நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – தங்கேஸ்

நூல் அறிமுகம் : அல்லி உதயனின் ’அரண்’ நாவல் – தங்கேஸ்




நூல் : அரண் 
ஆசிரியர் : அல்லி உதயன்
விலை : ரூ. 150.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

தேனி மாவட்டத்தில் தமுஎகசவை கட்டி எழுப்பிய முன்னத்தி ஏர்களில் ஒருவரும் ,,  நாற்பது ஆண்டு காலமாக தனது செம்மையான  எழுத்துக்களால்   , சமான்யர்களை கதை மாந்தர்களாக்கி  இலக்கியத்தில் அவர்களை  உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் அரிய படைப்பாளியுமாகிய   தோழர் அல்லி உதயன் அவர்கள்  இந்த முறை  தனது ‘’ அரண்  ‘’என்ற அற்புதமான நாவலோடு வாசகர்களை சந்திக்க வந்திருக்கிறார்.

பாரதி புத்தகாலயத்தால்  வெளியிடப்பட்டுள்ள இந் நாவல் மொத்தம் 159 பக்கங்கள் கொண்டது. விலை ரூ 150/. ஆகும். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர்  க. பாலபாரதி அவர்கள் இதற்கு ஒரு உணர்வு பூர்வமான உயர்தரமான முன்னுரை அளித்திருக்கிறார்., 

அந்த முன்னுரையை வாசிக்கும் போதே அவர் இந்த நாவலை எவ்வளவு தூரம் இரசித்து  இரசித்து வாசித்திருக்கிறார் என்பது புரிய  வருகிறது.

நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போது நமது மனநிலையும் அவ்வாறு தான் உள்ளது  என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இலக்கியம் அழகியலோடு இணைந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம்  கட்டுடைத்து  எளிமையையே உண்மையின் சாரத்தில் அழகாக்க முடியும் என்று  இந்த நாவலில்  நாவலாசிரியர் நிருபித்திருப்பதாக  தோழர்   பாலபாரதி அவர்கள் பாராட்டியிருப்பதும் மிகையல்ல  என்பதை நீங்கள் இந்த  நூ​லை வாசிக்க வாசிக்க புரிந்து கொள்ள முடியும்..

அடக்கு முறைக்கு எதிராக பஞ்சாலைத் தொழிலாளர்கள் தாங்களாகவே ஒன்று திரண்டு நடத்தும் தற்காப்பு போராட்டத்தின் வரலாறு தான். இந்த நாவலின் மையம்.ஆகு.ம்.

தங்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு தொழிற் சங்கம் அமைத்துக் கொள்ளவும் பல ஆண்டு காலம் வழங்கப்படாத ஊதிய உயர்வும் கோரிய தொழிலாளர்கள்  முதலாளியால் அலட்சியம் செய்யப்படுகிறார்கள். 

உரத்துக் கேட்டவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அல்லது கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். அப்படி படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவன் தான் கூலித்தொழிலாளியான முத்து மாடத்தியின் கணவனான வடிவேல்

 வைரவன் முதலாளியை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக படுகொலை செய்யப்படுகிறான். 

அவனது இரு நூறு ரூபாய் மதிப்புள்ள கைக் கடிகாரத்திற்காக அவன் கொலை செய்யப்பட்டான் என்று மக்கள் காரணம் சொல்கிறார்கள். 

ஆனால் முத்து மாடத்திக்கு மட்டும் உண்மை என்னவென்று தெரியம். முதலாளியின் அதிகாரம்  தான் அவளது கணவனின் உயிரை  பறித்ததென்று . 

ஆனால் முதலாளித்துவத்தின் அதிகாரம் தான் தொழிலாளி வர்கத்தின் உரிமையையும்  உயிரையும் எப்போதும் பறிக்கும் உயிர்க்கொல்லி என்று அவள் புரிந்து கொள்வதற்கு போதிய காலம் தேவைப்படுகின்றது 

அந்தக் காலம்  அவளுக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர்  ஊருகாலன் பொட்டலில் பஞ்சு மில் தொழிலாளர்களின் ஒன்று திரட்ட போராட்டத்திம் மூலம் கனிந்து வருகிறது. முதலாளிகள் தொழிலாளியைக் கொல்வது  என்ற பார்வை அகன்று முதலாளித்துவம்  தொழிலாளி வர்க்கத்தை கபளீகரம் செய்யும் சூட்சமம் அங்கே புலப்படுகிறது.. உழைப்பாழியை ஒதுக்கி விட்டு அவர்களது உழைப்பை மட்டும் ஸ்ட்ரா போட்டும் உறிஞ்சும் ஒரு மூன்றாந்தரத் சித்தாந்தம் தான் முதலாளித்துவம் என்பது புரியவருகிறது.

சித்தாந்தத்தால் சித்தாந்தத்தை எதிர்த்து வெற்றி பெறுவது எப்படி என்று  தொழிற் சங்கத் தோழர்கள் பாடம் கற்பிக்கிறார்கள். மிகக் குறைந்த காலத்திலேயே முத்து மாடத்தி தீரமிக்க போராளியாக உருவெடுக்கிறாள். அதாவது வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்தும் அளவிற்கு. 

முன்னூறு பேர்களுக்கும் குறையாத கூட்டத்திற்கு தினமும் உணவு  சமைத்துப் போடும் வேலையை போராட்டத்தின் வடிவமாகமும் கைக்கொள்ளுகிறாள். 

அதன் தொடர்ச்சியாக பல தலைவைர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் சித்திக்க ஆகச் சிறந்த பெண் தலைமையாக முத்து மாடத்தி தன்னை வளர்துக் கொள்கிறாள். 

நான்கு  பேர்களுக்கு முன்னால் நன்றி சொல்வதற்கே நடு நடுங்கியவள் இப்போது  பெரிய பெரிய தலைவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் இரண்டாயிரம் தொழிலாளர்களுக்கு மத்தியில் மைக்கில் தங்கு தடையின்றி தொழிற்சங்க உரையாற்றுகிறாள். 

எல்லாம் கனவு போல இருக்கிறது ஆனால் கற்றுக் கொள்பவர்களுக்கு காலம் கற்றுக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது.என்பது தான் எத்தனை உண்மை..

தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்ட பின்  மில் நிர்வாகம் தன் பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வருகிறது. அவர்களின்  கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறது.

போராட்டம் வெற்றி பெற்ற பின் தொழிலாளர்கள் முத்து மாடத்தியின் மகள் தனத்திற்கும் முத்துக்கண்ணணுக்கும் திருமணத்தை தாங்களே முன்னின்று நடத்துகிறார்கள்..

மதுரையிலிருந்து தலைவர் ஜோதி ராமுடன் பெருந்தலைவர் வாசுதேவனும் வந்து வாழ்த்துகிறார்.

‘’ அட்சய பாத்திரம்   நவீன மணிமேகலைஎங்கள் அன்னை  எங்கள் பசி தீர்த்து எங்களைக் காத்து போராட்டத்தை வென்றெடுத்த எங்கள் குலதெயவ்ம் தோழர் முத்து மாடத்தி வாழ்க வாழ்கவென்று கூட்டம் உணர்ச்சி சுழிப்பில் உற்சாகமாய கத்துகிறது..

முத்து மாடத்தி வெற்றி பெற்ற பெண் தோழராக மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறார்.

நாவலாசிரியரின் நோக்கமும் அது தான் என்று புரிகிறது.

நாவலாசிரியரை நாம் பாராட்டுவதற்கு பல காரணங்கள் இந்த நாவலில் காணக்கிடைக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானவைகள் என்றால் 

பெண்களை வையத் தலைமை கொள்ள வைக்கும் பாரதியின் கனவை இதில் நனவாக்கியிருப்பது. தான் முக்கியமானதாகும். இந்த நாவல் முழுவதையும் நாம் வாசிக்கும் போது மனதில் நிறைவாக நிற்பவர்கள் பெண்கள் தான். முத்து மாடத்தி நாகவல்லி சுப்பக்காள் என்ற பாத்திரங்கள் ஆளுமை கொண்டவைகளாக இருக்கின்றன.

அடுத்ததாக சமான்யர்களின் சரித்திரத்தை பேசும் நாவல் என்று கூட இதைச் சொல்லலாம். கூலித் தொழிலாளிகள் பஞ்சாலைத்தொழிலாளிகள்  விவசாயக்கூலிகள் லோடுமேன்கள் என எங்கு பார்த்தாலும் எளிய மனிதர்களே இந்த நாவலில் காணக்கிடைக்கிறார்கள்.. அவர்களின் கோபமும் தாபமும் நேசமும் மனிதாபிமானமும் வர்க்கப்புரிதல்களும் பேச்சுக்களும் ஏடாசிகளும்  மண்மணத்தோடு வாசிப்பாளர்களை திகைக்க வைக்கின்றன.

ரெங்கண்ணன் , அறிவண்ணன் , மொக்க ராசு ,நாகவள்ளி ,சுப்பக்கா முத்துக்கண்ணன்,  செண்பக பாண்டியன், ராசம்மா , வேலுத்தம்பி மலைச்சாமி ,ராவுத்தரம்மா ,சின்னச்சாமி ,முத்துச்சாமி,  கேரளபுத்திரன் என்று இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எளிய மொழி நடை இந்த நாவலின் இன்னொரு சிறப்பம்சமாகும்

கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வட்டார வழக்கான எளிய மொழியையே எங்கேயும் பேசுசிறார்கள். நாவலாசிரியர் மொழியை எளிய பாத்திரங்களின் வழியாக பேசவைக்கும் போது கூடுதல் அடர்த்தியும் மண்வாசமும் உடன் வந்து இணைந்து கொள்கின்றன.

’எம் பொண்ணு மக்கா உங்க பசியமர்த்துறதுதே எங் கொடுப்பினை .ஒங்க பாட்டுக்குச் சீசுவான்னு பார்க்குறதைப் பாருங்க சாமிகளா ‘’ என்று முத்து மாடத்தி ஆரம்பித்து வைக்கும் வட்டார வழக்கு மொழி நாவல் முழுவதும் தங்கு தடையின்றி பயணிக்கிறது.

**  இது லேசில்ல முத்து மாடத்தி தலைமை ஆபிஸிலிருந்து வந்திருந்த ஆங்கர் சொன்னார்

‘’ தொழிற் சங்க போராட்டங்கள்ளல இதெல்லாம் பழகிப்போச்சு

அல்லாரும் மதியக்கஞசிய அலுமினியம் ஈயம்னு தூக்குச்சட்டியில தான் கொண்டாருவாங்க ….அதப்பிடிச்சிக்கிட்டு சாயந்திருங்கள்ல ஊர்வலமாப் போனாக …அப்ப நிதே இதுக்குத் தலமயான்னு வழிமறிச்சு தாக்குனாய்ங்க..’’

என்று முக்கியமான பாத்திரங்கள் பேசுவதாகட்டும் .தேனி வட்டார வழக்கு  மொழி மிகச் செழுமையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எதார்த்த வாதம்  இதன் மகுடம் என்று சொல்லலாம்

எந்த இடத்திலும் ஆசிரியர் எதார்த்தத்திற்கு புறம்பான பகட்டான மொழியையோ மனிதர்களையோ படைத்துக்காட்டவேயில்லை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சோ வென்று பெய்யும் அடைமழையைப்போல கதை நிகழ்வதும் பாத்திரங்கள் பேசுவதும் நாமும் இந்தக் கதை மாந்தர்களோடே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது.

போராட்டத்தின் வடிவமும் உண்மையான தோழர்களின் பங்கேற்பும்

இந்த நாவலை உண்மையாக கண்முன் நிறுத்துகின்றன.

நியாயமான கோரிக்கைகளுக்காக அனுபவமிக்க அர்ப்பணிப்புள்ள தொழிற்சங்க தலைவர்களின் சீரிய தலைமையின் கீழ்  தொழிலாளத் தோழர்கள் முன்னெடுக்கும் நியாயமனான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறுகின்றன.

முதலாளித்துவம் தனது அத்தனை மூர்க்கத்தையும் முயன்று பார்த்து விட்டு கடைசியில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சமரசத்திற்கு இறங்கி வருவது..ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த வர்க்கப் போராட்டம் மகத்தான தலைவர்களையும் மகத்தான தோழர்களையும் இந்த மண்ணில் உருவாக்கி விட்டே மறைந்து போகிறது.

வாழ்ந்த தோழர்கள் நிஜப் பாத்திரங்களாகவே இந்நாவலில் பங்கெடுத்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு. .இந்த உத்தியை சிறப்பாக கைக்கொண்டதற்காக நாம் ஆசிரியரைப் பாராட்ட வேண்டும்.

மறைந்த மதுரைத் தோழர் ஜோதிராம் மற்றும் ராஜப்பா வெங்கடேசன் , ரேபேக்கா  ,கோமதி மற்றும் பெருந்தலைவர் வாசுதேவன் ஆகியோர் இப்பாத்திரங்களில் நிஜமாகவே நம் கண்முன்னால் நடமாடுவது நமக்கு அற்புதமான அனுபவத்தை தருகிறது.

தேனி மாவட்டத்தின் கடைவீதிகளும் ஊருகாலன் பொட்டலும் கொட்டக்குடி ஆறும் சந்தையும் வாழ்க்கையை குறை சொல்லாமல் வாழ்ந்து பார்க்கும் எளிய மனிதர்களும் நாவலை வேறு ஒரு உயர்ந்த தளத்திற்கு உயர்த்திச் செல்கின்றனர். என்பது உண்மை.

திரைப்படமாக எடுப்பதற்கு உகந்த நாவல் இது.

இந்த நாவல் திரைக்கதை அமைப்பதற்கும் திரைப்படமாக எடுக்கப்படுவதற்கும் உரிய அத்தனை கூறுகளோடும் உள்ளது. .நல்ல திரைக்கலைஞர்கள் இந்த நாவலை வாசித்தால் நிச்சயமாக இந்தப்படைப்பை திரையாக்கம் செய்ய முடியும் என்பதே என் கணிப்பு.

சுடு மண்ணில் விழுந்த மழைத்துளி நம் கண்முன்னரே ஆவியாகி மேலே செல்வதைப்போல அவர்களின் வாழ்க்கை நம் கண்முன்னர் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. 

இந்த அனுபவங்கள் எல்லாம் இன்று நாவல் எழுத வரும் இளம் படைப்பாளிகளுக்கு மகத்தான பாடங்களாகும்

மகத்தான படைப்புகளின் சாரம் வாழ்க்கையின் அனுபவம் தான் என்பது நம் கண்முன்னர் விரிந்து கொண்டே செல்கிறது. இப்படி ஆழ்ந்து அனுபவிக்க அதிசயிக்க எத்தனையோ சிறப்பம்சங்கள் இதில் இருந்தாலும் போதுமான  நியாயமான விமர்சனங்களை  இந்த நாவலின் மீது வைப்பது வாசகர்களாகிய  நமது கடைமையாக இருக்கிறது.

முதலாவதாக முத்து மாடத்தியை தவிர மற்ற அனைத்து பாத்திரங்களும்  நம் மனதில் அழுத்தமாகப் பதியவில்லை என்பது தான் கொஞ்சம் கசப்பான உண்மை

 முத்து மாடத்திக்கு அடுத்து ஒரளவாவது நம் மனதில் அழுத்தம் திருத்தமாக பதிவது சுப்பக்காள் பாத்திரம்தான். ஏனையோர்கள் செய்தி சொல்வோர்களாக கதையை நகர்த்திச் செல்வோர்களாக மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். என்று சொல்ல வேண்டும்

மிகப் பிரமாண்டமான சமூக நாவலாக  வளர்ந்திருக்க வேண்டிய இந்த நாவல்  சமூக பொருளாதார வரலாற்றுக் காலகட்டங்களை ஆலமரமாக கிளை பரப்பி பேசாமல் முத்து மாடத்தியை மட்டுமே சுற்றியே  பின்னப்பட்டு  பயணிப்பதால் ஒரு நெடுங்கதை போலத் தோற்றம் தருகிறது.

போராட்டத்தின் ஆரம்பமே பஞ்சு மில்லில்  சங்கம் வைக்க அனுமதியும் ஊதிய உயர்வு கோருதலும் தான் என்றால் அதற்கான காரணங்கள் அழுத்தம் திருத்தமாக உள்ளே கூறப்படவில்லை. 

ஒரு நியாயமான போராட்டத்திற்கு அத்தனை இடர்களையும் தாண்டி ஒரு ஊரே ஒத்துழைப்பு தருகிறது என்பதை அழகாக சித்தரித்துச் செல்கிறது நாவல். இந்த நாவலை வாசிக்கும் நாமும் இந்தப் போராட்டதில் மறைமுகமாக பங்கு பெறுகிறோம். .போராட்டம் இறுதியில் வெற்றி பெற வேண்டுமென்று மனதார ஆசைப்படுகிறோம். அது படைப்பாளியின் படைப்பின் மேன்மையை பறை சாற்றுவதாக உள்ளது.

.ஊருகாலப் பொட்டலிலும் பந்தல் மேடைகளிலும் தேனியின் வீதிகளிலும் கதை மாந்தர்களோடு உடன் பயணிக்கிறோம். இவை அனைத்தும் நாவலாசிரியரின் கருத்தாழமிக்க கை வண்ணத்திற்கு கிடைத்த வெற்றியாகும்

கட்டுக்கடங்காத காட்டாறு என்பது  கங்கு கரை காணாது பொங்கும் புதுப்புனலோடு  எண்ணற்ற உயிர்களோடும் உயிரற்றவைகளோடும் பொருட்களோடும் கடலை நோக்கிய செல்லும் ஒரு அதிசயப் பயணம் என்றால் ஒரு அற்புதமான நாவலும் அவ்விதமே. என்று சொல்ல வேண்டும்.

 வாழ்க்கை என்பது கூட ஒரு  காட்டாறு தான். இந்தச் சமூகத்தின்  அத்தனை கூறுகளையும் தன்னுள் பொதித்துக் கொண்டு காலமென்னும் கடலில் முன்னேறிச் செல்லும் காட்டாறு தான் அது. 

எண்ணற்ற கிளை நதிகள் அதற்குள் வந்து கலக்க வேண்டும். நொங்கும் நுரையோடும் .படித்துறை தோறும் பயணித்து பலப் பல  பெயர்களோடு ம்அது கடலில் போய் கலக்கும்  போது ஒரு நிறைவு ஏற்படுகிறது.

இந்த நாவலும் கூட அப்படி ஒரு பயணத்தை தான் துவக்கியிருக்கிறது. அது கடலைச் சென்றடைவதற்கு இன்னும் பலகாத   தூரம் பயணிக்க வேண்டுமென்றாலும் அது அதன் பயணத்தை துவக்கி விட்டது என்பதை அறிந்து மனதார வாழ்த்தி வரவேற்போம்.

அல்லி உதயன் தோழருக்கு 

அன்புடன்
தங்கேஸ்
தமுஎகச
தேனிமாவட்டம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. தங்கேஸ்

    மிக்க நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *