விஞ்ஞானமும்.. நவீனமும்.. வளர்ச்சியும் கான்கிரீட் கட்டிடங்களாக முளைத்தெழும், வாய் திறந்த இருட்டு, வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி முடிப்பதைப் போன்று அந்த பச்சை மூங்கில் சரசரக்கும் மலை கிராமத்திற்குள். இயற்கை வளங்களுக்கு எதிராக மனிதர்களின் பேராசை எளிய மனிதர்களின் சுதந்திரத்தை இயற்கையின் மேல் கொண்ட காதலை வளர்ச்சியின் பெயரால் வஞ்சகமாக தந்திரமாக களவாடி,பல வண்ண துணிகளைப் போர்த்தி எளிய மக்களின் எலும்புக்கூடுகளை செங்கற்களாய் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றே எனக்கு கிடைத்தது.. இத்தனை நாள் இவ்வளவு மொன்னையாகவா இருந்திருக்கிறோம் என்று..

இந்திய ஒன்றியத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நாகாலாந்து தனி மாநிலம்..
முற்றிலும் மலை சூழ்ந்த பிரதேசம். 17 வகையான பெரிய இனக் குழுக்களும் 20க்கும் மேற்பட்ட சிறிய இனக் குழுக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு மொழி பேசக் கூடியவர்கள்.
இனக்குழுக்களின் குரல்ஒலி எவற்றிற்கும் எழுத்து வடிவம் கிடையாது.

மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் மக்களின் அலுவலகத் தொடர்பு மொழியாகவும் இருப்பது ஆங்கிலம் மட்டுமே.

இந்தியாவின் விடுதலை குறித்து பிரிட்டிஷாரால் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்ட காலத்திலேயே சைமன் கமிஷனிடம் எங்களை தனி நாடாக அறிவித்திட வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அங்கு இருக்கும் அரசியல் பேசும் குழுத் தலைவர்களால். தாங்கள் வாழும் பகுதியை 1947 ஆகஸ்ட் 14 அன்று தனி நாடாக அன்றைக்கு நாகாவில் இருந்த முன்னணி அரசியல் அமைப்புகள் அறிவித்தது. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியை இன்றளவும் நாகாலாந்து மாநிலத்தின் அமைதி இன்மையில் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இந்திய விடுதலையைத் தொடர்ந்து, அங்கு இருக்கக்கூடிய முன்னணி அரசியல் அமைப்புகளோடு பல்வேறு வடிவங்களில் இந்திய அரசு நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதின் விளைவாக 1963ல் தனி மாநிலமாக கோஹிமாவை தலை நகராகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையின் வழிகாட்டுதலோடு அங்கு இருக்கும் இனக்குழுக்களின் தனித்துவத்தை பாதுகாப்போம் என்கிற ஒன்றிய அரசின் உத்திரவாதத்தோடு.

பெரும் துயரம் என்னவென்றால் இப்படியான ஒரு இணைப்பினை ஏற்படுத்துவதற்காக அங்கே இருக்கக் கூடிய பல பழங்குடி மலை மக்கள் பெரும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாகி தங்களின் உயிரையும் ராணுவத்தின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலி கொடுத்து இருக்கிறார்கள் என்பதுதான் ரத்தம் தோய்ந்து வரலாறு. ஆனாலும் கூட இன்றளவும் அந்த மக்களின் தனித்துவ பண்பாடு கலாச்சாரம் பழக்க வழக்கம் என்பதெல்லாம் கேள்விக்குறியாக மாறி அவர்களது பேச்சுமொழி இத்தனை ஆண்டு காலமான பின்பும் எழுத்து வடிவம் இல்லாதது இருப்பது தான் பெரும் கவலையாகும்.

அவர்களது வாழ்நிலை வாழ்வியல் வழக்கங்கள் கலைக்கூறுகள் இப்படி அனைத்துமே எழுத்து வடிவம் இல்லாத வாய்மொழி ஒலி வடிவிலேயே இன்றளவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படிப் பேசப்படும் பாடப்படும் அனைத்தும் அந்த மக்களிலிருந்து படித்து முன்னேறியவர்கள், அறிவுத் தளத்தில் இன்றைக்கு இயங்கக் கூடியவர்கள் அவைகளை உள்வாங்கி ஆங்கிலத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தாய் மொழியில் இருக்கக்கூடிய உயிர் இன்னொரு மொழிக்கு கடத்தப்படும் பொழுது அதன் மொத்த வலியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாட்டங்களோடும் கடத்த முடியுமா என்பது கேள்வியாக இருந்தாலும் வேறு வழி அம் மக்களுக்கு கிடையாது என்பதே இன்றைக்கு இருக்கக்கூடிய நிஜம். இப்படியான கல்வி அறிவும் கூட 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு வந்து இறங்கிய கிறிஸ்துவ மதத்தின் கொடையாகும்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலங்களில் அங்கு இருக்கக்கூடிய நாகா மக்கள் தொகையில் மூவருக்கு ஒரு ராணுவ வீரர் என்கிற அடிப்படையில் மக்கள் வாழும் பகுதி முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டது. தன்னுரிமையை சுய நிர்ணயத்தை காப்பதற்காக மக்களால் திட்டமிடப்பட்டும்; தன் எழுச்சியாகவும் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் அப்போது ஆட்சியில் இருந்தவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் கூட இன்றளவும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது சின்ன சின்ன அளவில் பல்வேறு இனக்குழுக்களினால்.

அம் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள் அனைத்தும் மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட எல்லா விதத்திலும் பின்தங்கியே இன்றளவும் தொடர்வது இந்திய ஒன்றியத்தின் தலைமை பொறுப்பிற்கு அதன் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாகும். இது சிறுபான்மை மக்கள் குறித்தான அலட்சியத்தின் இன்னொரு முகமாகும். இந்தியாவின்
பன்முகத்தன்மையினை அங்கீகரித்து அரவணைத்து செல்வதில் தொடர்ந்திடும் இந்திய ஒன்றியத்திற்கு தலைமையேற்று நடத்தும் அரசின் அரசியல் நிலைப்பாட்டின் பிரதிபலிப்புகளே இவைகள் எல்லாமும்.

தொகுப்பிற்குள் நுழைவோம்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகள்.. மலை முழுவதும் வானுயர வளர்ந்திருக்கும் மூங்கில் காடுகள்.
பச்சை மூங்கில் உரசி வரும் குளிர் காற்று.. அங்கொன்றும் இங்கொன்றுமாக எளிய மக்களின் குடிசைகள் வளர்ந்து வரும் நவீனத்தின் அடையாளங்களாக ஆங்காங்கே சிமெண்ட் வீடுகள்.. தென்கிழக்கு இந்தியாவின் ஓரத்தில் இருக்கக்கூடிய நாகாலாந்து மாநிலம். நவீனத்தின் நாகரிகத்தின் பெயரால் அந்த மலைவாழ் பழங்குடி இன மக்கள் மத்தியில் அதிகாரத்தின் விரல் பிடித்து நுழைந்து இருக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளை சிதைத்து அவர்களின் வாழ்விடங்களையும் தன் வசப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது.

எழுத்து வடிவத்தில் இருக்கக்கூடிய பல இன குழுக்களின் நிஜ வரலாறு மாற்றி எழுதுவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பண்பாட்டுத் தளத்தில். குரல்ஓலி வடிவில் மட்டும் தங்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் கடத்திக் கொண்டிருக்கும் இப்படியான இனக்குழுக்கள் இந்தியாவிற்குள் எதும் இல்லை என்பதை நிறுவுவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்கள் என யோசிப்பதை நம்மால் ஒதுக்கி வைத்து விட முடியாது. பாசிசம்.. லாபம் எதையும் செய்யும்.

இப்படியான சூழலில் பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதி வாழ் மக்களின் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் அதில் இருக்க கூடிய மனித குல மேம்பாட்டிற்கு அவசியமானவைகளையும் நாம் தெரிந்துதெரிந்து அறிந்து கொள்ள வேண்டியதென்பது பன்முகத்தன்மையின் உறுதிப்பாட்டுக்கு நமது பலத்திற்கு இன்னும் கூடுதல் சக்தியை அளித்திடும்.

நாகலாந்து மாநிலத்தின் பெண் ஆளுமைகள் பலரின் சிறுகதைகளையும் கவிதைகளையும் ஓவியங்களையும் தொகுப்பாக ஆங்கிலத்தில் கொண்டு வந்து இருக்கிறார் நாகா இனத்தின் பூர்வ குடிகளின் தொடர்ச்சியாக அறிவுத்தளத்தில் தீவிரமாக செயல்பட்டு, தன் மூலவேரின் அழகும் உறுதியும் திறமையயையும் ஆய்வு செய்து வரும் கவிஞர் சிறுகதை எழுத்தாளர் அனங்கலா ஜொ யெலாங்குமர்.

அதை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் ச. வின்சென்ட் அவர்கள். நல்லதொரு முறையில் சிறப்பாக வடிவமைத்து கடமை உணர்வோடு இந்திய நாட்டின் எல்லையோரத்தில் இருக்கக்கூடிய நாகாலாந்து மணிப்பூர் அஸ்ஸாம் பூர்வ குடிகளின்.. மலைவாழ் மக்களின் பன்முகத்தன்மையினை அறிந்து கொள்ள தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறார்கள் பன்முக மேடை வெளியிட்டகம்.

கள ஆய்வாளர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஓவியர்கள் எழுத்தாளர்கள் பத்திரிக்கையாளர்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் இப்படி பல பெண் ஆளுமைகளின் படைப்புகள் சிறுகதைகளாக கவிதைகளாக ஓவியங்களாக தொகுப்பிற்குள் அடங்கி இருக்கிறது. இவர்கள் அனைவருமே நாகலாந்து மண்ணின் பூர்வ குடிகளின் வாரிசுகள். நவீன உலகில் மாறி, மாற்றப்பட்டு வரும் பல நல்ல ஏற்கத்தக்க தம் மூதாதையர்கள் கடைபிடித்து வந்த பல பழக்க வழக்கங்களை, வாய்மொழி இலக்கியங்களை சொல்லாடல்களை மரபுகளின் வேர் அறிந்து அவைகளின் ஊடுறுத்து கலை இலக்கியங்கள் வழியாக பொது சமூகத்திற்கு வெளிக்கொண்டுவரும் மிகச் சிறந்த பணியினை ஆங்கில வழியில் கல்வி பயின்ற இப் பெண்கள் சொந்த மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இதற்கான பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோகிமா நகருக்கு அருகாமை மலை கிராமம் ஒன்றில் குடியிருக்க கூடிய அரசு ஊழியர் ஒருவர்.
ஓய்வு பெறக்கூடிய சூழலில் அவரின் மனதையும் ஓய்வு பெற்ற பிறகு அவரது எண்ண ஓட்டத்தையும் பதிவு செய்து அதன் ஊடறுத்து நவீனமும் விஞ்ஞானமும் கான்கிரீட் கட்டிடங்களாக முளைத்தெழும்.. வாய் திறந்த இருட்டு வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி முடிப்பதைப் போன்று அந்த மலை கிராமத்திற்குள் நவீனமும் வளர்ச்சியும். இயற்கை வளங்களுக்கு எதிராக மனிதர்களின் பேராசை எளிய மனிதர்களின் சுதந்திரத்தை இயற்கையின் மேல் கொண்ட காதலை வளர்ச்சியின் பெயரால் களவாடிச் செல்கிறார்கள் என்பதை தனி மனித எண்ணத்திலிருந்து படைத்து இருக்கிறார். எமி_சென்லா_ஜாமீர் எழுதிய குன்றுகள்_வீடுகளாய்_வளரும்_இடம் என்கிற தன்னுடைய சிறுகதையில். குறிப்பிட்ட ஒரு நகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் பொழுது அல்லது நிறுவப்படும் பொழுது அந்த நகரைச் சுற்றி இருக்கக்கூடிய அத்தனை நிலங்களையும் எளிய மக்களிடமிருந்து தங்களின் கள்ளத்தனம் மிகுந்த குறுக்கு புத்தியால் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்டுகள், வியாபாரிகள், பணம் தின்னிகள் என்பதை அந்தப் பெரியவரின் வலியோடு அம் மலை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதைக்குள் அணுகியிருக்கிறார்.

வெட்டுப்பட்டது என்கிற கதை
விஷ்ய_ரீற்றா_க்ரெச்சா என்பவரால்
எதிரிகளின் தலை அறுத்து கொண்டுவரும் மரபில் வந்த இன குழுக்களின் தொடர்ச்சிகள், நிகழ்காலத்தில் எதிர் எதிர் அரசியல் அமைப்புகள் நடத்தக்கூடிய நீயா நானா போராட்டத்தில் கைகளில் கொலை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அரசு பேருந்துகளை எரித்துக் கொண்டும்.. கடைகளை சூறையாடிக் கொண்டும் மைதானம் ஒன்றில் ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் நடத்திட எதிர் எதிரில் நிற்கும் பொழுது; அறிந்த அந்தக் கிராமத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
ஆயுதங்களோடு இருக்கக்கூடிய ஆண்களிடத்தில் அவர்களின் வன்முறைக்கு எதிராக பேச்சு நடத்தி அவர்களின் சண்டையை தடுத்து நிறுத்துகிறார்கள். கிராமம் அமைதியாகிறது. தமக்கு எதிரான குழுவைச் சார்ந்தவர்களின் தலைகளை அறுத்த மரபில் வந்த வாரிசுகளின்
மன மாற்றத்தை கண்டு அவர்களின் உயிர் மேல் கொண்ட காதலை கண்டு
வன்முறை மரபின் கடைசி எச்சமாக இருக்கக்கூடிய அந்த முதியவர் ஒருவரின் வழியாக கதையை இனக்குழுக்களின் தொடக்க கால பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் வழியாக இன்றைய அரசியல் நிகழ்வையும் அழகாக தெளிவாகச் சொல்லி இருப்பார்.

பாலியல் கொடூரத்திற்கும்,தவறுக்கும், குற்ற உணர்ச்சிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை அந்த மக்களின் வாழ் நிலையில் இருந்து
மன்னிக்கும்_சக்தி என்கிற கதையில்
அவினுஓ_கையர் எழுதியிருப்பார் நிகழ்காலப் பெண்களின் வலியோடு.

ஆணாதிக்கம் வலியுறுத்தியும் பெண் உடல் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அம்மக்களுக்கு கல்வி அறிவு வழங்கிய கிருத்துவமும் எப்படி போற்றி வளர்க்கிறது என்பதை
தொகுப்பில் இருக்கக்கூடிய பல கதைகள் இனக்குழுக்களில் ஆரம்பித்து இன்றைய காலம் வரையில் மக்களின் பழக்க வழக்கங்களில் வழியாக
ஆழமாக சொல்லி இருக்கிறார் கதை ஆசிரியர்கள் ஆணாதிக்கத்தின் திமிர்த்தனத்தை.

ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்களின் வலுவான கருத்துக்களும் கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.

பின்வரும் கவிதைக்குள்
கடைசி வரியில் ஆண் கடவுள் என்று முடிக்கும் பொழுது.
“கடவுளுக்கு மேலே பெண்” என்று முடிப்பார் கவிஞரும்
இத்தொகுப்பின் ஆசிரியருமான
அனுங்லா jo லாங்குமார்

ஆண்:
தரைக்கு மேல் படுக்கைக் கால்கள்
பெண்:
படுக்கைக் கால்களுக்கு மேல் படுக்கைச் சட்டம்
ஆண்:
படுக்கைச் சட்டத்திற்கு மேல் கட்டில் பலகை
பெண்:
பலகைக்கு மேல் அந்தப் பெண்
ஆண்:
அந்தப் பெண்ணுக்கு மேல் அந்த ஆண்
பெண்:
அந்த ஆணுக்கு மேல் நெய்யப்பட்டத் துணி
ஆண்:
நெய்யப்பட்டுத் துணிக்கு மேல் கூரை விட்டங்கள்
பெண்:
கூரை விட்டங்களுக்கு மேல் உத்தரங்கள்
ஆண்:
உத்தரங்களுக்கு மேல் பனை ஓலை கூரை
பெண்:
பனை ஓலை கூரைக்கு மேல் முகட்டில் ஓலை
ஆண்:
முகட்டு ஓலைக்கு மேல் மூங்கில் முகட்டுத் தொப்பி, அதன் மேல் கடவுள்.
பெண்:
கடவுளுக்கு மேல் பெண்.

நாகா நாட்டுப்புறப் பாடல்.
ஆணும் பெண்ணும் பாடுவதாக.

பெண்ணுடைய சொல்தான் முத்தாய்ப்பு.

மண்ணில் ஆணாதிக்கம் தொடங்கிய அதே காலகட்டத்தில் அதற்கு எதிரான பெண்களின் குரலும் வலுவாக பதிவாகி இருக்கிறது என்பதை நாகாலாந்து தொகுப்பில் காணப்படும் இந்த நாட்டுப்புறப் பாடலும் தெளிவாக்கி இருக்கிறது.

இப்படி ஆழமான அழகியல் சார்ந்த அரசியல் இணைத்து பல கவிதைகளும் சிறுகதைகளும் ஓவியங்களும் தொகுப்பு முழுவதும்.

அரசு அதிகாரம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய தீவிரவாத இன குழுக்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் அப்பாவி எளிய மக்களின் அச்சத்தையும் மன உளவியலையும் தங்களின் சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.

கதவுகள்_திறக்கப்படும்_போதினில் என்கிற இந்தத் தொகுப்பில்
12 சிறு கதைகளும்
19 கவிதைகளும், பாடல்களும்
12 ஓவியங்களும் இடம்பெற்றிருக்கிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் நாம்.. கொண்டாடக்கூடிய நாம்.. ஒற்றை கலாச்சாரம் ஒற்றை மொழி இப்படியான பாசிசக் கருத்துக்களை எதிர்க்கக் கூடிய நாம்.. நாகாலாந்து மக்களின் பல இன குழுக்களின் பண்பாடு கலாச்சாரம் அவர்களின் வாழ்வு முறை அரச பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு எல்லாவற்றையும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

நமக்கான திறவுகோலாக இந்தத் தொகுப்பு இடம்பெறும் என்பது நிச்சயம்.

இந்த தொகுப்பை கொண்டு வருவதற்கு
பெருமுயற்சி எடுத்த அனைவருக்கும் நம்முடைய அன்பினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

கருப்பு அன்பரசன்.

நூல் : கதவுகள் திறக்கப்படும் போதினில் (சிறுகதைகள் கவிதைகள் ஓவியங்கள்)
நாகாலாந்து பெண் படைப்பாளிகளின் தொகுப்பு
ஆசிரியர் : அனங்கலா ஜொ யெலாங்குமர்
தமிழில்: ச வின்சென்ட்
விலை : ரூ.₹300/-
வெளியீடு : பன்முக மேடை

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *