புத்தகம்: எதிர்காலத்தை – உரிமைகளைப் பாதுகாப்போம் | எஸ். விஜயன், மா. சிவக்குமார்எதிர்காலத்தை – உரிமைகளைப்
பாதுகாப்போம்

எஸ். விஜயன்
மா. சிவக்குமார்

அறிமுகம்

தமிழ்நாடு ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது.

 • முன்னேற்றத்துக்கும் பிற்போக்குத்தனத்துக்கும் இடையேயான மோதலில்
 • சமத்துவத்துக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் இடையேயான மோதலில்
 • ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையேயான போராட்டத்தில்
 • சமூக நீதிக்கும் சாதிய கட்டமைப்புக்கும் இடையேயான மோதலில்
  தமிழகத்தின் 8 கோடி மக்களின் எதிர்காலம் எந்தத் திசையில் நகரப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் உள்ளோம்.
  ஆம், தமிழக சட்டசபையின் 234 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக, வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல், கடந்த 50 ஆண்டுகளாக இருந்தது போல, எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா முதல்வரா அல்லது கருணாநிதி முதல்வரா என்பதை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை.

வரலாற்றுக் கட்டம்

இந்த முறை, அது தமிழ் நாட்டின் பாரம்பரியமான சமத்துவத்துக்கான போராட்டமாக, ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டமாக, சமூக நீதிக்கான போராட்டமாக நடைபெறுகிறது.

கீழடி ஆதாரங்களின்படி குறைந்தபட்சம் 3,000 ஆண்டு பழமையான நாகரீகத்தையும், தமிழ் மொழியையும், தமிழின் இலக்கியங்களையும், அதன் அடிப்படையிலான சமத்துவத்தையும், சமூக நீதியையும், பாதுகாக்கப் போகிறோமோ, அல்லது அவற்றை அழிவுப் பாதையில் செலுத்துபவர்கள் கைகளை வலுப்படுத்தப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்கப் போவதற்கான தேர்தலாக இது நம் முன் நிற்கிறது.தமிழகத்தின் தனிச்சிறப்பு

இந்தியத் துணைக்கண்டத்தின் பல பழமையான, வளம் வாய்ந்த தேசிய நாகரீகங்களில் தமிழகத்தின் நாகரீகம் ஆகப் பழமையானதும், பெருமை வாய்ந்ததும் ஆகும். உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாக, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் என்ற இலக்கண நூலையும், சங்க இலக்கியங்களையும், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளையும் உருவாக்கிய நாகரீகம், தமிழ் நாகரீகம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என மலை, காடு, வயல், கடல் என்ற நால்வகை நிலங்களையும் அவை திரிந்து உருவான பாலை நிலத்தையும் தனித்தனியே பிரித்து இலக்கணம் வகுத்த அறிவார்ந்த சமூகம் இது. மருத்துவத் துறையில் சித்தர்கள் உடலின் இயல்பையும், வெளி உலகின் இயல்பையும் உணர்ந்து உடலை பேணுவதற்கான பகுத்தறிவை வளர்த்த மண் இது.

இந்த மண் 3,000 ஆண்டுகளாக தனது தனித்தன்மையே பேணி வந்திருக்கிறது என்பதற்கு வரலாற்று ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும், மொழி ரீதியாகவும் வலுவான ஆதாரங்கள் உள்ளன.

அதே நேரம் கிரேக்கம், யவனம், சுமேரியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை என்று வெளிநாடுகளுடனும் உயிர்த்துடிப்பான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட வரலாறு நமக்கு உண்டு.

இந்தியாவின் பிற பகுதிகளுடன், சமத்துவ அடிப்படையில் பரஸ்பரம் வளப்படுத்திக் கொண்ட வரலாறும் உண்டு.
இந்த எல்லா கட்டங்களின் ஊடாகவும், சுதந்திரத்தையும், தனித்த பண்பாட்டையும், மேல் ஆதிக்க எதிர்ப்பையும் கடைப்பிடித்து வரும் நாடு தமிழகம்.

ஆதிக்கத்துக்கு அடிபணியா தமிழகம்

ஆட்சிமுறை எதுவாக இருந்தால் என்ன மானம்தான் பெரிது என்று அன்னியர் ஆதிக்கத்துக்கு அடி பணியாமல் போராடும் மக்கள் கூட்டம் உலகில் பல பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறது. அமெரிக்காவை எதிர்த்து போராடிய வியட்நாம், கொரியா என்று ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். தமிழ் நிலப்பரப்பில் வாழும் மக்களும் இந்த மக்கள் கூட்டத்தில் அடங்குவர்.

மானம் இன்மை என்று சொல்லும் பொழுது மற்றவர்களுக்கு அடிபணிந்து வாழ்வது, சிந்தனை ரீதியாக அடிபணிதலை ஏற்றுக் கொள்வது, சமத்துவ சிந்தனைக்கு புறம்பாக அடுக்குநிலை சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வது, சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்வது ஆகியவற்றை குறிப்பிடுகிறோம்.

தமிழ் நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு இத்தகைய அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்ட உணர்வு நீண்டகாலமாக, பல்லாயிரம் ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

 • கிறிஸ்துவிற்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத பேரரசை எடுத்துக் கொள்ளுங்கள். வட இந்தியாவில் பரந்து விரிந்த அதில் தமிழ் நிலப்பரப்பு கிடையாது.
 • கிறிஸ்துவுக்குப் பிந்தைய இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஹர்ஷ பேரரசை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தமிழ் நிலப்பரப்பு கிடையாது.
 • அதன்பிறகு அமைந்த குப்தப் பேரரசை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தமிழ்நிலப்பரப்பு கிடையாது.
 • முகலாயச் சக்ரவர்த்திகளின் பேரரசிலும் தமிழ் நிலப்பரப்பு கிடையாது. இந்த மண்ணுக்கு எப்பொழுதுமே தன்னாட்சிதான்.
 • பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தமிழ் நிலப்பரப்பு அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் வீறுகொண்டு கலந்து கொண்டதில் இந்த மண்ணும் அடங்கும். ஆனாலும் டெல்லி ஆட்சிக்கு உட்பட்டு அடங்க மறுத்திருக்கிறது.

இப்போதும், இந்த நிலப்பரப்பும் இங்கு வாழும் மக்களும் டெல்லி ஆதிக்கத்துக்கு அடங்க மறுப்பது வரலாற்றின் தொடர்ச்சி, காலத்தின் கட்டாயம்.
இப்படி ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை பற்றிக் குறிப்பிடும்பொழுது இதற்கு எதிரான சிந்தனைப் போக்கும் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இரு போக்குகளுக்கும் இடையிலான போராட்டம் தமிழ் நிலப்பரப்பில் வரலாறு நெடுகிலும் நடந்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கலாம்.

தமிழ் மண்ணுக்கு புறம்பான சமூக சிந்தனைப் போக்கு என்று நாம் குறிப்பிடுவது,

 • சமூகத்தின் ஆகப் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களை கோட்பாட்டு அறிவுத்தளத்திலிருந்து விலக்கி வைத்து அவர்களை தற்குறிகளாக்கி அடிமைப்படுத்துவது,
 • இந்த ஏற்பாட்டை நிலைத்து நீடிக்க வசதி செய்யும் சாதிய அமைப்புமுறை,
 • இவற்றை சித்தாந்தத்தின் வாயிலாக ஒவ்வொருவர் மண்டையிலும் ஏற்றுவது
  ஆகியவை அடங்கும்.

இவற்றிற்கு எதிராக தமிழ் மண்ணில் நடைபெற்ற எண்ணற்ற சமரசமற்ற சண்டைகளை விளக்குவதற்கு இந்தப் பிரசுரம் போதாது. அதில் ஓரளவு வெற்றிபெற்று முன்னேறிச் செல்லும் இந்தக் கட்டத்தில் நம்மை பின்னுக்கு இழுக்கும் எதிர்ப் போக்கின் ஆபத்து இப்பொழுது உருவாகியிருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்வதற்கே இந்தப் பிரசுரம்.மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி

சுதந்திரம் பெற்றபின் தமிழகத்தின் தனித்துவத்தை காக்கும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற இந்திய தேசிய தாக்குதலை எதிர்கொண்டு முறியடித்து மொழிவாரி மாநிலங்கள், மாநிலத்தில் ஆட்சி மொழி, மாநிலங்களின் அதிகாரங்கள் என்று தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தொடர்ந்தது.

மாநிலங்களுக்கு தன்னாட்சி என்ற கொள்கையை மறுக்கும், அதிகாரத்தை மையப்படுத்தும் அகில இந்திய கட்சிகள் பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியிலிருந்தாலும் தமிழகத்தில் அந்த ஆதிக்கம் முழுமை அடையவில்லை.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே அது பிரதிபலித்தது. கட்சிமாறிகள் மூலம் டெல்லி ஆட்சி இங்கே வந்தாலும் இரண்டு தேர்தலுக்கு மேல் அவர்களது செல்வாக்கு நீடிக்க முடியவில்லை. பச்சைத் தமிழராக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் போராளி காமராஜ் மூலமாக ஒட்டு போடப்பட்டது. இந்த ஒட்டும் நொறுங்கிப் போகும் தன்மையுடன் இருந்ததால், அந்த பச்சைத் தமிழர் தமிழகத்தின் நலன்களை சுயமாக பிரதிபலிக்க முடியாமல் போனது. டெல்லி ஆட்சி மறைந்தது.

அதன்பிறகு நேரடி டெல்லி ஆதிக்கம் என்பது தமிழகத்தில் இல்லாமல் போனது.

மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்துடன் மாநில உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தில், 1967-ல், இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலக் கட்சி ஒன்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.

அதைத் தொடர்ந்த கடந்த 50 ஆண்டுகால திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில், அழுத்தங்கள் மாறினாலும் மாநில உரிமை, சமூக நீதி, சாதி ஆதிக்க எதிர்ப்பு, மக்கள் நல அரசியல் என்று போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை வகுத்து அமல்படுத்த, மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேற்றப் பாதையில் நடை போட்டது.

திராவிட ஆரிய இனவாதக் கருத்துக்கள் மோதிக் கொண்டாலும், இந்த இனவாத சர்ச்சையால் எந்த முத்திரை குத்தப்பட்டவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் இந்த மண்ணின் சிறப்புத் தன்மையை அடையாளம் கண்டுகொண்டு அதற்கேற்றால்போல் கொள்கை முடிவுகளை எடுத்தனர்.

நம்முன் நிற்கும் மாபெரும் அச்சுறுத்தல்

இப்போது, இந்த நீண்டகால வரலாற்றை தடம்புரளச் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆம், நம்மவர் ஆட்சி என்று 2016-ல் வந்த அதிமுக தலைமையிலான ஆட்சியானது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், இந்தியத் தலைநகர் டெல்லியை பிடித்து நாட்டையே தனது பழைமைவாத சித்தாந்தத்தால் ஆட்டிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு அடிமையாகிப் போனது.

பாஜக, பல நேரங்களில் மக்களுக்காக என்றும் அனைவருக்கும் என்றும் மேடைகளில் பேசினாலும் அவர்களின் அடிப்படை சித்தாந்தம் என்பது சமத்துவத்தை மறுக்கும் சனாதன சித்தாந்தம் என்பதையும் அவர்களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது அவர்களின் சனாதான சித்தாந்தம் செயலுக்கு வருகிறது என்பதையும் கணக்கிலேடுத்தால் இன்றைக்கு தமிழகத்தின் மீது படையெடுத்திருக்கும் பாஜக பங்கேற்கும் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகம் என்ன ஆகும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் தனிச்சிறப்பான தேசிய கலாச்சாரங்களுக்கும் எதிராக இந்து மதம், சமஸ்கிருத மொழி, சாதிய இந்து கலாச்சாரம் என்று இந்தியாவை ஒற்றைப்படையாக மாற்றி அமைக்க முயலும் சனாதன ஆதரவு இயக்கமான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தின் கால்கள் ஒவ்வொரு துறையிலும் உடைக்கப்பட்டு வருகின்றன.

சமத்துவ சிந்தனையுள்ள திராவிட மரபில் உதித்தெழுந்த அஇஅதிமுக ஏன் டெல்லிக்கு அடிமையாகி தமிழர்களின் உரிமைகளை காவு கொடுக்கிறது? உதாரணமாக, எடப்பாடி அரசாங்கம் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் அதை தமிழகத்திலிருந்து தூக்கியெறிவதற்கு சிறுதுரும்பைக் கூட அசைக்கவில்லை.

ஊழல் செய்து மாட்டிக்கொண்டு குரங்காட்டியிடம் அகப்பட்ட குரங்காக பாஜகவின் கோலுக்கு இணங்க நடனமாடி தமிழர்களின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டது.மத்தியில் குவிக்கப்படும் அதிகாரங்கள், அடிமையாக்கப்படும் தமிழகம்

மத்தியில் அதிகாரங்களை குவித்து மாநில உரிமைகளை பறிக்கும் கொள்கையுடைய பாஜக, 2014-ல் ஆட்சிக்கு வந்தவுடன், மாநில உரிமைகளில் மூக்கை நுழைக்க ஆரம்பித்தது. மாநில பட்டியலில் இருந்த கல்வி, மருத்துவம், போலீஸ், விவசாயம் போன்றவை தொடர்பாக மத்தியில் சட்டங்களை இயற்றியும், திட்டங்களை வகுத்தும் அவற்றை அகில இந்திய அளவில் அமல்படுத்தியும் கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே அதிகாரம் என்று, இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுத்து, வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடித்தளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜிஎஸ்டி மூலம் மாநிலத்தின் வரி விதிக்கும் உரிமையை பறித்து, மத்திய அரசின் ஆதிக்கத்தில் இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலை வரி விதிப்பு பற்றி முடிவு செய்யும் அமைப்பாக்கியது, பாஜக அரசு. இவ்வாறு மத்திய அரசின் கையில் நிதி ஆதாரங்களை குவிப்பதன் மூலம் மாநில அரசுகள் மத்திய அரசை சார்ந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது.

இப்போது, தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தனது வழக்கமான உத்திகளை முழுமையாக களமிறக்கி தனது அரசியல் சதித் திட்டங்களை அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறது.

*****

இந்தத் தாக்குதலில் இருந்து நாம் பாதுகாக்க வேண்டியவை என்னென்ன என்பதையும் அவற்றுக்கு வந்திருக்கும் அச்சுறுத்தலையும் சுருக்கமாக பார்க்கலாம்.
கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகம் இந்தியாவின் இதர பகுதிகளோடு ஒப்பிடும் போது எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை கல்வி, நல்வாழ்வு ஆகி முக்கியமான இரு துறைகளை முன்வைத்து பார்க்கலாம். மற்ற துறைகளின் வளர்ச்சி இந்த இரு துறைகளின் வளர்ச்சியைச் சார்ந்திருப்பதால் இந்த இரு துறைகளுமே உள்ள நிலைமைகளை அப்படியே எடுத்துரைக்கும் தன்மை வாய்ந்தவை.

கல்வியில் சாதிக்கும் தமிழகம்

கல்வியறிவு வளர்ச்சியில் தமிழகத்தின் சாதனைகளைப் பற்றிய புள்ளிவிபரங்களை இங்கே அடுக்கத் தேவையில்லை. இவை அனைத்தும் உள்ளங்கை நெல்லிக்கனி.

வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தமிழகம் அனைத்திலும் வீழ்ந்துவிட்டது என்று கூறுவது எவ்வளவு தவறு என்பதை புரிந்து கொள்ள அரசு கொடுக்கும் புள்ளிவிபரங்களைப் பார்த்தோலே போதும்.

அரசு நிறுவனமான நிதி ஆயோக் இணைய தளத்தில் உள்ள புள்ளிவிபரங்களை பார்க்க http://social.niti.gov.in/edu-new-ranking#overall-performance என்ற இணைப்பைச் சொடுக்கவும்.

No description available.

கல்வித்தளத்தை அளவிடும் பல்வேறு அளவு கோல்களை இதில் நீங்கள் காணலாம். பள்ளியில் சேர்தல், பள்ளிப்படிப்பை முடித்தல், ஆசிரியர்களின் எண்ணிக்கை, பெண்குழந்தைகள் பதிவு என்று ஏராளமான அளவுகோல்கள் உள்ளன. ஒவ்வொரு அளவு கோலிலும் தமிழகமும் கேரளமும் முதலிடத்துக்கு போட்டி போடுகின்றன. குறிப்பாக, http://social.niti.gov.in/edu-new-ranking/export-consolidated-data/2 என்ற இணைப்பை சொடுக்கி வரும் அட்டவணையே போதும்.

கல்வித் துறையில் தமிழகம் போட்டியிடுவது முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடனும், அமெரிக்காவுடனும், கிழக்காசிய நாடுகளுடனும்தான். இந்தத் திசையில் பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் உலகத் தரத்துக்கு உயர்த்தும் பாதையில் பயணிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

மாறாக, நமது கல்விமுறையை சீர்குலைத்து பின்னுக்கு இழுக்கும் முயற்சிகளை அமல்படுத்தி வருகிறது, பா.ஜ.க.

சமூக நீதியின் மூலம் முன்னேறிய தமிழகம்

 • கல்வியில் தமிழகம் முன்னணியில் இருப்பது எப்படி சாத்தியப்பட்டது? ஏன் தென்னகம் முன்னிலையில் இருக்கிறது?
 • இதற்கும் தமிழகத்தின் சமத்துவ தாகத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறமுடியுமா?
 • இதற்கும் சுயமரியாதை உணர்விற்கும் சம்பந்தமில்லை என்று கூறமுடியுமா?
 • கல்வித்தளத்தில் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களை முன்னுக்கு இழுக்க தமிழ்ச்சமூகம் மேற்கொண்ட முயற்சியை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியுமா?
 • நீண்டகாலமாக அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு முறைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறமுடியுமா?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வரலாற்றில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு ஒரு சிறிய புள்ளியாகத் துவங்கியது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வாய்ப்புகளை வழங்கியது. இந்தியாவிலேயே முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 50% இட ஒதுக்கீடும், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு உட்பட மொத்த இட ஒதுக்கீடு 69% ஆகவும் தமிழகத்தில் சட்டமாக்கப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சமூக ரீதியாக சலுகை பெற்றவர்களுக்கும் இடையில் போட்டியிடும் தன்மையில் உள்ள இடைவெளி குறைந்து இன்று தொழிற்கல்வி கல்லுரிகளில் அனுமதிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் விஷயத்தில் ஒவ்வொரு பிரிவினருக்குமான இடைவெளி இன்று சுருங்கிப் போய்விட்டது. சமத்துவ வாய்ப்பு கொடுத்ததால்தானே இது சாத்தியப்பட்டது.

சத்துணவுத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்குதல், மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணினி வழங்குதல், மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல் என்று கல்வியை பாராட்டி சீராட்டி வளர்த்தன தமிழக அரசுகள்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாதிடுபவர்கள், இடஒதுக்கீட்டு முறையால் தரம் (Merit), தாழ்ந்துவிட்டது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

• தமிழகம் இன்று இந்தியாவின் அறிவுதளத் தலைநகராக விளங்குகிறது. தரம் தாழ்ந்திருந்தால் இது எப்படி சாத்தியப்பட்டிருக்கும்?
• தமிழகம் இன்று நவீன மருத்துவத்தின் தலைநகராக இருக்கிறது. இதில் பங்கெடுக்கும் நிபுணர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு வந்தவர்கள்தானே?

இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து இங்கே மருத்துவம் பார்த்துக் கொள்வதற்கு மக்கள் ஏன் வரவேண்டும்? தரம் தாழ்ந்த மருத்துவர்களாக இருந்தால் மற்றவர்கள் இங்கே வருவார்களா?

தமிழகத்தின் இந்தச் சாதனையை முறியடிக்க நாடு தழுவிய அளவில் மையப்படுத்தப்பட்ட கல்வியமைப்பு முறை மூலமாக முயற்சி நடந்து வருகிறது. தமிழகம் தனது கல்வி சுதந்திரத்திற்கான போராட்டத்தை வலுவாக நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலும் அப்போராட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது. அதன் மூலம் தனியார் கல்விக்கான ஒற்றைச் சந்தை உருவாக்கும் முயற்சி செய்யப்படுகிறது.தமிழகத்தின் கல்வி சாதனையை பின்னுக்கு இழுக்கும் முயற்சி

நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் படி பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பட்டியலில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் பகுதியினருக்கேற்ற கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கும் அதில் கவனம் செலுத்துவதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் தேவை. இதில் மத்திய அரசுக்கு இடமில்லை. அவர்கள் தலையீடும் தேவையில்லை.

கடந்த 50 ஆண்டுகளில் இந்த மாநில உரிமைகளை ஒழித்துக் கட்டி, இந்தியா முழுமைக்குமான ஒற்றைச் சந்தையை உருவாக்கும் முயற்சிகளை மத்தியில் ஆளும் கட்சிகள் தொடர்ந்து எடுத்து வந்திருக்கின்றன. அதை எதிர்த்த தமிழகத்தின் போராட்டமும் விடாப்பிடியாக தொடர்ந்து வருகிறது.

1976-ம் ஆண்டு 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதிலிருந்துதான், நமது மாநிலத்தின் கல்விக் கொள்கையிலும் அதற்கான நடவடிக்கைகளிலும் மத்திய அரசு மூக்கை நுழைக்க ஆரம்பித்த முதல் தருணம் துவங்கியது. கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்று கல்வியிலறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜக அதிகாரத்துக்கு வந்த பிறகு கல்வியமைப்பு முறையை மேலும் மேலும் மையப்படுத்தப்படும் போக்கு நடைபெற்று வருகிறது. அது பொருளாதார ரீதியில் சர்வதேச, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கான பரந்து விரிந்த ஒற்றைச் சந்தையை உருவாக்குவதையும், பண்பாட்டு ரீதியில் மாநிலங்களின் செறிவான, வளமான இலக்கிய, மொழி பாரம்பரியத்தை அழிப்பதாகவும், சமஸ்கிருத சனாதான ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகவும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய அளவில் நீட் என்ற தேர்வை வலுவாக புகுத்தினார்கள். மாநில அரசாங்கம் தன்னுடைய நிதியாதாரத்தில் ஏற்படுத்திய தொழிற்கல்வி கல்லூரிகளில் மாணவர்களாக யாரை எப்படிச் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடும் ஒரு அதிகார ஆணவமே நீட்.
இந்த அதிகார ஆணவமானது அடித்தட்டு மக்களின் வாய்ப்பை பறித்து அவர்களை மீண்டும் புதைகுழிக்குள் தள்ள முயற்சிக்கிறது. நீட்டுக்கு எதிராக மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுகிறது. மாநில சட்டமன்றத்தை துச்சமாக மதித்து இத்தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டது மத்திய அரசு.
கடந்த ஓரிரு ஆண்டுகளில், நீட் தேர்வை வைத்து ஒவ்வொரு மாணவரிடமும் பல இலட்சம் கொள்ளையடிக்கும் வணிகத்தில் வெளிமாநில நிறுவனங்களும் தமிழகத்தில் கடை பரப்பி விட்டன.

கல்வியில் பின்தங்கிய நிலைக்கு அடியாதாரமாக விளங்கும் சாதிய கட்டமைப்பு ஏற்படுத்திய குலக்கல்வி முறையை புதிய கல்விக் கொள்கை வாயிலாக மீண்டும் திணிக்கிறது, மத்திய அரசு. தகப்பன் தொழிலை மகனை செய்ய வைத்து ஆகப் பெரும்பாலோனோரை பின்னுக்குத் தள்ளிய முறையானது நாசூக்காக தொழிற்பழகுதல் என்ற பெயரில் புகுத்தப்படுகிறது.

அத்துடன் வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்திற்கு மக்களின் வரிப்பணத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி திணிக்கப்படுகிறது.

அனைத்து கல்வி நிலையங்களையும் கார்ப்பரேட் மயமாக்கி கல்விக்கட்டணத்தை உயர்த்தி ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சியே புதிய கல்விக் கொள்கை.

அத்துடன் கல்வி போதிக்கும் முறையிலும் பிற்போக்கான மாற்றங்கள் செய்து சுயமாக சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் முயற்சியும் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது.

ஒரே நாடு ஒரே சந்தை ஒரே கொள்கை என்ற முழக்கத்துடன் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் கணக்கிலெடுக்காமல் கண்மூடித்தனமான கல்விக்கொள்கையை திணிப்பது எங்கே போய் முடியும்?

மீண்டும் சனாதன சாதிய சமூகத்தை உருவாக்கும் இழிசெயல் அல்லாமல் இதை வேறென்பது? தமிழையும், தமிழ் பண்பாட்டையும், தமிழக வரலாற்றையும்

இரண்டாம் தர குடிகளாக்கும் இந்த முயற்சியை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

மத்திய அரசு கல்வியில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று, மாநில அரசுகள் நலிவடைந்த பிரிவினருக்கு போதிய நிதி ஒதுக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. நிதியாதாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் கையில் சென்றபின் அவர்களிடம் திருவோட்டை ஏந்தும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

மக்கள் நல்வாழ்வு பாதையில் தமிழகம்

நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் படி பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பட்டியலில் மக்கள் நல்வாழ்வு என்பது மாநிலப் பட்டியலில் இதுவரை இருந்து வருகிறது. எனினும் மத்திய அரசின் கொள்கைகளால் மாநில அரசுகள் நல்வாழ்வு விஷயத்தில் தங்கள் கடமைகளை ஆற்றமுடியாத நிலை உள்ளது. அத்துடன் நல்வாழ்வுடன் சம்பந்தப்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகின்றன.

சமத்துவ தாகமுடைய தமிழ் மண்ணில் இன்றைக்கு இருக்கும் அரசியல் பொருளாதார வரம்பெல்லைகளுக்குள் வைத்து நோக்கினால் நல்வாழ்வில் மற்ற மாநிலங்களைவிட தமிழகமும் கேரளமும் முதல் வரிசையில் இருந்து வருகின்றன என்பது தெரியவரும். இந்த விஷயங்களில் துல்லியமான விபரங்களை அறியவும் மிகவும் சமீபத்திய புள்ளிவிபரங்களை பெறவும் மத்திய அரசின் நிதி ஆயோக் இணையதளத்தைப் பார்க்கலாம். http://social.niti.gov.in/hlt-ranking நல்வாழ்வு முன்னேற்றங்கள் குறித்த பல்வேறு புள்ளிவிபரங்களையும் ஒவ்வொரு முக்கியமான அளவைகளையும் காணலாம்.

No description available.

குறிப்பாக, http://social.niti.gov.in/hlt-ranking/export-consolidated-data/0/0/1/1 இணைப்பைச் சொடுக்கினால் 25 வகையான அளவீடுகளைக் காணலாம்.

இதில் குழந்தை இறப்பு வீதம், பிரசவகால மரணங்கள், குழந்தை பிறப்பில் ஆண்-பெண் விகிதாச்சாரம், ஐந்து வயதுக்குள் இறக்கும் குழந்தைகள், தடுப்பூசி பெறப்பட்டவர்கள், நல்வாழ்வு சேவைகள் எளிதில் கிடைக்கப்பெற்றவர்கள், மருத்துவ உதவியுடன் நடைபெறும் பிரசவங்கள், நல்வாழ்வு பணியாளர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் காணலாம். இவற்றுள் சிலவற்றை மேலே தந்துள்ளோம்.

இவை எல்லாவற்றிலும் தமிழகமும் கேரளமும் மற்ற மாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளன. இங்கே செயல்படும் அரசுகள் இச்சாதனைகளுக்கு முக்கியமான பங்களித்தன என்றாலும், இவ்வரசுகளை நிர்ப்பந்திக்கும் சமூகப் போக்கும், சமூகப் போக்கை நிர்ணயிக்கும் சமத்துவ சமூக சிந்தனைப்போக்கும் இதற்கு அடிப்படை என்பதை மறந்துவிட முடியாது.

தமிழகத்தின் அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரி என்று நாட்டிலேயே முன்னேறிய நிலையில் உள்ளது.

பாஜகவோ,

 • நல்வாழ்வு மாநிலங்கள் பட்டியலில் இருந்தாலும் நல்வாழ்வுடன் சம்பந்தப்பட்ட மருத்துவக் கவுன்சில், மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள், போன்ற அமைப்புகள் மூலம் அகில இந்திய அளவில் கட்டுப்படுத்த நினைக்கிறது.
 • மருத்துவக் கல்வி முதல் மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள் பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்ற எல்லா அம்சங்களிலும் நாசம் செய்து வருகிறது.
 • அறிவியலுக்கு புறம்பான மருத்துவ அணுகுமுறைகளை பிற்போக்கு பழைமைவாதப் பார்வையுடன் ஊக்குவித்து வருகின்றது.
 • நவீன மருத்துவக் கல்வி பெற்றவர் மட்டுமே அறுவைசிகிச்சை செய்ய முடியும் என்ற சட்டவிதிகளை மாற்றி நாட்டு வைத்தியர்களும் அறிவியல் ரீதியாக அறுவை சிகிச்சைக்கான பயிற்சியைப் பெறாத ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று ஆக்கிவிட்டார்கள். இதற்கு மருத்துவர்கள் தரப்பில் கடும் எதிர்த்து தெரிவித்தும் அரசு விடாப்பிடியாக தனது அறிவியல் விரோத கொள்கையை அமல்படுத்துகிறது.
 • வரும்முன் காப்போம் கொள்கையை கைவிட்டு வந்தபின் சிகிச்சை கொடுப்போம் என்ற கொள்கைக்கு மாறி தொற்றல்லா நோய்களுக்களுக்கான சிகிச்சை செலவுகளை கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து வருகிறது.
 • இதைவிட கொடுமை என்னவென்றால் நல்வாழ்வை மாநிலங்கள் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட வேலையை செய்து வருகிறது. பொதுப்பட்டியலுக்கு மாற்றிவிட்டால் மாநில அரசுகள் அளிக்கும் இலவச மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும்.

காதல், சாதி, திருமணம்

அறிவியல் ரீதியாக, அகமணமுறை மூலம் பிறந்த குழந்தைகள் மற்றவர்களைக் காட்டிலும் வலிமை குறைந்தவர்களாக இருப்பார்கள். இன்றைக்கும் ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கர்களைவிட இந்தியர்கள் வலிமை குறைந்தவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம்.

சமஸ்கிருத கலாச்சாரம் பரவி சாதியம் வேரூன்றிய பிறகு அகமணமுறை நமது பண்பாட்டில் ஊடுருவியது. அகமணமுறையை ஊக்குவிக்கும் கொள்கை ஆரோக்கியமான மனிதர்கள் உருவாவதைத் தடுக்கும். இவ்வகையிலும் சனாதன பாஜகவின் மத்திய அரசானது மக்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது.

பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் சாதி மறுத்து, மத வேறுபாடுகளை கடந்து இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை தடுப்பதற்கான கொடூரமான சட்டங்களை இயற்றியுள்ளன. அம்மாநிலங்களில், காதலர்களை பிரித்து சிறையில் அடைக்கிறது போலீஸ். ஆண் பெண் நட்பை குற்றச் செயலாக்கும் கும்பல்கள் போலீஸ் துணையுடன் வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றன.

தமிழகத்திலும் அது போன்ற சட்டங்களைக் கொண்டு வருவதற்கு, காதலை ஒழிப்பதற்கு, சாதி வெறி அமைப்புகளுடன் கைகோர்த்திருக்கிறது பாஜக.

மத நல்லிணக்கம் –

வட இந்திய மதப் பிரிவினையை தமிழ்நாட்டுக்குள் இறக்குமதி செய்ய முயற்சிக்கும் பாஜக.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது வட இந்தியா எங்கும் மதக் கலவரம் தூண்டி விடப்பட்ட காலத்திலும் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது, தமிழகம்.

தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் போதே மதங்களுக்கிடையே வெறுப்பை தூண்டுவதையும், கலவரங்களை நடத்துவதையும் இலக்காக வைத்தே செயல்பட்டது பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம்.

கன்னியாகுமரி, மண்டைக்காடு, கோவை, திருப்பூர், வேலூர் என்று மதக் கலவரத்தையே தனது அரசியலாக செய்து வருகிறது பாஜக.

தமிழ் மக்கள் தத்தமது வீடுகளில் அமைதியான முறையில் செய்து வந்த பிள்ளையார் வழிபாட்டை, விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் மத அணிதிரட்டலுக்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது.

பாஜக இடம் பெறும் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் அமைதி குலைக்கப்படும். அண்ணன் தம்பிகளாக, பங்காளிகளாக, நண்பர்களாக வாழ்ந்து வரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே பகைமையை தூண்டி விடும் வேலையைச் செய்து வரும் சக்திகள், அரசு அதிகாரத்தின் துணையுடன் அதை இன்னும் முடுக்கி விடும்.கருத்துரிமையை மறுக்கும் பாசிச வெறி

பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும், இணையவெளியையும் தனது பிடிக்குள் கொண்டு வரும் சனாதன பாஜக தனக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதையோ, விவாதிப்பதையோ சகித்துக் கொள்ள முடியாமல், பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சி நெறியாளர்களையும், சமூக ஊடக செயல்பாட்டாளர்களையும் குறி வைத்து வேட்டையாடி வெளியேற்றுகிறது.

தனது அதிகார பலத்தை பயன்படுத்தி ஊடக முதலாளிகளை மிரட்டி தனது நோக்கத்தை சாதித்துக் கொள்கிறது. மக்கள் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் பாஜக தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தை சுவைக்க ஆரம்பித்தால் இந்தியாவிலேயே உரிமைகளுக்கான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலமான தமிழகம் போர்க்களமாகவிடும்.

உயர்த்திப் பிடிப்போம் தமிழர்களின் தொன்மையான பாரம்பர்யத்தை

இரு பிரதான திராவிடக் கட்சிகளும் மேடைகளில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டாலும் தமிழகத்தில் கருத்துரிமையின் குரல்வளை என்றுமே நசுக்கப்ட்டதில்லை. ஆட்சியாளர்களின் அத்தகைய முயற்சிகள் கடுமையான அரசியல் எதி்ரப்பால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளன.

கல்வி, நல்வாழ்வு ஆகிய துறைகளை மட்டும் வைத்து தமிழகத்தின் கடந்தகால வளர்ச்சிப்போக்கைப் பற்றிக் கூறினோம். இதைத்தாண்டி மின்சாரம், சமூகநலம், பொதுவிநியோகம், குடியிருப்பு வசதி, சாலைவசதி, குடிநீர் கிடைக்கப்பெறல், சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னிலையில் உள்ளது.

தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதும் இந்த மண் அறிவுசார் மாந்தர்களைப் பெற்றதன் விளைவே. தமிழக மக்களின் சமத்துவ சிந்தனையும் அதை மறுக்கும் போக்கிற்கு எதிரான போராட்ட உணர்வுமே ஆட்சியாளர்களை இதை நோக்கிய திட்டங்களை வகுத்து அமல்படுத்த வைத்தது.

50 ஆண்டுகளாக ஆண்டுவந்த அரசியல் கட்சிகள் வசதிபடைத்தவர்களுக்கான இந்த ஆட்சிமுறை இழுத்துச் செல்லும் திசையில் அவர்கள் நகர்ந்தாலும், அவர்களும் இந்தப் பாரம்பரியத்தில் உதித்தவர்களானதால் மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பெரும்பாலான நேரங்களில் செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக உரிமைப் போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழகம்தான். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றப் பதிவுகள் அலுவலகத்தின் (Natioal Crime Records Bureau) தரவுகளின்படி அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில்தான் என்பது தெரியவரும்.

மக்கள் தமது தெருக்களிலும், கிராமங்களிலும், பகுதியிலும் உரிமைகளுக்காக நடத்தும் சிறிதும் பெரிதுமான போராட்டங்கள் ஆண்டு முழுவதும் நிகழ்கின்றன. இவற்றின் ஊடாகவே மக்களின் இயல்பு வாழ்க்கை நிகழ்கிறது.

இந்த போராட்டப் பண்பாடே ஆட்சியாளர்களை மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வைத்திருக்கிறது. தூத்துக்குடி நகரத்தை மாசுபடுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வீரம் செறிந்த பெருந்திரள் மக்கள் போராட்டமே அந்த ஆலையை ஒட்டுமொத்தமாக இழுத்து மூடுவதற்கான உறுதியான முடிவை அரசை எடுக்க வைத்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு சனாதன பாஜகவின் தலையீட்டால் அடிமையாகிப் போன அஇஅதிமுகவிடம் முதுகெலும்பை இப்போதைக்கு தேட முடியாது. இந்தத் தேர்தலில் அஇஅதிமுக பெறும் தோல்வியானது அவர்களுக்குள் குடிகொண்டிருக்கும் தமிழர்களின் மானத்தையும் சுரணையையும் தட்டி எழுப்பும். ஆதிக்க சக்திகளுடனான கூட்டுறவை நிராகரித்து நமது பாரம்பரிய வழியில் மீண்டும் நடைபோடுவதற்கு கற்றுக் கொடுக்கும்.
தமிழக கிராமப்புற கோவில்களில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளை சனாதனிகளின் கட்டளைக்கிணங்கி முடக்கியதற்கு எதிராக தமிழக மக்கள் அளித்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தீரப்பிலிருந்து அஇஅதிமுக பாடம் கற்றுக் கொண்டதைப் போல இப்பொழுதும் கற்றுக் கொள்ளும்.

இன்றைக்கு அகில இந்திய அளவில் கருத்துரிமையை ஒடுக்கும் பாசிச பேய் தலைவிரித்தாடுகிறது, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பெங்களூரு சூழலியலாளர் திஷா ரவி மீது தேச துரோக வழக்கு, பெட்ரோல் விலை உயர்வை விமர்சித்து அரசை நையாண்டி செய்த நகைச்சுவையாளர்கள் குணால் கம்ரா, முனாவர் ஃபரூக்கி, ஷ்யாம் ரங்கீலா ஆகியோர் மீது வழக்கு என்று அரசு ஒடுக்குமுறை தலைவிரித்தாடுகிறது. “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர், பாஜக ஆளும் மாநில மக்கள்.

தமிழகத்தில் இத்தகைய ஆதிக்க வாதிகளை ஆதரிப்பது என்று இல்லை, அனுமதிக்கக் கூட செய்யாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பாஜக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வலுப்பெற்றால் அல்லது அதன் பினாமியாக மாறிப்போன அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
சிறுபான்மையினர் மீது வெறுப்பை விதைத்து மதக்கலவரங்கள் தூண்டப்படும்

 • தமிழகம் காத்துவரும் சமூக நீதி தூக்கியெறியப்படும்.
 • ஏதாவது ஒரு பிரிவினர் ஏதாவதொரு கட்டத்தில் நலிவடைய நேரிடும்போது, எவ்வளவு பெரிய ஊழல் அரசாக இருந்தாலும், அதன் மீது மக்கள் நிர்ப்பந்தம் செலுத்தி ஆதரவுக்கரம் நீட்டவைப்பது முடிவுக்கு வரும்.
 • அறிவியல் புறக்கணிக்கப்பட்டு, பிற்போக்குவாதம் முன்னுக்கு வரும். வெகுமக்களுக்கு அறிவு மறுக்கப்பட்டு எதிர்கால தமிழ் சமூகம் தற்குறி நிலைக்கு தள்ளப்படும். தமிழகம் இந்தியாவின் அறிவுத்தலைநகர் என்றர சிறப்பை இழக்க நேரிடும்.

கடந்த 54 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவந்த திராவிடக் கட்சிகள் மீது கூர்மையான பல விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் பல்வேறு அம்சங்களில் தமிழகம் இதர மாநிலங்களைவிட முன்னிலை வகிக்கிறது என்பதையும், தமிழக மக்களின் விழிப்புணர்வும் சமதர்ம சமத்துவ உணர்வும் ஆட்சியில் உட்காரும் கட்சியை எல்லை மீறிப் போகாமல் தடுத்திருக்கிறது என்பதையும நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பாரம்பரியம் தொடர வேண்டும்.தமிழக மக்களின் பாரம்பரியமானது தமிழகத்தை…

 • மகதப் பேரரசில் இணைக்க அனுமதித்ததில்லை!
 • ஹர்ஷப் பேரரசில் இணைக்க அனுமதித்ததில்லை!
 • குப்தப் பேரரசில் இணைக்க அனுமதித்ததில்லை!
 • மொகலாயப் பேரரசில் இணைக்க அனுமதித்ததில்லை!
 • சுதந்திர இந்தியாவில் டெல்லியின் ஏகபோக மாற்றாட்சியை அனுமதித்ததில்லை!
  தமிழக மக்களின் பாரம்பரியமானது…
 • சனாதன பாஜகவின் தமிழக படையெடுப்பை முறியடிக்கும்!
 • சனாதன பாஜக பேரரசின் விரிவாக்கத்தை தமிழக எல்லையுடன் தடுத்து நிறுத்தும்!!
 • சனாதன பாஜகவின் பேரரசில் தமிழகத்தை ஒருபோதும் இணைக்காது!!!

♦ தமிழகத்தின் எதிர்காலத்தை – உரிமைகளைப் பாதுகாப்போம்.
♦ பல தலைமுறைகளாகப் போராடி வென்ற மக்கள் நலன் சார்ந்த கல்வி, மருத்துவக் கட்டமைப்புகளைக் காத்து மேம்படுத்துவோம்.
♦ தமிழகத்தின் முன்னேற்றம், சமத்துவம், ஒற்றுமை, சமூகநீதி ஆகியவற்றுக்கு எதிரான மதவாத, பாசிச தாக்குதலை முறியடிப்போம்.
♦ சமதர்மம், சமூகநீதி, பகுத்தறிவு சார்பான சக்திகளை ஆதரித்து ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்.

PDF லிங்க்: Ethirkalathai Urimaikalaip Pathukappom_Final

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)