நூல் அறிமுகம்: சோழ நாகராஜனின் பெரியார் பிராமணர்களின் எதிரியா? – பெ.விஜயகுமார்
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் நீண்டநெடிய தன் வாழ்நாளில் தமிழகம் முழுவதும் பயணித்து தமிழர்களுக்குப் பகுத்தறிவைப் புகட்டி வந்தார் அவரைத் தூற்றுவோரும், அவர் மீது வெறுப்பை உமிழ்வோரும் உண்டு என்ற போதிலும் தமிழ் கூறும் நல்லுகிற்கு அவர் ஆற்றியுள்ள பேருதவியை தமிழர்கள் என்றென்றும் மறக்காமல் அவரின் புகழைப் போற்றிப் பாராட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதுறுதி.

தந்தை பெரியார் பற்றி தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வரிசையில் எழுத்தாளர் சோழ நாகராஜன் ‘பெரியார் பிராமணர்களின் எதிரியா?’ என்ற நூலை வெளிக் கொணர்ந்துள்ளார். தக்க சான்றுகளுடன் பெரியார் பிராமணர்களின் எதிரி அல்ல என்பதை இந்நூலில் நிரூபித்து வெற்றி கண்டுள்ளார் சோழ நாகராஜன். பேரா.அருணன் தனது அணிந்துரையில்பெரியாரை முழுவதும் புரிந்து கொள்ளவும், சனாதன இந்துத்துவ பிராமணிய எதிர்ப்பே இன்றைய தேவை என்பதை அறிந்து கொள்ளவும் இந்நூல் உதவிடும்’ என்பதைத் தெளிவுபடுத்துகிறார். பெரியார் பற்றி இதுவரை பேசப்படாத புதிய பரிமாணங்கள் கொண்ட இந்நூல் சாதிச் சேற்றில் சிக்கிக் கிடக்கும் எல்லா மனிதர்களும் அதனின்று மீண்டுவர பேருதவி செய்யும் என்று நூலின் ஆய்வுரையில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி கூறியுள்ளது முற்றிலும் சரியான கருத்தே.

சோழ நாகராஜன் செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்கவர். திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் குறித்து தொடர்ந்து தீக்கதிர், புதிய ஆசிரியன் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். ’வெறும் கோழிகளல்ல’, ரொம்ப தூரமில்ல…’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள், ’சினிமா சில மனிதர்களும், சில சர்ச்சைகளும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு, ’அவர்தான் கலைவாணர்’- வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இந்து குழுமம் ’மௌனம் கலைத்த சினிமா’ என்ற நூலை விரைவில் வெளியிட உள்ளது. சோழ நாகராஜன் பல்வகைத் திறமைகளைக் கொண்ட நல்ல கலைஞர், சிந்தனையாளர், எழுத்தாளர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் புகழை உலகமெல்லாம் பாடித்திரியும் ‘சிகப்புக் குயில்’.   

இந்நூல் பெரியாருக்கு முன், பெரியாரின் காலம். பெரியாரைத் துணைக்கோடல் என்று மூன்று இயல்களாக எழுதப்பட்டுள்ளது. ’பெரியாருக்கு முன்’ என்ற முதல் இயலில் இந்தியாவில் ஈராயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வர்ண பேத வரலாற்றை நூலாசிரியர்  விளக்குகிறார். பகவத் கீதையில்நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டு, அதுவே எண்ணற்ற சாதிகளாகப் பல்கிப் பெருகியும் போன விசித்திரமான சமூகமே இந்தியச் சமூகம். கடவுளால் படைக்கப்பட்டதுதான் இந்தியாவிலுள்ள சாதீயச் சமூகம். அந்தக் கடவுளுக்கே அதை மாற்றுகிற வல்லமை, அதிகாரம், உரிமை என்று எதுவுமில்லை. அதாவது சர்வ வல்லமையுள்ள கடவுளைக் காட்டிலும் அதிக வல்லமை உடையது சாதீயம்என்று சொல்லப்பட்டுள்ளதை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.   

சாதியத்தின் வித்து ஊன்றப்பட்ட காலந்தொட்டே அதை எதிர்த்த கலகக் குரல்களும் இந்திய மண்ணில் ஒலிக்கத் துவங்கின. பௌத்தம், சமணம், ஆசீவகம் போன்ற மதங்கள் சாதி வேற்றுமைகளைக் களைந்தெறிந்திடவே விரும்பின. வர்ணாசிரமத்திற்கு எதிராக ஆதியிலேயே களம் கண்டவர் புத்தர். மனுஸ்மிருதி அவரை எதிர்த்து சாதியத்தை நிலைநாட்டவே இயற்றப்பட்டதாக அம்பேத்கர் கூறுவார். சார்வாகர், கபிலர், வர்த்தமான மகாவீரர், வள்ளலார், நாராயண குரு போன்றோர் எல்லாம் வைதீகத்திற்கெதிரான சமரின் தளபதிகளே. தமிழ் மரபு சித்தர்களும் சாதி, மத மாச்சரியங்களைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கிய வள்ளுவன் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் ஓங்கி ஒலித்த பாரதி வரையிலான பிராமணிய எதிர்ப்புக் குரல்களின் நீண்ட வரலாறு தமிழ் நிலத்திற்கு இருப்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.   

கிரேக்க சமுதாயம் சூழ்நிலையைப் பொறுத்து மாறிக் கொண்டே வந்ததையும், அதனால் வளர்ச்சி பெற்றதையும், அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்ளாது பிடிவாதம் பிடித்த காரணத்தால் வளர்ச்சியில் பெரிய தேக்கத்தை இந்திய சமுதாயம் அனுபவிக்க நேர்ந்த சோகத்தையும் தன்னுடைய ’இந்து தத்துவ இயல்எனும் நூலில் இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளரான ராகுல சாங்கிருத்தியாயன் சுட்டிக் காட்டியுள்ளார். அதனை  அவர் ”இந்தியாவைப் பீடித்திருந்த இளம்பிள்ளை வாதம், வளர்ச்சித் தேக்கம், உயிருள்ள சவம், முட்டாள்தனங்களின் காட்சி சாலைஎன்றெல்லாம் சாடுகிறார். வளர்ச்சி அடிப்படையில் கிரேக்க சமுதாயத்திற்கும், சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்த இந்திய சமுதாயத்திற்கும் இடையில் நிலவிடும் வேறுபாட்டை சாங்கிருத்தியாயனின் நூல்வழி சோழ நாகராஜன் நிரூபிக்கிறார்.

பெரியாரின் காலம்எனும் இரண்டாம் இயலில் பெரியார் எதிர்த்தது பிராமணியத்தையே பிராமணர்களை அல்ல என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார். காந்தி கொலையுண்ட போது திருவாரூர் அருகில் நன்னிலத்தில் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் பேசிய இளைஞர் ஒருவர் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணன் என்பதற்காக  பிராமணர்கள் அனைவரையும் விமர்சிக்கத் தொடங்கினார். உடனே மேடையில் அமர்ந்திருந்த பெரியார் அவரைத் தடுத்து நிறுத்திஇந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது. நமக்கு பார்ப்பனியத்தோடுதான் முரண். தனிப்பட்ட பார்ப்பனர்களோடல்ல. தவிரவும், நாடு இப்போது இருக்கிற நிலையில் இப்படிப் பேசுவது சரியா? கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்தாதா? என்று கோபத்துடன் கடிந்து கொண்டார். உண்மையில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஒரு சித்பவன பிராமணன்தான் என்றாலும், அவ்வாறு பிரச்சாரம் செய்ய பெரியார் விரும்பவில்லை என்பது சமூக ஒற்றுமைக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைத்  தெளிவாக்கிக் காட்டுகிறது.  

சனாதனத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருந்த பிராமணர்கள் தங்களுடைய பரமவைரியாகவே பெரியாரைக் கண்டனர். பெரியாரின் சிந்தனைகள் தங்களது அடித்தளத்தையே தகர்ப்பதாக அவர்கள் கருதினர். பெரியாரை பிராமண துவேஷி என்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் பற்றி நின்ற பிராமணியக் கொள்கைகள் காரணமாக கருத்தியல் ரீதியாக மட்டுமே சனாதன பிராமணர்களை பெரியார் எதிர்த்தார். தனிப்பட்ட முறையில் பிராமணர்களோடு அவர் வேற்றுமை பாராட்டியதே இல்லை என்று நூலாசிரியர் அறுதியிட்டுக் கூறுகிறார். பிராமணியத்தை எதிர்த்துக் கடும் சமர் புரிந்த பெரியார் பிராமணர்களுக்குள்ளும் மனிதர்களைத் தேடியதை சான்றுகளுடன் நிரூபிக்கிறார். தன்னுடன் நெருங்கிப் பழகிய இராஜாஜி, எஸ்.எஸ்.வாசன், கல்கி, சுத்தானந்த பாரதி ஆகியோருடன் மட்டுமல்ல முன்பின் தெரியாத தன் கொள்கையை உரசிப் பார்த்த பிராமணர்களிடமும்கூட கண்ணியத்துடனும், வாஞ்சையுடனும் அவர் நடந்து கொண்டுள்ளதை ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார்

அதனாலேயே அக்கிரகாரத்து அதிசய மனிதர் .ராஇயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மலைகளையும், மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப்போல நாயக்கர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர் புரியும் வகைமையைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியாதுஎன்று பெரியாரைப் பற்றி 1933ஆம் ஆண்டு ’காந்திஇதழில் எழுதினார். எழுத்தாளர் கல்கி 1931ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் பெரியாரைப் பற்றி  ”ஈரோடு ஸ்ரீமான் .வெ.ராமசாமி நாயக்கர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும். கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்என்று பாராட்டி எழுதியிருந்தார்

ஒரு முறை சிருங்கேரி மடாதிபதி சங்கராச்சாரியார் பெரியாருக்கு ஸ்ரீமுகம் எழுதினார். (நாம் எழுதுவது கடிதம்; ஆனால் ஒரு மடாதிபதி எழுதினால் அது ஸ்ரீமுகம்) கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் பெரியாரைச் சந்தித்து உரையாடத் தமக்கு விருப்பமென சங்கராச்சாரியார் தெரிவித்திருந்தார். பிராமணீய வர்ணாசிரமத்தின் பெருமைகளைப் பேசி சங்கராச்சாரியார் எழுதியிருந்த கடிதத்திற்கு பெரியார் பதில் எழுதிய கடிதம் இதோ: ”பொறுப்புள்ள ஒரு பதவி வகிப்பவரும், பல மக்களால் வணங்கிக் கொண்டாடி மதிக்கத் தக்கவராக இருப்பவருமான சங்கராச்சாரியாரின் அழைப்பை மதித்து, அதற்கு இணங்கி, சென்று வர வேண்டியது மிகவும் நியாயமாகும் என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆயினும் நமது நண்பர்களின் விருப்பத்தை அறிந்து சென்று வரலாம் என்றே கருதியிருக்கிறோம்என்று மிகுந்த அடக்கத்துடனேயே பெரியார் கடிதம் எழுதினார். நண்பர்கள் பலரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரைச் சந்திப்பது வீண் வேலை என்ற கருத்தைத் தெரிவித்ததால் பெரியார் அந்தச் சந்திப்பைத் தவிர்த்தார்

பெரியாரைத் துணைக்கோடல்எனும் மூன்றாம் இயலில் ஜனநாயகத்தை உள்வாங்கிக்கொண்டு பெரியார் தனது விடாப்பிடியான போராட்டத்தை எவ்வாறு நடத்தியுள்ளார் என்பதை சோழ நாகராஜன் சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறார். ’பெரியாரைத் துணைக்கோடல்எனும் சொற்றொடர் திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியது. பெரியவர்களைத் துணைக்கோடல் நல்வழிக்கு இட்டுச்செல்லும் என்று பொருள்படும். தந்தை பெரியாரைத் துணைக்கோடலும் நல்வழிக்கு இட்டுச் செல்லும், பகுத்தறிவு புகட்டிடும் என்பதில் ஐயமில்லையே. பெரியார் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி என்பதற்கு அவரின் என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.” என்ற பிரகடனமே சான்று: ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மையான கருத்துப் பரிமாறல், கருத்து முரண்படல், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளல் என்ற முறைகளின் வாயிலாகவே பெரியார் பரப்புரை செய்துள்ளார்.   

தமிழகத்தில் பெரியாரின் அப்பழுக்கற்ற இயக்கத்தால் பழமைச் சிந்தனைகளிலிருந்து பிராமணர்கள் உள்ளிட்ட அனைவருமே விடுபட்டுள்ளனர். தம் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளத்தைப் போட்டுக் கொள்வதை அநாகரீகமெனத் தமிழ் மண்ணில் அனைத்துச் சாதியினரும் கருதுவதே அதற்கான சான்றாகும். தை பிராமண சமூகமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று பிராமணர்கள்கூட ஐயங்கார் என்றோ ஐயர் என்றோ போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதவில்லையே. இதற்குக் காரணம் பெரியார் இல்லையா? இளம் வயதிலேயே கணவனை இழந்தாலும் விதவை என மொட்டையடித்து, இளங்காவி நிறச் சேலையை உடுத்தி யார் கண்ணிலும் பட்டுவிடாமல் அமங்கலியாக பெண்களை மூலையில் உட்கார வைத்த அந்த அக்கிரகாரத்துக் காட்சி இன்று வழக்கொழிந்து போனதற்கு யார் காரணம்? பெரியார்தானே என்று பிராமணர்களுக்கு உரைக்கும் வண்ணம் சோழ நாகராஜன் கேள்வி எழுப்புகிறார்.

விதவைக் கோலம் மட்டுமா ஒழிந்திருக்கிறது? கல்வி உரிமை, காதலிக்க உரிமை, மணவிலக்கு உரிமை, மறுமண உரிமை என்று தமிழகத்தில் பிராமண சாதிப் பெண்கள் பெற்றிருக்கும் இந்த உரிமைகளைப் பற்றியெல்லாம் வடமாநில பிராமணப் பெண்கள் கேள்விப்பட்டிருப்பார்களா? ’பிராமணாள் ஹோட்டல்என்று போட்டுக் கொள்வது பெருமையாகவும் தரத்தின் அடையாளமாகவும் ஒரு காலத்தில் இருந்தது. இன்றில்லையே! பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று உணவகங்களில் தனி ஏற்பாடு இருந்த நிலைமை மாறியுள்ளதே. இதற்கெல்லாம் பெரியாரின் அறிவார்ந்த களப்பணிதானே காரணம்.  

நவீன உலகின் சுதந்திரக் காற்றை அச்சமின்றி சுவாசித்துப் பயனடைந்தோரின் பட்டியலில் நிச்சயமாகத் தமிழகத்தின் பிராமண சமூகமும் உண்டு. உண்மையில் பெரியார் அன்றைக்கு வைத்த கோரிக்கை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் மூலம் பிராமணருக்கும் மூன்று அல்லது நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு கிடைப்பதாக இருந்தது. தார்மீக அடிப்படையில் சட்டத்தின் வழி நிறுவப்பட்டுள்ள இன்றைய இடஒதுக்கீட்டு கொள்கையை உளப்பூர்வமாக ஏற்று ஆதரிக்காமல் எதிர்நிலை எடுப்பது பிராமண சமூகத்தை மேலும் தனிமைப்படுத்தவே செய்யும் என்கிறார் நூலாசிரியர்.

ஆகப் பெரும்பான்மை மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்த போதிலும் பெரியாரிடத்தில் பிரியமுள்ளவர்களாகவே அவர்கள் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. வர்ணாசிரமம் புத்துயிர் பெற்று இந்துத்துவா முழக்கத்துடன் தனது தாக்குதலைத் தொடுத்து வருகிற இத்தருணத்தில் பெரியாரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் எல்லா மக்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கான போர்வாள்கேடயம் என்றுணர வேண்டும். 1948ல்விடுதலைஇதழில் அவர் எழுதிய கட்டுரையில் பெரியார்பார்ப்பானும் வேண்டாம், பறையனும் வேண்டாம். பிராமணனும் வேண்டாம், சூத்திரனும் வேண்டாம். பார்ப்பானும் இல்லை, பறையனும் இல்லை என்றான பிறகு யார் இங்கே இருப்பார்கள்? மனிதர்கள் மட்டும்தான்! சாதி மத பேதமற்ற மனிதர்கள்தான் இருப்பார்கள்” என்று தன்னுடைய உள்ளக்கிடக்கையைத் தெரிவிக்கிறார். சாதி ஏற்றத்தாழ்வற்று எல்லோரும் ஒன்றாகி மனிதர்களாக வாழ வேண்டும் எனும் போற்றுதலுக்குரிய நோக்கத்தின் மறுபெயரே பெரியார் என்று தன்னுடைய தர்க்கத்தை முடிக்கிறார் சோழ நாகராஜன்

நூலின் முடிவில் தன்னுடைய முகநூல் பதிவு ஒன்றையும் இணைத்துள்ளார். பெரியாரை நேரில் பார்த்த, அவரைத் தொட்டுணர்ந்த, அவரது பேச்சால் ஈர்ப்புப் பெற்ற தன் இளமைக் கால அனுபவத்தை வாசகர்களிடையே பகிர்ந்து கொள்கிறார். ”பின்னாளில் நான் கற்ற மார்க்சீய மெய்ஞானம் என் சிந்தனையை மேலும் கூர்மைப்படுத்தியது. துவக்கப் புள்ளியாய் நெஞ்சில் குடிகொண்ட பெரியாரியம் அசைக்க முடியாத அடிக்கல்லாகியது. அடியுரமாகியது என்று கூறி சிலாகிக்கிறார். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் நூலினை பாங்குடன் வெளியிட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.

– பேரா.பெ.விஜயகுமார் 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.