நூல் : 1729
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
விலை : ரூ.₹65
வெளியீடு : புக் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
எண்பதுகளில் கணையாழியில் பிரசுரமான “ஆயிஷா” என்ற குறுநாவலை வாசித்து மனம் நெகிழ்ந்து அழுதிருக்கிறேன். மாணவப் பருவத்தின் மீதான கல்வியின் தாக்கம் குறித்து எழுதப்பட்ட அருமையான படைப்பு. அன்றுமுதல் தோழர் நடராசனின் ரசிகனாய் மாறி அவரின் படைப்புகளோடு என்னை நான் இணைத்துக் கொண்டேன். அவரின் பெரும்பாலான கட்டுரைகளையும் புனைவுகளையும் வாசித்துள்ளேன். கல்விச் சிந்தனையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள பெரும் இலக்கிய மாளிகை அவர்.
மாணவ மனசுக்கு நெருக்கமில்லாத அரிவியலையும் கணிதத்தையும் எளிமைப் படுத்திப் புரிய வைப்பதில் வல்லவர். அதோடு மிகச் சிறந்த வாசகரும் கூட. ஒரு மாதத்தில் நூறு நூல்கள் வரை வாசித்துப் “புத்தகம் பேசுது”வில் பதிவிடுகிறார். சிறந்த வாசகர்தான் சிறந்த எழுத்தாளர் ஆக முடியும் என்பது நவீன எழுத்து இயக்கத்துக்கான இலக்கணத் தேற்றம்.
2019ஆம் ஆண்டு அவர் எழுதிய நவீன குழந்தை இலக்கியம் “1729”. பொதுவாக குழந்தை இலக்கியம் என்றால் மாயாஜால அதிசயங்களும் ராஜவம்ச சாகசங்களுமாய்க் குழந்தைகளைக் குஷிப்படுத்தும். அதிலிருந்து விலகிப் புரிதலுக்கு வெகுதொலைவில் இருக்கும் கணித இயலைக் கருவாக எடுத்து கலை நேர்த்தியோடு ஒரு நாவலைச் செய்திருக்கிறார் தோழர் நடராசன். எண்பது பக்க நூல் என்றாலும் எண்ணூறு பக்க கனத்தோடு வாசிக்கக் கிடைக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதையும் தாண்டி “உறைகிணற்றின் ஆழம்போல” எனச் சொல்ல வைக்கிறது. அந்த அளவு ஆழமான படைப்பு.
கதை என்று எடுத்துக் கொண்டால் மிகவும் சிறியது. இறந்துபோன சரண் என்ற சிறுவனையும் சேர்த்து 27 குழந்தைகள் கதையின் கதாநாயகர்கள். ஒரு பராமரிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகள் அவர்கள். பெரும்பாலும் கேன்சர் நோயால் பீடிக்கப்பட்டவர்கள். அந்த இல்லத்தின் பராமரிப்பாளர் அல்லது வார்டன் மிஸ்டர் எக்ஸ். தன்னலமற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர் மிஸ்ஸஸ் ஒய். வருகைதரும் மருத்துவர் மிஸ்டர் இசெட். இப்படி 30 கதாபாத்திரங்கள் இந்த நாவலை இயக்குகின்றன.
தாங்கள் பிழைக்கப் போவதில்லை எனப் புரிந்துகொண்ட குழந்தைகள் வாழும் காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என விரும்பி அதற்கான முன்னெடுப்பைச் செய்கிறார்கள். விளைவாக 1729 டாக்காம் என்ற இணையதளத்தைத் தொடங்கி, வாழ்வின் ஒவ்வோர் அம்சத்தையும் கணக்கு இயல் வழியாகக் கண்டறிந்து புதிர் அவிழ்க்கிறார்கள். நாவல் துவங்குவதற்கு முன்பாகவே இறந்து போன சரண் என்ற சிறுவனே இந்த இணைய தளத்தை உருவாக்கி மற்ற குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்திக் கற்றுத் தருகிறான்.
இயற்கை இயல் கோட்பாடு மனித இயக்கத்தை பராமரிக்கவும் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தவும் செய்கிறது. உடல் சோர்வடைந்திருக்கும் போது தனக்கு விருப்பமான ஒரு செயலை பெருவிருப்பத்தோடு செய்வானானால் அவனுக்குள் இருக்கும் சோர்வும் நோய்மையின் வலியும் காணாமல் போகும். காய்ச்சலில் இருக்கும் ஓர் உழைப்பாளி விருப்பத்தாலோ நிர்ப்பந்தம் காரணமாகவோ தனது பணியில் ஈடுபடுவானாயின் காய்ச்சல் விலகி உடல் சுறுசுறுப்படையும். இது உயிரினங்கள் அனைத்துக்கும் இயற்கை தந்திருக்கிற கொடை. நெருக்கடியான நேரங்களில் உடல் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பது இயற்கை விதி. அந்த வகையில் அந்த 26 குழந்தைகளுக்கும் கணிதம் ஓர் உந்து சக்தி. மரணம் அவர்கள் கையெட்டத்தில் இருந்தபோதும் கவலை மறந்து காலம் கழிக்கிறார்கள். இவ்வளவுதான் நாவல்.
கணிதத்தின் அடியாழமான புதிர்களை நேர்த்தியாகவும் எளிமையாகவும் அந்தக் குழந்தைகள் வழியாக அவிழ்த்துச் செல்கிறது நாவல்.
இன்றைய மாணவர்கள் விருப்பமின்றிப் பள்ளிக் கூடங்களுக்குள் நுழையக் காரணம் மனசுக்குப் புரிபடாத கணக்குப் பாடமும் அரிவியல் பாடமும்தான். மிகவும் எளிமயான கணக்கு ஒன்று. 26 பேரில் ஒருவனான மாறன் அந்தக் கணக்கை 1927 டாட்காமில் பதிவிடுகிறான். 150 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில் 300 மீட்டர் நீளமுள்ள ஒரு மேம்பாலத்தின்மீது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கிறது. அது பாலத்தை முழுதும் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?
சாதாரணக் கணக்குத்தான். மிஸ்டர் எக்ஸ் உட்பட பெரியவர்களும் திக்குமுக்காடிப் போகிறார்கள். இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தரவு என்னவென்றால் ஒரு கிலோமீட்டருக்கு எத்தனை மீட்டர் நீளம் என்பதுதான். ஆயிரம் மீட்டர் என்பது அடிப்படைக் கணக்கு. அடுத்த புரிதல் 300 மீட்டருக்கும் 150 மீட்டருக்கும் இடையிலான உறவு. 300 மீட்டரோடு ரயிலின் நீளமாகிய 150ஐயும் சேர்த்து, ரயில் கடக்கும் தூரத்தைக் கணக்கிட வேண்டும் என்ற படைப்பாற்றல் மிக்க சிந்தனை மனசுக்குள் எழுந்து விட்டால் கணக்கு எளிது. ரயில் கடக்கும் தூரம் 450 மீட்டர்.
அடுத்த புரிதல் ரயில் நகர்வது 60 கிலோமீட்டர் வேகத்தில். அப்படியானால் ஒரு நிமிடத்துக்கு ஒரு கிலோமீட்டர். அதாவது ஆயிரம் மீட்டர் பயணிக்க ஒரு நிமிடம் என்றால் 450 மீட்டர் கடக்க? ஒரு நிமிடம்=60 நொடி. 60 வகுத்தல் 1000 பெருக்கல் 450= 27 நொடிகள்! கேள்வி கேட்கும்போதே விடை தேடும் வரைபடம் மனக்கண்ணில் தெரியவேண்டும். அது மாறனுக்கு எளிதாகக் கைவருகிறது.
நம் குழந்தைகள் இந்தச் சாதாரணக் கணக்கைப் போடவே சிரமப் படுகின்றன. புரிய வைக்கும் பொறுப்பு ஆசிரியருடையது. இந்த நூலின் ஆசிரியர் போன்றவர்கள் பாடம் நடத்தினால் மாணவர்கள் வகுப்பறை வளாகத்துக்குள் எளிதாய் நுழைய முடியும். நம் கல்விச் சாலைகள் அதை மறந்ததன் விளைவுதான் கணக்குமீதான வெறுப்பும் பள்ளிக்கூடம் போவதற்கான விருப்பமின்மையும்.
தமிழகத்தில் பிறந்த அற்புதமான கணிதமேதை ராமானுஜர். அவர் 4ஆம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்த போது ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். 0 வகுத்தல் 0. விடை என்ன?
உடனடியாக ராமானுஜர் சொன்னார் “1.” மற்ற மாணவர்களைக் கேட்டபோது விடை 0 என்றார்கள். ராமானுஜர் மறுத்தார். ஒன்று என்று அழுத்தமாகச் சொன்னார். “ஓர் எண்ணை அதே எண்ணால் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு ஒன்று. ஜீரோவும் ஓர் எண் என்பதால் ஒன்று என்பதே சரி.”
அதுநாள் வரை உலகம் நம்பிக்கொண்டிருந்த ஒரு தவறு ராமநுஜரால் சரிசெய்யப்பட்டது. சைபரைக் கண்டுபிடித்தவரும் தமிழர்; 0-0=1 எனக் கண்டுபிடித்ததும் தமிழர்.
புற்றுநோய் பற்றிய தகவல்கள் மனதைக் கலங்கடிக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 770 குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்கள். இது உலக் சராசரியைவிட 70 அதிகம்.
நாயகி என்ற குழந்தை ஒரு தர்க்கக் கணக்கு மூலம் தனது நோயை அளவிடுகிறாள். எண்கள் இல்லாதவை தர்க்கக் கணக்குகள். ஏ, பி. சி ஆகிய மூன்று பேரிடமும் துப்பாக்கி இருக்கிறது. ஏ. என்பவன் குறி தவறாமல் சுடத் தெரியாதவன். பி. இரண்டுமுறை சுட்டால் ஒன்று குறி தவறிவிடும். சி. முதல் முயற்சியில் குறி தவறாமல் சுடுவான். இவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க வேண்டும். யார் அவர்?
ஏ. வானை நோக்கிச் சுடுவான். பியும் சியும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வார்கள். இதில் சி ஜெயிக்கத்தான் வாய்ப்பு. இது ஒரு முப்பரிமாணக் கணக்கு. நாயகி சொல்கிறாள். “இதில் சிதான் என் புற்று நோய். பி. எனக்கிருக்கிற பக்கவாதம்; ஏ. என் காய்ச்சல். என்னைத் தீர்த்துக் கட்ட உண்மையான ட்ரூயல் (மும்முனைத் தாக்குதல்) நடக்கிறது.” அந்தக் குழந்தை இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது வாசக மனம் தேம்புகிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பு உச்சத்தை எட்டுகிறது. நாவலாசிரியர் வெற்றி அடைகிறார்.
சொல்ல இன்னும் ஏராளம் இருக்கின்றன. கணிதத் தேற்றங்களையும் குழந்தைகளின் தன்னம்பிக்கயையும் வாசித்துப் புரிவதுதான் சிறந்த அனுபவமாய் இருக்கும். அருமையான அணிந்துரை எழுதியிருக்கிறார் ச. தமிழ்ச்செல்வன். பல இடங்களில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேதான் எழுதுகிறார். கணக்கில் மட்டுமல்ல; கதை சொல்வதிலும் வெற்றியடைந்திருக்கிறார் ஆய்ஷா இரா. நடராசன்.
– தேனி சீருடையான்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.