நூல் அறிமுகம்: இமையத்தின் ‘செல்லாத பணம்’ – பேரா எ.பாவலன்

நூல் அறிமுகம்: இமையத்தின் ‘செல்லாத பணம்’ – பேரா எ.பாவலன்



ஆணவக் கொலையின் வாக்குமூலம்

செல்லாத பணம் என்னும் நாவல் அண்மையில் வெளிவந்து தமிழ்ச்சமூகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஓர் அற்புதமான கலைப் படைப்பு. இதன் ஆசிரியர் எழுத்தாளர் இமையம். இது 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. இந்தத் தலைப்பே ஒரு வசீகரமான தலைப்பாகும். அதனால் இந்தத் தலைப்பைப் பார்க்கும் பொழுது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் இந்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பீடு நடவடிக்கையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதனாலும் இந்நாவல் கூடுதல் கவனம் பெற்றதாக உணர முடியும். அதன் காரணமாக இந்த நாவலை படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. அந்த வகையில் இந்த நாவல் முன்வைக்கும் கருத்துக்களை வெளிக்கொணரும் தன்மையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

இந்த நாவல் மற்ற படைப்புகளில் இருந்து வேறுபடுவததற்கும், கவனம் பெற்றதற்கும் இரண்டு காரணங்களை முன்வைக்க முடியும். ஒன்று கதைக்கரு. மற்றொன்று மொழிநடை. இவ்விரண்டும் கனகச்சிதமாக பொருந்தியப் படைப்பாகச் செல்லாதபணம் நாவல் திகழ்கிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கௌரவத்தின் பெயராலும், பெண்கள் ஒடுக்கு முறைக்கு ஆளாகக்கூடும் என்ற கேள்வியை இப்படைப்பு எழுப்புகிறது. ஒருபக்கம் கௌரவம் என்கின்ற பெயரில் பெற்றோர்கள் தன்னுடையப் பிள்ளைகளின் நலன்களில் அக்கறைக் கொள்ளாமல், சுயமாக வாழ்வதற்கு அனுமதிக்க மறுக்கின்றனர். மற்றொரு சூழலில் தான் விரும்பி நேசித்து பின்தொடர்ந்து சென்ற காதலன், மிக சொற்பமான நாட்களிலேயே அவன் சுயரூபம் வெளிப்பட்டு விடுகிறது. அல்லது அவனுடைய நிறம் வெளுத்து விடுகிறது என்றுதான் சொல்ல முடியும். பெற்றோர்களும் தன் விருப்பத்தை நிறைவேற்றி தருவதில் இருக்கும் வரட்டு கவுரவம் காதலித்தபோது இருந்த அன்பு, கணவனாகிய பின்பு காட்டும் அதிகாரம் இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் இருதலை கொல்லியாக தான் வாழ்கிறார்கள்.

இந்த நாவலைப் படிக்கத் தொடங்கும் பொழுது ரேவதிக்கு தீ மூட்டியது யார்? என்ற கேள்வி முன்னெழுகிறது. செல்லாத பணம் நாவலின் கரு இந்தக் கேள்வியைக் கேட்கிறது. அந்தப் பாத்திரத்தைப் பற்றி தான் கதையும் நகர்கிறது. அதனால் இப்படைப்பின் நாயகி ரேவதி என்றுக் கூற முடியும்.

நடேசன் – அமராவதி என்ற தம்பதிகளின் பிள்ளைகள் இருவர். மூத்தவன் முருகன். சென்னையில் பெரிய ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறான். அவனுக்கு திருமணமாகி விட்டது. அடுத்து மகள் ரேவதி. ரேவதி… ஒரு பொறியியல் பட்டதாரி. அவள் படித்த கல்லூரியிலேயே 98 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவள். நடேசன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். கைநிறைய வருமானம். தேவைக்குப்போக இருக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது, தங்கம் வாங்குவது, சொத்து வாங்குவது, வங்கியில் சேமிப்பது. இதனால் அவர்கள் பொருளாதாரத்தில் வசதியானவர்கள். இந்தச் சூழலில்தான் ரேவதி ஆட்டோ ஓட்டும் ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்டாள். ரவி ஒரு அகதி. சமூக அந்தஸ்திலும், பொருளாதார நிலையிலும் நடேசன் குடும்பத்திற்கு பொருத்தமற்றவன். ஆனாலும் ரவியின் அதிதீவிரமான காதலால் ரேவதியால் அவனை மறுக்க முடியவில்லை.

நடேசனும் அவர் குடும்பத்தினரும் மற்ற உறவுகளும் எல்லோரும் பலமுறை ரவியை திருமணம் செய்து கொள்ள வேண்டாமென்று சொல்லிய பிறகும், ரேவதி விடாப்பிடியாக இருந்ததனால் பெயரளவிற்கு வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்து வைத்தனர். அப்பா நடேசனும், அண்ணன் முருகனும் திருமணத்திற்கு பிறகு, குடும்பம் சரியில்லை, கணவன் குடிக்கிறான், அடிக்கிறான், உதைக்கிறான், திட்டுகிறான், பணம் கேட்கிறான், என்பதாக வந்து எங்களிடம் முறையிட கூடாது என்று உறுதியாக கூறிவிட்டனர். திருமணம் முடிந்து உள்ளூரில் குடி இருந்தாலும் ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒருநாளும் அப்பா முகம் கொடுத்து பேசியதில்லை. தெருவிலும், பொது இடங்களிலும் எங்கு பார்த்தாலும், பார்க்காதது போல முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவார்.

ரேவதி, ரவியை திருமணம் முடித்த கையோடு சென்னைக்குச் சென்று ஏதாவது நிறுவனத்தில் சேர்ந்து சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று திட்டம் போட்டு இருந்தாள். ரவியோ தனியாக இருக்கும் தன் அம்மாவையும், திருமணமாகாத அக்காவையும் விட்டு வர முடியாது என்பதை உறுதியாக கூறிவிட்டான். இதனால் ரேவதி தான் கண்ட கனவு நிறைவேறாமல் போகுதே என்று வருந்தினாள். மேலும் வேலைக்கும் போக கூடாது என்ற கட்டுப்பாடு விதித்தும் இன்னும் அவளை மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டான். அதுமட்டுமல்ல குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. ரேவதியின் அப்பா சொன்னதைப் போலவே அவளுடைய வாழ்க்கை பெரிய சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது. இதனால் நிலைகுலைந்து செய்வதறியாமல் திகைத்துப்போய் இருந்தவளுக்கு அவளுடைய அம்மா அமராவதி வடிகாலாக இருந்தாள். உள்ளூர் என்பதனால் தன்னுடைய அப்பாவிற்கும், அண்ணனுக்கும் தெரியாமல் அம்மாவைப் பார்த்து பேசுவதற்காக வீட்டிற்கு வந்து சென்று வருவது வழக்கமாகிவிட்டது. இதை அவளுடைய அப்பாவும், அண்ணனும் கண்டும் காணாதது போல நடந்து கொள்வார்கள். அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தான் தன்னுடைய அம்மாவைப் பார்ப்பதற்காக ரேவதி வருவாள். சில சமயத்தில் அவருடைய அப்பாவோ அல்லது அண்ணனோ வீட்டில் இருந்தால் வீட்டிற்குள் வராமல் அப்படியே சென்று விடுவாள். அல்லது அவள் வீட்டில் இருக்கும் போது இவர்களில் யாராவது வந்துவிட்டால் ஒரு திருடியைப் போல பதுங்கிப்பதுங்கி கண்களில் படாதவாறு ஓடி விடுவாள். இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு நாள் ரேவதி காதுபடவே முருகன் அவள் குடும்பத்தையும், கணவனையும், பிள்ளைகளையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசிவிட்டான். அத்தோடு நிற்காமல், அவளுக்கு பிறந்த பிள்ளைகள் யாரும் இந்த வீட்டில் கால் வைக்கக் கூடாது. இப்படி கறாராக பேசிய பின்னர் திரும்பவும் அவளுக்கு குறைந்தபட்சம் இருந்த உரிமையும் துண்டித்து விட்டதாக உணர்ந்தாள்.

தன்னைப் பெற்ற உறவுகளையும் தூக்கி எறிந்து சென்ற ரேவதிக்கு கணவனாலும் எந்த நலனும் இல்லை. அதேபோன்று தவறான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டோம் என்பதனாலும் பெற்ற தந்தையும், கூட பிறந்த அண்ணனும் அருவருக்க தகுந்த வகையில் அவளை பார்ப்பதாலும் இப்படிப்பட்ட இந்தச் சூழலில் யாருக்காக வாழ்வது என்ற கேள்விதான் அவளை மேலும் கலக்கம் அடையச் செய்தது. இதன்பிறகு அவள் யாருக்காக வாழ வேண்டும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இத்தனைக் கொடுமைகளுக்குப் பிறகும், பிள்ளைகளுக்காக வாழவேண்டிய கட்டாயம் அவளுக்கு மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

ரேவதி வாழ்க்கை, வெறுமையின் விளிம்பு வரை சென்றுவிட்டது. இதற்கிடையில் உடலில் மண்ணெண்ணெய்ப் பட்டு உடல் முழுவதும் எரிந்து, மருத்துவமனையில் மரணத்தோடுப் போராடிக் கொண்டிருந்தாள். மரண வாக்குமூலம் பெறுவதற்காக மாவட்ட நீதிபதியும், காவல்துறை அதிகாரியிடமும் அவள் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. மட்டுமல்ல அவள் சொன்ன காரணம் நிச்சயம் யாராலும் ஏற்க முடியாது. சமையலறையில் அலமாரியில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாத்திரம் தெரியாமல் மேலே கொட்டுவதற்கும் சமையல் அறையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பு உடனே என் மீது பட்டு தீக்கரைக்கு ஆளாக்கப்பட்டது என்ற வாக்குமூலத்தை கூறிவிட்டாள். ஆனால் இந்த வாக்குமூலம் அவளுடைய பெற்றோருக்கும், காவல்துறைக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்தது. அவள் இறக்கும் பொழுதாவதுதான், நிம்மதியாக சாகவேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ. அல்லது தான் இறந்த பிறகாவது தன் பெற்றோர்கள் எந்தவிதமான துர்ப்பாக்கியமான நிகழ்வுக்கு நீதிமன்றம், காவல்துறை, மருத்துவமனை இப்படி ஓடி அலையாமல் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமைதியாக இருக்கவேண்டும் என்பதனாலோ என்னவோ? அவள் எல்லாவற்றையும் மறைத்து விட்டாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவளை அன்றி வேறு யாராலும் அந்த உண்மையை அறிய முடிகிறது .

காவல்துறைக்கும், ரேவதியின் உறவுகளுக்கும் கூட ரவி மீதுதான் பெரிய சந்தேகம் இருந்தது. உண்மையில் இயற்கையாகவே ரேவதி உடல் மீது தீ பரவியதா? அல்லது கணவன் ரவி அவளை கொளுத்திவிட்டு நாடகம் ஆடுகிறானா? என்ற கேள்வியும் எழுகிறது. ரேவதியின் மரணத்திற்கு யார் காரணம்?.

தனக்குப் பிடித்தவனை திருமணம் செய்து கொண்டதற்காக ஆறு ஆண்டுகளாகப்பேச மறுப்பது மரணத்தை விட கொடுமையானது. அதேபோன்று ஆசை ஆசையாக தான் விரும்பி காதலித்தக் கணவனை திருமணம் செய்து கொண்டு அதற்குப் பிறகு எங்காவது சென்று நம் புது வாழ்வை வாழத் தொடங்கலாம் என்ற திட்டத்தை ரேவதி முன்வைத்த போதும் அதற்கு ரவி வேண்டாம் என்று நிராகரித்து விட்டான். இதனால் ரேவதி கொடுத்த பரிசு உயிர். தன்னை உயிருக்குயிராக பெற்று வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை விட்டுட்டு, காதலன் ரவியை நம்பி சென்றாள். அவனும் அவளின் உணர்வைப் புரிந்து கொள்ளவில்லை. கணவன் சரி இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியப் பிறகும். அப்பாவும் அண்ணனும் அவளிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இப்படி எள்ளளவேனும் ரேவதியின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. ரவியும் தன் பங்குக்கு ரேவதியை பழி வாங்கி விட்டதாகவே தோன்றுகிறது. தன்னுடைய அம்மாவையும் அக்காவையும் விட்டுவிட்டு அவளுடன் சென்னை வர மறுத்ததும் அவளை தற்கொலைச் செய்ய தூண்டியிருக்கக்கூடும். வாழ வேண்டிய வயதில் மரணத்தை அணைத்துக்கொண்டாள்.

பெரும்பாலும் இங்கு யாரை நம்பினாலும் அவர்கள் அனைவருமே சுயநலமாக இருக்கிறார்கள். அதிலும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் முற்றிலும் சுயநலவாதிகள் தான் என்பதை மீண்டும் மீண்டும் அப்பா நடேசன், அண்ணன் முருகன், கணவன் ரவி ஆகியோர் மூவரும் இதற்குச் சான்றாகத் திகழ்கிறார்.

தன் குலப்பெருமையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டாள் என்ற ஆதங்கத்தை நடேசன், அவளை ஒரு மகளாக மட்டுமல்ல ஒரு சராசரிப் மனுசியாகக்கூட பார்க்க மறுத்த காரணத்தினால் ரேவதியின் பாதி உயிரை காவு வாங்கிவிட்டது. மற்றொரு வகையில் ரத்தமும் சதையுமாக உடன் பிறந்த அண்ணன், தன்னை புரிந்து கொள்ளாமல் பேச மறுக்கும் காரணத்தினால் அவன் பங்குக்கும் அவனும் அவளை மனதளவில் கொலை செய்து விட்டான். இன்னும் ஒருபடி மேலே சென்று கணவன் என்று நம்பி வந்த ரவியும் நட்டாற்றில் கைவிட்டதைப்போல மீதி இருந்த நம்பிக்கையும் கொன்று புதைத்து விட்டான்.

சாதி மேலாதிக்கம் எவ்வளவு பெரிய கீழ்த்தரமான சிந்தனையை தூண்டுகிறது என்பதற்கு நன்கு படித்து கல்வி போதிக்கும் தலைமையாசிரியர் நடேசன் அவர்களும் விதிவிலக்கல்ல. தன் மனதுக்குப் பிடித்த ஒரு ஆடவனை சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமை இல்லாத நிலையில்தான் பெண்கள் இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சாதிய மனோபாவமும், ஆணாதிக்க சிந்தனையும், பழமை மாறாத மனுதர்ம கோட்பாடும் இதற்கு துணை நிற்கிறது. அதனால் தான் நடேசன் ஊருக்கு பயந்தாரே தவிர, தன் மகளின் உணர்வுக்கு துளி அளவேனும் மதிப்பளிக்கவில்லை.

ரேவதி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது நடேசன் பத்துலட்ச ரூபாய் ரொக்கமும், தான் வாங்கிய நிலத்தின் பத்திரங்களும், வங்கியின் ஏடிஎம் காடுகளையும் வைத்துக்கொண்டு எப்படியாவது என் மகளை உயிர் பெற்றுக் கொடுங்கவென்று எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அழுதுபுலம்புகிறார். இதே வார்த்தை அவள் உயிரோடு இருந்த பொழுது சொல்லியிருந்தால் நிச்சயம் அந்த உயிர் போய் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இன்று பிணமாக கிடக்கும் ரேவதியை பார்த்து எல்லோரும் மாரடித்து புலம்புகின்றனர். மட்டுமல்ல ஒருத்தர் மீது ஒருத்தர் வசைமாரி பழி சுமத்திக் கொள்ளவும் தயங்கவில்லை.

நடேசன் தரப்பு நியாயம் இது. ரவியைப் பார்த்து, என் மகளை அநியாயமாக கொலை செய்து விட்டாயே? அவளை பெற்று வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து, ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுத்து அவள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று பெரிய கனவோடு இருந்த எங்களையும், அவளையும் காதல் என்ற போர்வையில் மயக்கி சம்மதிக்கச் செய்து எங்களை விட்டு உன்னோடு வருவதற்கு எப்படி சம்மதித்தாள்? அல்லது நீதான் என்ன வசியம் செய்தாய்? உன்னை நம்பி வந்தவளை தினம் தினம் துன்புறுத்துவது உனக்கு எப்படி மனம் வந்தது? வாழ்க்கை வாழ தெரியாத உனக்கு எல்லாம் எதற்கு திருமணம், மனைவி? இப்பொழுது அவளை நீயே எரித்துவிட்டு நாடகம் ஆடுவது எந்தளவிற்கு நியாயம் என்று ரவியை பார்த்து அவளுடைய பெற்றோரும் உறவுகளும் கதறிக்கொண்டே கேள்வி எழுப்புகின்றனர்.

அதற்கு ரவியும், கொஞ்சமும் தயங்காமல் நடேசனையும் அவர் குடும்பத்தையும் பார்த்து கேட்கும் கேள்வியும் பொருட்படுத்தத் தான் வேண்டும். அவள் எனக்கு இன்னொரு தாயாக இருந்தாள். அவள் என்னை திருமணம் செய்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவள். அவளை கண்டிக்கிறேன் என்று இப்படி தண்டித்து விட்டீர்களே. திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவளிடம் ஒரு நாள்கூட பேசமனமில்லாமல் அவளைப் பார்த்தாலே ஏதோ அருவருக்கத்தக்க ஒரு ஜந்துவைப் பார்த்ததைப் போல முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதை எத்தனை முறை என்னிடம் சொல்லி அழுது இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகான வாழ்நாட்களில் என்னிடம் பெருபாலும் உங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி மட்டுமே சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பாள்.

அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உங்கள் நினைவு பொதிந்து இருக்கும். பலமுறை என்னிடம் உங்களுடைய உணர்வுகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பாள். என்னை தண்டிப்பதாக நினைத்து அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை கூட உங்கள் வீட்டு வாசலில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, அவள் வேறு எங்கே செல்ல முடியும். அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் மீதும் உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் பேச மறுத்த காரணத்தினால் இப்படி அவள் மரணத்தை தழுவுவதற்கு நீங்கள்தான் காரணம்.

இப்படி மாறி மாறி பழிசுமத்திக் கொண்டிருந்தாலும், இறந்துபோன ரேவதி ஒருநாளும் எழுந்து வரப் போவதில்லை என்பதால் என்னவோ இவர்கள் பழி சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் ரேவதி தான் பேசியிருக்க வேண்டும். யார் மீது தவறு என்பது அவள் கடைசிவரை சொல்லாமல் சென்றதுதான் அவர்கள் இப்படி பேசுவதற்கு காரணமாக அமைந்தது.

இருப்பினும் ரேவதியின் மரணத்தில் நூற்றுக்கணக்கான சந்தேகங்கள் வலுக்கிறது. எப்படி பார்த்தாலும் இங்கு குற்றவாளி யாராக இருக்க முடியும்? ஒரு பெண் என்று பாராமல் ரவி கொலை செய்ததற்கு முயற்சித்தாலும, அவன்தான் குற்றவாளி. ஒருவேளை ரவி செய்யாமல் ரேவதி தானாகவே தற்கொலை செய்வதற்கு முயன்றிருந்தால் அப்பா நடேசனும், அண்ணன் முருகனும் அவ்விருவரும் மட்டுமல்ல ரவியும் குற்றவாளிதான். எனினும் இது நவீன தீண்டாமையின் ஆணவக்கொலை என்பதற்கே வலுசேர்க்கிறது.

C:\Users\Pavalan\Desktop\PAVALAN photo.jpg
பேரா. முனைவர் எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி,
சென்னை – 34.
drpavalan@gmail.com

நூல் : செல்லாத பணம்
ஆசிரியர் : இமையம்
விலை : ரூ.₹325/-
வெளியீடு : க்ரியா
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *