பள்ளிக்கூடத்தைக் கட்டடித்துவிட்டு வாய்க்காலுக்கு ஓடிவிடுவதை எப்படியும் யாராவது போட்டுக்கொடுத்து விடுவார்கள். அப்போதெல்லாம் அம்மா சொல்வார்.

” நீ படிக்கவெல்லால் லாயக்கில்ல கழுத மேய்க்கதான் லாயக்கு..”

இருபதாண்டுகளுக்கு முன்பு கல்ஃபிலிருந்து திரும்பிய மாமன் மகனிடம் உறவினர்கள் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்.

” கரக்டான ஏஜெண்ட் மூலமா போகனும். இல்லனா ஒட்டகம் மேய்க்க போட்ருவானுக..”

எங்கள் தெருவிலிருந்து கொஞ்சம் தொலைவில், தினந்தோறும் ஒரு காலி மைதானத்தில் சிறுமியொருத்தி ஆடுமேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பட்டியில் வளர்க்கப்படும் ஆடுகளின் வாழ்க்கைமுறையை நண்பரொருவரின் ஆட்டுப்பண்ணைக்கு ப்ளாட்பார்ம் அமைக்கும்போது கவனித்திருக்கிறேன்.

ஆடு மேய்த்தபடி இருக்கும் சாந்தமான இயேசுநாதரின் முகத்தைப் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் தோன்றும். ஆடு மேய்ப்பது அவ்வளவு கடினமான வேலையா என்ன?

பசுமையான ஒரு மலைச்சாரலில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கும் போது மர நிழலில் அமர்ந்து புல்லாங்குழல் இசைக்கும் ஆட்டுக்காரச் சிறுவனை தமிழ் சினிமாக்கள் காட்டியிருக்கின்றன.

எவ்வளவு அழகான காட்சி அது. அவ்வளவு ரம்யமான சூழல் அது. எவ்வளவு இலகுவான வேலை அது என்றெல்லாம் என்னைப்போலவே உங்களுக்கும் என்னமிருந்தால் ஆடு ஜீவிதம் புதினத்தை வாசித்து விடுங்கள்.

இப்போதெல்லாம் ஆடுகளைப் பார்க்கும்போது நஜீபின் கவலை தோய்ந்த முகமும். உயிரின் கடைசிச் சொட்டைப் பாதுகாத்துக் கொள்ள, வீங்கிச் சீழ்பிடித்த கால்களை இழுத்துக்கொண்டு கடும் பாலைவனத்தில் அவன் மேற்கொண்ட பயணங்களும்தான் நினைவுக்கு வந்து பதறவைக்கிறது.

நாலு காசு சம்பாதித்து ஊரில் சின்னதாய் ஒரு வீடு கட்டிவிடவேண்டுமென்ற ஆசையோடுதான் அவன் விமானமேறினான். இப்போது அவனுக்கு வீட்டின் மீதோ, அம்மாவின் மீதோ, மனைவியின் மீதோ பிறக்கப்போகிற குழந்தையின் மீதோ நினைவுகள் வருவதில்லை. அவனது ஆசையெல்லாம் உயிரை உறிஞ்சிக்குடிக்கும் சூரிய வெப்பத்திலிருந்து தன் உடலைக் காத்துக்கொள்ள கொஞ்சூண்டு நிழல். ஒரு குவளை குளிர்ந்த நீர். கால்நீட்டி உட்கார ஒரு ஐந்து நிமிட ஓய்வு.

ஊரில், எப்போதுமே தண்ணீரிலேயே புழங்குகிற வேலை செய்துவந்தவன். இங்கே ஒரு குவளை தண்ணீரை எடுத்து முகம் கழுவினால் சாட்டையடி விழுகிறது. மழை வந்தால் மட்டுமே குளிக்க முடியும். ஆடுகளோடு ஆடாய் சடைபிடித்த தலையோடும் அழுக்கடைந்த உடலோடும் உயிர் பிழைத்துக்கொண்டிருந்தவன் அங்கிருந்து தப்பி பாலைவனத்தில் சிக்கிக்கொள்கிறான். சில நிமிடங்கள் வீசும் மனற்காற்றில் இடுப்புயரம் புதைந்து விடுகிறது. பலநாட்கள் தண்ணீரும் உணவுமில்லாத பயணம். சொட்டுச் சொட்டாய் உலரும் உயிர் இயக்கம். இதையெல்லாம் வாசிக்கும்போது பதைபதைப்பும் நடுக்கமும் தொற்றிக்கொள்கிறது.

எளிமையான மொழி நடையில் சொல்லப்பட்டிருக்கும், மனதை உலுக்கியெடுக்கிற நாவல். கட்டாயம் வாசித்து விடுங்கள்.

– சம்சுதின்ஹீரா

நூல் : ஆடு ஜீவிதம்
ஆசிரியர் : பென்யாமின்
தமிழில் : எஸ்.ராமன்
விலை : ரூ.₹280/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *