“கருவியாலஜி” – பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம்.
அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு பரிமாண வளர்ச்சி பெற்றது? முதல் கால்குலேட்டரோ மணல் லாரி சைஸில் இருந்துள்ளது. இப்படியாக இரண்டாம் பக்கத்தில் தொடங்கும் சுவாரசியம் கடைசி பக்கம் வரை நீள்கிறது.
செல்ஃபோனுக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் உள்ள வித்தியாசமென்ன? சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பயன்பாடுகளென்ன? புல்லட் ரயில்களின் வேகமென்ன? அவை எவ்வாறு இயங்குகின்றன எனப் பக்கத்திற்குப் பக்கம் தகவல்கள்.
ஏ.டி.எம்., மைக்ரோ ஓவன், பேஸ் மேக்கர், டச் ஸ்க்ரீன், ரோபோட் என நீளும் பட்டியலில், பென்சில் சீவும் ஷார்ப்னருக்கும் கோட்டா ஒதுக்கியுள்ளார் ஆயிஷா இரா.நடராசன். தொடக்கத்தில் ஒரு மேசை அளவுக்குப் பெரியதாய் இருந்த ஷார்ப்னர், படிப்படியாக நமக்குத் தெரிந்த சின்னஞ்சிறு உருவத்தை எட்டியுள்ளது. 1850களில், ஃபிரான்ஸில் ஒரு பள்ளிக்கே ஒன்று தான் என ஷார்ப்னர் ஓர் ஆடம்பரப் பொருளாக இருந்துள்ளது.
நமக்குச் சிறு விஷயமாக, ஒரு பொருட்டாக இராத, அற்பமாகத் தெரியும் கருவிகளுக்குப் பின்னால் ஒரு 200 வருட கதை இருக்கிறது. பல விஞ்ஞானிகளின் கடின உழைப்பும் உள்ளது.
40 வயது கடந்தவர்களுக்கு, ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவதில் அநேக தயக்கங்கள் உள்ளன. ஏதாவது தெரியாமல் அழுத்தி விட்டால், ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடுமோ என்ற பதற்றம் தான் காரணம். ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகளோ, 10 வயதிற்குள் செல்ஃபோன் எல்லாம் எனக்கு தண்ணி பட்ட பாடு என சர்வ சாதாரணமாய் உபயோகிக்கிறார்கள். அவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் ஒரு ஆச்சரியம் இல்லை. அப்படி விட்டேத்தியாய் வெயிலையே பார்க்காமல் வீடியோ கேம்ஸில் மூழ்கியுள்ள சிறுவர்களுக்கு, அறிவியலின் பரிணாம வளர்ச்சியையும், வல்லமையையும், அளப்பரிய ஆற்றலையும் அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்த இந்தப் புத்தகம் பெரிதும் உதவும்.
64 பக்கங்களே கொண்ட எளிமையான மொழிநடையுடைய புத்தகம். சமைப்பதும் துவைப்பதும் பெண்களின் வேலை மட்டுமல்ல என்பதைப் போகிற போக்கில் சுட்டிக் காட்டுகிறது. ஏ.டி.எம். அத்தியாயத்தில், டிமானிடைசேஷனின் பொழுது மக்கள் பட்ட அவதியையும் ஒரு வரியில் பதிந்துள்ளது சிறப்பு. அதே போல், முழு வங்கிக் கணக்கையும் கையாள கணித மேதை ராமானுஜரின் தீட்டா சார்பு தான் பயன்படுகிறது எனக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள ஒரு செய்தியையும் சொல்கிறார்.
மொத்தம் 25 கருவிகள் குறித்து இரா.நடராசன் எழுதியுள்ளார் என பின்னட்டை தெரிவிக்கிறது. ஆனால், 23 கருவிகள் பற்றித்தான் எழுதியுள்ளார். எம்.பி.த்ரீ (MP-3), 3டி கணினி கிராஃபிக்ஸ் ஆகிய இரண்டும் தொழில்நுட்பங்கள்.
கருவியாலஜியை விட கருவியியல் என்ற தலைப்பும் கூடப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும். புத்தகத்தில் முன்னுரையோ, அணிந்துரையோ இல்லாதது பெரும் ஆறுதலைத் தந்தாலும், கருவிகளை என்ன அடிப்படையில் இரா.நடராசன் தேர்ந்தெடுத்துள்ளார் என்றறிய ஆவல் மேலிடுகிறது. கருவிகள், கம்பெனிகள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் பெயரை ஆங்கிலத்தில் அத்தியாயத்தின் முடிவில் தந்திருந்தால், தேடல் உள்ளோருக்கு உதவியாக இருக்கக்கூடும்.
புத்தகத்தைப் படித்து முடித்ததும், கண்ணில் படும் கருவிகள் அனைத்தின் வரலாறையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிடுகிறது.
நன்றி – ithutamil.com
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924
மின்னஞ்சல் : [email protected]
ஆசிரியர்: இரா. நடராசன்
விலை: 50/-
இணையத்தில் வாங்க : thamizhbooks