ஜனநேசன்  எழுதிய பூக்கும் தழும்பு - சிறுகதை (tamil sirukadhai) | Blooming scar a tamil Short story - book day - https://bookday.in/

பூக்கும் தழும்பு – சிறுகதை

பூக்கும் தழும்பு – சிறுகதை

அமுதமுல்லை வீட்டுக்குள் பதற்றத்தோடு ஓடிவந்தாள். “பாரி, பக்கத்துவீட்டு முருகனை அவுங்கப்பா அடிக்கிறாருடா. பாவம் கதறி அழுகிறான் . அவுங்கம்மா தடுக்குறாங்க, அவுங்களையும் தள்ளிட்டு, ‘அதுவேணும் , இதுவேணுமுனு கேப்பியா, நான் முடிஞ்சப்பதான் வாங்கித் தருவேன். அதுக்குமுன்னால கேப்பியா‘னு கம்பால அடிக்கிறாருடா. முருகன் பாவம்டா . நீ போயி பாரேன் ; அவரு குடிச்சிருப்பாரு போலிருக்கு “. “நான் போகமாட்டேன்ப்பா .அவன் பாவம். நமக்கு தீபாவளிடிரஸ் எடுத்தாச்சு; நாளைக்கு பட்டாசு எல்லாம் எங்கப்பா வாங்கித் தருவாருன்னு அவங்கிட்ட சொன்னேன். அவன் அவுங்கப்பாகிட்ட கேட்டிருப்பான் போலிருக்கு. அதான் அவுங்கப்பா அடிக்கிறாருப்புல.
சாரிக்கா. நான் அவங்கிட்ட சொல்லியிருக்கக்கூடாதுல்ல.  “நம்மப்பா நல்லவரு; நம்மலை அடிக்கிறதில்லை ; திட்டுறதுகூட இல்லை ; கேட்கிறதை வாங்கித் தர்றாரு. ஆனா அம்மாவை மட்டும் அப்பப்பத் திட்டுறாரு ; ஏன்னு தெரியலை . அம்மாகிட்டத்தான் கேட்கணும் “

அம்மா குறுக்கிட்டாள், “என்னடி ரெண்டுபேரும் என்னைப்பத்தி பேசுறீங்க , என்ன விசயம்?” “ஒண்ணுமில்லைம்மா . பக்கத்துவீட்டு முருகன் தீபாவளிடிரஸ் கேட்டதுக்கு , அவுங்கப்பா அவனை அடிக்கிறாரு . நம்மப்பா எங்களை அடிக்கிறதில்லை. கேட்கிறதை வாங்கித்தர்றார் .

ஆனா உன்னை மட்டும் திட்டுறாரு ஏன்மா “ அம்மா நாணத்தோடு சிரித்தாள். பாரி கேட்டான்,“ஏம்மா சிரிக்கிறே , சொல்லிட்டு சிரி ”. அம்மா மௌனமாகத் தலையைச் சொறிந்தாள் . தங்களது தாம்பத்தியத்தை பிள்ளைகளிடம் எப்படி சொல்லமுடியும் . “ யம்மா , சொல்லும்மா. எதையோ மறைக்கிறே.” என்று இருவரும் அம்மாவை முற்றுகையிட்டு அசையாமல் பிடித்துக் கொண்டார்கள். பெருமூச்சு விட்டு அம்மா
சொன்னாள்.

முருகனைப் போல உங்கப்பாவும் உங்க தாத்தாகிட்ட நிறைய அடி வாங்கியிருக்கிறாராம். உங்கப்பா பாரியாட்டம் ஆறாவது படிக்கையில் ,தெருப்பசங்களோடு சேர்ந்து கிட்டிப்புள், கோலிக்குண்டு, பம்பரமுன்னு விளையாடப் போயிருவாராம். அவரைத் தேடிப் போய்த்தான் உங்க பாட்டி , சாப்பிடக் கூப்பிட்டு வருவாராம்.

ஒரு ஞாயித்துக்கிழமை உங்க தாத்தா உங்கப்பாவைத் தேடிப் போயிருக்கிறார். கிட்டிப்புள் விளையாட்டில் ஜெயித்ததுக்காக , தாத்த பையன் உங்கப்பாவை தூக்கிச் சுமந்து நடந்து கொண்டிருந்தானாம். உங்க தாத்தா
போய் , உங்கப்பா முதுகில் அடித்து கீழே இறங்கச் செய்து வீட்டுக்கு கூட்டிவந்தார்.

‘விளையாட்டுக்கு கூட யாரையும் நாம சுமக்கக்கூடாது. நாமலும் யார்தோள் மீதும் ஏறக்கூடாது’ என்று அழைத்துவந்தார். முதலில் சாப்பிடச் செய்தார். பிறகு , ‘ ஏன்டா, வீட்டில உட்கார்ந்து படிக்கிறதை விட்டுட்டு , தெருபசங்களோட சேர்ந்து வெயில்ல சுத்தாதேன்னு , எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். கேக்கமாட்டேங்கிற ;
தினமும் இப்படித்தான் செய்யிறியாமில்ல ‘ என்று பேசிக்கொண்டே இருந்தவர், அடுப்பு நெருப்பில் காயவைத்திருந்த சிக்கெடுப்பானை எடுத்து ,’

இந்தக்கால் தானே தெருவுக்கு ஓடுறது’ன்னு வலது கெண்டைக்காலில் சூடு வைத்துவிட்டார் . உங்கப்பா புரண்டு கதறி அழுகிறதைப் பார்த்து உங்க தாத்தாவுக்கே கண்ணீர் வந்துருச்சாம். சூடு வைத்த இடத்தில் தேங்காய் எண்ணெய்யை கோழி இறகில தொட்டு, நோகாம இதமா தடவிவிட்டாராம். உங்கப்பா அழுதுகிட்டே தூங்கிட்டாராம்.

சாயந்திரம் நாலுமணிக்கு உங்கப்பா எழுந்திருச்சதும் முகங் கழுவச் சொல்லி , தாத்தா கடைவீதியில் சாந்திபவனுக்கு கூட்டிப்போய் ஜாங்கிரியும், பகோடாவும், வனிலா ஐஸ்க்ரீமும் சாப்பிடச் செய்து வீட்டுக்கு கூட்டிவந்தாராம். ”

முல்லை; “ யம்மாடி, தாத்தா பயங்கர கண்டிப்பாவும், பாசமாகவும் இருப்பார் போலிருக்கு“.

பாரி; “ஏம்மா, அதக்கப்புறம் அப்பா தெருவுல போய் பசங்களோட விளையாடலையா. “ ஸ்கூல் கிரவுண்டுல போய் விளையாடுவாராம்.”

“இதனால்தான் அப்பா எங்களை ஸ்கூல்ல எல்லா ஸ்போர்ட்ஸ்லும் கலந்துக்கச் சொல்றாரோ!“ ஆமாம், விளையாட்டில் கலந்துகொண்டால்தான் உடலும், மனசும் ஆரோக்கியமா இருக்குமுன்னு அடிக்கடி சொல்லுவாரு.

கேளுங்க இன்னொரு சம்பவமும் இருக்கு. ஒரு தீபாவளி சமயம் வீட்டில ஒரு ரூபாய் எடுத்துட்டுப்போய் லட்சுமி வெடியும், சீனிவெடிச் சரமும் வாங்கிவந்து வீட்டு முன்னால தெருப்பசங்களோட சேர்ந்து வெடிச்சாராம் .இதை உங்கபாட்டி உங்க தாத்தாகிட்ட சொல்லிட்டாங்க .’ இந்தக் கைதானே சொல்லாம காசு எடுத்துச்சுன்னு அடிஸ்கேல் எடுத்து வலது கையில் அடிச்சாராம். உங்கப்பாவுக்கு வலதுகை மணிக்கட்டு வீங்கி ,துடியா துடிச்சாராம். இதைப் பார்த்ததும் தாத்தா கண்ணீர் பொங்க தனது வலதுகையை தரையில் அறைந்து கொண்டாராம். பாட்டி அவரைத் தடுத்து சமாதானம் பண்ணியிருக்கிறார் .’

இனிமேல் இப்படி செய்யமாட்டேன்ப்பா ‘ என்று உங்கப்பா சொல்லி அழுதாராம் . இதிலிருந்து உங்க தாத்தா உங்கப்பாவை அடிக்கிறதில்லையாம். வாய் வார்த்தையில் கண்டிப்பதோடு சரி. உங்கப்பாவும் அடிவாங்கிறளவு சேட்டை எதுவும் பண்ணலையாம். இப்படி கட்டுப்பாட்டோட வளர்ந்ததுனாலதான், அவருகிட்ட கெட்ட பழக்கம் எதுவுமில்லை.

அப்பா சம்பளத்தில் பாதிக்குமேல உங்களுக்குத்தான் செலவு செய்யிறார் . உங்கப்பா உங்களை அடிக்கிறதில்லை ; திட்டுறதில்லை. அப்பப்ப பார்வையால் முறைப்பார். இது புரிஞ்சு நீங்க நல்லவிதமா படிச்சு நல்லபேரு எடுக்கணும்.”
“ அம்மா, அப்பாவுக்கு இன்னும் அந்த சூடுதழும்பு கால்ல இருக்காம்மா “ முல்லை கேட்டாள்.

“இருக்கு . ஒருநாள் உங்கப்பா எண்ணெய் தேய்ச்சு குளிச்சப்ப என்கிட்டே காமிச்சு எல்லாத்தையும் சொன்னார். அந்தத் தழும்பைப் பார்க்கும்போதெல்லாம் , தடவி பெருமூச்சு விடுவார். உங்க தாத்தா உங்கப்பாவுக்கு விட்டுட்டுப்போன நினைவுத் தழும்பு. இந்த தழும்புதான் என்னோட பேசுது ; வழிகாட்டுதுன்னு சொல்லுவார். “

“ முல்லை, நம்ம அப்பா கிரேட்! . நாம இனி தேவையில்லாம அதுவேணும், இதுவேணுமுன்னு
தொல்லை தரக்கூடாது , சரியா “

“டேய், நீ சொல்றியா…. நீ முதல்ல சொல்றதுமாதிரி நடந்துக்கப் பாரு.”

“சரி, முல்லை ரெண்டுபேரும் நல்லபடியா நடந்துக்குவோம் “ அம்மா தலையிட்டாள் ;

“சரி, நீங்க ரெண்டுபேரும் ஸ்நாக்ஸ் தின்னுட்டு, ஹோம்வர்க் செஞ்சுட்டு படிங்க. நான் சொன்னதெல்லாம் அப்பாகிட்டே சொல்லிறாதீங்க. “

அப்பா வாங்கி வந்திருந்த பீட்சாவை தின்று, போர்ன்விட்டா குடித்துவிட்டு வீட்டுப்
பாடத்தில் மூழ்கினர்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அப்பா உறங்கிக் கொண்டிருந்தார் . ஏழுமணிக்கு எழுந்த முல்லை, பாரியை எழுப்பி அவனது காதில் கிசுகிசுத்தாள். பாரி உற்சாகமாக எழுந்தான். இருவரும் பல்துலக்கி வந்தார்கள். அம்மாவிடம் போர்ன்விட்டா கலக்கச் சொன்னார்கள். பாரி பூனைநடையில் அப்பாவின் படுக்கை அறைக்குள் நுழைந்தான். அமுதமுல்லை பின்தொடர்ந்தாள்.

அப்பா இடப்பக்கமாக ஒருசாய்த்துப் படுத்திருந்தார். பாரி மெல்ல படுக்கையில் அமர்ந்தான். வலதுகாலை மூடியிருந்த லுங்கியை மெல்ல மேலேற்றினான். வலது கெண்டைக்காலில் கரும்பழுப்பு நிறத்தில் சிறு பூரான் ஸ்டிக்கர் ஒட்டிய மாதிரி தழும்பு இருந்தது. பாரி மெதுவாக நாலுவிரலால் தடவினான். முல்லையும் கைகளைக் கொண்டு போனாள்.

இதற்கிடையில் திடுக்கிட்டு அப்பா எழுந்து லுங்கியால் தழும்பை மூடினார் . இருவரும் இடமும் வலமுமாய் அவரை அணைத்து , தொண்டை தழுதழுக்க , “ அப்பா இனிமேல், தேவையில்லாமல் தொல்லை தரமாட்டோம். நல்லா படிச்சு உங்களுக்கு பெருமை செய்வோம்ப்பா!. “ அப்பாவின் கண்களிலும்
கண்ணீர் ததும்பியது .

 எழுதியவர் :

ஜனநேசன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. மகாலிங்கம் இரெத்தினவேலு

    கதை அருமையாக உள்ளது. ஆனாலும் இன்றும் வன்முறையைக் கையாண்டு குழந்தைகளைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியாது. ஒரு கதைக்காக இந்த உணர்வு மாற்றம் சிறப்பாக உள்ளது.

  2. L.Bala

    பூக்கும் தழும்பு..
    எழுத்தாளர்: திரு ஜனநேசன் அவர்கள்
    இக்கதையானது புக் டே.இன் என்ற இணையத் தளத்தில் வெளிவந்துள்ளது. படிப்பவர் அனைவரின் மனதையும் கவரும் மற்றும் மனதைத் தொடும் என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் இந்தக் கதையில் வரும் நிகழ்வைக் கடக்காமல் வந்திருக்க வாய்ப்பே கிடையாது. அதனால்தான் சொல்கிறேன் கதையைப் படிக்கும் அத்துணை அன்பர்களின் நெஞ்சையும் நெகிழவைக்கும் விதமாகப் பல சம்பவங்களை இங்கு எடுத்துக் கூறியிருப்பார் திரு ஜனநேசன் அவர்கள். அப்படி என்ன கூறியிருக்கிறார் இந்தக் குறுங்கதையில் என்று பார்த்தால்.

    வேறு ஒன்றும் இல்லை, சிறு பிராயத்திலிருந்த சமயத்தில் அனைவரும் விளையாடியிருப்போம். அம்மா, அப்பாவிடம் அடம்பிடித்து நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொண்டிருப்போம். அந்தத் தருணத்தில் நமக்குப் பெற்றவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. நமக்குத் தேவை விளையாடு பொருள், புதிய சட்டை, டிரௌஸர். பண்டிகை என்று வந்தால் போதும், அக்கம் பக்கத்தில் இருக்கும் நண்பர்களின் வீட்டில் எப்போது வாங்குவார்கள் என்று யோசித்து, அதைக்காட்டிலும் ஒரு நாளாவது முன்னதாக நமது தந்தை நமக்குப் பலகாரம், பட்டாசு எல்லாம் வாங்கித் தரவேண்டும் என்று தத்தம் மனதில் எண்ணிக்கொண்டு அதன்பொருட்டு அம்மாவையும் அப்பாவையும் ஒரு வாரம் முன்னதாகவே அவர்களைத் தொந்தரவு செய்துகொண்டு இருப்பது வழக்கமாக ஆகிவிட்டது. இன்றும் தொன்றுதொட்டு இதைச் சிறுவர்கள் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள்.

    இதில் எழுத்தாளர் என்ன அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் என்றால், பிள்ளைகள் அழுவதானாலோ, அடம்பிடிப்பதானாலோ பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கித் தருவது குற்றம் என்று கூறவில்லை. அதே பிள்ளைகள் அவர்களது பெற்றோரின் நிலையை அறியவேண்டும். பிள்ளைகள் பார்க்கிறார்கள் அல்லவா அக்கம் பக்கத்தில் அவர்கள் இவ்வளவு பட்டாசு வெடித்தார்கள், இந்த மாதிரி துணிமணிகளை எல்லாம் போட்டுக்கொண்டார்கள் என்று கேள்விப்பட்டு. அதே குழந்தைகள் தங்களது அப்பாவிடம் நீயும் அதைப்போலவே எங்களுக்கு வாங்கிக் கொடு என்று கேட்கிறார்களே அந்தக் குழந்தைகளுக்கு. அவர்களின் பெற்றோரின் நிலைமையைப் புரிந்துகொண்டார்கள் என்றால் மற்றும் அவர்கள் சந்தோசமாக மனம் உகந்து பெற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டார்கள் என்றால் மிகவும் சிறந்தது. இவர்கள் மாறுவதற்கு முக்கியக் காரணம் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாயும் தந்தையுமே. அவர்களுக்குத் தங்களின் நிலையைச் சொல்லி வளர்க்க வேண்டும். இதில் எங்குத் தவறு நடக்கிறது என்று பார்த்தோமேயானால். பெரும்பாலும் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்து அந்தக் குழந்தைகளின் அம்மாவோ, அப்பாவோ கடனை வாங்கித் தங்களின் பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தருகிறார்கள். அப்படிக் கொடுக்கும் போது சிறு பிள்ளைகளுக்கு என்ன எண்ணம் தோன்றும் என்றால் என் தந்தை, என் அம்மா நாம் என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்கள் என்ற தப்பான கண்ணோட்டத்தில் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அழகாகவும், ஆழமாகவும் மற்றும் சிந்திக்கக் கூடிய வகையில் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன் அவர்கள். வாழ்த்துக்கள் சார்.
    -பாலமுருகன்.லோ-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *