் பிரிவு ஊழியராகச் சேர்ந்து சங்கத்திற்காக பல வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளைச் சந்தித்தவர். இன்று பணி ஓய்வு பெற்றுவிட்டார். அவரது குழந்தைகள் லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஷாங்காய் என்று பல நாடுகளில் மாறி மாறி வசிக்கிறார்கள். இவரும் அந்த நாடுகள் அனைத்திற்கும் போய்விட்டார். போய் வரும்போது என்ன ஏது என்று தெரியாமல் ஏதேனும் புத்தகத்தை வாங்கி வந்துவிடுவார். ஜேம்ஸ் பேட்டர்சன், வின்ஸ் ஃபிளின் என்று கடைக்காரரிடம் சொல்லி லேட்டஸ்ட் திரில்லராக வாங்கி வருவார். திடீரென்று சிவகங்கைச் சீமை வசனப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்து கண்ணதாசன் எப்படி எழுதியிருக்கான்னு பாருங்க என்று திகைப்பில் ஆழ்த்துவார்.

இன்று என் நூலகத்தை சரிசெய்து அடுக்கி வைக்கும் போது பரிசாக வந்தவைகளை தனியாக வைக்க ஆரம்பித்தேன். அந்த வரிசை பல ஆச்சரியங்களை, சந்தோஷங்களைத் தந்தது..கண்ணனுக்கு அடுத்தபடியாக உன் உயிர்தோழன் ரவி தி.ஜாவின் கமலம், மாலனின் ஜனகணமன, இர்விங் வாலஸின் செவன் மினிட்ஸ், சண்டே ஜெண்டில்மேன், ஞானக்கூத்தனின் மீண்டும் அவர்கள் என்று நிறையக் கொடுத்திருக்கிறான். உண்மையில், 1996ல் ரவி ராணிப்பேட்டைக்கு வேலைக்குச் செல்லும் வரை எனக்கான புத்தக வேட்டையில் கண்ணனும், ரவியும் சேர்ந்தேதான் ஈடுபட்டார்கள்.  சமயம் கடந்த தமிழ், காவல் கோட்டம், தஸ்தாயேவ்ஸ்கியின் சூதாடி ஆகியவற்றை சு.வெங்கடேசன் தந்திருக்கிறார். நான் கலைஇலக்கிய பெருமன்றத்தின் மொழிபெயர்ப்புக்கான தொ.மு.சி.ரகுநாதன் விருது வாங்கியதற்காக அருணாக்கா பாபர் நாமா வாங்கித் தந்திருக்கிறார்.  புத்தகங்களோடு புத்தாண்டு என்ற சமீபத்திய ட்ரெண்டில் என் அன்பு ஜெயஸ்ரீ அக்காவிடமிருந்து ஷானின் வெட்டாட்டம் வந்திருக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து அன்புத் தோழி ஹேமா பா.வெங்கடேசனின் பாகீரதியின் மதியத்தை அனுப்பி இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார். தோழி சரஸ்வதி காயத்ரி கமழ்ச்சி, அந்தரப்பூ என்று வண்ணதாசனாகத் தான் பரிசளிப்பார். தன் முதல் இந்திய ரூபாய் சம்பளத்தில் ரகுநாத் எழுதிய துரியோதனா என்ற மறுவாசிப்பு நாவலையும், தன் முதல் யூரோ சம்பளத்தில் கஸார்களின் இதிகாசத்தையும் வாங்கித் தந்திருக்கிறாள் என் அன்பு மகள் வர்ஷா. வீட்டு மேனேஜர் காயத்ரி ஒரு பிறந்த நாளுக்கு கல்கியின் வாழ்க்கை வரலாறான பொன்னியின் புதல்வரை வாங்கித் தந்திருக்கிறாள். மாப்பிள்ளை ஸ்ரீராம் உலகின் மிக அழகான புத்தகக் கடைகளில் முதன்மையான கடையாகிய பாரீஸின் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனிக்கு அழைத்துச் சென்று, வில்லியம் டார்லிம்ப்பிளின் பிரம் த ஹோலி மௌண்ட்டனை வாங்கித் தந்தது மறக்க முடியாத ஒரு இனிய அனுபவம்.

நண்பர்களைப் பெற்றிருப்பது ஆனந்தம் !

புத்தகம் வாங்கித் தரும் நண்பர்களைப் பெற்றிருப்பது பேரானந்தம்!

– நன்றி எழுத்தாளர்.சுப்பாராவ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *