நூல் அறிமுகம்: பென்யாமின் ‘ஆடு ஜீவிதம்’ (தமிழில்) விலாசினி – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: பென்யாமின் ‘ஆடு ஜீவிதம்’ (தமிழில்) விலாசினி – இரா.சண்முகசாமி




மனிதன் போர்வையில் வாழும் மிருகங்களை காணவேண்டுமெனில் எதிர் வெளியீட்டின் ‘ஆடு ஜீவிதம்’ நூலை வாசியுங்கள் தோழர்களே. கொடூர மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன இன்னும் உயிர்ப்போடு.

பாலைவன விஷப்பாம்புகளெல்லாம் பெரும் கருணை கொண்டவை. அவைகள் சீறிப்பாய்ந்து வரும்போது நாம் பாலைவன மணலில் தலையை புதைத்து அமைதியாக படுத்திருந்தால் நம்மை எதுவும் செய்யாமல் அவை நம்மீது ஊர்ந்து சென்றுவிடும். அவைகள் சென்றபின் அவைகள் உரசிச் சென்றதால் ஏற்பட்ட எரிச்சல் மட்டும் தான் உடம்பில் தெரியும். ஆனால் மனித மிருகங்கள் தன் கண்பார்வையிலேயே கொடூர விஷத்தை வைத்துக்கொண்டு அலைவதை ஓர் அரசின் விதியாகவே பார்க்கலாம்.

நானும் சிறிய வயதில் அரபு நாடுகளில் நிறைய கொடூர சித்ரவதைகள் நடந்துள்ளதை கேள்விப்பட்டுள்ளேன். அதெல்லாம் எப்படி இருந்திருக்குமென்று இந்நாவலை வாசித்தவுடன் தான் உணர முடிந்தது.

நான்கு மணி நேரத்தில் வாசித்து முடித்தேன். வாசிக்கும்போது குரல் உடைந்து அழவேண்டும் போலிருந்தது. நாவலின் இறுதியில் அழுதேவிட்டேன்.

நீரும், உணவும் கொஞ்சம் கிடைத்தாலும் வாழலாம் என நினைப்போம். நீரே மூன்று நான்கு நாட்களுக்கு கொடுக்காமல் தடுக்கும் கயமத்தன மிருகங்களைத்தான் இந்நூலில் பார்த்தேன் தோழர்களே.

ஆடுகள் குடிக்க தாராளமாக நீரும், உணவும் கிடைக்கும். ஆனால் மனிதனுக்கு அந்த வசதி இல்லை. சரி ஆடுகள் குடிக்கும் தொட்டி நீரை குடிக்கலாம் என்று தலை கவிழ்ந்தால் முதுகில் சலார் என்று பெல்ட் விளாசும். கொடூர பசியாக இருந்தாலும் அப்படியே தான் கிடக்கனும். தன்னை கண்காணிப்பவனிடமிருந்து தெரியாமல் ஆடு குடிக்கும் தண்ணீரையும், ஆடு சாப்பிட்டு மீந்த கோதுமையையும் உண்ணும் வாய்ப்பு கிடைத்தாலே பேரின்ப காலமாகும்.

தோழர்களே நீங்கள் நம்புவீர்களா 3 ஆண்டுகள், 4 மாதங்கள், 9 நாட்கள் ஒருவன் குளிக்காமல் இருந்தால் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் அதுதான் உண்மை.

வளைகுடா நாடுகள் வாரி வழங்கும் சொர்க்கம் என்று படையெடுத்தவர்கள் ஏராளம். ஆனால் அதைவிட வாடி மடிந்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள் என்றே தெரிகிறது.

எவனையோ நம்பி பணம் கட்டி விசா எடுத்து வெளி மண்ணில் இறங்கி யாரோ வந்து அழைத்து போவார்கள் என்று காத்திருந்து ஏடிஎம் இயந்திரத்தில் முரட்டுத்தனமாக பணத்தை கொள்ளையடித்த கூட்டம் போல் விமான நிலையத்தை விட்டு வெளியே குழந்தைகள் போல் அப்பாவியாக நிற்கும் வேலை தேடி வந்தவர்களை திருட்டு கும்பல் கடத்திகொண்டு போய் பாலைவனத்தில் எவ்வித வீடும், தங்குவதற்கு குடிசையுமின்றி ஆடுகள் வாழும் பட்டியிலேயே வானமே கூரையாக கோடையின் கொடும் வெயிலுக்கும், இரவின் கடும் குளிருக்கும் தன் உடம்பை மணலில் காணிக்கையாக்கி அதிகாலை 5மணி முதல் இரவு 10மணிவரை ஆடுகளை மேய்த்தும், உணவளித்தும், ஒட்டகங்களுக்கு உணவு மூட்டைகளை சுமந்து கொட்டியும் களைத்துபோன ஒரு கேரள மனிதனின் உண்மை கதைதான் இந்த ஆடு ஜீவிதம் நூல் உருவானதிற்கு காரணம் தோழர்களே.

ஒரு சொட்டு நீரின்றி ஓரிரவு இரண்டிரவு அல்ல பலநாள் இரவு பகல் மனிதன் உழன்றிருக்கிறான் என்றால் இந்த உலகம் எதற்கு இன்னும் உயிரோடு இருக்கிறது. பாரதி சொன்னதுபோல் அழித்துவிட வேண்டும். அவ்வளவு கோபம் வருகிறது தோழர்களே.

ஒன்று மட்டும் புரியவில்லை. ஒருநாட்டின் குடிமகன் வேறொரு நாட்டில் ஏதோவொரு காரணத்திற்காக சென்றால் அவன் திரும்பி வரும்வரை தன் சொந்த நாடு கவனத்தில் கொள்ளாதா. விசா எடுத்து பயணித்தவன் என்ன ஆனான் என்று தன்னுடைய டிஜிடலில் குறித்து வைத்து தேவைப்படும்போது வெளிநாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு கேட்காதா. அல்லது உறவினர்கள் புகார் அளித்த பின்பாவது துரிதமாக செயல்பட்டு தன் நாட்டு குடிமகன் எங்கே? அவனை உடனே அனுப்பவில்லையெனில் சம்பந்தப்பட்ட நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க சொந்தநாடு களத்தில் இறங்காதா என்று அப்பாவியாக மனம் கேட்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. மதவெறி எம்மண்ணிலிருந்தாலும் அது மதவெறியில் உலகம் முழுவதும் ஒற்றுமையாகவே இருக்கிறது. மக்களாகிய நாம்தான் இந்த பிற்போக்கு மனிதத்தன்மையற்ற முகங்களிடமிருந்து நம் மக்களை காக்க வேண்டியிருக்கு தோழர்களே.

ஆசிரியர் பென்யாமின் எழுத்தில் விலாசினி அவர்களின் அருமையான மொழிப்பெயர்ப்பில் இந்நூலை மிகவும் விரைவாக வாசிக்க முடிந்தது. 46ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி அலமாரியில் அடுக்கியதோடு மறந்து போனேன். தோழர் Samsu Deen Heera அவர்களின் அருமையான விமர்சனத்தில் அவருக்கு சபதம் கொடுத்த 24 மணி நேரத்துக்குள் வாசித்து முடித்தேன் தோழர்களே.

உலகில் வெளிநாட்டில் வேலை செய்ய செல்லும் ஒவ்வொரு உயிரும் இனி பாதுகாப்பாக இருக்கனும்னா அதற்கான விழிப்புணர்வு வேணும்னா இந்நூலை அவசியம் வாசியுங்கள் தோழர்களே. ஆடு வாழும் வாழ்க்கையை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆடாகவே மாறி வாழ்ந்த மனிதனின் கதையை பார்க்கனும்னா அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!! தோழர்களே!!!

இரா.சண்முகசாமி
புதுச்சேரி
நூல் : ஆடு ஜீவிதம்
ஆசிரியர் : பென்யாமின்
தமிழில்: விலாசினி
விலை : ரூ.₹250/-
வெளியீடு : எதிர் வெளியீடு 

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *